Archive for ஹரன் பிரசன்னா

கவிதை

தூக்கம் வராத கண்களின் வழியே
மலைகள் பெருகின
தாவரங்கள் செழித்தன
என்றோ எங்கோ பார்த்த முகமொன்றின்
துல்லிய நினைவில்
அப்பெண் சிரித்தாள்
நம்பிக்கைக்கும் துரோகத்துக்குமான
ஒத்திசைவுப் புள்ளியில் நின்றபடி
எல்லாவற்றையும் கலைத்துப்போடும்
அவனும் நகைத்து நின்றான்
ஒரு செல் உயிரினம் ஒன்று
குரங்காகி மனிதனாகியது
யுகங்கள் கடந்தோடின
ஏதோ ஒரு மழைக்காலம் பொய்த்தது
கடும் வெய்யிலில்
கருகி நின்றன வாழை மரங்கள்
உயிர்த்தெழும் ஒரு விதையொன்றில்
மெல்லக் கண்மூட
உலகம் இருண்டது.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2019

நேற்று பொங்கல் நாளன்று ஒரு பார்வையாளனாகப் புத்தகக் கண்காட்சியில் பங்குபெற்றேன்.

தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டதால் எப்போதுமே தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமே கண்ணில் படும். இந்தமுறை அபிராமுக்காக ஆங்கிலப் புத்தகங்கள் பக்கம் போனேன். உண்மையில் அங்கே குவிந்திருக்கும் இத்தனை ஆங்கிலப் புத்தகங்களில் எதை எடுப்பது விடுப்பது என்றே தெரியவில்லை. ஆங்கிலப் புத்தகங்களில் அதிக பரிட்சயம் இல்லை என்பதால் எதைப் பரிந்துரைப்பது, எதை வேண்டாம் என்று சொல்வது என்றே விளங்கவில்லை.

தமிழ்ப் பதிப்பகங்கள் கடை போட்டிருப்பதால் அங்கிருக்கும் புத்தகங்களைப் பற்றி எதாவது கேட்டால் நான்கு பேருக்கு ஒருவராவது அதைப் பற்றிச் சொல்வார்கள். ஆங்கிலப் புத்தகங்கள் டிஸ்ட்ரிப்யூட்டர் வழியாக விற்பதால் அங்கிருப்பவர்களுக்கு, அரங்கினுள்ளே குவிந்திருக்கும் புத்தகங்கள் பற்றித் துளியும் தெரிந்திருக்கவில்லை. எழுத்தாளர்கள் பற்றி எந்தக் குறிப்பும் அவர்களுக்குத் தெரியவில்லை.

எதை எடுத்தாலும் 100 ரூ புத்தகக் கடையில் இருக்கும் புத்தகங்கள்தான் என்ன, அவை ஏன் இப்படி யாரும் எடுப்பாரற்று அங்கே வந்தன, அவற்றுள் நமக்குத் தேவையானவற்றைத் தேடி எப்படி எடுப்பது – ம்ஹூம். ஒரு துப்பும் இல்லை. இந்நிலை ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், ஆங்கிலப் புத்தகங்களின் விலைக்கு யானையை வாங்கிக் கட்டி மேய்த்துவிடலாம். சாணித் தாளில் அச்சடித்துப் பளபள அட்டை போட்டுக் கூசாமல் 699 ரூ என்கிறார்கள். அதிலும் கொஞ்சம் பிரபலமான புத்தகங்கள் என்றால், பக்கத்திலேயே போகத் தேவையில்லை. கிட்டத்தட்ட ஷாக் அடிக்கிறது.

கடைசியில் Selected Ghost Stories மட்டும் 100 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வந்தான் அபிராம். அதில் என்ன இருக்கிறது என்று மேய்ந்துவிட்டுப் படிக்கக் கொடுக்கவேண்டும். ஆங்கிலப் புத்தகங்களுக்கு கிண்டில், கூகிள் புக்ஸ்தான் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பாதி விலையிலும், கிண்டில் அன்லிமிடெட்டில் இலவசமாகவும் கிடைக்கும் புத்தகங்களைப் படித்து அறிவை இப்போதைக்கு வளர்த்துக்கொண்டால் போதும்.

பதிப்பாளராகப் புத்தகக் கண்காட்சியைப் பார்ப்பதற்கும் பார்வையாளனாகப் பார்ப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. அத்தனை பெரிய பிரமாண்ட அநாவசியப் புத்தகக் கண்காட்சியில் உட்கார இடம் இல்லை. வெளியே அரங்கில் பேச்சாளர்கள் பேசும்போது உட்கார இடம் கிடைப்பதும் கிடைக்காததும் பேசுபவரைப் பொருத்தது. நன்றாகப் பேசினால் நமக்கு உட்காரம் இடம் கிடைக்காது. இடம் கிடைத்தால் யாரோ பேசுவதைக் கேட்க சகிக்காது. ரொம்ப டெலிகேட் சிச்சுவேஷன்.

புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகள் ஒப்பீட்டளவில் இந்தமுறை பரவாயில்லை. இன்னும் பல மைல் தூரம் முன்னேற வேண்டும் என்றாலும், இதுவே ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம்.

வெளி கேட்-டில் இருந்து உள்ளே புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் வர ஒரு கிலோமீட்டராவது இருக்கும். ஏன் ஒருவர் இத்தனை தூரம் நடந்து வந்து புத்தகம் வாங்கவேண்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. பபாஸி கடந்த சில தினங்களாக இலவசப் பேருந்து வசதியை அறிவித்துள்ளது. அது எங்கே நின்று எந்த நேரத்தில் வரும் போகும் என்பது ரகசியம். ஒரு பேருந்து முழுக்க ஆள் ஏறினால்தான் எடுப்பார்கள் போல. நாம் நேரம்கெட்ட நேரத்தில் ஏறினால், அதிலேயே ஒரு நெடுந்தூக்கம் போட்டுவிடலாம். நானும் மனைவியும் குழந்தைகளும் அரை மணி நேரம் காத்திருந்தும் வண்டியைக் காணவில்லை. வேறு வழியின்றி ஓலா புக் செய்து ஆட்டோக்காரரிடம் விடாமல் வழி சொல்லி ஒருவழியாக கண்காட்சியை விட்டு வெளியே வந்தோம்.

ஒருவர் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற காரணங்களை எப்படித் தொகுத்தாலும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் மக்கள் நிஜமாகவே குவிகிறார்கள். பொழுதுபோக்குக்காக வருகிறார்களா? நிச்சயம் இல்லை. இதைவிடத் தரமான பொழுது போக்குகள் ஆயிரம் இருக்கின்றன. 10% தள்ளுபடி கிடைப்பதாலா? ஒருவர் புத்தகக் கண்காட்சியில் 1000 ரூபாய் புத்தகம் வாங்கினால் 100 ரூ தள்ளுபடி. இந்த நூறு ரூபாய்க்கு யாராவது 500 ரூபாய் செலவழித்து வருவார்களா? 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினாலே 300 ரூபாய்தான் தள்ளுபடி. புத்தகக் கண்காட்சியில் 10% பேர்கூட 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கமாட்டார்கள். ஒரே இடத்தில் புத்தகங்கள் குவிந்து கிடப்பதைப் பார்த்து அதிலிருந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருகிறார்களா? தேவைக்கு அதிகமாகக் குவிந்திருக்கும் ஓரிடத்தில் இருந்து உங்களுக்குத் தேவையான ஒன்றைத் தேர்வு செய்யவே முடியாது என்பதே யதார்த்தம். கிடைக்காத புத்தகங்களை வாங்கவா? இது ஒரு மாயை. கிடைக்காத புத்தகங்கள் எங்கேயும் கிடைக்காது. 🙂 ஒருவேளை இங்கே கிடைக்கத் தொடங்கினால் பின்பு எங்கேயும் கிடைத்துவிடும்.

இன்றைய நிலையில் வீட்டில் இருந்தபடியே புத்தகங்களை வாங்க ஆயிரம் வழிகள் உள்ளன. எத்தனையோ இணையக் கடைகள் வந்துவிட்டன. அலைச்சல் இல்லாமல் பொறுமையாகப் பார்த்து வாங்கலாம். தள்ளுபடி கிடைக்காது. கொரியர் செலவு கூடுதல் ஆகும். ஆனால் ஒருவர் தன் குடும்பத்துடன் கண்காட்சிக்கு வந்து செல்ல ஆகும் செலவைவிடக் குறைவாகவே ஆகும். ஆனாலும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். எழுத்தாளர்களுடன் பேசலாம் என்பதற்காகவா? இதற்காக வருபவர்கள் குறைவே. விற்கும் புத்தகங்களில் 5% எழுத்தாளர்களை இவர்களுக்குத் தெரிந்திருந்தாலே அதிகம் என நினைக்கிறேன். எப்படியோ சென்னை புத்தகக் கண்காட்சி பெரிய ஒரு பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு இயக்கமாகவே ஆகிவிட்டது. ஒரு வகையில் இது மகிழ்ச்சிதான். பெரிய சாதனைதான். ஆனாலும் எனக்கு இதற்கான விடைதான் கிடைக்கவில்லை.

