Archive for திரை

Attam (M)

ஆட்டம் (M) – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இது இருக்கக் கூடும். சிறந்த திரைக்கதை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நுணுக்கமான திரைக்கதை. அபாரமான அனுபவம்.

முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியான வசனங்கள். ஆனால் ஆழமான வசனங்கள். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஆழமாக்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்களின் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது.

மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும், ஒரு பெண்ணுலகைச் சமைப்பதில் பெரும்பாலான ஆண்கள் எத்தனை சுயநலவாதிகள், எப்படி ஆண்கள் எப்போதும் ஆண்கள் என்பதையும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வசனத்திலும் இத்தனை இயல்பாக இத்தனை பலமாகச் சொல்லும் வேறொரு படம் இல்லை என்றே சொல்லலாம்.

பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைச் சுற்றி ஆண்கள் என்ன என்ன கதைகளை எல்லாம் புனையக் கூடும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படம். பொதுவாக இப்படிப்பட்ட படங்களில் வரும் பிரசாரத் தொனி துளி கூட இல்லை என்பதே இப்படத்தின் ஆதார பலம்.

இப்படத்தில் ஒரு வசனம் வரும். ‘இந்த நாடகத்தில் நடித்த அத்தனை ஆண் நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் நாடகத்தின் கதாநாயகி’ என்று. படத்துக்கும் அது பொருந்தும். அத்தனை ஆண் நடிகர்களும் அட்டகாசமாக நடிக்க, அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் கதாநாயகி. இந்த வருட சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த நடிகை, சிறந்த திரைகதை எனப் பல விருதுகளையும் வெல்லப் போகும் படமாக இது அமைந்தால் வியப்பதிற்கில்லை.

முதல் அரை மணி நேரத்தைப் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அந்த அரை மணி நேரத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் பின்னால் திரைக்கதையில் பலமாகப் பின்னப்பட்டிருக்கிறது. டோண்ட் மிஸ் இட் வகையறா படம்.

மலையாளிகள் எங்கோ உச்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

2022ல் வெளியான Three of us -ஹிந்தித் திரைப்படத்தின் கதாநாயகி, 2023ல் வெளியான டோபி – கன்னடத் திரைப்படத்தின் கதாநாயகி சைத்ரா, 2024ல் ஸரின் ஷிஹாப் என வரிசைகட்டி கதாநாயகிகள் கலக்குகிறார்கள். இந்தப் படம் 2023லேயே பதியப்பட்டிருந்தால், சிறந்த நடிகை விருதைப் பெறுவதில் சைத்ராவுக்கும் ஸரினுக்கும் பெரும் போட்டி இருக்கும்.

மலையாளத்தின் முக்கியமான திரைப்படமான ‘யவனிகா’ ஏனோ நினைவுக்கு வந்தது. ஆனால் இந்தப் படம் இன்னும் உயரப் போய்விட்டது.

அமேஸான் ப்ரைமில் கிடைக்கிறது.

Share

ஃபேலிமி (M)

Falimy (M) – பார்க்கலாம். சில இடங்களில் மனம் விட்டுச் சிரிக்கலாம். அந்த இடங்களுக்காகப்‌ பல மொக்கைக் காட்சிகளைச் சகித்துக் கொள்ள வேண்டும். காசிக்குச் செல்லும் கதைக்குள் கல்யாணத்தை நுழைத்து மீண்டும் காசிக்கு டிராக் மாற்றுகிறார்கள். காசியில் அப்பாவும் பையனும் பேசிக் கொள்ளும் காட்சிகளில் வசனம் அருமை. இரண்டு பெருசுகள் ஜன்னல்‌வழியாகப் பேசும் ஃப்ரேம் மனதைப் பிசைகிறது. மனதளவில் பிரிந்து கிடக்கும் குடும்பத்தை காசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வைக்கிறது. காசிக்குச் சாலையில் செல்லும் காட்சிகளிலும் இறுதிக் காட்சியிலும் குபீர் சிரிப்பு உத்தரவாதம். அதற்காக முழுப் படத்தையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்றால், கஷ்டம்தான். அதுவும் தமிழ் டப்பிங் அல்லது சப் டைட்டிலை மட்டுமே நம்பிப் பார்க்கப் போகிறவர்கள் திண்டாட்டம்‌தான். மலையாளம் தெரிந்தவர்கள் முயன்று பார்க்கலாம்.

