Archive for ஹரன் பிரசன்னா

பேரன்பு – துயரத்துள் வாழ்தல்

கத்தி மேல் நடக்க வேண்டிய ஒரு கதை. மிகக் கவனமாகவே கையாண்டிருக்கிறார் ராம். இயக்குநர் ராமின் திரைப்படங்களில் எப்படியோ தோற்றம் கொள்ளும் (அல்லது அப்படி எனக்குத் தோன்றும்) ஏதோ ஒன்றின் மீதான வெறுப்பு இத்திரைப்படத்தில் இல்லை. எனவேதான் படத்துக்கான பெயரைக் கூடப் பேரன்பு என்று வைத்துவிட்டார்.

ராம் திரைப்படங்களில் உள்ள பிரச்சினை யாரோ ஒருவரின் அதீத நடிப்பாக இருக்கும். தங்கமீன்கள் திரைப்படத்தில் அவரே அப்படியாக இருந்தார். அந்தத் தவறை எக்காரணம் கொண்டும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே மம்முட்டியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மூழ்கிக் கொல்லும் வதை வரும் போதிலும் ஒரு இம்மி அளவு கூடத் தன் நிலையில் இருந்து விலகிவிடாமல் ஒரு கதாபாத்திரம். அதை அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் மம்மூட்டி. தங்க மீன்கள் படத்தில் அதீத நடிப்பு செய்த அதே பெண் இந்தப் படத்தில் தன் நடிப்பின் மூலம் அசர வைத்திருக்கிறார். முகத்தையும் உடல்மொழியையும் முதலில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரியாக அவர் வைத்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அப்படி இருக்கும் மனிதர்களின் வேதனை என்ன என்பதை நினைக்க வைத்து பதட்டத்தையும் கொண்டு வருகிறார்.

இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களின் செக்ஸ் சார்ந்த சிந்தனைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பலமுறை நான் யோசித்திருக்கிறேன். இளவயதில் என் நண்பர்கள் பலர் செவிலியராக இருந்தவர்களே. அதில் சிலர் மனநலக் காப்பகத்தில் பணியாற்றியவர்கள். இது போன்ற மனிதர்களின் பல கதைகளைச் சொல்லி இருக்கிறச்ர்கள். அப்போதே எனக்கு சொல்லமுடியாத மனபாரம் அழுத்தி இருக்கிறது. இப்படி குடும்பத்தில் யாருக்கும் நேராத வரை எல்லாம் நமக்கு மிக எளிதான, வருத்தப் படும் சம்பவம் மட்டுமே. ஆனால் அதே துயரில் வாழ்வது வேறு. இதே பிரச்சினையை ஒரு படம் முழுக்க அலசியிருக்கிறார் ராம்.

அதிரவைக்கும் காட்சிகள் படத்தில் இரண்டு மூன்று உண்டு. அதில் உச்சகட்டத்தில் வரும் பதற்றம் தரும் காட்சியின் நீளம் கொஞ்சம் அதிகம். இசையற்ற அலை ஓசை இன்னும் காதில். மற்ற இரண்டு காட்சிகள் மிகச் சிறியவை. சில நொடிகள் கூட நீடிக்காதவை. இக்காட்சிகள் தரும் பதற்றமும் கொஞ்ச நஞ்சமல்ல. முதலாவது, தன் மகளுடன் ஒரே படுக்கையில் அன்புடன் உறங்கும் மம்முட்டி, மறுநாள் எழுந்து பார்க்கும் பொழுது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், சோர்ந்து போய் ஒருநொடி தலையில் கை வைத்துக் கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சியில் அந்தப் பெண் ஒரு பொம்மைக்கு வண்ணம் தீட்டுவது. இது போன்ற சில காட்சிகள் நம்மை வருத்தப்பட வைக்கத்தான் செய்கின்றன.

இந்தப் படத்தில் இரண்டு அஞ்சலிகள். முதல் அஞ்சலி நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அழகாக வருகிறார். அழகாக நடிக்கிறார். இரண்டாவது அஞ்சலி, அஞ்சலி அமீர், மலையாளி. மலையாளத்தில் பிக் பாஸ் வெளியானபோது அதில் இவரும் ஒரு போட்டியாளராக நடுவில் வந்து சேர்ந்து கொண்டார். திருநங்கை. இந்தப் படத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பது இவரே. மிக அழகாக இருக்கிறார்.

