Archive for புத்தகப் பார்வை

மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல்

மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350

விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் வரை சீ.முத்துசாமி என்ற பெயரே எனக்குத் தெரியாது என்ற ஒப்புதலில் இருந்து தொடங்கிவிடுகிறேன். சீ.முத்துசாமியின் நாவல் ஒன்றைக் கிழக்கு வெளியிடும் என்ற முடிவுக்கு வந்தபோது மலைக்காடு படித்தேன். அது கிழக்கு மூலம் வெளியாகி இருக்கிறது. ஜெயமோகனின் மிக முக்கியமான முன்னுரையுடன்.

சீ.முத்துசாமியின் எழுத்து எதோ ஒரு வகையில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்தை நினைவூட்டியது. ஒரு மண் சார்ந்த எழுத்து என்பதாக என் மனம் ஒப்பீடு செய்திருக்கலாம் என யூகிக்கிறேன். முத்துசாமியின் எழுத்தைப் படிக்கும்போது ஒருவித உவர்ப்புத் தன்மையை உணரமுடியும். வாக்கியங்களின் தெறிப்பு உருவாக்கும் ஒரு உலகம் அது. அதை மிகக் கச்சிதமாகக் கையாள்கிறார் சீ.முத்துசாமி.

தமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் மக்களின் வலி, அவர்களின் பரம்பரை பரம்பரையான பயணம், அங்கே நிகழும் புரட்சி, அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளே நாவல். சொர்க்க பூமி புக்கிட் செம்பிலான் என்று சொல்லி அழைத்துச் செல்லப்படும் மக்களுக்கு அங்கே காத்திருப்பது காடும் மலையும்.

ரப்பர் மரங்களின் நிரையில் தங்கும் மனிதர்களின் அவல வாழ்வைப் படிக்கும்போது அதன் வலியை வெறுமையை நமக்குள் கடத்துவதில் இந்நாவல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மக்களுக்கு ஆதரவாகப் புரட்சி செய்யும் இளைஞன் காணாமல் போகிறான். மலைக்காட்டு முனியில் இருந்து ஆள்கொல்லிப் புலி வரை தேடல் நீள்கிறது. அந்த இளைஞனை காட்டுக்குள் அனுப்பி வைத்த யூனியன் தலைவரின் குற்ற உணர்ச்சியும், அவனை இழந்து தவிக்கும் தாய்மையின் கொந்தளிப்பும் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. சீன அதிகாரிக்கு பெண்ணை அனுப்ப கங்காணி கதறும் காட்சி மிக முக்கியமானது. இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு உண்டு, ஆனாலும் அவள் வர மறுக்கிறாள் என்பதை கங்காணியால் ஏற்கவே முடிவதில்லை.

மலைக்காடு முனியைப் பற்றி சித்திரம் மிக அபாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் எல்லாருக்குள்ளும் இந்த முனி குறித்த பயமும் கடவுள் என்கிற உருவமும் உள்ளது. எதோ ஒரு தருணத்தில் அது அவர்களுடன் உரையாடவும் துவங்குகிறது. மலைக்காடு நாவலின் ஒட்டுமொத்த உருவகமே மலைக்காட்டு முனிதான்.

மலேசியப் புரட்சியின் பின்னணியில் இந்நாவல் சில வரலாற்றுக் குறிப்புகளுடன் ஊடாடி நகர்கிறது. அதுவே உச்சகாட்சியில் நாவலின் முடிவாகவும் அமைகிறது.

காட்டுக்குள் சென்ற இளைஞனைத் தேடும் புள்ளியைச் சுற்றி, பல்வேறு வரலாற்றுத் திறப்புகளையும், அவனது காதலையும், அவன் வாயிலாக நிகழந்த ஒரு புரட்சியையும் அதன் விளைவுகளையும் சொல்கிறது நாவல். நாவலின் மறக்கமுடியாத இரண்டு இடங்கள், குட்டியப்பனின் அம்மாவின் சித்திரமும், பெண்ணை அதிரிகாரியுடன் இரவு தங்க அழைக்கும் கங்காணியின் சித்திரமும்தான்.

நாவல் முழுக்க மீண்டும் மீண்டும் வருவது நாய்களின் மீதான சக மனிதர்களின் பாசம். இதை சீ.முத்துசாயின் பாசமாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நாய்க்கு உணவு வைப்பதில் இந்நாவல் கொண்டிருக்கும் மோகம் அசாத்தியமானது. பெரிய அதிகாரியும் சரி, மிக ஏழ்மையான கூலித் தொழிலாளியும் சரி, நாயிடம் உருகுகிறார்கள். அவை தெருநாய்கள். தெரு நாய்களின் சித்திரம் உருவாகி வரும் விதம் அபாரமானது.

நமக்குப் பரிச்சயமற்ற உலகை, தன் விவரணையின் மூலம் கண்முன்னே கொண்டு வருகிறார் சீ.முத்துசாமி. மலேசியத் தமிழர்களின் வாழ்வில் புழங்கும் பல வட்டாரச் சொற்களை இந்நாவலில் தெரிந்துகொள்ள முடிந்தது.

