Archive for புத்தகப் பார்வை

இரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்

நாவல் என்பது ஒரு கதையைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அது அனுபவத்தின் பெரு வெளியாகவும் இருக்கக் கூடும். ஆனால் இப்படி ஒரு நாவல் எழுதுவது அத்தனை சுலபமானதல்ல. நாவலில் சொல்லப்படும் அனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதனின் வாழ்க்கையோடு முடிந்துவிடவும் தேவையில்லை என்று எல்லையைப் பெருக்கிக் கொண்ட வகையில், இரா.முருகன் இந்த நாவலை மிகப் பெரிய வீச்சும் பரப்பும் கொண்டதாக மாற்றி விட்டிருக்கிறார். அதே சமயம் அந்த ஒரு மனிதனையே அவனது முன்தொடர்ச்சியாக எழுதிய வகையில் அசரடித்திருக்கிறார். எந்த அளவுக்கென்றால், யூகிக்கவே முடியாத ஒரு பெரும் அனுபவ அலைக்குள் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு.

வெறும் அனுபவங்களை மட்டுமே ஒரு நாவலாக, அதுவும் கிட்டத்தட்ட ஐநூறு பக்க நாவலாக எப்படிச் சொல்ல முடியும்? பின்னணிகளும், விவரணைகளும் கதையைவிட முக்கியமானதாகவும் விரிவானதாகவும் இருக்குமானால் இது சாத்தியம். இரா. முருகன் மொழிபெயர்த்த ‘பீரங்கிப் பாடல்கள்’ என்ற புத்தக வெளியீட்டில் மாலன் மிக அருமையாகப் பேசினார். மேக்ரோ எலிமெண்ட்டுகளைவிட மைக்ரோ எலிமெண்ட்டுகள் ஒரு புத்தகத்தில் விரிந்திருக்குமானால் அந்தப் புத்தகம் தரும் அனுபவம் பற்றிய குறிப்பு ஒன்றைச் சொன்னார். அதைத் தமிழில் செய்து காட்டி இருக்கிறது இரா.முருகனின் ராமோஜியம்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சென்னையின் மீது குண்டு வீசப்படலாம் என்கிற அச்சம் நிலவும் சூழலில் சென்னை எப்படி இருந்திருக்கும் என்ற களத்துடன் தொடங்குகிறது நாவல். இன்றைய கொரோனா காலக்கட்டத்தில், அன்றைய போர்ச் சூழலின்போதான சென்னையை எளிதாக உணர முடிகிறது. கொரோனா என்பது கூட நம் மீது இயற்கை தொடுத்திருக்கும் ஒரு போர்தான். அன்று பெட்ரோல் வாங்கக் கூட ரேஷன். ராமோஜி ராவுக்கும் அவன் மனைவி ரத்னாவுக்குமான வாழ்க்கையை விவரிக்கும் நாவல், தெளக்ஸ் புவனாவின் வருகையுடன் அடுத்த கட்டத்துக்குப் போகிறது. அதன் பிறகான, இந்தக் கால ராமோஜிக்கும் முந்தைய ராமோஜி, ரத்னா, புவனாக்களுடன் நாம் யூகிக்கவே முடியாத தளத்துக்குப் போய்விடுகிறது. இறுதி அத்தியாயம் ஒரு சிறுகதைக்கான கச்சிதமான முடிவு. ஒரு நாவலுக்கு எப்படி சிறுகதைக்கான முடிவு வலுவானதாக இருக்க முடியும் என்று யோசித்திருக்கிறேன். லக்ஷ்மி சரவணகுமாரின் ‘கானகன்’ இப்படி ஒரு அனுபவத்தைத் தந்தது. இப்போது இந்த நாவல். நெகிழ வைக்கும் இறுதி அத்தியாயம்.

நாவல் முழுக்க விரவிக் கிடக்கும் தகவல் களஞ்சியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமேனால், இன்னொரு நாவல்தான் எழுதவேண்டி இருக்கும். அத்தனை தகவல்கள். எதுவுமே உறுத்தாத அளவுக்கு, வேண்டுமென்றே திணிக்கப்படாத மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பஸ்தனின் இருத்தலியல் பிரச்சினைதான் நாவல் என்பதால், இது மிக எளிதாகவே சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தைக் கொண்டு வருவது என்பது சாமானியமான விஷயமா என்ன? அந்தக் காலத்தில் நாம் வாழ்வது போல என்போமே, கிட்டத்தட்ட இன்று க்ளிஷேவாகிவிட்டாலும், அதை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இரா.முருகன். உண்மையில் அசரடிக்கிறார் என்றே சொல்லவேண்டும். நான் சொல்வது நாவலை வாசித்தால்தான் உங்களுக்குப் புரியும். அதுவும் முழுக்க வாசித்தால்தான் புரியும்.

நாவலின் அடிநாதமாக வருபவை நான்கு விஷயங்கள். முதலில், உணவு. நாவல் முழுக்க குறிப்பாகச் சொல்லப்படும் உணவு வகைகளைப் பட்டியல் இட்டால், அதுவே ஐம்பது பக்கங்களுக்கு வருமோ என்கிற சந்தேகம் எனக்கு வந்தது! ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தினமும் உண்பவற்றை எல்லாம் எழுதி வைத்துக் கொண்டே வந்து, அவனது இறுதிக் காலத்தில் அதைப் படித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நான் யோசித்திருக்கிறேன். எந்த ஒரு மனிதனுக்கும் உணவின் மேல் இருக்கும் முக்கியத்துவமும் ஈர்ப்பும் அலாதியானது. நாம் அதை உணராவிட்டாலும் கூட, அது என்றுமே நம்முடனே இருந்துகொண்டே இருப்பது.

இரண்டாவது விஷயம், நாவல் முழுக்க வரும் சங்கீதம் பற்றிய குறிப்புகள். இரா.முருகன் கர்நாடக சங்கீதத்தில் விருப்பம் உள்ளவர். எனவே இவற்றையெல்லாம் மிக அழகாக எழுதிச் செல்கிறார். அதுவும் 1940களின் உலகத்தில் இதைப் பொருத்துவதையெல்லாம் அநாயசமாகச் செய்கிறார்.

மூன்றாவது, சினிமா. 1930களில் என்ன சினிமா வந்திருக்கும்? யார் நடிகைகள்? இந்தப் புத்தகத்தைப் படித்தால் இதிலிருந்தே நாம் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டுவிட முடியும். நடிகர்களையும் படங்களையும் போகிற போக்கில் சொல்லிவிட்டால் என்ன இருக்கிறது? அவர்களையும் நாவலின் கதாபாத்திரம் ஆக்கியதில்தான் சுவாரஸ்யம். காளிங்க ரத்னமும் தெலக்ஸ் புவனாவும்  மறக்க முடியாத கதாபாத்திரமாகிறார்கள். சபாபதி என்ற படம் வந்தது எனக்குத் தெரியும். அதில் ராமசந்திரன் நடித்திருந்தார். இந்த நாவலில் தசாபதி என்ற ஒரு திரைப்படம் பற்றிச் சொல்லப்படுகிறது. தெலக்ஸ் புவனா என்றொரு நடிகை. தெலக்ஸ் என்ற சோப்பு விளம்பரத்தில் நடித்துப் புகழ்பெற்று, அதன் பின்னர் அவர் நடிக்கும் படம் பரபரப்பாக ஓடி, அவர் பெயர் தெலக்ஸ் புவனா என்றாகிறது. யார் இந்த தெலக்ஸ் புவனா? இது என்ன படம் தசாபதி? யாராவது இப்படி எதுவும் இல்லை என்று என்னிடம் இப்போது சொன்னால், நான் நம்பமாட்டேன். அந்த அளவுக்கு இந்த நாவலில் இவை விவரிக்கப்படுகின்றன. இந்தக் கற்பனையெல்லாம் எப்படித் தோன்றின என்று இரா.முருகன் பேசினால் அது இன்னொரு சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும் என்பது நிச்சயம்.

நான்காவதாக, நாவல் முழுக்க வரும் நகைச்சுவையான வசனங்கள். நகைச்சுவை என்றால், எடுத்துக் கூட்டிச் சொல்லும் நகைச்சுவை அல்ல. போகிற போக்கில் தெறித்து விழும் சொல்லாடல்கள். இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நான் சத்தம் போட்டுச் சிரித்திருப்பேன் என நினைக்கிறேன். இன்னும் கூடுதலாகக் கூட இருக்கலாம். ஒரு தீவிரமான நாவலில் சமீபத்தில் இத்தனை சிரித்த மாதிரி எனக்கு நினைவில்லை.

ராமோஜி ராவின் மூதாதையர்களின் ராமோஜிக்களையும் நாவலில் கொண்டு வந்து பிணைத்தது மிகச் சிறந்த உத்தி. வாழ்க்கையில் எல்லாமே திரும்ப திரும்ப நடக்கிறது, எல்லாமே எழுதி வைக்கப்பட்டது என்கிற கற்பனை ஒரு காவியம் என்றே நான் நினைப்பதுண்டு. ராமோஜிக்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அந்தக் காவியத்தைக் கொஞ்சம் நெருங்குவதைப் போலத் தோன்றியது. அதிலும் தாசியான புவனாவின் கடித அத்தியாயம் இந்நாவலின் உச்சம் என்றே சொல்லவெண்டும்.

நாவல் திடும்திடுமென மாறிக்கொண்டே இருக்கிறது. இங்கிலாந்து மகாராணிக்கு இந்தியர் எழுதும் கடிதம், திடீரென தெலக்ஸ் புவனா, திடீரென அனந்த ரங்கம் பிள்ளை ஒரு கதாபாத்திரமாக வருவது, கூடவே அருணாசலக் கவிராயர் வருவது, திடீரென டெல்லி பயணம் இப்படி. இந்த மாற்றம் தரும் ஒரு அலுப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த அத்தியாயங்களுக்குள் விவரிக்கப்படும் வாழ்க்கை, இந்த அலுப்பை முற்றிலும் போக்கச் செய்துவிடுகிறது. நீண்ட ரயில் பயணத்தின் விவரிப்பில் ஒரு மொட்டைப்பாட்டி வந்து அந்த அலுப்பைப் போக்கி விடுகிறாள். இங்கிலாந்துக்கு எழுதும் கடிதத்தில் சொல்லப்படும் கிண்டலும் கேலியுமான தாக்குதல்கள் சிரிக்க வைக்கின்றன. கப்பலோடியாக வரும் ராமோஜி ராவின் தாசிக் காதல் அசரடிக்கிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதே சவால். அதை நாவலுக்குள் கட்டி எழுப்புவதெல்லாம் மிகவும் கடினம். இன்னும் சொல்லப் போனால், அரசர் காலத்துக் கற்பனைக் களத்தைக் கூடக் கட்டி எழுப்பி விடலாம். மிக அதிக கடந்த காலம் ஆகிவிடாத, சமீபத்தைய கடந்த காலமான 1940களைக் கண் முன் கொண்டு வருவது மிகப் பெரிய சவால். இந்தப் புத்தகம் அந்த அளவில் தமிழில் ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். அந்தக் கால அரசியல், அந்தக் கால சினிமா, அந்தக் கால ரேடியோ, அந்தக் காலப் பயணம், அந்தக் கால வாழ்க்கை, அந்தக் கால சங்கீதம் என்ற எந்த ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. மறக்கவே முடியாத அனுபவத்தைத் தரும், தவறவிடக் கூடாத நாவல்.

பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை இரா.முருகன் எழுதி இருக்கிறார். அவற்றில் நான்கு நாவல்களை நான் படித்திருக்கிறேன். நான் படித்தவற்றில் இந்த நாவல் ஒரு மாஸ்டர் பீஸ். மிளகு என்றொரு நாவலை எழுதப் போவதாக இரா.முருகன் சொல்லி இருந்தார். இந்த நாவலைப் படித்ததும் தோன்றியது, மிளகு நாவல் வந்தால் அது இன்னொரு மைல்கல்லாக இருக்கும் என்பதுதான். இரா.முருகனுக்கு வாழ்த்துகள்.

குறிப்பு: இந்தப் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது. அச்சுப் புத்தகம் விரைவில் வெளியாகும். கிண்டிலில் வாங்கிப் படிக்க: https://www.amazon.in/dp/B08G16WC44

Share

நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)

எனது ‘நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்’ புத்தகங்களுக்கு நான் எழுதிய முன்னுரை இங்கே. முதல் பாகம் ரூ 140. இரண்டாம் பாகம் ரூ 170. இரண்டு புத்தகங்களையும் சேர்த்து ஆன்லைனில் டயல் ஃபார் புக்ஸ் மூலம் ஆர்டர் செய்ய: https://dialforbooks.in/product/1000000030652_/ (தனித்தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.)

போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ்: 044-49595818 | 9445901234

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய (மெசேஜ் மட்டும்): டயல் ஃபார் புக்ஸ்: 9500045609

பாகம் 2க்கான முன்னுரை:

தமிழ்த் திரையுலகம் புதிய அலை இயக்குநர்களின் வருகைக்குப் பின்பு மிக வேகமாக ஹிந்து – ஹிந்துத்துவ – இந்திய வெறுப்புக்குள் தீவிரமாகப் பயணிக்கிறது. ஹிந்துக்களைக் கிண்டல் செய்யும் ஒரு காட்சி இல்லை என்றால் சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்னும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது என்றாலும், எவ்வித அரசியலும் அற்ற படங்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று எந்த ஒரு படத்திலும் தேவையே இல்லாமல் ஹிந்துக்களைக் குறை சொல்வது என்பது வேண்டுமென்றே திணிக்கப்படுவதைப் பார்க்கலாம்.

