Archive for ஹரன் பிரசன்னா

Secret Super Star (Hindi)

சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ஹிந்தி)

புல்லரிக்க வைக்கும் இன்னுமொரு ஹிந்தித் திரைப்படம். இந்தப் புல்லரிப்பு, காட்சிகள் தரும் உணர்ச்சிவசத்தால். முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை நாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேதான் இருக்கவேண்டி இருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் பேத்தல் என்று சொல்லிவிடும் ஒரு சூழலில்தான் ஒட்டுமொத்த படமும் நகர்கிறது. இறுதிக்காட்சி உணர்ச்சிகளின் மகுடம்.

இஸ்லாம் குடும்பம், நடுத்தர வர்க்கம், கண்டிப்பான கொடூரமான அப்பா. பெண்ணுக்கு பாடுவதில் ஆர்வம். பர்தா போட்டுக்கொண்டு யூ ட்யூப்பில் தனது வீடியோவை வெளியிட்டு, அதற்கான போட்டியில் பிரபலமாகிறாள். யார் அந்த ரகசிய சூப்பர் ஸ்டார் என்று பெரிய தேடல் நடக்கிறது. அமீர்கான் மிக அலட்டலான ஒரு இசையமைப்பாளர் – போட்டி நடுவராக வருகிறார். என்ன அலட்டல். அட்டகாசம். அவர் மூலம் ஒரே பாடலில் பிரபலாகும்போது தந்தையின் பிடிவாதத்தால் அனைத்தையும் மூட்டை கட்டிவிட்டு சவுதிக்குச் செல்லத் தயாராக இருக்கும் அப்பெண்ணின் அம்மா ஒரு முடிவெடுக்கிறாள். பர்தாவை விடுத்துப் பெண் மேடை ஏறுகிறாள். அம்மாவின் கண்ணீருடன் படம் நிறைவடைகிறது. அம்மாவாக நடிக்கும் பெண் ஒட்டுமொத்த படத்தையும் ஹை ஜாக் செய்கிறார். அமீர்கான் துணை நடிகராக வந்துபோகிறார். இவையெல்லாம் தமிழில் நிகழுமா என்பதைக் கேட்காமல் விடுகிறேன். தமிழில் செய்திருந்தாலும் வேறொரு வகையில் விக்கிரமன் படம் போலப் புல்லரிக்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

யூ டியூப்பில் முதன் முதலாக அந்தப் பெண் வலையேற்றும் பாடலும், முதன்முறையாகத் திரைப்படத்துக்குப் பாடும் அந்தப் பாடலும் நிஜமாகவே அட்டகாசம். இசை அமித் த்ரிவேதி.

மிக அட்டகாசமான தனித்துவமான படம் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் ஃபீல் குட் முவீ என்று தமிழில் எதை எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஹிந்தியில் நிஜமான ஃபீல் குட் முவீ எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

Share

ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்

நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்

என்னவோ எடுக்க இயக்குநர் முயன்றிருக்கிறார். அது அப்படியுமில்லாமல் இப்படியுமில்லாமல் வந்திருக்கிறது. அடுத்த படத்தில் நினைத்தது நடக்கட்டும்.

கௌதம் கார்த்திக்கின் நடிப்பு மெல்ல மெல்ல இயல்பாகிக்கொண்டே வருகிறது. இப்படத்தில் அடுத்த கட்டம். கலக்கி எடுக்கிறார். அசட்டுத்தனமான ப்ளே பாய் ரோல். மிக எளிதாகக் கையாளுகிறர். இயல்பாகவே வருகிறதோ என்னவோ. 🙂 அவரது குரல் அப்படியே அந்தக் கால கார்த்திக்கை நினைவூட்டுகிறது. கௌதம் கார்த்திக்கின் ஆரம்பக்காலப் படங்களில் பழைய கார்த்திக்கின் குரலுடன் இத்தனை நெருக்கமாக இல்லை. ஆனால் இந்தப் படத்தில் கார்த்திக்கே பேசுவது போல் உள்ளது. கார்த்திக் அந்தக் காலத்தில் இப்படியே பேசத் துவங்கி இதுவே அவரது பாணியாக அந்தப் பாணியே அவருக்கு எமனாவும் ஆனது. கௌதம் கார்த்திக் அதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ஏற்கெனவே லைட்-வெய்ட்-போர்னோ படங்களாகத் தமிழில் நடித்துக்கொண்டிருக்கும் கௌதமுக்கு இதுவும் சேர்ந்தால் பின்னாளில் ‘மேற்படி’ படங்களில் மட்டும் நடிக்கவேண்டிய அபத்தம் நேரலாம். தூர்தர்ஷனில் நடித்துக்கொண்டிருந்த சில நடிகர்களை அப்படிப்பட்ட படங்களில் திருநெல்வேலியின் புண்ணிய தியேட்டர்களில் பார்த்தபோது கொஞ்சம் ஷாக்காகவும் அதே நடிகர்களை தொலைக்காட்சிகளில் மீண்டும் பார்த்தபோது அதிகம் ஷாக்காகவும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் இவர் வரும் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் ஆசுவாசம்.

விஜய் சேதுபதி, நடிப்பில் அப்படியே நிற்க உடல் மட்டும் விரிவடைந்துகொண்டே போகிறது. இப்படியே போனால் டி.ராஜேந்தர் ஆக்கிவிடுவார்கள். தேர்ந்தெடுத்து நடிப்பது ரொம்ப முக்கியம். நல்ல திறமையான நடிகர் வீணாகிக்கொண்டிருக்கிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன். பின்னணி இசை அழகு. ஒரு குத்துப் பாட்டு, கொஞ்சம் காசு துட்டு மணியை நினைவூட்டினாலும், அதகளம். கேட்க:

 

Share

ஊழல் உளவு அரசியல் – நம் சமூகத்தின் ஆவணம்

சவுக்கு சங்கர் எழுதிய ‘ஊழல் உளவு அரசியல்’ புத்தகம், சீர்கெட்டுக் கிடக்கும் இன்றைய அரசியலின் ஆவணமாகத் திகழ்கிறது. அதிகாரிகள் மட்டத்தில் தொடங்கி அமைச்சர்கள் வழியாக முதலமைச்சர் வரையிலும் காவல்துறை அதிகார்கள், நீதிமன்றம் என விதிவிலக்கில்லாமல் ஊழல் புரையோடியுள்ளது என்பது நமக்குத் தெரியும். நாம் பார்க்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் இத்தகைய ஊழல் காட்சிகளைக் கண்டிருப்போம். இதெல்லாம் உண்மையா என்ற சந்தேகம் எப்போதாவது தோன்றியிருக்கலாம். திரைப்படங்களில் காட்டப்படுபவை எல்லாமே உண்மை என்பது மட்டுமல்ல, திரைப்படங்களில் காட்டப்படுபவையைக் காட்டிலும் உண்மை என்பது கூடுதலாக இருக்கமுடியும் என்பதற்கு இப்புத்தகம் சாட்சியாக அமைகிறது.

படித்தவர்களே ஊழலின் தொடக்கப்புள்ளியும் பூதாகரமான புள்ளியும் என்பதை இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரலாம். படிப்பு என்பது எத்தனை திறமையாக ஊழல் செய்யமுடியும் என்பதற்கான ஒரு தகுதியாகிறதோ என்கிற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியாது. இலக்கியவாதிகள் உட்பட எந்தவொருவரின் கையில் அதிகாரம் வந்தாலும் நமக்குக் கிடைக்கப்போவதென்னவோ இன்னொரு ஊழலும் இன்னுமொரு அதிகார துஷ்பிரயோகமும்தான்.

மிகச் சிறிய வயதிலேயே அரசு வேலைக்குச் செல்லும் சங்கர் பின்னாளில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிறைக்குச் செல்கிறார். எவ்வித அமைப்பின் துணையின்றி, சக மனிதர்களின் உதவியுடனும் தன் திறமையான காய் நகர்த்தலின் மூலம் எப்படி வெற்றி பெற்று விடுதலை அடைகிறார் என்பதை ஒரு நாவல் போலச் சொல்கிறது இந்நூல். ஒரு நாவலில் வரும் அத்தனை கற்பனை நிகழ்ச்சிகளுக்கும் ஈடான அடுக்கடுக்கான சம்பவங்கள் சங்கருக்கு நேர்ந்திருக்கின்றன. எந்நிலையிலும் தகர்ந்துபோகாமல் அவற்றை எதிர்கொண்டு வென்றிருக்கிறார் சவுக்கு சங்கர்.

இந்நூலில் யாரையும் சவுக்கு சங்கர் விட்டுவைக்கவில்லை. கிசுகிசு பாணியில் எல்லாம் சொல்லாமல் எல்லாரையும் பெயரையும் பதவியையும் குறிப்பிட்டே சொல்கிறார். இதைத் தொடர்ந்து இன்னும் என்ன என்ன பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளப் போகிறாரோ என்ற அச்சத்துடனேயே படிக்கவேண்டி இருக்கிறது.

ஜெயலலிதாவின் கருணாநிதியும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்னும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறார் சவுக்கு சங்கர். அண்ணா பல்கலைக்கழகத்தில் தனக்குத் தேவையான அதிகாரிகளுக்கு ஜெயலலிதா இடம் வாங்கிக் கொடுத்திருப்பது தொடர்பான அத்தியாயங்கள் மிக முக்கியமானவை. நீதிமன்றத்தில் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், இவ்வழக்கு சொல்லும் செய்திகள் ஏராளமானவை. அண்ணா பல்கலைக்கழத்தின் கட் ஆஃப் மதிப்பெண்களின் தேவையும் ஜெயலலிதாவின் ஆதரவில் இடம் பெறும் அதிகாரிகளின் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அதிர்ச்சியை வரவழைக்கிறது.

அடுத்த வழக்கு, உபாத்யாய் மற்றும் திரிபாதி ஆகியோருக்கு இடையேயான உரையாடல் வெளியான வழக்கு. சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பது பின்னுக்குப் போய் உரையாடல் வெளியானதே முக்கியமான பிரச்சினையாக மாற்றப்படுகிறது. திமுகவின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை மற்றும் உபாத்யாய் ஆகியோரின் உரையாடலை சுப்பிரமணியம் சுவாமி வெளியிடுகிறார். உபாத்யாய் ஒரு நேர்மையான அதிகாரி என்று பலமுறை இப்புத்தகத்தில் சொல்கிறார் சவுக்கு சங்கர்.

இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சிக்க வைக்கப்பட இருக்கும் சக ஊழியர்கள் இருவருக்கு உதவி செய்ய சவுக்கு சங்கர் முடிவெடுக்கிறார்; இதுவே தனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதாகச் சொல்கிறார் சவுக்கு சங்கர்.

இதற்குப் பிறகு வரும் அத்தியாயங்கள் படு விறுவிறுப்பானவை. அதிர வைப்பவை. ராஜிவ் காந்தி கொலை வழக்கு புத்தகத்துக்குப் பிறகு இத்தனை விறுவிறுப்பான புத்தகத்தை நான் வாசிக்கவில்லை. மனதின் ஒரு ஓரத்தில் இவை அத்தனையும் ஒரு சக மனிதனுக்கு நடந்தது என்னும் எண்ணம் தரும் பதற்றத்தைச் சொல்லில் அடக்கமுடியாது.

விசாரணை அதிகாரிகள் எப்படி மிரட்டுகிறார்கள், எப்படி அடிக்கிறார்கள் என்பதையெல்லாம் பல பக்கங்களில் விவரிக்கிறார் சவுக்கு சங்கர். அதே நேரம் அவர்களுக்கு ஒரு வழக்கு பற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அதிகாரிகள் என்றில்லை, அரசியல்வாதிகள், நீதிபதிகள் என யாருக்குமே ஒரு வழக்கைப் பற்றிய போதிய புரிதல்கள் இல்லை என்பதையும் தன் துறை சார்ந்த புரிதல்கூட இல்லை என்பதையும் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிடும் அத்தியாயங்களும், சிறையில் சவுக்கு சங்கர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய அத்தியாயங்களும் நம் அதிகாரக் கட்டமைப்பின் முகத்தை நமக்குத் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமியை வழக்குக்குள் கொண்டு வருவதற்காகச் செய்யப்படும் முயற்சிகள் மிக சுவாரசியமானவை. ஆனால் நீதிமன்றம் சுவாமியை இவழக்குக்குள் கொண்டுவரத் தயாராகவே இல்லை.

வழக்கு எப்படியெல்லாமோ நடக்கிறது. வரிசையாக நீதிபதிகள் மாற்றப்படுகிறார்கள். அரசு மாறுகிறது. அரசின் நோக்கம் மாறுகிறது. அரசுக்கேற்ப ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. தேவையென்றால் விரைவுபடுத்தப்படுகிறது. எல்லாமே அரசின் முடிவுக்கேற்ப நடக்கிறது. ஒரு கட்டத்தில் இதே வேலையை சவுக்கு சங்கரும் அவரது வழக்கறிஞர்களும் தங்கள் தேவைக்காகச் செய்கிறார்கள். முடிவில் போதிய நிரூபணங்கள் இல்லாததால் சங்கர் விடுதலை ஆகிறார்.

சங்கர் விடுதலை ஆகும் தருணம் உண்மையிலேயே உணர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது.

*

ஒரு தன் வரலாற்றின் பக்கங்களில் உள்ள நிகழ்வுகளின் நம்பகத்தன்மை என்பது வரலாற்றைச் சார்ந்தும் சொல்பவரின் நம்பகத்தன்மை சார்ந்துமே அமையும். தன் வரலாற்றில் ஒருவர் சொல்வதை ஏற்கவேண்டும்; ஒருவேளை நாம் மறுக்க நேர்ந்தால் அதற்கான பின்னணி, ஆதாரம் என எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லவேண்டும். சங்கரின் புத்தகம் முழுக்க அவர் தொடர்பான விவரங்களின் எதிர்த்தரப்பின் குரல் இல்லவே இல்லை. இது சங்கரின் பிரச்சினை அல்ல. இந்நூலின் தேவையும் அல்ல. ஆனால் படிக்கும் நமக்கு எதிர்த்தரப்பின் பதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது.

சவுக்கு என்றொரு தளத்தில் யார் எழுதுகிறார் என்றே தெரியாமல் தொடர்ச்சியாகக் கட்டுரைகளும் அதிகாரிகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் வந்தபோது இணையம் முழுக்க சவுக்கு என்பவரின் நம்பகத்தன்மை குறித்துக் கடுமையாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அனைத்தும் கிசுகிசு என்று சொல்லப்பட்டது. இந்நூல் அந்த சந்தேகங்களுக்குப் பெருமளவில் பதில் சொல்லி இருக்கிறது. என்றாலும் எதிர்த்தரப்புக்கான பதில்கள் என்னவாக இருக்கும் என்னும் எண்ணத்தை அதற்கு இணையாக எழுப்பவும் செய்திருக்கிறது.

நம் அமைப்பில் ஒரு முக்கியமான அதிகாரி கூட புத்திசாலியாக இல்லையா என்கிற கேள்வி எழாமல் இல்லை. சில அதிகாரிகள் நல்லவர்களாகச் சொல்லப்படுகிறார்கள் என்றாலும் அவர்களது திறமை பற்றி, முக்கியமாக காவல்துறை அதிகாரிகளில் திறமையானவர்கள் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என வேறுபாடில்லாமல் அனைத்தையும் சங்கர் எழுதி இருக்கிறார் என்றாலும், எதோ ஒரு புள்ளியில் கருணாநிதியின் மீதும் திமுகவின் மீதும் சங்கருக்கு ஒரு சார்பு இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட்டுகள் மேல் மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதை உணரமுடிகிறது. அவர்களே சங்கருக்குப் பல வகைகளில் உதவியும் இருக்கிறார்கள். இவ்வழக்கு தொடர்பாக இணையத்தில் சவுக்கு எழுதியபோது எப்படி அதிமுகவும் திமுகவும் மாற்றி மாற்றி அவற்றைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டன என்பதை, இப்புத்தகத்தைப் படித்துவிட்டு நினைத்துப் பார்த்தால், சிரிப்பே வருகிறது. ஏனென்றால் இந்நூலில் இரு தரப்பையும் சங்கர் துவம்சம் செய்கிறார்.

*

இந்நூல் சங்கரின் வழக்கை விவரிக்கிறது என்றாலும், எனக்கு வேறொரு வகையில் முக்கியமாகிறது. ஒரு வழக்கில் அதிகாரிகள் எப்படியெல்லாம் செயல்படமுடியும் என்பதை இந்நூல் விளக்குகிறது. என்னவெல்லாம் செய்து தனக்குத் தேவையானபடி வழக்கைக் கொண்டுசெல்லமுடியும் என்பதை இப்புத்தகத்தில் பார்க்கலாம். காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் என நான்கு பக்கமும் இழுக்கப்படும் ஒரு தேராகவே ஒரு வழக்கு அமைகிறது. யார் கை ஓங்கும் என்பதைக் காலமே தீர்மானிக்கும் என்பதை இந்நூல் சொல்கிறது. இத்தனையையும் தாண்டி நாம் நீதியை அடையவேண்டி இருக்கிறது. ஒரு கட்டத்தில் அனைத்தின் மீதும் நம்பிக்கையின்மையை விதைக்கிறது சங்கரின் அனுபவங்கள்.

ஒரு தனிப்பட்ட அதிகாரி எதிர்த்து நின்றால் இவை அனைத்தையும் கடந்து வெல்லமுடியும் என்பதை நூல் சொல்கிறதுதான். ஆனால் அந்த அதிகாரிக்கு சங்கர் போன்ற மனத்திட்பம் இருக்கவேண்டும். உங்களை நிர்வாணப்படுத்தி ஆண்குறியில் அடித்தால், வெளியில் இருக்கும் அம்மாவுக்குக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகக் கத்தாமல் இருக்கும் தைரியம் வேண்டும். வழக்குகளைப் பற்றி, வழக்கு செயல்படும் விதம் பற்றி, அவற்றில் உள்ள நுணுக்கங்கள் பற்றி, முன்பு நடந்த வழக்குகளில் இருந்த தீர்ப்புகள் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு உதவ அரசியல் ஆதரவு உள்ள நண்பர்கள் வேண்டும். எதையும் எதிர்கொள்ள பின்புலம் வேண்டும். உங்களுக்குத் தகவல் சொல்ல எல்லா மட்டங்களில் ஆள்கள் இருக்கவேண்டும். நீங்கள் சொன்னதும் அதை நம்பி செய்தியாக வெளியிட பத்திரிகைகளின் ஆதரவு வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ஒரு பெரிய வலைப்பின்னலே இருக்கவேண்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வரம்பில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் அதே வகையான வலைப்பின்னல். இரண்டு வலைப்பின்னல்களுக்கு இடையேயான போட்டியாக மாறினால் மட்டுமே உங்களால் மீள முடியும். சங்கரைப் போல. நீங்கள் தனி மனிதர் மட்டுமே என்றால் எதிர்த்தரப்பின் வலைப்பின்னலில் சிக்கும் ஒரு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை. இத்தனையும் இருந்து வென்றாலும் உங்கள் கேரியரில் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை. இன்னுமொரு முக்கியமான எண்ணம் எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு வழக்கில் சிக்கியவர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரியாக இருந்திருந்தால் எந்தப் பத்திரிகையாளர் அவருக்கு உதவி இருப்பார் என்பதுதான் அந்த எண்ணம். நினைக்கவே திகிலாக இருக்கிறது.

இந்நிலையில் ஒரு சாமானிய அரசு ஊழியன் எதைத் தேர்ந்தெடுப்பானோ அதையே இன்றும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறான். ஒரு சாமானியனால் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாகும் இந்நூலே, ஒரு சாமானியன் வெற்றி பெற எத்தனை போராட வேண்டியிருக்கும் என்பதற்கும் உதாரணமாகிறது. ஏன் அரசு ஊழியன் தன் பணிக்காலத்தைச் சிக்கலில்லாமல் முடிக்க மட்டுமே நினைக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்நூலில் உள்ளவை எல்லாமே உண்மைதானா என்பது எப்படி உறுதி இல்லையோ அதே போல் இன்னொரு உறுதியான விஷயம், நம் சமூகத்தில் இதெல்லாம் நிச்சயம் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதுதான். அதே நேரத்தில், எவ்விதக் குற்றமும் செய்யாத, எவ்வித அரசியலும் செய்யாத, எல்லா வகையிலும் அப்பாவியான ஒருவனை, அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருப்பவர் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றாலும் ஒட்டுமொத்தமாக அவனைக் குற்றவாளி ஆக்கிவிடமுடியாது என்னும் நம்பிக்கை எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. இதன் பலம், இன்னும் அதிகார-துஷ்பிரயோகம்-செய்பவர்கள் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது. பலவீனம், தனக்குப் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக எப்போதும் வளைந்து நெளிந்து செல்ல அரசு ஊழியர்கள் தயாராக இருப்பது. இதில் மிகக் கவலையான விஷயம், இந்நிலையில் ஒரு அமைப்பு இருக்கக்கூடாது என்பது.

