இரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்

நாவல் என்பது ஒரு கதையைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அது அனுபவத்தின் பெரு வெளியாகவும் இருக்கக் கூடும். ஆனால் இப்படி ஒரு நாவல் எழுதுவது அத்தனை சுலபமானதல்ல. நாவலில் சொல்லப்படும் அனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதனின் வாழ்க்கையோடு முடிந்துவிடவும் தேவையில்லை என்று எல்லையைப் பெருக்கிக் கொண்ட வகையில், இரா.முருகன் இந்த நாவலை மிகப் பெரிய வீச்சும் பரப்பும் கொண்டதாக மாற்றி விட்டிருக்கிறார். அதே சமயம் அந்த ஒரு மனிதனையே அவனது முன்தொடர்ச்சியாக எழுதிய வகையில் அசரடித்திருக்கிறார். எந்த அளவுக்கென்றால், யூகிக்கவே முடியாத ஒரு பெரும் அனுபவ அலைக்குள் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு.

வெறும் அனுபவங்களை மட்டுமே ஒரு நாவலாக, அதுவும் கிட்டத்தட்ட ஐநூறு பக்க நாவலாக எப்படிச் சொல்ல முடியும்? பின்னணிகளும், விவரணைகளும் கதையைவிட முக்கியமானதாகவும் விரிவானதாகவும் இருக்குமானால் இது சாத்தியம். இரா. முருகன் மொழிபெயர்த்த ‘பீரங்கிப் பாடல்கள்’ என்ற புத்தக வெளியீட்டில் மாலன் மிக அருமையாகப் பேசினார். மேக்ரோ எலிமெண்ட்டுகளைவிட மைக்ரோ எலிமெண்ட்டுகள் ஒரு புத்தகத்தில் விரிந்திருக்குமானால் அந்தப் புத்தகம் தரும் அனுபவம் பற்றிய குறிப்பு ஒன்றைச் சொன்னார். அதைத் தமிழில் செய்து காட்டி இருக்கிறது இரா.முருகனின் ராமோஜியம்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சென்னையின் மீது குண்டு வீசப்படலாம் என்கிற அச்சம் நிலவும் சூழலில் சென்னை எப்படி இருந்திருக்கும் என்ற களத்துடன் தொடங்குகிறது நாவல். இன்றைய கொரோனா காலக்கட்டத்தில், அன்றைய போர்ச் சூழலின்போதான சென்னையை எளிதாக உணர முடிகிறது. கொரோனா என்பது கூட நம் மீது இயற்கை தொடுத்திருக்கும் ஒரு போர்தான். அன்று பெட்ரோல் வாங்கக் கூட ரேஷன். ராமோஜி ராவுக்கும் அவன் மனைவி ரத்னாவுக்குமான வாழ்க்கையை விவரிக்கும் நாவல், தெளக்ஸ் புவனாவின் வருகையுடன் அடுத்த கட்டத்துக்குப் போகிறது. அதன் பிறகான, இந்தக் கால ராமோஜிக்கும் முந்தைய ராமோஜி, ரத்னா, புவனாக்களுடன் நாம் யூகிக்கவே முடியாத தளத்துக்குப் போய்விடுகிறது. இறுதி அத்தியாயம் ஒரு சிறுகதைக்கான கச்சிதமான முடிவு. ஒரு நாவலுக்கு எப்படி சிறுகதைக்கான முடிவு வலுவானதாக இருக்க முடியும் என்று யோசித்திருக்கிறேன். லக்ஷ்மி சரவணகுமாரின் ‘கானகன்’ இப்படி ஒரு அனுபவத்தைத் தந்தது. இப்போது இந்த நாவல். நெகிழ வைக்கும் இறுதி அத்தியாயம்.