தமிழ்த் திரையுலகம் இந்த வகையான ஹிந்து எதிர்ப்புச் சொல்லாடல்களை மூன்று வகைகளில் பயன்படுத்துகிறது. ஒன்று மிக நேரிடையான அரசியல் படங்கள். காலா, ஜிப்ஸி போல. அடுத்ததாக, படத்தில் குறியீடுகளைப் பரப்புவது. ஆர்.கே.நகர் போல. அடுத்ததாக, தேவையே இல்லாமல் காட்சிகளையோ அல்லது வசனத்தையோ வைப்பது. ப்ரேம் ப்யார் காதல் (கதாநாயகன் அணிந்திருக்கும் ஒரு டீ ஷர்ட்டில் சிலுவையுடன் பிலீவ் மி என்று இருக்கும்) அல்லது சிலுக்குவார்பட்டி சிங்கம் போல. அல்லது கொஞ்சம் கூட முக்கியமற்ற ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டது போவது. இப்படிப் பல முனைத் தாக்குதல்களில் இறங்கி இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது, அதற்கு தேவையற்ற கவனம் தருகிறோம் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறேன். திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை மெனக்கடலுடன் எத்தனை பேர் ஈடுபாட்டில் வருகிறது என்று புரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் அது. அவர் ஒரு ஹிந்து அமைப்புக்கு உதவும் சிறிய கிளை அமைப்பில் பொறுப்பில் இருக்கிறார். அவரது அலுவலகத்தை ஒரு படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். அலுவலகமும் அதிகம் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார்கள் போல. அந்த அலுவலகத்தின் வரவேற்பு மேஜையில் ஒரு விவேகானந்தர் சிலை இருக்குமாம். அது வரக்கூடாது என்று படத்தின் இயக்குநர் சொல்லி இருக்கிறார். படக்குழு அந்த விவேகானந்தர் சிலையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டது. பின்னர் பின்னணியில் கார்ல் மார்க்ஸ் படம் வரவேண்டும் என்று சொல்லி அங்கே மார்க்ஸை ஒட்ட வந்திருக்கிறார்கள். அப்போதுதான் அலுவலகத்துக்கு உறைத்திருக்கிறது, இதையெல்லாம் யோசிக்காமல் சம்மதித்துவிட்டோமே என்று. அந்தப் படம் வெளியாகவில்லை என்பது ஒரு நிம்மதி. ஆனால் இதில் இன்னொரு சோகமும் உள்ளது. அந்த இயக்குநர் போகும்போது அழகான அந்த விவேகானந்தர் சிலையைக் கொண்டு போய்விட்டாராம்! அதாவது படத்தின் சட்டகத்துக்குள் விவேகானந்தர் வரத் தேவையில்லை. கார்ல் மார்க்ஸ் வரவேண்டும். ஆனால் விட்டுக்கு விவேகானந்தர் சிலை வேண்டும்!

எனவே ஒரு காட்சியில் ஒருவர் நாமம் போட்டு வருகிறார் என்றாலோ அல்லது உத்திராட்சை அணிந்து வருகிறார் என்றாலோ அல்லது எவ்வித அடையாளமும் இன்றி வருகிறார் என்றாலோ அல்லது பின்னணியில் ஏதேனும் ஒரு படம் இருக்கிறது என்றாலோ அது எதுவுமே தற்செயல் அல்ல. மிகத் தெளிவாக யோசித்தே வைக்கப்படும் ஒன்றுதான். நாம் அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.

சிலர் கேட்டார்கள், முன்பெல்லாம் திரைப்படத்தில் வில்லனுக்கு கிறித்துவப் பெயர்கள் வருகின்றனவே என்று. உண்மைதான். ஆனால் அவற்றுக்கும் இன்று நிகழ்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அன்று நிகழ்ந்ததன் பின்னால், திரைப்படத்தில் தொற்றிக்கொண்டிருந்த (இப்போதும் இருக்கும்) ‘வழக்கத்தை அப்படியே பின்பற்றுவது’ என்ற எண்ணம் மட்டுமே. இதே திரைப்படங்களில் அனாதை ஆசிரமம் என்றாலே கிறித்துவ ஆசிரமங்கள் காட்டப்படுவதைப் பார்க்கலாம். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், இதன் பின்னணியில் எவ்விதக் கருத்துத் திணிப்பும் இல்லை என்பதை. ஆனால் இன்று வரும் திரைப்படங்களில் வரும் ஹிந்து எதிர்ப்பு மிகத் தீவிரமான உள்நோக்கத்தோடு, அரசியல் நோக்கத்தோடு புகுத்தப்படுகிறது. இதுதான் வித்தியாசம். எனவே அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் விஷயத்தை அதே அரசியல் நோக்கத்தோடுதான் எதிர்க்கவேண்டும். இதில் நடுநிலை என்பதும் கலை என்பதும் அடிபட்டுப் போய்விடும். எந்தப் படம் அரசியல் சார்பின்றி கலையைப் பேசுகிறதோ அந்தப் படத்தை மட்டுமே கலையை மட்டும் கொண்டு எடை போட முடியும்.

ஏன் தமிழ்த் திரையுலகம் இப்படி இருக்கிறது? மிகப் பெரிய கேள்வி இது. படத்தை யார் தயாரிக்கிறார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதை யோசிப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், அனைத்து இயக்குநர்கள் என அனைவரின் அரசியல் நிலைப்பாடும் ஹிந்து எதிர்ப்பாக இருக்கிறது என்பது முதல் காரணம். இதனால் புதியதாக வரும் இயக்குநர்கள் கூட இந்த ‘வழக்கத்துக்கு’ ஆட்பட்டாக வேண்டியது அவசியம் என்பது இரண்டாவது காரணம். பின்பு அவர்களும் இதே பழக்கத்தில் ஊறிப் போய்விடுகிறார்கள் என்பது நம் அவலம்தான். எத்தனை திட்டினாலும் ஹிந்துக்கள் ஒரு அமைப்பாகத் திரளவே போவதில்லை, அத்தனை தூரம் அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது திராவிட அரசியல் என்பது அடுத்த காரணம்.

இதற்கெல்லாம் விடிவுகாலம் இல்லையா? இருக்கிறது. தொடர்ச்சியாக இது போன்ற திரைப்படங்களைப் பற்றிப் பேசி மக்களிடம் கொண்டு போவது முக்கியமானது. சிலர் சொல்கிறார்கள், சென்சாரைக் கொண்டு இப்படங்களை முடக்கவேண்டும் என்று. நான் அதை ஏற்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியமானது. நாம் கருத்தை கருத்தால்தான் முறியடிக்க வேண்டும். அதற்குச் சில வருடங்கள் ஆகலாம். சில பத்து வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் முயன்றுதான் ஆகவேண்டும்.

இன்று OTT எனப்படும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் படங்களை வெளியிடும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. இங்கேயும் இது போன்ற படங்கள்தான் வரும் என்றாலும், இதற்கு எதிர்த்தரப்புப் படங்கள் வருவதில் பெரிய சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இதைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு.

ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியல் மற்றும் மதக் குறியீடுகளின் பின்னால் போய் ஒரு நல்ல திரைப்பட அனுபவமே இல்லாமல் போய்விட்டது. இது தமிழக மக்களுக்கு நிச்சயம் ஒரு எரிச்சலைத் தரும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு. அதற்கு நாம் தொடர்ந்து இத்திரைப்படங்களின் பின்னணி பற்றியும், இத்திரைப்படத்தின் உண்மையான நோக்கம் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அது முக்கியம். இப்படிப் பேசுவதால் ஒரு பலனும் இல்லை என்று சிலர் சொல்லலாம். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவது, தீவிரமாக இதைப் பற்றி எழுதுவது – இவைதான் நம் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு. அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

‘திரௌபதி’ என்ற ஒரு திரைப்படம் இன்று பலருக்கும் பல எரிச்சலைக் கொண்டு வந்திருக்கிறது. திரௌபதி திரைப்படம் சொல்லும் அரசியலில் எனக்குச் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் இத்தனை நாள் ஹிந்து மதத்தைக் குறை சொல்லிய படங்களுக்கு இருந்த அதே உரிமையை ஒரே ஒரு ‘திரௌபதி’ பயன்படுத்தவும் எத்தனை பதற்றம் பாருங்கள். நாம் இதைத்தான் செய்யவேண்டும். ‘கொளஞ்சி’ என்ற ஒரு திரைப்படத்தைவிட, அதைச் சாடி வெளியிடப்பட்ட குறும்படம் அதிகம் பரவலானது. நம் முன்னே உள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்பது இதுதான்.

திராவிட, கம்யூனிஸ அரசியல் தொடர்ந்து பல வருடங்களாக இந்த ஹிந்து மத எதிர்ப்பை ஒரே அணியில் நின்று ஆதரித்தும் பரப்பியும் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் தொடத் தகாதவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஹிந்து இயக்கங்கள் இத்திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போனது. இன்று அதன் பலனைப் பார்க்கிறோம். இந்த நிலை மாறத்தான் வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது ஹிந்துக்களைப் போற்றும் திரைப்படங்களையோ கிறித்துவ இஸ்லாமிய மதங்களைத் திட்டும் படங்களையோ அல்ல. நியாயமான படங்களை. நியாயமான விமர்சனங்களை. உள்ளே ஹிந்து வெறுப்பை வைத்துக்கொண்டு அதையே நடுநிலை என்றும் முற்போக்கு என்றும் வெறுப்பைப் பரப்பாத படங்களை. எல்லாக் கருத்துக்கும் இடம் இருக்கும் ஒரு சமமான களத்தை. இதுதானே நியாயமான ஆசையாக இருக்கமுடியும்? இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் யதார்த்தம் கசப்பானது.

இது போன்ற திரைப்படங்களில் வரும் குறியீடுகளைப் பற்றிப் பலரிடம் சொல்லியபோது அவர்கள் சொன்னார்கள், ‘இதுவரை எங்கள் கண்ணில் இது பட்டதே இல்லை’ என்று. ஒரு திரைப்படப் பாடலில் வரும் ஆபாசமான அங்க அசைவுகளைக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டது போல, இக்குறியீடுகளையும் தாண்டிச் செல்லப் பழக்கப் பட்டிருக்கிறோம். அதை எடுத்துச் சொல்லும்போதுதான் பலருக்கும் புரிகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது உங்களுக்கும் அப்படி ஒருவேளை தோன்றினால், இப்புத்தகத்தின் நோக்கம் நிறைவேறும்.

நான் கண்ணில் பட்ட படங்களை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். தேடி தேடிப் பதிவிடவில்லை. அப்படிச் செய்தால் நான் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களையும் புகார் சொல்ல வேண்டி இருக்கலாம் என்ற அச்சம்தான் காரணம். ஒருவேளை இன்னும் உங்களுக்கு ஆதாரங்கள் போதாமல் இருக்கலாம். இன்னும் அடுத்தடுத்துப் படங்கள் வரத்தான் போகின்றன. அவற்றைப் பற்றி நான் எழுதத்தான் போகிறேன். மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

இந்த நேரத்தில் தமிழில் சில நல்ல முயற்சிகளைத் தந்த சில இயக்குநர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். கே.பாலசந்தர் பல ஹிந்து எதிர்ப்புப் படங்களைத் தந்திருந்தாலும் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் தைரியமான இறுதிக் காட்சிக்காகப் பாராட்டப்படவேண்டியவர். அதேபோல் தமிழ் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் பல விதங்களில் ஹிந்துக்கள் ஆச்சரியப்படும் வகையில் படங்களை எடுத்தவர், கடும் நாடகத்தனமாக இருந்தபோதிலும். அதேபோல் ஏ.நாகராஜன். இவரும் பாராட்டுக்குரியவர். இந்தத் தொடர்ச்சியை நாம் இழந்திருக்கிறோம். அதை மீட்டெடுக்கவேண்டும்.

பாகம் 1க்கான முன்னுரை:

வலைப்பதிவுகள் தொடங்கி ஃபேஸ்புக் மற்றும் பல வலைத்தளங்களில் எழுதிய திரைப்படம் தொடர்பான கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. ஒரு திரைப்படம் எப்படி நடுநிலையானது இல்லையோ அதேபோல் என் விமர்சனமும் நடுநிலையானதல்ல. இதுவே இந்த விமர்சனங்களின் அடிநாதம். இப்போதெல்லாம் திரைப்படங்கள் மிக நேரிடையாகவே விஷத்தைத் தம்முள் கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது முட்டாள்தனம். இனியும் ‘படம்தானே’ என்று சொல்வதில் பொருளில்லை. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது. சோஷியல் மீடியா உலகத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்த அரை மணி நேரத்தில் ஆயிரம் விமர்சனங்கள் சிறியதும் பெரியதுமாக வந்துவிடும் இக்காலத்தில், இக்கட்டுரைகள் விரிவான விமர்சன வகைக்குள் போகாமல், இப்படங்களில் இருக்கும் அரசியலையும் குறியீடுகளையும் அதன் நடுநிலையின்மையையும் மட்டுமே பார்க்கின்றன. பெரும்பாலான விமர்சனங்கள் திரைப்படம் வந்த சில மணி நேரங்களுக்குள் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதி ஒன்றும் வெளிவரும். அதில் வரும் கட்டுரைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு அப்பாவி திரைப்பட ரசிகனை இந்தத் திரைப்பட உலகம் எப்படி ஒரு அரசியல் பார்வையாளனாக மாற்றி இருக்கிறது என்று புரியலாம்.

இப்புத்தகத்தில் வரும் கட்டுரைகள் சிலவற்றில் அரசியல் கலக்காத படங்களை ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே விமர்சித்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் எதிர்பார்ப்பது நியாயமான, எல்லோருக்கும் பொதுவான விமர்சனம் உள்ள ஒரு திரைப்படத்தை மட்டுமே. அன்றி, ஹிந்து மதத்தையோ இந்தியாவையோ விமர்சிக்காத திரைப்படங்களை அல்ல. ஹிந்து மதம் என்றதும் வசதியாக விமர்சிப்பதும் மற்ற மதங்கள் என்றதும் அமைதி காப்பதும் அல்லது புகழ்வதுமான இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

பின்குறிப்பு: கிண்டிலில் கிடைக்கும்!

Share

பதிப்பகத் தொழிலாளிகள் இருவர்

சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிந்து இரவு பைக்கை எடுத்துக்கொண்டு வரும்போது ஒருவர் ட்ராப் கேட்டுக் கை காட்டினார். வயதானவராகத் தெரிந்தார். ஏற்றிக்கொண்டேன். நான் கிண்டி வழியாகத்தான் போவேன் என்பதால் கிண்டி ரயில்வே நிலையத்தில் இறக்கிவிடுவதாகச் சொன்னேன். சந்தோஷப்பட்டார். அன்று சீக்கிரமே வீட்டுக்குப் போய்விடலாம் என்றார். அவரது வீடு இருப்பது மறைமலைநகரில்.

