Archive for ஹரன் பிரசன்னா

பதிப்பகத் தொழிலாளிகள் இருவர்

சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிந்து இரவு பைக்கை எடுத்துக்கொண்டு வரும்போது ஒருவர் ட்ராப் கேட்டுக் கை காட்டினார். வயதானவராகத் தெரிந்தார். ஏற்றிக்கொண்டேன். நான் கிண்டி வழியாகத்தான் போவேன் என்பதால் கிண்டி ரயில்வே நிலையத்தில் இறக்கிவிடுவதாகச் சொன்னேன். சந்தோஷப்பட்டார். அன்று சீக்கிரமே வீட்டுக்குப் போய்விடலாம் என்றார். அவரது வீடு இருப்பது மறைமலைநகரில்.

கிண்டி போகும் வரை எதாவது பேசலாமே என்று கேட்க ஆரம்பித்தேன். அவரது கதையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். அவருக்கு இப்போது வயது 65 இருக்கலாம். பதிப்பகத்துறையில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு ஆன்மிகப் பதிப்பகத்தில் வேலை செய்கிறார். முதல் நாள் அச்சுக் கோர்க்கும் வேலையில் சேரும்போது அவருக்குச் சம்பளம் 30 ரூபாயோ என்னவோ சொன்னார். அவரது 58வது வயதில் அந்தப் பதிப்பகம் அவரை ஓய்வு பெறச் சொல்லிவிட்டது. அப்போது அவர் வாங்கிய சம்பளம் பனிரெண்டாயிரம் ரூபாய் வரை இருக்கலாம். அவர் பதிப்பகத்தின் கடை விற்பனையில் உதவியாளராக இருந்து ஓய்வுபெறுகிறார். பின்னர் அவரை மீண்டும் பணிக்கு எடுத்துக்கொண்டது அதே பதிப்பகம். சம்பளம் மாதத்துக்குப் பத்தாயிரம். பிடித்தம் அது இது எதுவும் கிடையாது. காண்ட்ராக்ட்டில் வேலை. அவர் வேலை செய்த 30+ வருடங்களுக்குமாகச் சேர்த்து அவர் ஓய்வு பெறும்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அந்தப் பதிப்பகம் கொடுத்திருக்கிறது. அதை வைத்து அவரது மகனின் படிப்பைச் சமாளித்துவிட்டார் இவர். பையன் டிப்ளமோ முடுக்க, பதிப்பகத்தின் முதலாளியே பையனுக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார். பதிப்பகத்தைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார் இவர். அந்தப் பதிப்பகம் பழங்கால நடைமுறையில் உள்ள சிறிய பதிப்பகம். முதலாளி – தொழிலாளி வித்தியாசம் எல்லாம் அப்படியே இன்னும் இருக்கும் ஒரு பதிப்பகம். இவருக்கு அதிலெல்லாம் பெரிய புகார்கள் இல்லை. இத்தனை செய்ததே அவருக்குப் பெரிய உதவியாக்த் தெரிகிறது. அதிலும் குறிப்பாக மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்டதைச் சொல்லிக்கொண்டே வந்தார். போக வர பஸ்ஸுக்குப் பணமும் டீக்கு காசும் கொடுத்துவிடுவார்கள் என்றார். அந்தப் பதிப்பகத்தை மிகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

கிண்டியில் இறங்கிக்கொண்டவரின் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அத்தனை போக்குவரத்து நெரிசல். நன்றி சொல்லிவிட்டுப் போனார்.

இது நடந்து இன்னும் சிறிது நாள் கழித்து இன்னொருவரைத் தற்செயலாகப் பார்த்தேன். அவர் ஒரு கம்யூனிஸ சிந்தனையுள்ள பதிப்பகத்தில் வேலை பார்த்தவர். கிட்டத்தட்ட 25 வருடங்களாக. மிகவும் வருத்தத்துடன் சொன்னார், ‘ஒரே நாள்ல தூக்கிட்டாங்க சார்’ என்று. என்ன காரணம் என்பதெல்லாம் இங்கே வேண்டாம். என்னவோ கருத்து வேறுபாடு. இவரும் மிகவும் அடிமட்டத் தொழிலாளியே. ’25 வருஷம் வேலை பாத்ததுக்கு எதாவது தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்கேன்’ என்றார். அவரால் ஒரே நாளில் தான் தூக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாவமாக இருந்தது. அவருக்கு செட்டில்மெண்ட் ஆனதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நிச்சயம் ஆகி இருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த இரண்டும் ஒரு உதாரணம் மட்டுமே. இதனால் கம்யூனிஸப் பதிப்பகங்கள் மிக மோசம் என்றோ, முதலாளி மனப்பான்மை உள்ள பதிப்பகங்கள் மிகவும் யோக்கியம் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் இங்கே சொல்லப்படுவது போல முதலாளி பதிப்பகமெல்லாம் மோசம், கம்யூனிஸப் பதிப்பகம் என்றால் யோக்கியம் என்பதுவும் உண்மை அல்ல என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். ஒரு வியாபாரம் என்பதற்குள் வந்துவிட்டால் கொள்கை எல்லாம் எப்படி ஓடி விடும் என்பதற்காகவே சொன்னேன். பதிப்பகத்துறை என்றல்ல, எல்லா வியாபாரத்திலும் இதுதான் நிலைமை.

வண்டி வண்டியாக கம்யூனிஸப் பாடம் எடுப்பார். அவர் தனது வியாபாரத்திலோ அல்லது வேலையிலோ தொழிலாளிகளிடம் எப்படி நடந்துகொள்வார் என்பதை யாராலும் சொல்ல முடியாது. உண்மையிலேயே கோட்பாட்டின்படியே நடந்துகொள்பவர்களும் உண்டு. இது இது இப்படித்தான் என்று வரையறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம்.

Share

கையெழுத்து – குறுங்கதை

கையெழுத்து

அந்த அண்ணனின் பெயரை முத்து என்று வைத்துக்கொள்ளலாம். உண்மையான பெயர் என்ன என்பது இப்போது எனக்கு நினைவில்லை. இது நடந்து 30 வருடங்கள் ஆகப் போகிறது. அப்போது எனக்கு 15 வயது இருக்கலாம். நாங்கள் மதுரையில் அழகரடியில் இருந்தோம். திடீரென முத்து அண்ணன் ஒருநாள் என்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்றான். என்னை மதித்துத் தனியே பேசவேண்டும் என்று யாரும் அதுவரை சொன்னதில்லை. எங்கள் காம்பவுண்ட்டில் என் வயதில் இருக்கும் வயசுப் பெண்கள் அதிகம் என்பதால், இப்படி அழைக்கிறானே, எவளையாவது பிடிச்சிருக்குன்னு சொல்வானோ என்று திகிலாக இருந்தது. அவன் பக்கம் போகாமலேயே தவிர்த்தேன்.

