பிரபல கொலை வழக்குகள் – பாகம் 2

பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பாகம் வாசித்தேன். சிறிய நூல். இரண்டு மணி நேரத்தில் வாசித்துவிடலாம். இதற்கேற்ற இலகுவான நடை. எடுத்தால் கீழே வைக்க முடியாது என்னும் அளவுக்கான வேகம். அந்தக் கால வழக்குகள் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. சட்டம் கடுமையான பின்பு, கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பம் பயன்படத் தொடங்கிய பின்பு, மிகப் பெரிய அளவில் குற்றங்கள் குறைந்துள்ளன என்று புரிந்துகொள்ளலாம். கூடவே கல்வியும், ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியும், எதற்கெடுத்தாலும் கொல் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் நம்மைப் பக்குவப்படுத்தி இருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்தில் வழக்குகள் நடைபெற்றாலும், இந்தியர்களுக்கு மட்டுமே தண்டனை என்கிற நிலை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய உயர்நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டுவிட்டால் லண்டனில் பிரிவி கவுன்ஸிலில் மேல் முறையீடுக்குப் போகவேண்டுமாம். பணம் இருந்தவர்கள் போயிருக்கிறார்கள். அங்கே தண்டனையைக் குறைத்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்.

நரசம்மா கொலை வழக்கில், எப்படிச் செய்திருந்தால் கிராமணி தப்பித்திருக்கலாம் என்று நூலாசிரியர் எஸ்பி சொக்கலிங்கம் சொல்லும் இறுதி வரியை ரசித்தேன்! சூலூர் சுப்பாராவ் வழக்கில் திருப்பத்துக்கு மேல் திருப்பம். வழக்கைச் சொன்னதோடு அந்தக் காலத்தில் இந்த வழக்குகளைப் பற்றி எப்படிப் பேசிக்கொண்டார்கள் என்பதையும் தந்திருப்பது சிறப்பு. ஆட்டோ சங்கர் வழக்கு, நாவரசு கொலை வழக்கு நமக்கு நன்கு பரிச்சயமானவையே என்றாலும், நாவரசு வழக்கை படித்தபோது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி என்றால், வழக்கு நடந்தபோது இவ்வழக்கு தமிழ்நாட்டை உலுக்கியதில் ஆச்சரியமில்லை.

பில்லா ரங்கா வழக்கு – படிக்கும்போதே ஒரு பதற்றத்தை வரவழைத்தது. இந்தியா முழுக்க இவ்வழக்கு பேசப்பட்டதில் விந்தையில்லை.

கொலை வழக்கில் கொல்லப்பட்ட உடல் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று நான் யோசித்ததே இல்லை. இப்புத்தகத்தில் அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்.

இந்நூல் முழுக்கவே பல கொலைகளும் பாலியல் அத்துமீறல்களும் விவரிக்கப்பட்டுள்ளன. படிக்கும்போது படபடப்பு இல்லாமல் படிக்க முடியாது. அதற்கேற்ற நடை, அதற்கேற்ற வேகம், தேவையான தகவல்களை மட்டும் தந்தால் போதும் என்கிற தெளிவு இப்புத்தகம் முழுக்க சீராகக் கையாளப்பட்டுள்ளது.

எஸ்பி சொக்கலிங்கத்திடம் சில வருடங்கள் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாவை உலுக்கிய பாலியல் வழக்குகள் என்றே ஒரு புத்தகம் கொண்டு வரலாம் என்றேன். பாலியல் வழக்குகள் என்பதில் சொக்கலிங்கம் அவர்களுக்கு உடன்பாடில்லையோ என்று எனக்குத் தோன்றியது. இப்போதும் இந்தியாவை (தமிழ்நாட்டை) உலுக்கிய பாலியல் வழக்குகள் என்று ஒரு புத்தகம் வருமானால், அது முக்கியமான புத்தகமாகவே இருக்கும்.

பின்னட்டை வாசகம்:

மதுரை நாயக்கரின் வீட்டின் புறக்கடையில் உள்ள வடிகாலில் அடைப்பு. சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடியை அகற்றிவிட்டு உள்ளே பார்த்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் இடது கை விரல்களும் குழந்தையின் தலையும் தெரிந்தது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஈச்ச இலையில் சுற்றிக் கட்டப்பட்ட பார்சல் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஏற்றப்பட்டது. பிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு பெண்ணின் சடலம்.
சென்னை மந்தைவெளியில் பேருந்தின் கடைசி இருக்கையின் அடியில் ஒரு வெள்ளை நிற பாலித்தீன் பை கண்டெடுக்கப்பட்டது. உள்ளே ரத்தக்கறையுடன் தலையில்லாத உடல்.

நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் பத்து படுகொலைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. கொலை நடந்த நொடியில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்ட நொடி வரை நடந்தவை அனைத்தையும்
படு துல்லியமாக, முழு ஆதாரங்களுடன் விறுவிறுப்பான மொழி நடையில் ஒரு திரைப்படம் போல் கண் முன்னே விரியச் செய்கிறார் எஸ்.பி. சொக்கலிங்கம். எழுத்தாளராக மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும் இருப்பதால் சட்டங்கள், நீதி மன்ற விசாரணைகள் தொடர்பான நுட்பமான விவரங்களையும் கவனமாகப் பதிவு செய்கிறார்.

வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பகுதி இது. பத்து த்ரில்லர் படங்களை ஒரே நேரத்தில் பார்க்கத் தயாராகுங்கள்.

Share

Comments Closed