கடைசி அத்தியாயங்களில் கொஞ்சம் பழைய பாணியிலான திரைப்பட சாகசக் காட்சிகள் வந்துவிட்டது போன்ற உணர்வைப் பெற்றேன். நாவலின் முடிவு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதற்கா இத்தனை போராட்டம்? இந்த ஆச்சரியத்துக்கு இரண்டு காரணங்கள், மலேசியத் தமிழர்களின் வரலாறு எனக்குத் தெரியாதது, இன்னொன்று, என் கொள்கை ரீதியிலான பார்வை. ஆனால் நாவலின் வரலாற்றுப் பின்னணியின்படி இந்த முடிவு மட்டுமே இருக்கமுடியும் என்பது புரிந்தது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939392.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்

வாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180

மிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.

பொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.

இந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித்த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.

கொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.

ஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.

மிக ரசிக்கத்தக்க நாவல்.

இந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.

அவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்
குண்டு வீச்சு விமானங்களுக்கும்
எறிகணைகளுக்கும்
விசாரணைச் சாவடிகளின்
கண்களுக்கும் தப்பி.
அவனது ஒளிபொருந்திய புன்னகையை
எதிர்கொள்ள
இருண்ட தெருக்களைக் கடந்துவந்தேன்.
-தமிழ்நதி

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

1975 இரா முருகனின் நாவல்

இரா.முருகனின் 1975 நாவல். எமெர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு விலக்கபடும் வரையிலான 21 மாதங்களில் ஒரு வங்கி அலுவலர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை எமர்ஜென்ஸியின் பின்னணியில் சுவைபடச் சொல்லும் நாவல். சுவைபட என்றால் வெற்று வார்த்தை இல்லை, நிஜமாகவே சுவைபட. இரா முருகனின் எழுத்தில் இந்நாவலில் (சப்டில்) மென்நகைச்சுவை உச்சம் கொள்கிறது என்பேன். பல இடங்களில் நான் வாய்விட்டுச் சிரித்தேன். பாருக்குட்டியின் அத்தியாயமும் முத்துக்கிட்டுவின் அத்தியாயமும் உச்சம்.

வங்கி அதிகாரியாக லோன் தரவேண்டிய கட்டாயத்தில் அல்லாடும் சங்கரன் போத்தி எமர்ஜென்ஸியின்போது சென்னையிலும் டெல்லியிலும் பணி புரிகிறார். சென்னைக்கும் வட இந்தியாவுக்கும் எமர்ஜென்ஸி இரண்டு வேறு முகங்களைக் காட்டுகிறது. ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதையும் அரசு அலுவலகங்கள் கேள்வி கேட்காமல் சரியாகச் சொல்லி வைக்கப்பட்ட மாதிரி இயங்குவதையும் பாராட்டும் கூட்டம் ஒரு பக்கம். தன் உரிமைகளை சுதந்திரத்தை இழந்ததைப் பற்றிக்கூடப் பேச அஞ்சம் கூட்டம் இன்னொரு பக்கம். எமர்ஜென்ஸி எப்படி மக்களால் பார்க்கப்பட்டது என்பதை அழகாகப் பதிவு செய்கிறது நாவல்.

வலுக்கட்டாய லோன், வலுக்கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, இவை தரும் இன்னல்கள் எல்லாவற்றையும் மிக விரிவாக எழுதி இருக்கிறார் முருகன். அரசுக்கு எதிராக ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லத் தயங்கும் அரசு அதிகாரிகள். இந்திரா, சஞ்சயின் பெயரைச் சொல்லி அனைவரையும் மிரட்டும் கட்சி வர்க்கம். எந்தத் திட்டம் வந்தாலும் இந்திராவின் அல்லது சஞ்சயின் பெயர். லோன் வாங்க கடை தொடங்கினாலும் தொழில் தொடங்கினாலும் இந்திரா/சஞ்சய் பெயர். ஒருவர் எண்ணெய்க் கடை ஆரம்பிக்க, சஞ்சய் விளக்கெண்ணெய் என்று பெயர் வைக்க, கட்சி கவுன்சிலர் கொதித்துப் போய் அதற்கு இந்தியா விளக்கெண்ணெய் என்று வைக்கச் சொல்கிறார்!

இந்திராவின் இருதம்பசத் திட்டமும் சஞ்சயின் ஐந்தம்சத் திட்டமும் சங்கரன் போத்திக்கு மனப்பாடமே ஆகிவிடுகிறது. ஒவ்வொரு அதிகாரிக்கும் இப்படித்தான் இருந்திருக்கும். நரிக்குறவர்களுக்கெல்லாம் கூப்பிட்டு லோன் கொடுக்கிறார்கள். யார் சிக்கினாலும் குடும்பக்கட்டுப்பாடு. எமர்ஜென்ஸி முடிந்து இந்திரா தோற்க, சங்கரன் போத்தி சென்னைக்கு வந்து கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆக, நாவல் சுபம்.