முத்து அண்ணனுக்கு மாரி அக்கா என்றொரு அக்கா இருந்தாள். அந்த வட்டாரத்திலேயே ஆங்கிலம் நன்றாகப் பேசுபவள் அவள்தான். ஹவ் டூ யூ டூ என்று கேட்கவேண்டும் என்று என் நண்பர்களுக்குச் சொல்லித் தருவாள். அவர்கள் மறக்காமல் ஹவ் ஆர் யூ டூ என்றே கேட்பார்கள். மாரி அக்கா‌ அழகாகச் சிரிப்பாள். என் மேல் பாசமாக இருப்பாள். ஏனென்றால் நான் ஒருவன் மட்டுமே ஹவ் டூ யூ டூ என்று சரியாகச் சொல்வேன். அந்த மாரி அக்கா ஒருநாள் என்னிடம், என் தம்பி ஒன்கிட்ட பேசணும்னு சொன்னானாமே என்று கேட்டாள்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. எங்கள் வீடு இருந்த காம்பவுண்டின் இன்னொரு மாடி வீட்டில் நானும் முத்து அண்ணனும் சந்தித்தோம். பக்காவாக ஒரு டெஸ்க் போட்டு, அதன் அருகே உட்கார்ந்திருந்த அண்ணன் பக்கத்தில் ஒரு பேப்பரும் பேனாவும் இருந்தது. காப்பி குடிக்கிறியாடா என்று கேட்டான். ஓடிப் போய் டீ போட்டு எடுத்து வந்தான். டீ கண்றாவியாக இருந்தது. வாயில் வைக்க முடியவில்லை. ஆனால் ஏன் எனக்கு டீ? மெல்லச் சொன்னான். ஒரு லெட்டர் எழுதணும்டா. எழுத்து மேஜையை என் பக்கம்‌ திருப்பினான்.

நான் அந்த வட்டாரத்திலேயே நன்றாகப் படிப்பவன் என்று அறியப்பட்டவன். நானும் அதை நம்பினேன். லெட்டர் எழுதுவது கஷ்டமா? எனவே உடனே எழுத ஒப்புக்கொண்டேன். கொஞ்சம் பெருமை வேறு எனக்குள். லவ் லெட்டர்டா என்றான். ஒருவன் லவ் லெட்டர் எழுதுவதை முதன்முதலில் அப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறேன். அதுவரை சினிமாவில் பார்த்ததோடு சரி. லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது. ஒனக்கு என்ன தோணுதோ எழுதிக் குடு, ஸ்கூல்ல கட்டுரைப் போட்டில ஃபர்ஸ்ட்டாம்ல என்றான். எனக்கு இதெல்லாம் வராது என்று அரை மனதாகச் சொன்னேன். சரி, நீ சொல்லு, நான் எழுதிக்கிறேன் என்று அடுத்த குண்டைப் போட்டான். அவன் முகம் வேர்வையில் குளித்திருந்தது. நல்ல கருப்பு. அவன் தலையில் முடிகள் குத்திட்டு நின்றன. நான் சொல்றதா? யூ மீன் மீ? உன் காதலை நான் சொல்றதா? ஐயோ என்றேன். அவன் விடவே இல்லை. கடைசியாக அவனே எழுதுவதாகவும் தவறுகளைத் திருத்தினால் போதும் என்றும் சொன்னான். அவன் எழுதிய லவ் லெட்டரைப் படித்திருந்தால் நிச்சயம் அந்தப் பெண் தூக்கு போட்டுச் செத்திருப்பாள். ஏனென்றால் தவறு இல்லாத ஒரு வார்த்தை கூட அதில் இல்லை.

நான் மெல்ல சொன்னேன். ரொம்ப தப்பு இருக்குண்ணே. ‘அதுக்குத்தாண்டா உன்ன வரச்சொன்னேன். அப்ப சரி, நீயே எழுது, நான் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டான். அவன் காதலிக்கு அவன் கையெழுத்தில் கடிதம் போகவேண்டும் என்கிற அவனது கனவு கலைந்தது. என்னவெல்லாமோ சொன்னான். அத்தனையும் மதுரைத் தமிழில் இருந்தது. அதை எப்படி அப்படியே எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு தமிழே வராதோ என்ற எண்ணமெல்லாம் வந்தது. எப்படியோ ஒரு வழியாக எழுதிக் கொடுத்தேன். உடம்பெல்லாம் பதற்றமாக இருந்தது. ஒரு ஓரத்தில் பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல கெத்தாகவும் இருந்தது. இந்த விஷயம் மட்டும் வீட்டுக்குத் தெரிந்தால் டெட் பாடி ஆகிவிடுவேன் என்பதில் இரண்டாம் கருத்தே கிடையாது. அவனிடம் தயங்கி தயங்கி ‘யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’ என்று சொல்ல எத்தனித்தபோது அவன் சொன்னான், ‘தம்பி, வீட்ல மட்டும் சொல்லிராத, பொலி போட்ருவாங்க.’

மறுநாள் காம்பவுண்டே அல்லோலப் பட்டது. யாரோ யாருக்கோ லவ் லெட்டர் கொடுத்து விட்டார்களாம். அரண்டுவிட்டேன். அதுவரை இருந்த பெருமிதமெல்லாம் போய் எனக்குள் பயம் மட்டுமே இருந்தது. அந்தத் தெருப் பையன் ஒருத்தன் லெட்டர் கொடுத்துவிட்டான். அதுவும் எங்கள் காம்பவுண்ட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு. யார்? முத்து அண்ணா? எனக்கு சூனியம் வைத்தே விட்டானா? கைகால் உதறல் நிற்கவே இல்லை. காம்பவுண்ட்டில் இருக்கும் அனைத்து ஆண்களும் அந்தப் பையன் வீட்டுக்குப் போனார்கள். அவனது அக்கா கடுப்பில் கையில் இருந்த அப்பளக் குழவியை வீசி எறிந்தாள். வந்தவர்கள் மீது அல்ல, லவ் லெட்டர் கொடுத்த தன் தம்பி மீது. அவன் விலகிக் கொள்ள, ஏற்கெனவே ஓட்டையாக இருந்த டிவியில் அப்பளக் குழவி பட்டு அந்த டிவியின் டிஸ்ப்ளே மொத்தமாக நொறுங்கிப் போனது. அவன் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்த இரண்டே வரிகள், ‘அழகா இருக்க, பிடிச்சிருக்கா?’

கடிதம் கொடுத்தது முத்து அண்ணன் இல்லை. வேறொருத்தன். எனக்கு உயிர் வந்தது. இரண்டே வரிக்கு இத்தனை ஆர்ப்பட்டம். நான் எழுதியது பத்து பக்கமாவது இருக்கும். அவன் எப்படி தலை வாரிக் கொள்வான், என்ன சாப்பிடுவான், எப்படித் தூங்குவான், எந்தக் கடையில் சாப்பிடுவான், அவளுக்கு அவனே டீ போட்டுத் தருவான் தொடங்கி ஒவ்வொரு நிமிடத்தையும் அந்த லெட்டரில் என்னை எழுத வைத்திருந்தான் முத்து அண்ணன்.

நான் பயந்து செத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முத்து அண்ணனை ஆளைக் காணவில்லை. மெல்ல விசாரித்ததில் அவனது அக்கா மாரி அக்கா யாருடனோ ஓடிப் போய் கல்யாணம் செய்துகொண்டுவிட்டாள் என்று தெரிந்தது. அதாவது நான் முத்து அண்ணனுக்கு காதல் கடிதம் எழுதிக் கொடுத்த தினத்தன்று மாரி அக்கா ஓடிப் போயிருக்கிறாள். இரண்டு நாள் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். பின்னர் விஷயம் வெளியே வந்துவிட்டது.

