நித்யானந்தா

நித்யானந்தாவை ஆதரிக்கும் ஹிந்துக்களை எப்படிப் பிரித்துக்கொள்வது என்று யோசித்தேன்.

  1. நித்யானந்தா தவறே செய்யவில்லை என்றும் நம்புபவர்கள்.
  2. நித்யானந்தா தவறே செய்தாலும், மற்ற மதப் பிரச்சினைகளின்போது அமைதியாக அவரவர் மதத்துக்காரர்கள் இருக்கும்போது, நாம் ஏன் நித்யானந்தாவை எதிர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.
  3. நித்யானந்தா செய்வது தவறுதான், ஆனால் ஹிந்துக்களைப் பாதுகாக்க அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் பிடித்துப் போய் ஆதரிப்பவர்கள். (உதாரணமாக, வைரமுத்து ஆண்டாள் பிரச்சினையின்போது வைரமுத்துவை வண்டைவண்டையாக நித்யானந்தாவின் பக்தர்கள் திட்டியது, வீரமணியை நித்யானந்தாவே திட்டியது போன்றவை.)
  4. தனி ஹிந்து நாடு என்ற ஒன்றை நித்யானந்தா அமைத்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு, அரசியல்வாதிகளே செய்யாத தனி ஹிந்து நாட்டை அவர் உருவாக்கிவிட்டாரே என்று, அவரது தவறையும் தாண்டி ஆதரிப்பவர்கள்.
  5. மற்ற மதங்களைச் சேர்ந்த கொடுமைகளைக் கண்டித்தவர்கள் மட்டுமே நித்யானந்தாவைத் திட்ட அருகதை உடையவர்கள் என்று சொல்லி, ஒரு மெல்லிய ஆதரவை வழங்குபவர்கள்.
  6. என்ன இருந்தாலும் நித்யானந்தா மதமாற்றத்தைப் பெரிய அளவில் தடுக்கிறார் என்பதால், எத்தகைய குற்றங்களை அவர் செய்திருந்தாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்லி ஆதரிப்பவர்கள்.
  7. நித்யானந்தாவை ஆதரித்தால் பலருக்கு எரிச்சல் வரும் என்பதற்காகவே வம்புக்காக ஆதரிப்பவர்கள்.
  8. அவர் பிராமணர்களுக்கு எதிராகப் பேசி பெரிய பிரச்சினையை எளிதாக உண்டாக்கி இருக்கலாம் என்றாலும், அப்படி செய்யவில்லை என்பதற்காகவே ஆதரிப்பவர்கள்.
  9. கடைசியாக, ஹிந்து – ஹிந்துத்துவ வேறுபாட்டை, அதாவது இல்லாத ஒரு வேறுபாட்டை, வம்படியாக வளர்க்க நினைப்பவர்கள்.

வேறு ஏதேனும் காரணங்களுக்காக நித்யானந்தாவை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. முதல் காரணத்தை மட்டும் விட்டுவிடலாம். அது அவர்களது முடிவு. மற்ற எந்த ஒரு காரணத்துக்காகவும் நித்யானந்தாவை ஆதரிப்பதோ அல்லது கண்டிக்காமல் இருப்பதோ அராஜகம் என்றே சொல்வேன்.

இள வயது சிறுமிகளையும் சிறுவர்களையும் நித்யானந்தா மூளைச்சலவை செய்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதைக்குள்ளாக்குகிறார். அதை ஹிந்து மதத்தின் பெயரால் செய்கிறார். இதை முதலில் எதிர்க்கவேண்டியது ஹிந்து மதத்தை நம்பும், ஹிந்து மதத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களே.

ஹிந்துக்கள் இப்போது எதோ ஒரு காரணத்துக்காக ரசிக்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் அடிப்படைவாதத்தை நாம் எதிர்க்கத் தகுதி இல்லாதவர்களாகிவிடுவோம். மற்ற மதங்களின் அடிப்படைவாதச் செயல்களால் உலக மக்கள் பாதிக்கப்படும்போது, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே முதலில் கண்டித்தால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கருதும் நாம், நம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், அதுவும் நம் தர்மத்தின் பெயரால், புனிதமான காவியின் பெயரால், பெரிய அநியாய அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கும்போது நாம் அதை ஆதரிப்பது அநியாயமானது. மனசாட்சிக்கு எதிரானது. அறத்துக்கு அன்னியமானது. தர்மத்துக்குப் புறம்பானது.

காவி உடை உடுத்தி நித்யானந்தா பேசும் பேச்சுக்கள் எல்லாம் ஆபாசமானவை. நான் பொறம்போக்கு நான் பரதேசி என்று பிதற்றும் ஒருவரை ஆதரிப்பது குறித்து ஒவ்வொரு ஹிந்துவும் வெட்கப்படவேண்டும். மிக முக்கியமான நண்பர்கள், என்றைக்கும் தர்மத்தின் பக்கம் நிற்கும் நண்பர்கள் கூட இதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீது வைக்கப்படும் நச்சுக் கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் இவர்களையும் ஹிந்து விரோதிகள் போல யோசிக்க வைத்திருக்கின்றன என்பது எனக்குப் புரிகிறது. அவர்கள் தரும் நச்சை அவர்களுக்கே புகட்ட விரும்புகிறார்கள் என்பதும் புரிகிறது. ஆனால் இது நீண்ட கால நோக்கில் நமக்கு மிகப்பெரிய பின்னடைவையும் தீராப் பழியையும் மட்டுமே கொண்டு வரும் என்பதோடு, உடனடியான பலன் கூட ஒன்றும் இல்லை என்பதையும் புரிந்துகொள்வது நல்லது.

Share

A forgotten Kargil Hero

நீங்கள் மறந்துவிட்ட ஒரு கார்கில் ஹீரோ: என் அப்பா

தீக்‌ஷா

இதை எழுதவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. என் நோட்டிஸ் போர்டில் நான் ஒட்டி வைத்திருக்கும் அவரது பெயர் பொறித்த உலோக பிளேட்டை வெறித்துப் பார்க்கிறேன். எத்தனை எளிதாக நீங்கள் அவரை மறந்துவிட்டீர்கள் என்ற கோபம் எனக்குள் அதிகமாகிக்கொண்டே போகிறது. கருப்புநிற பிளேட்டில் வெண்ணிற எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்: C B DWIVEDI. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும்!