அங்கேயும் இங்கேயுமாகத் தெறிப்பாக வரும் பல சம்பவங்கள் சுவாரஸ்யமளிக்கின்றன. நரேந்திரர் குஜராத்தி என்ற பெயர், கோபால் கோட்ஸேவின் பெயர், 25 அமசத் திட்டத்தின் பாடல்களைப் பாடமுடியாது என்று மறுக்கும் கிஷோர் குமார் (காரணம் சன்மானம் கிடைக்காது என்பதற்காகவாவ்ம்!), 20 அம்சத் திட்டத்தை விளக்கும் பாட்டு, இனிப்பில்லாமல் டீ சாப்பிட்டு வாக்கு கேட்கும் வாஜ்பாய், ரகசியமாக கம்யூனிஸ வகுப்பெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எனப் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல விஷயங்கள் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. நாவலில் இதைச் சொல்வது மிகப் பெரிய ஆவலைத் தரவல்லதுதான்.

எமர்ஜென்ஸியின் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமாக அலசும் புத்தகமல்ல இது. அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான புனைவு. இந்தத் தெளிவுடன் இந்த எல்லைக்குள் நின்று வாசித்தால், புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடிக்கான மென்நகைச்சுவையும் விறுவிறுப்பும் உறுதி.

To order online: http://www.nhm.in/shop/9789386737625.html

To order thru phone: Dial for books 044-49595818

Share

2018ல் வாசித்தவை

2018ல் படித்த புத்தகங்கள்:

* சைவ பேலியோ டயட் – பா.ராகவன்
* பேட்டை – தமிழ்ப்பிரபா
* எனது நாடக வாழ்க்கை – அவ்வை சண்முகம்
* வருவதற்கு முன்பிருந்த வெய்யில் – ஜி.கார்ல் மார்க்ஸ்
* எனது பர்மா நடைப்பயணம் – வெ.சாமிநாத சர்மா
* முஸ்தபாவைச் சுட்டுக் கொன்றவர்கள் – அகரமுதல்வன்
* சுபிட்ச முருகன் – சரவணன் சந்திரன்
* Mistress Throne – Ruchir Gupta
* Ivory throne – Manu S. Pillai (Half read!)
* நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
* Idol Thief – Vijayakumar
* ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – ஆ.சிவசுப்பிரமணியன்
* வெட்டாட்டம் – ஷான் கருப்பசாமி
* பீரங்கிப் பாடல்கள் – என்.எஸ்.மாதவன், தமிழில்: இரா.முருகன்
* காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், தமிழில்: நல்லதம்பி
* சிள்வண்டு முதல் கிகா பைட் வரை – ஹாலாஸ்யன்
* சிறைச்சாலை சிந்தனைகள் – எம்.ஆர்.ராதா (விந்தன் செய்த நேர்காணல்)
* இந்தியாவின் இருண்ட காலம் – சசி தரூர் (பாதி!)
* பேட்டை – தமிழ்ப் பிரபா
* எம்ஜியார் என்கிற ஹிந்து – ம.வெங்கடேசன்
* நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் – மாரிதாஸ்
* ஊழல் உளவு அரசியல் – சவுக்கு சங்கர்
* வெங்கட் சாமிநாதன் கட்டுரைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு)
* பின்லாந்து காட்டும் வழி
* கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல் (இன்னும் வெளிவரவில்லை.)
* 1975 – இரா.முருகன் (இன்னும் வெளிவரவில்லை.)
* மலைக்காடு – சீ.முத்துசாமி (இன்னும் வெளிவரவில்லை.)
* பழி – அய்யனார் விஸ்வநாத் (இன்னும் வெளிவரவில்லை.)
* சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள் (சென்னையர் கதைகள்)

இவை போக, 12 வலம் இதழ்கள் வெளிவருவதில் பங்காற்றி இருக்கிறேன்.

பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்தால் முடித்துவிடுவதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் முடிக்காமல் விட்ட சில புத்தகங்களும் உள்ளன. இந்த வழக்கத்தைக் கைவிட்டு, எதிர்வரும் 2019ல் முழுமையாக ஒரு புத்தகத்தைப் படித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஏப்ரல் வாக்கில் தொடங்கும் ஒருவித சோம்பேறித்தனம் ஜூன் முடிவது வரை நீடிக்கிறது. பிள்ளைகளுக்கு விடுமுறை நேரம் என்பதே காரணம்.

அடுத்த வருடத்தில் இதைவிட இரண்டு மடங்கு புத்தகங்களாவது படிக்கவேண்டும் என்று ஒரு சபதம். பார்க்கலாம்.

Share

நிமித்தம் – எஸ்.ரா.வின் நாவல்

நிமித்தம் நாவல்

எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசிக்கும் எஸ்ராவின் நாவல் இது. அரைகுறையாகக் காது கேட்கும் ஒருவனது வாழ்க்கை. மிக நீண்ட வாழ்க்கை. அவனுக்கு மட்டுமல்ல, வாசிக்கும் நமக்குமே அந்த அலுப்பைக் கடத்திவிடக்கூடிய ஒரு நாவல்.