ஒன்றே ஒன்று சொல்லலாம். இத்தனை பெரிய புத்தகக் கண்காட்சியில் அலைந்து, எளிதாக எங்கேயும் கிடைத்துவிடும் இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு மனநிறைவுடன் சென்றாலும்கூட அது ஒருவகையில் தோல்வியே. அரிய புத்தகங்களைத் தேடி வாங்கிக்கொண்டால் புத்தகக் கண்காட்சியின் பயன் முழுமையாகக் கிடைக்கலாம். எளிதாகக் கிடைக்கும் புத்தகங்களை எங்கேயும் பிறகு வாங்கிவிடலாம். இன்னொரு தேவை, குழந்தைகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்துவது. அப்போதும் புத்தகம் வாங்கும் பழக்கமும், அதற்குப் பின் ஒருவேளை அதைப் படிக்கும் வழக்கமும் வரலாம். இதுவே புத்தகக் கண்காட்சியின் மிக முக்கியத் தேவை என்று நினைக்கிறேன்.

புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. நம் நேரம், பணம் என எதையும் வீணாக்கமல் பயன்படுத்த யோசித்துச் செயல்படவேண்டும்.

Share

ஹிந்துயிஸமும் ஹிந்து மதமும்

சசி தரூரின் ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்ற புத்தகம் கிழக்கு வெளியீடாக வந்திருக்கிறது. மொழிபெயர்ப்பு சத்யானந்தன். நேற்று சும்மா புரட்டலாம் என்று சில பக்கங்களை மேய்ந்தேன். எனக்கான குழி அங்கே காத்திருந்தது. ஓரிடத்தில் இந்துயிஸம் என்ற வார்த்தை கண்ணில் பட்டது. கிழக்கு மொழிபெயர்ப்புகள் ஓரளவுக்கு நேர்த்தியானவை. மொழிபெயர்ப்பில் இதுவரை இப்படி இந்துயிஸம் என்ற நேரடியான ஆங்கில வார்த்தை அப்படியே பயன்படுத்தப்பட்டுப் பார்த்ததில்லை. பார்த்தால் புத்தகம் முழுக்க இந்துயிஸம் என்ற வார்த்தையே உள்ளது. போதாக்குறைக்குச் சில இடங்களில் ஹிந்து மதம் என்ற வார்த்தைப் பயன்பாடும் உள்ளது. சசி தரூரே இப்படித்தான் பயன்படுத்தவேண்டும் என்று எதாவது குறிப்பை ஆங்கிலப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆங்கில மூலத்தைப் படித்தவர்கள் சொல்லவும்.

ஹிந்துயிஸத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன வேறுபாடு? ஏன் இந்துயிஸம் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள்? சத்தியமாகப் புரியவில்லை. கிறிஸ்டியானிஸம், இஸ்லாமிஸம் என்பதையெல்லாம் என்ன செய்திருப்பார்கள்? ஏற்கெனவே ஹிந்து மதம் வேறு, ஹிந்துத்துவம் வேறு ஒரு வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹிந்துத்துவர்கள் என்றறியப்படும் ஹிந்துக்களே கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சிறப்பு! ஹிந்து மதத்துக்கு ஹிந்துத்துவம் தேவையில்லை, ஹிந்துத்துவத்துக்குத்தான் ஹிந்து மதம் தேவையென்றெல்லாம் என்ன என்னவோ தத்து பித்தென்று எழுதுகிறார்கள். ஹிந்துத்துவத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக ஹிந்து மதத்தை நீக்க முடியும் ஒரு நாளில் (ஒருநாளும் அப்படி நடக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்) ஹிந்து மதத்தை சீக்கிரமே நசிக்கச் செய்துவிட முடியும் என்பது என் நம்பிக்கை.

இந்நிலையில் ஹிந்துயிஸ ஹிந்து மத வேறுபாட்டைப் புதியதாக நுழைத்திருக்கிறார்கள். இதில் என்ன இன்னொரு கொடுமை என்றால், இதுவரை வெளியான எத்தனையோ ஹிந்து மத எதிர்ப்புப் புத்தகங்களில்கூட இப்படி ஒன்றை நான் பார்த்ததில்லை.

ஹிந்துயிஸம், ஹிந்துமதம், சனாதன தர்மம் எல்லாம் ஒன்றுதான்.
சனாதன தர்மம் என்பதை ஒரு ஹிந்துப் பெருமை கொண்ட ஒருவர் சொல்வதற்கும் மற்றவர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ஹிண்டு ரிலிஜன் என்று இருந்தால்தான் ஹிந்து மதம் என்று மொழிபெயர்ப்போம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரே ஆங்கில வார்த்தைக்குப் பல தமிழ் வார்த்தைகளும் ஒரே தமிழ் வார்த்தைக்குப் பல ஆங்கில வார்த்தைகளும் இருப்பதெல்லாம் மொழிபெயர்ப்பில் அரிச்சுவடி. அதைவிடுத்து ஹிந்துயிஸம் என்பதை அப்படியே எழுதுவதெல்லாம் தெய்வ லெவல்.