இந்நூலில் போகிற போக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்கள் முக்கியமானவை. சிறைச்சாலையின் நிலை அவற்றில் மிக முக்கியமானது. கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டிருந்த கைதிகளுக்குத் தரப்பட்ட சிறப்புச் சலுகை மிகக் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. இன்னொரு விஷயம், காவல்துறை குற்றம் சாட்டப்பவர்களை விசாரிக்கும் முறை. அதேபோல் ஒரு குற்றவாளி எப்படி அரசியலுக்கு வருகிறார் என்னும் விஷயம். அவர்களுக்குள்ளான கோஷ்டி மோதல், பழிவாங்கல். இப்படிப் பல விஷயங்கள் இந்நூலில் குவிந்து கிடக்கின்றன. எவ்வகையிலும் புத்தகத்தின் முக்கிய நோக்கத்தைச் சிதைக்காமல் இவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறார் சங்கர். சங்கரின் எழுத்துத் திறமை அசரடிக்கிறது. மிக நேர்த்தியான எழுத்து. அங்கங்கே தெறிக்கும் கிண்டல்கள் ரசிக்க வைக்கின்றன. இத்தனை வேதனைக்கு மத்தியிலும் சங்கர் இப்படி எழுதிச் செல்வது ஆச்சரியமளிக்கிறது.

புரையோடிக் கிடக்கும் நம் சமூகத்தின் பிரதிபலிப்பே இப்புத்தகம். எல்லா வகையிலும் இது முக்கியமான ஆவணமாகிறது.

ஆன்லைனில் இப்புத்தகத்தை வாங்க: http://www.nhm.in/shop/9788184938357.html

கிண்டிலில் வாசிக்க:https://www.amazon.in/xB8A-xBB4-xBB2-xBCD-Arasiyal-ebook/dp/B078XYHNW5/ref=tmm_kin_swatch_0?_encoding=UTF8&qid=1520605634&sr=8-1

Share

அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த்

இவை ஒரு சாமானியனின் கருத்துகள். நீங்கள் வெல்வீர்கள் என்று நம்பும் ஒரு சாமானியன். உங்களால், ‘ஈவெரா மண்’ என்று திராவிடக்காரர்களால் சொல்லிக்கொள்ளப்படும் ஆன்மிக தமிழ் மண்ணில், திராவிடச் சார்பற்ற, இந்திய தேசிய நம்பிக்கை உடைய, ஹிந்து வெறுப்பற்ற, போலி மதச்சார்பின்மை பேசாத ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கும் ஒருவனின் எண்ணங்கள். பிஜேபி உடனே ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்பதால் கடவுள் உங்கள் மூலம் ஆட்சியைப் பிடிக்கிறார் என்றுகூட யோசிக்கும் ஒருவரின் கருத்துகள். 🙂 (இனிமே படிக்கத் தேவையில்லை என்பவர்கள் ஓடிப்போய்விடலாம் என்பதற்காகவே இவ்வரி எழுதப்பட்டது.)

அரசியல் மேடை அல்ல, அரசியல் பேச விரும்பவில்லை என்று சொன்னாலும் மிகத் தெளிவான செய்திகளை அரசியல் அரங்கில் உலவ விட்டிருக்கிறீர்கள். மிகத் தெளிவாகவே, அரசியல் பேசும் தேவை ஏற்படலாம் என்கிற தயாரிப்போடு வந்திருக்கிறீர்கள்.

எம்ஜியாரை அளவுக்கு மீறிப் புகழ்ந்தது ஒரு நல்ல அரசியல் தேர்வாக இருக்கலாம். அதிமுக கூடாரத்தைக் கலைக்கப் பயன்படலாம். ஓட்டு விழலாம். எல்லாம் சரி. ஆனால் மாற்று வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது எம்ஜியாரின் ஆட்சியை அல்ல. அதற்கும் மேலே. எம்ஜியாரைப் புகழ்வது ஓட்டுக்காக மட்டும் என்ற தெளிவு உங்களிடம் இருந்தால் நல்லதுதான். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் புகழ்வதெல்லாம் ரொம்பவே ஓவர். இதில் நேர விரயம் செய்யாமல் இருப்பது நல்லது. மேலும் இதையெல்லாம் சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. அதே சமயம் அவர்கள் கட்சியைக் காப்பாற்றினார்கள் என்று சொன்னதில் உண்மையிலேயே தெளிவான உள்குத்து இருந்திருக்குமானால் அதைப் பாராட்டவே வேண்டும்.

ஊடகங்கள் உங்களுக்கு எதிராக எதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லும் தேவையோ அவசியமோ இல்லை. பொதுவாகவே ரஜினி ஏன் கருத்தே சொல்வதில்லை என்று ஊடகங்கள் கதறும் வகையிலேயே அவர்களை வைத்திருங்கள். ஒவ்வொன்றுக்கும் கருத்து சொல்வதால் உங்களுக்குப் பிரச்சினைகளும் மீம்ஸுகளும்தான் வந்து சேரும். எதாவது ஒரு பிரச்சினைக்கு விளக்கம் சொல்வதாக இருந்தாலும், இப்படி கேக்கறாங்க என்றெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லும் நிலையிலும் ஊடகங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் நிலையிலும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருங்கள். உங்கள் எளிமை நேரடியாக மக்களிடம் இருக்கட்டும். மக்களிடம் மட்டும் இருக்கட்டும்.

இனியும் சினிமா உலகம் என்று உணர்ச்சி வசப்படாதீர்கள். அதைவிடப் பெரிய உலகம் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. திரை உலகத்துக்கு நீங்கள் செய்யவேண்டியதை, அப்படி நீங்கள் நினைப்பதைப் பின்னர் செய்யுங்கள். மூன்றாவதாகத் திரைப்படம் அறிவித்ததையே இன்னும் ஜீரணித்துக்கொள்ளாத பலர் இருக்கிறார்கள். எனவே திரையுலகம் பற்றிய கருத்துகளை அரசியல் மேடைகளில் விலக்கி வையுங்கள்.

தமிழ் – தமிழன் குறித்த உங்கள் கருத்து தைரியமானது. ஆனால் இதெல்லாம் இங்கே காலம் காலமாக எதிர்கொள்ளப்பட்டுவிட்டது. இதெற்கெல்லாம் தூக்கத்தில் கூடப் பதில் சொல்லும் அளவுக்குத் தமிழ்த் தேசியவாதிகள் தயாராக இருக்கிறார்கள். அதையெல்லாம் தெரிந்தே இதைப் பேசுங்கள். ஒரு மேடையில் ஆங்கிலம் பேசுங்கள் என்று சமீபக் காலங்களில் எந்தத் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் இவ்வளவு பகிரங்கமாக மேடையில் சொன்னதில்லை. ரகசியமாகச் சொல்லிக்கொள்வார்கள் போல. அந்தத் தைரியத்தை நிச்சயம் பாராட்டவேண்டும். நீங்கள் தமிழ் பற்றியோ தமிழன் பற்றியோ ஒரு வரி பேசினால் இவர்கள் ஒரு மாதத்துக்கு அதற்கு விதம் விதமாகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். தமிழ் என்பதையும் தமிழன் என்பதையும் ஒட்டுமொத்தமாகப் பிரிப்பதில் எவ்விதப் பொருளும் இல்லை. தமிழ் வளர்ச்சியும் தமிழன் வளர்ச்சியும் ஒரு சேரவே முக்கியமானதுதான். அதேபோல் இப்படி எதாவது சொல்லி தமிழ்த் தேசியவாதிகளையும் திமுகவினரையும் அதைப் பற்றி மட்டுமே பேசவிடுவதும் நல்லதுதான். 🙂

நேரடியாக மக்களுடன் பேசுவது போன்ற எளிதான மொழி உங்களது பலமாக இருக்கும். ஆனாலும் கூட அதில் ஒரு கோர்வையைக் கொண்டு வருவது நல்லது. மிக முக்கியமாக, ஆங்கில வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு தமிழில் மட்டுமே பேசுவது மிக நல்லது, முக்கியமானது. டெஃபனட்லி சொல்றேன் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். உங்கள் பின்னால் உள்ள அணி திறமையாகவே காய் நகர்த்துகிறது. இன்னும் கவனம் கூடட்டும்.

எம்ஜியார் சிலை திறப்பு விழாவில் திமுகவினருக்கு ஊமைக்குத்தும் அதிமுகவினருக்கு மரணக்குத்தும் விழுந்திருக்கிறது. ரஜினி மற்றும் கமல் என்று ஊடகங்கள் பரபரப்பாகிவிட்ட நிலையில் ஸ்டாலின் பற்றி மக்கள் மறந்துவிட்டார்கள் என்பது போன்ற தோற்றம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. காத்திருந்தவன் பொண்டாட்டியை இரண்டு பேர் தூக்கிக்கொண்டு போக முயன்று, நீங்கள் வெல்லப் போகிறீர்கள். எனவே அத்தரப்பிலிருந்து கடுமையான கருத்துகள் பிரவாகமெடுக்கும். அதிகம் பயப்படத் தேவையில்லை. இவர்களது அரசியலே இப்படிப் புலம்புவதுதான். எம்ஜியார் இருந்தபோதும் ஜெயலலிதா இருந்தபோதும், ஜெயலலிதா இறந்த பின்பும். இன்றுவரை,கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டவர்களை அவர்கள் சபிப்பதைக் காணலாம். தமிழ்நாட்டின் நிலைக்காக மட்டும் அவர்கள் பொங்கவில்லை, இனி ஆட்சி வருமா என்ற நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்ததற்காகவும் புலம்புகிறார்கள். அதேசமயம் தேர்தல் அரசியலில் ரஜினிகாந்த் எதிர்கொள்ளவேண்டியது நிச்சயம் திமுகவாகவே இருக்கும். அதிமுக இப்போதே தங்கள் எதிர்காலத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது.

