பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது வீட்டில் பொதுப் புத்தகங்கள் படிக்க அனுமதியில்லை. சிறுவர்களுக்கான நாவல்கள், சிறுவர் மலர், அம்புலிமாமா, கோகுலம், ரத்னபாலா, பாலமித்ரா, பூந்தளிர் படிக்கலாம். அதற்கு மேல் சுஜாதாவோ ஜெயகாந்தனோ படிக்க அனுமதி தரமாட்டார்கள்.


மதுரையில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, 12க்கு திருநெல்வேலி வந்தபோது மெல்லப் படிக்க ஆரம்பித்தேன். ஏனோ யாரும் அதிகம் கண்டிக்கவில்லை. ஜெயகுமார் ஶ்ரீனிவாசன் அப்போது எங்கள் வீட்டில் சில மாதங்கள் தங்கி இருந்தார். அப்போது பாலகுமாரனை நிறையப் படிக்க ஆரம்பித்தேன். வாராவாரம் நாவல் டைம் போன்றவற்றில் தொடர்ந்து எழுதினார். வியாழக் கிழமை ஆனால் பாலகுமாரன் என்றானது. ஒரு மணி நேரத்தில் படித்துவிடலாம். அன்று முழுக்க அந்த நாவலின் யோசனையாகவே இருக்கும்.
+2 தேர்வு வரவும் மீண்டும் பள்ளிப் புத்தகங்கள். அந்த விடுமுறையில் நிறையப் புத்தகங்கள். 1996 வாக்கில் பிரகாஷ் ராஜகோபால் விஷ்ணுபுரம் தந்தார். அவரால் வாசிக்க முடியவில்லை என்று அப்போது சொன்ன நினைவு. நான் முழுக்க பைத்தியம் பிடித்தது போல வாசித்து முடித்தேன்.
கல்லூரியில் முழுக்க ஒரே பாலகுமாரன் புராணம்தான். கல்லூரியில் இருந்த நூலகத்தின் உதவியாளர்களில் ஒருவர், ‘பாலகுமாரனுக்கு ரெண்டு பொண்டாட்டி, அது தெரியுமா ஒனக்கு’ என்றார். அவராவது வெளிப்படையாகச் செய்கிறார், எத்தனையோ பேர் எத்தனையோ வைத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்.
1996ல் வேலைக்கும் சேர்ந்திருந்தேன். டேக் கம்பெனியின் TERC நூலகத்தில் ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், தி.ஜா புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. அத்தனையையும் படித்து முடித்தேன். பின்னர் கி.ரா. அங்கே இருக்கும் தொழிற்சங்க நண்பர்களிடம், நிறைய இலக்கியப் புத்தகங்களை எழுதித் தந்து, வாங்கி வைக்கச் சொன்னேன்.
தொடர்ந்து ஜெயமோகனின் ரப்பர் நாவலை விலைக்கு வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். விலைக்கு நாவலை வாங்கி வாசிப்பதில் ஒரு கிக் இருந்தது. தோரணையாக உணர்ந்தேன். வீ ஆர் எலைட் மொமென்ட். புத்தகங்கள் வாங்கும் கிறுக்கு பிடித்துக்கொண்டது. பாலகுமாரன் அந்நியப்படவும் தொடங்கினார்.
+2 வகுப்புத் தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்களுக்காக இரண்டு பை நிறையப் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்திருந்தேன். இப்போது வீட்டில் வைக்க இடமில்லை என்னும் அளவுக்குப் புத்தகங்கள் சேர ஆரம்பித்தன.
சம்பளம் கைக்குக் கிடைத்ததும் புத்தகம் வாங்குவேன். அப்போதுதான் பின் தொடரும் நிழலின் குரல் என்றொரு புத்தகம் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். சிற்றிதழ்கள் வாசிக்கும் பழக்கத்தில் இவையெல்லாம் எனக்குத் தெரிய வந்தன!
அந்தப் புத்தகத்தை வாங்க திருநெல்வேலியில் அத்தனை அலைந்தேன். அப்போதெல்லாம் இவை போன்ற இலக்கியப் புத்தகங்கள் கொஞ்சமாவது கிடைத்த இடம், அருள்நந்தி சிவம் புத்தகக் கடை. ஜங்ஷனில் கண்ணம்மா தெருவில் இருந்தது. அடிக்கடி அங்கே போவேன். பின் தொடரும் நிழலின் குரல் என்றதும், என்னை வினோதமாகப் பார்த்தார்கள். எழுதி வெச்சிட்டுப் போங்க என்றார்கள். ஜெயமோகன் பெயரை அவர்கள் கேள்விப்பட்டிருக்கவே இல்லை. சுஜாதா புக் தம்பிக்கு காமிம்மா என்றார் கடைக்காரர். “நல்லா எழுதுவாரு தம்பி!” அடிக்கடி அந்தக் கடையில் பி தொ நி கு என்று ஒரு நோட்டில் எழுதி வைப்பேன். அந்த நோட்டை என்னைத் தவிர யாரும் வாசிக்கவில்லை என நினைக்கிறேன்.