இதில் இன்னொரு காமெடியும் உள்ளது. ஒரு அறிஞர் (பெயர் நினைவில்லை) இந்து மதம் வேறு, ஹிந்து மதம் வேறு என்றாராம். சம்ஸ்கிருதத் தாக்கத்தைச் சொன்னாரா அல்லது ஆய்வு பூர்வமாகவே சொன்னாரா என்றறிய நான் முயலவில்லை. ஆய்வு பூர்வமாகத்தான் சொல்லி இருந்தார் என்று அறிய நேர்ந்தால் எனக்கு எதாவது ஆகிவிடும் வாய்ப்புள்ளதால் அமைதியாக இருந்து தப்பித்துக்கொண்டேன்.

பின்குறிப்பு: நான் ஹிந்து, இந்து என்று மாற்றி மாற்றி வேண்டுமென்றே பயன்படுத்துகிறேன், வேன். இரண்டும் எல்லா வகையிலும் ஒன்றே.

Share

Cinemakkaararkal by Jeyabarathi

சினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம், 150 ரூ.

(இந்த நூலைப் பற்றிய சிறு குறிப்பை வாசிப்பதற்கு முன்பாக, ஜெயபாரதி எழுதிய ‘இங்கே எதற்காக’ புத்தகத்தைப் பற்றி நான் எழுதியதை வாசித்துவிடுங்கள். அதன் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன் என்று எடுத்துக்கொள்ளவும்.)

ஜெயபாரதியின் சினிமாக்காரர்கள் புத்தகம், திரையுலகம் எப்படி தொழில்நுட்ப ரீதியாகவும் தினசரி வேலைகள் ரீதியாகவும் இயங்கியது என்பதைச் சொல்கிறது. ஆம், இயங்கியது என்பதையே சொல்கிறதே அன்றி எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. ஜெயபாரதியின் அனுபவங்கள் நேற்றைக்கானவை. இன்று ஒட்டுமொத்த சினிமா உலகமும் மாறிவிட்டிருக்கிறது. அதை ஜெயபாரதியே முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுகிறார்.

மேலும் இப்புத்தகத்தில் இவர் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் இன்று அனைத்துப் பொது மக்களுக்கும் தெரிந்தவையே. சில டெக்னிகல் பெயர்கள், சில டெக்னிகல் சாதனங்கள் தவிர எல்லாமே அனைவருக்குமே தெரிந்தவை. எப்படி செட்-களில் இருந்து திரைப்படம் தெருவுக்கு வந்ததோ அதேபோல் திரை மறைவுக்குப் பின்னிருந்த திரைப்பட நுணுக்கங்கள் எல்லாமே இன்று வீதிக்கு வந்துவிட்டிருக்கின்றன. அப்படியானால் இந்தப் புத்தகத்தில் நமக்கு என்னதான் கிடைக்கும்?

அன்று எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். சில சுவாரஸ்யமான சங்கதிகளை நூலில் சொல்கிறார் ஜெயபாரதி.

* கடைசி கறுப்பு வெள்ளை திரைப்படம் உச்சிவெயில் என்று ‘இங்கே ஏன் எதற்காக’ என்ற புத்தகத்தில் படித்த நினைவு. இப்புத்தகத்தில் குடிசை என்கிறார் ஜெயபாரதி.

* செட்-களில் இருந்து கிராமத்துக்கு வந்த முதல் படம் பதினாறு வயதினிலே அல்ல, குடிசை என்கிறார் ஜெயபாரதி.

* ஹாலிவுட்டில், கோடைக்காலத்தில் பேய்ப் படங்களும் குளிர்காலத்தில் காதல் படங்களும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்கிறார்.

* காந்தி திரைப்படத்துக்கு மூன்று பேர் திரைக்கதை எழுத அதில் ஒன்றைதான் ஏற்றுக்கொண்டிருக்கிறார் அட்டன்பரோ.

* விகடன் நாவல் போட்டியில் வென்ற கதை நடைபாதை. ஆனால் அதை எழுதியவரின் முகவரி அதில் இல்லை. அந்தத் தொடரை, அதை எழுதிய இதயன் அலுவலகத்துக்கு வரவும் என்ற குறிப்புடன் வெளியிடுகிறார்கள். இதயன் வருகிறார். ஏன் முகவரி இல்லை என்றால், அவர் நடைபாதையில் வசிப்பவர்! அவரது அனுபவமே நாவல்.

* பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட உடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிளியோபாட்ராவில் எலிசபத் டெய்லர் அணிந்த நடித்த உடை தங்கத்தால் ஆனது. (இதேபோல் ராசுக்குட்டியில் ஐஸ்வர்யா அணிந்து நடித்த உடை ஒரு லட்ச ரூபாய் என்று அந்தப் படம் வந்த சமயத்தில் பெரிய பேச்சாக இருந்தது.)

* நாகேஷ் அணிந்து நடித்த சட்டையை அணிந்துகொண்டு வரும் ஜெயபாரதியின் பள்ளித் தோழன்.

* எந்தத் தாவரத்தில் எந்தப் பூ பூக்கும் என்றெல்லாம் பார்க்காமல் எதையோ ஒட்டி வைக்கும் திரையுலகம்.

* ஒளிப்பதிவு நிவாஸ் என்று திரையில் வரும்போது கைதட்டிய மக்கள். (பதினாறு வயதினிலே ஒளிப்பதிவாளர்.)
இப்படிச் சில சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே. மற்றபடி கடந்த காலத் திரையுலகம் எப்படி இயங்கியது என்பதன் அனுபவப் பதிவாக மட்டுமே இப்புத்தகத்தைக் கொள்ள முடியும். ‘ஊஞ்சல்’ நாடகம் போல.

தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்) வாங்கும் விதம் குறித்து அழகாக எழுதி இருக்கிறார். இதில் எனக்கிருக்கும் ஒரு சந்தேகம், யூ, ஏ என்ற சான்றிதழ் வாங்குவதில் ஏன் இந்தியாவில் இத்தனை ஆர்ப்பாட்டம்? வெளிநாட்டில் இந்தச் சான்றிதழ்கள்தான் முக்கிய ஆவணம் என்பதாலா? இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களுக்குத் தனித்தனி கட்டணம் என்று ஏதேனும் உள்ளதா? பொதுவாக இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு அதற்கேற்றாற் போல் மக்களை திரையரங்கில் அனுமதிக்கும் வழக்கம் இல்லை. (மால்களைத் தவிர.) அப்படி இருக்கும்போது ஏன் இயக்குநர்கள் யூ சான்றிதழ் வாங்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்?

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9789386737465.html

Share

மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல்

மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350

விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் வரை சீ.முத்துசாமி என்ற பெயரே எனக்குத் தெரியாது என்ற ஒப்புதலில் இருந்து தொடங்கிவிடுகிறேன். சீ.முத்துசாமியின் நாவல் ஒன்றைக் கிழக்கு வெளியிடும் என்ற முடிவுக்கு வந்தபோது மலைக்காடு படித்தேன். அது கிழக்கு மூலம் வெளியாகி இருக்கிறது. ஜெயமோகனின் மிக முக்கியமான முன்னுரையுடன்.

சீ.முத்துசாமியின் எழுத்து எதோ ஒரு வகையில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்தை நினைவூட்டியது. ஒரு மண் சார்ந்த எழுத்து என்பதாக என் மனம் ஒப்பீடு செய்திருக்கலாம் என யூகிக்கிறேன். முத்துசாமியின் எழுத்தைப் படிக்கும்போது ஒருவித உவர்ப்புத் தன்மையை உணரமுடியும். வாக்கியங்களின் தெறிப்பு உருவாக்கும் ஒரு உலகம் அது. அதை மிகக் கச்சிதமாகக் கையாள்கிறார் சீ.முத்துசாமி.

தமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் மக்களின் வலி, அவர்களின் பரம்பரை பரம்பரையான பயணம், அங்கே நிகழும் புரட்சி, அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளே நாவல். சொர்க்க பூமி புக்கிட் செம்பிலான் என்று சொல்லி அழைத்துச் செல்லப்படும் மக்களுக்கு அங்கே காத்திருப்பது காடும் மலையும்.

ரப்பர் மரங்களின் நிரையில் தங்கும் மனிதர்களின் அவல வாழ்வைப் படிக்கும்போது அதன் வலியை வெறுமையை நமக்குள் கடத்துவதில் இந்நாவல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மக்களுக்கு ஆதரவாகப் புரட்சி செய்யும் இளைஞன் காணாமல் போகிறான். மலைக்காட்டு முனியில் இருந்து ஆள்கொல்லிப் புலி வரை தேடல் நீள்கிறது. அந்த இளைஞனை காட்டுக்குள் அனுப்பி வைத்த யூனியன் தலைவரின் குற்ற உணர்ச்சியும், அவனை இழந்து தவிக்கும் தாய்மையின் கொந்தளிப்பும் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. சீன அதிகாரிக்கு பெண்ணை அனுப்ப கங்காணி கதறும் காட்சி மிக முக்கியமானது. இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு உண்டு, ஆனாலும் அவள் வர மறுக்கிறாள் என்பதை கங்காணியால் ஏற்கவே முடிவதில்லை.

