Tag Archive for மேற்கு தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத்தொடர்ச்சி மலை பார்த்தேன். தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. சந்தேகமே இல்லாமல் மிக முக்கியமான திரைப்படம். கொஞ்சம் அவுட் டேட்டட் என்ற போதிலும் கூட, படம் எடுத்த விதம் கொஞ்சம் பழைய மாதிரி என்பதைப் போல இருந்தாலும் கூட, முக்கியமான திரைப்படமே. முதல் அரை மணி நேரத்துக்கும் மேலாக திரைப்படம் அந்த மலைவாழ் எளிய மனிதர்களின் வாழ்வைச் சித்தரிப்பதில் கழிகிறது. அது எடுக்கப்பட்ட விதம் மிக அற்புதமாக உள்ளது. படத்தில் முதல் தென்றல் வீசும் காட்சி என்று படத்தின் கதாநாயகி வரும் காட்சியைச் சொல்லலாம். அழகு. மண் சார்ந்த அழகு. கண்களிலேயே அவர் பேசுகிறார். இரண்டாவது தென்றல் வீசிய காட்சி இளையராஜாவின் ‘கேக்காத வாத்தியம்’ பாடல் வரும்போது. மெஸ்மரிசம் செய்யும் பாடல்.

மிக மெதுவாக வாழ்க்கையை மட்டுமே சொல்லிக் கொண்டு செல்லும்போது, அந்த ஏலக்காய் சிதறும் காட்சி மிகப் பெரிய பதற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுபோன்ற படத்தை ஆயிரம் பேர் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று இதைத் தயாரித்த விஜய் சேதுபதியைப் பாராட்ட வேண்டும். இயக்குநர் லெனின் பாரதி தீவிரமான கம்யூனிஸ்ட். ஆனால் இந்தப் படத்தில் எவ்விதச் சாய்வும் இன்றி மிக நியாயமாகவே படத்தை எடுத்திருக்கிறார். எந்த ஒரு முதலாளியையும் மோசமானவராக சித்தரிக்கவில்லை என்பது பெரும் ஆறுதல். அவர்களின் வாழ்க்கை மற்றும் சூழல் நியாயங்களைப் பொருத்து அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறார். அதைவிட நம்பிக்கை துரோகம் செய்பவராக ஒரு கம்யூனிஸ்ட் காட்டப்படுகிறார். அவர் இன்னொரு கம்யூனிஸ்ட்டால் கொல்லப்படுகிறார். மிக நல்லவரான கங்காஅணி, ஒரு இஸ்லாமியர். இந்தப் படத்தில் மத ரீதியான சீண்டல்கள் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலைவாழ் மனிதர்களின் மிக எளிய ஆன்மிகம் படம் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே இயக்குநரை இன்னுமொருமுறை பாராட்ட வேண்டும்.

இதுபோன்ற படங்களின் இன்றைய மதிப்பு என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இந்தப் படம் தமிழில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படமாகவும் மாறப்போவதில்லை. அதேபோல் இந்தப் படம் சமீபத்திய இடைநிலை மாற்றுத் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் ஓரளவு வசூலுடன் கூடிய நல்ல பெயரையும் பெறப்போவதில்லை. அதேபோல் இது ஒரு வணிக நோக்கப் படமாக இருக்கவே முடியாது. அப்படியானால் இதுபோன்ற திரைப்படங்களின் வாழ்வுதான் என்ன? பாராட்டுக்காக வா? யோசிக்க வேண்டிய விஷயம் இது. இதுபோன்ற திரைப்படங்களது இயக்குநர்களின் முதல் படமும் கடைசி படமும் ஒன்றாகவே அமைந்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழல் இங்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.

மலையாளத்தில் இதுபோன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. 2018ல் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பார்க்க உண்மையிலேயே கொஞ்சம் பாவமாகவும் பரிதாபமாகவும்தான் இருக்கிறது. இந்தக் காலகட்டங்களை நாம் என்றோ திரை உலகில் கடந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். இந்தப் படம் பேசும் அந்தச் சிறிய கால மாற்றமும் அதில் நிகழும் தொழிலாளர்களின் அவலமும் மிக முக்கியமானதுதான். பதிவு செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அது ஒரு திரைப்படமாக வரும்பொழுது அது ஒரு பதிவு என்ற அளவில் மட்டுமே சுருங்கி விடுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இதில் வணிகமும் உள்ளது. திரைப்படத்தில் உள்ள செலவு மற்றும் வரவு சார்ந்த கணக்குக்குள் இப்படங்கள் வர முடியாது எனும்போது, இதுபோன்ற திரைப்படங்களை விவரணைப் படங்களாகவே பதிவு செய்துவிடுவது இன்னொரு வகையில் புத்திசாலித்தனமானது என்று நினைக்கிறேன்.

இது அத்தனையையும் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை எடுத்த குழு யோசிக்காமல் இருந்திருக்காது. அதையும் மீறி எடுக்கிறார்கள் என்றால் திரைப்படத்தின் மீதான அவர்களது வெறியையும் காதலையும் குறிக்கோளையும் புரிந்துகொள்கிறேன் அவர்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்.

Share