கிண்டி போகும் வரை எதாவது பேசலாமே என்று கேட்க ஆரம்பித்தேன். அவரது கதையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். அவருக்கு இப்போது வயது 65 இருக்கலாம். பதிப்பகத்துறையில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு ஆன்மிகப் பதிப்பகத்தில் வேலை செய்கிறார். முதல் நாள் அச்சுக் கோர்க்கும் வேலையில் சேரும்போது அவருக்குச் சம்பளம் 30 ரூபாயோ என்னவோ சொன்னார். அவரது 58வது வயதில் அந்தப் பதிப்பகம் அவரை ஓய்வு பெறச் சொல்லிவிட்டது. அப்போது அவர் வாங்கிய சம்பளம் பனிரெண்டாயிரம் ரூபாய் வரை இருக்கலாம். அவர் பதிப்பகத்தின் கடை விற்பனையில் உதவியாளராக இருந்து ஓய்வுபெறுகிறார். பின்னர் அவரை மீண்டும் பணிக்கு எடுத்துக்கொண்டது அதே பதிப்பகம். சம்பளம் மாதத்துக்குப் பத்தாயிரம். பிடித்தம் அது இது எதுவும் கிடையாது. காண்ட்ராக்ட்டில் வேலை. அவர் வேலை செய்த 30+ வருடங்களுக்குமாகச் சேர்த்து அவர் ஓய்வு பெறும்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அந்தப் பதிப்பகம் கொடுத்திருக்கிறது. அதை வைத்து அவரது மகனின் படிப்பைச் சமாளித்துவிட்டார் இவர். பையன் டிப்ளமோ முடுக்க, பதிப்பகத்தின் முதலாளியே பையனுக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார். பதிப்பகத்தைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார் இவர். அந்தப் பதிப்பகம் பழங்கால நடைமுறையில் உள்ள சிறிய பதிப்பகம். முதலாளி – தொழிலாளி வித்தியாசம் எல்லாம் அப்படியே இன்னும் இருக்கும் ஒரு பதிப்பகம். இவருக்கு அதிலெல்லாம் பெரிய புகார்கள் இல்லை. இத்தனை செய்ததே அவருக்குப் பெரிய உதவியாக்த் தெரிகிறது. அதிலும் குறிப்பாக மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்டதைச் சொல்லிக்கொண்டே வந்தார். போக வர பஸ்ஸுக்குப் பணமும் டீக்கு காசும் கொடுத்துவிடுவார்கள் என்றார். அந்தப் பதிப்பகத்தை மிகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

கிண்டியில் இறங்கிக்கொண்டவரின் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அத்தனை போக்குவரத்து நெரிசல். நன்றி சொல்லிவிட்டுப் போனார்.

இது நடந்து இன்னும் சிறிது நாள் கழித்து இன்னொருவரைத் தற்செயலாகப் பார்த்தேன். அவர் ஒரு கம்யூனிஸ சிந்தனையுள்ள பதிப்பகத்தில் வேலை பார்த்தவர். கிட்டத்தட்ட 25 வருடங்களாக. மிகவும் வருத்தத்துடன் சொன்னார், ‘ஒரே நாள்ல தூக்கிட்டாங்க சார்’ என்று. என்ன காரணம் என்பதெல்லாம் இங்கே வேண்டாம். என்னவோ கருத்து வேறுபாடு. இவரும் மிகவும் அடிமட்டத் தொழிலாளியே. ’25 வருஷம் வேலை பாத்ததுக்கு எதாவது தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்கேன்’ என்றார். அவரால் ஒரே நாளில் தான் தூக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாவமாக இருந்தது. அவருக்கு செட்டில்மெண்ட் ஆனதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நிச்சயம் ஆகி இருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த இரண்டும் ஒரு உதாரணம் மட்டுமே. இதனால் கம்யூனிஸப் பதிப்பகங்கள் மிக மோசம் என்றோ, முதலாளி மனப்பான்மை உள்ள பதிப்பகங்கள் மிகவும் யோக்கியம் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் இங்கே சொல்லப்படுவது போல முதலாளி பதிப்பகமெல்லாம் மோசம், கம்யூனிஸப் பதிப்பகம் என்றால் யோக்கியம் என்பதுவும் உண்மை அல்ல என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். ஒரு வியாபாரம் என்பதற்குள் வந்துவிட்டால் கொள்கை எல்லாம் எப்படி ஓடி விடும் என்பதற்காகவே சொன்னேன். பதிப்பகத்துறை என்றல்ல, எல்லா வியாபாரத்திலும் இதுதான் நிலைமை.

வண்டி வண்டியாக கம்யூனிஸப் பாடம் எடுப்பார். அவர் தனது வியாபாரத்திலோ அல்லது வேலையிலோ தொழிலாளிகளிடம் எப்படி நடந்துகொள்வார் என்பதை யாராலும் சொல்ல முடியாது. உண்மையிலேயே கோட்பாட்டின்படியே நடந்துகொள்பவர்களும் உண்டு. இது இது இப்படித்தான் என்று வரையறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம்.

Share

வீரப்பன் வேட்டை – போலிஸ் ஆவணம்

டிஜிபி விஜயகுமாரின் ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ மிக முக்கியமான புத்தகம். ஒரு பக்க நியாயத்தைத்தான் முன் வைக்கிறது என்றாலும், தமிழகக் காவல்துறை எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிந்துகொள்ள முக்கியமான ஆவணம். ஒரு வெற்றிக்குப் பின்னே மறைந்திருக்கும் ஆயிரம் தோல்விகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வதே இல்லை. ஒருவேளை வீரப்பன் வேட்டை வெற்றியில் முடியாமல் போயிருந்தால், இந்த ஆயிரம் தோல்விகளையும் நாம் தெரிந்துகொள்ளாமலேயே போயிருப்போம். தமிழக, கர்நாடக போலிஸும் வனத்துறையும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, உள் மற்றும் வெளி துரோகங்களுக்கிடையே ஒரு கொள்ளைக்காரனை, கொலைகாரனை வேட்டையாடிய ஆவணம் இது.

(Image copyright: The Hindu)

சாதாரண கொள்ளைக்காரனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய வீரப்பன் பெரிய கொலைகாரனாக, கடத்தல்காரனாக வளர்ந்துவிடுகிறான். அவனுக்குத் தொடர்பு பல மட்டங்களில் விரிகிறது. ஒரு கட்டத்தில் உலக அளவில் அவன் பிரபலமாகிறான். அவனை உயிருடனோ பிணமாகவோ பிடித்துத் தருவதற்கான சன்மானத் தொகை கூடிக்கொண்டே போகிறது. எல்டிடிஈ அமைப்புடன் தொடர்பு, ஆந்திர நக்ஸலைட் அமைப்புடன் தொடர்பு என்று செய்திகள் விரிவாகிக்கொண்டே போகின்றன. வீரப்பன் தொடர்ந்து ஆடியோ கேசட்டுகளை அனுப்புகிறான். ஜெயலலிதாவைத் திட்டியும் போலிஸைத் திட்டியும் அவன் அனுப்பும் ஆடியோ கேசட்டுகள் தங்கு தடையின்றி ஊடகங்களுக்குக் கிடைக்கின்றன. நக்கீரன் கோபால், பழ நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்கள் நினைத்தபோது வீரப்பனைப் பார்க்க முடிகிறது. வீரப்பனுக்குச் செய்தி அனுப்ப முடிகிறது. ஆனால் போலிஸால் அவனைப் பார்க்கக் கூட முடியவில்லை.

ஒரு அரசியல்வாதி வீரப்பனிடம் கடன் வாங்கி வீரப்பனையே ஏமாற்றி இருக்கிறார். திரைத்துறையினர் வீரப்பனுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை விஜய்குமாரின் புத்தகம் எழுப்புகிறது. இதற்கிடையே வீரப்பன் தமிழ்த் தேசியவாதிகளின் ஐகான் ஆகிறான். ஆனால் போலிஸால் மட்டும் அவனை நெருங்க முடியவில்லை.

இருபது வருட வேட்டையில் ஒரு தடவை மட்டுமே வீரப்பன் போலிஸால் கைது செய்யப்பட்டிருக்கிறான். தப்பியும் விடுகிறான். சில போலிஸார் ஒன்றிரண்டு தடவை அவனை வேட்டையின் போது பார்த்திருக்கிறார்கள். போலிஸின் மீது மக்களுக்கு நம்பிக்கை போகிறது. திரைப்படங்கள், ஊடகங்கள் போன்றவற்றில் போலிஸ் கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் வீரப்பன் போலிஸால் சுட்டுக்கொலை என்ற ஃப்ளாஷ் நியூஸ் வருகிறது. அப்போதும்கூட போலிஸின் மேல் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள் சுமத்தப்படுகின்றன.

விஜய்குமார் இருபது வருட வேட்டையின் முக்கியமான பக்கங்களைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பரபரப்பான நாவலைப் படிப்பது போல் புத்தகம் ஓடுகிறது. அதிலும் கடைசி நூறு பக்கங்களின் விறுவிறுப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஸ்ரீனிவாஸ் என்னும் கர்நாடக போலிஸ் அதிகாரியின் தலை வீரப்பனால் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்தத் தலையை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் போலிஸால் கண்டுபிடிக்கவே முடிகிறது. வெட்டிய தலையை வைத்து வீரப்பன் ஃபுட்பால் விளையாடியதாகப் பின்னர் தெரிந்துகொள்கிறார்கள். ஒரு முக்கியமான தேடுதல் வேட்டையில் பல சந்தனக் கட்டைகளை ஸ்ரீனிவாஸ் கைப்பற்றுகிறார். ஏற்கெனவே ஒருமுறை வீரப்பன் கைது செய்யப்பட்டது இவரால்தான். ஆனால் வீரப்பன் தப்பித்துவிட, மீண்டும் அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்கிற வெறியில் இருந்தார் ஸ்ரீனிவாஸ்.

வீரப்பனின் தங்கை மாரி ஸ்ரீனிவாஸ் கிராமத்தினருக்காக நடத்தி வந்த க்ளினிக்கில் பணி செய்கிறார். வீரப்பன் மனைவி வீரப்பனை ரகசியமாக சந்திக்க மாரி உதவுவதாக நினைக்கும் போலிஸ், வீரப்பனின் தங்கையை எச்சரிக்கிறது. வீரப்பனின் தங்கை விஷம் குடித்துச் சாகிறாள். தன் தங்கை மரணத்துக்கு ஸ்ரீனிவாஸ்தான் காரணம் என்று நினைக்கும் வீரப்பன், தான் சரணடையப் போவதாக நாடகம் ஆடுகிறான். ஸ்ரீனிவாஸும் அதை உண்மை என்று நம்பி வீரப்பனைப் பிடிக்கப் போகிறார். ஆனால் அவரது தலை கொய்யப்படுகிறது. பின்னர் ஸ்ரீனிவாஸுக்கு கோவில் கட்டுகிறார்கள் அந்த ஊர் மக்கள். ஏனென்றால் தனது பல சேவை மூலம் ஊர் மக்களுடன் கலந்திருந்தார் ஸ்ரீனிவாஸ். ஸ்ரீனிவாஸுக்கு கீர்த்தி சக்ரா விருது பின்னர் வழங்கப்பட்டது.

ஒரு சமயம் 22 போலிஸார் வெடி வைத்துத் தகர்க்கப்படுகிறார்கள். அதைக் கண் முன்னே பார்த்த போலிஸ் அதிகாரி இறுதிவரை அதிரடிப்படையில் இருந்து விலகாமல், வீரப்பனின் மரணத்தைப் பார்க்கக் காத்திருக்கிறார். சில போலிஸார் வீரப்பனைக் கொல்லாமல் திருமணம் செய்துகொள்வதில்லை என்று காத்திருக்கிறார்கள்.

ஜடையன் என்னும் சோலிகா பழங்குடியினரின் தலைவர், தங்கள் கிராமத்தில் தான் கண்ட மனித மலம் வெளியூர்க்காரர்களின் மலத்தைப் போல் உள்ளது என்று சொல்லி, அங்கே கூடாரம் போட்டுத் தங்கி இருக்கும் வீரப்பனின் ஆள்களைப் பற்றித் துப்புக் கொடுக்கிறார். ஜடையனும் இன்னும் ஐந்து பேரும் போலிஸின் இன்ஃபார்மர்களாக இருப்பதை அறிந்துகொள்ளும் வீரப்பன் தனது ஆட்களுடன் கிராமத்துக்கு வருகிறான். அன்று ஜடையன் அங்கு இல்லை. மற்ற ஐந்து பழங்குடியினரையும் சுட்டுக் கொன்று கழுத்தை அறுத்து எரிக்கிறான். நடுங்கிப் போகும் பழங்குடி இன மக்கள் தங்களைக் கைவிட்ட ஜடையசாமி (சிவலிங்கம்) கோவிலைப் பூட்டி வைக்கின்றனர். வீரப்பன் கொல்லப்பட்ட பின்பே அக்கோவில் திறக்கும் என்று காத்திருக்கிறார்கள். ஐந்து பேர் கொல்லப்பட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக அக்கோவில் பூட்டியே கிடக்கிறது. அந்தக் கோவிலைப் பார்க்கும் விஜய்குமார், இந்தக் கோவிலைத் திறக்கவேண்டும் என்று சபதம் செய்கிறார்.

போலிஸுக்கு இன்ஃபாமர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். வீரப்பனால் யார் இன்ஃபாமர் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சந்தேகம் வரும்போது தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் தள்ளி வைக்கிறான். இதனால் போலிஸ் செயல்படும் வேகம் அப்படியே நின்றுவிடுகிறது. வீரப்பன் யாரையாவது பார்க்க வருவதாகச் சொன்னால் அதை சொன்னபடி செய்யாமல் இழுத்தடித்தே செய்கிறான். இதனால் எப்போது எங்கே யாரைப் பார்க்க வீரப்பன் வருவான் என்பதை போலிஸால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

தொழில்நுட்பம் என்றால் வீரப்பனுக்குப் பிடிப்பதில்லை. வேன், கார் கூடப் பிடிப்பதில்லை. தன் உடல் வலுவையும் துப்பாக்கி சுடும் திறனையும் மட்டுமே நம்பினான் வீரப்பன். போலிஸின் தொழில்நுட்ப அறிவு வீரப்பனை நெருங்க உதவுகிறது. வீரப்பனின் கேங் குறைகிறது. ஒற்றை இலக்கத்துக்குள் வருகிறது. தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான் வீரப்பன். ஜிபிஎஸ் துணையால் ஐந்து கிமீ தூரத்துக்குள்ளாக நெருங்குகிறது போலிஸ்.

வீரப்பனை போலிஸால் வெல்ல முடியாததற்குக் காரணம், வீரப்பனைக் காட்டில் வேட்டையாட நினைப்பதுதான் என்று புரிந்துகொள்கிறது போலிஸ். வீரப்பனை வெளியே கொண்டு வந்தால், தங்களுக்கு வசதியான இடத்தில் வீரப்பனை எளிதாகக் கொன்று விடலாம் என்று ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். வீரப்பனை வெளியே கொண்டு வர அவனது மனைவி முத்துலட்சுமியை அவளுக்கே தெரியாமல் பயன்படுத்த முடிவெடுக்கிறார்கள்.