ஒவ்வொரு வருடமும் ‘கார்கில் ஹீரோக்கள்’ என்ற தலைப்பில் பல கட்டுரைகளைப் பார்க்கிறேன். ஒன்றில்கூட இந்தப் பெயரை நான் பார்த்ததே இல்லை. நானும் பொறுமையாக 16 வருடங்கள் காத்திருந்தேன். ஜர்னலிசம் படிக்க நான் முடிவெடுத்ததற்கு என் அப்பாவே காரணம். இந்த உலகத்திலிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் எதையேனும் வித்தியாசமாக செய்து சாதிக்க நான் நினைப்பதற்கும் இவரே காரணம். எனவே இவரது கதையை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

அவர் வாழ்க்கை வீணாகிப் போன ஒன்றல்ல. உண்மையில் இன்று நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கு நீங்கள் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

ராணுவம் என்பதும் ஒரு வேலைதான். ஆனால், வேலையைக் காட்டிலும் அதில் நிறைய அதிகம் உள்ளது. அது ஒரு வாழ்க்கை முறை. ஒருத்தனுக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வேலையைக் கொடுத்து அவனிடம் ‘நாளைக்கே நீ சாக நேர்ந்தாலும் நேரலாம்’ என்று சொல்வதைப் போன்றது அது. அப்படிச் சொன்னால், பத்து லட்ச ரூபாயாக இருந்தாலும் ஒருத்தரும் வேலைக்கு வரமாட்டார்கள். நீங்கள் துப்பாக்கி ஏந்தும் பிரிவுக்குப் போகிறீர்களா அல்லது வேறு பிரிவுக்கா என்பதைத் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு ராணுவத்திலும் தரப்படும். அப்போது போர்முனையில் முன் வரிசையில் நின்று, எதிரிகளின் குண்டுகளை நம் நாட்டு மக்களுக்காக நெஞ்சில் ஏந்திக்கொள்ளும் ஒன்றைத் தேர்வு செய்ய நிறைய நெஞ்சுரம் வேண்டும். என் அப்பா அதைத்தான் செய்தார். அவர் பீரங்கிப் படையில் சேர்ந்தார்.

இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகள் சேவை செய்தார். இன்று இத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவர் கர்னல் ஆகிவிடமுடியும். அவர் இன்று உயிருடன் இருந்தால் தற்போது எந்தப் பதவியில் இருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். தூங்கக்கூட நேரம் இல்லாத போர் முனையில் இருந்தாலும் கூட, தன் குடும்பத்துக்குக் கடிதம் எழுத மறக்காதவர் மேஜர் சி.பி. த்விவேதி. போர் முனையிலும் தான் மிக நல்ல நிலையில் இருப்பதான பாவனையுடன் எழுதுவார். அவர் என் அம்மாவுக்கு எழுதிய கடைசி கடிதம் இப்படிச் சொல்கிறது:

அன்புள்ள பாவ்னா,

அன்பு முத்தங்கள்.

…டிவியில் காண்பிக்கப்படும் பல செய்திகள் உண்மைதான். ஆனால் பல செய்திகள் பொய்யானவையும்கூட. எனவே அதை எல்லாவற்றையும் அப்படியே நம்பவேண்டாம். கடவுளை மட்டும் நம்பு…

அப்பா தன் உயிரை இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்வதற்கு இரண்டு நாள்கள் முன்பு எழுதிய கடிதம் இது. அப்பா முழுக்க முழுக்க குடும்பத்தில் அதிகப் பிரியம் கொண்ட ஒருவர். என் அம்மாதான் வீட்டின் தலைவர். ஆனால் அவளை இப்படி ஆக்கியதும் என் அப்பாதான். ஸ்ரீ நகரில் இருந்து அழைக்கும்போது கூட, ‘என் செல்லக் குட்டி எங்கே’ என்றுதான் கேட்பார். உடனே நாங்கள் அம்மாவை அழைப்போம். இதன் அர்த்தம், அவர் அன்பற்ற அப்பா என்பதல்ல. அவர் தனது விடுமுறையை எங்கள் தேர்வுகளை ஒட்டியே திட்டமிடுவார். நாங்கள் அனைவரும் அவரை நம்பியே இருந்தோம். அவர் இல்லாவிட்டால், என் சகோதரிக்கு தேர்வுகளுக்கு தயார் செய்யவே தெரியாது.

கார்கில் போர் முனையில் இருந்தாலும் அப்பா எப்படி அவரது கடிதங்களில் இத்தனை இலகுவாக இருந்தார் என்பதை என்னால் இன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எங்களை சேட்டிலைட் போனில் அழைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.  அவரை சுற்றி நிலவும் மிக மோசமான வானிலையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் போன்ற ஒரு தன்னலமற்ற மனிதரை நான் இனிமேல்தான் பார்க்கவேண்டும். அப்படி ஒரு மனிதரைப் பார்த்தால், அன்றே நான் அவரைத் திருமணம் செய்துகொள்வேன்.

எல்லாப் பிரிவுகளும் ஒவ்வொரு போரின் போதும் போர் முனைக்குச் செல்லமாட்டார்கள். கார்கில் போரின் போது பீரங்கிப் படையும் காலாட்படையும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கி சுடும் வீரர்கள் பீரங்கிப் படையைச் சேர்ந்தவர்களே. மேஜர் சி.பி. த்விவேதி பெருமை மிக்க ஒரு துப்பாக்கி சுடும் வீரர். பீரங்கியைப் போன்ற பெரிய அளவிலான துப்பாக்கி ஒன்றின் முனையில் தைரியத்துடன் அமர்ந்து, பயமே இன்றி எதிரிகளை எதிர்கொண்டு, இரவில் இருந்து விடியும் வரை அவர்கள் மீது குண்டுகளைப் பொழிபவர் அவர். ஆம், இப்படித்தான் கார்கில் போர் நடந்தது. இரவுகளில் உலகமே நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தபோது, இந்திய ராணுவம் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தது.