இப்படத்தின் பிரச்சினைகள் என்ன என்று பார்த்தால் படம் மிக மிக மெல்லவே நகருகிறது. இதுபோன்ற படங்களுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல என்றாலும் கூட, முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரைக்குமான எங்கேயும் நகராத திரைக்கதை ஒரு சலிப்பைக் கொண்டு வருகிறது. இப்படி வெளிப்படையாகச் சொல்வதன் மூலம் மிகச் சிக்கலான ஒரு விஷயத்தைக் கையாளும் படத்தை மலினப்படுத்தக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடனேயே சொல்கிறேன். அதேசமயம் அந்தச் சலிப்பு ஏற்படுவது உண்மைதான். தமிழ்நடிகை அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் குழப்பமாக இருக்கிறது. தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு நாவலின் அத்தியாயங்கள் போல நகர்ந்தாலும் ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டிய புதிர்த்தன்மையைப் படத்தில் அஞ்சலி பாத்திரத்தில் நுழைத்தது ஏதோ ஒரு வகையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் நல்லவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வசனத்தை வைப்பதற்காகவே அந்தக் காட்சியில் புதிர்த்தன்மை விளக்கப்படாமல், வேண்டுமென்று நுழைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஏற்கனவே மணமான ஒரு பெண் தன்னையே இழக்கத் துணிவது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இதற்கான காரணத்தை விளக்கி இருந்தால் கூட இந்தக் குழப்பம் வந்திருக்காது. அது ஒரு க்ளிஷே என்ற அளவில் மட்டும் போயிருக்கும்.

குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் அஞ்சலியைச் சுற்றி நிகழும் காட்சிகள் தேவையற்ற ஒரு திரில்லிங் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவர் ஏன் குழந்தையைக் கொலை செய்யும் அளவுக்குப் போக வேண்டும் என்பதெல்லாம் குழப்பத்தைத் தரும் தேவையற்ற காட்சிகள்.

திருநங்கையாக வரும் அஞ்சலி படத்துக்கு உள்ளே வரும் காட்சியிலேயே அவர்தான் பேரன்பைத் தரப் போகிறார் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற படங்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அவற்றை எப்படி வளர்ப்பது, முடிப்பது என்பதுதான். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பாவும் மகளும் ராசியாகும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இதைச் சமாளித்திருக்கவேண்டும்.

இந்தப் படத்தில் என்னளவில் நேர்ந்த பிரச்சினை, எந்தக் காட்சிடுடனும் முதலில் உணர்வுரீதியாக இணைந்து கொள்ள முடியாமல் போனதுதான். எடுத்த எடுப்பிலிருந்து பிரச்சினைக்குள் படம் நுழைந்ததால் வந்த பிரச்சினையாக இருக்கலாம். இதே போன்ற படத்தை, இந்த அளவுக்குத் தீவிரமாக, சிக்கலான ஒன்றைக் கையாளவில்லை இல்லை என்றாலும், மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தை ஒப்பு நோக்கலாம். அஞ்சலி திரைப்படம் சிரிப்பும் கும்மாளமுமாகத் தொடங்கி, அதற்கே பழகிப்போன நம்மை சட்டென உள்ளிழுத்துக்கொண்டு, அதற்குப் பிறகு குடும்பத்தில் நுழையும் ஒரு குழந்தையின் மூலம் அந்த பிரச்சினையைக் கையாளத் துவங்குகிறது. ஒரு வணிக சினிமாவுக்கான தேவை இதில் இருந்தாலும் கூட, சொல்லவேண்டிய பிரச்சினையின் தீவிரத்தைக் கொண்டு சேர்க்க அது ஓரளவுக்கு உதவியது என்றே நம்புகிறேன். இந்தப்படம் அது போன்ற மாயையில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்துக் கொள்ளுமா என்பது குறித்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க துணிந்ததற்காகவே இயக்குநர் ராம் பாராட்டப்பட வேண்டும். அதிலும் இதற்கு முன் அவரது படங்களில் இருந்த எந்தக் குழப்பங்களும் பிரச்சினைகளும் இந்தப் படத்தில் இல்லை. மிகத் தெளிவான கொதிக்கும் நீரோடை போல இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

பின்குறிப்பு: இசை யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசை தொடக்கக் காட்சிகளில் மிக சுமாராக இருந்தது. பின்னர் பரவாயில்லை.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்.

Share

குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை

பத்தாவது வருட ஹிந்து ஆன்மிக – சேவை அமைப்புகளின் கண்காட்சி இந்த வருடம் வேளச்சேரியில் இருக்கும் குரு நானக் கல்லூரியில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 400 அரங்கங்கள் இருக்கலாம். மிக பிரமாண்டமாக உள்ளது. நாம் முன்பின் கேள்விப்பட்டிராத பல அமைப்புகளை இந்தக் கண்காட்சியில் பார்க்கமுடிகிறது. அனைத்துச் சாதி அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்துத் தத்துவ அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்து மடங்களைச் சேர்ந்த அமைப்புகள் எனப் பல வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்பது வருடங்களுக்கு முன்பு, இரண்டாவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அப்போதே மிகச் சிறப்பாக உள்ளரங்க அமைப்புகள் இருந்தன. ஆனால் அளவில் சிறியதாக இருந்த நினைவு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சுற்றிப் பார்த்துவிடலாம். ஆனால் இன்று நான்கு மணி நேரமாவது தேவைப்படும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

எவ்வித வேறுபாடும் இன்று ஒரே குடைக்குள் அனைத்து அமைப்புகளின் அரங்குகளையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அரங்க அமைப்புகள் மற்றும் மனித உதவிகள் எல்லாமே தன்னார்வலர்களால் நடைபெறுகிறது என்பது சிறப்பம்சம். உண்மையில் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு உதவுகிறார்கள். அரங்கத்துக் காரர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாமே இலவசம். உணவு உறைவிடம் உட்பட. பாராட்டப்படவேண்டிய அம்சம் இது.