மதிதா பள்ளிக்கு அருகில் போடப்பட்டிருந்த நிரந்தரப் புத்தகக் கண்காட்சி என்ற பெயரிலான என் சி பி எச் கடையில் கேட்டேன். ஜெயமோகன் அப்படி ஒரு புத்தகம் எழுதியதே இல்லை என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்தார்கள். வேறு புத்தகங்கள் காண்பித்தார்கள். சாகித்ய அகாடெமியின் புத்தகங்கள் விலை குறைவாக இருந்தன. சந்தோஷமாக வாங்க ஆரம்பித்தேன். என்னை அசர வைத்த புத்தகம், இரண்டாம் இடம்.
இப்படியே ஆறு மாதம் அலைந்தேன். ஒவ்வொரு முறையும் வேறு எதாவது புத்தகம்தான் வாங்குவேன். பின் தொடரும் நிழலின் குரல் மட்டும் கிடைக்கவே இல்லை. அந்தச் சமயத்தில் மதிதா பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடந்தது. நான் பார்த்த முதல் புத்தகக் கண்காட்சி அதுதான். மலைப்பாக இருந்தது. இத்தனைக்கும் அது ஒரு சிறிய அளவிலான கண்காட்சி மட்டுமே. ஒவ்வொரு கடையில் கேடலாக் வாங்கிக் குறித்து வைத்துக்கொண்டு, நான்கைந்து முறை போய் புத்தகங்கள் வாங்கினேன். அங்கேயும் பி தொ நி கு கிடைக்கவில்லை.
சகுந்தலா இண்டர்நேஷனல் பக்கத்தில் உள்ள ஒரு தெருவில் ஒரு புத்தகக் கடை இருக்கிறது என்றார்கள். அங்கே போனால் அது பள்ளிகளுக்கான புத்தகங்கள் சப்ளை செய்யும் கடை. போனதற்கு, பெயருக்காக ஒரு புத்தகம் வாங்கினேன்.
டவுனில் சியாமளா புக் செண்டர், ஈகிள், பாளையம்கோட்டையில் ஈகிள், ஜங்ஷனில் இன்னொரு புத்தகக் கடை என்று நான் போகாத இடமே இல்லை. யாருக்கும் பி தொ நி கு என்றால் என்னவென்றே தெரியவில்லை.
மீண்டும் என் சி பி எச் நிரந்தரப் புத்தகக் கண்காட்சிக் கடை. அங்கே இருந்தவர் என் மேல் வருத்தப்பட்டு, அருகில் இருந்த எஸ் டி டி பூத்தில் இருந்து யாருக்கோ பேசினார். அடுத்த மாதம் எப்படியோ பி தொ நி கு பிரதி கையில் கிடைத்தது.
டவுணில் மங்கையர்க்கரசி பள்ளிக்கு அருகில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு எதிரே ஒரு ஜெராக்ஸ் கடை போன்ற ஓர் இடத்தில் ஒருவர் சில புத்தகங்களையும் விற்றார். அங்கே பழைய, விற்காத இலக்கியப் புத்தகங்கள் தூசி அப்பிக் கிடந்தன. இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தேர்ந்தெடுத்த ஆதவன் சிறுகதைகளா அல்லது பொதுவான சிறுகதைகளா என்று நினைவில்லை, அங்கேதான் வாங்கினேன்.
திருநெல்வேலியில் நல்ல இலக்கியப் புத்தகக் கடைகள் என்றுமே இருந்ததில்லை. எப்படித்தான் இத்தனை பேர் அத்தனை இலக்கியம் படித்து அத்தனை அத்தனை இலக்கியம் எழுதினார்களோ! ஒருவேளை நிறையப் படிக்காமல் நிறைய எழுதினார்களோ என்னவோ. ஒருவேளை, நிறைய நன்றாக எழுதவேண்டும் என்றால் நிறையப் படிக்கக் கூடாதோ என்னவோ! திருநெல்வேலிக்கே இந்த நிலை என்றால், கோவில்பட்டி சாத்தூர் எல்லாம் நினைத்துப் பாருங்கள்.
தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு எதிரே ஒரு பெட்டிக் கடையில்தான் சிற்றிதழ்கள் வாங்குவேன். என்ன என்ன பெயரில் எல்லாமோ புத்தகங்கள் இருக்கும். அனைத்தையும் வாங்குவேன். பாதிப் புத்தகங்களில் அவர்களது திருகு மொழியே புரியாது. ஆனாலும் அதில் ஒரு போதை இருந்தது. நாம் அதையெல்லாம் படித்தால் ஒரு பெருமை என்ற ஜம்பம் வந்தது. ஆனால் அந்தக் கடையிலும் இலக்கியப் புத்தகங்கள் கிடைக்காது.
சென்னையில் இருக்கும் நண்பர்களிடம் சொன்னால் அவர்களுக்கு முடிந்தபோது வாங்கி அனுப்புவார்கள். இல்லையென்றால், நாம் எதிர்பார்க்கும் அந்தப் புத்தகங்கள் கைக்குக் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.
தூத்துக்குடியில் வேலை பார்த்த வரை, இரண்டே வேலைகள்தான். ஒன்று சினிமா பார்ப்பது, இன்னொன்று புத்தகம் படிப்பது. புத்தகங்கள் வீட்டில் சேர ஆரம்பித்தன. வைக்க இடமே இல்லை என்றானது. புத்தகங்கள் வைக்க ஓர் அலமாரி செய்ய ஆசைப்பட்டு, ஓர் ஆசாரியை அழைத்துச் செய்தேன். மர அலமாரிக்குக் கண்ணாடிக் கதவுகள் போட்டு அட்டகாசமாகச் செய்து கொடுத்தார்.
வர்த்தமானன் பதிப்பகம் மலிவு விலையில் புத்தகங்கள் விற்க ஆரம்பித்தார்கள். கல்கியின் அத்தனை நாவல்களையும், கம்ப ராமாயணம் முழுத் தொகுதியும் வாங்கி அந்த அலமாரியில் அடுக்கி வைத்தேன். பார்க்க வண்ணமயமாக அழகாக இருந்தது. அலை ஓசை, பொன்னியின் செல்வன் எல்லாம் படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டு நாள்களில் படித்து முடித்தேன்.
நெல்லையில் நான் போய்ப் பார்க்காத புத்தகக் கடைகள் இருக்க வாய்ப்பில்லை. புத்தகத்துக்கென்று பிரத்யேகமான கடைகள் பெரிய லாபத்தைத் தருவதில்லை. எனவே வேறு பல பொருள்களையும் சேர்த்து வைத்து விற்கிறார்கள். அவை விற்க ஆரம்பிப்பதால், அந்தக் கடை பல்பொருள் அங்காடி ஆகி விடும். புத்தகங்களை மீண்டும் அங்கே தேட வேண்டி இருக்கும். இதுதான் எங்கேயும் எப்போதும் நடக்கும்.
துபாயிலும் தமிழ்ப் புத்தகங்களைத் தேடி வெட்டியாக அலைந்திருக்கிறேன். இலக்கிய இதழ்கள் எப்போதாவது கையில் மாட்டும். மஞ்சரியின் பழைய இதழை அங்கே வாங்கி வாசித்திருக்கிறேன். பொக்கிஷமாக அங்கே கிடைத்தது இனிய உதயம் நாவலிதழ். அதில் மொழிபெயர்ப்பு நாவல்கள் அல்லது குறுநாவல்கள் வந்துகொண்டே இருக்கும். மலையாளக் குறுநாவல்களை மொழிபெயர்த்து சுரா என்று ஒருவர் எழுதுவார். முகுந்தனின் குறுநாவல்களை அவர் மொழிபெயர்த்திருந்தார் என நினைவு. முகுந்தன் எழுதிய, கம்யூனிஸம் தொடர்பான ஒரு குறுநாவலை வாசித்த நினைவு இன்னும் இருக்கிறது. இந்த இனிய உதயம் இதழை வெளியிட்டது நக்கீரன் போல. பெரிய ஆச்சரியம்தான்.

திருமணமான புதிதில் 2004ல் சென்னைக்கு வந்தபோது, புதிய புத்தக உலகம் கடையை திநகரில் பார்த்து, அதிசயத்து உறைந்து நின்றேன். அதுவரை நான் அப்படி ஒரு தமிழ்ப் புத்தகக் கடையைப் பார்த்ததில்லை. முழுக்க ஏஸி. உள்ளே நுழைந்ததும் மோர். புதிய புத்தகங்களின் சுவரொட்டிகள். அசந்து போய்விட்டேன். ஆனால் வாடிக்கையாளர் சேவை மோசமாக இருந்தது. பிரச்சினையில்லை. புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. நிறைய வாங்கினேன். இன்றளவும் கடை அனுபவமாக நல்ல அனுபவத்தைத் தந்தது இந்தக் கடை மட்டுமே.
ஆன்லைன் வரவும் கடைகள் பக்கமே போனதில்லை என்றாகிவிட்டது!