மே 1999 14ம் தேதி அதிகாலை. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. கார்கிலின் 325வது ரெஜிமெண்ட் ட்ராஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது. கார்கில் பிரச்சினை எங்கள் எல்லாருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்திய வரலாற்றில் அது யாரும் எதிர்பார்க்காத ஒரு போர். அப்போதுதான் கோடை விடுமுறையின்போது நானும் என் அம்மாவும் என் அக்காவும் அப்பாவைப் போய் பார்த்துவிட்டு வந்தோம். நாங்கள் அவருடன் 12 மணி நேரம் மட்டுமே இருக்க முடிந்தது. அப்பா அம்மாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘மிகக் குறைந்த நேரமே பார்க்க முடிந்தது என்றாலும் 12 மணி நேரம்தான் பார்க்க முடிந்தது என்றாலும், உன்னைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. விரைவில் உங்களை சந்திக்கிறேன்.’

கொடூரமான நிஜம் என்னவென்றால், அதற்குப் பிறகு நாங்கள் அவரைப் பார்க்கவே இல்லை. அதுதான் நாங்கள் கடைசியாகப் பார்க்கப்போவது என்று தெரிந்திருந்தால், அந்த பன்னிரண்டு மணி நேரத்தை அரக்கபரக்க உணவு உண்பதில் செலவழித்திருக்காமல், வேறு வகைகளில் உருப்படியாகச் செலவழித்திருப்போம். என் அப்பா உண்மையில் ஒரு ரொமேண்டிக்கான மனிதர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். சில சமயம் சமைப்பார். நன்றாகச் சமைப்பார். உண்மையான அப்பா. அதெல்லாவற்றையும்விட உண்மையான வீரர். அவருடன் இருந்த ஜவான்கள் அவரை மிகவும் விரும்பியதற்குக் காரணம், போர்க்காலத்தின் போது அவரே மிகவும் உந்துசக்தியாக இருந்தார் என்பதற்காகவும்தான். அவர் 315வது ரெஜிமெண்ட்டில் இருந்தவரை, இந்தப் பிரிவு இரண்டே இரண்டு பேரை மட்டுமே கார்கில் போரில் இழந்தது.

போர் முகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதல் பீரங்கிப் படைப் பிரிவு 315வது ரெஜிமெண்ட்தான். அந்த நேரத்தில் அப்பா அந்தப் பிரிவின் இரண்டாவது தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆபரேஷன் விஜய் (கார்கில் போர்) உண்மையில் மிகவும் கடுமையான ஒரு போர். போதுமான தகவல்களே கிடைக்காதது, போருக்குத் தயாராகாத ராணுவம் மற்றும் பொதுமக்கள் என்ற போர்வையில் நம் நாட்டுக்குள் நுழைந்துவிட்ட கோழைகளின் திட்டமிட்ட நகர்வு – இவையெல்லாம்தான் காரணம்.

முதல்நாள் ரெஜிமெண்ட் ட்ராஸ் என்னும் இடத்தின் கீழ்மட்ட முகாமுக்கு வந்து சேர்ந்தது. அப்போது அவர்கள் மீது குண்டுமழை பொழிந்தது. என் மாமா கர்னல் உபாத்யாய் என் அப்பாவின் கடைசிக் காலங்களில் ஒவ்வொரு நொடியும் அவருடன் இருந்தவர். அவர் சொல்கிறார், எங்கே எதிரிகள் அமர்ந்திருந்தார்கள் என்றே தெரியவில்லை என்று. அன்றிரவு என் அப்பாவிடம் அவர் இப்படிச் சொன்னாராம்: ‘நாம் நிச்சயம் பெரிய அபாயத்தில் இருக்கிறோம்.’

எதிரிகள் எப்படிப் பரவி எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எந்த யோசனையும் இன்றி ராணுவம் போர் முனைக்கு அனுப்பப்பட்டது. ஒரு பக்கம் டோலோலிங், மறு பக்கம் டைகர் ஹில்லும் 4875வது முனையும் இருக்க, ராணுவத்தினர் தீவிரமாகத் திட்டமிட்டார்கள்.

அப்பாவின் பிரிவான 315வது ரெஜிமெண்ட்க்கு, 1 நாகா, 8 சீக், 17 ஜாட் மற்றும் 16 க்ரீனடயர்ஸ்களின் நடவடிக்கைகளுக்கு உதவவேண்டிய பொறுப்பு இருந்தது. இவர்கள்தான் டோலோலிங், 5140வது முனை, ப்ளாக் டூத், டைகர் ஹில், 4875வது முனை (கன் ஹில்), மஹர் ரிஜ்ட் மற்றும் முஷ்கோ பள்ளத்தாக்கில் உள்ள ட்ராஸ்-இல் இருக்கும் சண்டோ டாப் ஆகிய இடங்களை மீட்கப் போனவர்கள். இரண்டாவது கமாண்டோ பொறுப்பில் இருந்த என் அப்பாதான், இந்த பீரங்கிப் படைப் பிரிவுகள் வருவதற்கான எல்லா விவரங்களையும் சேகரிக்கவேண்டும். எல்லா நாளும் அதிகாலையில் எழுந்து, நெடுஞ்சாலையைச் சுற்றி இருக்கும் காலி இடங்களை நோட்டமிடுவார். அப்போதுதான், வந்துகொண்டிருக்கும் பீரங்கிப் படைகளின் வண்டிகளை அங்கே நிறுத்தமுடியும். தேவையான வெடிகுண்டுகளைக் கொண்டு வருவது, சுடுவதற்கான ஒருங்கிணைப்பு, போரைப் பற்றிய சர்வே போன்ற எல்லா திட்டமிடல்களுக்கும் என் அப்பாதான் பொறுப்பு. மே 14 முதல் 31 வரையிலான காலகட்டம், இந்தப் பிரிவுக்கு மிகவும் மோசமான காலகட்டம். ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, உடனே அடுத்த இடத்துக்கு போக வேண்டி இருந்தது. அந்தச் சமயத்தில் இப்படி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.

மேப் முன்பு அமர்ந்துகொண்டு மறுநாள் என்ன செய்யப்போகிறோம் என்பதை திட்டமிடும் நேரம் மட்டுமே என் அப்பாவுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரம்! அப்படி இருந்தும் அப்பா தொடரந்து கடிதம் எழுதினார். அதை மட்டும் அவர் மறக்கவே இல்லை.

