Tag Archive for மலையாளம்

மேப்படியான் – நில அரசியல்

தமிழ் சமூக ஊடகங்களில் இந்த மலையாளப் படம் ஹிந்துக்களுக்கு ஆதரவான ஒரு மனநிலையில் கொண்டாடப்பட, இது ஒரு அரசியல் திரைப்படம் என்று நினைத்துக் கொஞ்சம் கவனமின்றி இருந்துவிட்டேன். இன்றுதான் பார்த்தேன்.

ஒரு படமாக இப்படம் எந்த வகையிலும் எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லவில்லை. எல்லாருமே தங்கள் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்க்கும் சந்தர்ப்பவாதிகளாகக் காட்டப்படுகிறார்களே ஒழிய, வேண்டுமென்றே கெட்டவர்களாகச் சித்திரிக்கப்படவில்லை, ஒரே ஒருவரைத் தவிர. அந்தக் கதாபாத்திரம் ஒரு அரசியல்வாதி. அந்த அரசியல்வாதி ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோக்கரும் கூட. அவர் கிறித்துவர். படத்தில் ஏகப்பட்ட கிறித்துவக் கதாபாத்திரங்கள். மிக நல்லவர்களாகப் பலர் காட்டப்படுகிறார்கள். ஹாஜியார் கதாபாத்திரமும் கூட அதனளவில் வியாபாரத்துக்காக, தன் லாபத்துக்காக எதிராளிகளின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமே.

இரண்டு குடும்பங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்கள் வாக்கை கைவிடாத குடும்பங்களாகக் காட்டப்படுகின்றன. ஒன்று, கதாநாயகன் முகுந்தன் உன்னியின் குடும்பம். இன்னொன்று, வீட்டை விற்கும் கிறித்துவக் குடும்பம். தான் கொடுத்த வாக்குக்காக, ஒரு கிறித்துவப் பெண்ணின் வாழ்க்கைக்காகத் தன் எல்லா உடைமைகளையும் இழந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் ஹிந்துக் குடும்பத்துக்கு இணையாக, சாகும் தறுவாயிலும் தான் கொடுத்த வாக்குக்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து வீட்டை கிரையம் செய்து கொடுக்கும் கிறித்துவக் குடும்பம் என்று எல்லாமே சமநிலையில்தான் உள்ளது.

முகுந்தன் மிக அழகாக இருக்கிறார். எல்லை தாண்டாமல் நடிக்கிறார். மிக மெல்ல நகரும் படத்தில் மெல்ல மெல்ல ஒரு படபடப்பைக் கூட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிலும் சார்பதிவாளர் அலுவலகக் காட்சி உச்சம். ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுழலும் கதை தரும் அலுப்பைத் தாண்டிவிட்டால் ஓரளவுக்கு சுவாரஸ்யமான திரைப்படமே. நில அரசியலின் அத்தனை சாத்தியங்களும் காட்டப்படுகின்றன.

பின்னெப்படி இத்திரைப்படம் ஹிந்து ஆதரவுப் படமாகியது? படத்தில் வரும் சேவா பாரதி ஆம்புலன்ஸ் ஒரு சின்ன குறியீடே ஒழிய, அது பெரிய காரணமல்ல.

நிஜ உலகில் நடிகர் முகுந்தன் உன்னி உடல் எடை குறைப்பை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 95 கிலோவில் இருந்து 75 கிலோவாக உடலைக் குறைக்கிறார். (அந்தப் புகைப்படத்தைத் தேடிப் பாருங்கள். பெரிய சாதனைதான்!) அந்த மகிழ்ச்சியை டிவிட்டரில் பகிர்கிறார். அதில் தன்னுடன் ஒரு ஹனுமானின் படத்தையும் சேர்த்துப் பகிர்கிறார். அங்கே சந்தோஷ் கீழாற்றூர் என்றொரு நடிகர் கமெண்ட் போடுகிறார். “இந்த ஹனுமான் நாட்டை கொரானாவில் இருந்து காப்பாற்றுவாரா” என்று கேட்கிறார். இதற்கு முகுந்தன் உன்னி பதில் சொல்கிறார், “நாம் ஒன்றாக நடித்திருக்கிறோம், எனவே பணிவுடன் சொல்கிறேன், நான் நம்பும் கடவுளை வேண்டிக்கொண்டு இங்கே ஒரு பதிவு போடுகிறேன். இப்படியெல்லாம் பதில் சொல்லி உங்கள் மரியாதையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். இப்போதெல்லாம் ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்?” என்று.

முகுந்தன் உன்னி குஜராத்தில் சின்ன வயதில் இருக்கும்போது பட்டம் பறக்கவிடும் விழாவில் மோடியுடன் பட்டம் விட்டதாகச் சொன்ன செய்தியையும் மேலே நடந்த டிவிட்டர் விஷயத்தையும் முகுந்தன் உன்னி பிரதரமரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னதையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

பின்னர் மாத்ருபூமி செய்திகள் பேட்டியில் நெறியாளர் கேட்கிறார், “நீங்கள் வலதுசாரி என்று தெரிகிறது.” உடனே மறிக்கிறார் முகுந்தன் உன்னி.