Share

மே அடல் ஹூம்

மே அடல் ஹூம் (H) – அடல் பிஹாரி வாஜ்பாயியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். முதல் காட்சியில் வாஜ்பாயி போன்ற உடல்மொழியில் பேசும் பங்கஜ் த்ரிபாதி சட்டென்று மனதில் ஒட்டிக்கொள்கிறார். ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தங்கள் தோள்களில் சுமப்பவர்கள் இருவர், ஒரு வாஜ்பாயி, இன்னொருவர் பங்கஜ் த்ரிபாதி.

பயோ பிக் படங்கள் எடுப்பதில் சிக்கல்கள் அதிகம். அதிலும் வாஜ்பாயி போன்ற நீண்ட நெடும் அரசியல் வாழ்க்கை கொண்டவர்களின் வரலாற்றை எடுப்பது எளிதல்ல. அட்டன்பரோவின் காந்தி அந்த வகையில் ஒரு மைல்கல். காந்தியின் நீண்ட நெடும் போராட்ட வாழ்க்கையை மூன்று மணி நேரத்துக்குள் எடுப்பது, அதிலும் நேர்த்தியாக எடுப்பது, அதிலும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் எடுப்பது என்று எல்லா வகையில் அந்தப் படம் ஒரு சாதனை. அப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேண்டும் என்றால் அதற்கான உழைப்பும் பணமும் தேவை. மே அடல் ஹூம் படம் அந்த அளவுக்கு வரவில்லை. ஆனால் படம் பார்த்து முடிந்ததும் படத்தைக் குறித்தே மீண்டும் மீண்டும் சிந்தித்துக்கொண்டிருக்கும் ஓர் உணர்வுநிலையை ஏற்படுத்திவிடுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மே அடல் ஹூம் படத்தைப் பார்த்து வாஜ்பாயியையோ அவரது கால அரசியலையோ இந்திய அரசியலையோ புரிந்துகொள்ள நினைத்தால் பைத்தியம்தான் பிடிக்கும். இது அரசியலைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கான படமல்ல. இந்த அரசியல் ஏற்கெனவே பற்றித் தெரிந்தவர்களுக்கான படம். ஒரு வகையில் ஆவணப் படம் போன்றது. அந்த எண்ணத்துடன் இப்படத்தை அணுகுவது நல்லது.

வாஜ்பாயியின் தனிப்பட்ட ஆரம்ப கால வாழ்க்கையிலும், அந்தப் பெண்ணைப் பின்னர் வாஜ்பாயி பார்க்கும் காட்சிகளையும் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கிறார்கள். இது பெரிய மைனஸ் பாய்ண்ட். இரண்டரை மணி நேர பயோ-பிக்கில் முதல் அரை மணி நேரம் எத்தனை முக்கியமானது? இருவர் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. தமிழின் முக்கியமான முயற்சி. ஆனால் இந்தப் படத்தில் முதல் அரை மணி நேரக் காட்சி சலிப்பை உண்டாக்குகிறது.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஜன சங்கத்தை ஆரம்பிக்கும் காட்சியில் இருந்து படம் வேகமெடுக்கிறது. அதிலும் முக்கியமாக குருஜி கோல்வல்கரிடம் அவர், ‘உங்களிடம் அமைப்பு இருக்கிறது. என்னிடம் கனவு இருக்கிறது’ என்று சொல்லும் காட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்காரர்களுக்கு நிச்சயம் புல்லரிப்பை ஏற்படுத்தும். இப்படிப் பல காட்சிகள் ஆங்காங்கே நன்றாக இருக்கின்றன.

இந்தியாவையே அரசியல் ரீதியாக உலுக்கிய தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் நிமிடங்களில் கடந்து போகின்றன. வேறு வழியில்லை.