ஊடகங்கள் அனைத்தும் பேனர்கள் பிரச்சினை பற்றிப் பேசிக்கொண்டிருக்க, எடுத்த எடுப்பில் பேனர் பற்றிப் பேசியது, மக்களிடம் மன்னிப்பு கேட்டதெல்லாம் சிக்ஸர். ஆனால் இது வாய்ப்பேச்சாக நின்றுவிடக்கூடாது. இந்த பேனர் கலாசாரத்தை நிஜமாகவே ஒழிக்கவேண்டும். பேனரே வைக்காமல் இருக்கமுடியாது என்றால், எத்தனை பேனர்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று வைக்கப்படுகிறது என்பதை ஒழுங்காகப் பின்பற்றவாவது செய்யவேண்டும். இதை நடைமுறையிலும் சாத்தியப்படுத்தவேண்டும். வழி முழுக்க பேனர் வைப்பதால் எரிச்சலே மிஞ்சுகிறது. இப்படி பேனர் வைக்காவிட்டால் எழுச்சியே இல்லை என்று ஊடகங்கள் சொல்லும் என கராத்தே தியாகராஜன் நேற்று ஒரு தொலைக்காட்சியில் பேசினார். இதுவும் உண்மைதான். ஊடகங்களே இத்தகைய கருத்துகளைப் பரப்பவே செய்கின்றன. வழிநெடுக பேனர்களே இல்லை என்பதைப் பாராட்டாகச் சொல்லாத வரை பேனர் மோகம் ஒழியாது. மாற்று அரசியலிலாவது பேனர்கள் ஒழிந்த அல்லது பேனர்கள் குறைந்த தமிழகம் வருவது நல்லது. (யாராவது ஒருவர் பேனர் தொழிலில் புரளும் பணம், அதில் பயன்பெறும் தொழிலாளர்கல், அவர்களது வாழ்வாதாரம் என்று வருவார். அதையும் எதிர்கொள்ளவேண்டும்!)

சாதாரண ஒரு நிகழ்ச்சியில் பேசியதற்கே இத்தனை பரபரப்பு. கட்சி தொடங்கி அறிவித்து முதல் கூட்டம் போடும் நாளில் தமிழ்நாடே அதிரும் என்று நிச்சயம் நம்புகிறேன். ஹிந்து எதிர்ப்பற்ற போலி மதச்சார்பின்மை நடிப்பற்ற ஒரு கட்சியை நடத்தி வெல்ல வாழ்த்துகள்.

Share

Rustom (Hindi)

ரஸ்டம் (ஹிந்தி)

(ருஸ்தம் என்பதே சரியான உச்சரிப்பு என்று சொன்ன நண்பர்களுக்கு நன்றி.)

ஒரு திரைப்படமாக மட்டும் இந்தப் படத்தைப் பார்த்தபோது அது ஏமாற்றம் தருவதாகவே இருந்தது. இந்தப் படத்தை ஏன் பார்த்தேன் என்றால், அப்படத்தின் பை-லைன்: மூன்று குண்டுகள் இந்தியாவை உலுக்கிய கதை என்று இருந்ததால்தான். மொத்தத் திரைப்படத்தையும் பார்த்து முடித்தபோது இது ஏன் இந்தியாவை உலுக்கி இருக்கவேண்டும் என்று தேடிப் படித்ததில் – நிஜமாகவே உலுக்கத்தான் செய்தது. முதலிலேயே இவற்றையெல்லாம் படித்துவிட்டுப் பார்த்திருந்தால் இப்படம் வேறொரு பரிமாணத்தில் பார்க்கக் கிடைத்திருக்கலாம். ஆனால் எதையும் வாசிக்காமல் படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி படத்தைப் பார்த்துவிட்டு, தேடிப் பிடித்து வாசித்தேன்.

அனைத்து முன்னணி ஆங்கில இதழ்களும் இந்த வழக்கைப் பற்றி மிக விரிவாக எழுதி உள்ளன. சின்ன சின்ன விவரங்கள்கூட சுவாரஸ்யமானதாகவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் உள்ளன. அத்தனையையும் இந்தப் படத்தில் ஓரளவு நியாயமாகவே கையாண்டிருக்கிறார்கள். இரண்டு ஜாதிக்குரிய பிரச்சினைகளை மட்டும் அணுகாமல் விட்டுவிட்டார்கள். பார்ஸி சமூகத்தின் ஆதரவை மட்டும் காட்டியவர்கள், சிந்தி சமூகத்தின் கருத்தைக் காட்டியதாகத் தெரியவில்லை. நுணுக்கமான சித்திரிப்புகள் மூலம் செய்திருந்தார்களா என்பது எனக்குப் பிடிபடவில்லை. ஒருவேளை, இப்படம் முடிவடையும் தறுவாயில் தொடங்கும் வரலாற்றில்தான் சிந்தி சமூகத்தின் பிரச்சினை தொடங்கி இருக்கலாம்.

கமாண்டர் கவாஸ் மேனக்ஷா நானாவதியின் மனைவி சில்வியா, உண்மையில் இங்கிலாந்துக்காரர். இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இவருக்கு உண்டு. திரைப்படத்தில் இதையெல்லாம் விட்டுவிட்டார்கள். அதிகம் சிக்கல் இல்லாமல் மிக நேரடியாக, ஹீரோ நல்லவர், வில்லன் கெட்டவன் என்று காண்பிக்கவும் சில்வியாவின் திரைப்பட கதாபாத்திரமான சிந்தியாவுக்குக் கொஞ்சம் கருணைப்பார்வையைக் கொண்டு வரவும் ஏற்றவாக்கில் திரைக்கதை அமைத்துவிட்டார்கள். இது மட்டுமே படத்தில் கற்பனை, இதுவே மைனஸ் பாய்ண்ட்டும் கூட. கமாண்டர் சுட்டுக் கொல்ல ஒரு இந்தியப் பற்று ரீதியிலான காரணம் ஒன்றைக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படம் என்ற அளவில் கூட இது தேவையில்லை என்றே நினைக்கிறேன். இது இல்லாமலேயே இத்திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஈர்ப்பை உண்டாக்கவே செய்திருக்கும். 1960களில் நடக்கும் இந்த வழக்கு, அந்தக் காலகட்டத்தைக் கண்முன் கொண்டு வரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

சிந்தியாவின் திருமணத்துக்கு வெளியிலான தொடர்பை கமாண்டர் கண்டுபிடிக்கிறார். ஆனால் உண்மை வாழ்க்கையில், தன்னால் மறைக்கமுடியாது என்று வெளிப்படையாகவே சில்வியா சொல்லி இருக்கிறார். பிரேம் அஹுஜா தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், சம்மதம் தெரிவித்திருந்தால் கமாண்டரை விவாகரத்து செய்துவிட்டுத் திருமணம் செய்துகொண்டிருப்பார் என்றும் தெரிகிறது. கமாண்டர் தற்காப்புக்காகக் கொன்றார் என்று ஜூரி பெரும்பான்மையாகத் தீர்ப்பளிக்கிறது. திரைப்படத்தில் பார்த்தபோது இதை எப்படி நம்பமுடியும் என்று யோசித்த எனக்கு, அப்படித்தான் உண்மையில் நடந்தது என்று அறிந்தபோது, சிரித்துக்கொள்ளவே முடிந்தது.

சுட்டுக்கொன்றுவிட்டுச் சரணடையும் கமாண்டரைக் காப்பாற்ற ஒரே வழி, இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை அல்ல என்று நிரூபிப்பது. ‘ஒரு இரவு படுத்துவிட்டால் உன் மனைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டுமா’ என்று பிரேம் அஹுஜா கேட்டதால் கொன்றதாகச் சொல்லப்படும் காரணத்தை ஜூரி ஏற்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்தில் கமாண்டருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. உச்ச நீதி மன்றம் அதை உறுதி செய்கிறது.

ஜூரியின் முடிவில் விடுதலையாகும் கமாண்டர் தன் மனைவியுடன் சுவிஸ்ஸில் குடியேறுவதோடு திரைப்படம் முடிவடைந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவங்கள் அதற்குப்பிறகுதான் விறுவிறுப்படைந்திருக்கின்றன.

மக்கள் மத்தியில் கமாண்டருக்கு ஆதரவு பெருகிறது. அவர் செய்தது சரிதான் என்று ஒரு தரப்பு உருவாகி வர ப்ளிட்ஸ் பத்திரிகை தீவிரமாகச் செயல்படுகிறது. கமாண்டர் ராமன், சில்வியா சீதை, அஹுஜா சீதாவைக் கவர்ந்த ராவணன். மேலும் அஹுஜா ஒரு ப்ளே பாய். இப்படிச் செய்திகளை மிகத் தெளிவாகப் பரப்புகிறது பத்திரிகை. 25 பைசா மதிப்புள்ள பத்திரிகையை 2 ரூ கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். தெருவில் அஹுஜாவின் டவலும் நானாவதியின் பிஸ்டலும் விற்கப்படும் அளவுக்கு வழக்கு பிரபலமாகிறது. ஜூரியின் உறுப்பினர்களும் இப்பத்திரிகையின் கருத்தையே தங்கள் கருத்தாக மாற்றிக்கொள்ளும் அளவுக்கு அப்பத்திரிகை தொடர்ச்சியாக இது தொடர்பான செய்திகளை வெளியிடுகிறது. பின்னர் ஜூரி முறையே ஒழிக்கப்பட இவ்வழக்கு ஒரு முக்கியமான காரணமாகிறது.

பார்ஸி சமூகத்தினர் பங்கேற்கும் ஒரு ஊர்வலத்தை பத்திரிகை நடத்துகிறது, கமாண்டருக்கு ஆதரவாக. கமாண்டர் விடுதலை செய்யப்படக்கூடாது என்கிறது சிந்தி சமூகம். விஜயலக்ஷ்மி பண்டிட் (நேருவின் சகோதரி) கவர்னர். சிந்தி சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு வியாபாரிக்கும் கமாண்டருக்கும் மன்னிப்பு தந்து இப்பிரச்சினையை புத்திசாலித்தனமாக (!) கையாளுகிறார்.

இதற்குப் பின் சில்வியா, தன் கணவர் கமாண்டர் நானாவதியுடனும் தன் குழந்தைகளுடனும் கனடா செல்கிறார். பின்னர் பொது உலகத்துடன் தொடர்பே இல்லை. 2003ல் கமாண்டர் மரணமடைகிறார்.

சில்வியா ஆங்கிலேயர் என்பதை வைத்து இதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது. அவர் இந்தியராக இருந்தால் ஒரு இந்திய மனம் இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதை யோசிக்கவே மலைப்பாகத்தான் இருக்கிறது. இத்திரைப்படம் ஒரு கற்பனையான சந்தோஷத்தைத் தரவும் செய்கிறது.