காலாட்படைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தோளில் சுமந்துகொண்டிருந்த 315வது ரெஜிமெண்ட்டுக்கு இரவு வேளைகளில் இரண்டு தேர்வுகளே இருந்தன. ஒன்று, சுடுவதை நிறுத்திவிட்டு, மறுநாள் காலை வரை தங்கள் கூடாரங்களில் அல்லது பதுங்கு குழிகளில் காத்திருப்பது. அல்லது தொடந்து சுட்டுக்கொண்டே இருந்து காலாட்படைகளைப் பாதுகாப்பது. என் அப்பா பெரும்பாலும் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார். பீரங்கிப் படைகளுக்குப் பதுங்கு குழிகள் கூட அங்கே இல்லை. அவர்கள் கூடாரங்களில்தான் தங்கி இருந்தார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சுடும்போது  மறைந்துகொள்ள முடியாது. ஏனென்றால் சுட்டுக்கொண்டிருக்கும் துப்பாக்கியின் முனையில் உட்கார்ந்துகொண்டுதான் அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டார்கள். எதிரிகளை நேருக்கு நேர் பார்த்துச் சுடுவார்கள். அங்கேதான் என் அப்பா இருந்தார். துப்பாக்கி முனையின் உச்சியில். எந்த பயமும் இல்லாதவராக!

இந்திய விமானங்கள் கூட இந்த சமயத்தில் நிறுத்தப்பட்டன. இந்த சமயத்தில்தான் ஸ்க்வாட்ரன் தலைவர் அஜய் அஹுஜா மே 27, 1999 அன்று கொல்லப்பட்டார். இது இந்தியப் படைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அதற்காக செய்தாகவேண்டியதை செய்யாமல் இருக்க முடியாது.

இன்னும் நினைவிருக்கிறது, நானும் என் அக்காவும் ஊடி-யில் ஒரு ஆப்பரேஷனை என் அப்பா கமாண்ட் செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த வருடம் என நினைவில்லை. எங்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவர் எங்கோ தூரத்தில் நின்றுகொண்டிருந்தார். ஒரு மலையின் உச்சியில் எங்களை உட்காரச் சொல்லி இருந்தார். அங்கிருந்து அவர் வேலை செய்வதை நாங்கள் பார்க்கவேண்டும். அப்பா தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, ஒரு உண்மையான வீரரைப் போலத் தன் சக வீரர்களுக்குக் கட்டளை பிறப்பித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தார். நாங்கள் அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஆணை பிறப்பித்துக்கொண்டே அப்பா சும்மா நடந்துகொண்டிருக்கிறார்” என்று பேசிக்கொண்டோம்.

அவர் எப்பேற்பட்ட தலைவர் என்பதைப் புரிந்துகொள்ளும் வயது அன்று எங்களுக்கு இல்லை. அன்று அவர் உயிருடன் திரும்பி வந்ததற்குக் காரணம், எதிரிகள் அன்று அமைதியை வலியுறுத்தும் விதமாக வெள்ளைக் கொடியைக் காட்டியதால்தான். அப்பா என்றுமே வெற்றியாளராகவே இருந்தார்.

ஜூலை 2, 1999 மாலை. 315வது ரெஜிமெண்ட்டுக்கு இன்னொரு குழப்பம் வந்தது. சுடுவதைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா? ஆனால் சுடுவதை நிறுத்தினாலோ காலாட்படைகள் (18வது க்ரீனடயர் மற்றும் 9 சிக் பிரிவுகள்) மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும். அப்பா மீண்டும் சுடுவதைத் தொடரும் முடிவையே தேர்ந்தெடுத்தார். தன் கூடாரத்திலிருந்து வெளியே ஓடிய அப்பா, தன் சக வீரர்களை ஊக்குவித்தபடி, சுடுவதைத் தொடரச் சொன்னார். இதை வெற்றிகரமாக முடித்து மீள்வது என்பது எத்தனை கடினமானது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர் அந்தக் கடினமான முடிவை எடுக்கவேண்டி இருந்தது. ஒன்று தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அல்லது ஒட்டுமொத்த பிரிவையும் பாதுகாப்பது – இந்த இரண்டில் அவர் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு வீரனின் ரத்தத்திலும் கலந்திருக்கும் வெறி இது. நமக்கு இது புரியாது. அவர் வெறியுடனேதான் இருந்தார்.

அப்பா துப்பாக்கிச் சுடுபவரின் இடத்தில் அமர்ந்து, எதிரிகளை நோக்கிச் சுட்டார். அப்போது அவருக்கு வலப்பக்கம் ஒரு குண்டு வந்து விழுந்து வெடித்தது. அவரது முழங்கைகளில் காயம் ஏற்பட்டது. அதை அவர் உணர்ந்தார்தான். ஆனால், அவற்றில் சில, கைகளைத் துளைத்துக்கொண்டு உடலுக்குள்ளேயும் போய்விட்டது என்பதை அவர் உணரவில்லை. போரின் வேகத்தில் ஒரு வீரன் தன் வலியை உணர்வதில்லை என்பதுகூட ஒருவேளை காரணமாக இருந்திருக்கக்கூடும். அதனால் அவர் உடலுக்குள் பெரிய அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆனால் தனது கைகளில்தான் காயம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தார்.

அந்த குண்டு காரணமாக, அப்பாவும் நான்கு மற்ற துப்பாக்கி சுடும் வீரர்களும் மரணம் அடைந்தார்கள். கன் பொசிஷன் ஆஃபிஸரும் துருப்பின் தலைவரும் காயத்தோடு தப்பித்தார்கள்.

அப்பா அப்போது 2 ஐசி-யாகவே இருந்தார். பயங்கரமான போர் முகத்தில் தனியாளாகப் பல ஆப்பரேஷன்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதிகாலை 2.30க்கு ரெஜிமெண்ட் 315ன் வேலை நேரம் தொடங்கும். தங்கள் வண்டிகளில், ஹெட்லைட்டை அணைத்துவிட்டு மலைகளை அவர்கள் சுற்றி வருவார்கள். அப்படிப்பட்ட அபாயத்தில்தான் அவர்கள் இருந்தார்கள். 315ன் ஹீரோக்கள் இந்தியாவுக்கு வெற்றியைக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு கௌரவப் பட்டங்களும் தரப்பட்டன. ஆனால் இந்திய மக்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தரவில்லை. அந்த சமயத்தில் இந்திய மக்கள் தங்கள் வீடுகளில் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்திருப்பார்கள். கார்கிலில் ராணுவ வீரர்களே அந்த நேரத்தில் தங்கள் வாழ்க்கையை பணையமாக வைத்துப் போரிட்டார்கள். அவர்கள் போரின் முதுகெலும்பாக விளங்கினார்கள். ஆனால் அவர்கள் மக்களால் மீண்டும் நினைக்கப்படவே இல்லை.