அத்வானிக்கும் வாஜ்பாயிக்குமான நட்பு நன்றாக வந்திருக்கிறது. ஆனால் அத்வானியாக நடிக்கும் நடிகரின் தேர்வு இன்னும் மெச்சூர்டாக இருந்திருக்கலாம்.

நேருவை மொத்தமாக இரண்டு நிமிடங்கள்தான் காட்டுகிறார்கள் என்றாலும் சிகரத்தில் வைத்துவிட்டார்கள். அதிலும் நேருவின் புகைப்படம் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தே தீரவேண்டும் என்று வாஜ்பாயி சொல்லும் காட்சி முக்கியமானது.

இந்திரா காந்தியை அவரது எண்ணம் போலவே காட்டுகிறார்கள். எமர்ஜென்ஸி முடிந்து, ஜனதா வெற்றி பெற்று, சரண்சிங் உள்ளடி வேலை செய்து, ஜனதா கட்சி ஆட்சியை இழந்த பின்பு நடக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உதயமாகும் காட்சியும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாஜ்பாயி மனம் இறுகிக் கிடக்க, அவரே எதிர்பார்க்காமல் அவரை பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கும் காட்சியும் முக்கியமான புல்லரிப்புக் காட்சிகள்.

பொக்ரான் அணுஆயுதச் சோதனை அத்வானிக்கே தெரியாமல் நடந்தது என்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவறு. எல்.கே.அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் தெரியும். படத்தில் அந்தக் காட்சியின் சுவாரஸ்யத்துக்காக அப்படி வைத்திருக்கிறார்கள் போல. ஆனால் அத்வானி இந்தியாவின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். உள்துறை அமைச்சர். அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கவே முடியாது.

கார்கில் போர் வெற்றியுடன் திரைப்படம் முடிகிறது. அடுத்த தேர்தலில் வாஜ்பாயி பிரதமராகும் தருணத்துடன் முடித்திருக்கலாம்.

மிஸா கைதில் தமிழகத்தைச் சேர்ந்த யாரையும் காண்பிக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாக ஜெயலலிதாவின் பெயர் மட்டும் வருகிறது. வாஜ்பாயி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கில் தோற்கக் காரணமாக இருந்தவர். படம் முடிந்து பலரது புகைப்படங்களைக் காண்பிக்கும்போது வாஜ்பாயியும் ஜெயலலிதாவும் இருந்த புகைப்படத்தைக் காண்பித்தார்கள். கருணாநிதியும் வாஜ்பாயியும் கூட்டணியில் இருந்தவர்கள். திரைப்படத்தில் கருணாநிதியின் படம் கண்ணில்பட்டதாக நினைவில்லை.

மிக முக்கியமான விஷயம், மோடியின் புகழ் பாடப்படவில்லை. கவனமாகத் தவித்திருக்கிறார்கள். மோடி என்ற பெயர் கூட இல்லை. வாஜ்பாயியின் கனவு அனைத்தையும் மோடி நிறைவேற்றி இருக்கிறார் என்று பார்வையாளர்களே உணரும் வண்ணம் உள்ளது திரைப்படம்.

வாஜ்பாயி ஒரு கவிஞர் என்பதை நிலைநிறுத்தும் காட்சிகள் தொடக்கம் முதல் இறுதி வரை வந்த வண்ணம் உள்ளன. படத்தின் வேகத்தைக் குறைக்கும் விஷயம் இது. இதையும் வாஜ்பாயியின் இளமைக்கால வாழ்க்கையையும் சுருக்கி இருக்கலாம்.

படத்தின் மேக்கிங், நடிகர்கள் தேர்வு என எல்லாமே சராசரித் தரம்தான். பின்னணி இசை மோசம். ஆனால் பங்கஜ் த்ரிபாதி மட்டும் விதிவிலக்கு. அதிலும் அவரது உடல்மொழி அபாரம். வாஜ்பாயியின் ஆவி புகுந்துகொண்டது போல் நடிக்கிறார். படம் சலிப்பேற்படுத்தும் போதெல்லாம் நம்மைக் கட்டி இழுத்துத் திரைப்படத்துக்குள் கொண்டு வருபவர் பங்கஜ் த்ரிபாதி. இந்த வருடத்தின் சிறந்த நடிகராக தேசிய விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம்.