இந்த முறை கண்காட்சி நாட்டுப்பற்றை மையமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. நான்கைந்து டெம்போக்கள் நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட பாதகைகளுடன் வருவதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எதாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும் என்று யோசித்து இந்த முறை அந்தமான் சிறையின் அட்டைப்பட மாதிரியை சாவர்க்கருடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள். ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த இடத்தின் மாதிரியையும் அமைத்திருக்கிறார்கள். அதோடு ஒலி-ஒளி அமைப்பும் இருக்கிறது. இரண்டு மூன்று ஒலி ஒளி அமைப்புகள். தீரன் சின்னமலை, பகத் சிங் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்களை ஒலி-ஒளியாக வடித்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் ஒலி ஒளி அமைப்பு தரும் அனுபவம் அத்தனை நன்றாக இல்லை. அடுத்தமுறை மெருகேற்றுவார்கள் என நினைக்கிறேன்.

ஒளிவில்லை அரங்கங்கள் (விஷுவல் ஸ்லைட் ஸ்டால்) அமைத்து அங்கே பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைக் காண்பிக்கிறார்கள். பாரத மாதா ஆலயம், கோ ரக்‌ஷா பகுதி என்றெல்லாம் அமைத்திருக்கிறார்கள். பாரத மாதா கோவிலில் நிஜ யானை பார்க்கவே கம்பீரமாக இருக்கிறது.

அரங்கத்துக்குள் நுழையும் முன்பே பல கோவில்களின் மாதிரிகள் தென்படுகின்றன. பூஜை உண்டு. முக்கியமாகப் பிரசாதம் உண்டு. அரங்கத்துக்குள்ளேயும் பல ஸ்டால்களில் பிரசாதமாக சுண்டலெல்லாம் தருகிறார்கள்! ருத்ராட்சம் இலவசம், விபூதி குங்குமத்தோடு பெற்றுக்கொள்ளலாம். திடீர் திடீரென மணிச் சத்தத்துடன் பூஜையும் நடக்கிறது. ஊதுபத்தியை கொளுத்திவிட்டு உடனே அணைத்து வைக்குமாறு அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். விழுப்புரம் தங்கக் கோவில் அம்மா அரங்கத்தைக் கோவில் போலவே வைத்திருக்கிறார்கள். இப்படி இன்னும் சில கோவில்கள் உள்ளன.

அந்தமான் சிறை மற்றும் ஜாலியன் வாலா பாக் மாதிரியை வடிவமைத்தவர் விட்டல் என்று சொன்னார் எழுத்தாளர் ரமணன். இந்த ரமணன்தான், ஒளிவில்லைக் காட்சிக்கும் அந்தமான் சிறைக்கான ஒலிப்பதிவுக்கும் மற்றும் அங்கிருக்கும் பல தலைவர்களின் தட்டிகளுக்குமான குறிப்புகளை எழுதியவர். விட்டலும் ரமணனும் பாராட்டுக்குரியவர்கள்.

வலம் அரங்கு இருக்கும் வரிசைக்கு அடுத்த வரிசையில் உள்ள ஓர் அரங்கில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நேரத்தைச் சொல்லி, கூடவே குருஜி கோல்வல்கரின் ஞான கங்கையில் இருந்து ஒரு வரியைச் சொல்கிறார்கள். அந்த அரங்கைத் தேடிச் சென்று, ஞான கங்கையின் ஆடியோ கிடைக்குமா என்று கேட்டேன். ஞான கங்கையில் இருந்து சில வரிகளைத் தானே தேடி ஒலிப்பதிவு செய்து கொண்டு வந்ததாகச் சொன்னார் அந்த அரங்கின் உரிமையாளர். அந்த அரங்கில் சிவராஜ்ஜியம் நிச்சயம், சிவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் எதோ ஒரு வாசகம் கண்ணில் பட்டது! சரியான வரிகள் நினைவில்லை.

இன்று வேலை நாளாக இருந்தாலும் மாணவர்கள் நிறைய பேர் பள்ளி ஆசிரியர்களுடன் வந்திருந்தார்கள். ஒரு ஆசிரியர் நிறைய மாணவர்களை உட்கார வைத்து, ஒளிவில்லை அரங்கில் காண்பிக்கப்பட்ட பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்தக் கண்காட்சிக்குக் கூட்டிக்கொண்டு வருவதால் பெரிய அளவுக்கு நமக்கு அனுபவமோ அறிவோ ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால் நம் எதிர்கால சந்ததி ஹிந்துவாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் இந்தக் கண்காட்சிக்கு வரவேண்டியது அவசியம். ஹிந்து ஒற்றுமை என்பது நிச்சயம் தேவை என்ற எண்ணத்தை இந்தக் கண்காட்சி நிச்சயம் உருவாக்கும்.