டைகர் ஹில்தான் இந்தியப் படைக்கான இறுதிப் புள்ளி. அங்கே இந்திய மூவர்ணக் கொடி உயரப் பறந்ததை என் அப்பா பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அவர் எங்கே இருந்திருந்தாலும், அந்த வெற்றியை உணர்ந்திருப்பார் என்பது மட்டும் உறுதி. இந்த வெற்றியில் மிகப் பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது. எந்த ஊடகமும் அதை என் அப்பாவிடமிருந்து பறித்துவிடமுடியாது.

ஜூலை 2, 1999. அந்தச் செய்தி வந்தபோது எங்கள் உலகம் தகர்ந்து போனது. என் அப்பாவுக்கு நாங்கள் குழந்தைகள் மட்டுமே. அம்மாவும் கூட அப்படித்தான். அப்போது அம்மாவுக்கு 34 வயதுதான். ஒவ்வொரு முறை நாங்கள் கீழே விழும்போதும் எதோ ஒரு வழியில் என் அப்பாவின் ஆன்மா எங்களைத் தூக்கிவிட்டது. இன்றோடு 16 வருடம் ஆகிறது.

இந்த கார்கில் தின வெற்றியின்போது, இழந்து போன இந்த மக்களின் உணர்வை தூண்ட நானும் என் அக்காவும் தொடர்ந்து போராடுகிறோம். இன்று இந்தியா உயிர்ப்புடன் இருக்க காரணமான அந்த ஒவ்வொருவருக்கும் என் வீர வணக்கங்கள்.

என் அப்பா, என் ஹீரோ. அவருக்கு ஒரு சல்யூட்.

தமிழில்: ஹரன் பிரசன்னா

நன்றி: ஒரேநாடு வலைத்தளம்

Share

ரஜினி கமல் அரசியல்

ரஜினி கட்சி ஆரம்பித்தபோது இருந்த நம்பிக்கையும் ஆர்வமும் எனக்கு பின்னர் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. சில சமயம் மீண்டும் ஒரு ஆர்வம் வரும். ரஜினி எதாவது என் கருத்துகளுக்கு எதிராக சொல்வார். அதுவும் அவர் இத்தனை நாள் தன்னை எப்படி முன்னிறுத்திக்கொண்டாரோ அதிலிருந்து முற்றிலும் விலகிப் போவதான கருத்தாகவும் இருக்கும். இப்போது அவர், தேவைப்பட்டால் கமலுடன் இணைந்து செயலாற்றுவேன் என்று சொல்லி இருக்கிறார். கொடுமை. (நான் வீடியோவைப் பார்க்கவில்லை, தமிழ் தி ஹிந்துவில் வந்திருக்கும் செய்தியைப் பார்த்தே சொல்கிறேன்.) ரஜினி அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதே என் கணிப்பு. ஆனால் இப்படி கமலுடன் எல்லாம் இணைந்து வந்தால் உள்ள ஓட்டும் போய்விடும். அதுமட்டுமல்ல. கமலின் அரசியலை ஏற்றுக்கொள்வது ரஜினி தனக்கும் தன் ரசிகர்களுக்கும் அவரை நம்பியவர்களுக்கும் செய்யும் துரோகம். நட்பு என்ற ஒரு வஸ்து எப்படி வேண்டுமானால் இருந்துத் தொலைக்கட்டும். ஆனால் இதெல்லாம் ஓவர். ஓவர் என்பதோடு, அவர் சொல்லி வந்த கருத்துகளுக்கும் நம்பிக்கைக்கும் செய்யும் துரோகம். தொடர்ந்து தவறுகளை மட்டுமே செய்வதில் ரஜினி ஏன் இப்படி மும்முரமாக இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கமலுடன் கூட்டணி என்றால், ‘மாநிலத்தில் ரஜினி மத்தியில் மோடி’ என்று, ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்ன நாளில் நான் சொன்ன கருத்தை பின் வாங்கிக்கொள்கிறேன். 🙂 ரஜினி மூலம் எப்படியோ ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது ஹிந்து உணர்வுடன் மக்கள் வாக்களித்து பாஜக 2ம் இடத்துக்காவது வரும் என்ற, மலையைக் கெல்லி எலியைப் பிடிக்கும் ஆசையும் இந்த அறிவிப்போடு நாசமாகப் போவதை நினைத்தால் வேதனையாகவே இருக்கிறது. எப்படியோ, நாரோ சேர்ந்த பூவும் நாறும் என்பதை ரஜினிக்குச் சொல்லுங்கள்.

பிகு: தரக்குறைவான விமர்சனங்கள் நீக்கப்படும்.

Share

பிகில் – தொலைந்துபோன பந்து

மிக சீரியஸான ஒரு விஷயத்தை தமிழ்நாட்டின் ஹீரோயிச நடிகர்களால் திரையில் நிகழ்த்தவே முடியாது என்பதற்கான இன்னொரு நிரூபணம் விஜயின் பிகில் திரைப்படம். அதுவும் அட்லீ போன்ற இயக்குநர்கள், இந்த முக்கியமான விஷயங்களையெல்லாம் கூட ஏனோ தானோ என்று, ஒரு ஹீரோவின் மாஸ்ஸைக் கூட்டுவதற்காக மட்டுமே எடுப்பார்கள். இவர்களிடமெல்லாம் ஒரு சீரியஸ்தன்மையை எதிர்பார்ப்பதே நாம் நமக்குச் செய்துகொள்ளும் அவமரியாதை.