ஏற்கெனவே போலிஸின் இன்ஃபாமர் இதயத்துல்லா வீரப்பன் கேங்கில் சேர்ந்து வீரப்பனின் நம்பிக்கைக்கு உரியவராக ஆகிறார். 21 நாள்கள் அவனுடனே தங்கி இருந்து போலிஸுக்குப் பல செய்திகளை அனுப்புகிறார். ஆனால், சிறையில் இருக்கும் தமானி என்னும் மத பயங்கரவாதியிடம் இருந்து துப்பு ஒன்று, வீரப்பன் கேங்கில் ஒரு இன்ஃபார்மர் இருக்கிறார் என்பதைச் சொல்லிவிடுகிறது. யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறும் வீரப்பன், அனைத்து புது ஆள்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இதனால் இதயத்துல்லாவால் உதவ முடியாமல் போகிறது. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார் இதயத்துல்லா. வீரப்பனுக்குக் கண்ணில் பிரச்சினை இருக்கிறது. அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அவனுக்கு மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தச் செய்தி போலிஸுக்குப் பின்னால் பெரிய அளவில் உதவுகிறது.

இதயத்துல்லாவை இன்ஃபாமராக அனுப்புவதற்கு முன்பு வேறொரு கொலைகாரனைத்தான் வீரப்பன் கேங்குக்குள் அனுப்ப முடிவெடுத்தது போலிஸ். ஆனால் கடைசி நேரத்தில் இதயத்துல்லா போகிறார். முதலில் தேர்வு செய்யப்பட்ட கொலைகாரனைப் போல கொடூரமான ஆள் இல்லை இதயத்துல்லா. அதற்கு முன்பு ஒரு கொலை கூட இதயத்துல்லா செய்ததில்லை. இதயத்துல்லாவுக்குப் பெரிய குற்றப் பட்டியல் எதுவும் கிடையாது. இதுவே பெரிய பின்னடைவாகப் போகிறது. ஒரு கட்டத்தில் வீரப்பனை எளிதாகக் கொல்ல ஒரு சந்தர்ப்படம் கிடைக்கிறது. ஒரு கல்லைத் தூக்கி வீரப்பன் தலையில் போடத் தயாராகிறார் இதயத்துல்லா. ஆனால், இப்படிக் கொல்வது அவசியமா என்கிற ஒரு மனப்போராட்டம் வர, கல்லைக் கீழே போட்டுவிடுகிறார். இதுவே ஒரு பயங்கரமான கொலைகாரன் வீரப்பன் கேங்குக்குள் ஊடுருவி இருந்தால் ஒரு நொடியில் கொன்றிருப்பான் என்று அங்கலாய்க்கிறார் விஜய்குமார்.

ராஜ்குமார் கடத்தலின்போது அவருடன் கடத்தப்பட்ட நாகப்பாவுக்கும் வீரப்பனைக் கொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கையில் அரிவாளுடன் வீரப்பனைக் கொல்ல முனையும்போது, நக்கீரன் கோபால் நாகப்பாவைக் கடிந்துகொள்கிறார். நாகப்பா வீரப்பனைக் கொல்லாமல் தப்பித்து ஓடி வந்துவிடுகிறார்.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை மையமாக வைத்து ஒரு ஆபரேஷனைச் செய்கிறது போலிஸ். ஆபரேஷன் போஸ்டன். யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பெரிய ஆபரேஷன். கர்நாடக போலிஸ் முத்துலட்சுமியை சேலத்தில் கண்காணிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது தமிழக போலிஸ். அந்த நேரத்தில் அங்கே போகும் அசோக் குமார் என்னும் தமிழக போலிஸ்காரர் முத்துலட்சுமிக்கு உதவுவதாகச் சொல்லி அவரை அழைத்து வருகிறார். திருப்பூருக்குச் சென்று வீடு தேடுகிறார்கள். ரம்யா என்கிற போலிஸ் இன்ஃபாமர் ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுக்கிறார்கள். ரம்யா முத்துலட்சுமியுடன் மிகவும் நட்பாகிறார். ஊட்டியில் இருக்கும் தனக்கு சொந்தமான ஒரு கெஸ்ட் ஹவுஸுக்கு முத்துலட்சுமியை ரம்யா அழைத்துப் போகிறார். அந்த கெஸ்ட் ஹவுஸ் போலிஸால் ஏற்கெனவே பார்த்து வைப்பட்ட இடம்தான்! அங்கே போகும் முத்துலட்சுமியிடம் பேசும் ரம்யா, வீரப்பனை இங்கே வரச் சொல்லும்படியும் முத்துலட்சுமியையும் குழந்தைகளையும் பார்க்கட்டும் என்றும், வீரப்பனின் கண்ணுக்கு மருத்துவம் செய்ய தான் ஒரு மருத்துவரைக் கொண்டு வருவதாகவும் ஆசையைத் தூவுகிறார். முத்துலட்சுமியும் சம்மதிக்கிறார். வீரப்பனும் சம்மதிக்கிறான். வீரப்பன் இவர்களைக் காண வரும் நாளும் வருகிறது.

வீரப்பனை இந்த தடவை முடித்துவிடலாம் என்று காத்திருக்கிறது போலிஸ். இதற்கிடையில் முத்துலட்சுமிக்குத் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. ரம்யாவும் முத்துலட்சுமியின் பிக்னிக் போக, போன இடத்தில் முத்துலட்சுமிக்கு திடீரென்று ஐயம் வர, வரும்போது இருவருக்குள்ளும் ஒருவித இடைவெளி உருவாகிவிடுகிறது. ஆனால் அன்று வீரப்பன் வரவில்லை. பின்னாளில் ஒரு ஜோதிடர் நேரம் சரியில்லை என்று சொன்னதால் வீரப்பன் வரவில்லை என்று தெரிகிறது. அன்று வீரப்பன் தப்பிவிடுகிறான். இந்த எஸ்டேட் திட்டம் தவிடுபொடியாகிவிடுகிறது.

இப்படி பல ஆபரேஷன்கள் உள்ளன.

போலிஸ் இன்ஃபாமர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர். போர்வை, ரெட் இப்படிப் பல பெயர்கள். ஒவ்வொரு ஆபரேஷனும் தோல்வியில் முடிந்தாலும், பல விவரங்கள் போலிஸுக்குக் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. மிஸ்டர் எக்ஸ் என்னும் பணக்காரர் ஒருவர் வீரப்பனுக்கு இன்ஃபாமராக இருக்கிறார். தங்கள் இன்ஃபாமர் மூலம் போலிஸ் அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கிறது. வேறு வழியின்றி அவர் போலிஸ் இன்ஃபாமராக மாற ஒத்துக்கொள்கிறார். அவரால்தான் வீரப்பனின் கதை முடிவுக்கு வருகிறது.

இன்ஃபாமர்களும் வீரப்பன் கேங் ஆள்களும் சந்தித்துக்கொள்ளும்போது பரிமாறிக்கொள்ளும் சங்கேத வார்த்தைகள் எல்லாம் அலாதியானவை. திரைப்படங்களில் வருபவை எல்லாமே உண்மைதான். அமாவாசைல பௌர்ணமி வருமா என்று நாம் சங்கேத வார்த்தைகளைக் கிண்டல் செய்தாலும் (இந்த அளவுக்கு இல்லையென்றாலும்) இவற்றைப் போன்ற சங்கேத வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன. டீக்கடையில் சர்க்கரை டப்பாவை நகற்றி வைப்பது, ‘ஸ்வீட் பாக்ஸ்ல கரும்பு ஏத்தியாச்சு’, மூன்று முறை கல்லால் தட்டுவது என்று பல சங்கேத வார்த்தைகளும் செய்கைகளும் புத்தகம் முழுக்க இருக்கின்றன.

வீரப்பனை வெளியே கொண்டு வர இரு தரப்புக்குள்ளும் ஒரு லாட்டரிச் சீட்டு சங்கேதக் குறியீடாக இருக்கிறது. ஒரு லாட்டரிச் சீட்டை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை வீரப்பன் தரப்புக்கும் இன்னொரு பகுதியை போலிஸ் தரப்புக்கும் கொடுக்கிறார்கள் இரண்டு தரப்பின் இன்ஃபாமர்களும்!

இந்த முறை இரை தப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது போலிஸ். லாட்டரிச் சீட்டின் நம்பர் 007710. தன் நம்பகமான காரின் எண்ணும் 0771 என்று நினைத்துக்கொள்கிறார் அந்த ஆபரேஷனில் ஈடுபட்டிருக்கும் கண்ணன் என்ற அதிகாரி. விஜய்குமார் தன் பர்சில் எப்போதும் தன்னுடன் இருக்கும் ஐயப்பன் டாலரைத் தொட்டுக்கொள்கிறார். வேனில் ஒட்டப்பட்டிருக்கும் குருவாயூர் கிருஷ்ணனின் படத்தைப் பார்க்கிறார். வீரப்பனின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

வீரப்பனைக் கொண்டு வர ஒரு ஆம்புலன்ஸ் பலவித வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. வேனில் இருக்கும் வெங்கடாஜலபதி படத்தில் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது எதுவுமே வெளிப்பார்வைக்குத் தெரியாது. வீரப்பன் சிக்கிக்கொள்கிறான். எந்த வகையிலும் தப்ப முடியாதபடி அவனை போலிஸ் சுற்றி வளைக்கிறது. வீரப்பன் என்கவுண்ட்டர் செய்யப்படுகிறான். செய்தியைக் கேள்விப்படும் ஜெயலலலிதா போனில் விஜய்குமாரிடம் சொல்கிறார், “தான் முதல்வர் ஆன பின்பு கேட்கும் மிகவும் சந்தோஷமான விஷயம் இதுதான்.” விஜய்குமார் பண்ணாரி அம்மன் கோவிலுக்குப் போய் மொட்டை போட்டுக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார்.

ஆம்புலன்ஸில் வீரப்பன் ஏறிக்கொள்ளும்போது போலிஸின் இன்ஃபார் ஒருவரும் ஏறிக்கொள்ள விரும்புகிறார். ஏனென்றால் அவருக்குத் தெரியாது அன்று வீரப்பனை என்கவுண்ட்டர் செய்யப் போகிறார்கள் என்று. அவருக்கு மட்டுமல்ல. அந்த ஆபரேஷனில் இருக்கும் பலருக்கும் தெரியாது. ஆம்புலன்ஸை ஓட்டிப் போகும் சரவணன் என்கிற அதிகாரிக்கும் கூட, அந்த ஆம்புலன்ஸில் அவர் ஏறப் போகும் அந்த நிமிடத்தில்தான் தெரியும், தான் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கப் போவது வீரப்பனை என்று. வீரப்பன் இருந்த ஆம்புலன்ஸை சரமாரியாக சுட்டு வீழ்த்திய எந்த அதிரடிப்படை வீரருக்கும் தெரியாது தாங்கள் சுட்டுக்கொண்டிருப்பது வீரப்பனை என. ஒரு கொள்ளைக்காரனின் அராஜகங்கள் முடிவுக்கு வருகின்றன.

(Image copyright: Frontline)

விஜய்குமார் தன்னை மட்டும் முன்னிறுத்தாமல், வால்டர் தேவராம் தொடங்கி தன்னுடன் பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளின் பங்களிப்புகளையும் நியாயமாகப் பதிவு செய்திருக்கிறார். டிரைவர்கள் தொடங்கி இன்ஃபாமர் வரை அனைவரையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். இத்தனை நல்ல மனதுடையவர் போலிஸாகவும் இருக்கமுடியுமா என்னும் சந்தேகம் வரும் அளவுக்கு அவர் இதைச் செய்கிறார்!

வீரப்பனுக்கு சாதிக்காரனே எதிரியாக இருப்பது, தன் சாதிக்காரன் தனக்கு உதவுவான் என்று வீரப்பன் நினைப்பது, வீரப்பனைப் பற்றிய குறிப்புகளைப் படிக்க நினைக்கும் விஜய்குமார், அவற்றைப் பார்க்கும்போது அவை படிக்க முடியாத அளவுக்கு கோழிக்கிறுக்கலாக இருப்பதைப் பார்த்து நொந்து போவது, வீரப்பன் விஜய்குமாரை எம்ஜியாரின் மருமகன் என்று நம்புவது, சந்தேகத்தில் தன் அதிரடிப்படை ஆளையே ஒரு போலிஸ் சுட்டுக்கொன்று மனம் பிறழ்ந்து போவது, ராஜ்குமாரைக் கடத்துவதற்கு முன்பாக ரஜினி அல்லது ஸ்டாலினைக் கடத்த யோசிப்பது எனப் பல வகையான குறிப்புகள் இப்புத்தகத்தில் உள்ளன. தவறவிடக்கூடாத புத்தகம். கிண்டிலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்கக் கிடைக்கிறது.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’

சாவர்க்கரைப் போல தமிழ்நாட்டில் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்ட, வேண்டுமென்றே மட்டம்தட்டிச் சித்திரிக்கப்பட்ட வேறொரு தலைவர் இருக்கமுடியாது. எந்த அளவுக்கென்றால், கருணாநிதியைத் தவிர வேறு எதையுமே அறிந்துகொள்ளாத திமுகவினர் கூட சர்வசாதாரணமாக சாவர்க்கரை பிரிட்டிஷாரின் கால் நக்கிப் பிழைத்தவர் என்றும், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டவர் என்றும் சொல்லும் அளவுக்கு. உண்மையில் எதையும் தீவிரமாக அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் அறிந்துகொள்ளும் நோக்கற்றவர்களின் செயலே, இந்த மன்னிப்பு என்கிற வார்த்தையை மட்டும் கொண்டு சாவர்க்கரை அணுகுவது. சாவர்க்கரின் வாழ்க்கையை அணுகிப் பார்த்தால் தெரியும், இந்தியாவின் மிகச் சிறந்த தேச பக்தர்களில், தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்களில் சாவர்க்கர் எத்தனை முக்கியமானவர் என்று.

அவரது வாழ்க்கை முழுக்கவே போராட்டம் நிறைந்தது. எந்த நிலையிலும் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், ‘இதெல்லாம் எதற்காக’ என்ற எதிர்மறைச் சிந்தனைக்குத் தன்னை இழந்துவிடாமல், பாரத அன்னைக்கு சுதந்திர மலரை அணிவிப்பது ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரால் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஒரே தலைவர். அதாவது 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தன் மனைவியை, குடும்பத்தைப் பிரிந்து அந்தமான் சிறையில் வாடியவர். இவர் மட்டுமல்ல, இவரது சகோதரர்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றார்கள்.