தேவராஜுக்கு முதல் அத்தியாயத்திலேயே கல்யாணம் என்று வருகிறது. கடைசி அத்தியாயத்தில் கல்யாணம் நடக்கிறது. இடைப்பட்ட நானூற்றுச் சொச்சம் பக்கங்களில் அவனது திருமணம், கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக எப்படியெல்லாம் தள்ளிப்போகிறது, அவன் எத்தனை பெண்களை சந்தித்தான், அவனது வாழ்க்கையில் அவனுக்கு நேர்ந்த தோல்விகள் என விரிகிறது

தேவராஜுக்கு அன்பு செலுத்த யாரும் இல்லை. அப்பா முதல் அம்மாவிலிருந்து உறவினர்கள் எல்லோரும் அவனை அன்புக்கு லாயக்கற்றவர்களாகவே பார்க்கிறார்கள். இடையில் யாரேனும் அவனுக்கு அன்பைத் தந்தால் அவர்களுடனும் ஒரு முறிவு ஏற்பட்டு வருகிறது. கடைசி வரை அவனுடன் நட்பாக அன்பாக இருப்பது அவனது நண்பன் ராமசுப்பு மட்டுமே. இப்படி அன்புக்காகவும் ஒரு பெண் துணைக்கும் ஏங்கி தெரியும் தேவராஜுவின் கதை இது.

ஆனால் நான் இந்த நாவலை எஸ்ரா என்னும் சுவாரஸ்யமான கதைசொல்லியின் ஒரு கதைத் தொகுப்பாகவே பார்க்கிறேன். தொடக்கம் முதல் இறுதிப் பக்கம் வரை புதிது புதிதாக கதாபாத்திரங்கள் வந்தவண்ணமுள்ளன. அவர்கள் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பெங்கும் விரியும் இக்கதைகள் அதன் வழியே ஒரு சித்திரத்தைக் கொண்டு வருகின்றன. இந்தக் கதைகள், தொன்மக் கதைகளிலிருந்து பேய்க் கதைகள் என நீண்டு, உண்மைக் கதைகளின் சாயல் கொண்ட கதைகள் என்பது வரை செல்கின்றன. ஒருவகையில் இந்த நாவலில் இக்கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆனால் இக்கதைகளின் சுவாரசியம், நாவலின் மையக் கதையைவிடப் பெரியதாக உள்ளது.

நாவலின் இடையிடையே தெறிக்கும் அரசியல் குறிப்புகளும் வேண்டுமென்றே நுழைக்கப்பட்டதாக உள்ளது. அந்த அரசியல் குறிப்புகளின் வழி நமக்கு வெளியாகும் கதாபாத்திரம் ஒன்றிரண்டுதான். அந்தக் காலகட்டத்தின் வழியே நாவல் நம்மை இழுத்துக் கொள்ள இந்த உத்தியைக் கடைப்பிடித்திருக்கிறார் போலும்.

எப்படியாவது தேவராஜுக்குக் கல்யாணம் ஆகி விடாதா அல்லது நாமே ஒரு பெண் பார்த்துக் கட்டி வைத்துவிட்டு விட மாட்டோமா என்று நாமே சொல்லும் அளவுக்கு அவனுக்குப் பெண் துணை தொடர்பான தோல்விகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவன் வாழ்க்கை அங்கும் இங்கும் என ஊர் ஊராக அலைபாய்கிறது. ஒருவகையில் அவனுக்கு எதிலும் நிறைவு என்பது ஏற்படுவதில்லை. இறுதிவரை.
எஸ்ராவின் நாவல்களில் பொதுவாக எனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை என்பது, இப்படியான அல்லது எப்படியாவது ஒரு தொடர்பு கொண்டு வரும் கதைகளின் நுழைப்புதான். ஆனால் இந்த நாவலில் அப்படி வரும் காட்சியமைப்புகள் நாவலின் ஆதாரத்தை விட வெகு சுவாரஸ்யமாக உள்ளன. எனவே இந்த நாவலைப் படிப்பது மிக ரசனையாக உள்ளது.

நாவலில் வரும் பல உபகதைகள் மிகவும் ரசித்த தக்கவையாக உள்ளன. இறுதிக்காட்சிகளில், வாழ்வாங்கு வாழ்ந்த அந்த பண்ணையார் நாயுடுவின் வீழ்ச்சி… ஒரு கதை போல அறிமுகமான நபர், தலைமுறைகள் கழிந்து வீதிகளில் வரும்போது திக்கென்றுதான் உள்ளது.

ஒரு கட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார், ஒரு சாதாரணன் வாழ்ந்ததற்கான தடயங்கள் எந்த வகையிலும் இருப்பதில்லை என்று. இது குறித்து நான் பலமுறை யோசித்திருக்கிறேன். அந்த யோசனைக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒன்றுமில்லாதது தரும் எல்லாமுமான சிந்தனை எப்போதும் ஒரு பயத்தை அளிக்கக் கூடியது. இந்த நாவலின் சில கதைகள் அந்தப் பயத்தைச் தொட்டுச்சென்றன.