திரைப்படத்துக்குப் பின்னான தேடல் ஒரு திரைப்படத்தைவிட சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்தது ஆச்சரியம். இந்த சுவாரஸ்யம்தான் இத்திரைப்படத்தைக் கூட, படம் பார்த்த பின்பு, பிடித்த ஒன்றாக மாற்றுகிறது.

குளித்துவிட்டு வெளியில் வரும் பிரேம் அஹுஜாவைக் கொன்றிருந்தால் எப்படி டவல் கொஞ்சம் கூட அவிழவில்லை என்ற கேள்வியின்மூலம் கமாண்டருக்குத் தண்டனையை உறுதி செய்யக் காரணமாக இருந்தவர் ராம் ஜெத்மலானி. இவரது வாழ்க்கையின் வெற்றிகரமான துவக்கப்புள்ளி இந்த வழக்கு என்கின்றன பல பத்திரிகைகள். இந்த டவல் தொடர்பான கேள்விக்குச் சரியான பதிலைத் திரைப்படத்தில் இயக்குநர் அளிக்கவில்லை. அதை அப்படியே விட்டிருக்கிறார். அது ஏன் என்று படம் பார்த்தபோது உறுத்தியது. ஆனால் வரலாற்றில் இந்த டவலின் இடம் இதுதான் என்று அறிந்தபோது, இயக்குநர் தெளிவாகவே இருந்திருக்கிறார் என்பது புரிந்தது.

உண்மை வரலாற்றில் சில்வியா விரும்பியே அஹுஜாவுடன் உறவு கொண்டிருக்கிறார். தன் கணவர் தன்னைவிட்டு பல நாள்கள் பிரிந்து கப்பலில் சென்றுவிடுவதால் ஏற்படும் தனிமையில் அவர் இந்த முடிவுக்கு வருகிறார். அஹுஜா தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதை அறிந்தே அவர் விலகுகிறார். திரைப்படத்தில் அது சரியாகப் படமாக்கப்பட்டுள்ளது என்றாலும், பிறகு இந்திய மனங்களை திருப்திபடுத்துவதற்காக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. விக்ரம் மஹிஜா (அஹுஜா என்ற நிஜத்தின் திரைப்படப் பாத்திரம்) கமாண்டரைப் பழி வாங்க இப்படி திட்டம் தீட்டினார் என்று பின்னால் காட்டப்படுகிறது.

*

வரலாற்றை ஒட்டிய திரைப்படம் ஒன்று தரும் சுவாரஸ்யம் எல்லையற்றது. தல்வார் திரைப்படம் சிறந்த உதாரணம். இத்திரைப்படத்தை தல்வார் திரைப்படத்தின் மேன்மையுடன் ஒப்பிட முடியாது என்றாலும், உண்மையிலிருந்து கொஞ்சம் மட்டுமே விலகி ஓரளவு நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். இலியானா சரியான தேர்வு. அக்ஷய் குமாருக்கு சிறந்த நடிகருக்கான விருதெல்லாம் அராஜகம்.

தமிழில் இதுபோன்ற வரலாற்றை ஒட்டிய திரைப்படங்கள் வருவதே இல்லை. ஆனால் ஹிந்தியில் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். எமர்ஜென்ஸி, மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம், தினகரன் நாளிதழில் வேலை செய்த இரண்டு பேர் எரிக்கப்பட்டது, வாச்சாத்தி, கீழ்வெண்மணி, திராவிட இயக்கத்தின் அரசியல், ஈழப் பிரச்சினை என எதையும் நாம் தொடவே இல்லை. எங்காவது ஒரு வசனமாகவோ அல்லது ஒரு காதல் திரைப்படத்தில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு காட்சியாகவோ மட்டுமே வைக்கிறோம். அரசியல் திரைப்படமாக எடுப்பதே இல்லை. நம் ஆட்சியாளர்கள் எடுக்கவிடுவதும் இல்லை. நாம் பார்ப்பதும் இல்லை. இதில் யாரைக் குறை சொல்லி என்ன செய்ய? மலையாளத்திலும் ஹிந்தியிலும் இவற்றையெல்லாம் பார்க்கும்போது பெருமூச்சு விடத்தான் வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று இதைக் கொஞ்சம் முயன்றிருக்கிறது. ஆனாலும் முழுமையாகக் கைகூடவில்லை. வணிக ரீதியான வெற்றிக்காகப் பலியிடப்பட்டுவிட்டது. தமிழில் எல்லாப் படங்களுக்குமே இந்த அவலம் தவறாமல் நேர்ந்துவிடுகிறது. தமிழ்த் திரைப்பட உலகம் இதிலிருந்து விரைவில் மீளும் என்று நம்புவோம்.

பின்குறிப்பு: ரஸ்டம் திரைப்படம் பார்த்துவிட்டு, கூகிள் தேடிப் படித்த கட்டுரைகள், பேட்டிகளின் வழியாக எனக்குத் தெரிந்தவற்றை எழுதி இருக்கிறேன். மேலதிகத் தகவல்கள், திருத்தங்கள் இருந்தால் சொல்லுங்கள். நன்றி.

Share

ஒரு செல்ஃபிகாரனின் குறிப்புகள் – சிறுகதை

என் சிறுகதை ‘ஒரு செல்பிகாரனின் குறிப்புகள்’ இன்று (02-03-2018) வெளியாகி இருக்கும் குங்குமம் இதழில் வெளியாகி இருக்கிறது. அனைவரும் வாசித்துவிட்டு, நன்றாக உள்ளது என்றோ மிக நன்றாக உள்ளது என்றோ கருத்துகளைத் தாராளமாகச் சொல்லலாம்.

குங்குமம் இதழுக்கு மிக்க நன்றி. 

Share

அப்பா

அப்பா

அப்பாவின் 11வது ஆண்டு நினைவு நாள் (திதி) இன்று. கிருஷ்ண பக்ஷம் பால்குண மாதம் பிரதமை திதி. அப்பாவின் மரணம் எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். நிறைய நாளாகவே முடியாமல்தான் இருந்தார். சென்னையில் என்னுடன் இருந்தவர் வம்படியாக திருநெல்வேலிக்கு என் அண்ணா வீட்டுக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரை நெல்லைக்கு ட்ரைனில் அழைத்துக் கொண்டு சென்றபோதே ரொம்பவும் பலகீனமாகவே இருந்தார். முகமே களையின்றித்தான் இருந்தது. அழைத்துச் சென்ற ஒரு மாதத்தில் வைகுண்ட பிராப்தி அடைந்தார். அப்பாவின் மரணம் எனக்குப் பெரிய வேதனையைத் தரும் விஷயமாக இருந்தது. இன்னொரு பக்கம் விடுதலையாகவும் இருந்தது. அப்பாவின் சிகிச்சைக்கு அளவுக்கு மீறிப் பணம் செலவழித்திருந்தோம். இனியும் தாங்கமுடியுமா என்ற கேள்வி வந்தது. படுத்த படுக்கையாகிவிட்டால் யார் எப்படி கவனித்துக்கொள்வது என்று யோசனை செய்யத் தொடங்கி இருந்தோம். எத்தனை நாள் இப்படி சமாளிக்கமுடியும் என்று யோசிக்கத் துவங்கிய இரண்டாம் நாளில் அப்பா இறைவனடி சேர்ந்துவிட்டார் யாருக்கும் எக்குழப்பத்தையும் வைக்காமல்.

அப்பா ரொம்ப குழந்தை மனம் கொண்டவர். அப்பாவி. யாரும் அவரை ஒரு நொடியில் ஏமாற்றிவிடலாம். அசட்டுக் கோபம் கொள்பவர். கோபம் கொண்டு எதாவது சொல்லிவிட்டு, திட்டு வாங்கியவர் வருத்தப்படுவதைவிட நூறு மடங்கு அதிகம் வருத்தப்படுபவர். அம்மாவின் சொல்லை மீறி எதையும் செய்யத் தெரியாதவர். தாத்தா முன் நின்று பேசவே அப்பாவுக்கு 60 வயது தேவைப்பட்டது. குடும்பத்தில் உள்ள எல்லோர் மீதும் பாசமாக இருப்பவர். அப்பாவுக்கு ஊர் உலகத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்கள் மட்டுமே.

கடைசி காலத்தில் என்னுடன் இருந்த நேரத்தில் நான் அவருடன் ஓவராக விளையாடிக்கொண்டிருப்பேன். எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருந்தார். குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம். அண்ணாவின் இரண்டாவது மகனுக்கு அரவிந்த் வாசன் என்று பெயர். அதில் உள்ள வாசன், என் அப்பாவின் நினைவாக அவனுக்கு வைக்கப்பட்டது. இதனால் அரவிந்த் மேல் கொஞ்சம் அதிகப் பாசம்.

என் சின்ன வயதில் அப்பாவுக்குத் தெரியாமல் அப்பா சேமித்து வைத்திருந்த டப்பாவில் இருந்து காசை எடுத்துக்கொண்டு போய் கல்லூர்ப் பிள்ளை கடையில் சாப்பிடுவேன். அந்த ரோஸ் நிற டப்பாவில் ஐந்து ரூபாய் காயின்களாகப் போட்டு வைத்திருப்பார். அந்த டப்பாவைத் தூக்கக்கூட முடியாது. அதிலிருந்து பத்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் பூரி வடை என சாப்பிட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்துவிடுவேன். கடையின் முதலாளி என்னிடம், ‘இது மாதிரி நிறைய காயின் வெச்சிருக்கியா’ என்று கேட்டபோது சுதாரித்துக்கொண்டு, பத்து ரூபாயைத் திருடி அதைப் பணமாக மாற்றி மீண்டும் அக்கடைக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒருநாள் தற்செயலாக அப்பா சிரித்துக்கொண்டே, ‘நீ காயின் எடுக்கறன்னு எனக்குத் தெரியாதா என்ன’ என்றார். எனக்கு பக்கென்றிருந்தது. அத்தனை ஏமாளி இல்லை போல என்பதைவிட, ரொம்ப விவரமானவர் என்ற எண்ணமும், அவன் எடுத்துக்கட்டும் என்ற எண்ணமும் இருப்பது அதிகம் நெகிழச் செய்தது. இது தெரியவும் இனி பணமே எடுக்கக்கூடாது – என்று சினிமா ரேஞ்சில் எல்லாம் யோசிக்காமல் பதினைந்து ரூபாயாக எடுக்க ஆரம்பித்தேன் – குற்ற உணர்வில்லாமல். (என் அக்கா ஒரு தடவை ஐந்து ரூபாயை மட்டும் திருடி மாட்டிக்கொண்டு செமயாக அடி வாங்கினார், அவர் திருடத் தேர்ந்தெடுத்ததும் சரியாக என் அப்பாவைத்தான். இதை இங்கே சொல்வது எப்போதுமே அப்பா திருடப்படுபவராக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே.)