அப்புறம் முத்து அண்ணன் என்னவானான் என்பது பற்றி கொஞ்ச நாள் தகவலே இல்லை. பின்னர் மாரி அக்கா அதே தெருவில் குடி வந்தாள். வழக்கம்போல ஹவ் டூ யூ டூ என்றாள். நான் அவளிடம் முத்து அண்ணனைப் பற்றிக் கேட்கவே இல்லை. சில வாரங்கள் கழித்து முத்து அண்ணன் எதுவுமே நடக்காதது போல மாரி அக்கா வீட்டுக்கு வந்தான். என் கண்ணில் அவன் பட்டபோது என்னைத் தெரிந்ததாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை. எந்த அளவுக்கு என்றால், எனக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததா இல்லையா என்னும் சந்தேகம் வரும் அளவுக்கு. கேவலமான‌ டீயுடன் கேவலமான வரிகளைப் பத்துப் பக்கம் மாங்கு மாங்கென்று இந்தக் கருப்பனுக்காக எழுதி இருக்கிறேன். அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தானா? அவள் என்ன சொன்னாள்? என் தலை வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால் முத்து அண்ணன் கண்டுகொள்ளவே இல்லை, நாங்கள் மதுரையை விட்டுக் காலி செய்யும் வரை.

இதெல்லாம் நடந்து இருபது வருடங்கள் கழித்து அழகரடியைச் சுற்றிப் பார்க்கப் போனேன். நாஸ்டால்ஜியா. கூடவே ஒரு பழைய தோஸ்த்தும் என்னுடன் வந்தான். ஒரு தெருவில் பெட்டிக் கடை வைத்திருந்தான் முத்து அண்ணன். அவனுக்கு என்னை அடையாளமே தெரியவில்லை. அவனிடம் அது இது என என்னவெல்லாமோ வாங்கினேன். எவ்ளோ ஆச்சுண்ணே என்றேன். ஒரு பேப்பரில் எழுதி ஒரு தொகை சொன்னான். அந்தத் தாளை வாங்கிப் பார்த்தேன். வேண்டுமென்றேதான் வாங்கிப் பார்த்தேன். நீண்ட நேரம் கூட்டிப் பார்த்தேன். கணக்கு தப்பா இருக்கே என்று அவனிடம் சொன்னேன். இது நாப்பது, இது இருபத்து ஏழு என்று ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டிச் சொன்னான். உங்க கையெழுத்தே புரியலைண்ணே என்றேன். நான் சொல்றேன், நீங்களே எழுதிக் கூட்டிப் பாருங்க என்றான் முத்து அண்ணன். சிரித்துக் கொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டு, சற்று தள்ளி வந்து, கூட வந்த நண்பனிடம் சொன்னேன், “கையெழுத்து அப்படியே இன்னும் கிறுக்கலாவே இருக்கு பாரு. அதுக்குத்தான் அவன் ஆளுக்கு லவ் லெட்டர் எழுத என்ன கூப்ட்ருக்கான் போல.’ அவன் ஆச்சரியமாகக் கேட்டான், ‘ஒன்னயுமாடா எழுதச் சொன்னான்?’

#குறுங்கதை

Share

தேவ விளையாட்டு

சிலரது அனுபவங்களைப் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது பொறாமையாக இருக்கும். என்னுடைய பதின்ம வயதில் ஒரு மாமா காயத்ரி மந்திரத்தின் பெருமையைச் சொன்னார். ஒரு தந்தை இறக்கும் தருவாயில் தன் மகனிடம் சொல்கிறார் காயத்ரி மந்திரத்தைத் தவறாது சொல்லவேண்டும் என்று. மகனும் அப்படியே செய்கிறான். மகன் பெரிய விமானி ஆகிறான். ஒருமுறை விமானம் ஓட்டும்போது காலநிலை மோசமாகி விமானம் கட்டுப்பாட்டை இழக்கிறது. விமானி தன் வாழ்க்கை முடிந்தது என்று அப்படியே அமர்ந்துவிட்டார். பின்னால் இருந்து யாரோ தட்டிக் கூப்பிடுகிறார்கள். அப்பா! காயத்ரி மந்திரம் சொல்டா என்கிறார். விமானி சொல்கிறார். எப்படியோ விமானம் தப்பிக்கிறது. விமானி உயிர் பிழைக்கிறார். பின்னால் திரும்பிப் பார்க்கிறார், அங்கே யாரும் இல்லை. இதைச் சொல்லும்போது அந்த மாமா உணர்ச்சி பெருக கண்ணில் நீர் வழியச் சொன்னார். அவரது கையில் முளைத்திருந்த மயிர்கள் எல்லாம் புல்லரித்துப் போய் நின்றன.

நான் இதை நம்புகிறேன் நம்பவில்லை என்பதல்ல விஷயம். ஆனால் நான் நிச்சயம் அந்த மாமாவை நம்புகிறேன், பொய் சொல்ல அவருக்குத் தேவையே இல்லை என. என்ன பிரச்சினை என்றால், என் வாழ்க்கையில் இப்படி ஒரு தடவை கூட நடந்ததில்லை. இதைப் பொறாமை என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள்.

‘கனவில் மல்லிகைப் பூ வைத்து பச்சைப் புடைவை கட்டி ஒரு குழந்தை வந்தது, எப்டி இருந்தான்ற, வா வான்னு கூப்பிடறேன், போய்க்கிட்டே இருக்கா, என்னடான்னு பார்த்தா, மறுநாள் அம்பாளை சப்பரத்துல தூக்கிட்டு வர்றாங்க, அதே மல்லிகைப் பூ, அதே பச்சைப் புடைவை’ என்று யாராவது சொல்லும்போது வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். ‘எனக்குத் தெரியாதா அது எங்க வீட்டுப் பூனை’ன்னு ஒரு நண்பர் சொன்னார். எந்தப் பூனையைப் பார்த்தாலும் முப்பது வருடங்கள் முன்பு நான் வளர்த்த பூனைகள் போலத்தான் எனக்குத் தெரியும்.

இப்படிப் பேசுகிறவர்கள் எல்லாரிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. அனைவரும் இதை ஒரு புதிர் போலப் பேசுவார்கள். ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விஷயத்தை விவரிப்பார்கள். ஒருவர் சொன்னார், கண்ணாடியில் கண்ட அவரது உருவம் அவரைப் பார்த்துச் சிரித்ததாம். எதோ ஒரு தேவ விளையாட்டு என்றார். எனக்கு பக்கென்று இருந்தது. இன்னொருவர் சொன்னார், ‘எல்லாமே எழுதி வெச்சிருக்குங்க. நமக்கு படிக்க தெரியலை, அவ்வளவுதான்’ என்று. எங்கே எழுதி வெச்சிருக்கு, என்ன படிக்கத் தெரியலை என்று நான் ஏன் கேட்கப் போகிறேன். சரிங்க என்று சொல்லிவிட்டேன். இன்னொருவர் சொன்னார், அவரது கனவில் வந்த ஒரு பெண்ணை மறுநாள் நேரில் கண்டதாக. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே மனிதரை ஐந்து நிமிட இடைவெளியில் பார்த்தாலும் கூட எனக்கு சட்டென அடையாளம் பிடிபடுவதில்லை. இதில் கனவில் வந்த பெண்ணை மறுநாள் பார்ப்பதெல்லாம் என் வாழ்நாளில் நடக்காது என்று நினைத்துக்கொண்டேன்.

அப்போது நிஜமாகவே ஒரு குரல் கேட்டது. தேவ விளையாட்டுக் கணம் நிகழ்ந்தே விட்டது. மாடியை நோக்கிப் பார்த்தேன். அந்தப் பெண் புன்னகைத்தாள். என்றோ கனவில் கண்ட மறக்கவே முடியாத அந்த முகம். அதே முகம். மெல்ல அவள் முகம் மாறியது. ‘அடிக்கிற வெயில்ல என்ன திருதிருன்னு ரோட்ல நின்னு முழிக்கிறீங்க, வீட்டுக்குள்ள வாங்க. உங்களோட..’ என்றாள்.

