Tag Archive for மலையாளம்

பிரியாணி – மலையாளத் திரைப்படம்

18+

பிரியாணி (ம) – இதைப் பற்றி எழுதாமல் கடப்பது நல்லது என்று நினைத்தேன். ஆனாலும் எழுதுகிறேன்.

21+ திரைப்படம் என்று சொல்லலாம். எனவே குடும்பத்துடன் பார்க்கவே பார்க்காதீர்கள். இனியும் இதைப் பற்றிப் படிக்கவேண்டுமா என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 🙂

மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எழுதும்போது ஏன் அந்தத் திரைப்படங்களில் ஹிந்து மதம் சித்தரிக்கப்படும் விதம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று முன்பே சொல்லி இருக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான், தமிழைப் போல அங்கே கிறித்துவ இஸ்லாமிய மதங்களை விமர்சிக்கும் படங்கள் வராமல் இருப்பதில்லை. இந்தப் படம் மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் படத்தில் எனக்கு ஒத்துக்கொள்ள முடியாத விஷயங்களும் உண்டு.

ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்குப் போய்விட்ட ஒரு பையனின் குடும்பம் கேரளாவில் சந்திக்கும் பிரச்சினையே கதை. படம் அந்தப் பையனின் அக்காவின் பார்வையில் நகர்கிறது. அவளே கதாநாயகி. தன் மகன் வருவான் என்று காத்திருக்கும் பைத்தியக்கார அம்மா, தன் மகன் இந்தியாவின் தீவிரவாத வேட்டையில் இறந்துவிட்டான் என்று தெரிந்ததும் உயிரை விடுகிறாள். விவாகரத்து பெற்ற அக்கா பாலியல் தொழிலாளியாகிறாள். பின்பு தன் ஊர்க்காரர்களுக்கு பிரியாணி செய்து தருகிறாள். ஊரில் அனைவருக்கும் பிரியாணி செய்து போட வேண்டும் என்பது அம்மாவின் கனவு. ஆனால் இவள் செய்யும் பிரியாணி, ஐயோ, உவ்வேக் ரக கொடுமை.

படத்தின் கதைக்கும் நிகழும் சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே கதாநாயகியை உடலுறவில் முழுமை பெறாதவளாகக் காண்பிக்கிறார்கள். அவள் ஏன் பாலியல் தொழிலாளியாக வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. அடங்காத உடல் வேட்கை என்றால் படத்தின் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று குழப்புகிறது. பின்பு எல்லாம் விட்டு, குழந்தை உண்டாக, காவல்துறையின் பயங்கரத்தால் அந்த குழந்தையும் கருவிலேயே கலைகிறது.

இந்தக் கொடுமையை எல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், பல முக்கியமான பதிவுகள் உள்ளன.

ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் ஏஜெண்ட், இந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்தாலே சந்தேகப்படுவார்கள் என்கிறான். ஆனால் அவனே ஐ எஸ் அமைப்புக்கு ஏஜெண்ட்டாக இருக்கிறான்.

ஐ எஸ் அமைப்புக்குப் பையன் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் ஜமாத் அமைப்பு அவர்களது குடும்பத்தை தள்ளி வைக்கிறது. மறைமுகமாக உதவுவதெல்லாம் இல்லை.

ஐ எஸ் ஏஜெண்ட்டே அந்தப் பெண்ணுக்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஜமாத் மூலம் உதவ ஏற்பாடு செய்துவிட்டு, தலைமறைவாகிறான்.

தன் மனைவி ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பெண் என்று தெரிந்ததும் கணவன் முத்தலாக் சொல்கிறான்.

இப்படிப் பல யதார்த்தமான பதிவுகள் உள்ளன.

ஆனால் விவாகரத்தான கணவனுடன் அவள் மீண்டும் உறவு கொள்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. அவனோ இவள் எதிர்பார்க்கும் அளவுக்கானவன் அல்ல. பின்னர் ஏன்? ஒரு பழிதீர்த்தல் என்றா புரிந்துகொள்வது? என்ன கொடுமை என்றால், நெளிய வைக்கும் பழி தீர்த்தலுக்குப் பிறகு இந்த உறவு வருகிறது!

பழிதீர்க்கும் பிரியாணிக்கு போலிஸை, தன்னை அவமானப்படுத்தியவர்களை அழைத்தது சரி. ஏன் தனக்கு உதவிய பத்திரிகையாளரையும் அழைக்கவேண்டும்? ஏன் தான் விரும்பியே உறவு கொண்ட ஒருவனை அழைக்கவேண்டும்? இப்படி பல கேள்விகள்.