Share

Halasyan

ஹாலாஸ்யனின் கட்டுரைகள்

பொதுவாகவே அறிவியல்/சூழலியல் தமிழ்க் கட்டுரைகளை (ஆங்கிலக் கட்டுரைகளையும்!) நான் அதிகம் வாசிப்பதில்லை. முதலும் கடைசியுமான காரணம், இவை என் தலைக்கு மேலே பயணிப்பவை. டிஸ்கவரி சானல்களில் வரும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பதுண்டு. அவை அசரடிக்கும் வகையில் படம்பிடிக்கப் படுபவை. ஒரு மணி நேர ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கவனமும் உழைப்பும் ஆச்சரியமானவை. ஆனால் அவற்றில் எதோ ஒருவகையில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். ஹாலாஸ்யனின் கட்டுரைகளில் அந்த அந்நியத்தன்மை இருப்பதில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள். தமிழர்களின் சராசரி அறிவியல் அறிவை, விருப்பத்தை அறிந்துகொண்ட ஒருவர் எழுதும் கட்டுரைகள்.

தமிழில் பெரும்பாலான அறிவியல் கட்டுரை முயற்சிகள், ஒன்று, குறைவான அறிவியலுடன் பெரும்பாலும் கிண்டல் பேச்சுக்கள் மூலம் அறிவியலை விளக்கப் பயன்படும் கட்டுரைகளாக அமையும். அல்லது, தீவிரமான அறிவியல் கட்டுரைகளாக, அறிவியல் பற்றி ஏற்கெனவே அறிந்திருப்பவர்களுக்கான கட்டுரைகளாக அமையும். என்.ராமதுரை போன்ற சிலர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு கட்டுரைகள் முயன்றிருக்கிறார்கள். ஹாலாஸ்யன் இதில் அடுத்த படி.

விளக்க சில நகைச்சுவைத் தொடர்களை, உரையாடல்களைப் பயன்படுத்தினாலும் அவற்றிலேயே உறைந்துவிடுவதில்லை ஹாலாஸ்யன். அறிவியல் 90% இருக்கவேண்டும் என்பதில் பிறழ்வதில்லை.

மிகச் சரியான தமிழ் வார்த்தைகளைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறார். உருவாக்குகிறார். ஏன் அந்தத் தமிழ் அறிவியல் வார்த்தைகளை உருவாக்குகிறோம் என்பதில் அவருக்கு சரியான புரிதல் இருப்பதால், அவை பெரும்பாலும் சரியான வார்த்தைகளாகவே அமைகின்றன. ஒன்றிரண்டு கட்டுரைகள் எழுதிவிட்டு ஓய்ந்து போய்விடுவதில்லை என்பது முக்கியமாகச் சொல்லவேண்டியது. தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதுகிறார்.

உலக அறிவியல் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ச்சியாகத் தமிழில் அறிமுகப்படுத்தும் ஆர்வமும் உழைப்பும் இருக்கிறது. சமீபத்தில் எழுத வந்த இளைஞர்களில் (குழந்தை என்றே சொல்லவேண்டும்!) தனிப்பாதை ஒன்றைக் கைக்கொண்டிருக்கிறார் ஹாலாஸ்யன். தொடர்ச்சியாக இதே திக்கில் இவர் எழுதுவாரானால் இவரது ஒட்டுமொத்த தொகுப்பு தமிழுக்கான கொடையாக இருக்கும்.

ஹாலாஸ்யனின் புத்தகங்கள்:

சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, கிழக்கு பதிப்பகம்.
நுண்ணுயிர்கள் ஓர் அறிமுகம், யாவரும்.
எக்காலம், பார்வதி படைப்பகம்.

ஹாலாஸ்யனின் சில கட்டுரைகள்:

http://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal
http://www.valamonline.in/search/label/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
https://solvanam.com/author/halasyan/

ஹாலாஸ்யனின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/yes.eye.we.yea

 

 

 

Share

MGR-A-Hindu

எம்ஜியார் என்கிற ஹிந்து, தாடகமலர் பதிப்பகம், விலை ரூ 150

ம.வெங்கடேசனின் சமீபத்தைய புத்தகம் ‘எம்ஜியார் என்கிற ஹிந்து.’ எம்ஜியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகம் முனைந்ததை ஒட்டி ஏற்பட்ட ஆய்வில் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் ம.வெங்கடேசன். சில புத்தகங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும். சில புத்தகங்கள் வெறும் தகவல்களாக இருக்கும். இப்புத்தகம், ம.வெங்கடேசனின் மற்ற புத்தகங்களான ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’, ‘தலித்துகளுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி’ போன்ற புத்தகங்களைப் போலவே, மிகவும் விவரமாக தரவுகளுடன் எழுதப்பட்ட புத்தகம். இத்தரவுகளின் முக்கியத்துவம் என்னவென்றால், இன்றைய சூழலில், திராவிடக் கருத்தாங்கள் ஹிந்து ஆதரவுச் செய்திகளை முடக்க நினைக்கும் நிலையில், அக்கருத்துகளை ஒருவர் பேசுவதே ஆச்சரியத்துக்குரிய ஒன்றாகிவிடுகிறது. அதை முழுக்க கையில் எடுத்துக்கொண்டு அதற்கான தரவுகளைத் தருவதில் ம.வெங்கடேசன் முக்கியமானவர். எந்த அளவுக்கு என்றால், எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்துக் கதறும் அளவுக்கு. ஹிந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயர் மட்டுமே வெளியான சூழலில் அப்புத்தகத்துக்கு பெரிய விமர்சனத்தையே எழுதி திக்குமுக்காட வைத்தவர்கள் எதிர்த்தரப்புக்காரர்கள். அத்தரப்பை இன்னும் ஒரு முறை பதில்சொல்லமுடியாக்கேள்விக்குள் வைத்திருக்கிறார் ம.வெங்கடேசன்.