இந்தக் கண்காட்சியின் ஒரே குறை, ஹிந்து அறிவியக்க ரீதியிலான வெளிப்பாடு மிக மிகக் குறைவாக உள்ளது. ஹிந்து அமைப்புகள் என்றாலே ஆன்மிக மற்றும் சேவை என்கிற இரண்டு எண்ணங்கள் மட்டுமே பொதுவாகத் தோன்றுவிடுகின்றன போலும். அறிவியக்க ரீதியாக ஹிந்து இயக்கங்கள் விழிப்புக் கொள்ளாதவரை ஹிந்து அமைப்புகள் கருத்தை உருவாக்கும் இடத்துக்குச் செல்வது மெல்லவே நிகழும். இனிவரும் காலங்களில் இதற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அமைப்புகளுக்கு வேறு ஒரு தளத்தில் முக்கியத்துவத்தை அதிகமாக்கும்.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்

Share

ததும்பும் குவளை (கவிதை)

ததும்பும் குவளை

கால் நீட்டி பின்சாய்ந்து
சோபாவில் அமர்ந்திருக்கிறேன்
முன்னிருக்கும் டீப்பாயிலுள்ள
குவளையில்
ததும்பிக்கிடக்கிறது நீர்
அலை வரும், மீன் உழலும்
அருகில் அமர்ந்து பார்த்திருக்கிறான் அவன்.
அம்மா தன் பங்குக்கும்
மனைவி ஆசையுடனும்
மகனும் மகளும் 
உறவினர்கள் நண்பர்கள்
தொடர்ந்து குவளையில் நீரூற்ற
நிறைந்தும் நிறையாமல்
ததும்பிக்கொண்டே இருக்கிறது குவளை.
நீங்களா என்று கேட்டேன்.
சூழ நின்றொலிக்கும்
சத்தங்கள் நின்று
சட்டென நிசப்தமாக
நானும்தான் என்றவன்
தன் முறைக்காகக் 
காத்திருப்பதாகவும் சொன்னான்.

Share

பேருரு (கவிதை)

பேருரு

பாட்டி பேரனுக்குக் கதை சொல்லத் துவங்கும்போது
சட்டெனத் துளிர்க்கும் ஒரு வனமும்
அதில் சில தும்பிகளும்
அவற்றின் பின்னே ஓடும் பால்ய நானும்
கையில் சோற்றுண்டையுடன் துரத்தும் அம்மாவும்
இப்போதெல்லாம் வருவதே இல்லை

எப்போது சொட்டுமெனக்
காத்திருக்கும் நீரின் துளியோ
காற்றில் ஆடக் காத்திருக்கும்
மரத்து இலையோ
உடல் விதிர்க்கச் செய்யும் வனப்போ
எல்லாமே நானறியாமல்
என்னைக் கடந்திருக்கத்தான் வேண்டும்

கொந்தளிப்பிலோ
மகிழ்ச்சியிலோ
சோகத்திலோ
சிரிப்பிலோ
பெரும் கடல் அலையிலோ
நிசப்ததிலோ
ஒரு கணமும் நிலைக்கமுடிவதில்லை

எங்கோ ஏனோ காரணமின்றி
ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்புகள்
அடிக்கடி நினைவுக்கு வர
மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்
சிற்றுருவாய் மிகச் சிற்றுருவாய்.

Share

இரண்டு கவிதைகள்

கனவுகளின் விளையாட்டு

கனவுகளின் சிக்கலான வரைபடம் ஒன்றை
நானே வரைந்து
உள்ளே சென்றேன்
வரைபடத்தின் புள்ளிகளில் சிக்கித்
தொலைந்து போகுமாறு
விதித்துக்கொண்டிருந்தேன்.
சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தது.
சிறிது நேரத்தில்
வெளியேறத் தெரியாமல்
விக்கித்து நின்றபோது
எதிரே தோன்றியவன் சொன்னான்,
இன்னொரு கனவிலிருந்து வந்தவன் என.
தன் கனவுக்குள் அழைத்துச் சென்றான்.
என் கனவுகளில் கொஞ்சம் எடுத்துக்கொண்டான்.
இரண்டு கனவுகளில்
எது யாருடையது என்ற குழப்பம் வந்த பொழுதில்
அவன் கனவுகளிலிருந்து வெளியேறியபோது
தூங்கிக் கொண்டிருந்த நான்
கண்விழிந்த்துச் சிரித்தான்.

2

இரவின் நீளத்தில்
எங்கெங்கோ செல்லும் நினைவுகளில்
ஒரு வாளேந்தி விரட்ட
முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்கிறான்.
கண்களில் கைகளில் உடலெங்கும் பயம் பரவ
ஒரு கணம் மின்னி மறைகிறது
துரோகங்களும்
வஞ்சகங்களும்
கேலிகளும்
அவமானங்களும்.
புரண்டு படுக்கும்
பிஞ்சுக் குழந்தையின்
உள்ளங்கை முகத்தில் பட
சிறு சூட்டில் அடங்கிப் போய்
வான் விட்டு மண் வீழ்கிறேன்
ஒரு மழைத் துளியென.