விஜய்யின் சமீபத்திய திரைப்படங்களில் இருந்த அதீத நடிப்பும் அலட்டலும் இதில் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது என்பது கொஞ்சம் ஆசுவாசம். முதல் ஐந்து நிமிடங்களில் மீண்டும் அதே அதீத அலட்டலா என்ற எண்ணம் எழுந்தது என்னவோ உண்மைதான். ஆனால் போகப் போக எப்படியோ சமாளித்து, மெல்ல முன்னேறி கொஞ்சம் நன்றாகவே நடிக்க தொங்கிவிட்டார். ஆனாலும் இடையிடையே அப்பாவைக் கட்டிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று கொஞ்சலாக நடந்து நம்மைப் பாடாகப் படுத்தவும் செய்கிறார். பல காட்சிகளில் ‘கில்லி’ படத்தில் வரும் விஜய்யின் அதே நடிப்பைப் பார்க்கமுடிகிறது. ராயப்பனாக வரும் விஜய் சுத்தமாக ஒட்டவில்லை. அவர் நடிப்பதும் இளமையான விஜய் நடிப்பது போலவே இருக்கிறது. அதேசமயம் வேறு மாதிரி நடிக்க முயன்றிருந்தால் நாம் அரண்டு மிரண்டிருப்போம் என்பதால் இதையே பாராட்டிவிடுவது நல்லது என்றும் தோன்றுகிறது.

இடைவேளை வரை கொஞ்சம் கலகலப்பாகவும் வேகமாகவும் செல்லும் திரைப்படம், இடைவெளைக்குப் பிறகு டொக்கு விழுந்த மாதிரி ஆகிவிடுகிறது. ஏனென்றால் அப்போதுதான் முக்கியமான கதைக்குள்ளே எண்ட்ரி ஆகிறார் இயக்குநர்! இதை விளையாட்டுத் துறையைப் பற்றிய படமாக எடுப்பதா, விஜய்யின் படமாக எடுப்பதா என்ற குழப்பம். (ஒருவேளை குழப்பமே இல்லையோ?) எந்தப் படத்தையும் ஹீரோவின் படமாகத் தங்களால் மாற்ற முடியும் என்று தமிழ் இயக்குநர்களின் அடியொற்றி இந்தப் படத்தையும் மாற்றி, இப்படம் எதோ ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.

ஹிந்தியில் இதே போன்ற கருவுள்ள திரைப்படத்தையெல்லாம் எப்படி எடுக்கிறார்கள் என்று இவர்கள் பார்க்கவேண்டும். அவையும் வணிகத் திரைப்படங்களே. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை புல்லரிப்பு வர வைத்தே அனுப்பி வைப்பார்கள். ஆனால் அதில் ஹீரோயிஸத்தைப் பலப்படுத்த, இன்னும் மேம்படுத்த, இவற்றைப் பயன்படுத்தமாட்டாரகள். இப்படத்தின் பெரிய சறுக்கல் இங்கேதான் தொடங்குகிறது.

ஹீரோயிஸப் படம் என்று முடிவெடுத்துவிட்டால், மைதானத்தில் விஜய் ஆடவேண்டும். ஆனால் இங்கே வெளியே நின்று என்ன என்னவோ சைகைகளைச் செய்கிறார். இதை ஈடுகட்ட, ஒரு கும்பல் விஜய்யைக் கடத்த, அவர் இவர்களைப் பந்தாட, போலிஸ் ஸ்டேஷனில் மாஸ் காட்ட என்று என்ன என்னவோ செய்கிறார். இவை எதுவுமே ஒட்டவில்லை. ஏனென்றால் நமக்கு முன்னரே எப்படியும் விஜய்யின் அணி வெல்லப் போகிறது என்பது தெளிவாகத் தெரியும். அப்படி இருக்கும் போது திரைக்கதை எப்படி இருக்கவேண்டும்? கோல்ட் ஹிந்திப் படத்தில் இந்தியா ஹாக்கியை வெல்லும் என்பது நமக்குப் படம் தொடங்கும் முன்பே தெரியும். ஆனால் கடைசிக் காட்சி வரை அந்த புல்லரிப்பை அப்படியே தக்க வைப்பார்கள். அதுவும் வணிகத் திரைப்படமே.

ஒவ்வொரு காட்சியிலும் தான் விஜய்யாகத் தெரியவேண்டும் என்று விஜய் மெனக்கெடுவதுவே என்பதுவே இப்படத்தின் எரிச்சலாக ஆகிவிடுகிறது. ஏன் நம் கதாநாயகர்களை இரண்டு அல்லது மூன்று வேட வெறி பிடித்து ஆட்டுகிறது என்று புரியவில்லை. ராயப்பனாக ஒரு கெத்தான நடிகரை நடிக்க வைத்தால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? ஹிந்தியில் இதைச் செய்திருப்பார்கள்.

இதில் அட்லீ, விஜய்யின் அடையாளச் சிக்கல் வேறு குழப்புகிறது. மைக்கேல் என்று பெயர் வைத்த ஹீரோவின் அப்பாவின் பெயர் ராயப்பன். கிறித்துவர். ஏன் காவி வேட்டி கட்டி, விபூதி குங்குமம் வைத்து, கழுத்தில் சிலுவை போட்டு ஏசுவைக் கும்பிடுகிறார்? யாருக்கும் தெரியாது. கூடவே ஒரு ராவுத்தர் வேறு. பத்தாது என்று திடீரென்று பட்டை போட்டுக்கொண்டு வரும் ஆனந்தராஜ் வேறு. என் சமுதாயம் என் சமுதாயம் என்று சொல்கிறார் ராயப்பன். யார் அந்த சமுதாயம்? ஒரே சமுதாயம், அதுவும் ஒரே இடத்திலிருந்து எப்படி ஒரு தமிழக அணிக்குத் தேர்வாக முடியும்? அப்படியானால் அவர்களுக்குள்ளே நடக்கும் அந்த மோதல் யாருக்கும் யாருக்குமானது? ராயப்பனை எதிர்ப்பவரும் ஒரு கிறித்துவரே. அப்படியானால் இது எந்த சமூகத்துக்கான பிரச்சினை? ஒரு தெளிவும் கிடையாது. ஆனால் படம் முழுக்க கிறித்துவக் குறியீடுகள் வரவேண்டும் என்பதில் மட்டும் அட்லீ தெளிவாக இருந்திருக்கிறார். அதை சமன்படுத்தவே ராயப்பனின் முகத்தில் குங்குமும் விபூதியும் போல.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதை நிறுத்திவிட்டு, வேறு யாரையோ வைத்து இசையமைக்க வைக்கிறார் போல. தொடர்ச்சியாக எப்படி இப்படி மிக மோசமான பாடல்களைத் தருகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இளையராஜா உச்சத்தில்  இருந்தபோது அவர் இசையமைத்து உச்ச நடிகர்களான கமல், ரஜினி படம் வருமானால் பாடல்கள் அசரடிக்கும் என்பதை எழுதியே தரலாம். ஆனால் ஏ ஆர் ரஹ்மானால் ஒரு விஜய் படத்துக்குக்கூட உருப்படியாகப் பாடல்களை அமைக்கமுடியவில்லை. சிங்கப்பெண்ணே என்று அவர் உணர்ச்சிகரமாகப் பாடும்போது பாவமாக இருக்கிறது. அட்லீ, ஏ ஆர் ரஹ்மான், விஜய் கூட்டணி ஒரு பாடலில் வரும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று தோன்றியது!