Share

கவிதை

சிறுமியின் சைக்கிள்

சுவரின் ஓரத்தில்
காற்றில்லாமல்
சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்
தன் சின்ன சைக்கிளுக்கு
வாய் வைத்து
காற்றடித்துப் பார்க்கிறாள்
சிறுமி.
மெல்ல சிணுங்கும் சைக்கிளை
ஒரு தட்டு தட்டுகிறாள்.
சைக்கிள் அமைதியாகிறது.
வீட்டைத் தாண்டிக் கடந்து போகும்
குப்பை வண்டிக்காரன்
சிறுமியைப் பார்த்துச் சிரிக்க,
பயத்துடன் சைக்கிளைக்
கட்டிக் கொள்கிறாள் அவள்.

Share

ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்

கரு.நாகராஜன் ஜோதிமணியைப் பற்றிப் பேசிய விவகாரம் – நாகராஜன் பேசியது மிகத் தவறானது. கண்டிக்க வேண்டிய ஒன்று. பாஜகவினரும் இப்படிப் பேசுவது நிச்சயம் எனக்கு அவநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் இதை யாரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதில்தான் கூடுதல் அரசியல் இருக்கிறது.

பெண்களை என்று மதிக்காத திராவிட அரசியல் பாஜகவின் நாகராஜனைக் கண்டிக்கிறது. பெண்களைப் போற்றுகிறோம் என்கிற போர்வையில் அவர்களை எத்தனை மட்டம் தட்ட முடியுமோ அத்தனை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு நாகராஜனைக் கண்டிக்க என்ன தகுதி உள்ளது? நாகராஜன் ‘கேவலமான மகளிர்’ என்று சொன்னார். ஆனால் இவர்கள் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்? கருணாநிதி சிலேடையாகப் பேசுவதாகப் பேசிய பேச்சை எல்லாம், அவரது தமிழ்ப் புலமைக்கும் கழக ஆண்களின் ஆண்மைக்கும் சான்றாகச் சொல்லி விதந்தோதியவர்களே இவர்கள். இவர்களது வரலாறே பெண்களைப் பாலியல் ரீதியாக சுரண்டியதிலும் அவமானப்படுத்தியதிலும்தான் இருக்கிறது. ஆனால் பேச்சிலும் எழுத்திலும் மட்டும், அடேயப்பா!

ஜெயலலிதாவையும் மோடியையும் பற்றி மிகத் தரக்குறைவாகப் பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இன்று அவரது கட்சியைச் சேர்ந்தவரை நாகராஜன் விமர்சிக்கவும் அந்தக் கட்சியே மிக யோக்கியமானவர்கள் போலப் பேசுகிறார்கள். இத்தனைக்கும் நாகராஜன் பேசிய கேவலமான பேச்சைவிடப் பல மடங்கு கேவலமாகப் பேசி இருந்தார் இளங்கோவன்.

திருமாவளவன் – இவர் காயத்ரி ரகுராம் பற்றிப் பேசியது,  (“குடித்து விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்? ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில்”) நாகராஜன் பேசியதே பரவாயில்லையே என்று சொல்லும் அளவுக்குக் கீழ்த்தரமானது. திருமாவளவன் பேசியதைத் தொடர்ந்து அவரது கட்சியினர் மிக மோசமாக காயத்ரி ரகுராமைக் கீழ்த்தரமாக எழுதினார்கள். திருமணத்துக்கு முந்தைய உறவு பற்றி குஷ்பூ ஒரு கருத்துச் சொல்லப் போக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல்கட்சிகள் குஷ்பூவை அரசியல் ரீதியாக ஓட ஓட விரட்டின. அந்த சமயத்தில் குஷ்பூ திரைப்படங்களில் பிற நடிகர்களுடன் நெருக்கமாக நடித்த படங்களை எல்லாம் இணையத்தில் கொட்டி குஷ்பூவைக் கட்டம் கட்டினார்கள். இன்று இவர்கள் பாடம் எடுக்கிறார்கள்.

இந்த விவகாரம் பற்றித் தமிழ் தி ஹிந்து வலைத்தளத்தில் ஒரு செய்தி (https://www.hindutamil.in/news/tamilnadu/555149-jothimani-vs-karu-nagarajan-3.html) பார்த்தேன். நாகராஜன் திட்டியதைப் பற்றி மட்டும் போட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியை கல்லால் மக்கள் அடிப்பார்கள் என்று ஜோதிமணி பேசியதைப் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. இதுதான் ஊடகங்களின் லட்சணம்.

திமுகவின் வெற்றிகொண்டான் பேச்சை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. வெற்றிகொண்டான் உள்ளிட்டவர்களை நாம் விமர்சித்தால், இந்த ரசிகர்கள் உடனே வந்து நமக்குப் பாடம் எடுப்பார்கள். வெற்றிகொண்டான் பேச்சு கழகக்காரர்களை உற்சாகப்படுத்தவாம். திமுகவின் கட்சி மாநாடு நடந்தபோது நாடகம் என்கிற பெயரில் ஜெயலலிதாவை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து இரட்டை அர்த்த வசனத்துடன், சொல்லவே கூச்சம் ஏற்படும் வகையில் ஒரு நாடகம் போடப்பட்டது. கருணாநிதி, அவரது குடும்பம் உட்பட அனைத்து முன்னணித் தலைவர்களும் அதைப் பார்த்தார்கள். சில முன்னணி தலைவர்களே மேடையில் இரட்டை அர்த்தத்துடன் பேசினார்கள். பின்னர் அடுத்து அதே போல அதிமுக மாநாட்டில் அதே போன்ற இரட்டை அர்த்த வசனத்துடனும் கேவலமான சொற்பிரயோகங்களுடனும் கருணாநிதிக்குப் பதிலடி தரப்பட்டது. (http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_12.html and https://www.facebook.com/haranprasanna/posts/714427531911952).

இப்போது நாகராஜனுக்குப் பாடம் சொல்கிறார்கள்.

வெற்றிகொண்டான் என்றில்லை, தலைவர்கள் வரை இவர்களது செயல்பாடு இப்படித்தான். இதையேதான் பாஜகவும் பின்பற்ற நினைக்கிறதா என்பதைத்தான் இப்போது பாஜகவும் பாஜகவினரும் பாஜகவின் ஆதரவாளர்களும் யோசிக்கவேண்டும். இதுவே பழக்கமாகவும் பின்னர் வரலாறாகவும் மாறிவிட்டால் அதனால் ஏற்படும் அவமானத்தை எப்போதும் துடைக்கவே முடியாது.

பெண்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் ஒருவரைத் திட்டவும் தகுதி வேண்டும். அந்தத் தகுதி நீங்கள் நினைக்கும் போதெல்லாம் வராது. அது தொடர்ச்சியான ஒன்று. எந்தக் கட்சியினர் பேசினாலும், அவர்கள் தங்கள் கட்சிக்காரர்களே என்றாலும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் ஒரு அரசியல்வாதியைக் கண்டிக்காத வரை, மற்ற அரசியல்வாதிகளைக் கண்டிக்க யாருக்கும் தகுதி இல்லை. நாகராஜன் பேசியதைவிட தரக்குறைவாகப் பேசிய ஈவிகேஸ் இளங்கோவனையும் திருமாவளவனையும் கண்டித்துவிட்டுப் பின்னர் நாகராஜனுக்கு வாருங்கள். ஈவிகேஎஸ், திருமாவளவன், ராதாரவி, நாகாரஜன் உள்ளிட்ட அனைவரையும் கண்டிப்பவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.