அடிக்கடி என்னிடம் சொல்வார், ‘நீ சின்ன வயசுல நடு ராத்திரில அழுவ, அந்த நேரத்துல கடைக்குப் போய் நிப்பிள் வாங்கிட்டு வருவேன், இப்ப இதையெல்லாம் ஒனக்கு சொல்ல வேண்டி இருக்கு’ என்பார். ஏன் முதல்லயே நிப்பிளை தயாரா வெச்சிக்கலை, ஒரு குழந்தை அழும்னு உனக்கு தெரிய வேண்டாமா என்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். 🙂 ஆனாலும் என் நினைவில் அப்பா நிப்பிள் வாங்க இரவில் கடைக்குச் செல்வது ஒரு காட்சி போலவே பதிந்துவிட்டது. என் வீட்டில் அத்தனை பேரும் இதைச் சொல்வார்கள்.

அப்பா அவரது சின்ன வயசில் ரொம்ப நோஞ்சானாக இருந்தார் என்பார்கள். பால கண்டம் என்று என்னவோ சொன்னார்களாம். அதனால் அப்பாவை (அப்போது அவர் குழந்தை) படுக்க வைத்து அவரைச் சுற்றி ஏகப்பட்ட உணவு சமைத்து வைத்து எல்லாம் ஒனக்குத்தான் என்று சொல்லி ஒரு சடங்கு செய்ததாகச் சொல்வார்கள். அப்பா கடைசி காலம் வரையில் அதிகம் எதிர்ப்பு சக்தி இல்லாதவராகவே இருந்தார் என்பதே என் மனப்பதிவு.

அப்பாவுக்கு எதை எப்போது எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாது. சரியான வார்த்தைகளைச் சொல்லவும் தெரியாது. ஒருதடவை வளைகாப்பு வீட்டுக்குப் போய்விட்டு காப்பரிசியுடன் வந்தவர், வீட்டுக்கு வந்ததும் வளைகாப்பு வீட்டில் வாய்க்கரிசி கொடுத்தாங்க என்று சொல்லி வீட்டில் வாங்கிக் கட்டிக்கொண்டார். அனந்த விரதப் பண்டிகைக்குக் கயிறு கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியைப் பற்றி என் தாத்தாவுக்கு இப்படி கடிதம் எழுதினார், “குடும்பத்துடன் அனைவரும் கயிறு மாட்டிக்கொண்டோம்’ என்று. பக்கத்து வீட்டு மாமி என்னவோ பேசவந்தவர், ‘பொழுதே போகலை வீட்டில்’ என்று சொன்னதற்கு என் அப்பா, ‘அப்ப குதிங்கோ’ என்றார். அந்த மாமிக்கு எப்படி ரீயாக்ட் செய்வதென்றே தெரியவில்லை. ஒரு தடவை என் அண்ணியிடம், ‘தலை வலிக்குது, கடுகை தேச்சிப் போடு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அண்ணி எத்தனை தடவை சொல்லியும், இதை உரைச்சி போட முடியாதா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். கொஞ்சம் நேரம் கழித்துத்தான் பிடிபட்டது அவர் சுக்கை நினைத்துக்கொண்டு கடுகைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது. (கன்னடத்தில் சார்சிவ என்றால் கடுகு, சுண்ட்டி என்றால் சுக்கு.) இப்படி பல நிகழ்ச்சிகள். இன்றும் வீட்டில் சொல்லிச் சொல்லிச் சிரிப்போம்.

அப்பாவுடன் பழகியவர்கள் அப்பாவை எப்படி மதித்தார்கள் என்பது குறித்த சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் இதை மீறி அப்பாவுடன் அன்பாகவே இருந்தார்கள். அப்பாவை எப்போதும் மட்டம் தட்டும் ஒரு கூட்டம் ஒன்றும் உண்டு. ஆனாலும் அப்பா அவர்கள் எல்லோரிடமும் அன்பாக இருந்தார். ஏனென்றால் அப்பாவுக்கு மற்றவரை மட்டம் தட்டத் தெரியாது. அன்பாக இருக்க மட்டுமே தெரியும். மற்றவர்கள் சொல்வதை நம்ப மட்டுமே தெரியும். ஏன் ஒருத்தன் பொய் சொல்லவேண்டும் என்று மட்டுமே யோசிக்கத் தெரியும். எல்லாம் இழந்து நின்ற போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று புரிந்துகொள்ளத் தெரியும். அதையும் விளக்கிச் சொல்ல அம்மா வேண்டும். இன்னும் நினைவிருக்கிறது, அப்பா நான்கு பேருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம். அப்பாவைத் தவிர மற்றவர்கள் யாரென்று நினைவில்லை. எப்போதோ எடுத்த போட்டோ. அதில் அப்பா ஒரு ஓரத்தில் கீழே விழுந்துவிடும் வாக்கில் பாதி தொடையில் உட்கார்ந்திருப்பார். அப்போது அந்த சின்ன வயதிலேயே நான் யோசித்திருக்கிறேன், ஏன் அப்பாவுக்கு நல்ல இடம் கொடுத்து அவர்கள் புகைப்படம் எடுக்கவில்லை என. ஆனால் அந்த நான்குபேரில் அப்பாதான் அதிகம் சிரித்துக்கொண்டிருப்பார். அப்பா இப்படியே உருவானவர். இதனால் அவர் இழந்தது கொஞ்சம் பணமாக இருக்கலாம். ஆனால் அன்பில் அவர் வென்றார். இன்று என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் அப்பாவின் மீது பெரிய மரியாதையும் அன்பும் இருக்கிறது. இதுதான் அப்பாவின் சொத்து.

கடைசியாக ஒரே ஒரு வார்த்தை, இத்தனை தூரம் நான் அப்பா அப்பா என்று சொன்னது, என் அப்பா, வளர்ப்பு அப்பா, சொந்தத்தில் பெரியப்பா. இந்த தியாகத்தை எந்நாளும் வார்த்தைகளில் விளக்கமுடியாது. ஒவ்வொரு விஷுவின் போதும் (வேப்பம்பூ பச்சடி சாப்பிடச் சொல்லி உயிரை எடுப்பார்) ஆடிப் பூரத்தின் போதும் (அன்றுதான் பிறந்த நாள்) அப்பாவின் நினைவு தானாக வரும். மறக்கமுடியாத மனிதர் என்பதில் எந்தப் பொருளும் இல்லை, மறக்கக்கூடாத மனிதர் என்பதே சரியானது.

Share

இ புத்தகமும் அச்சுப் புத்தகமும் – ஆறு மனமே ஆறு

இ புத்தகமும் அச்சுப் புத்தகமும் – ஆறு மனமே ஆறு

அனைவருக்கும் ஒரு தன்னிலை விளக்கம். இதை எழுதுவதன் ஒரே நோக்கம், இன்றைய நிலையில் கிண்டிலில் வரும் இபுத்தகங்களின் விற்பனை எந்த அளவுக்கு உள்ளது என்பதைச் சொல்ல மட்டுமே. மற்றபடி எந்த வித வம்பு வழக்குகளிலும் சிக்கிக் கொள்ளும் ஆர்வமில்லை. ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தை, அது அச்சுப் புத்தகமாக இருந்தாலும் இபுத்தகமாக இருந்தாலும், தானே வெளியிட்டுக்கொள்ளும் அவரது உரிமையை ஆர்வத்தை அவருக்குக் கிடைக்கும் அதிக லாபத்தை (ஒருவேளை கிடைத்தால்) நான் அதை நிச்சயம் மதிக்கிறேன். அதற்காக மகிழ்கிறேன்.

இன்னொரு விளக்கம் – இக்கட்டுரையின் நோக்கம் எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும்தானே ஒழிய, அவர்களது உரிமையிலோ ஆர்வத்திலோ தலையிட அல்ல. முழுமையான ஒரு புரிதல் ஒருவேளை எழுத்தாளர்களை விரைந்து கூடச் செயல்படச் சொல்லலாம்.

கடைசி விளக்கம் – ஒரு வாசகராக ஐ லவ் கிண்டில். இ புத்தகங்களே படிக்க இலகுவானவை. என் கருத்தில் மாற்றமில்லை. இக்கட்டுரை மின் புத்தக வாசகர்களுக்கானது அல்ல. விற்பனையாளர்களுக்கானது.

இனி…

நான் ஒரு சாதாரண எழுத்தாளன். உண்மையில் எழுத்தாளன் கூட அல்ல. எழுதுபவன். இதுதான் சரி. எழுத்தாளன் என்பது ஒரு நினைப்பு. அதுவே ஒரு மனிதனை எழுத்தாளனாக்குகிறது. எனக்கு அப்படி ஒரு நினைப்பு இல்லை. ஆகவே நான் எழுத்தாளனாக முடியாது. எழுதித் தொலைப்பால் புத்தகம் போட்டிருக்கிறேன். அச்சுப் புத்தகமும் மின்னூலும். கிண்டிலிலும் கிடைக்கிறது. எப்போதாவது திடீரென ஒன்றிரண்டு விற்கும்.

இன்னொரு உதாரணம் வேண்டும். நம் நண்பர் கிருஷ்ண பிரபுவை எடுத்துக் கொள்ளலாம். அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்று வைத்துக்கொள்ளுங்கள். (மன்னிச்சூ கிபி.) இலக்கியவாதியின் ஆழமும் சுஜாதாவின் பிரபலமும் உள்ளவர் எனக் கொள்ளுங்கள். இவரது புத்தகம் வெளியாவது அச்சிலும் மின்னூலிலும் முக்கியம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இனி சில விஷயங்களைப் பார்க்கலாம்.