Share

மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு பதில்

மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கிறார், என்னுடைய வேலை எழுத்தாளர்களைக் கடத்தி வருவது என்று. பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்குமாம். இவர் எழுதும் இதே வெளியில்தான் நான் கடத்தி வருவதாக அவர் நினைத்துக்கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்களும் இதைப் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள். நான் பொய் எழுதுவதுமில்லை, பேசுவதுமில்லை. மேலும் ஒரு பதிப்பாளர் எழுத்தாளர் உறவின் சிக்கல்களை, அன்னியோன்னியத்தை வெளியில் சொல்வதுமில்லை. ஆனால் இதைப் படிக்கும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் தெரியும், கடத்தப்பட்டு வந்தார்களா இல்லையா என்பது.

உயிர்மையில் சாரு இருந்தபோது சாரு எழுதிய பதிவுகளே உதாரணம். தனியே எதற்கு இன்னொருவர் சொல்லவேண்டும்?

இன்னும் இன்றும் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அனைத்து முன்னாள் உயிர்மை எழுத்தாளர்களின் பதிவுகள் மட்டும் மனுஷ்யபுத்திரனுக்கு மறந்துவிடும் அல்லது கண்ணுக்குப் படாது. பழி மட்டும் இன்னொருவர் மேல்.

இலக்கிய அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை, திறமையும் இல்லை. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. மற்றபடி சாருவின் இலக்கியப் பங்களிப்புக்குப் பக்கத்தில்கூட நான் இல்லை. அதை மனுஷ்யபுத்திரன் வலிந்து சொல்லவேண்டியதுமில்லை. ஏனென்றால் நான் அதை க்ளெய்ம் செய்யவே இல்லை. ஒருவகையில் மனுஷ்யபுத்திரனே இந்த ஒப்பீட்டைத் தொடங்கி வைக்கிறார்!

சாதாரணமாக ஒரு பதிவு எழுதப்போய் அது இப்படியெல்லாம் போவது சுவாரஸ்யம்தான்.

இன்னும் என்னவெல்லாம் வருகிறது எனப் பார்க்கலாம்.

Share

வெரி வெரி பேட் பாடலில் இந்திய வெறுப்பு

இந்திய வெறுப்பும், ஹிந்து வெறுப்பும் எப்படி தமிழ் சினிமாவைப் பீடித்திருக்கிறது என்பதை நாம் தற்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களிலும் பார்க்கலாம். இப்போது வெளியாகியிருக்கிறது இன்னுமொரு உதாரணம். ஆனந்தவிகடனின் நிலைய வித்வானும் ஆஸ்தான எழுத்தாளருமான ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஜிப்ஸி திரைப்படத்தின் ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது.

“வெரி வெரி ” என்று சரியாகவே அந்தப் பாடலை எழுதி இருக்கிறார் யுக பாரதி. பாடல் என்ற பெயரில் வாயில் வந்ததையெல்லாம் வசனமாக்கும் பாட்டும் வெரி வெரி பேட் என்பதாகவே இருக்கிறது. தோழர் சந்தோஷ் நாராயணனாக இசையமைப்பாளர் பதவி உயர்வு பெற்று ஜோதியில் கலந்திருக்கிறார். நல்லகண்ணு வருகிறார். ப்யூஷ் மனுஷ், திருமுருகன் காந்தி எனப் பல தோழர்கள் கருப்புச் சட்டையில் பாடலில் உலா வருகிறார்கள். அம்பேத்கர், ஈவெரா, பிராபகரன், சே குவெரா, மார்க்ஸ் எனப் பலரின் படங்கள்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தால் கைது, சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்த்தால் கைது என்பதுடன் மெல்ல தீண்டாமையை எதிர்த்தால் கைது என்று சேர்க்கிறார்கள். எப்படி இவர்கள் நஞ்சைப் பரப்புவார்கள் என்பதற்கு இது லட்சத்தி ஓராவது எடுத்துக்காட்டு. இப்பாடலை எல்லா ஆண்ட்டி இந்தியர்களுக்கும் டெடிகேட் செய்திருக்கிறார்கள்.

தனது படங்களில் எல்லாம் ஹிந்துச் சின்னங்களைக் காட்டிக்கொண்டிருந்த ரஜினியையே இவர்கள் ஏப்பம் விட்டுவிட்டார்கள். இவர்களது எப்போதைக்கும் எப்போதுமான இலக்கு ஹிந்து மதத்தையும் இந்தியாவையும் சின்னாபின்னம் ஆக்குவதே. அதற்கு சினிமா என்னும் ஊடகம் மிகவும் தேவை என்பதைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். சினிமாவால்தான் திராவிட இயக்கம் தமிழ்நாட்டைப் பிடித்தது. அதே சினிமாவால் இவர்கள் பிடிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இது அத்தனை எளிதாக நடக்காது என்றே நான் நினைக்கிறேன். அதேசமயம் இவர்களால் சில கருத்துகளை மிகத் தீவிரமாக, வெற்றிகரமாகப் பரப்பமுடியும்.