முகு: எப்படித் தெரியும்? எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

நெறி: உங்கள் சமூக ஊடகங்கள் இடுகைகளில் இருந்து.

முகு: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு என்றா?

நெறி: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு மட்டுமே என்று சொல்லவேண்டியதில்லை.

முகு: அப்படியானால் அது என்ன? நீங்கள் சொல்வதை வைத்து நான் பிஜேபி என்றுதான் புரிந்துகொண்டேன். தெளிவாகச் சொல்லுங்கள். நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னதாலா என்னை வலதுசாரி என்கிறீர்கள்? எனக்கு இப்போதைக்கு அரசியல் ஆர்வம் எதுவும் இல்லை. நான் வளர்ந்த சூழலில் ஐயப்பன், கிருஷ்ணன், ஹனுமான் என்றுதான் வளர்ந்தேன். ஜிம்மில் கூட எதிரே ஹனுமான் படமே இருந்தது. ஏன் அந்த நடிகர் ஹனுமானால் கொரோனா போகும் என்று கேட்டார் எனத் தெரியவில்லை.

என்றெல்லாம் விளக்குகிறார்.

இது போதாதா? அவர் சங்கியாக்கப்படுகிறார். அதனால் அவர் நடிக்கும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் பார்க்கப்படுகிறது போல!

நம் தமிழ்த் திரையுலகில் ஹிந்துக்களுக்கும் பாஜக அரசுக்கும் எதிராகச் செய்யப்படும் பிரசாரத்தில் நூறில் ஒரு பங்கு கூட, மேப்படியான் படத்தில் கிறித்துவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ எதிராக இல்லை. ஆனாலும் கொண்டாடுகிறார்கள். அத்தனை காய்ந்து போய் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

முகுந்தன் உன்னி இன்னும் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.

திரௌபதி, ருத்ர தாண்டவம் இயக்குநர் மோகன் ஜி இப்படத்தைப் பார்க்கவேண்டும். மேப்படியான் ஒரு பிராசரப் படம்தான் என்று வைத்துக்கொண்டாலும் அதன் நேர்த்தி எந்த அளவுக்கு யாராலும் புறந்தள்ள முடியாமல் இருக்கிறது என்று நாம் எல்லாரும் புரிந்துகொள்ள இன்னுமொரு வாய்ப்பாக இருக்கும். படத்தின் செலவு வெறும் 3 கோடி மட்டுமே என்று விக்கி சொல்கிறது. மேப்படியான் இயக்குநர் விஷ்ணு மோகனின் அடுத்த திரைப்படம் ‘பப்பா’ என்று தெரிகிறது. அதன் மோஷன் பிக்சர் டிரைலரில் முகுந்தன் உன்னி கழுத்தில் சிலுவையுடன் வருகிறார். இப்படம் முகுந்தன் உன்னியின் இதே திசையில் இருக்குமா அல்லது இதை சமன் செய்யும் எதிர்த்திசையில் இருக்குமா என்று அறிந்துகொள்ள இப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

Share

KPAC Lalitha

கே பி ஏ சி லலிதா நேற்று உடல்நலமில்லாமல் மரணமடைந்திருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் களேபரத்தில் இந்தச் செய்தி கண்ணில் படவே இல்லை. எப்பேற்பட்ட நடிகை. எத்தனை பெரிய இழப்பு!

சென்ற வாரம் பொழுது போகாத ஒரு நேரத்தில் ‘பவித்ரம்’ என்றொரு மலையாளப் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். மோகன்லால் நடித்து 1994ல் வெளியான திரைப்படம். மோகன்லால், திலகன் என்று இருவரும் கலக்கியெடுக்க, கே ஏ பி சி லலிதா நிழல் போலப் படம் முழுக்க கலகலப்பாக வந்து மனதை கனக்கச் செய்தார். அதிலும் மோகன்லால் தன் மகளை (தங்கையை!) அடிக்கப் பாயும் கணத்தில் கே ஏ பி சி லலிதா தடுக்கும் காட்சி உணர்ச்சிகரமானது. மோகன்லால் கதாபாத்திரத்தின் அம்மா கர்ப்பமாகி இருப்பதை கே ஏ பி சி லலிதா நாணத்துடன் மோகன்லாலுக்கு சொல்லும் காட்சி மறக்க முடியாதது. (அந்த ஸ்ரீவித்யாவின் முகம்தான் எத்தனை பாந்தம்!)

தமிழில் 70களின் குழந்தைகளுக்கு இவர் ராஜபார்வையில் நடித்தவர் என்று சொன்னால் தெரியலாம். அதைவிட, காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வரலாம்.

ஓம் ஷாந்தி.