என் புத்தகம் வெளியிட ஒரு பதிப்பகம் தேவையில்லை. ஏனென்றால் என் புத்தகம் விற்பதே சொற்பமாகத்தான். உண்மையில் ஒரு பதிப்பகம் அதிலும் பிரபலமான பதிப்பகம் என் நூலை வெளியிடுமானால் நிச்சயம் கூடுதலாக விற்கும். 200% அதிக விற்பனை நடக்கலாம். இந்த சதவீதக் கணக்கு நம்மைக் குழப்பக் கூடியது. நானாக அச்சிடும் என் புத்தகம் 10 விற்கும் என்றால் ஒரு பதிப்பகம் அச்சிடும்போது அது 30 விற்கும். 200% அதிக விற்பனை! எனவே ஒரு பதிப்பகம் என் புத்தகத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் ஒன்றுதான். இதே கதைதான் இ புத்தகத்துக்கும். அதனால் ஒரு பதிப்பகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நானே 50 புத்தகங்கள் அச்சடித்து நானே கிண்டிலில் விற்றுக்கொள்ளலாம். எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் எனக்கு லாபமும் இல்லை என்பதும் இன்னும் கொஞ்சம் யோசித்தால் முதலீட்டுப் பணம் வகையில் சின்ன நஷ்டமும், என் நேரத்தை நான் செலவழித்த வகையில் அதிகம் நஷ்டமும் கூட இருக்கலாம் என்பது புரியும். அனுபவத்தில் சொல்கிறேன். இதில் முக்கியமான விஷயம், நான் தினம் தினம் எழுதிக் குவிப்பவன் அல்ல. என் எழுத்து எப்போது வரும் என்று என் வாசகர்கள் காத்திருக்கவில்லை. நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தேடிச் சென்று வாங்குபவர்கள் கிடையாது. எனவே எல்லா வேலையையும் விட்டுவிட்டு இதையே என்னால் முழுமையாகச் செய்யமுடியும். செய்தாலும் ஒரு மாதத்துக்கு எனக்கு அதிக பட்சம் 200 ரூ வரலாம். ஆம், இரு நூறு ரூபாய்தான். இதையே என்னைவிடப் பெரிய எழுத்தாளர், என்னைவிட அதிகம் மார்க்கெட்டிங்கில் உழைப்பவர் என்றால் மாதம் 400 ரூ வரலாம். ஆனால் இதே வேலையாக இருக்கவேண்டும். விடாமல் என் புத்தகத்தை வாங்குங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இதெல்லாம் இல்லையென்றால் அந்த 200 ரூபாயும் வராது. ஒரு மாதம் போராடி 3000 ரூ ராயல்டி பெற்றுக் காட்டினால் அடுத்த மாதமும் அதே பணம் வரும் என்பது நிச்சயமில்லை. நிச்சயமில்லை என்ன, சத்தியமாக வராது!

இப்போது கிருஷ்ண பிரபுக்கு வருவோம். அவர் சூப்பர் ஸ்டார். தினமும் எழுதிக் குவிப்பவர். ஆழமாக விரிவாக. அவர் ஒரு விஷயத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள பலர் காத்திருக்கிறார்கள். பெரிய கூட்டம் ஒன்று அவரை விடாமல் பின்தொடர்கிறது. என்று வைத்துக்கொள்வோம். ஒரு புத்தகம் வெளியானால் அச்சுப் புத்தகமென்றால் 1000 பிரதிகள் உடனே உறுதியாக விற்கும். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்த மூலையில் யார் அவரது புத்தகத்தை ஆர்வமாக வாங்குவார்கள் என்று நமக்குத் தெரியாது. எப்படி வாங்குவார்கள் என்பதும் தெரியாது. தேடி வந்து வாங்குபவர்கள் ஒரு பக்கம் என்றால், கிருஷ்ண பிரபுவின் பெயர் கண்ணில் பட்டதும் அப்புத்தகத்தை வாங்கும் கூட்டம் இன்னொரு பக்கம். அதாவது அவர்கள் கண்ணில் பட்டால் அவரது புத்தகத்தை வாங்கிவிடுவார்கள். இப்படி ஒரு நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இங்கேதான் ஒரு பதிப்பகம் உங்களுக்குத் தேவையாகிறது. உங்களால் செய்யமுடியாததைப் பதிப்பகம் செய்யும். உங்கள் புத்தகத்தை தமிழ்நாடெங்கும் கொண்டு போய்ச் சேர்க்கும். நீங்கள் தினம் தினம் எழுதவேண்டிய தேவை இருப்பதால் எந்தப் புத்தகத்தை எங்கே லே அவுட் செய்வது, எங்கே அச்சிடுவது, எங்கே விற்பது, எப்படிப் பணம் வாங்குவது, பணம் திரும்ப வருமா, எங்கே ஸ்டாக் வைப்பது, எப்படி ரீ ப்ரிண்ட் செல்வது, யாரை வைத்து ப்ரூஃப் கரெக்ஷன் போடுவது என்றெல்லாம் அல்லாட வேண்டியதில்லை. ஏனென்றால் இவையெல்லாம் எதோ ஒரு நிலையில் நீங்களே அறியாத வண்ணம் உங்களது எழுத்தைப் பாதிக்கும். இதை நீங்கள் வாதிடலாம். ஆனால் நான் நிச்சயம் சொல்கிறேன், இது உங்கள் எழுத்தைப் பாதித்தே தீரும். எனவே இச்சிடுக்குகளில் இருந்து நீங்கள் ஒதுங்கியே நிற்பது நல்லது. ஒரு பதிப்பகம் ராயல்டி தரவில்லை என்றால் மட்டுமே நீங்கள் அடுத்து என்ன என்று யோசிக்கவேண்டும். இல்லையென்றால் அப்பதிப்பகத்துடனேயே அல்லது சில பதிப்பகங்களுடனேயே நீங்கள் இருப்பதுதான் உங்களது நட்சத்திர அந்தஸ்துக்கு நல்லது.

இ புத்தகத்தை மட்டும் எழுத்தாளர்களே வெளியிட்டுக் கொள்வதும் இதே விஷயத்தைப் பொருத்ததுதான். நீங்கள் எழுதித் தள்ளும்போது அதை இ புத்தகமாக்குவது என்பது இன்னொரு வேலை. அதற்கும் ப்ரூஃப் ரீடிங் வேண்டும். அதை இ புத்தகமாக மாற்றவேண்டும். அல்லது வேர்ட் ஃபைலில் சரியாக லே அவுட் செய்யவேண்டும். அதற்கு ஒரு ஆள் வேண்டும். நீங்களே செய்தால் உங்கள் எழுத்து பாதிக்கப்படும். நீங்கள் 100 புத்தகம் எழுதி அதைப் பதிப்பகம் எடிட் செய்திருக்கும். அந்த எடிட் செய்த ஃபைலும் நீங்கள் தந்திருந்த திருத்தங்களும் வேர்ட் ஃபைலில் இருக்காது. உங்களுக்கு மறந்திருக்கலாம். அல்லது நீங்கள் கையில் எழுதி அதைப் பதிப்பகம் தட்டச்சிட்டிருக்கும். இப்படி ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

இன்றைய நிலையில் அமேஸான் என்பது உங்களுக்கு எந்த விதப் பணத்தையும் கொட்டிக் கொடுக்கப் போவதில்லை. என்னைப் போன்ற துக்கடா எழுத்தாளர்களுக்கு மாதம் 500 ரூ வந்தால் ஆஹோ ஒஹோ என்போம். ஆனால் நம் கிருஷ்ண பிரபு போன்ற நட்சத்திரர்களுக்கு மாதம் 1000 ரூ என்பது ஒன்றுமே அல்ல. ஏனென்றால் இன்றைய நிலையில் விற்பனை அவ்வளவுதான் நடக்கிறது. ஒரு பதிப்பகம் 100 புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தால், இ புத்தக விற்பனை மட்டும் அதிக பட்சம் மாதம் 20,000 ரூபாய்க்கு நடக்கலாம். (குத்து மதிப்பாக.) அதில் 15000 ரூ ஏதேனும் 10 புத்தகங்களில் நடந்த விற்பனை மூலம் கிடைத்திருக்கும். மீதி 5000 ரூ விற்பனை என்பது 90 புத்தகங்களில் நடந்திருக்கும். அந்த 90 புத்தகங்களில் ஒரு புத்தகம் நீங்கள் எழுதியதாக இருந்தால், உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று யோசியுங்கள். அச்சுப் புத்தகத்தைக் கைவிட்டுவிட்டு இந்த தொன்னூறுக்குள் ஒன்றாவதன் பலன் என்று சிந்தியுங்கள்.

என்னதான் நட்சத்திர எழுத்தாளராக இருந்தாலும், அவரது அனைத்துப் புத்தகங்களும் ஒரே போல் விற்காது. அதுவும் தமிழில் – சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தக விற்பனை பற்றி எழுதுவதையெல்லாம் படித்திருந்தாலே விளங்கும் நாம் வாசிப்பிலும் புத்தகம் வாங்குவதிலும் என்ன நிலையில் இருக்கிறோம் என. எனவே அவரது 80% புத்தகங்கள் குறைவான விற்பனையையே ஈட்டித் தரும். 80-20 விதி கொஞ்சம் அங்குமிங்கும் ஊசலிட்டாலும் பொருந்தி வருவதைப் பார்க்கலாம். இந்நிலையில் இ புத்தகம் தரும் விற்பனை என்பது நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்காது.

அப்படியானால் ஏன் ஒரு பதிப்பகம் இ புத்தகத்தை விற்பதையும் தானே செய்ய நினைக்கவேண்டும்? ஏனென்றால் அவர்கள் ஒரு புத்தகத்தின் எல்லா வேலைகளையும் அவர்களே செய்கிறார்கள். அச்சுப் புத்தகத்துக்கு முதலீடு செய்கிறார்கள். கரெக்ஷன் போட்டு இறுதி வடிவத்தைத் தயாராக வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து இ புத்தகம் செய்வது எளிது. அதற்கென ஒரு குழு இருக்கும். இ புத்தக விற்பனை மூலம் வரும் சிறிய தொகை ஒருவேளை பதிப்பகத்துக்கு உதவலாம். இதைத் தாண்டி வேறு காரணங்கள் இல்லை. என் கணிப்பில் ஒரு பதிப்பகம் இ புத்தகம் வேண்டாம் என்று சொல்வது எழுத்தாளர்களுக்கான தொல்லையே அன்றி வேறில்லை.

இப்போது என்னைப் போன்ற சிறு எழுத்தாளர்கள், இ புத்தக விற்பனையில் நிறையப் பணம் கிடைக்கும் என்று நம்பி, அச்சுப் புத்தகம் பதிப்பிட்டு ராயல்டி தரும் பதிப்பகத்தையும் விட்டுவிட்டு வந்தால், அது அவருக்குப் பெரிய அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கும். அதிலும் தீவிர இலக்கியவாதிகள் செய்யக்கூடாத தவறு இது. அச்சுப் புத்தக ராயல்டியும் குறைவாகத்தானே வருகிறது எனலாம். குறைந்த பட்சம் அச்சுப் புத்தகங்கள் உங்கள் வாசகர்கள் கண்ணிலாவது படும். இ புத்தகங்கள் இன்றைய நிலையில் யாரிடம் சென்று சேர்கிறது என்பதைச் சொல்லவே முடியாது. இதுதான் நிலவரம்.