இது அனைவருக்குமான திரைப்படமா என்றால் இல்லை. இந்திய அரசியல் வரலாறு கொஞ்சமாவது தெரிந்தவர்களுக்கான திரைப்படமா என்றால் ஆம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினருக்கான திரைப்படமா என்றால், நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். முக்கியமாகச் சில காட்சிகள் தரும் புல்லரிப்புக்காக.

zee5ல் கிடைக்கிறது.

Share

Merry Christmas (H)

Merry Christmas (H) – அந்தாதூன் நினைவுக்கு வர, ஶ்ரீராம் ராகவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக இதைப் பார்த்தேன். ஜனவரியிலேயே வந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு கூகிளில் தேடினால் இந்தப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. விஜய் சேதுபதி நடித்திருந்தும் இப்படி ஒரு படம் வந்தது கூட எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. படத்தின் தொடக்கத்தில் ஹீரோவும் ஹீரோயினும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இருவரும் தங்கள் கதையைச் சொல்லி முடிக்கும்போது இருவருக்கும் இடையே ஓர் உறவு மலரும் என்று எதிர்பார்க்கிறோம். அங்கே ஒரு திருப்பம். பின்னர் அது த்ரில்லர் படமாகிறது. எப்படி ஒரு பெண் முன்பின் தெரியாத ஒருவனிடம் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்பதற்கு விடையும் கிடைக்கிறது.

படம் எடுத்த விதம் அருமை. நீட்டான திரைப்படம் என்றுதான் சொல்லவேண்டும். விஜய் சேதுபதி ஹிந்தியில் பேசினாலும் தமிழ் போலவே ஒலித்தது. படத்திலும் அவர் தமிழ்க்காரர் என்பதால் அது இயல்பாகவும் தோன்றியது. அலட்டலே இல்லாமல் நடித்தார். கத்ரினா கய்ஃபும் பிரமாதமாக நடித்தார். கடைசி பத்து நிமிடம் இசை மட்டுமே என்று என்னவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார்கள். மெல்ல செல்லும் திரைப்படம் மெல்ல முடிந்துவிடுகிறது. பிரெஞ்சு நாவலைத் திரைப்படமாக்கி இருப்பதாலோ என்னவோ, வெளிநாட்டுத் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைத்தது.

அந்த வீடு, படத்தின் கலர் டோன், நடிகர்களின் நடிப்பு – இவற்றுக்காகப் பார்க்கலாம். தமிழில் இந்த அனுபவம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

Share

போர் தொழில்

போர் தொழில் – நேற்றுதான் பார்த்தேன். சரத்குமாருக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அது மட்டுமல்ல. அந்தப் படத்தின் அனைத்து காஸ்டிங்குகளுமே தவறானவை. இல்லையென்றால் படம் இன்னும் நன்றாகப் பேசப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். நல்லவேளை இவற்றை எல்லாம் எழுதவில்லை.

இன்று சகோதரர் சரத்குமார் பாஜகவில் இணைந்திருக்கிறார். நல்ல நடிகர். நேற்று கூட போர் தொழில் பார்த்தேன். மிகச் சிறப்பாக நடித்திருந்தார். எனவே see more…

Share

aa dhinagalu – Kannada movie

ஆ தினகளு (K) – 2006ல் வந்த கன்னடப் படம். இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி டிவிட்டரில் சீனு என்கிற நண்பர் பரிந்துரைத்திருந்தார் என்பதால் பார்த்தேன்.

சில படங்களைவிட அவற்றின் நிஜப் பின்னணி சுவாரஸ்யமாக இருக்கும். ஹிந்தியில் வெளியான ருஸ்டம் போல. ஆ தினகளு படமும் அப்படியே.