Share

சில கன்னடத் திரைப்படங்களும் மலையாளத் திரைப்படங்களும்

சர்க்காரி ஹிரிய ப்ரதமிகெ ஷாலே, காஸர்கோடு – கொடுகெ: ராமண்ணா ராய் – படத்தின் பெயர் இது. தோராயமாக மொழிபெயர்த்தால்: அரசு உயர்நிலைப்பள்ளி, காஸர்கோடு – உபயம்: ராமண்ணா ராய் என்று சொல்லலாம். இது என்ன என்று புரிந்துகொள்ளவே எனக்கு ஐந்து நிமிடங்கள் ஆகியது. ஒரு திரைப்படம் வந்துவிட்டால் அது தொடர்பான வார்த்தைக்கு கூகிளில் பொருள் கண்டுபிடிப்பது என்பது மலையைப் புரட்டி எலியைப் பிடிப்பது போலத்தான். ஹிரிய ப்ரதமிகெ ஷாலே என்றால் நடுநிலைப்பள்ளியா உயர்நிலைப்பள்ளியா என்று இன்னும் பிடிபடவில்லை. கன்னடம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ராமண்ணா ராய் என்பவர் காஸர்கோட்டில் இருந்து 80களில் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மொழிவாரி பிரிக்கப்படும்போது 1956ல் காஸர்கோடு கேரளாவுடன் இணைக்கப்படுவதற்கு எதிராகப் போராடியவர் என்று தெரிகிறது.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இப்படம் நகைச்சுவைத் திரைப்படம். நகைச்சுவை என்றால் நம்ம ஊர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் வகையல்ல. இது ஒரு மென் நகைச்சுவைத் திரைப்படம். கூடவே, சிறுவர்களுக்கான படம் என்றும் சொல்லலாம். காஸர்கோட்டின் கர்நாடக கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் கன்னடம்வழி கற்பிக்கும் பள்ளி கேரள அரசின் கீழ் உள்ளது. ஐம்பது பேர் மட்டுமே படிக்கும் இப்பள்ளிக்கு மலையாளியான கணக்கு வாத்தியாரை அரசு அனுப்புகிறது. இவருக்கு கன்னடம் தெரியாது. மலையாளத்தில் கணிதம் சொல்லித் தருகிறார். இங்கிருக்கும் கன்னடர்கள் அதை எதிர்க்க, அந்த மலையாளி ஆசிரியர் பயந்து ஓடிப் போகிறார். இனியும் இப்பள்ளியை நடத்துவது தேவையற்றது என்று ஊழல்வாதியான கேரளக் கல்வி அதிகாரி முடிவெடுக்கிறார். ஆனால் பள்ளி தலைமையாசிரியரான மலையாள நம்பூதிரியோ கன்னடப் பள்ளியும் அதில் படிக்கும் கன்னட மாணவர்களும் பாவம் என்று தன்னால் முடிந்த அளவுக்குப் போராடுகிறார். மாணவர்கள் போராடி, மைசூரிலிருந்து ஒருவரை அழைத்து வந்து அவரை வைத்துச் சட்டப் போராட்டம் நடத்தி எப்படிப் பள்ளியை மீட்கிறார்கள் என்பது மீதிக் கதை.

இந்த அளவுக்கு சீரியஸ் கதையை இத்தனை நகைச்சுவை இழையோடச் சொல்லி இருப்பது ஆச்சரியம். எப்போதும் ஒரு சிறு புன்னகை நம் முகத்தில் தவழ்ந்தபடி இருக்கிறது. சில காட்சிகள் நல்ல நகைச்சுவை. சில கொஞ்சம் டல். ஒவ்வொரு நடிகரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். (கன்னட வெறியராக வரும் ப்ரமோத் ஷெட்டி தவிர!) பள்ளி மூடப்பட்டு அங்கே படிக்கும் ஏழை மாணவர்கள் தத்தம் தொழிலுக்குப் போகும் காட்சியைக் கூட உணர்ச்சிவசப்பட வைக்காமல் மிகவும் ஜாலியாக எடுத்திருக்கிறார்கள். பார்க்கும் நமக்கு மட்டுமே அம்மாணவர்களின் எதிர்காலம் குறித்த வருத்தம் வருகிறது. அத்தனை தெளிவாகத் திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.

அழகி திரைப்படத்தில் பள்ளி சார்ந்த காட்சிகளை நாம் திரையில் பார்த்தபோது எப்படிச் சில்லரையை சிதற விட்டோமோ அப்படி படம் முழுக்கக் காட்சிகள் இருக்கின்றன. நம்மை பழங்காலத்துக்குக் கொண்டு போகும் காட்சிகள். காஸர்கோட்டில் மலையாளம் கலந்து கன்னடம் பேசும் சிறுவர்கள், மம்மூட்டி மோகன்லாலைக் கொண்டாடும் கன்னடச் சிறுவர்கள் என்று இயல்பாக நகர்கிறது படம்.

2001ல் துபாயில் நான் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம் சூத்ரதாரன். அப்போது எனக்கு மலையாளம் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. தியேட்டரில் பாண்டவபுர காட்சிகள் வந்தபோது அதில் சிலர் கன்னடம் பேச, ஆஹா நமக்குப் புரிந்த ஒரு மொழி என்ற ஒரு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. அதேபோல் இத்திரைப்படத்தில் பல இடங்களில் மலையாளம் பேசப்படுகிறது. காஸர்கோட்டில் இத்திரைப்படம் ஓரளவுக்கு ஓடி இருக்கிறது. இப்படம் 2018ல் வெளி வந்திருக்கிறது. 2020ல் கூட காஸர்கோட்டில் ஒரு கன்னட மீடியம் பள்ளியில் மலையாள கணக்கு ஆசிரியை நியமிக்கப்பட்டு பிரச்சினை ஆகி இருக்கிறது. அதாவது இன்று வரை இப்பிரச்சினை இன்னும் அங்கே இருக்கிறது.