நாளை இ புத்தகங்கள் பெரிய அளவில் வளரலாம். அப்போதும் அது அச்சுப் புத்தகத்தை இல்லாமல் ஆக்காது. இப்போது உலக அளவில் இ புத்தகங்கள் பெரிய அளவில் அச்சுப் புத்தகங்களைத் தகர்த்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். இ புத்தகங்கள் அச்சுப் புத்தகங்களைத் தாண்டி வளர்ந்தாலும், அச்சுப் புத்தகமே வேண்டாம் என்னும் பதிப்பாளர் மட்டுமே இ புத்தகத்தைத் தானே பதிப்பித்துக் கொள்ள முடிவெடுப்பது நல்லது. இல்லையென்றால் பதிப்பாளருடனே இருப்பதுதான் புத்திசாலித்தனமானது.

எந்நிலையிலும் அச்சுப் புத்தகங்கள் அவசியம் என்பதை மனத்தில் வையுங்கள். அச்சுப் புத்தகத்தையும் நாமே அச்சிட்டு விற்கலாம் என்பது மிகத் தீவிரமான ஒரு முடிவு. அதை ஜஸ்ட் லைக் தட் எடுக்காதீர்கள். ஒரு பதிப்பகம் நடத்தி புத்தக விற்பனை செய்து அதிகம் முதலீடு செய்து புத்தகத்தை அச்சில் வைத்திருந்து அனைத்துப் புத்தகக் கண்காட்சிகளிலும் புத்தகங்களைக் கிடைக்கச் செய்வது சுலபமான காரியமல்ல.

இ புத்தகங்களில் 35% ராயல்டி, 70% ராயல்டி என்பதெல்லாம் ஒரு கணக்குதான். இவையெல்லாம் லட்சக்கணக்கில் விற்பனையாகும் புத்தகங்களுக்கு மட்டுமே ஒரு வேறுபாட்டைத் தரும். இதிலும் 35% ராயல்டி என்றால் இ புத்தகம் கிடைக்கும் நாடுகள் மற்றும் 70% ராயல்டி என்றால் புத்தகம் கிடைக்கும் நாடுகள் என்ற வேறுபாடுகளெல்லாம் உள்ளன என்று நினைக்கிறேன்.

சரியாக அமேஸான் ராயல்டி தந்துவிடும் என்பது உண்மைதான். இதுதான் வலுவான வசீகரமான காரணம். தனக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை மட்டும் ஓர் எழுத்தாளன் யோசித்தால், இதில் உள்ள வசீகரத்தைக் கண்டு ஏமாறமாட்டார். அச்சுப் புத்தகமும் இ புத்தகமும் பதிப்பகம் விற்று, அதற்கான பணத்தையும் பதிப்பகம் தருமானால் – கொஞ்சம் முன்ன பின்ன என்றாலும்!- அதில் வரும் ஒட்டுமொத்தப் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். அதிலும் ஒரு ஸ்டார் எழுத்தாளர் செய்யக்கூடாத தவறு – பதிப்பகம் ஆரம்பிப்பதும் இ புத்தகத்தைத் தானே போடுவதும்.

ஒட்டுமொத்தமாக இப்படி வரையறுக்கிறேன்.

* எழுத்தாளர்கள் வேலை எழுதுவது. முதன்மையானதும் கடைசியானதும் இதுதான். அடுத்த வேலை, ராயல்டி ஒழுங்காக வருகிறதா என்பதைக் கண்காணிப்பது.

* எப்படி விற்றாலும் உங்கள் புத்தகம் 100 தான் விற்கும் என்றால், நீங்களே பதிப்பகம் தொடங்கி நடத்தி விற்றுக் கொள்ளலாம்.

* நீங்கள் ஒரு நட்சத்திர எழுத்தாளர் என்று நீங்கள் நம்பினால் பதிப்பகம் நடத்தும் தவறை மறந்தும் செய்யாதீர்கள். அதே சமயம் ஒரு பதிப்பகத்திலிருந்து ராயல்டி ஒழுங்காக வருகிறதா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். அதைப் போலவே உங்கள் புத்தகம் தொடர்ந்து அச்சில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

* பதிப்பகம் ஒழுங்காகப் பணம் தரவில்லை என்பதால் பதிப்பகம் ஆரம்பிப்பதாக இருந்தால் சரிதான். ஆனால் அது அத்தனை சுலபமானதில்லை என்பதையும், வேறொரு பதிப்பகம் நிச்சயம் ஒழுங்காகப் பணம் தரும் என்று வாய்ப்பு இருந்தால் அதை அணுகுவதே மேலானது என்பதையும் எப்போதும் மனத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

* இ புத்தக விறபனையை நீங்களே செய்து கொள்வது – உங்கள் புத்தகம் எப்படியும் 100 தான் விற்கும் என்றால் நல்லதுதான். ஆனால் உங்கள் புத்தகம் அச்சுப் புத்தகத்தில் 1000 பிரதிகள் விற்கும் வாய்ப்பு இருக்குமானால், அந்தப் பதிப்பகமே இ புத்தக உரிமையையும் கேட்குமானால் அவர்களிடமே இபுத்தக உரிமையையும் தருவதுதான் நல்லது. ஏனென்றால் இன்றைய நிலையில் அச்சுப்புத்தகத்தின் ரீச்சே முக்கியமானது.

* அச்சுப் புத்தகம் 100தான் விற்கும் என்றாலும் இன்னொரு பதிப்பகம் அதைப் பதிப்பிக்குமானால் அது இன்னமும் நல்லதுதான். அதே பதிப்பகம் இ புத்தகத்தையும் வெளியிட விரும்பினால் அப்பதிப்பகத்திடமே இ புத்தக உரிமையையும் தந்துவிடுவது நல்லது. ராயல்டி வருவதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள். ராயல்டி வராத பட்சத்தில் நீங்கள் உங்கள் சொந்த முயற்சிக்குப் போவது சரியானது.

* உங்கள் புத்தகத்தை எந்தப் பதிப்பகமும் அச்சிடவில்லை என்றால், இ புத்தக மற்றும் அச்சுப் புத்தகத்தை நீங்கள் செய்துகொள்வதைப் புரிந்துகொள்ளலாம்.

* ஒரு பெரிய பதிப்பகம் இ புத்தக உரிமையைக் கோருவதில் எந்தப் பிழையும் இல்லை. அப்பதிப்பகத்தின் அச்சுப் புத்தக ரீச் உங்களுக்குத் தேவை என்றால் இதற்குச் சம்மதிக்கவும். இல்லையென்றால் விலகிவிடவும். கிருஷ்ண பிரபு மற்றும் நான் உதாரணம் இங்கே பொருந்தலாம். என்னைப் போன்ற எழுத்தாளர் விலகலாம். நஷ்டமில்லை. ஆனால் நட்சத்திர எழுத்தாளர் விலகக்கூடாது. நஷ்டம் அதிகம் உண்டாகும்.

* அமேஸானில் இன்றைய நிலையில் நட்சத்திர எழுத்தாளர்களைத் தவிர வேறு யாருக்கும் பெரிய அளவில் பணம் வராது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நட்சத்திர எழுத்தாளர்களுக்கும்கூட அச்சுப் புத்தகத்தில் இருந்து வரும் பணத்துக்கும் அமேஸான் பணத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கலாம் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

* நாளை இந்நிலைமை மாறும் என்பது நிச்சயமான உண்மை. ஆனால் – நாளை என்றால் எப்போது என்பதிலும் மாறும் என்றால் எந்த அளவு என்பதிலும் வரையறுக்கமுடியாத நிலை உள்ளது. என் கணிப்பில் அடுத்த பத்து வருடத்தில் அச்சுப் புத்தக விற்பனையில் பாதியை மட்டுமே இ புத்தகம் எட்டி இருக்கும். அச்சுப் புத்தகத்தின் ஒட்டுமொத்த விற்பனைச் சரிவு இன்னொரு பக்கம் இருக்கும். இ புத்தக விற்பனையின் அதிகரிப்பு இன்னொரு பக்கம் இருக்கும். இருந்தாலும் பத்து வருடம் கழித்தும் அச்சுப் புத்தக விற்பனையில் பாதி அளவே இ புத்தக விற்பனை இருக்கும். வேறேதேனும் டெக்னிகல் புரட்சி நடக்காத வரையில் இதுவே நடக்க அதிக வாய்ப்புள்ளது. கிண்டில் கருவி இலவசம், இணையம் இலவசம் என்ற நிலையெல்லாம் வந்தால் கொஞ்சம் மாற்றம் இருக்கும். இ புத்தக விற்பனையும் அச்சுப் புத்தக விற்பனையும் ஒரே அளவில் இருக்கலாம். அதுவும் பத்து வருடங்களுக்குப் பிறகுதான்.

நாளை நம் புத்தகங்கள் இ புத்தகமாக இருப்பது முக்கியமானது. அதற்காக ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தை இ புத்தகமாக வெளியிடவேண்டியதும் அவசியமானது. அதை ஒரு பதிப்பகம் செய்யாதபோது மட்டும் செய்தால் போதும்.

நாளையை நம்பி இன்றை விட்டுவிடாதீர்கள்.

சில பின்குறிப்புகள்:

01. நான் கிழக்கு பதிப்பகத்தில் இருக்கிறேன். இப்பதிவு என் தனிப்பட்ட பதிவு. கிழக்கு பதிப்பகத்துக்கும் இப்பதிவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

02. நான் எந்த எழுத்தாளரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. எழுத்தாளர்களின் புத்தகம் கிடைப்பது மட்டுமே வாசகனாக என் ஆசை. அதைத் தாண்டி வாசகனாக எனக்கு எத் தேவையும் இல்லை.

03. யார் கருத்தையும் தகர்க்கும் எண்ணம் சிறிதும் இல்லை. என் கருத்து முழுக்கத் தவறென்று நீங்கள் சொன்னாலும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இதை ஒரு பதிவு என்று படித்து, அதில் ஏதேனும் யோசித்து, உங்கள் முடிவுப்படி நடந்தால், நல்லது. அதுதான் நோக்கமும் கூட. நன்றி. சுபம்.

04. எனக்குத் தமிழ் படிக்க வராது என்பதால், இதில் வரும் பின்னூட்டங்களுக்கு, கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போகும் வருத்தம்தான் என்னை வாட்டுகிறது.

Share