தேவர்மகன், பாட்சா, நாயகன் என்று பல படங்களில் இருந்து பல காட்சிகளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார் அட்லீ. இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களையே ஒத்திருந்தபோது அவரிடம் அதைப் பற்றிக் கேட்டதற்கு அவர் சொன்னாராம், அது எனக்குப் பெருமைதான் என்று. அட்லீயும் அதையே சொல்லிவிடக்கூடும். ஒரு படத்தை மட்டுமே காப்பி அடிப்பதால் வரும் பிரச்சினைகளை, பல படங்களில் இருந்து காப்பி அடிப்பதால் சமாளிக்கும் புதிய வித்தையை அட்லீ அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்று எதிர்காலத்தில் இயக்குநர்கள் பாராட்டக்கூடும். இப்போது வரும் பாடல்களைக் கேட்கும்போது எதாவது ஒரு பாடல் பச்சக்கெனப் பிடித்தால், அது முன்பே எப்போதோ இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றின் உருவலாக இருக்கும் என்று நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், நான் முன்பு ரசித்த படங்களின் காட்சிகள் என்பதால், இவையும் பிடித்துப் போய்விட்டன என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு காட்சிகூட தன்னியல்பான காட்சி கிடையாது. இப்படியான சில உருப்படியான காப்பி காட்சிகள், சில இடங்களில் விஜய்யின் நடிப்பைத் தாண்டி இப்படத்தில் ஒன்றுமே இல்லை.

இடைவேளை வரை இருந்த படத்தின் வேகத்தை அப்படியே கொஞ்சம் நீடித்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால், மோட்டிவேஷன் கதை, ஹீரோயிசக் காட்சிகள் போதாதென்று, பிராமணப் பெண்ணை ‘மீட்டு’க் கொண்டு வந்து ஆட வைப்பது, முகத்தில் அமிலம் அடிக்கப்பட்ட பெண்ணை மீட்டுக்கொண்டு வந்து நேரடியாக ஃபைனலில் ஆட வைப்பது போன்ற சமூகக் கருத்துகளைச் சொல்லத் தொடங்கி, இருந்த கொஞ்சம் நஞ்சம் உயிர்ப்பையும் விட்டுவிட்டு எங்கெங்கோ அலைகிறது பிகில்.

பழைய நல்ல படங்களை நினைவூட்டுவதால் ஒரு தடவை பார்க்கலாம். 

Share

சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’

சாவர்க்கரைப் போல தமிழ்நாட்டில் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்ட, வேண்டுமென்றே மட்டம்தட்டிச் சித்திரிக்கப்பட்ட வேறொரு தலைவர் இருக்கமுடியாது. எந்த அளவுக்கென்றால், கருணாநிதியைத் தவிர வேறு எதையுமே அறிந்துகொள்ளாத திமுகவினர் கூட சர்வசாதாரணமாக சாவர்க்கரை பிரிட்டிஷாரின் கால் நக்கிப் பிழைத்தவர் என்றும், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டவர் என்றும் சொல்லும் அளவுக்கு. உண்மையில் எதையும் தீவிரமாக அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் அறிந்துகொள்ளும் நோக்கற்றவர்களின் செயலே, இந்த மன்னிப்பு என்கிற வார்த்தையை மட்டும் கொண்டு சாவர்க்கரை அணுகுவது. சாவர்க்கரின் வாழ்க்கையை அணுகிப் பார்த்தால் தெரியும், இந்தியாவின் மிகச் சிறந்த தேச பக்தர்களில், தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்களில் சாவர்க்கர் எத்தனை முக்கியமானவர் என்று.

அவரது வாழ்க்கை முழுக்கவே போராட்டம் நிறைந்தது. எந்த நிலையிலும் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், ‘இதெல்லாம் எதற்காக’ என்ற எதிர்மறைச் சிந்தனைக்குத் தன்னை இழந்துவிடாமல், பாரத அன்னைக்கு சுதந்திர மலரை அணிவிப்பது ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரால் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஒரே தலைவர். அதாவது 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தன் மனைவியை, குடும்பத்தைப் பிரிந்து அந்தமான் சிறையில் வாடியவர். இவர் மட்டுமல்ல, இவரது சகோதரர்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றார்கள்.

மெர்சிலி தீவில் அவர் தப்பிக்க முயன்றதெல்லாம் நம்ப முடியாத அளவுக்கான சாகசம். அந்தமான் சிறைத் தண்டனை குறித்து அவர் எழுதிய புத்தகம் ‘Transportation for life’ தற்போது தமிழில் வெளியாகி இருக்கிறது. (மொழிபெயர்ப்பு: எஸ்.ஜி. சூர்யா, கிழக்கு பதிப்பக வெளியீடு, விலை 650 ரூ). இந்தப் புத்தகம் 1927ல் மராட்டியில் முதலில் வெளியானது. இது தொடராக வெளிவரவே பல இன்னல்களைச் சந்திக்கவேண்டி இருந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகே ஆங்கிலத்தில் வெளியானது. 90 வருடங்கள் கழித்து முழுமையாகத் தமிழில் வெளியாகிறது. இவரது நண்பரான வ.வெ.சு. ஐயர் இதன் தமிழ் மொழிபெயர்ப்பை அந்தக் காலகட்டங்களில் வெளியிட்டதாகத் தெரிகிறது. முழுமையாக வெளியிட்டாரா, சில பகுதிகளை மட்டும் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.