பள்ளியை மாணவர்கள் ஆனந்த்நாக் மூலம் மீட்பதெல்லாம் கொஞ்சம் அபத்தமான நகைச்சுவைக் காட்சிகளே. ஆனால் தாய்மொழியில் சிந்திக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லி புல்லரிக்க வைத்துவிட்டார்கள். பதினைந்து வயதில் ஒரு பையனுக்கும் உடன் படிக்கும் ஒரு மாணவிக்கும் வரும் எதிர்பாலினக் குறுகுறுப்பைப் படம் முழுக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், எல்லை தாண்டாமல்.

கன்னட நகைச்சுவைப் படங்கள், மற்ற கன்னடப் படங்களைப் போலவே, பார்க்கவே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். ஆனால் இத்திரைப்படம் நல்ல ஃபீல் குட் முவீயாக வந்திருக்கிறது. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். ஆன்லைனில் எம் எக்ஸ் ப்ளேயரில் இலவசமாகக் கிடைக்கிறது.

இதே பிரச்சினையை அப்படியே தமிழுக்கு மையப்படுத்திக் கொண்டு வந்தால், புல்லரிக்க வைக்கும் தமிழ்வழிக் கல்வி தொடர்பான ஒரு உருப்படியான படத்தைக் கொண்டு வர முடியும். அந்த அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கிறது இத்திரைப்படம்.

*

பாப்கார்ன் மன்க்கி டைகர் என்றொரு படம். தனஞ்செய் நடித்தது. ரத்னன் ப்ரபஞ்ச பார்த்துப் பிடித்துப் போய் தனஞ்செய்யின் இந்தப் படத்தைப் பார்த்தேன். கன்னடத்தின் சிறந்த நவீன படமாக நான் நினைப்பது, உலிதவரு கண்டெந்தெ. (தமிழில் ரிச்சி!) ரக்‌ஷித் ஷெட்டி இயக்கி நடித்தது. சமீபத்தில் கருட கமனா வ்ருஷப வாகனா என்றொரு படம் சென்னையில் திரையிடப்பட்டிருந்தது. ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்து இதற்கு டிக்கெட் வாங்கப் போகும்போது, எதோ ஜெர்க்காகிப் பார்த்தால், இது ராஜ் ஷெட்டியின் படம். பின் எப்படி ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்தேன்? பின்னர் நினைவுக்கு வந்தது, இப்படம் பற்றி ரக்‌ஷித் ஷெட்டி தன் ஃபேஸ்புக்கில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

ராஜ் பி ஷெட்டியின் படம் என்று தெரிந்ததும் டிக்கெட் வாங்கவில்லை. இவரது படமான ஒரு மொட்டயின் கதா-வை ஆஹா ஓஹோ என்று பலர் கொண்டாடினாலும் எனக்குப் பிடிக்கவில்லை. ராஜ் ஷெட்டியின் படங்களில் எனக்கு உறுத்துவது எதோ ஒரு தேக்கம். ஆனால் கருட கமனா அப்படி இல்லை. படம் நன்றாகவே இருந்தது. எல்லாரும் ராஜ் பி ஷெட்டியைப் புகழ, அவரை விட எனக்கு ரிஷப் செட்டியின் நடிப்பு பிடித்துப் போனது. வழக்கமான கன்னடப் படம் போலல்லாமல் நவீன மலையாளத் திரைப்படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, சில காட்சிகளில் அதையும் தாண்டி நன்றாகவே இருந்தது கருட கமனா. தமிழ்ப் படங்களின் மேக்கிங் தரத்துடன்! ஆனாலும் உலிதவரு கண்டெந்தே இதைவிடப் பல மடங்கு நல்ல படம்.

இப்படி ஒரு பின்னணியில் பாப்கார்ன் மன்க்கி டைகர் பார்த்தேன் – என்ன சொல்ல! உலிதவரு கண்டெந்தெ போல மிகச் சிறப்பான படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், சந்தேகமே இல்லாமல் மிக வித்தியாசமான படம். முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை ரத்தம், வன்முறை, கொலைதான். ரிவர்ஸ் க்ரொனாலஜிகல் முறையில் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று கூகிள் சொல்கிறது. படம் முழுக்க அப்படி இல்லை. ஆனால் நிறைய காட்சிகள் அப்படித்தான். படம் முடிந்தாலும் கூட, இத்தனை நேரம் என்ன பார்த்தோம், ஏன் இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் புரிவதே இல்லை. அல்லது எதோ ஒரு குழப்பம். பின்பு நீண்ட நேரம் யோசித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. படம் வெளிவந்தபோது (2020) தியேட்டரில் கதறிக்கொண்டேதான் பலர் போயிருக்கிறார்கள். விஸ்வரூபம் பலருக்குப் புரியவில்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்படம் அதைப் போல பத்து மடங்கு புரியாது. படம் பார்த்துவிட்டு யூ ட்யூப்பில் பல வீடியோக்களைத் தேடிப் பிடித்துப் பார்த்து, நான் நினைத்தது சரியா என்று உறுதிப்படுத்த வேண்டியதாயிற்று. இதனாலேயே பலருக்குப் புரியாத படமாகவும், சிலருக்கு மிகவும் முக்கியமான படமாகவும் ஆகிவிட்டிருக்கிறது இத்திரைப்படம்.