ஆனாலும் ஏன் முக்கியமான படமாகிறது? ஒன்று, யாரும் தொடத் தயங்கும் விஷயத்தை தைரியமாக எடுத்திருப்பதால். உலகத் திரைப்படங்களுக்கு இணையான காட்சி அமைப்புகள் படம் தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் வருவதால். கதாநாயகியாக நடிக்கும் நடிகையின் புதிர் நிறைந்த முகபாவத்தால். உலகத் திரைப்படங்களைப் போலவே எந்த நொடியிலும் எப்படியும் நகரும் தன்மை கொண்டிருப்பதால். எவ்விதக் கட்டுக்களுக்குள்ளும் சிக்காததால். இப்படிப் பல ஆச்சரியங்கள் படம் நெடுக.

சென்சார் கத்தரிகளுக்குத் தப்பித்த பிரதி ஓடிடியில் கிடைக்கிறது என்று பார்த்தேன். சென்சார் கத்தரிகளுக்குத் தப்பிக்காத பிரதியில் எந்தக் காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள், முதல் காட்சியிலேயே 21+ காட்சிகளுக்குத் தயாராகுங்கள். எல்லா வகையிலும் இப்படி அதிர வைக்கும் ஒரு திரைப்படம், இதே பிரிவில் இதே உருவாக்கத்தில் உலகத் திரைப்படத்துக்கு இணையான ஒரு திரைப்படம், மலையாளத்தில் இதற்கு முன்பு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

(இதற்கு முன்பு இன்னொரு மலையாளப் படம் பார்த்தேன். மூன்று வருடங்கள் இருக்கலாம். கணவனுக்கு நான்கு மனைவி என்றால் ஏன் ஒரு பெண்ணுக்கு நான்கு கணவன் இருக்கக் கூடாது என்று ஒரு பெண் கேள்வி கேட்பாள். அந்தப் படத்தின் பெயர் மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் சொல்லவும்.)

Share

பிக்பாஸ் மோகன்லால்

Image result for biggboss malayalam

மலையாளத்தில் மோகன்லால் நடத்தும் பிக்பாஸ் நேற்றோடு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது. இதைப் பற்றி எழுதி எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு சிறுகுறிப்பாவது எழுதாமல் இருப்பது பாவம் என்பதால்…

தமிழைப் போலவே மலையாள பிக்பாஸும் பெரிய அறுவை. தமிழைப் போல அல்லாமல், தினமும் டாஸ்க். டாஸ்க் இல்லாமல் செல்ஃப் பிக்கப் எடுக்கவே இல்லை. தமிழிலும் முதல் பிக்பாக்ஸ் இப்படித்தான் ஆகியிருக்கவேண்டும். ஆனால் ஓவியா என்றொரு புயல் மையம் கொண்டதால், பிக்பாஸுக்கு வேலை குறைந்துபோய்விட்டது. ஓவியாவே பிக்பாஸுக்குப் பதில் நிஜமான டாஸ்க் பலவற்றை அள்ளி வீசினார். ஓவியா இல்லாவிட்டால் பிக்பாஸ்1க்கு இத்தனை விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கலாம்.

தமிழைப் போல இல்லாமல், மலையாளத்தில் அனைவரும் ஆச்சரியமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். குறைவாகவே புரணி பேசுகிறார்கள். பெரிய சண்டைகள் எல்லாம் வருவதில்லை. சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் உடனே மறந்துவிடுகிறார்கள். அனைவரும் ஒன்றாகக் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். அரிஸ்டோ சுரேஷ் (ஆக்‌ஷன் ஹீரோ பிஜுவில் குடித்துவிட்டு கைலியை அவிழ்த்து பிரச்சினை பண்ணும் நடிகர், முத்தே பொன்னே பிணங்கல்லே புகழ் சுரேஷ்) கையில் கிடைக்கும் எந்த ஒரு சாதனத்திலும் தட்டிப் பாட்டுப் பாட, ஒட்டுமொத்த அணியினரும் கூடப் பாடுகிறார்கள், ஆடுகிறார்கள்.

தமிழோடு ஒப்பிட, இங்கே அனைத்து நடிகைகளும் மிக நாகரிகமாக உடை அணிந்து வருகிறார்கள். மலையாளத்தில் முதல் பிக் பாஸ் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்களோ என்னவோ.

பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய அளவில் சண்டை வரும் முகாந்திரங்கள் எல்லாம் அப்படியே சிதறிப் போகின்றன. பிக்பாஸும் எத்தனை முயன்றும் இன்னும் நிகழ்ச்சி செல்ஃப் எடுக்கவில்லை. மலையாளி ஓவியாவை இங்கேயும் அனுப்பிப் பார்க்கலாம். 🙂 சாபு என்பவர், பெண் விடுதலை, பெண்ணிய உரிமைகள் என்ற பெயரில் உள்ள எல்லாவற்றையும் ஏற்கமுடியாது என்று அடித்து ஆடுகிறார். கம்யூனிஸ்ட் என்று நினைக்கிறேன். அவரது மலையாளம் நன்றாக உள்ளது. மிகக் குறைவான ஆங்கிலக் கலப்போடு பேசுகிறார். இவர்தான் மிக இயல்பாக இருக்கிறார். ஆனால் இவரது பின்னணி – பிக்பாஸுக்கு முன்னர், பிஜேபி பெண் தலைவர் ஒருவரைப் பற்றி மிகவும் மோசமாக இவர் எழுதி, அது பிரச்சினையாகி இருக்கிறது. காலாபவன் மணி மரணத்தில் இவர் பெயர் அடிபட்டிருக்கிறது. இவையெல்லாம் நான் கூகிளில் கண்டவை.

அனூப் மேனோன் ஸ்வேதா மேனோனைப் பற்றிச் சொன்ன கமெண்ட் பெரிய பிரச்சினையை உண்டு பண்ணியது. அவர் ஸ்வேதாவைப் பார்த்து, ‘இன்னும் மலையாளிகள் உன்கிட்ட பார்க்க என்ன பாக்கி இருக்க்கிறது’ என்று கேட்டதை அடுத்து, அங்கே பெண்ணியக்காரர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தார்கள். அனூப் தான் காமெடியாகச் சொன்னதாகவும் அது தவறுதான் என்றும் மன்னிப்புக் கேட்டார். இதைப் போல ஒன்றிரண்டு எபிசோடுகள் கொஞ்சம் ஆக்டிவ்வாக இருந்தால், மற்ற எல்லா நேரமும் அன்பாகவும் ஆரவாரத்துடனும் ஆடிப்பாடியே இருக்கிறார்கள். ஒரு சண்டையோ பிரச்சினையோ இல்லாமல் ஒரே அறுவை. 🙂

தமிழில் பிக்பாஸ் செய்தபோது முதலில் கமல் இதற்கு செட் ஆகமாட்டார் என்றே நினைத்தேன். ஆனால் போகப் போக, கமல் இதனை மிக அட்டகாசமாகக் கையாண்டார். மலையாளத்தில் மோகன்லால் முதல் எபிசோடிலிருந்தே அடித்து ஆடுகிறார். சான்ஸே இல்லை. மோகன்லால் மலையாளம் பேசும் வேகமும், அட்டகாசமான மலையாளமும் வேற லெவல். எவ்விதத் திக்கலும் திணறலும் இன்றி, யாருக்கும் ஆதரவாக இல்லாமல், மனதில் பட்டதை மிக வெளிப்படையாகப் பேசுகிறார். அதைவிட முக்கியம், சனி ஞாயிறுகளில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் பேசும்போது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் அதைவிட வேகத்தில் கவுண்ட்டர் கொடுப்பதும் நகைச்சுவையாகப் பேசுவதும் என கலக்குகிறார். நான் பலதடவை கைதட்டிச் சிரிக்கும் அளவுக்கான டயலாக் டெலிவிரி. எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் பாதி, தானாக அவர்கள் பேசுவது பாதி என்பதுதான் இந்நிகழ்ச்சி என்பது என் உறுதியான நிலைப்பாடு. அதில் மோகன்லாலின் திறமை விண்ணைத் தொடுகிறது. ஆள் அழகாக கம்பீரமாக இருக்கிறார். கமல் கலக்கினார் என்றால் மோகன்லால் கமலைப் பலமடங்கு தாண்டுகிறார். (ஒருவழியாக ஏன் எழுதுகிறேன் என்ற காரணத்துக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்!)

இன்னும் 3 வாரங்கள் மட்டும் பார்க்க உத்தேசித்திருக்கிறேன். மோகன்லாலுக்காக மட்டும். எதாவது க்ளிக் ஆகினால் மட்டுமே தொடர்ந்து பார்ப்பேன். தமிழில் பிக்பாஸ்1ஐ ஓவியா வெளியேறும் நாள் வரை பார்த்தேன். பின்பு பார்க்கவில்லை. பிக்பாஸ்2 இதுவரை ஒரு நிமிடம் கூடப் பார்க்கவில்லை – ஓவியா உள்ளே வந்த அந்த 5 நிமிடங்கள் தவிர. மலையாளத்தில் பார்ப்பது, மோகன்லால் என்கிற ராட்சசனுக்காகவும் மலையாளத்தைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ளலாம் என்பதற்காகவும்.

Share