மலைக்காடு முனியைப் பற்றி சித்திரம் மிக அபாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் எல்லாருக்குள்ளும் இந்த முனி குறித்த பயமும் கடவுள் என்கிற உருவமும் உள்ளது. எதோ ஒரு தருணத்தில் அது அவர்களுடன் உரையாடவும் துவங்குகிறது. மலைக்காடு நாவலின் ஒட்டுமொத்த உருவகமே மலைக்காட்டு முனிதான்.

மலேசியப் புரட்சியின் பின்னணியில் இந்நாவல் சில வரலாற்றுக் குறிப்புகளுடன் ஊடாடி நகர்கிறது. அதுவே உச்சகாட்சியில் நாவலின் முடிவாகவும் அமைகிறது.

காட்டுக்குள் சென்ற இளைஞனைத் தேடும் புள்ளியைச் சுற்றி, பல்வேறு வரலாற்றுத் திறப்புகளையும், அவனது காதலையும், அவன் வாயிலாக நிகழந்த ஒரு புரட்சியையும் அதன் விளைவுகளையும் சொல்கிறது நாவல். நாவலின் மறக்கமுடியாத இரண்டு இடங்கள், குட்டியப்பனின் அம்மாவின் சித்திரமும், பெண்ணை அதிரிகாரியுடன் இரவு தங்க அழைக்கும் கங்காணியின் சித்திரமும்தான்.

நாவல் முழுக்க மீண்டும் மீண்டும் வருவது நாய்களின் மீதான சக மனிதர்களின் பாசம். இதை சீ.முத்துசாயின் பாசமாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நாய்க்கு உணவு வைப்பதில் இந்நாவல் கொண்டிருக்கும் மோகம் அசாத்தியமானது. பெரிய அதிகாரியும் சரி, மிக ஏழ்மையான கூலித் தொழிலாளியும் சரி, நாயிடம் உருகுகிறார்கள். அவை தெருநாய்கள். தெரு நாய்களின் சித்திரம் உருவாகி வரும் விதம் அபாரமானது.

நமக்குப் பரிச்சயமற்ற உலகை, தன் விவரணையின் மூலம் கண்முன்னே கொண்டு வருகிறார் சீ.முத்துசாமி. மலேசியத் தமிழர்களின் வாழ்வில் புழங்கும் பல வட்டாரச் சொற்களை இந்நாவலில் தெரிந்துகொள்ள முடிந்தது.

கடைசி அத்தியாயங்களில் கொஞ்சம் பழைய பாணியிலான திரைப்பட சாகசக் காட்சிகள் வந்துவிட்டது போன்ற உணர்வைப் பெற்றேன். நாவலின் முடிவு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதற்கா இத்தனை போராட்டம்? இந்த ஆச்சரியத்துக்கு இரண்டு காரணங்கள், மலேசியத் தமிழர்களின் வரலாறு எனக்குத் தெரியாதது, இன்னொன்று, என் கொள்கை ரீதியிலான பார்வை. ஆனால் நாவலின் வரலாற்றுப் பின்னணியின்படி இந்த முடிவு மட்டுமே இருக்கமுடியும் என்பது புரிந்தது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939392.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

பேட்ட

* ரஜினியின் ருத்ர தாண்டவம். முதலில் பத்து நிமிடம் தடுமாறினாலும் பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறது படம்.

* சிம்ரன் கிட்டத்தட்ட கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறார். மற்றபடி ரோல் எதுவுமில்லை. த்ரிஷா அழகாக வருகிறார், சாகிறார்.

* விஜய் சேதுபதி – ஐயோ பாவம். ஏற்றுக்கொண்டு நடித்ததே பெரிய விஷயம். ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் வேடம் என்பதால் நடித்தாரோ என்னவோ.

* ரஜினியின் பல பழைய ஸ்டைல்களைப் பார்க்க முடிகிறது. நடிப்பில் பின்னுகிறார்.

* இனி ரஹ்மான் வேண்டாம் ரஜினி படத்துக்கு. அநிருத் கச்சிதம். கலக்கல்.

* பாட்ஷா படத்தையே கவனமாக மாற்றி விவரமாக எடுத்திருக்கிறார்கள்.

* கொலை செய்வதை ரஜினி சாவாதானமாகப் பேசிக்கொண்டே செய்வதைப் பார்க்க கதக் என்றிருக்கிறது.