-oOo-

துக்ளக்கில் வெளியான தொகுப்பு சேமிப்புக்காக இங்கே:

நாகரிகமான பேச்சு. இந்தப் பேச்சின்போது கருணாநிதியின் குடும்பமே மேடையில் இருந்தது. பெண்களை மதிக்க, பெண்களுக்காக போராட திமுகவை விட்டால் நாதியில்லை!!!

கடந்த 2003 திமுக மாநாட்டில் பேசிய சிலரின் பேச்சுக்கள் தான். அது கீழே…

சில சாம்பிள்கள்…

* பைத்தியக்காரி, ஆணவக்காரி, இடி அமீன், ஹிட்லர், குடும்ப வாழ்க்கை
தெரியாதவர் என்றெல்லாம் அர்ச்சனைகள் நிகழ்த்தப்பட்டன.

* திருச்சி செல்வேந்திரன் கதறுந்த ஊசி, வார் அறுந்த செருப்பு, கறை
படிந்த பாவாடை என ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். அவரே “தலைவரையும்
அவரது மகளையும் அவமானப்படுத்தி, ஜெயலலிதா தனது தொழில்புத்தியைக்
காட்டினார்” என்றும் குறிப்பிட்டார்.

* வெற்றி கொண்டான், ” இந்த அரசு ஊழியர்கள் இன்னும் இரண்டு வருடம்
பொறுத்திருக்கக் கூடாதா? நான் ஏற்கனவே சொன்னேன்… அம்மா அப்பா
உற்றார் உறவினர் இனத்தைச் சேர்ந்தவன் இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும்
கையை நீட்டலாம். பத்துப் பேரிடம் படுத்தவளிடம் போய் கைநீட்டலாமா “
என்றவர், ” அது கொழுப்பெடுத்த குதிரை. அதுக்காகத்தாண்டி மவளே..
பக்காவா ஒரு தலைவனைத் தயார் பண்ணி வெச்சிருக்கோம். அடுத்த
ஆட்சியில் கலைஞர் முதலமைச்சர்; ஸ்டாலின் போலீஸ் அமைச்சர்.
அப்பத்தான் அவ கொழுப்பை அடக்க முடியும்!” என்று குறிப்பிட்டார்.

* கருப்பசாமி பாண்டியன், “பாசிச வெறி பிடித்தவர். சாடிஸ்ட். மனநிலை
தவறியவர். முசோலினி என்றெல்லாம் ஜெயலலிதா மீது அர்ச்சனை
நடத்தினார். இறுதியாக, “அழகான ஆண்களைக் கண்டால், அவர்களை
வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டை போடுவது அந்தம்மாவின்
சுபாவம்” என்றபடி ஸ்டாலினைப் பார்த்தார்.

* பரிதி இளம்வழுதி, ” கி.மு., கி.பி. மாதிரி சட்டசபை வரலாறு பற்றிப்
பேசினால் கு.மு., கு.பி. என்று குறிப்பிடலாம். அதாவது குண்டம்மாவிற்கு
முன், குண்டம்மாவிற்குப் பின்!” என்று விளக்கம் அளித்தார்.

* திமுக மாநாட்டில் முதல்நாள் பேரணியின் முடிவில் இரவு 10 மணிக்கு
“ஆண்டியும் போண்டியும்” என்ற பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.
இந்நாடகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின்
புகழ்பாடும் வசனங்களோடு, காட்சிக்குக் காட்சி முதல்வர் ஜெயலலிதாவைச்
சாடும் வசனங்களும் இருந்தன. அவற்றுள் சில இரட்டை அர்த்தத்
தொனியுடனும் மலிவான இரசனையைக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தது.

உதாரணத்திற்குச் சில வசனங்கள்…

** “ஒவ்வொரு மந்திரியும் அந்தம்மா காலில் விழுந்து மேலே பார்க்கிறான்.
என்ன பார்க்கிறான் தெரியுமா? அம்மா தூக்குவாங்களா மாட்டாங்களான்னு!”

** மந்திரி பதவிக்கு ஆசைப்படும் ஆளும் கட்சி எம் எல் ஏவிடம், அவரது
மகன் (திமுக ஆதரவாளர்) கூறுவது: ” அம்மா அஜால் குஜாலா இருந்தாங்கன்னா
அன்னைக்கு மந்திரி ஆக்குவாங்க. அஜால் குஜால் இறங்கிடுச்சுன்னா மந்திரி
பதவியை விட்டு எடுத்துடுவாங்க”

** “ஜெகத்குரு சங்கராச்சியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?”

“யாரு? அந்த…… குச்சியிலே கோவணம் கட்டியவனா?”

** “நீங்க மந்திரி ஆகணும்னா சின்னம்மாவைப் பிடிங்க. அவங்க
என்ன சொன்னாலும் நடக்கும்… அவங்களைத் தள்ளிக்கிட்டு
வர்றேன். முடிஞ்ச வரைக்கும் செய்யுங்க. இல்லேன்னா ஆளை
வெச்சுச் செய்யுங்க..”

(சுசி என்ற பெயருடைய அந்தச் ‘சின்னம்மா’ வருகிறார்)

சுசியைப் பார்த்து எம் எல் ஏ கூறுவது: “இந்த மாதிரி ஒரு
ஸ்ட்ரக்சரை நான் பார்த்ததே இல்லை.”

சின்னம்மா (சுசி) கூறுவது:

“…கவலையே படாதீங்க. நான் இல்லேன்னா அந்த அம்மாவால எந்த
அவயங்களையும் அசைக்க முடியாது. நாந்தான் அவங்களுக்கு எல்லாமே”

** ஒருவர்; ” என்ன 2 நாள் முன்னாடி அங்கே அம்மா லிங்கத்துக்கெல்லாம்
பூஜை செய்யச் சொல்லி அறிக்கை விட்டுருக்காங்க?”

மற்றொருவர்: ” எங்க அம்மா எத்தனை லிங்கத்தைப் பார்த்திருப்பாங்க!”

** (போண்டி என்பவர் ஆண்டியிடம் கூறுவது)
“உங்க அம்மாவுக்கு ராத்திரியானால் உள்ளே வைக்கணும்”

ஆண்டி” உம்..

போண்டி: அதாவது அரசியல் தலைவர்களைப் பிடிச்சு உள்ளே
வைக்கணும்

** ஆண்டி : “லேடீஸ் ஹாஸ்டல்னு ஒரு படம் பார்த்தேன். ஒரு பொண்ணு
குள்ளிக்கிறதை இன்னொரு பொண்ணு எட்டிப் பார்க்குது… கும்பகோணம்
மகாமகத்துல பெரியம்மாவும் சின்னம்மாவும் கட்டிப்பிடிச்சுக் குளிச்ச
மாதிரி இருந்தது”

** (ஒரு எம் எல் ஏவிடம், மாரியம்மன் போல சாமியாடியவர் கூறியவை)

சாமியாடுபவர்: “எனக்கு வைக்குறேன், வைக்குறேன்னு சொன்னியே
வெச்சியாடா? “

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: வேல் வைக்கிறேன்னு சொன்னியேடா… புடுங்குறேன்
புடுங்குறேன்னு சொன்னியேடா.. புடுங்கினியாடா?

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: கோயிலைச்சுற்றி இருக்குற புல்லைப் புடுங்கினியாடா…..
.. ஊத்துறேன் ஊத்துறேன்னியே… ஊத்தினியாடா?