நாவல் முழுக்க விரவிக் கிடக்கும் தகவல் களஞ்சியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமேனால், இன்னொரு நாவல்தான் எழுதவேண்டி இருக்கும். அத்தனை தகவல்கள். எதுவுமே உறுத்தாத அளவுக்கு, வேண்டுமென்றே திணிக்கப்படாத மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பஸ்தனின் இருத்தலியல் பிரச்சினைதான் நாவல் என்பதால், இது மிக எளிதாகவே சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தைக் கொண்டு வருவது என்பது சாமானியமான விஷயமா என்ன? அந்தக் காலத்தில் நாம் வாழ்வது போல என்போமே, கிட்டத்தட்ட இன்று க்ளிஷேவாகிவிட்டாலும், அதை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இரா.முருகன். உண்மையில் அசரடிக்கிறார் என்றே சொல்லவேண்டும். நான் சொல்வது நாவலை வாசித்தால்தான் உங்களுக்குப் புரியும். அதுவும் முழுக்க வாசித்தால்தான் புரியும்.

நாவலின் அடிநாதமாக வருபவை நான்கு விஷயங்கள். முதலில், உணவு. நாவல் முழுக்க குறிப்பாகச் சொல்லப்படும் உணவு வகைகளைப் பட்டியல் இட்டால், அதுவே ஐம்பது பக்கங்களுக்கு வருமோ என்கிற சந்தேகம் எனக்கு வந்தது! ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தினமும் உண்பவற்றை எல்லாம் எழுதி வைத்துக் கொண்டே வந்து, அவனது இறுதிக் காலத்தில் அதைப் படித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நான் யோசித்திருக்கிறேன். எந்த ஒரு மனிதனுக்கும் உணவின் மேல் இருக்கும் முக்கியத்துவமும் ஈர்ப்பும் அலாதியானது. நாம் அதை உணராவிட்டாலும் கூட, அது என்றுமே நம்முடனே இருந்துகொண்டே இருப்பது.

இரண்டாவது விஷயம், நாவல் முழுக்க வரும் சங்கீதம் பற்றிய குறிப்புகள். இரா.முருகன் கர்நாடக சங்கீதத்தில் விருப்பம் உள்ளவர். எனவே இவற்றையெல்லாம் மிக அழகாக எழுதிச் செல்கிறார். அதுவும் 1940களின் உலகத்தில் இதைப் பொருத்துவதையெல்லாம் அநாயசமாகச் செய்கிறார்.

மூன்றாவது, சினிமா. 1930களில் என்ன சினிமா வந்திருக்கும்? யார் நடிகைகள்? இந்தப் புத்தகத்தைப் படித்தால் இதிலிருந்தே நாம் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டுவிட முடியும். நடிகர்களையும் படங்களையும் போகிற போக்கில் சொல்லிவிட்டால் என்ன இருக்கிறது? அவர்களையும் நாவலின் கதாபாத்திரம் ஆக்கியதில்தான் சுவாரஸ்யம். காளிங்க ரத்னமும் தெலக்ஸ் புவனாவும்  மறக்க முடியாத கதாபாத்திரமாகிறார்கள். சபாபதி என்ற படம் வந்தது எனக்குத் தெரியும். அதில் ராமசந்திரன் நடித்திருந்தார். இந்த நாவலில் தசாபதி என்ற ஒரு திரைப்படம் பற்றிச் சொல்லப்படுகிறது. தெலக்ஸ் புவனா என்றொரு நடிகை. தெலக்ஸ் என்ற சோப்பு விளம்பரத்தில் நடித்துப் புகழ்பெற்று, அதன் பின்னர் அவர் நடிக்கும் படம் பரபரப்பாக ஓடி, அவர் பெயர் தெலக்ஸ் புவனா என்றாகிறது. யார் இந்த தெலக்ஸ் புவனா? இது என்ன படம் தசாபதி? யாராவது இப்படி எதுவும் இல்லை என்று என்னிடம் இப்போது சொன்னால், நான் நம்பமாட்டேன். அந்த அளவுக்கு இந்த நாவலில் இவை விவரிக்கப்படுகின்றன. இந்தக் கற்பனையெல்லாம் எப்படித் தோன்றின என்று இரா.முருகன் பேசினால் அது இன்னொரு சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும் என்பது நிச்சயம்.