* முஸ்லிம் நண்பன், ஹிந்துத்துவ அரசியல் வில்லன். எரிச்சல். ஆனால் ரஜினியை நம்பிக்கையுள்ள ஹிந்துவாகக் காட்டி, முஸ்லிமை ஹிந்து மரபிலும் நம்பிக்கையுள்ளவராகக் காட்டி, ராமாயணக் கதை பேசி, என்னவோ சமாளிக்கிறார்கள். ஆனாலும் இது அநாவசியம்.

* அதேசமயம், காதலிப்பவர்கள் வேலன்டைஸ் டே தினம் வெளியே வந்தால் அவர்கள் கட்டாயத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இது ஹிந்துத்துவக் கருத்தியல் என்று நான் நம்பவில்லை. ஆனால் படத்தில் காவி நிறத்துடன் காட்டப்படுகிறது.

* அப்பா மகன் காட்சியின் தமிழ் சினிமாத்தனத்தை ஸ்பூஃப் ஆக்கியது அட்டகாசம். அதிலும் மிக எளிதாக யூகித்தக்க ட்விஸ்ட்டுகளுக்கு தரப்பட்டிருக்கும் இந்த ட்ரீட்மெண்ட் அருமை.

” ரஜினிக்காக ஒரு படத்தை கார்த்தி சுப்புராஜ் எடுத்திருக்கிறார்.

இனி அரசியல்:

விஜய் சேதுபதி தொடர்ந்து ஹிந்துத்துவக் கருத்தியலை எதிர்க்கும் அரசியலையே படங்களிலும் நிஜத்திலும் செய்துவருகிறார். புதிய அலை இயக்குநர்கள் அனைவருக்குமே இந்த ஹிந்து வெறுப்பு இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தொடக்கக் காட்சியே, இந்தியா முழுவதும் ஹிந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு சிறிய அடையாளமற்ற அமைப்பு ஒன்று ஹிந்துத்துவ அமைப்பு என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்களை ஒட்டுமொத்த ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்களாக மாற்றிக் காட்டுவது ஹிந்து வெறுப்பாளர்களின் பாணி. இந்தியா முழுக்க வியாபாத்திருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்போ, இந்தியா முழுக்க பெரும்பாலும் ஆட்சியைப் பிடித்த பாஜகவோ காதலர் தினத்தன்று இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தால் யாரும் இந்தியாவில் நிம்மதியாகக் காதலித்திருக்கவே முடியாது. எதோ உதிரி அமைப்புகள் செய்வதை பெரும்பான்மையான ஹிந்துத்துவர்களே ஏற்பதில்லை. ஆனால் அதை ஹிந்துத்துவக் கருத்தியலாகக் காண்பிக்கிறார்கள்.

ரஜினி முதலில் காலா படத்தில்நடித்தபோது அது அவருக்குத் தெரியாமல் நிகழ்ந்தது என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தையும் அதே கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது. பேட்ட திரைப்படம் ஒரு வகையில் இன்னும் மோசமான அரசியல் கருத்தைச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் காலா திரைப்படத்தைவிட பேட்ட என்னும் திரைப்படம் ஒரு கமர்ஷியல் உருவோடு வந்திருக்கிறது. எனவே இதன் வீச்சும் அதிகமாக இருக்கும்.

இத்திரைப்படத்தில் ஒரு மென் ஜிகாதி காதல் ஒன்றும் காண்பிக்கப்படுகிறது. இஸ்லாம் இளைஞன் ஹிந்துப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு விட, ஹிந்துக் குடும்பம் அவளைக் கொடூரமாகக் கொலை செய்கிறது. இதையே மாற்றி எடுத்தால் என்ன ஆகும் என்பது இயக்குநருக்குத் தெரியும்.

தமிழ் சினிமா இந்த ஹிந்து வெறுப்பில் மிகத் தீவிரமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் ரஜினியும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இது நல்லதற்கல்ல.

Share

கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்

வாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180

மிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.

பொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.

இந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித்த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.

கொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.

ஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.

மிக ரசிக்கத்தக்க நாவல்.

இந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.

அவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்
குண்டு வீச்சு விமானங்களுக்கும்
எறிகணைகளுக்கும்
விசாரணைச் சாவடிகளின்
கண்களுக்கும் தப்பி.
அவனது ஒளிபொருந்திய புன்னகையை
எதிர்கொள்ள
இருண்ட தெருக்களைக் கடந்துவந்தேன்.
-தமிழ்நதி

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

1975 இரா முருகனின் நாவல்

இரா.முருகனின் 1975 நாவல். எமெர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு விலக்கபடும் வரையிலான 21 மாதங்களில் ஒரு வங்கி அலுவலர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை எமர்ஜென்ஸியின் பின்னணியில் சுவைபடச் சொல்லும் நாவல். சுவைபட என்றால் வெற்று வார்த்தை இல்லை, நிஜமாகவே சுவைபட. இரா முருகனின் எழுத்தில் இந்நாவலில் (சப்டில்) மென்நகைச்சுவை உச்சம் கொள்கிறது என்பேன். பல இடங்களில் நான் வாய்விட்டுச் சிரித்தேன். பாருக்குட்டியின் அத்தியாயமும் முத்துக்கிட்டுவின் அத்தியாயமும் உச்சம்.