தமிழ்நாட்டில் இதை எதிர்கொள்ளவேண்டிய தரப்போ இருக்கும் இடம் தெரியாமல், மிக பலகீனப்பட்டு கிடக்கிறது. பெரிய சவால் நம்முன்னே நிற்கிறது. சமீபத்தில் புதிய அலை இயக்குநர்களாக அறியப்படுபவர்கள் அத்தனை பேரும், இந்த தீவிர ஹிந்து எதிர்ப்பு அலையில் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். தலித்திய ஆதரவு, கம்யூனிஸ ஆதரவு, திராவிட ஆதரவு என்று விதம்விதமாக வந்தாலும் இவர்களது அத்தனை பேரின் ஒரே நோக்கமும் ஹிந்து எதிர்ப்பாகவே உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இது தீவிரம் பெற்றுள்ளது – கலை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும். இதை எதிர்கொள்வது அத்தனை எளிதானல்ல. சினிமா என்றாலே இடது கையால் ஒதுக்கும் எண்ணத்தை ஹிந்து ஆதரவாளர்களும் அறிவு ஜீவிகளும் கைவிடாதவரை நாம் இழக்கப்போவது அதிகம்தான்.

தோழர் தோழர் என்பவர்கள் உலக அளவில் கம்யூனிஸம் செய்திருக்கும் படுகொலைகளைப் பற்றியோ, மாவோயிஸ்ட்டுகள் இந்தியாவில் நிகழ்த்திய நிகழ்த்திக்கொண்டிருக்கும் மனிதக் கொலைகள் பற்றியோ பேசமாட்டார்கள். இவர்களது உண்மையான நோக்கம் இந்திய எதிர்ப்பு மட்டுமே. இவர்கள் நடுநிலை என்ற பட்டமும் பெற்றுக்கொண்டு அதையும் வைத்துக்கொண்டு முடிந்த அளவுக்கு இந்திய வெறுப்பைப் பரப்புவார்கள்.பாடலின் இறுதியில் ‘இப்பாடலை எல்லா ஆண்ட்டி இந்தியர்களுக்கு டெடிகேட் செய்திருக்கிறார்கள்’ என்பது அரசியல் எதிர்நிலை அல்ல. உண்மையாகவே அது இந்திய வெறுப்பின் அடையாளம்தான்.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்

Share

எஸ். விஜய் குமாரின் சிலைத் திருடன்

சிலைத் திருடன் – எஸ். விஜய் குமார் – கிழக்கு பதிப்பகம், விலை ரூ 250

தி ஐடல் தீஃப் என்று ஆங்கிலத்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம், பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. நான் வாசித்த புத்தகங்களில் எப்போதும் எனக்குப் பிடித்த ஒன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கு. காரணம், அதன் பரபரப்பு, அதே சமயம் சற்றும் குறையாத தரம் மற்றும் அதிலிருக்கும் நம்மை உறைய வைக்கும் உண்மை. அதற்கு இணையான புத்தகம் சிலைத் திருடன்.

நம் நாட்டில் நிகழும் பெரும்பாலான, அதிகாரிகள் மட்டத்திலான ஊழல்களுக்குப் பெரிய காரணம், லஞ்சமும் அலட்சியமும். ஒரு பெரிய அரசியல்வாதியின் படுகொலை முதல் சிலைத் திருட்டு வரை, அது நடந்து முடிந்தபின்பு நமக்குத் தோன்றுவது, இதை எளிதாகத் தவிர்த்திருக்கலாமோ என்பதுதான். சிலைத் திருட்டிலும் அப்படியே. இதைக்கூடவா பார்த்திருக்கமாட்டார்கள், இதைக்கூடவா யோசித்திருக்க மாட்டார்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் பார்த்துப் பதறிப் போகிறோம்.

நமது பிரச்சினை, எதைப் பற்றியும் நம்மிடம் ஒரு தகவல் திரட்டு இல்லாதது. நம் பாரம்பரியத்தைக் காப்பதிலிருந்து நம்மை நாமே தெரிந்துகொள்ள இதுபோன்ற தகவல் களஞ்சியம் அவசியம். ஆனால் இது குறித்த அக்கறை மக்களுக்கும் இல்லை, அரசுக்கும் இல்லை. மெல்ல மெல்ல இப்போதுதான் இது குறித்து யோசிக்கிறோம், செயல்படுகிறோம், முக்கியமாக இணையக் காலத்துக்குப் பிறகு.