நான்காவதாக, நாவல் முழுக்க வரும் நகைச்சுவையான வசனங்கள். நகைச்சுவை என்றால், எடுத்துக் கூட்டிச் சொல்லும் நகைச்சுவை அல்ல. போகிற போக்கில் தெறித்து விழும் சொல்லாடல்கள். இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நான் சத்தம் போட்டுச் சிரித்திருப்பேன் என நினைக்கிறேன். இன்னும் கூடுதலாகக் கூட இருக்கலாம். ஒரு தீவிரமான நாவலில் சமீபத்தில் இத்தனை சிரித்த மாதிரி எனக்கு நினைவில்லை.

ராமோஜி ராவின் மூதாதையர்களின் ராமோஜிக்களையும் நாவலில் கொண்டு வந்து பிணைத்தது மிகச் சிறந்த உத்தி. வாழ்க்கையில் எல்லாமே திரும்ப திரும்ப நடக்கிறது, எல்லாமே எழுதி வைக்கப்பட்டது என்கிற கற்பனை ஒரு காவியம் என்றே நான் நினைப்பதுண்டு. ராமோஜிக்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அந்தக் காவியத்தைக் கொஞ்சம் நெருங்குவதைப் போலத் தோன்றியது. அதிலும் தாசியான புவனாவின் கடித அத்தியாயம் இந்நாவலின் உச்சம் என்றே சொல்லவெண்டும்.

நாவல் திடும்திடுமென மாறிக்கொண்டே இருக்கிறது. இங்கிலாந்து மகாராணிக்கு இந்தியர் எழுதும் கடிதம், திடீரென தெலக்ஸ் புவனா, திடீரென அனந்த ரங்கம் பிள்ளை ஒரு கதாபாத்திரமாக வருவது, கூடவே அருணாசலக் கவிராயர் வருவது, திடீரென டெல்லி பயணம் இப்படி. இந்த மாற்றம் தரும் ஒரு அலுப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த அத்தியாயங்களுக்குள் விவரிக்கப்படும் வாழ்க்கை, இந்த அலுப்பை முற்றிலும் போக்கச் செய்துவிடுகிறது. நீண்ட ரயில் பயணத்தின் விவரிப்பில் ஒரு மொட்டைப்பாட்டி வந்து அந்த அலுப்பைப் போக்கி விடுகிறாள். இங்கிலாந்துக்கு எழுதும் கடிதத்தில் சொல்லப்படும் கிண்டலும் கேலியுமான தாக்குதல்கள் சிரிக்க வைக்கின்றன. கப்பலோடியாக வரும் ராமோஜி ராவின் தாசிக் காதல் அசரடிக்கிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதே சவால். அதை நாவலுக்குள் கட்டி எழுப்புவதெல்லாம் மிகவும் கடினம். இன்னும் சொல்லப் போனால், அரசர் காலத்துக் கற்பனைக் களத்தைக் கூடக் கட்டி எழுப்பி விடலாம். மிக அதிக கடந்த காலம் ஆகிவிடாத, சமீபத்தைய கடந்த காலமான 1940களைக் கண் முன் கொண்டு வருவது மிகப் பெரிய சவால். இந்தப் புத்தகம் அந்த அளவில் தமிழில் ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். அந்தக் கால அரசியல், அந்தக் கால சினிமா, அந்தக் கால ரேடியோ, அந்தக் காலப் பயணம், அந்தக் கால வாழ்க்கை, அந்தக் கால சங்கீதம் என்ற எந்த ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. மறக்கவே முடியாத அனுபவத்தைத் தரும், தவறவிடக் கூடாத நாவல்.

பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை இரா.முருகன் எழுதி இருக்கிறார். அவற்றில் நான்கு நாவல்களை நான் படித்திருக்கிறேன். நான் படித்தவற்றில் இந்த நாவல் ஒரு மாஸ்டர் பீஸ். மிளகு என்றொரு நாவலை எழுதப் போவதாக இரா.முருகன் சொல்லி இருந்தார். இந்த நாவலைப் படித்ததும் தோன்றியது, மிளகு நாவல் வந்தால் அது இன்னொரு மைல்கல்லாக இருக்கும் என்பதுதான். இரா.முருகனுக்கு வாழ்த்துகள்.

குறிப்பு: இந்தப் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது. அச்சுப் புத்தகம் விரைவில் வெளியாகும். கிண்டிலில் வாங்கிப் படிக்க: https://www.amazon.in/dp/B08G16WC44

Share

Comments Closed