சாமியாடுபவர்: கூழ் ஊத்தினியாடா..

எம் எல் ஏவிடம் சாமியாடுபவர் கடைசியாகக் கூறுவது:

” எங்க அம்மா உங்களை 6 மாசம் வெச்சிருந்து அப்புறம்
கலைச்சிடுவாங்க”

( நன்றி: துக்ளக் 1.10.03 )

Share

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய பிரச்சினை. அதாவது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காமல் இருந்து, இப்போது அவை திடீரெனக் கிடைக்கும்போது வெடிக்கின்றன. அதனால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைப் பற்றிய கதை. சில நாடுகளில் இது முக்கியமான பிரச்சினை. இப்பிரச்சினையை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்ற நினைத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் இத்தகைய வெடிக்காத குண்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டதில்லை. ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இதுபோன்ற பெரிய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைச் செயலிழக்கச் செய்வது பெரிய பிரச்சினையாக இருக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த இடத்தை விட்டே அப்புறப்படுத்தப்படுவார்கள். சில குண்டுகள் வெடித்து மக்கள் இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இது பெரிய பிரச்சினையாக இதுவரை வந்ததில்லை. எனவே இது நமக்கு வேறு ஒரு ஊரின் பிரச்சினையாகத் தோன்றிவிடுகிறது. இந்த குண்டு வெடித்தால் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்பது பற்றி நமக்குப் புரியாததால், இந்தியாவின் அப்படி நிகழ்ந்தது இல்லை என்பதால், நாம் இந்தப் படத்துடன் ஒன்ற மறுத்து விடுகிறோம். படமும் நம்முள் அந்தப் பதற்றத்தைக் கடத்தவில்லை.

அதேபோல் இத்தனை ஆயிரம் பேரைக் கொல்லப்போகும் ஒரு குண்டை இந்திய அரசு இப்படித்தான் அலட்சியமாகக் கையாளும் என்று நமக்குள் ஒரு கம்யூனிச மூளையின் சிந்தனை திணிக்கப்படுகிறது. அந்த கம்யூனிச மூளை இப்படத்தை எழுதிய எழுத்தாளராக இருக்கலாம் அல்லது இயக்குநராக இருக்கலாம் அல்லது தயாரிப்பாளராக இருக்கலாம். இப்படி நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கத்தியைப் போல எப்போதும் நம் அரசு நம்மைக் கொல்லத் தயாராக இருக்கிறது என்று சொல்வதை இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் குறைகளே இல்லை என்பதல்ல. ஆனால் குறைகளின் நடுவே மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்று வலிந்து உருவாக்கப்படும் சித்திரம் ஏற்கத்தக்கதல்ல. ‘முற்போக்காளர்’களின் முதன்மையான நோக்கமே இந்த சித்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்குவதுதான்.

திரைப்படம் என்று வந்து விட்டால் நம் ‘முற்போக்காளர்கள்’ அன்பு அக்கறை என்றெல்லாம் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் இதே கம்யூனிசம் உலகம் முழுக்க ஒன்றரை கோடி பேரை, ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றரை கோடி பேரைக் காவு வாங்கியிருக்கிறது ஹிட்லரின் இன ஒழிப்பின்போது மாண்ட மக்களுக்கு இணையான எண்ணிக்கையில் கம்யூனிஸத்தால் மக்கள் உலகம் முழுக்கக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  அதைப்பற்றி இவர்கள் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல, அந்தக் கோட்பாட்டை விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குண்டு வெடித்தால் 1,000 முதல் 2,000 அப்பாவிகள் செத்துப் போவார்கள் என்று புலம்பும் ஒரு தோழர், வருடம்தோறும் மாவோயிஸ்டுகளால் இந்தியா முழுக்கக் கொல்லப்படும் குடிமக்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியா முழுக்கக் கொன்று போடும் அப்பாவி இந்தியர்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. ஒருவன் வலி இன்னொருவனுக்குத் தெரியவேண்டும் என்று வக்கணையாகப் பேசும் தோழர் கதாபாத்திரம், இத்தகைய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழக்கும் மனிதர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. எனவே இதில் சொல்லப்படும் கருத்துக்கள் அத்தனையுமே வெறும் புனைவு சார்ந்ததாக மட்டுமே ஆகிவிடுகிறது. உண்மையைச் சார்ந்ததாக மாறுவதில்லை. ஆனால் அடிப்படையோ உண்மை சார்ந்த நிகழ்வு என்று சொல்கிறார்கள். எனவேதான் நம்மால் இந்தப் படத்துடன் ஒன்ற முடிவதில்லை.

முதல் திரைப்படம் என்ற வகையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை பெரிய நம்பிக்கையைத் தருகிறார். படம் எடுக்கப்பட்ட விதம் மிக நன்றாக இருக்கிறது. மிகச் சரியான கதையைக் கையில் எடுத்து இந்தப் படத்தை இயக்கி இருந்தால் இப்படம் பெரிய அளவு பேசப்பட்டிருக்கும். நமக்கு அனுபவப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொள்ளாதது முதல் மைனஸ். அதில் காதல் வர்க்க ஜாதி வேறுபாடு என்று எல்லாவற்றையும் சேர்த்து, எதையும் தீவிரமாகக் காட்டாமல் போனது இரண்டாவது மிகப்பெரிய மைனஸ்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் யாமகுச்சி என்ற ஒரு ஜப்பானியர் வருகிறார். அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவராகச் சொல்லப்படுகிறது.  ஒரு வரலாற்று அடிப்படையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் வரும் இந்தக் கதாபாத்திரமும் உண்மையான ஒன்றாக இருந்திருக்கவேண்டும். ஆனால் முழுக்க இது புனைவு என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த ஜப்பானியர் தன் மகள் குறித்த ஒரு கதை சொல்கிறார். உலகம் முழுக்க பிரபலமான அந்தக் கதை நாகசாகியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட ஒரு குண்டு தந்த புற்றுநோயைச் சுமக்கும் பெண்ணைப் பற்றியது.  ஸடகோ ஸஸகி என்னும் அந்தச் சிறுமி 1000 காகிதப் படகுகள் செய்தால் உடல்நிலை சரியாகி விடும் என்று அவளுடன் படிக்கும் இன்னொரு சிறுமி சொல்கிறாள். இந்தப் பெண்ணும் படகுகள் செய்கிறாள். அந்தப் பெண்ணின் தந்தைதான் இந்தப் படத்தில் வரும் ஜப்பானியர் என்றும் இரண்டு நோபல் பரிசுகள் பெற்றவர் என்றும் காட்டப்படுகிறது. உண்மையில் அந்தப் பெண்ணின் தந்தைக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. இரண்டு முறை நோபல் பரிசுகள் பெற்றவர்கள் பட்டியலில் எந்த யாமாகுச்சியும் கிடையாது. அதேபோல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என்ற இரண்டு குண்டு வீச்சிலும் உயிர் பிழைத்த யாமாகுச்சி என்பவருக்கு நோபல் பரிசு தரப்படவில்லை. அவரது மகள் ஸடகோ ஸஸகி அல்ல. இத்தனை குழப்பமான ஒரு கதாபத்திரத்தை ஏன் க்ளைமாக்ஸில் கொண்டு வந்தார்கள் என்று புரியவில்லை. உண்மைக்கு அருகில் என்றால் அது உண்மையில் உண்மைக்கு அருகில் இருந்தாக வேண்டும்.