எம்ஜியார் ஏன் ஹிந்து என்பதை அவரது பேட்டிகள், அவரைப் பற்றிப் பிறர் சொல்லும் கருத்துகள் மூலம் நிறுவுகிறார் ம.வெங்கடேசன். அத்தோடு எப்படி திராவிடர் கழகம் வரலாற்றின் பக்கங்களில் எம்ஜியாரை திட்டித் தீர்த்தது என்றும் அவர் எப்படி ஹிந்து ஆதரவாளராக இருக்கிறார் எனக் கட்டம் கட்டியது என்பதையும் ஆதாரத்துடன் பதிவு செய்கிறார். இன்று எம்ஜியாரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகத்துக்கு என்ன தகுதி உள்ளது என்பதுதான் புத்தகத்தின் ஒட்டுமொத்த கருத்துமே. கூடவே எப்படி ஹிந்து ஆதரவாளர்கள் அன்று எம்ஜியாருடன் நின்றார்கள் என்பதையும் எம்ஜியார் அவர்களுடன் எப்படி இணைந்து சென்றார் என்பதையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

பல அரிய தகவல்கள் இப்புத்தகம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன.

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் முதலில் நடிக்க இருந்தவர் எம்ஜியார், (பின்பு சிவாஜி நடிக்கிறார்), எம்ஜியாரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட எம்.ஆர்.ராதாவின் கடிதம், எம்ஜியார் தனிக்கட்சி துவங்கியபோது எம்ஜியாருக்கு அறிவுரை என்று ஈவெரா எழுதியதில் தனக்கு எம்ஜியாரைத் தெரியாது என்று சொன்னதன் பின்னணியில் உள்ள பொய், எம்ஜியாரை நம்மவர் அல்ல என்று ஈவெரா சொன்னது, எம்ஜியார் ஆட்சியில் தமிழனுக்கு வாய்ப்பு இல்லை என்று வீரமணி சொன்னது (ஆனால் கருணாநிதி ஆட்சியில் தெலுங்கர்கள் இடம் என்ன என்பதைப் பற்றிச் சொல்லாமல் விட்டது!), பிராமணர்களை மட்டும் ஒதுக்கும் கட்சி அல்ல அதிமுக என்று எம்ஜியார் சொன்னது எனப் பலப்பல தகவல்கள். இத்தகவல்களுக்குப் பின்னர் இன்னும் சூடுபிடிக்கிறது புத்தகம்.

ஈவெராவைப் பொறுப்புள்ளவராகக் கருதவில்லை என்று எம்ஜியார் சொல்வது, இந்து மதத்தைத் தாக்கிப் பேசுபவர்களுக்குப் பிற மதத்தைக் குறை கூற துணிவு இருக்கிறதா என்று எம்ஜியார் பேசுவது, மதமாற்றம் குறித்த எம்ஜியாரின் விரிவான கருத்துகள், மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி ஆர் எஸ் எஸ் எம்ஜியாருக்குச் சொல்லும் பதில்கள், இந்து முன்னணி சொல்லும் யோசனைகளை முன்னிட்டு எம்ஜியார் தரும் அரசாணைகள், இந்து மதம் பற்றி எம்ஜியாரின் கட்டுரை – இவையெல்லாம் நிச்சயம் படிக்க வேண்டியவை. குறிப்பாகச் சொல்லிச் செல்வது, பின்னாளில் எனக்கும் மற்றவர்களுக்கும் உதவும் என்பதால்தான். புத்தகம் முழுக்கவே இப்படியான குறிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

‘ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும்’ என்று கிருபானந்த வாரியார் பேசுவதைத் தொடர்ந்து, திக, திமுக மற்றும் எம்ஜியார் ரசிகர்ளால் தாக்கப்படுகிறார். பதறிப் போகும் எம்ஜியார் இதை எப்படிக் கையாள்கிறார் என்பது சுவாரசியமாக உள்ளது. பொன்மனச் செம்மல் என்ற பெயரை கிருபாந்தனந்த வாரியார் மூலம் பெற்றுக்கொள்கிறார் எம்ஜியார் (இதைச் சொல்வது மபொசி), எம்ஜியாரே நிரந்தர முதல்வர் என்று கிருபானந்த வாரியார் சொல்வது எனப் போகின்றன நிகழ்வுகள்.

காஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை வைப்பதற்கு அனுமதி மறுத்த எம்ஜியாருக்கும் கருணாநிதிக்கும் நடந்த விவாதத்தில் எம்ஜியார் சொல்லி இருப்பவை, அவர் எத்தனை தூரம் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார் என்பதைச் சொல்கிறது. ஸ்ரீரங்கத்தில் கோவிலின் முன் ஈவெரா சிலையை வைத்தவர்களுக்கு எம்ஜியாரின் பதில் மிகவும் தேவையான ஒன்று. வரலாற்றில் திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது சோ, வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் ஏன் திமுகவை அந்த அளவுக்கு எதிர்த்தார்கள் என்பது மீண்டும் மீண்டும் உறைக்கிறது. அரசியலின் பின்னாளைய எல்லாத் தாழ்வுகளுக்கும் திகவும் திமுகவுமே காரணமாக அமைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

எம்ஜியார் அல்ல, எம் ஜீயர் என்று ஒரு ஜீயர் சொல்வதை இன்றைய நிலையில் ஒரு திடுக்-குடன் வாசித்தேன் என்றாலும், அப்படிச் சொல்ல நேர்ந்ததன் (ஸ்ரீ ரங்கம் கோபுரம் கட்டுவது தொடர்பான) பின்னணியும் அவற்றை முறியடிக்க எம்ஜியார் செய்த உதவிகளும் புரிகின்றன. ஏன் சினிமாவில் கோவில் தொடர்பான காட்சிகளில் நடிப்பதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அப்படி ஒரு கொள்கையே இல்லையே என்கிறார் எம்ஜியார். மருதமலை கோவிலுக்கு விளக்கேற்றி வைத்தேனே என்றும் சொல்கிறார். இப்படியாகப் பல தகவல்களை விவரித்து எம்ஜியார் தொடக்கம் தொட்டே ஆன்மிகவாதியாகவும், தேசியவாதியாகவுமே இருந்திருக்கிறார் என்று நிரூபிக்கிறார் ம.வெங்கடேசன்.

கேபி சுந்தராம்பாள் எம்ஜியாருக்கு நெற்றியில் திலகமிடுகிறார், ஆனால் கருணாநிதிக்கு இடுவதில்லை என்ற நுணுக்கமான செய்திகளையெல்லாம் ஆதாரமாகக் காட்டுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. உழைப்புடன் தீவிரமான யோசனையும் இருந்தால் மட்டுமே இப்படியாகப் பல தகவல்களைக் கோர்க்கமுடியும். அதை அநாயசமாகச் செய்திருக்கிறார் ம.வெங்கடேசன்.

அட்டகாசமான சுவாரசியமான தவறவிடக்கூடாத புத்தகம்.

நன்றி: அந்திமழை பத்திரிகை

Share

Mathippurai.com and Andhimazai book review contest

அந்திமழையின் அதிரடி விமர்சனப் போட்டி! (தலைப்பு இப்படித்தான் வைப்போம். க்யாரே செட்டிங்கா என்று கேட்பவர்கள் அன்புடன் ப்ளாக் செய்யப்படுவார்கள்.)

மதிப்புரை.காம் என்றொரு வலைத்தளம் நடத்திக்கொண்டிருந்தோம். நோக்கம், புத்தகங்களுக்கு நல்ல விமர்சனம் வரவைக்கவேண்டும் என்ற எண்ணம்தான். இன்றைய நிலையில் அதிகம் விற்கும் நாளிதழ்களில், பத்திரிகைகளில் ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் வருவது அத்தனை எளிதானதல்ல. அதேசமயம் அது அத்தனை கடினமானதுமல்ல. பத்திரிகைகளின் நோக்கம் சார்ந்து தேவை பொருத்து விமர்சனங்களுக்கான புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும். பல விடுபடல்களை மீறி ஒரு புத்தகத்தின் விமர்சனம் வெளியாகவேண்டும். இதில் பத்திரிகைகளின் இடப்பற்றாக்குறை, வருமானம் தரும் பகுதி எதுவோ அதன் தேவை என்பதையெல்லாம் பொருத்தே புத்தக விமர்சனங்கள் வெளியிடப்படும். இந்தப் பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்கு ஓரளவு ரீச் இருக்கும். அதேசமயம் இந்த விமர்சனங்கள் எல்லாம் புத்தக அறிமுகங்கள் என்ற அளவிலானவை மட்டுமே.

காலச்சுவடு, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் புத்தக விமர்சனங்கள் கொஞ்சம் தீவிரமானவை. புத்தகத்தை ஆராய்பவை. இவற்றை விமர்னங்கள் எனலாம். இப்பத்திரிகைகளுக்கு அல்லது பத்திரிகை ஆசிரியர்களுக்கு அல்லது விமர்சனத்தை எழுதும் ஐயோபாவம் எழுத்தாளருக்கு உரிய சாய்வுகளுடனேயே எந்தப் புத்தகத்தின் விமர்சனம் வரவேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

இவற்றையெல்லாம் மீறிப் பார்த்தால், ஒரு புத்தகத்துக்கு நியாயம் செய்யும் விமர்சனங்கள் வருவதில்லை என்பதே உண்மை. இதில் எல்லாருக்கும் பங்குண்டு. எனவே குற்றங்களை நாம் நமது என்று பேசுவதே நியாயமானது.