கேங் வார் திரைப்படம். பெங்களூரில் இரண்டு ரௌடிகளுக்கு இடையேயான, அவர்களுக்கும் போலிஸுக்கும் இடையேயான சண்டையும் கொலைகளுமே படம். அக்னி ஸ்ரீதர் கன்னடத்தில் எழுதிய தாதாகிரிய தினகளு என்கிற புத்தகத்தின் அடிப்படையிலான திரைப்படம்.

அக்னி ஸ்ரீதர் ஒரு ரௌடியாக இருந்தவர். இரண்டு கேங்கில் ஒரு கேங் தலைவரைக் கொல்கிறார். அதுவும் திட்டம் போட்டு, அவரை தன் இடத்துக்கு வரவழைத்து, தன் மேல் நம்பிக்கை வர வைத்து, சரியான நேரத்தில் போட்டுத் தள்ளுகிறார். இதற்கிடையில் எதிரி கேங் இவரைத் தீர்த்துக் கட்ட நினைக்க, அவர்களிடம் தெளிவாகச் சொல்கிறார், நான் கொல்லப் போவதே உன் எதிரியைத்தான் என்று. எதிரி கேங் தலைவர் அக்னி ஸ்ரீதருக்கு உதவி செய்யத் தயாராகிறார். கொலை நடந்து முடிகிறது. அதுவும் மிக எளிதாக. அக்னி ஸ்ரீதரும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஜெயிலுக்குப் போகிறார்கள்.

தண்டனை முடிந்து வெளியே வரும் அக்னி ஸ்ரீதர் தன் வாழ்க்கையில் நடந்தவற்றைப் புத்தகமாக எழுதுகிறார். எழுத்தாளராகிறார். ஆங்கிலத்தில் My days in the underworld – Rise in the Bangalore mafia என்று மொழிபெயர்ப்பாகிறது. பின்னர் ஆ தினகளு திரைப்படமாகிறது. கிரிஷ் கர்நாட் கதையில் உதவுகிறார். சிறிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார்.

ஆ தினகளு படம் 2006ல் வந்தது என்றாலும் இன்றும் முழுமையாகப் பார்க்கமுடிகிறது. ஆரம்பக் காட்சிகளைக் கொஞ்சம் சகித்துக் கொள்ளவேண்டும். நடிக்கவே வராத ஹீரோ, காதல், பெரிய பிஸினஸ்மேன் என்றெல்லாம் பதினைந்து நிமிடங்கள் அலைபாயும் கதை பின்னர் அக்னி ஸ்ரீதரின் கதைக்குள் வரவும் சூடுபிடிக்கிறது. படத்துக்காகப் பல இடங்களில் உண்மை நிகழ்வுகளில் இருந்து கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள்.

இந்நாளில் நாம் மறந்துபோய்விட்ட நடிகர்கள், மொத்தமாக ஓய்வுபெற்றுவிட்ட நடிகர்கள், மரணமடைந்துவிட்ட நடிகர்களைப் படத்தில் இளமையாகப் பார்க்கும்போது ஏனோ ஆச்சரியமாக இருக்கிறது.

இரண்டு ரௌடி கேங்குகளும் வரும் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக இருக்கின்றன. புத்தகத்தில் இல்லாத, நெஞ்சை வருடும் க்ளிஷே காட்சிகளும் உண்டு. ஆனாலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

படம் பார்த்து முடித்ததும் அக்னி ஸ்ரீதர் பற்றித் தேடி தெரிந்து கொண்டு, அவரது யூ டியூப் சேனலில் ஆ தினகளு என்று கிடைக்கும் சில வீடியோக்களைப் பார்த்து, (இந்த வீடியோக்கள் படத்தில் இல்லாத பல விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன), பின்னர் அவரது ஆங்கிலப் புத்தகத்தைத் தரவிறக்கி, இத்திரைப்படம் தொடர்பான பக்கங்களை மட்டும் மேலோட்டமாகப் படித்ததில் ஒரு முழுமையான அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்துக்காக இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம். அந்தக் கால பெங்களூருவில் எப்படி ரௌடிகளின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது என்றும் புரிந்துகொள்ளலாம்.