காகிதப் படகுகள் செய்யும் பெண்ணின் கதை இரண்டு நிமிடமே வந்தாலும் அது நெஞ்சை உருக்குகிறது. ஏனென்றால் அதில் நெஞ்சை உருக்கும் உண்மை உள்ளது. இந்தப் படம் தோற்றதும் இந்த இடத்தில்தான்.

படத்தின் ஹீரோ தினேஷ் மிக நன்றாக நடிக்கிறார். சில காட்சிகளில் அதீத நடிப்பு. தோழர் தோழர் என்று அழைத்துக் கொண்டே வரும் ரித்விகாவின் கதாபாத்திரம் காமெடியான கதாபாத்திரமாகவே எஞ்சுகிறது. யாரைப் பார்த்தாலும் தோழர் என்று அழைக்கிறார். போலீசை விட தோழர்கள் இரவு பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று பார்ப்பதெல்லாம் பெரிய நகைச்சுவையாக மட்டுமே இருக்கிறது. முதலாளி வர்க்கம் உலக மக்களை ஒருவர் விடாமல் காவு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற கம்யூனிச வெற்று அலப்பறைகளை எல்லாம் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. இதற்கு முன்பும் தமிழ்த் திரையுலகம் தாங்கிக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்!

ஒரு வித்தியாசமான திரைப்படம் என்றால் அதில் எப்படியாவது தெருக்கூத்து தொடர்பான காட்சிகள் வந்துவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் இருந்து நம் இயக்குநர்கள் எப்போது வெளியே வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதிலும் ஒரு தெருக்கூத்துக் காட்சி வருகிறது. அந்தத் தெருக்கூத்துக் காட்சி அதனளவில் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றாலும் கூட, இது போன்ற திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளைப் புகுத்துவது ஒரு க்ளிஷேவாகி எரிச்சலை மட்டுமே வரவழைக்கிறது.

தமிழ் இயக்குநர்கள் தாங்கள் எடுக்கும் எல்லாத் திரைப்படங்களிலும் அரசியல் குறியீடுகளையும் அரசியல் தொடர்பான பின்னணிகளையும் தேவையே இல்லாமல் புகுத்துவதன் மூலம் உண்மையான அரசியல் திரைப்படம் வருவதைத் தடுக்கவே போகிறார்கள். இதனால், திரைப்படத்தை எவ்விதக் கோட்பாடும் இன்றிப் பார்க்க விரும்பும் பொது ரசிகர்களைத் தங்களிடமிருந்து விலக்கி வைக்கப் போகிறார்கள். எல்லாப் படங்களிலும் அரசியல் என்பது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்திற்கான கொள்ளி. இதை இவர்கள் வைக்காமல் விடப் போவதில்லை.

நன்றி: ஒரேஇந்தியா

Share

சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

கோவை தொடர் குண்டுவெடிப்பு என்பது தமிழ்நாட்டில் எத்தனை முக்கியமான தீவிரவாத நிகழ்வு என்பது எல்லாருக்கும் தெரியும். சிதைந்த வேனும் வெடிக்க காத்திருந்த காரும் அத்தனை மறக்கக் கூடியதல்ல. இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னணியாக வைத்து ஒரு படம் வருகிறது என்றால், அது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்கக்கூடாது என்று தெரியவேண்டுமானால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ பார்க்கலாம்.

1998 Coimbatore bombings.gif
Nine convicted in Coimbatore blast case released - The Hindu

ஒரு முக்கியமான நிகழ்வை, ஒரு மாநிலத்தையே உலுக்கிய நிகழ்வை மையமாக வைத்து முக்கியமான திரைப்படங்கள் உலகம் முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சாபம் இருக்கிறது. உண்மையைச் சொல்வதைவிட யாரையாவது தாஜா செய்யவேண்டும் என்றால் அதற்காக இந்தக் கருவை எடுத்துக்கொண்டு, மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் படம் எடுப்பது. அந்த அளவுக்கு தாஜா அரசியல் இங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அரசியலிலும் திரை உலகிலும்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தை கோயமுத்தூரில் பார்த்தோம். இஸ்லாமியர்களை எப்போதும் உச்சி மோந்து அன்பு செலுத்தும் கருணாநிதி கூட இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை எடுத்தார் என்று திமுகவினரே சொல்வார்கள். இதைக் குறை சொல்லியும் பல திமுக ஆதரவு இஸ்லாமியர்கள் இன்று வரை பதிவுகள் இடுவதைக் காணலாம். ரஜினி சம்பந்தமே இல்லாமல் ஒரு அறிக்கை தந்தார். திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்களே ரஜினி சொன்னது மடத்தனம் என்றும், இந்தக் குண்டுவெடிப்புக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களே காரணம் என்று ஒப்புக்கொண்டதும் வரலாறு. இதுகுறித்து ரஜினி இன்று வரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பின்னணியைக் கொஞ்சம் கூட வரலாற்றுப் பிரக்ஞையோ பொறுப்போ இல்லாமல் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு தீவிரவாதக் குழு கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடுகிறது. அவர்கள் உடை பாவனை பேச்சு எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போலவே இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆறு தீவிரவாதிகளின் பெயர்களைக் கூடச் சொல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு தீவிரவாதியின் பெயர் முபாரக் என்று வருகிறது என நினைக்கிறேன். தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறுகிறது தமிழகக் காவல்துறை.

பயங்கரவாதிகளுக்கு உதவும் ஒருவரது பெயர் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஹிந்து. இது உண்மையாக இருக்கவே வாய்ப்பும் அதிகம். அதை மறுப்பது என் நோக்கமல்ல. ஆனால் தீவிரவாதிகளின் பெயர்கள்? இயக்குநர் அந்தச் சமயத்தில் தாஜா அரசியல் மற்றும் செக்யூலரிசத்தின் உச்சத்துக்குப் போய்விட்டார். அத்துடன் நிற்கவில்லை. இந்தத் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் இன்ஸ்பெக்டரின் பெயர் இப்ராஹிம்! இயக்குநர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.

படத்தில் இரண்டு முறை ஒரு வசனம் வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் மசூதியில் தொழுபவர்கள் இறந்து போய்விடுவார்கள் என்று. அதாவது இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல என்று இயக்குநர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாராம். இத்தனை உண்மைகளைக் கவனம் எடுத்து வலிந்து வலிந்து சொன்ன இயக்குநருக்குப் பயங்கரவாதிகளின் பின்னணியை விவரிப்பதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடுகிறது. ஒரு தீவிரவாத நிகழ்வை அப்படியே படம் எடுப்பதில் என்ன பிரச்சினை? அது எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் மதத்துக்கும் எதிரான படமாகும்? உண்மையில் இப்படி யோசிப்பதே அந்த மதத்தினருக்குச் செய்யும் அநீதி அல்லவா? இப்படி யோசிப்பவன் தானே நியாயமானவனாக இருக்கமுடியும்? ஆனால் இங்கே அவன் கட்டம் கட்டப்படுவான். எனவேதான் இயக்குநர்கள் எதிர்த்திசைக்குப் போகிறார்கள்.

இத்தனை பெரிய குண்டுவெடிப்பை காவல்துறை தடுத்து நிறுத்த ஒரு நாடகம் நடத்துகிறார்கள். அந்த நாடகம் – ஐயகோ. குண்டுவெடிப்பைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கூட இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா யோசிக்கவில்லை. அவரது நோக்கம் உண்மையைப் பதிவு செய்வதல்ல, மாறாக ஒரு நாடகத்தைச் சொல்வதுதான் என்பது உறுதியானபின்பு அவர் ஏன் இதைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்!