இப்படி புதிர் போன்ற ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள், மூளைக்கு வேலை வைக்கும் திரைப்படத்தைப் பார்க்கும் பொறுமை உள்ளவர்கள் தவறவிடக் கூடாத படம் இது. இப்படத்தில் வரும், குழந்தை காணாமல் போகும் தொடர் காட்சிகள் பதற வைக்கும் சோகக் கவிதை என்றே சொல்லவேண்டும். இடைவேளையின் போது அக்குழந்தை அழுதுகொண்டிருக்கும் அந்தச் சட்டகம் என்றும் மறக்கமுடியாத ஒன்று. அதே போல் டைகர் சீனு கதாபாத்திரத்துடன் இணையும் நான்கு பெண் பாத்திரமும் மிகவும் நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் மனைவியின் கதாபாத்திரம் மிக அருமை.

நேரம் இருப்பவர்கள், பொறுமை இருந்தால் மட்டும், இப்படத்தைப் பாருங்கள். நான் ஸீ5ல் பார்த்தேன்.

*

ரத்னன் ப்ரபஞ்ச (க)

முன்பின் தெரியாத ஒரு திரைப்படத்தை ஏன் பார்க்கிறோம் என்பதே கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். நேற்றிரவு தூக்கம் வராத நேரத்தில் பார்த்த கன்னடத் திரைப்படம் ரத்னன் ப்ரபஞ்ச. (ரத்னனின் உலகம்) இதன் டிரைலர் தற்செயலாகக் கண்ணில் பட்டது. தொடர்ச்சியாக வசவுச் சொற்கள். போளி மகனே, திக்கா முச்கொண்டிருத்தீரா, முள்ஹந்திமுண்டேகண்டி என்றெல்லாம் காதில் விழவும், ஆர்வமாகப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். போளி மகனே டப்பிங்கில் தட்டி மகனே ஆகிவிட்டது. திக்கா வரவே இல்லை. ஆனாலும் படத்தை முழுக்கப் பார்த்தேன்.

திணிக்கப்பட்ட கதை. ஹீரோவின் அம்மாவின் அதீத நடிப்பு. இதைப் பொறுத்துக்கொண்டால், கன்னடம் கொஞ்சமேனும் தெரியும் என்றால், முழுக்கப் பார்த்துவிடலாம். காஷ்மீரில் நடக்கும் காட்சிகளில், கதாநாயகியின் அம்மா என ஒரு transgenderஐ அறிமுகப்படுத்த, அந்த 2 நிமிடக் காட்சிகள் இனிமை.

அதைத் தொடர்ந்து வரும் உத்ர கர்நாடகக் காட்சிகள் இத்தனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. நல்லவேளை, தவறவிடாமல் பார்த்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நன்றாக இருந்தது. குறிப்பாக உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்கு. உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்குக்காகவே பற்பல வீடியோக்களை தேடி தேடிப் பார்த்திருக்கிறேன். இப்படத்திலும் என்ன அழகு! ஹீரோவின் தம்பியாக வரும் நடிகரின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. ஹீரோ தனஞ்சயாவின் நடிப்பும் அருமை.

இறுதிக் காட்சிகளில் நெஞ்சை நக்க வைத்து, வளர்ப்புத் தாயை நினைத்து மகன் ஏங்குவதோடு சுபமாக முடித்து வைக்கிறார்கள். பெற்றால் மட்டுமே அம்மா அல்ல என்பதை மூன்று பகுதிகளாக ஆழ உழுதிருக்கிறார்கள்.

உத்ர கர்நாடகக் காட்சிகளுக்காகவும், படம் முழுக்க உடன் வரும் சொக்க வைக்கும் ஒளிப்பதிவுக்காகவும், நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். பிராமணப் பையனின் அக்கா முஸ்லீமாக இருந்தும் எவ்வித மதப் பிரச்சினைகள், வம்புகளுக்குள் போகாமல், அது அதை அப்படியே காட்டி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவலுக்காக.

*

நீண்ட நாள்கள் கழித்து இரண்டு மலையாளப் படங்கள் பார்த்தேன். கடந்த 8 மாதங்களில் நான் இன்னும் பார்க்காத பல தமிழ்ப்படங்கள் அப்படியே இருக்கின்றன. என்னவோ ஒரு மனவிலகல். இப்போது பார்த்த இரண்டு மலையாளப் படங்கள் பீமண்டெ வழி மற்றும் மின்னல் முரளி.