வங்கி அதிகாரியாக லோன் தரவேண்டிய கட்டாயத்தில் அல்லாடும் சங்கரன் போத்தி எமர்ஜென்ஸியின்போது சென்னையிலும் டெல்லியிலும் பணி புரிகிறார். சென்னைக்கும் வட இந்தியாவுக்கும் எமர்ஜென்ஸி இரண்டு வேறு முகங்களைக் காட்டுகிறது. ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதையும் அரசு அலுவலகங்கள் கேள்வி கேட்காமல் சரியாகச் சொல்லி வைக்கப்பட்ட மாதிரி இயங்குவதையும் பாராட்டும் கூட்டம் ஒரு பக்கம். தன் உரிமைகளை சுதந்திரத்தை இழந்ததைப் பற்றிக்கூடப் பேச அஞ்சம் கூட்டம் இன்னொரு பக்கம். எமர்ஜென்ஸி எப்படி மக்களால் பார்க்கப்பட்டது என்பதை அழகாகப் பதிவு செய்கிறது நாவல்.

வலுக்கட்டாய லோன், வலுக்கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, இவை தரும் இன்னல்கள் எல்லாவற்றையும் மிக விரிவாக எழுதி இருக்கிறார் முருகன். அரசுக்கு எதிராக ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லத் தயங்கும் அரசு அதிகாரிகள். இந்திரா, சஞ்சயின் பெயரைச் சொல்லி அனைவரையும் மிரட்டும் கட்சி வர்க்கம். எந்தத் திட்டம் வந்தாலும் இந்திராவின் அல்லது சஞ்சயின் பெயர். லோன் வாங்க கடை தொடங்கினாலும் தொழில் தொடங்கினாலும் இந்திரா/சஞ்சய் பெயர். ஒருவர் எண்ணெய்க் கடை ஆரம்பிக்க, சஞ்சய் விளக்கெண்ணெய் என்று பெயர் வைக்க, கட்சி கவுன்சிலர் கொதித்துப் போய் அதற்கு இந்தியா விளக்கெண்ணெய் என்று வைக்கச் சொல்கிறார்!

இந்திராவின் இருதம்பசத் திட்டமும் சஞ்சயின் ஐந்தம்சத் திட்டமும் சங்கரன் போத்திக்கு மனப்பாடமே ஆகிவிடுகிறது. ஒவ்வொரு அதிகாரிக்கும் இப்படித்தான் இருந்திருக்கும். நரிக்குறவர்களுக்கெல்லாம் கூப்பிட்டு லோன் கொடுக்கிறார்கள். யார் சிக்கினாலும் குடும்பக்கட்டுப்பாடு. எமர்ஜென்ஸி முடிந்து இந்திரா தோற்க, சங்கரன் போத்தி சென்னைக்கு வந்து கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆக, நாவல் சுபம்.

அங்கேயும் இங்கேயுமாகத் தெறிப்பாக வரும் பல சம்பவங்கள் சுவாரஸ்யமளிக்கின்றன. நரேந்திரர் குஜராத்தி என்ற பெயர், கோபால் கோட்ஸேவின் பெயர், 25 அமசத் திட்டத்தின் பாடல்களைப் பாடமுடியாது என்று மறுக்கும் கிஷோர் குமார் (காரணம் சன்மானம் கிடைக்காது என்பதற்காகவாவ்ம்!), 20 அம்சத் திட்டத்தை விளக்கும் பாட்டு, இனிப்பில்லாமல் டீ சாப்பிட்டு வாக்கு கேட்கும் வாஜ்பாய், ரகசியமாக கம்யூனிஸ வகுப்பெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எனப் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல விஷயங்கள் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. நாவலில் இதைச் சொல்வது மிகப் பெரிய ஆவலைத் தரவல்லதுதான்.

எமர்ஜென்ஸியின் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமாக அலசும் புத்தகமல்ல இது. அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான புனைவு. இந்தத் தெளிவுடன் இந்த எல்லைக்குள் நின்று வாசித்தால், புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடிக்கான மென்நகைச்சுவையும் விறுவிறுப்பும் உறுதி.

To order online: http://www.nhm.in/shop/9789386737625.html

To order thru phone: Dial for books 044-49595818

Share