எவ்விதத் தகவல்களையும் நாம் சேமிக்காதது சிலைத் திருட்டை மிக எளிதாக்கி இருக்கிறது. சோழர் காலச் சிலைகளை விதவிதமாகக் கடத்தி இருக்கிறார்கள். மூலச் சிலைக்குப் பதிலாக அதே போன்ற போலிச் சிலையைச் செய்து வைப்பது, போலிச் சிலை இல்லாமலேயே மூலச் சிலையைக் கடத்திவிடுவது, பல சாதா சிலைகளைச் செய்து அவற்றோடு பழங்காலச் சிலைகளைச் சேர்த்துக் கடத்துவது, சிலைகள் மட்டுமில்லாமல் பழங்கால புராதன சின்னங்கள் எதுவானாலும் கடத்துவது, நேரடியாக தனக்குத் தேவையான ஊருக்குக் கடத்தாமல் பல நாடுகளுக்குச் சுற்றி எடுத்துச் சென்று கடத்துவது… இப்படிப் பல வகைகளில் கடத்துகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், எந்தச் சிலைகள் கடத்தப்பட்டன என்று நமக்குத் தெரியவே சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகின்றன. சிலை கடத்தப்பட்ட விவரமே தெரியாமல் அக்கோவிலுக்கு பாதுகாப்புக் கதவு செய்து பூட்டுகிறார்கள் அதிகாரிகள். களவு போன சிலையை மீட்டெடுக்க அச்சிலை குறித்த தகவல்களும் ஆவணங்களும் நம்மிடம் இல்லை. பின் எப்படி சிலைத் திருட்டைத் தடுப்பது, சிலைகளை மீட்பது?

1972க்கு முன்னர் இச்சிலைகள் விற்கப்பட்டது போன்ற போலி ஆவணங்களை உருவாக்கிக் கடத்துகிறார்கள். காரணம் 1972ல் உருவாக்கப்படும் பன்னாட்டுச் சட்டம் சிலைகள் உள்ளிட்ட பாரம்பரியப் பொருட்களின் விற்பனையில் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறது. சுபாஷ் கபூர் மிக புத்திசாலித்தனமாகத் தனது எல்லாத் திறமைகளையும் இறக்கி சிலைகளைக் கடத்திக்கொண்டே இருக்கிறார். சலிப்பதே இல்லை. ஏனென்றால், இங்கே அவருக்கு உதவும் சிறு திருடர்களுக்கு சில லட்சங்களில் பணம் தந்துவிட்டு, பன்னாட்டு அரங்கில் பல கோடிகளில் பணம் பெறுகிறார்.

உண்மையில் இச்சிலைகளுக்கு இத்தனை கோடியெல்லாம் தருவார்களா என்றெல்லாம் முன்பு யோசித்திருக்கிறேன். இப்புத்தகத்தைப் படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. கோடிகளில் புரள்கிறது பணம். விஜய் மல்லையா போன்றவர்களை இச்சமூகம் கண்டுகொள்கிறது, ஆனால் அதற்கு இணையான இது போன்ற சிலைத் திருடர்களை நமக்குத் தெரிவதில்லை என்பதோடு அவர்களுக்கு மிகப் பெரிய கௌரவத்தையும் மரியாதையையும் தருகிறோம் என்னும் விஜய் குமாரின் ஆதங்கம் நியாயமானது.

சில கொடுமைகளில் அதீத கொடுமைகளையும் இப்புத்தகத்தில் படிக்கலாம். தன் மகளின் நினைவாகச் சுடுமண் சிற்பத்தை ஒரு அருங்காட்சியகத்துக்குத் தானமாகத் தருகிறார் சுபாஷ் கபூர்! இன்னொரு கொடுமை, சுபாஷ் கபூரும் அவரது தோழியும் பிரிந்த பின்பு, சிலைகள் யாருக்குச் சொந்தம் என்று நீதிமன்றத்தில் மோதிக்கொள்வது. இருவருக்குமே சிலைகள் சொந்தமல்ல, இந்தியாவுக்குச் சொந்தம்! கைது செய்யப்பட்ட பின்பும் சிலைகளை எப்படி எங்கே விற்கவேண்டும், மாற்றவேண்டும் என்ற குறிப்புகளை எல்லாம் சிறைக்குள் இருந்தே அனுப்புகிறார் சுபாஷ் கபூர்! நம் சட்டத்தின் கடுமையும் அதிகாரிகளின் புத்திசாலித்தனமும் இப்படி இருக்குமானால் நாம் என்றைக்கும் எதையும் தடுத்துவிடமுடியாது.

இண்டி என்று பெயர் சூட்டப்படும் அந்த அதிகாரி இந்தியர்களால் வணங்கத்தக்கவர். அத்தனை அருங்காட்சியகத்துடனும் இண்டியும், நம் விஜய்குமாரும் அவரது குழுவும் போராடும் அத்தியாயங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்கவை. அதேபோல் நம் ஊர் காவல்துறை அதிகாரி செல்வராஜும் போற்றத் தக்கவர். சவுக்கு சங்கரின் ‘ஊழல் உளவு அரசியல்’ புத்தகத்தைப் படித்தபோது திலகவதி ஐபிஎஸ் குறித்து ஏற்பட்ட ஏமாற்றம், இப்புத்தகத்தின் மூலம் கொஞ்சம் விலகியது என்றே சொல்லவேண்டும்.