இப்படத்துக்கு இசை இளையராஜா. இரண்டு சிறிய பாடல்கள் – கிறங்கடிக்கின்றன. அதிலும் ஆ தினகளு பாடல் (எங்கோ ‘தவிக்கிறேன் தவிக்கிறேன்’ பாடலை நினைவூட்டுகிறது எனக்கு!) மறக்கவே முடியாத ஒன்று. பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும். இன்னொரு பாடல் ‘சிஹி காலி’ ராஜா கன்னடத்தில் பாடியது.

ஆ தினகளு படம் ஸீ5ல் சுமாரான தரத்தில், சப்டைட்டில் இல்லாமல் கிடைக்கிறது.

Share

அன்வேஷிப்பின் கண்டெத்தும் (M)

அன்வேஷிப்பின் கண்டெத்தும் (M) – தேடினால் கண்டடைவீர்கள். எனவே ஹீரோ படம் முழுக்கத் தேடுகிறார். சரியாகக் கண்டடைகிறார்.

Spoilers ahead.

தரமான படம். எடுத்த விதம், வசனம், நடிப்பு என எல்லாமே அருமை. ஆனால் என்ன பிரச்சினை என்றால், இரண்டு கதைகளாகி விட்டன. இடைவேளை வரை ஒரு கதை. பிறகு இன்னொரு கதை. இப்படிப்பட்ட இரண்டு கதைகள் கொண்ட திரைப்படங்கள் எனக்குப் பிடிக்காது. ஒரு திரைப்படம் என்பது ஒற்றை விஷயத்தை மையப்படுத்தித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். முன்பே இவ்விஷயம் தெரிந்திருந்தால் இப்படத்தையே பார்த்திருக்க மாட்டேன்.

படத்தின் முதல் பாதியில் வரும் கதை பிரமாதம். பாதிரியாரைச் சுற்றி நடக்கும் கதை. இரண்டாம் பாதியில் உயர்சாதி ஹிந்து. இரண்டாம் பாதியில் ஹீரோ கொலையை உட்கார்ந்த இடத்திலேயே பேசி பேசி கண்டுபிடித்து விடுகிறார். ஆனாலும் யார் கொலையாளி என்பதைக் கடைசி வரை யூகிக்க விடாமல் வைத்திருந்தார்கள். நான் இரண்டு பேரை சந்தேகத்தில் வைத்து இருந்தேன். அதில் ஒருவரைக் காட்டவும் சந்தோஷமானேன். ஆனால் அதற்குப் பிறகும் ஒரு திருப்பம் கொடுத்து விட்டார்கள். இரண்டு கதைகளிலும் கொலையாளியை திடுக்கெனக் காண்பித்ததைப் பாராட்டத்தான் வேண்டும்.

நல்ல படம்தான். ஒருமுறை பார்க்கலாம்.

பின்னணி இசை இத்தனை மிரட்டலாக இருக்கிறதே, நிச்சயம் விருது கிடைக்கும் என்று நினைத்தபடியே பார்த்தேன். கடைசியில் பின்னணி இசை சந்தோஷ நாராயணன் என்று பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒரு சேர வந்தன.

Share

ஜிகர்தண்டா xx

ஜிகர்தண்டா xx – கார்த்திக் சுப்புராஜ் திறமையான இயக்குநர் என்று மீண்டும் பறைசாற்றும் ஒரு திரைப்படம். மிகக்கடினமான திரைக்கதை. ஒற்றைப் பரிமாணத்தில் செல்லாமல், மூன்று பிரிவுகளாகச் செல்லும் திரைக்கதை. அதிலும் கார்த்திக் சுப்புராஜின் சிக்னேச்சர் ஆகிவிட்ட திடீர்த் திருப்பம் வேறு. ஒரு படமாக மிக திறமையான திரைப்படமே.

