செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.

* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.

* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரைக்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.

* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.

* குறைகள் என்று பார்த்தால் –

* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு!

* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.

* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.

* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…

* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல! மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.

* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.

* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.

* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.

பின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.

பின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.

பின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.

Share

Comments Closed