சிலைத் திருட்டு வகையில் இது முதல் புத்தகம் என்ற வகையில் இப்புத்தகம் பல இருட்டு இடங்களில் வெளிச்சம் பாய்ச்சுகிறது. தன் வாழ்வையே அர்பணித்தால்தான் இப்படி ஒரு புத்தகம் சாத்தியம். அதுவும் இந்தியா போன்ற தனி மனித உயிருக்கு எவ்வித மரியாதையும் அற்ற ஒரு நாட்டில் இது போன்ற ‘உலகளாவிய’ விஷயத்தை எதிர்ப்பது பெரிய சவால். அதை எதிர்கொண்டு மிகத் தெளிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார் விஜய் குமார். அதைவிட முக்கியம் இவரது முயற்சியில் நம் தெய்வங்கள் தனக்கான இடங்களில் மீண்டும் ஆராதனை பெறத் துவங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குச் செய்யப்படும் பூஜையின் புண்ணியம் என்றைக்கும் விஜய் குமாரின் சந்ததிக்கும் கிடைக்கு என்பதில் ஐயமில்லை.

அரசியல்வாதிகளின் ஊழல்களைவிட அஞ்சத்தக்கது அதிகாரிகளின் ஊழல் என்பது என் பொதுவான எண்ணம். அவர்களது அலட்சியப் போக்கே நம்மை மிக நேரடியாக உடனே தாக்கும் வல்லமை கொண்டது. இப்புத்தகத்தில் ஒரு வரி வருகிறது. ஒரு அதிகாரி மூன்று முறை தன் அறையைவிட்டு வெளியே வருகிறார். ஒரு தடவை டீ குடிக்க, இரண்டு தடவை தம் அடிக்க. அவர் அறைக்குள் இருக்கும்போது அவரைச் சுற்றித்தான் சிலைகள் கடத்தப்படுகின்றன. அவரே மௌன சாட்சி மற்றும் உதவியாளர்!

தமிழ் மொழிபெயர்ப்பை மிகக் குறுகிய காலத்தில் அட்டகாசமாகச் செய்திருக்கிறார் பி.ஆர். மகாதேவன். எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர்களில் இவரும் ஒருவர். (இன்னொரு முக்கியமானவர் கிருஷ்ணன் சுப்பிரமணியன்.) மிகக் கடினமான நூல்களைக்கூட அழகாக மொழிபெயர்ப்பவர் பி.ஆர். மகாதேவன். இந்நூல் ஆங்கிலத்திலேயே மிக சரளமான நடையில் எழுதப்பட்ட ஒன்று. கூடுதலாக, விஷயத்தைப் பொருத்தவரையில் தமிழின் மண்வாசனை இயல்பாகவே இருந்தது. இதனால் அதகளம் செய்துவிட்டார் மகாதேவன். மகாதேவனின் மொழிபெயர்ப்பில் ‘அழகிய மரம்’ அவரது வாழ்நாள் சாதனையாக மதிப்பிடப்படும் என்று ஏற்கெனவே நான் எழுதி இருக்கிறேன். ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் பி.ஆர். மகாதேவன் நிச்சயம் நினைவுகூரப்படுவார். இந்த நூலில் மிகச் சில திருத்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அடுத்த பதிப்பில் அவர் சரி செய்வார் என்று நம்புகிறேன்.

எஸ். விஜய் குமாருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பி.ஆர். மகாதேவனுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டியிருக்கிறது. நன்றியும் வாழ்த்தும்.

பின்குறிப்பு: நாத்திகம் வேறு, பாரம்பரியக் கலைச் சின்னங்கள் வேறு. இச்சிலைகள் என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டபோது அதன் பின்னே இருந்தது பக்தியும் கலையும்தான். இன்று பக்தியைக் கைவிட்டிருப்பதுதான் நாம் நம் கலையையும் மறப்பதற்கான வழி என்றாகிவிட்டது என்றே கருதுகிறேன். இத்தனை பல்லாயிரம் ஆண்டுகளாக இச்சிலைகள் காப்பாற்றப்பட்டது பக்தியை முன்னிட்டே ஒழிய கலையைப் பாதுகாக்க வேண்டிய உந்துதலில் அல்ல. பக்தி அழிக்கப்படும்போது இந்த உந்துதல் நிச்சயம் குறையும். பக்தியையும் கலையையும் பிரிப்பதுகூட நமக்கு என்றைக்குமே பிரச்சினைதான். சிலர் இதை வேண்டுமென்றே செய்கிறார்கள். சிலர் நிஜமாகவே கலையை ஆராதிப்பதற்காகச் செய்கிறார்கள். ஆனால் இப்போக்கு நமக்கு ஆபத்தானதுதான்.

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939491.html

Share