மெர்சிலி தீவில் அவர் தப்பிக்க முயன்றதெல்லாம் நம்ப முடியாத அளவுக்கான சாகசம். அந்தமான் சிறைத் தண்டனை குறித்து அவர் எழுதிய புத்தகம் ‘Transportation for life’ தற்போது தமிழில் வெளியாகி இருக்கிறது. (மொழிபெயர்ப்பு: எஸ்.ஜி. சூர்யா, கிழக்கு பதிப்பக வெளியீடு, விலை 650 ரூ). இந்தப் புத்தகம் 1927ல் மராட்டியில் முதலில் வெளியானது. இது தொடராக வெளிவரவே பல இன்னல்களைச் சந்திக்கவேண்டி இருந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகே ஆங்கிலத்தில் வெளியானது. 90 வருடங்கள் கழித்து முழுமையாகத் தமிழில் வெளியாகிறது. இவரது நண்பரான வ.வெ.சு. ஐயர் இதன் தமிழ் மொழிபெயர்ப்பை அந்தக் காலகட்டங்களில் வெளியிட்டதாகத் தெரிகிறது. முழுமையாக வெளியிட்டாரா, சில பகுதிகளை மட்டும் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.

சாவர்க்கரின் வாழ்க்கை அல்ல, அவரது புத்தகங்கள் கூட இப்படித்தான் வெளியாகின. முதல் இந்திய சுதந்திரப் போர் என்று முதன்முதலில் சிப்பாய்க் கலகத்தை விளித்தவர் இவரே. அந்தப் புத்தகம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டே வெளியானது. அவரது கையெழுத்துப் பிரதி இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு அத்தனை முயன்றது. நாடு நாடாகச் சென்ற அந்தப் பிரதி, மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளி வந்ததை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லலாம். (தமிழில் எரிமலை என்கிற தலைப்பில் அல்லயன்ஸ் வெளியீடாகக் கிடைக்கிறது.)

இப்படி வாழ்க்கை முழுக்க எதிர்ப்புகளிடையேயும் போராட்டங்களிடையேயும் வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பை அவர் சிறைக்குச் சென்ற உடனே கேட்கவில்லை. 12 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை. எப்படிப்பட்ட சிறைத் தண்டனை? ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம் அதனை விவரிக்கிறது. ஆறு மாதங்கள் கைகளிலும் கால்களிலும் சங்கிலி மாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார். செக்கிழுக்க வைக்கப்படுகிறார். பாரிஸ்டர் படிப்பு படித்தவர் கயிறு திரிக்க வைக்கப்படுகிறார். தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். தூக்குமேடைக்கு எதிரே இவருக்கு அறை தரப்படுகிறது. தினம் தினம் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் துன்பம் இவருக்குத் தரும் பயம் மற்றும் வேதனையின் மூலம் இவரது மனச்சிதைவைத் துரிதப்படுத்த பிரிட்டிஷ் அரசு முயல்கிறது. தினம் தினம் யாரோ ஒரு கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார் அல்லது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். சில கைதிகளுக்குத் தனிமைச் சிறையின் தாள முடியாத துன்பம் மனநலச் சிதைவைக் கொண்டு வருகிறது. இத்தனைக்கும் மத்தியில் தன் வாழ்க்கை குறித்த சிந்தனைகளுடன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் இந்தியாவில் இருக்கும் தன் குடும்பத்தையும் எண்ணி சாவர்க்கர் தவிக்கிறார். ஏன் இந்த வாழ்க்கை என்கிற எண்ணம் தலையெடுக்கிறது. ஆனால் மிகப் பெரிய போராட்டத்துடன் அதிலிருந்து மீள்கிறார். தற்கொலை என்பது தீர்வல்ல என்று அனைவரிடம் விவரிக்கிறார்.

சிறையில் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணமும் எப்பாடுபட்டாவது சிறையில் இருந்து தப்பிப்பது என்பதை நோக்கியே இருக்கவேண்டும் என்று மிகத் தீர்மானமாகச் சொல்கிறார் சாவர்க்கர். ஏன்? வெளியில் சென்று, தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் தேச சேவை செய்யலாம் என்பதே அவரது எண்ணம்.

இந்தப் புத்தகத்தில் என்னை அசர வைத்த ஒரு விஷயம். சாவர்க்கரின் எந்த ஒரு எண்ணமும் எல்லாக் காலத்திலும் தேச சேவை என்ற ஒன்றை நோக்கியே உள்ளது. பின்பு சாவர்க்கர் கேட்டதாகச் சொல்லப்படும் மன்னிப்பும் கூட இதன் பின்னணியிலேயே உள்ளது. விடுதலை கிடைத்து வீட்டுக்கு வந்து சுக வாழ்க்கை வாழவில்லை சாவர்க்கர். நிபந்தனையின் பேரில் வெளிவரும் சாவர்க்கர், இன்னும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்பில் (ரத்னகிரிக்குள் மட்டும் நடமாடும் அனுமதியோடு) வைக்கப்படுகிறார். பின்னரும் சுதந்திரப் போராட்டத்துக்குத் தேவையான, தன்னால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார். எந்த நேரத்திலும் பிரிட்டிஷ் அரசு தன்னைக் கைது செய்து மீண்டும் அந்தமான் இருட்டுச் சிறைக்குள் தள்ளும் என்று தெரிந்திருந்தும் இதனைச் செய்கிறார்.

அந்தமான் சிறையில் இவருடன் அடைக்கப்பட்டிருக்கும் பல தேச பக்தர்கள் பற்றிய குறிப்புகளை எல்லாம் நினைவில் வைத்திருந்து இப்புத்தகத்தில் பதிவு செய்கிறார். சாவர்க்கரின் நினைவாற்றலும் நன்றி உணர்ச்சியும் அபாரமானவை. இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் அதனை உணரலாம். அதேபோல் சாவர்க்கரின் வாதத்திறமை உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் முழுக்க சாவர்க்கர் தனது கருத்துகளை அதன் பின்னணியோடும் தர்க்க ஆதாரத்தோடும் மிகத் தெளிவாக முன்வைக்கிறார். அதுமட்டுமல்ல, தன் கருத்துக்கான எதிர்க்கருத்தைச் சொல்லி அது ஏன் சரியாக இருக்கமுடியாது என்பதை விவரிக்கிறார். மகாத்மா காந்தி ஜி கொலை வழக்கில் அவர் தந்த எழுத்துபூர்வமான சாட்சியத்திலும் இதே போன்ற விவரணைகளைக் காணலாம். எந்தக் காலத்திலும் அவர் தன் கருத்துகளை இப்படியான தர்க்க நியாயம் இல்லாமல் உதிர்த்ததே இல்லை.

அந்தமான் சிறைக்குச் செல்லும்போது சாவர்க்கரின் முன்பு பல சவால்கள் இருந்தன. முதலில் தன்னை மீட்டுக்கொள்வது, பின்பு அங்கிருக்கும் கைதிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவது, கைதிகளின் தற்கொலைகளை நிறுத்துவது, ஹிந்துக் கைதிகள் முஸ்லிம் கைதிகளால் நடத்தப்படும் விதத்தை மாற்றுவது, பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்பது, அங்கிருக்கும் கைதிகளுக்கு எழுத்தறிவிப்பது, அந்தமான் தீவில் சுதந்திரக் கனலைப் பரப்புவது, கட்டாயப்படுத்தி அல்லது வேறு வழியின்றி அல்லது ஆசை காட்டி மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக் கைதிகளை தாய்மதம் திரும்ப வைப்பது, ஹிந்துக் கைதிகளிடையே அநியாயமாகப் புகுந்துவிட்ட சாதியக் கொடுமைகளை அகற்றுவது, அந்தமான் சிறையின் நிலையை இந்தியாவில் இருக்கும் அரசுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் தெரிவித்து சிறையின் நிலையை முன்னேற்ற உதவுவது, இந்தியாவில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்குத் தன்னால் இயன்ற கருத்துகளைச் சொல்வது, எப்படியாவது இந்தச் சிறையில் இருந்து தப்பித்து இந்தியா சென்று இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடுவது – இத்தனை எண்ணங்களுடன் அலைக்கழிகிறார் சாவர்க்கர்.

உங்களால் நம்பமுடிகிறதா? இவை அனைத்தையும் செய்து முடிக்கிறார். ஒருவர் ஏன் தலைவர் என்று கொண்டாடப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் இவற்றில் உள்ளன. இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். இதனைத் தமிழில் கொண்டு வந்த ஒவ்வொருவரும், அதற்கு உதவிய ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். பல ஆண்டுகள் நீடித்து நிற்கப் போகும் ஆவணம் இது.

அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டபோது பிரிட்டிஷாரின் ஒரே நோக்கம், எக்காரணம் கொண்டும் சாவர்க்கர் உயிருடன் இந்தியா மீண்டுவிடக்கூடாது என்பதாகவே இருந்தது. அஹிம்சைப் போராட்டங்களை எப்படியும் எதிர்கொண்டுவிடலாம் என்று நம்பிய பிரிட்டிஷ் அரசு, புரட்சிப் போராட்டத்தை எதிர்கொள்ள அஞ்சியது. அதை ஒடுக்குவதே ஒரே வழி என்று புரிந்துகொண்டது. அதுவும் வெறும் வாய் வார்த்தை பேசி அரசை மிரட்ட மட்டுமே செய்பவர் அல்ல சாவர்க்கர், செயலையும் நிகழ்த்திக் காட்டுபவர் என்பது புரிந்தபோது, அவரை இந்தியாவுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் விலக்கி வைப்பது நல்லது என்ற முடிவுக்கு வருகிறது.

ஆனால் அந்தமான் சிறை அனுபவம் சாவர்க்கரை அவரளவில் பெரிய தலைவராக உயர்த்துகிறது. (அதேசமயம் மக்கள் தலைவர் என்னும் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக விலகவும் செய்துவிட்டது என்பது சோகமான வரலாற்று நிகழ்வு.) பிரிட்டிஷ் அதிகாரிகள்கூட அந்தமானுக்கு வந்தால் சாவர்க்கரைச் சந்திக்காமல் செல்வதில்லை. எல்லோருடனும் உரையாடத் தயாராக இருக்கும் சாவர்க்கர், அனைவரிடமும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி விவாதிக்கிறார். சாவர்க்கரின் பரந்துபட்ட அறிவும், இலக்கியப் பரிட்சயமும், உலக நாடுகள் பற்றிய வரலாற்று ஞானமும், அவரால் எத்தகைய எதிர்க்கேள்விகளையும் எதிர்கொள்ள வைக்கின்றன. இந்த நூலில் அவை அனைத்தும் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதமாற்றம் செய்யப்படும் ஹிந்துக் கைதிகள் பற்றிப் பேசும்போது மிகத் தெளிவாக தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார். தானாக மனம் உணர்ந்து மதம் மாறுபவர்களைப் பற்றி சாவர்க்கருக்கு எந்தப் புகாரும் இல்லை. அது அவர்களது சுதந்திரம். ஆனால், கைதிகள் முஸ்லீமாக மதம் மாறினால் அவர்களுக்குச் சிறையில் சில சுதந்திரங்கள் தரப்படும், ஜமேதாராகலாம் என்பன போன்ற சலுகைகள் தரப்படுகின்றன. சிறையில் படும் கஷ்டங்கள் தாங்காமல் பலர் மதம் மாறுகிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஹிந்துக்களிடையே உள்ள சாதி வேற்றுமை மற்றும் சில மூட நம்பிக்கை. ஒருவன் ஒரு தடவை முஸ்லீம்களிடையே இருந்து உணவருந்தினாலும் அவன் ஹிந்து அல்ல என்று முடிவு செய்து அவனை விலக்கி வைக்கிறார்கள். இதனால் அவன் தாய் மதம் திரும்பும் வாய்ப்பே இல்லாமல் போய், முஸ்லீமாகவே ஆகிவிடுகிறான். அதுவும் ஒரு சக ஹிந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் இது இன்னும் எந்த அளவுக்குப் போகும் என்று சொல்வதற்கில்லை. சாவர்க்கர் இதையெல்லாம் எதிர்க்கிறார். முஸ்லீம்களுடன் உணவருந்திய ஒருவருடன் இவரே அமர்ந்து உணவு உண்கிறார். பிறகு மெல்ல நான்கைந்து பேர் இவர்களுடன் சேர்ந்து உணவு உண்கிறார்கள். பிறகு வேறு வழியின்றி அனைவரும் சேர்ந்து உணவு உண்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு செயலையும் தானே முன் நின்று செய்கிறார்.

முஸ்லிம் கைதிகள், குறிப்பாக பதான் – சிந்தி – பலூச்சி முஸ்லீம்கள் (தமிழகம் மகாராஷ்ட்ரம் போன்ற இடங்களில் இருந்து வந்த முஸ்லிம்கள் இத்தனை கொடூரமானவர்கள் அல்ல என்கிறார்) அடாவடி செய்யும்போது அதே போக்கில் ஹிந்துக் கைதிகளை அடாவடி செய்யத் தூண்டுகிறார். இதனால் சிறையில் பெரிய பிரச்சினைகள் எழுகின்றன. மேலதிகாரிகளின் விசாரணையின்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வர, இரு தரப்பு இந்த அடாவடிகளைச் செய்யக்கூடாது என்று முடிவாகிறது. இதை ஒரு போராட்ட வடிவமாகவே சிறையில் செய்கிறார் சாவர்க்கர். ஹிந்துக் கைதிகளின் உணவை வேண்டுமென்றே முஸ்லிம் கைதிகள் தொட்டுவிட்டு, அது தீட்டு என்பதால் ஹிந்துக் கைதிகள் உணவை உண்ணாமல் இருக்க, அந்த உணவையும் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதே பாணியை ஹிந்துக் கைதிகளை வைத்துச் செய்ய வைக்கிறார். வேறு வழியின்றி முஸ்லீம் கைதிகள் அமைதியாகிறார்கள். அதிகாலை நேரத்தில் தொழுகையால் வரும் பிரச்சினையையும் இப்படியே எதிர்கொள்கிறார். சங்கநாதம் எழுப்பச் சொல்லி ஹிந்துக் கைதிகளைத் தூண்டுகிறார். முதல் உலகப் போரின்போது கெய்சர் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார் என்ற செய்தியை முஸ்லீம் கைதிகள் பரப்ப, இவர் பதிலுக்கு அவர் ஆர்யசமாஜி ஆகிவிட்டார் என்கிற செய்தியைப் பரப்பச் சொல்கிறார். உருதுவில் எழுதுவதே மேன்மையானது என்கிற எண்ணத்தை உடைத்து, ஹிந்தியில் எழுதச் சொல்கிறார். இவையெல்லாம் சிறைக்குள் அத்தனை இன்னல்களுக்குள் சாவர்க்கரால் செய்யப்பட்டவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

சிறையிலும் சிறைக்கு வெளியே அந்தமான் தீவிலும் தாய்மதம் திரும்புவதை ஒரு சடங்காகவே செய்ய ஆரம்பித்தார் சாவர்க்கர். இதனால் திணறிப் போன பிரிட்டிஷ் அரசு, சிறைக்குள் எந்த ஒரு மதத்தில் இருந்தும் இன்னொரு மதத்துக்கு மதம் மாற்றுவதைத் தடை செய்கிறது. இதுதான் சாவர்க்கர் எதிர்பார்த்ததும்கூட!

மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதரோடு முடியக்கூடியதல்ல, அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு மதத்துக்கான அடித்தளமாக மாறும் இயல்புடையது என்கிறார். குற்றவாளியாகவே இருந்தாலும் ஒருவர் ஹிந்து மதத்தில் தொடரவேண்டிய அவசியத்தை, அதன் அடுத்தடுத்த தலைமுறைகளை மனதில் வைத்துச் சொல்கிறார். இதற்காக உலக வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை முன்வைக்கிறார். நூல் முழுக்க இப்படித்தான், எதிர்காலத்தில் என்ன நடக்கும், அதற்கான உலக வரலாற்று ஆதாரங்கள் என்ன என்பதோடு நம் புராணங்களின் ஆதாரங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.

சிறைக்குள் எழுத்தறிவிக்க சாவர்க்கர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், எழுத்தறிவிப்பவன் இறைவன் என்றால் இப்படி எழுத்தறிவித்தவன் அதற்கு மேல் என்றே சொல்லவேண்டும். மூன்று ஆர் (Reading, wRiting, aRithmetic) என்பதை ஒருவன் எப்பாடுபட்டாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

தான் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதில் சாவர்க்கருக்கு இருந்த ஆர்வம் அளப்பரியது. சிறையின் சுவர்களையே காகிதமாக்கி, சிறையில் கிடைக்கும் ஒரு ஆணியை மறைத்து வைத்து அதிலேயே தன் கருத்துகளை எழுதுகிறார். புத்தகங்கள் பற்றிய குறிப்புகள், புதிய கவிதை என்று எழுதுகிறார். வேறு அறைக்கு மாற்றப்பட்டால், இந்த அறை மற்ற கைதிகளுக்கு ஒரு புத்தகமாகிறது. மாற்றப்பட்ட சிறையிலும் இப்படி வேறு ஒன்றை எழுதுகிறார்.

சிறைக் கைதிகளுக்குள்ளே ரகசிய முறையில் செய்திகளைப் பரிமாற சாவர்க்கர் செய்யும் விஷயங்கள் எல்லாம் கற்பனைக்குள் அடங்காதவை. code முறையில் பேசிக்கொள்வது, பானைத் துண்டுகளில் செய்திகளைப் பரப்புவது, கிடைக்கும் காகிதங்களில் எழுதி சுருட்டி எரிந்து பரப்புவது என்று என்னவெல்லாமோ செய்கிறார். கைதிகளையும் அதில் பங்கெடுக்க வைக்கிறார்.

முதல் உலகப் போரின்போது சிறைக் கைதிகளுக்கு அரசியல் அறிவைப் புகட்ட வாரம் தோறும் பிரசங்கம் செய்கிறார். அவர்களுடன் விவாதிக்கிறார். உலக அரசியல் அறிவில்லாமல் சுதந்திரப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்று விளக்குகிறார். அதே சமயம் ஒரு கனிவான ஆசிரியர் போல அவர்களுக்கு போதிக்கிறார். அவசரப்படுவதில்லை. மெல்ல மெல்ல சொல்லித் தருகிறார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது, இரண்டு ராஜா சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் என்று யோசித்துக்கொண்டிருந்த கைதிகளுக்கு அரசியல் சொல்லித் தருகிறார். இதைத் தொடர்ந்து சிறையில் நூலகம் தொடங்குகிறார். தன் சகோதரர்கள் மூலம் புத்தகங்களைச் சிறைக்குக் கொண்டு வருகிறார். சிறையில் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இதை எதிர்த்தாலும், கிண்டலாகப் பேசினாலும், உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்று, இதை வெற்றிகரமாகச் செய்து காண்பிக்கிறார் சாவர்க்கர்.

முதல் உலகப் போரின்போது கெய்சரின் படையினர் அந்தமான் சிறையைத் தகர்த்து சாவர்க்கரை மீட்கப் போகிறார்கள் என்கிற புரளி வருகிறது. அந்தமான் கடற்கரையில் கிடைக்கும் வெடிகுண்டு ஒன்றை வைத்து இந்த முடிவுக்கு வருகிறார்கள் பிரிட்டிஷ் சிறை அதிகாரிகள். இதையெல்லாம் நம்பவேண்டாம் என்று எத்தனையோ சொன்னாலும், சாவர்க்கரை பெரிய அளவில் கண்காணிக்கிறது பிரிட்டிஷ் அரசு.

காந்திஜியைப் பற்றிய இரண்டு அல்லது மூன்று குறிப்புகள் இந்த நூலில் உள்ளன. மகாத்மா என்றே குறிப்பிடுகிறார் சாவர்க்கர். ஆங்கில மொழிபெயர்ப்பில் இப்படி வருகிறதா அல்லது மராட்டியிலேயே இப்படித்தான் இருந்ததா என்பது தெரியவில்லை. மகாத்மா என்று குறிப்பிட்டாலும் காந்தியின் தவறான அகிம்சை போதனைப் புரிதல்களைக் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்குகிறார் சாவர்க்கர். ஒத்துழையாமை இயக்கத்தைவிட நமக்குத் தேவையானது பொறுப்புள்ள ஒத்துழைப்பு (*Responsive cooperation) என்பதுதான் என்று வாதிடுகிறார்.

ஐந்து ஆண்டுகள் அந்தமான் சிறைத் தண்டனைக்குப் பிறகு சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் ஒரு உரிமை, அந்தமான் தீவில் குடும்பத்துடன் வசிக்கும் உரிமை. அது யாருக்குத் தரப்பட்டாலும் சாவர்க்கருக்குத் தரப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது பிரிட்டிஷ் அரசு. ஒரு வழியாக அந்த அனுமதி கிடைக்கும்போது அங்கே சென்றும் சுதந்திரப் போராட்டக் கனலைப் பரப்புகிறார். அவற்றையெல்லாம் புல்லரிப்பு இல்லாமல் படிக்கமுடியாது.

சிறைக்குள் வரும் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் சாவர்க்கருக்கு விடுதலை என்கிற செய்தி வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. சிறையே இதனால் சந்தோஷம் கொள்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் சாவர்க்கருக்கு மட்டும் விடுதலை தரப்படாது. புத்தகத்தைப் படிக்கும் நமக்கே இது பெரிய அசதியைக் கொண்டு வரும் என்றால் அங்கே வாழ்ந்தவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

முதல் உலகப் போரை ஒட்டி பொது மன்னிப்பு என்கிற விஷயம் எழுகிறது. சிறையில் இருக்கும் கைதிகள் ஒவ்வொருவரையும் இந்தப் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்குமாறு சாவர்க்கர் சொல்கிறார். அனைவரையும் விண்ணப்பிக்க வைக்கிறார். அப்படி விண்ணப்பித்தவர்களுள் ஒருவரே சாவர்க்கர். அன்று பிரிட்டிஷ் அரசுக்கு மனு அளிப்பது ஒன்றே வழி. அந்த வழியையே சாவர்க்கர் பின்பற்றினார். அதில் இருக்கும் வரிகளை மேற்கோள் காட்டி, சாவர்க்கர் இந்த அளவுக்குப் போனார் என்பது அடுத்த குற்றச்சாட்டு. The Mighty alone can afford to be merciful and therefore where else can the prodigal son return but to the parental doors of the Government? சாவர்க்கரின் கவிதை தோய்ந்த மொழி எப்போதுமே அப்படியானதுதான். உருவகமும் உலகப் புகழ்பெற்ற காவியங்களின் வரிகளும் முழுக்க இழையோடித்தான் அவரால் எழுதமுடியும். இதில் கவனிக்கவேண்டியவை என்ன? ஒன்று, சாவர்க்கர் எல்லாக் கைதிகளையும் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்கச் சொல்கிறார். காரணம், சிறையில் உழன்று அழுகிச் சாவதில் பொருளே இல்லை என்றும், ஒரு புரட்சியாளன் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே போகவேண்டும் என்றே நினைக்கவேண்டும் என்றும், அதற்கான காரணம் அப்படி வெளியே செல்வது பாரத அன்னைக்கு சுதந்திர மலரைச் சூட்டப் போராடுவதற்காகத்தான் என்றும் பல முறை பதிவு செய்திருக்கிறார். அனைவருக்கும் பொது மன்னிப்பு தரப்பட்டாலும் சாவர்க்கர் சகோதர்களுக்கு மட்டும் அந்த நேரத்தில் தரப்படவில்லை! இரண்டாவதாகக் கவனிக்கவேண்டியது, மிகத் தெளிவாக சாவர்க்கர் சொல்கிறார், “என் பொருட்டு ஒருவேளை அனைவருக்கும் பொது மன்னிப்பு மறுக்கப்படும் என்றால், மற்ற அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குங்கள், என்னைச் சிறையிலேயே வையுங்கள், மற்றவர்களுக்குத் தரப்படும் மன்னிப்பு எனக்குத் தரப்படுவதைப் போன்றதே” என்கிறார். இதை வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை. இந்தப் புத்தகத்திலேயே இதைப் பல இடங்களில் பல கட்டங்களில் சொல்கிறார். மூன்றாவதாக, சிறையில் இவரைச் சந்தித்து உரையாடிய பிரிட்டிஷ் அதிகாரி சர் ரெஜினால் க்ரடாக் சொல்வது: “கருணை மனுவுக்குப் பின்னரும்கூட, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செய்தது குறித்த எவ்வித குற்ற உணர்ச்சியும் இவரிடம் இல்லை” என்பது. நான்காவதாக, அந்தமான் சிறையில் இருந்து 2 மே1921ல் மாற்றப்பட்டு இவர் ரத்னகிரியிலும் எரவாடா சிறையிலும் மூன்று ஆண்டுகளுக்குச் சிறையில் வைக்கப்படுகிறார். பின்னர் ரத்னகிரி மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐந்து ஆண்டுகள் ரத்னகிரியில் கழிக்கிறார். பின்னரும் 1937 வரை தீவிரமாகக் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார். ஆனாலும் சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்கைத் தீவிரமாகவே செலுத்துகிறார். எனவே சாவர்க்கர் மன்னிப்புக் கேட்டார் என்பது, ஒற்றை வரி அரசியலைச் செய்பவர்களுக்கான வெற்றரசியல் மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அதிக காலம் சிறையில் இருந்தவர் சாவர்க்கரே. அதுவும் கொடும் சிறை, தனிமைச் சிறை. இதைப் புரிந்துகொள்ள தேசம் பற்றிய எண்ணமும், சுதந்திரப் போராட்டம் பற்றிய புரிதலும் வேண்டும்.

அந்தமான் சிறையிலிருந்து ரத்னகிரிக்கு மாற்றப்படும் சாவர்க்கர் சகோதரர்கள் பாரத மண்ணில் கால் பதிக்கும்போது சாவர்க்கரின் வரிகள் பெரும் கவித்துவம் பெறுகின்றன. நாடி நரம்பெல்லாம் தேசபக்தி உள்ளவர்களால் மட்டுமே அப்படி எழுத முடியும், அதைப் புரிந்துகொள்ள முடியும்.

சாவர்க்கர் எப்பேற்பட்ட சிந்தனையாளர், சுயமான தலைவர் என்பதற்கு இந்த நூல் ஒரு ஆதாரம். இந்த நூலை வாசிக்காமல் போவது பெரிய இழப்பு. இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. நூலை வாசித்தால் நான் சொல்வது புரியும். நான் இந்த நூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசித்தேன். எஸ்.ஜி. சூர்யாவின் மொழிபெயர்ப்பில் தமிழில் மிக அற்புதமாக வெளி வந்திருக்கிறது. நண்பர் பாலாவும், நானும் இதை எடிட் செய்தோம். மிக முக்கியமான நூல் இது. தவற விட்டுவிடாதீர்கள். வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.

Share

நம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை

நம்பி நாராயணின் ‘Ready to Fire – How India and I survived the ISRO spy case’ புத்தகம் வாசித்தேன். நம்பி நாராயணன் இஸ்ரோவின் விஞ்ஞானி. அப்துல் கலாமுடன் பணிபுரிந்தவர். பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காங்கிரஸ் அரசால் 1994ல் கைது செய்யப்படுகிறார். பின்னர் சிபிஐ இதை விசாரிக்கிறது. 1996ல் இக்குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று சொல்லி சிபிஐ இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. 1998ல் உச்சநீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து இவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது. இவருக்குப் பத்து லட்சம் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. அங்கே இவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று 2018ல் தீர்ப்பாகிறது. 2019ல் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் அளித்து கௌரவிக்கிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, கரும்பாலையில் வேலை செய்து, பின்னர் எதேச்சையாக இஸ்ரோவுக்கு விண்ணப்பித்து, அதுவும் தாமதமாக விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்ந்து, கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை வழிநடத்துவதில் முதன்மையான விஞ்ஞானியாக இருந்து, லிக்விட் ப்ரொபல்ஷன் (ராக்கெட்டை உந்தித் தள்ள உதவும் எரிபொருளாக திடப் பொருளுக்குப் பதிலாக நீர்மத்தைப் பயன்படுத்தும்) தொழில்நுட்பத்துக்காக வாதாடி போராடி அது வெற்றி பெற்ற மிகச் சில நாள்களுக்குள் கைது செய்யப்படுகிறார் நம்பி நாராயணன். அதன் பிறகு இவ்வழக்கில் தான் பட்ட இன்னல்களையும் அதைத்தாண்டி வென்றதையும் விவரிப்பதுவே இப்புத்தகத்தின் நோக்கம். இன்னொரு இழையாக இஸ்ரோவில் இவரது பணியையும் விவரிக்கிறார். இப்புத்தகத்தின் ஆதார நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இஸ்ரோவின் வரலாறாகவே இப்புத்தகம் விரிகிறது. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.

கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவின் பழிவாங்கலே, கேரள காங்கிரஸ் அரசு மூலமாக நம்பி நாராயணன் கைது வரை நீள்கிறது. மிகத் திறமையாக ‘நாட்டுக்கு நம்பி நாராயணன் செய்த நம்பிக்கைத் துரோகம்’ என்ற கதையை உருவாக்குகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இரண்டு ஒற்றர்கள் மூலம் தொழில்நுட்பத்தின் வரைபடங்களை நம்பி நாராயணனும் அவருடன் வேலை செய்பவர்கள் சிலரும் விற்றார்கள் என்ற கதை உருவாக்கப்படுகிறது. நம்பி நாராயணன் 6வது குற்றம்சாட்டப்பட்ட நபராகக் கைது செய்யப்படுகிறார். தேசம், அறிவியல், கிரயோஜனிக் தொழில்நுட்பம், இஸ்ரோவின் சக ஊழியர்களுக்கிடையேயான ஈகோ மோதலைச் சமாளித்துத் தன் கனவை நினைவாக்குவதில் போராட்டம் என்றெல்லாம் இருந்தவருக்கு இந்தக் கைது பெரும் அதிர்ச்சியைக் கொண்டு வருகிறது. ஆனால் சிபிஐ இவர் மீது வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் மறுத்து, அனைவரையும் விடுதலை செய்கிறது.

எப்படியெல்லாம் ஒற்றுக் கதையைப் புனைகிறார்கள் என்று படித்துப் பார்த்தால் சாதாரணர்களுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்துவிடும், இப்படியெல்லாம் இவர் செய்யாமல் எப்படிக் கதையைப் புனையமுடியும் என்று. அத்தனை விஸ்தாரமாக தேதி வாரியாக இவர் மீது குற்றச்சாட்டுகள் புனையப்படுகின்றன. சாட்சிகள் அனைவரும் மிரட்டப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள வைக்கப்படுகிறார்கள். ஆனால் இவர் கடைசி வரை அஞ்சாமல் உண்மைக்காகப் போராடுகிறார். சிபிஐ விசாரிக்கும்போது அனைவரும் பிறழ்சாட்சிகளாக மாறுகிறார்கள். தாங்கள் மிரட்டப்பட்டதையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை (ஐபி) அப்படி சொல்லச் சொன்னதாகவும் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

இந்தியா அப்போதெல்லாம் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கிறது. பிரான்சு அரசு இந்தியாவின் தொழில்நுட்பத்தில் உதவுகிறது. (இவையெல்லாம் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்படுகின்றன.) அமெரிக்கா நமக்கு உதவ கேட்கும் தொகைக்கும் பிரான்ஸு அல்லது ரஷியா கேட்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். இந்தியா அமெரிக்காவைப் புறக்கணிக்கிறது. எனவே அமெரிக்கா கிரியோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை ஒழித்துக்கட்ட தன்னைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியதாக நம்பி நாராயணன் சொல்கிறார். அதாவது பிஎஸ்எல் வி அக்டோபர் 15 1994ல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுகிறது. 30 நவம்பரில் நம்பி நாராயணன் கைதாகிறார். இந்த விளையாட்டை வைத்து கேரளாவின் கருணாகரணை வீழ்த்த ஏ.கே.அந்தோணியும் உம்மன்சாண்டியும் ஆயத்தமாகிறார்கள். கேரள அரசு வீழ்ந்து கம்யூனிஸ்ட் அரசு வருகிறது. அவர்களும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறார்கள். உள்ளார்ந்த விருப்பம் என்றில்லை. ஆனாலும் நடத்த விரும்புகிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து கேரள அரசுக்கு நஷ்ட ஈடும் விதிக்கிறது.

இந்த நூலில் உள்ள பல முக்கியமான அம்சங்களைத் தனியே தொகுத்தாலே அது பல பக்கங்களுக்கு வரும். அப்துல் கலாம், விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், டி என் சேஷன் பற்றிய அழகான சித்திரங்கள் இந்நூலில் உருவாகி வருகின்றன. விக்ரம் சாராபாயும், ஹோமி பாபாவும் திடீரென அகால மரணம் அடைவது குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார் நம்பி நாராயணன். படிக்கும் நமக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

நம்பி நாராயணின் அபாரமான நினைவாற்றல் இப்புத்தகத்துக்குள் பல பொக்கிஷங்களைக் கொண்டு வருகிறது. அவரது சிறு வயதில் ஆசிரியர் சொல்லும் சிறிய குறிப்பு முதல் (‘எனக்கு நன்றாக சத்தமாகப் பேசத் தெரியும், ஆனால் வேண்டுமென்றே சத்தம் குறைவாகப் பேசினேன், அப்போதுதான் உங்கள் கவனம் கூடுதலாக இருக்கும் என்பதால்’), இவர் முதன்முதல் வேலைக்குச் செல்லும்போது நடுத்தர குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் தொட்டு, இவர் பிரான்ஸில் இருக்கும்போது நடக்கும் நிகழ்வுகள், பின்னர் கைது, விசாரணை எனப் பல இடங்களிலும் பல நுணுக்கமான தகவல்களையெல்லாம் சளைக்காமல் பதிவு செய்கிறார். இதனால் வழக்கு தொடர்பான தகவல்களில் நமக்கு ஒரு நம்பிக்கைத்தன்மை வந்துவிடுகிறது.

  • தங்களது உண்மையான பெயர்களை மறைத்து, தர்மா, சத்யா என்ற பெயர்களைச் சொல்லிக்கொண்டு விசாரிக்கிறார்கள் அதிகாரிகள். தன் பெயர் நீதி என்று சொல்ல நினைக்கிறார் நம்பி நாராயணன்.
  • எதாவது ஒரு முஸ்லிம் பெயரைச் சொல் என்று துன்புறுத்தப்படுகிறார் நம்பி நாராயணன். அப்துல் கலாம் என்று சொல்லவும் ஓங்கி ஒரு அடி விழுகிறது. சிறிய வயதில் கூட விளையாடிய ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே தனக்குத் தெரியும் என்று சொல்லவும், அவரையும் விசாரிக்கிறது கேரள போலிஸ்! (உண்மையில் எந்த அரசு முஸ்லிம்களையும் முஸ்லிம் பெயர்களையும் இப்படிப் பயன்படுத்தியது, அதுவும் எந்தக் காலத்தில் பயன்படுத்தியது என்பதையெல்லாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இன்று ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூடப் பெரிதாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்று இன்றைய அரசின் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.)
  • மிகச் சிறிய தவறுகளால்கூட இஸ்ரோவின் சோதனைகள் தோல்வி அடைகின்றன. ஒரு சுவிட்ச்சை அணைக்காமல் விட்டது போன்ற சின்ன தவறுகள்கூட ஒரு சோதனையை சொதப்பி விடுகிறது. இப்படி இஸ்ரோ தொடர்பான பல கவனக்குறைவுகளை, உள்ளே நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பான அரசியல்களை அப்படியே வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார் நம்பி நாராயணன். இவற்றையெல்லாம் மீறி இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்படுவது என்பதே ஆச்சரியம்தான் என்ற எண்ணம் நமக்கு வருமளவுக்கு உள் அரசியல் தலைவிரித்தாடுகிறது.
  • எது தேவை என்பதைவிட, யார் அதைச் சொல்கிறார்கள் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது இஸ்ரோவில். இதைத் தாண்டி, லிக்விட் ப்ரொபல்ஷன் தொழில்நுட்பமே சிறந்தது என்பதை அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்க நம்பி நாராயணன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியதாகிறது. இந்த உள்ளரசியல் மோதலில் ஐயானிக் ப்ரொபல்ஷனை சரியான நேரத்தில் இந்தியா கைக்கொள்ளமுடியாமலும் போகிறது.
  • இந்தியர்களுக்கு என்ன தெரியும் என்று வெளிநாட்டில் நிலவிய, இந்திய விஞ்ஞானிகள் மீதான பார்வையை இஸ்ரோவின் விஞ்ஞானிகள் உடைத்தெறிந்து அசரடிக்கிறார்கள்.
  • ஒரு மெக்கானிக் தொடங்கி வெல்டர் தொட்டு எல்லாரது முக்கியத்துவத்தையும் சொல்கிறார் நம்பி நாராயணன். இவையெல்லாம் அற்புதமான பதிவுகள்.
  • லஞ்சம் தரப்பட்டு கையும் களவுமாகப் பிடிக்க செய்யப்படும் தந்திரத்தில் இருந்து இயல்பான நேர்மையால் தப்பிக்கிறார் நம்பி நாராயணன்.
  • தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய இஸ்ரோவின் செயலகம் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்குப் போகிறது. காரணம் பொறுப்பற்ற, நோக்கமற்ற, லஞ்ச லாவண்யத்தில் ஊறிப் போன திமுக அரசு. இது தொடர்பான கூட்டத்துக்கு அண்ணாதுரை உடல்நலம் இல்லாததால் வரமுடியவில்லை. அமைச்சர் ஒருவர் வருகிறார். முழு போதையில் வருகிறார். அவரைப் பிடிக்கவே இருவர் தேவைப்படுகிறார்கள். விக்ரம் சாராபாய் உடனேயே முடிவெடுக்கிறார், தமிழ்நாடு இதற்கு ஒத்துவராது என. ஆனால் ஆந்திர அரசோ 26,000 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தர முன்வருகிறது. அதேசமயம் மகேந்திரகிரியில் (உண்மையில் அது மகேந்திரகிரி அல்ல, பொதிகை) அமைக்கப்படும் துணை நிலையத்துக்கு எம்ஜியார் ஆதரவு தருகிறார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, அதிரடியாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அங்கே அது வெற்றிகரமாக அமைக்கப்படுகிறது.
  • நிலம் கையகப்படுத்துவதில் இன்றைப் போலவே அன்றும் வெறுப்புப் பிரசாரங்களும் பொய்களும் புரட்டுகளும் பரப்பப்பட்டுத் தேவையற்ற பயம் மக்கள் மனத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது.
  • ஊடகங்கள் இன்றல்ல, அன்றே வெற்றுப் பரபரப்புக்காகவே பொய்களை, கட்டுக்கதைகளைப் பரப்பி இருக்கின்றன. பொறுப்பே இல்லாமல் மலையாள ஊடகங்கள் நடந்துகொண்டதையும், ராக்கெட் என்பது பற்றியோ அதன் வரைபடங்களை எப்படி விற்க முடியும் என்பது பற்றியோ, அப்படி விற்றாலும் அதனாலும் ஒரு பலனும் இல்லை என்பது பற்றியோ (இப்படி ஒரு முறை போலிஸ் விசாரணையில் நம்பி நாராயணன் சொல்லவும், அப்படியானால் விற்றது உண்மையா என்று எதிர்க்கேள்வி வருகிறது!) அடிப்படை அறிவே அற்ற ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் பற்றி விரிவாக எழுதுகிறார் நம்பி நாராயணன். அதேசமயம் ஆங்கில ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாகக் கொஞ்சமாவது அடிப்படை அறிவுடன் செயல்பட்டன என்கிறார். இஸ்ரோவின் வரைபடங்கள் மீன் வைக்கும் பெட்டியில் வைத்துக் கடத்தப்பட்டன, பாகிஸ்தான் வான் மூலம் சிறையைத் தாக்கி நம்பி நாராயணனைக் காப்பாற்றப் போகிறது என்றெல்லாம் எழுதினவாம் மலையாள ஊடகங்கள்.
  • ரஷ்யாவில் ஒரு கண்காட்சியில் ஒரு இயந்திரத்துக்குப் பதிலாக இன்னொரு இயந்திரத்தை வைத்து பார்வையாளர்களை ஏமாற்றுகிறார்கள். இதை நம்பி நாராயணன் பார்த்த உடனேயே கண்டுபிடிக்கிறார். இதெல்லாம் சகஜம் என்கிறார்கள் அவர்கள். காரணம், ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக்கொள்ளவாம்.
  • நம்பி நாராயணன் மீது பல விதங்களில் குற்றம் சுமத்திய புலன் விசாரணை அமைப்பின் தலைவர் ரத்தன் சேகல் (எம்.கே. தர்-ருடன் வேலை செய்பவர்), சி.ஐ.ஏ உடன் பல ரகசிய சந்திப்புகளை நிகழ்த்தியதைக் காரணம் காட்டி, நீக்கப்படுகிறார். இதனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பது உறுதியாகிறது என்கிறார் நம்பி நாராயணன்.

மேலே கூறியவை எல்லாம், இப்புத்தகம் எந்த அளவுக்கு எத்தனை விஷயங்களைப் பேசுகிறது என்பதைப் புரிய வைத்திருக்கும். இதில் ஹைலைட் இப்புத்தகத்தின் இறுதி அத்தியாயம்.

கேரள அரசு சொன்ன குற்றங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அதை எப்படியெல்லாம் சிபிஐ மறுத்தது என்பதைச் சொல்கிறது அந்த அத்தியாயம். இந்த அத்தியாத்தை (ஒட்டுமொத்த புத்தகத்தையும்கூட) ஒரு திரைப்படத்தின் லாஜிக் காட்சிகளைப் போன்ற விறுவிறுப்புடன் படிக்க முடிகிறது. அதில் முக்கியமானது: நம்பி நாராயணன் பிஎஸ் எல்வி2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் தான் ராஜினாமா செய்யப் போவதாக முன்பிருந்தே சொல்லி வந்திருக்கிறார். அதற்குப் பல காரணங்கள். குறிப்பாக லிக்விட் ப்ரபல்ஷன் பற்றியது. அதேபோல் பிஎஸ் எல்வி வெற்றிகரமாக ஏவப்பட்டதும் ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்தும் விடுகிறார். தன் மீதான ஒற்றர் வழக்கு வரும் என்று தெரிந்தே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்ததாக கேரள அரசு சொல்கிறது. இதைப் படிக்கும் யாருக்கும் அப்படித் தோன்றத்தான் செய்யும். ஆனால் சிபிஐ அதில் மறைக்கப்பட்ட ஒன்றைச் சொல்கிறது. அந்தக் கடிதத்திலேயே கீழே ஒரு குறிப்பாக, தான் ஏற்கெனவே இந்தத் தேதியில் ராஜினாமா செய்யப் போவதாக முன்பே சொன்னதையும் குறிப்பிட்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு இஸ்ரோ அதிகாரியும் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் கேரள அரசு நீதிமன்றத்தில் இந்தக் குறிப்பைப் பற்றி எதையும் சொல்லாமல் மறைத்திருக்கிறது. அதேபோல் மிக முக்கியக் குற்றவாளியான மரியம் ரஷீதா என்னும் ஏஜெண்ட் இவர் புகைப்படத்தைப் பார்த்து, தான் இவரைத்தான் நேரில் பார்த்ததாகச் சொல்லி இவர்தான் நம்பி நாராயணன் என்று அடையாளம் காட்டும் வீடியோ. ஆனால் அதை சிபிஐ மறுக்கிறது. இவர் பெயர் நம்பி நாராயணன் என்று சொல்ல அந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு வரவில்லை என்பதால், வீடியோவை ஒளிப்பதிவு செய்யும்போது அவர் பெயரை எழுதிக் காண்பித்து அதைப் பார்த்துப் படிக்கச் சொல்கிறார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கண்கள் மேலே செல்வதை அந்த வீடியோவில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இப்படிச் சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கிப் பல விஷயங்களை சிபிஐ மறுக்கிறது. இறுதியில் நம்பி நாராயணன் விடுதலை ஆகிறார்.