பீமண்டெ வழி – வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கும் மலையாளப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டே பார்க்க ஆரம்பித்தேன். படம் சுமார். அரை மணி நேரத்தில் எடுத்து முடித்திருக்கவேண்டியதை இழு இழு என்று இழுத்து, ஒரு வழியாய் முடித்து வைத்தார்கள். ஜினு ஜோசப்பின் நடிப்பு மிரட்டல்! கடைசி காட்சியில் ஜினு ஜோசப்பை அந்த குண்டுப் பெண் தூக்கி அடிக்கும் காட்சியில் வாய் விட்டுச் சிரித்தேன். மற்றபடி சிரிக்க ஒரு காட்சி கூட படத்தில் இல்லை.

மின்னல் முரளி – ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் மிரட்டல். சூப்பர் மேன் படங்கள் வந்து குவிந்து விட்டிருக்க, அதே பாணியில் ஒரு படத்தை இத்தனை விறுவிறுப்பாகவும் அட்டகாசமான திரைக்கதையுடனும் எடுக்கவேண்டுமென்றால், அது எத்தனை கஷ்டம்? ஆனால் இதை மிக எளிதாகத் தாண்டி இருக்கிறார்கள். குரு சோம சுந்தரத்தின் நடிப்பு அற்புதம். தமிழனைக் கொன்று மலையாளி கடவுள் ஆகிறான் என்றெல்லாம் யாரும் வரப்புத் தகராறுக்குப் போகாமல் இருந்ததன் காரணம், கள படத்தில் தமிழன் மலையாளியை ஓட ஓட விரட்டி அடித்தாலோ என்னவோ. டொவினோ தாமஸ் எத்தனை நடித்தாலும் எனக்கு ஏனோ ஓட்டவே ஒட்டாது. ஆனால் மின்னல் முரளியில் கலக்கிவிட்டார். தவறவிடக் கூடாத படம் இது.

Share

பிரியாணி – மலையாளத் திரைப்படம்

18+

பிரியாணி (ம) – இதைப் பற்றி எழுதாமல் கடப்பது நல்லது என்று நினைத்தேன். ஆனாலும் எழுதுகிறேன்.

21+ திரைப்படம் என்று சொல்லலாம். எனவே குடும்பத்துடன் பார்க்கவே பார்க்காதீர்கள். இனியும் இதைப் பற்றிப் படிக்கவேண்டுமா என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 🙂

மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எழுதும்போது ஏன் அந்தத் திரைப்படங்களில் ஹிந்து மதம் சித்தரிக்கப்படும் விதம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று முன்பே சொல்லி இருக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான், தமிழைப் போல அங்கே கிறித்துவ இஸ்லாமிய மதங்களை விமர்சிக்கும் படங்கள் வராமல் இருப்பதில்லை. இந்தப் படம் மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் படத்தில் எனக்கு ஒத்துக்கொள்ள முடியாத விஷயங்களும் உண்டு.

ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்குப் போய்விட்ட ஒரு பையனின் குடும்பம் கேரளாவில் சந்திக்கும் பிரச்சினையே கதை. படம் அந்தப் பையனின் அக்காவின் பார்வையில் நகர்கிறது. அவளே கதாநாயகி. தன் மகன் வருவான் என்று காத்திருக்கும் பைத்தியக்கார அம்மா, தன் மகன் இந்தியாவின் தீவிரவாத வேட்டையில் இறந்துவிட்டான் என்று தெரிந்ததும் உயிரை விடுகிறாள். விவாகரத்து பெற்ற அக்கா பாலியல் தொழிலாளியாகிறாள். பின்பு தன் ஊர்க்காரர்களுக்கு பிரியாணி செய்து தருகிறாள். ஊரில் அனைவருக்கும் பிரியாணி செய்து போட வேண்டும் என்பது அம்மாவின் கனவு. ஆனால் இவள் செய்யும் பிரியாணி, ஐயோ, உவ்வேக் ரக கொடுமை.

படத்தின் கதைக்கும் நிகழும் சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே கதாநாயகியை உடலுறவில் முழுமை பெறாதவளாகக் காண்பிக்கிறார்கள். அவள் ஏன் பாலியல் தொழிலாளியாக வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. அடங்காத உடல் வேட்கை என்றால் படத்தின் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று குழப்புகிறது. பின்பு எல்லாம் விட்டு, குழந்தை உண்டாக, காவல்துறையின் பயங்கரத்தால் அந்த குழந்தையும் கருவிலேயே கலைகிறது.

இந்தக் கொடுமையை எல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், பல முக்கியமான பதிவுகள் உள்ளன.

ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் ஏஜெண்ட், இந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்தாலே சந்தேகப்படுவார்கள் என்கிறான். ஆனால் அவனே ஐ எஸ் அமைப்புக்கு ஏஜெண்ட்டாக இருக்கிறான்.

ஐ எஸ் அமைப்புக்குப் பையன் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் ஜமாத் அமைப்பு அவர்களது குடும்பத்தை தள்ளி வைக்கிறது. மறைமுகமாக உதவுவதெல்லாம் இல்லை.

ஐ எஸ் ஏஜெண்ட்டே அந்தப் பெண்ணுக்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஜமாத் மூலம் உதவ ஏற்பாடு செய்துவிட்டு, தலைமறைவாகிறான்.

தன் மனைவி ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பெண் என்று தெரிந்ததும் கணவன் முத்தலாக் சொல்கிறான்.