ஜிகர்தண்டா முதல் பாகத்தில் இருந்த எளிமையே அதன் வெற்றிக்குக் காரணம். ஓர் இயக்குநர் வளர வளர எங்கோ தன் எளிமையை, நேரடியாகக் கதை சொல்லும் தன்மையை இழந்துவிடுகிறார். இப்படிக் கடினமான கதை சொல்லல் முறையே திறமையானது என்கிற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. இதுவே ஜிகர்தண்டா xxக்கு நேர்ந்திருக்கிறது.

இடைவேளை வரை படம் மிக விறுவிறுப்பாகச் சென்றது. அதிலும் இடைவேளை ப்ளாக் எல்லாம் கச்சிதம். அதன் பிறகு திரைப்படம் ஒரு கருத்தைச் சொல்வதில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறது. அதுவரை ஒரு வாழ்வியலையும் அதற்கு இணையான கற்பனையையும் சொல்லிக்கொண்டிருந்த படம் அங்கேயே தேங்கிப் போகிறது. சினிமா என்னும் கலையை உயர்த்திச் சொல்லவேண்டிய இன்னொரு ஜிகினாவுக்குள் செல்லும்போது படம் முழுமையாகத் தொலைந்து போகிறது.

காட்டுவாசிகள் அத்தனை பேரையும் நல்லவர்களாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், ஆளும் தரப்பு அத்தனை பேரையும் கெட்டவர்களாகக் காட்டவேண்டிய அவசரம் எனப் பல இன்றைய தேவைகளுக்குள் கார்த்திக் சுப்புராஜ் சிக்காமல் இருந்திருந்தால் இந்தப் படம் வேறு ஒரு தளத்துக்குப் போயிருந்திருக்கும்.

நம் ஊரில் ஆதிவாசிகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 1975ல் ஓர் அரசு தமிழ்நாட்டில் இப்படி ஒட்டுமொத்த இனத்தை அழிக்க முயன்றது என்பது கொஞ்சம் மிதமிஞ்சிய கற்பனை. அதிலும் டெல்லியில் இருப்பவர்கள் இங்கே இடத்தை ஆக்கிரமிக்க நினைத்தார்கள் என்ற காரணம் எல்லாம் எஸ்கேப்பிசம்.

நிஜ வாழ்க்கையில் இருந்து பல்வேறு கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு எதிர் குணங்களை இட்டு நிரப்பி, யார் சாயலும் வராமல் பார்த்துக்கொண்டதில் இருக்கும் கவனத்தையும், கவனத்துடன் அதில் உருவாக்கிய ஆர்வத்தையும், இறுதிக்கட்ட காட்சிகளின் நீளத்தில் இப்படி வீணடித்திருக்கவேண்டாம். படத்தை முடிக்கவே கார்த்திக் சுப்புராஜுக்கு மனம் வரவில்லை. இன்னும் என்ன டிவிஸ்ட் வைக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துவார் போல.

மதுரை வட்டார வழக்கு ஓட்டவே இல்லை. இதில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். காட்டுவாசிகளின் பேச்சு வழக்கு பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பதால் அதில் பிரச்சினையில்லை.

கார்த்திக் சுப்புராஜ் சந்தேகமே இன்றி முக்கியமான இயக்குநர். தேவையற்ற அரசியலில் சிக்கி திசை தெரியாமல் திரிவதை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இறுதிக் காட்சியில் போலிஸ் பட்டாளம் காட்டுவாசிகளைச் சுட்டுக் கொல்லும்போது போலிஸ் நீண்ட குங்குமம் வைத்திருக்கிறார். இந்த அற்பத்தனத்தில் என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை. தமிழக முதல்வர் ஓர் இனத்தையே அழிக்கப் பார்க்கிறார், ஆனால் அவருக்கு எந்த அடையாளத்தையும் தந்து சிக்கலில் சிக்கிக் கொள்ளாத புத்திசாலித்தனம் மட்டும் இருக்கிறது. நல்ல தமிழ்ப்படங்கள் இப்படிப்பட்ட திசை திருப்பல்களில்தான் காணாமல் போகின்றன.

Share