நான் முதன்முதலில் நேருக்கு நேர் என்ற சன் டிவியின் ரஃபி பெர்னாட்டின் பேட்டியில் இவரது நேர்காணலைப் பார்த்தேன். 90களின் பிற்பகுதியில் என நினைக்கிறேன். அன்றே இவர் பதில் சொன்ன விதமும் நம்பிக்கையும் தனக்கு இழைக்கப்பட்டுவிட்ட அநீதி தந்த மன உளைச்சலும் தெளிவாகப் புரிந்தன. ஆனால் அவர் சொன்ன பல விஷயங்கள் புரியவில்லை. இன்று இந்தப் புத்தகம் பலவற்றைத் தெளிவாக்குகிறது. உறுதியுடன் ஒருவேளை நம்பி நாராயணன் எதிர்கொள்ளாமல் போயிருந்தால், இந்நேரம் அவர் தேசத் துரோகியாகி விட்டிருப்பார். நேர்மையுடன் எதிர்கொண்டதால் பத்ம விபூஷனாகி இருக்கிறார். ஆனாலும் அப்துல் கலாமை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர் இழந்தவை என்ன என்று புரியலாம். அதை யாராலும் ஈடு செய்யமுடியாது.

இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டு வருபவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். யார் கொண்டு வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

பின்குறிப்பு: இந்தப் புத்தகம் பற்றிய, ஆமருவி தேவநாதனின் மதிப்புரை வலம் இதழில் வெளிவந்தது. அதைப் படிக்க தவறி விடாதீர்கள்.

நன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்

Share

சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம்

சாவர்க்கரின் My Transportation for life புத்தகம், எஸ்.ஜி. சூர்யாவால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக விரைவில் வர இருக்கிறது. இப்புத்தகம் வெளியாகும்போது இந்நூலைப் பற்றிய விரிவான என் கருத்தைப் பதிகிறேன்.


இந்த நூல் சாவர்க்கரை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவியது. உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் தவறவே விடக்கூடாத நூல் இது. இந்திய விடுதலைக்காகப் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்த தலைவர்கள் பட்ட கஷ்டங்களையும் செய்த தியாகங்களையும் பற்றிய ஒரு பிம்பத்தை சாவர்க்கரின் மூலம் இந்நூலில் பெறலாம். சாவக்கரின் அப்பழுக்கற்ற தேச பக்தியையும் தொலைநோக்குப் பார்வையையும் இப்புத்தகத்தில் காணலாம். முஸ்லிம்களுக்கான தாஜா அரசியலுக்கு எதிராக ஹிந்துத்துவ அரசியலை சிறையிலேயே முன்னெடுக்கும் சாவர்க்கர், தொடர்ச்சியாக ஹிந்துக் கைதிகளுக்காகச் சிறையில் போராடுகிறார். இவை முழுக்க மிக விரிவாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் என்றால் சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் சலுகைகள் ஹிந்து என்றால் மறுக்கப்படுவதை அடியோடு தீவிரமாக எதிர்க்கும் சாவர்க்கர், இந்த முஸ்லிம்களில் இந்திய முஸ்லிம்கள் மற்றும் பதான் முஸ்லிம்களுக்கு இடையேயான வேறுபாட்டையும் பதிவு செய்கிறார். தான் போராடுவது நியாயத்துக்காக மட்டுமே அன்றி, எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் அல்ல என்று உறுதியாகப் பேசுகிறார். அநியாயம் மற்றும் அக்கிரமங்களுக்கு அடிபணிந்து ஹிந்துக்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்று சொல்லும் சாவர்க்கர், புரட்சியுடன் கூடிய போராட்டமே நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறார். சிறையில் அஹிம்சை எடுபடாமல், இவர் செய்யும் புரட்சிகளே நன்மையைக் கொண்டு வருகின்றன. காந்திஜியின் அஹிம்சை பற்றிய சாவர்க்கரின் கிண்டல்களையும் எதிர்ப்பையும் இந்நூலில் காணலாம்.


தீவிரமான தேசப்பற்று, எப்போதும் எதிலும் தன்னலத்தை முன்னிறுத்தாத தலைமைத்துவம், விடாமுயற்சி, தொடர் போராட்டம் என எல்லா வகைகளிலும் சாவர்க்கர் சந்தேகமே இன்றி வீர சாவர்க்கர்தான்.

இந்நூலை நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.

Share

பெருவலி நாவல்

கடந்த ஆண்டு ருசிர் குப்தாவின் Mistress of Throne புத்தகத்தைப் படித்தேன். பேஹம் சாஹிப் என்றறியப்பட்ட முகலாய இளவரசி ஷாஜஹானின் மகள் ஜஹானராவைப் பற்றிய நாவல். இந்த நாவல் மேம்போக்காக எழுதப்பட்டதல்ல. மூல ஆவணங்களைப் படித்துத் தரவுகளுடனும் தரவுகள் இல்லாத இடத்தில் புனைவைக் கொண்டு இணைத்து எழுதப்பட்ட ஒன்று. ஜஹானரா, மும்தாஜ், ஷாஜஹான், தாரா ஷுக்கோ, ஔரங்கசீப், ஜனானா பெண்கள் மற்றும் அந்தக் காலத்திய அரசியல் நடவடிக்கைகளை மிக விரிவாக விளக்கும் நாவல்.

இதே பின்னணியில் எழுதப்பட்ட நாவல் சுகுமாரனின் பெருவலி. காலச்சுவடு வெளியீடு. இதற்கு முன்பு ஜஹானரா குறித்து வெளியான புத்தகங்களின் பாதிப்பு எந்த வகையிலும் வந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்து உழைத்து எழுதி இருக்கிறார் சுகுமாரன். ருசிர் குப்தாவின் ஆங்கில நாவலில் இருந்து இந்நாவல் வேறுபடுவது, இந்நாவலின் அசர வைக்கும் தமிழ் நடையின் மூலமாக. ஒரு தீவிரமான இலக்கியப் புனைவை வாசிக்கும் இன்பத்தைக் கொண்டு வருகிறது சுகுமாரனின் பெருவலி.

யார் எழுதினாலும் ஷாஜஹானின் கடைசி காலக் கட்டம் குறித்த விவரணைகள் பெரும் பதற்றத்தைக் கொண்டு வந்துவிடும் போல. காமத்திலும் ரத்தத்திலும் தோய்ந்து கிடந்த ஒரு பேரசசன், தான் செய்தவற்றின் இன்னொரு உருவாக வந்து நிற்கும் தன் மகன் ஔரங்கசீப்பிடம் மண்டியிடுகிறான். அதே துரோகங்கள், அதே ரத்தம், அதே படுகொலைகள் மீள அரங்கேறுகின்றன. அதற்குள் தாஜ்மஹாலின் மூலம் உலகில் நிலையாப் புகழைப் பெற்று விடுகிறான் ஷாஜஹான்.

முகலாய இளவரசிகளுக்குத் திருமணம் கிடையாது என்பது விதி. ஒருவேளை அவர்களுக்குத் திருமணமானால் அவர்களது கணவன் மூலம், அரசர்களின் ஆண் வாரிசுக்குப் போட்டி உருவாகலாம் என்பதே எண்ணம். இதனால் ஜனானாவில் இருக்கும் இளவரசிகள் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்குள்ளே அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் தனி அரசைச் செலுத்துகின்றன. ஆளாளுக்குக் கையாளாக நபும்சகர்கள் இருக்கிறார்கள். தங்கள் இளவரசிகளின் கற்பைக் காக்கவே இந்த ஏற்பாடு. ஆனால் இரவுகளில் நிகழும் ரகசியச் சந்திப்புகளில் யாரும் யாருக்கும் எந்தவித உத்தரவாத்தையும் அளிக்கமுடிவதில்லை. ஜஹானராவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஔரங்கசீப்பால் வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் ஷாஜஹானுக்குத் துணையாக, அவரது மிக அன்பான மகள் ஜஹானராவும் அங்கேயே தங்கிவிடுகிறாள். அப்போது அவள் பாரசீக மொழியில் எழுதி, யார் கண்ணுக்கும் படாமல் மறைத்துவைக்கப்பட்ட குறிப்புகள் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகின்றன. The Life of Mogul Empress Jahanara Begum, the daugher of Shajahan by Andrea Butenshon என்ற இந்த நூல் 1938ல் வெளியாகிறது. இது இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. (நான் இன்னும் இதைப் படிக்கவில்லை.)

இந்த நூலை மையமாக வைத்தும் பிற நூல்களைப் படித்தும் தனக்கென ஒரு புனைவை உருவாக்கி இருக்கிறார் சுகுமாரன். ஜஹானராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பூடகமான மொழியை மிகக் கச்சிதமாக உருவாக்குகிறார். கனவிலும் அரை நினைவிலும் நடக்கும் நிகழ்வுகளுகாக அவை அட்டகாசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இடைவெளிகளை நிரப்ப கனவுகளையும் அவற்றுக்கான சூஃபிக்களின் விளக்கங்களையும் பயன்படுத்துகிறார் ஜஹானரா. ருசிர்குப்தா மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் இதனை சர்ரியலிஸப் பாணியைப் பயன்படுத்திக் கடக்கிறார்.

ஷாஜஹானுக்கும் அவரது மகளான ஜஹானராவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சிக்கல்களை மிகக் குறைவான வார்த்தைகளில் மட்டும் சொல்லிக் கடக்கிறது பெருவலி. ருசிர் குப்தாவின் நாவலும் இதே பகுதிகளை மிக இறுக்கமாகப் பேசுகிறது. மிகத் தெளிவாக இவற்றுக்கு நிரூபணம் இல்லை என்கிறார் ருசிர் குப்தா. ஆனால் சுகுமாரன் பூடமாகச் சொல்லும் ஜஹானாராவின் காதலை மிக வெளிப்படையாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஜஹானாராவுக்கும் அவர் சந்திக்கும் மருத்துவர் கேப்ரியல் (இது உண்மையான பெயரல்ல) என்பவருக்கும் இடையே உறவு இருந்ததாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்றும், ராஜபுத்திர அரசர் சத்ரசால்-க்கும் இடையேதான் உறவு இருந்திருக்கும் என்று எடுத்துக்கொண்டு செல்கிறார் சுகுமாரன். முதலில் ராக்கி அணியத்தக்க உறவு என்று ஜஹானாரா சொன்னாலும் பிற்பாடு சத்ரசால் மீதான தனது காதலைப் பதிவு செய்திருக்கிறாள் என்ற உண்மையிலிருந்து இதனை நோக்கிப் போகிறார் சுகுமாரன்.

ஔரங்கசீப்பின் இளமைப் பருவத்தையும் மற்ற விவரங்களையும் மிக விரிவாகப் பதிவு செய்கிறது ருசிர் குப்தாவின் நாவல். சுகுமாரனின் நாவல் இவற்றை மிகச் சுருக்கமாக, தேவையான அளவுக்கு மட்டுமே சொல்கிறது. தாரா ஷூக்கோவின் ஹிந்து மதத்தின் மீதான ஆதரவும், ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடுவதும் கூட மிகச் சில குறிப்புகளாக மட்டுமே பெருவலி நாவலில் வெளிப்படுகின்றன. நாவலின் முதல்பாகம் பானிபட் எனப்படும் நபும்சகனின் பார்வையில் விரிவதாலும், இரண்டாம் பாகம் ஜஹானராவின் பார்வையில் விரிவதாலும் இப்படிச் சொல்லவேண்டி வந்திருக்கலாம்.

சுகுமாரனின் நாவல் மிகச் செறிவானது. சுகுமாரனின் தமிழ் நடை நம்மை உள்ளிழுத்துக் கொள்வது. மிக நல்ல முக்கியமான நாவல். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நாவல்.

ருசிர் குப்தாவின் நாவல் எளிமையான ஆங்கிலத்தில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒன்று. அதனைத் தமிழில் கொண்டு வரவேண்டியது அவசியம். ஆனால் எவ்வளவு விற்கும் என்பது தெரியாது. J

இந்த இரண்டு நாவல்களிலும் நாம் தவறவிடக்கூடாதது, பிற்சேர்க்கைப் பகுதியை. பெருவலி நாவலில் சுகுமாரனின் குறிப்பு உள்ளது. இது நாவல் குறித்த பல சந்தேகங்களை நீக்கும். மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் ருசிர் குப்தாவின் பேட்டி உள்ளது. மிக முக்கியமான பேட்டி.

சுகுமாரனின் தன் குறிப்பில், இந்நாவலை எழுதுவதற்குக் காரணம், வரலாற்றைப் பதிவு செய்வது மட்டுமல்ல, அதன் இக்காலத்து அரசியலைத் தொடர்புப்படுத்திப் பார்க்கத்தான் என்று சொல்கிறார். உண்மையில் மீண்டும் மீண்டும் இந்த அரசியல் நிகழ்வுகள் அதேபோன்ற அரசியல் நிகழ்வுகளாகவும் அல்லது வேறு வகையிலான நிகழ்வுகளாகவும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்னும் இதே கதைகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தி இன்றைய நிலையில் பொருத்தி மிகச் சிறப்பான திரைப்படங்களை எடுத்துவிடமுடியும். என்றைக்கும் செல்லுபடியாகும் கதைகளாகவே அவை இருக்கின்றன என்பது உண்மையானதுதான்.

பெருவலி நாவலைத் தவறவிட்டுவிடாதீர்கள். நிச்சயம் வாசியுங்கள்.

Share