மதிப்புரை.காம் என்ற தளம் தொடங்கப்பட்டது, ஆன்லைனில் எப்படி புத்தக விமர்சனங்களைக் கொண்டு செல்வது, அதன் மூலம் அக்குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனையை அதிகப்படுத்துவது என்ற நோக்கில்தான். இதன்படி புத்தக வாசிப்பாளர்களுக்குப் புத்தகம் இலவசமாகத் தரப்படும். அவர்கள் அப்புத்தகத்துக்கு விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டும். புத்தகத்தை நிராகரித்தும்கூட எழுதலாம். விமர்சகர்களின் சுதந்திரத்தில் எவ்விதக் குறுக்கீடும் இருக்காது. இதுதான் திட்டம்.

இத்திட்டம் தோல்வி அடைந்தது. காரணங்கள் என்ன? புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொண்ட விமர்சகர்கள் ஒன்றிரண்டு முறை ஆர்வத்தில் எழுதினார்கள். பின்னர் தொடர்ச்சியாக அவர்களால் எழுதமுடியவில்லை. இது முதல் காரணம். இதனால் தொடர்ச்சியாக எழுதும் ஒன்றிரண்டு நபர்களின் விமர்சனங்கள் மட்டுமே வெளிவரத் துவங்கின. இரண்டாவது பிரச்சினை – இப்படிப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிப்பகங்கள் பெரிய அளவில் முன்வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் ஒரு பத்திரிகைக்குப் புத்தகங்கள் அனுப்பி எப்போது விமர்சனம் வரும் என்று தேவுடு காத்திருப்பது கிட்டத்தட்ட எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொதுவான அனுபவமே. அதனால் பதிப்பகங்கள் பெரிய அளவில் இதற்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால், மதிப்புரை.காம் போன்ற ஒரு தளத்தில் ஆன்லைனில் விமர்சனம் வருவதால் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். அதாவது புத்தகம் பற்றிய பேச்சு இருக்கும், ஆனால் அது விற்பனையாக மாறாது. இது உண்மைதான். எனவே பதிப்பகங்கள் புத்தகங்களை இலவசமாகத் தருவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் மீண்டும் பதிப்பாளரிடம் புத்தகத்தை இலவசமாகக் கேட்பது குறித்த ஒரு குற்ற உணர்வு உருவாகத் துவங்கிவிட்டது! மூன்றாவது, விமர்சகர்கள் வாங்கிய புத்தகத்துக்கு விமர்சனங்கள் அனுப்பவில்லை. தொடர்ச்சியாகக் கேட்டாலும் அவர்கள் உண்மையில் மனத்தளவில் விமர்சனம் எழுதவேண்டும் என்றும் நினைத்தாலும் அதைச் செய்து முடிக்கமுடியாத சூழல். இது எல்லோருக்கும் நேர்வது. ஆனால் இதனால் சில சுணக்கங்கள் நேர்ந்தன. பதிப்பாளர்களிடம் மீண்டும் புத்தகம் கேட்கமுடியாத சூழல் இதனாலும் உருவானது. நான்காவதாக, அனாமதேய புத்தகங்கள் என்னும் சொல்லும் அளவுக்கான புத்தகங்கள் விமர்சனத்துக்கு வந்தன. அவற்றைப் படிக்கவோ விமர்சனம் செய்யவோ யாரும் விரும்பவில்லை. ஆனால் அப்பதிப்பாளர்களிடம், எழுத்தாளர்களிடம் அப்புத்தகங்களை அனுப்பாதீர்கள் என்றும் சொல்லும் நிலை உருவானது. இதனால் சில சங்கடங்கள் நேர்ந்தன. ஐந்தாவதாக, நீண்ட புத்தக விமர்சனங்களைப் படிக்க அதிகம் யாரும் தயாராக இல்லை. ஆறாவதாக, இலவசமாகப் புத்தகத்தையும் கொடுத்து, அதை அனுப்பவும் கொரியர் செலவு செய்து – எங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை.

இந்த உண்மைகளின் முன்னே இயல்பாகவே மண்டியிட நேர்ந்தது. இப்படித்தான் நடக்கும் என்று தெரியும். ஆனாலும் மதிப்புரை.காமில் பல முக்கிய விமர்சனங்கள் வெளியாகின. இது தொடர்ந்திருந்தால் மிக முக்கியமான விமர்சனத் தளமாக அது தொடர்ந்திருக்கும். இப்போதும்கூட இப்படி ஒரு தளத்தை, பதிப்பாளர்களின் உதவியுடன் யாரேனும் முயன்று பார்க்கலாம்.

அந்திமழை.காம் புத்தக விமர்சனத்துக்கென்று ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. அதற்குள் விமர்சனங்களை அனுப்பவேண்டும். மதிப்புரை.காமில் பங்குகொண்ட நண்பர்கள், புத்தக ஆர்வலர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதிகம் இதனை நண்பர்களுடன் பகிருங்கள்.

முதல் பரிசு – ரூ.10000
இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]
மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.

அந்திமழை விமர்சனப் போட்டி அறிவிப்பு இங்கே: http://andhimazhai.com/news/view/andhimazhai-zhakart-contest-2852018.html

Share