இப்படிப் பல யதார்த்தமான பதிவுகள் உள்ளன.

ஆனால் விவாகரத்தான கணவனுடன் அவள் மீண்டும் உறவு கொள்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. அவனோ இவள் எதிர்பார்க்கும் அளவுக்கானவன் அல்ல. பின்னர் ஏன்? ஒரு பழிதீர்த்தல் என்றா புரிந்துகொள்வது? என்ன கொடுமை என்றால், நெளிய வைக்கும் பழி தீர்த்தலுக்குப் பிறகு இந்த உறவு வருகிறது!

பழிதீர்க்கும் பிரியாணிக்கு போலிஸை, தன்னை அவமானப்படுத்தியவர்களை அழைத்தது சரி. ஏன் தனக்கு உதவிய பத்திரிகையாளரையும் அழைக்கவேண்டும்? ஏன் தான் விரும்பியே உறவு கொண்ட ஒருவனை அழைக்கவேண்டும்? இப்படி பல கேள்விகள்.

ஆனாலும் ஏன் முக்கியமான படமாகிறது? ஒன்று, யாரும் தொடத் தயங்கும் விஷயத்தை தைரியமாக எடுத்திருப்பதால். உலகத் திரைப்படங்களுக்கு இணையான காட்சி அமைப்புகள் படம் தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் வருவதால். கதாநாயகியாக நடிக்கும் நடிகையின் புதிர் நிறைந்த முகபாவத்தால். உலகத் திரைப்படங்களைப் போலவே எந்த நொடியிலும் எப்படியும் நகரும் தன்மை கொண்டிருப்பதால். எவ்விதக் கட்டுக்களுக்குள்ளும் சிக்காததால். இப்படிப் பல ஆச்சரியங்கள் படம் நெடுக.

சென்சார் கத்தரிகளுக்குத் தப்பித்த பிரதி ஓடிடியில் கிடைக்கிறது என்று பார்த்தேன். சென்சார் கத்தரிகளுக்குத் தப்பிக்காத பிரதியில் எந்தக் காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள், முதல் காட்சியிலேயே 21+ காட்சிகளுக்குத் தயாராகுங்கள். எல்லா வகையிலும் இப்படி அதிர வைக்கும் ஒரு திரைப்படம், இதே பிரிவில் இதே உருவாக்கத்தில் உலகத் திரைப்படத்துக்கு இணையான ஒரு திரைப்படம், மலையாளத்தில் இதற்கு முன்பு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

(இதற்கு முன்பு இன்னொரு மலையாளப் படம் பார்த்தேன். மூன்று வருடங்கள் இருக்கலாம். கணவனுக்கு நான்கு மனைவி என்றால் ஏன் ஒரு பெண்ணுக்கு நான்கு கணவன் இருக்கக் கூடாது என்று ஒரு பெண் கேள்வி கேட்பாள். அந்தப் படத்தின் பெயர் மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் சொல்லவும்.)

Share

பிக்பாஸ் மோகன்லால்

Image result for biggboss malayalam

மலையாளத்தில் மோகன்லால் நடத்தும் பிக்பாஸ் நேற்றோடு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது. இதைப் பற்றி எழுதி எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு சிறுகுறிப்பாவது எழுதாமல் இருப்பது பாவம் என்பதால்…

தமிழைப் போலவே மலையாள பிக்பாஸும் பெரிய அறுவை. தமிழைப் போல அல்லாமல், தினமும் டாஸ்க். டாஸ்க் இல்லாமல் செல்ஃப் பிக்கப் எடுக்கவே இல்லை. தமிழிலும் முதல் பிக்பாக்ஸ் இப்படித்தான் ஆகியிருக்கவேண்டும். ஆனால் ஓவியா என்றொரு புயல் மையம் கொண்டதால், பிக்பாஸுக்கு வேலை குறைந்துபோய்விட்டது. ஓவியாவே பிக்பாஸுக்குப் பதில் நிஜமான டாஸ்க் பலவற்றை அள்ளி வீசினார். ஓவியா இல்லாவிட்டால் பிக்பாஸ்1க்கு இத்தனை விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கலாம்.

தமிழைப் போல இல்லாமல், மலையாளத்தில் அனைவரும் ஆச்சரியமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். குறைவாகவே புரணி பேசுகிறார்கள். பெரிய சண்டைகள் எல்லாம் வருவதில்லை. சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் உடனே மறந்துவிடுகிறார்கள். அனைவரும் ஒன்றாகக் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். அரிஸ்டோ சுரேஷ் (ஆக்‌ஷன் ஹீரோ பிஜுவில் குடித்துவிட்டு கைலியை அவிழ்த்து பிரச்சினை பண்ணும் நடிகர், முத்தே பொன்னே பிணங்கல்லே புகழ் சுரேஷ்) கையில் கிடைக்கும் எந்த ஒரு சாதனத்திலும் தட்டிப் பாட்டுப் பாட, ஒட்டுமொத்த அணியினரும் கூடப் பாடுகிறார்கள், ஆடுகிறார்கள்.

தமிழோடு ஒப்பிட, இங்கே அனைத்து நடிகைகளும் மிக நாகரிகமாக உடை அணிந்து வருகிறார்கள். மலையாளத்தில் முதல் பிக் பாஸ் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்களோ என்னவோ.

பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய அளவில் சண்டை வரும் முகாந்திரங்கள் எல்லாம் அப்படியே சிதறிப் போகின்றன. பிக்பாஸும் எத்தனை முயன்றும் இன்னும் நிகழ்ச்சி செல்ஃப் எடுக்கவில்லை. மலையாளி ஓவியாவை இங்கேயும் அனுப்பிப் பார்க்கலாம். 🙂 சாபு என்பவர், பெண் விடுதலை, பெண்ணிய உரிமைகள் என்ற பெயரில் உள்ள எல்லாவற்றையும் ஏற்கமுடியாது என்று அடித்து ஆடுகிறார். கம்யூனிஸ்ட் என்று நினைக்கிறேன். அவரது மலையாளம் நன்றாக உள்ளது. மிகக் குறைவான ஆங்கிலக் கலப்போடு பேசுகிறார். இவர்தான் மிக இயல்பாக இருக்கிறார். ஆனால் இவரது பின்னணி – பிக்பாஸுக்கு முன்னர், பிஜேபி பெண் தலைவர் ஒருவரைப் பற்றி மிகவும் மோசமாக இவர் எழுதி, அது பிரச்சினையாகி இருக்கிறது. காலாபவன் மணி மரணத்தில் இவர் பெயர் அடிபட்டிருக்கிறது. இவையெல்லாம் நான் கூகிளில் கண்டவை.

அனூப் மேனோன் ஸ்வேதா மேனோனைப் பற்றிச் சொன்ன கமெண்ட் பெரிய பிரச்சினையை உண்டு பண்ணியது. அவர் ஸ்வேதாவைப் பார்த்து, ‘இன்னும் மலையாளிகள் உன்கிட்ட பார்க்க என்ன பாக்கி இருக்க்கிறது’ என்று கேட்டதை அடுத்து, அங்கே பெண்ணியக்காரர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தார்கள். அனூப் தான் காமெடியாகச் சொன்னதாகவும் அது தவறுதான் என்றும் மன்னிப்புக் கேட்டார். இதைப் போல ஒன்றிரண்டு எபிசோடுகள் கொஞ்சம் ஆக்டிவ்வாக இருந்தால், மற்ற எல்லா நேரமும் அன்பாகவும் ஆரவாரத்துடனும் ஆடிப்பாடியே இருக்கிறார்கள். ஒரு சண்டையோ பிரச்சினையோ இல்லாமல் ஒரே அறுவை. 🙂

தமிழில் பிக்பாஸ் செய்தபோது முதலில் கமல் இதற்கு செட் ஆகமாட்டார் என்றே நினைத்தேன். ஆனால் போகப் போக, கமல் இதனை மிக அட்டகாசமாகக் கையாண்டார். மலையாளத்தில் மோகன்லால் முதல் எபிசோடிலிருந்தே அடித்து ஆடுகிறார். சான்ஸே இல்லை. மோகன்லால் மலையாளம் பேசும் வேகமும், அட்டகாசமான மலையாளமும் வேற லெவல். எவ்விதத் திக்கலும் திணறலும் இன்றி, யாருக்கும் ஆதரவாக இல்லாமல், மனதில் பட்டதை மிக வெளிப்படையாகப் பேசுகிறார். அதைவிட முக்கியம், சனி ஞாயிறுகளில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் பேசும்போது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் அதைவிட வேகத்தில் கவுண்ட்டர் கொடுப்பதும் நகைச்சுவையாகப் பேசுவதும் என கலக்குகிறார். நான் பலதடவை கைதட்டிச் சிரிக்கும் அளவுக்கான டயலாக் டெலிவிரி. எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் பாதி, தானாக அவர்கள் பேசுவது பாதி என்பதுதான் இந்நிகழ்ச்சி என்பது என் உறுதியான நிலைப்பாடு. அதில் மோகன்லாலின் திறமை விண்ணைத் தொடுகிறது. ஆள் அழகாக கம்பீரமாக இருக்கிறார். கமல் கலக்கினார் என்றால் மோகன்லால் கமலைப் பலமடங்கு தாண்டுகிறார். (ஒருவழியாக ஏன் எழுதுகிறேன் என்ற காரணத்துக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்!)

இன்னும் 3 வாரங்கள் மட்டும் பார்க்க உத்தேசித்திருக்கிறேன். மோகன்லாலுக்காக மட்டும். எதாவது க்ளிக் ஆகினால் மட்டுமே தொடர்ந்து பார்ப்பேன். தமிழில் பிக்பாஸ்1ஐ ஓவியா வெளியேறும் நாள் வரை பார்த்தேன். பின்பு பார்க்கவில்லை. பிக்பாஸ்2 இதுவரை ஒரு நிமிடம் கூடப் பார்க்கவில்லை – ஓவியா உள்ளே வந்த அந்த 5 நிமிடங்கள் தவிர. மலையாளத்தில் பார்ப்பது, மோகன்லால் என்கிற ராட்சசனுக்காகவும் மலையாளத்தைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ளலாம் என்பதற்காகவும்.

Share