தமிழ்நாட்டுத் திரையுலகம், உண்மையான நிகழ்வைப் பின்னணியாக வைத்து அரசியல் ரீதியான தீவிரமான படம் எடுப்பதில் இன்னும் வயதுக்கு வரவில்லை என்று சொல்லலாமா? இப்படியும் சொல்லிவிடமுடியாது. இதுவே ஹிந்துக்களுக்கு எதிரான திரைப்படம் என்றால் எல்லாவிதமான திறமைகளையும் ஒரே நேரத்தில் இறக்கிப் படமெடுப்பார்கள் என்பது உறுதி. உண்மையான நிகழ்வை அப்படியே பதிவு செய்யாமல், தங்களது மன ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புகுத்தி ஒரு படம் எடுத்தால் அங்கே கலை செத்துப் போய்விடும். ஆனால் முற்போக்காளர் பட்டமும் பணமும் கிடைக்கும். எது தேவை என்பதை இயக்குநர்கள் தெளிவாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.

ஆனாலும் நாம் சில நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒன்று, இந்தக் குண்டுவெடிப்பைத் திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காண்பிக்கவில்லை என்பது போலவே, இந்த குண்டுவெடிப்பு நியாயமான தேவையான ஒன்றுதான் என்ற அளவுக்கு இயக்குநர் யோசிக்காமல் இருந்திருக்கிறாரே, அதற்கு முதல் நன்றி! இரண்டு, குண்டுவெடிப்பைத் தகர்க்க உதவும் இஸ்லாமிய போலிஸுக்கு உதவும் மற்றவர்கள் ஹிந்துக்கள். அவர்களையும் இஸ்லாமியர்களாகவோ கிறித்துவர்களாகவோ யோசிக்காத இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டாமா! இயக்குநர் இதையெல்லாம் யோசித்து மனதில் வைத்து அடுத்த படத்தில் இன்னும் பதினாறு அடி பாய வாழ்த்துவோம்.

Share

ஆர்.கே.நகர் திரைப்படம்

ஆர்.கே.நகர் – பொருட்படுத்தத் தகாத ஒரு படம். முழுமையாகப் பார்ப்பதே பெரிய கொடுமை. இப்படிப் படம் எடுக்கும் லட்சணத்தில் நம் இயக்குநர்களுக்குத் தங்கள் திரைப்படங்களில் குறியீட்டை வைக்கவும், அரசியலைக் கிண்டல் செய்யவும் மட்டும் ஆசை வந்துவிடுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுக் கதை வசனம் எழுதுகிறார்கள்.

ஆர்.கே. நகர் என்ற பெயரே நமக்குச் சொல்லும், இது அரசியல் படமாக இருந்தால் எதைப் பற்றிப் பேசவேண்டும், எந்தக் கட்சிகளைப் பற்றிப் பேசவேண்டும் என்று. இந்தப் படத்தில் அதைப் பற்றிய மூச்சே இல்லை. பின்னணியாகப் பள்ளி சிறுவர்களின் சீரழிவே கதை. ஆனால் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் அரசியல் தொடர்பானவை. சந்தான பாரதி ஒரு கவுன்சிலர். செல்வாக்கு மிக்க கவுன்சிலர். தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க கவுசின்லர், அடிதடி கவுன்சிலர், ரௌடி கவுன்சிலர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கமுடியும்? அதைக்கூட விடுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக நிச்சயம் இருக்க முடியாது? பாஜக காரராக இருக்க வாய்ப்பில்லைதானே? இந்தப் படத்தில் வரும் சந்தான பாரதி நெற்றியில் குங்குமத் திலகமிட்டு வருகிறார். காவி வேட்டி கட்டி வருகிறார். எந்தக் கழக அரசியல்வாதி காவி வேட்டி கட்டிக் கொண்டு திரிகிறார்? இவர்களுக்குக் கழக அரசியல்வாதிகளைக் காண்பிக்க பயம்.

அத்தோடு நிற்கவில்லை. சந்தான பாரதியும் வாஜ்பேயியும் இருக்கும் ஒரு புகைப்படம் ஒரு காட்சியில் பின்னணியில் வருகிறது. குறியீடாம்! இதிலும் திருப்தி அடையவில்லை இயக்குநர் சரவணன் ராஜன். இந்த சந்தான பாரதி கோவில் நிலத்தை ஆட்டையைப் போடுகிறார். தமிழ்நாட்டில் யார் கோவில் இடத்தை ஆட்டையைப் போட்டிருப்பவர்கள்? யார் தொடர்ந்து 50 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள்? இயக்குநர் பச்சைக் குழந்தை என்பதால் இதெல்லாம் தெரியாது. கைச்சூப்பிக்கொண்டு, அப்படியே மக்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அப்படியும் திருப்தி வரவில்லை குழந்தை இயக்குநருக்கு. கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவதைத் தடுக்கும் ஒரு கட்சியின் உதவிக்குப் போகிறார் கோவில் பட்டர். அவருக்கு உதவுபவர்கள் பக்தியில் நம்பிக்கையில்லாத ஆனால் நல்லவர்களாம்!

இந்த இயக்குநருக்கும் இதன் தயாரிப்பாளரான வெங்கட் பிரபுவுக்கும் ஏன் ரஜினி மேல் இத்தனை காண்டு, வெறுப்பு எனத் தெரியவில்லை. சந்தான பாரதியை ரஜினியின் கதாபாத்திரமாக்கி திட்டித் தீர்க்கிறார்கள். போர் வரும்போது வருவேன் என்ற வசனத்தை சந்தான பாரதி சொல்கிறார். சந்தான பாரதி கவுன்சிலர் என்றால் ரஜினியை எப்படித் திட்டுவது என்பதற்காகவே சந்தான பாரதியை ஒரு நடிகர் என்று காட்டி இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று காட்டினால் கவுன்சிலராகக் காட்ட முடியாதே என்பதற்காக சின்ன நடிகர் என்று காட்டிவிட்டார்கள். எவ்வளவு கற்பனைப் பஞ்சம் பாருங்கள். அதாவது வசனமும் காட்சிகளும் மட்டும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கானவை! அவரோ ஒரு கவுன்சிலர்! ஒரு காட்சியில் சந்தான பாரதி ரஜினியுடன் இருக்கும் படம் வருகிறது. அதாவது சந்தான பாரதியும் வாஜ்பேயியும் புகைப்படத்தில் வரும் அதே காட்சியில் இந்த சந்தானபாரதி – ரஜினி படமும் அதற்கு இணையாக வருகிறது. குறியீட்டுக்குள் குறியீட்டுக்குள் குறியீடாம். இதில் சந்தான பாரதியை எந்திரன் போல கிராஃபிக்ஸ் செய்து ஃப்ளக்ஸ் எல்லாம் பின்னணியில் குறியீடாக வருகிறது. இரண்டு முறை ‘நீ என்ன எம்ஜியாரா?’ என்ற வசனம் வருகிறது.

ஒழுங்காக ஒரு படம் எடுக்க முடியவில்லை. ஆக்ரோஷமான அரசியல் சட்டையர் எடுக்க வக்கில்லை. தமிழ்நாட்டில் கோலோச்சும் கட்சிகளை விமர்சித்து, தாக்கி, தீவிரமான அரசியல் படம் எடுக்க துணிவில்லை. ஆனால் வாய் மட்டும் இருக்கிறது இவர்களுக்கு.

Share