விஜய் சேதுபதி

அந்திமழை நவம்பர் 2018 இதழ் – கிட்டத்தட்ட சினிமா சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிச் சிலர் சிலாகித்திருக்கிறார்கள். அத்தனை பேருமே அவருக்குப் பிடித்தவர்கள், அவரைப் பிடித்தவர்கள். எனவே விமர்சன பூர்வமாக ஒன்றும் இல்லை. விஜய் சேதுபதியின் வளர்ச்சி, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றுதான். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கைத்தட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு நடிகராகவும் கைத்தட்டு பெற்று, கமர்ஷியல் வேல்யூவும் பெறமுடியும் என்று பல காலங்களுக்குப் பிறகு நிரூபித்தவர். (முதலில் சிவாஜி கணேசன் இதைச் செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். பின்னர் கமல்.) அதிலும் பல கதாநாயகர்கள் செய்யத் தயங்கும் திரைப்படத்தையெல்லாம் இவர் செய்தார். மலையாளத்தில் மிகப் பல காலமாக, தொடர்ச்சியாக இது நிகழ்ந்து வருகிறது. தமிழில்தான் வறட்சி.

தொடக்க காலத்தில் விஜய் சேதுபதி சில தேவையற்ற படங்களை நடிக்கிறார் என்று நான் சொன்னபோது, ஞாநி போன்றவர்கள், மிக ஆக்ரோஷமாக பதில் சொன்னார்கள். வேடத்தில் சிறியது பெரியது என்றில்லை என்ற தத்துவத்துக்குள் போனார்கள். ஆனால் நான் சொன்னதைத்தான் விஜய் சேதுபதி புரிந்துகொண்டார் என்றே நம்புகிறேன். இனியும் ரம்மி போன்ற படங்களுக்கு விஜய் சேதுபதி தேவையில்லை. அப்போதே தேவையில்லைதான். விஜய் சேதுபதி ஒருவழியாகத் தனக்கான இடம் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். இங்கேதான் அவருக்கான பிரச்சினையும் இருக்கிறது.

தீவிர அரசியல் பார்வையுடன் விஜய் சேதுபதி பேசுகிறார். இது பிற்காலத்தில் ஒரு நடிகருக்குரிய தேவைக்கு எதிராக அமையலாம். இது பற்றி அவருக்குக் கவலை இல்லை என்பதே அவரது கருத்துகளும் உடல்மொழியும் உணர்த்துகின்றன. ஒருவகையில் இந்த வெளிபப்டைத்தன்மையும் நமக்கு நல்லதுதான். விஜய் சேதுபதி கைக்கோர்க்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கும் ஒரு நிறம் இருப்பதைப் பார்க்கலாம். அது அவர்களை ஒன்றிணைக்கிறது என்பது வெளிப்படை. இதற்கு முன்பு திராவிட இயக்கம் திரையில் கோலோச்சிய காலத்தில் இப்படி சில நடிகர்கள் இருந்தார்கள். இடையில் கொஞ்சம் தளர்ந்தது. இப்போது விஜய் சேதுபதி மூலமாக அது முற்போக்கு அரசியலாக மாறியிருக்கிறது. இதன் இன்னொரு கோணம் இனி வரும் நாள்களில் வெளிப்படலாம்.

அந்திமழை இதழில் பேசிய அத்தனை பேரும் விஜய் சேதுபதியின் உடல் நலம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது, அவர் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது. நான் சொல்ல நினைப்பது, அவர் தன் உடலில் அக்கறை எடுத்துக்கொள்ள வேணுடும் என்பது. இல்லையென்றால் விரிவடையும் உடலே அவருக்குப் பெரிய எதிரியாக அமையும். அதேபோல் வெரைட்டியாக நடிக்க அவருக்கு வரவில்லை. வந்து மிகச் சில ஆண்டுகளே ஆன நிலையில், இதை ஒரு புகாராகச் சொல்ல அவசியமில்லை. போகப் போக இவையெல்லாம் சரியாகிவிடும். ஆனாலும் இன்றைய நிலையில் இவர் ஒரே மாதிரியாகவே எல்லாப் படங்களிலும் நடிக்கிறார் என்பது சரியான கருத்துதான்.

விஜய் சேதுபதியைக் கொண்டாடுபவர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் கொண்டாடவில்லை. ஞாநி போன்றவர்களை இப்போது புரிந்துகொள்கிறேன். அதேபோல் விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள்கூட எதிர்காலத்தில் அவரது நடிப்புக்காக இல்லாமல் விமர்சிக்கத் துவங்கலாம். ஒரு புள்ளி, அதன் எதிர்ப்புள்ளியை உருவாக்கியே தீரும். இது சரியா தவறா என்பதைவிட, இதுதான் நிகழும். யதார்த்தம்.

Share

Comments Closed