சாவர்க்கரின் வாழ்க்கை அல்ல, அவரது புத்தகங்கள் கூட இப்படித்தான் வெளியாகின. முதல் இந்திய சுதந்திரப் போர் என்று முதன்முதலில் சிப்பாய்க் கலகத்தை விளித்தவர் இவரே. அந்தப் புத்தகம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டே வெளியானது. அவரது கையெழுத்துப் பிரதி இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு அத்தனை முயன்றது. நாடு நாடாகச் சென்ற அந்தப் பிரதி, மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளி வந்ததை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லலாம். (தமிழில் எரிமலை என்கிற தலைப்பில் அல்லயன்ஸ் வெளியீடாகக் கிடைக்கிறது.)

இப்படி வாழ்க்கை முழுக்க எதிர்ப்புகளிடையேயும் போராட்டங்களிடையேயும் வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பை அவர் சிறைக்குச் சென்ற உடனே கேட்கவில்லை. 12 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை. எப்படிப்பட்ட சிறைத் தண்டனை? ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம் அதனை விவரிக்கிறது. ஆறு மாதங்கள் கைகளிலும் கால்களிலும் சங்கிலி மாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார். செக்கிழுக்க வைக்கப்படுகிறார். பாரிஸ்டர் படிப்பு படித்தவர் கயிறு திரிக்க வைக்கப்படுகிறார். தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். தூக்குமேடைக்கு எதிரே இவருக்கு அறை தரப்படுகிறது. தினம் தினம் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் துன்பம் இவருக்குத் தரும் பயம் மற்றும் வேதனையின் மூலம் இவரது மனச்சிதைவைத் துரிதப்படுத்த பிரிட்டிஷ் அரசு முயல்கிறது. தினம் தினம் யாரோ ஒரு கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார் அல்லது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். சில கைதிகளுக்குத் தனிமைச் சிறையின் தாள முடியாத துன்பம் மனநலச் சிதைவைக் கொண்டு வருகிறது. இத்தனைக்கும் மத்தியில் தன் வாழ்க்கை குறித்த சிந்தனைகளுடன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் இந்தியாவில் இருக்கும் தன் குடும்பத்தையும் எண்ணி சாவர்க்கர் தவிக்கிறார். ஏன் இந்த வாழ்க்கை என்கிற எண்ணம் தலையெடுக்கிறது. ஆனால் மிகப் பெரிய போராட்டத்துடன் அதிலிருந்து மீள்கிறார். தற்கொலை என்பது தீர்வல்ல என்று அனைவரிடம் விவரிக்கிறார்.

சிறையில் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணமும் எப்பாடுபட்டாவது சிறையில் இருந்து தப்பிப்பது என்பதை நோக்கியே இருக்கவேண்டும் என்று மிகத் தீர்மானமாகச் சொல்கிறார் சாவர்க்கர். ஏன்? வெளியில் சென்று, தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் தேச சேவை செய்யலாம் என்பதே அவரது எண்ணம்.

இந்தப் புத்தகத்தில் என்னை அசர வைத்த ஒரு விஷயம். சாவர்க்கரின் எந்த ஒரு எண்ணமும் எல்லாக் காலத்திலும் தேச சேவை என்ற ஒன்றை நோக்கியே உள்ளது. பின்பு சாவர்க்கர் கேட்டதாகச் சொல்லப்படும் மன்னிப்பும் கூட இதன் பின்னணியிலேயே உள்ளது. விடுதலை கிடைத்து வீட்டுக்கு வந்து சுக வாழ்க்கை வாழவில்லை சாவர்க்கர். நிபந்தனையின் பேரில் வெளிவரும் சாவர்க்கர், இன்னும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்பில் (ரத்னகிரிக்குள் மட்டும் நடமாடும் அனுமதியோடு) வைக்கப்படுகிறார். பின்னரும் சுதந்திரப் போராட்டத்துக்குத் தேவையான, தன்னால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார். எந்த நேரத்திலும் பிரிட்டிஷ் அரசு தன்னைக் கைது செய்து மீண்டும் அந்தமான் இருட்டுச் சிறைக்குள் தள்ளும் என்று தெரிந்திருந்தும் இதனைச் செய்கிறார்.

அந்தமான் சிறையில் இவருடன் அடைக்கப்பட்டிருக்கும் பல தேச பக்தர்கள் பற்றிய குறிப்புகளை எல்லாம் நினைவில் வைத்திருந்து இப்புத்தகத்தில் பதிவு செய்கிறார். சாவர்க்கரின் நினைவாற்றலும் நன்றி உணர்ச்சியும் அபாரமானவை. இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் அதனை உணரலாம். அதேபோல் சாவர்க்கரின் வாதத்திறமை உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் முழுக்க சாவர்க்கர் தனது கருத்துகளை அதன் பின்னணியோடும் தர்க்க ஆதாரத்தோடும் மிகத் தெளிவாக முன்வைக்கிறார். அதுமட்டுமல்ல, தன் கருத்துக்கான எதிர்க்கருத்தைச் சொல்லி அது ஏன் சரியாக இருக்கமுடியாது என்பதை விவரிக்கிறார். மகாத்மா காந்தி ஜி கொலை வழக்கில் அவர் தந்த எழுத்துபூர்வமான சாட்சியத்திலும் இதே போன்ற விவரணைகளைக் காணலாம். எந்தக் காலத்திலும் அவர் தன் கருத்துகளை இப்படியான தர்க்க நியாயம் இல்லாமல் உதிர்த்ததே இல்லை.

அந்தமான் சிறைக்குச் செல்லும்போது சாவர்க்கரின் முன்பு பல சவால்கள் இருந்தன. முதலில் தன்னை மீட்டுக்கொள்வது, பின்பு அங்கிருக்கும் கைதிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவது, கைதிகளின் தற்கொலைகளை நிறுத்துவது, ஹிந்துக் கைதிகள் முஸ்லிம் கைதிகளால் நடத்தப்படும் விதத்தை மாற்றுவது, பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்பது, அங்கிருக்கும் கைதிகளுக்கு எழுத்தறிவிப்பது, அந்தமான் தீவில் சுதந்திரக் கனலைப் பரப்புவது, கட்டாயப்படுத்தி அல்லது வேறு வழியின்றி அல்லது ஆசை காட்டி மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக் கைதிகளை தாய்மதம் திரும்ப வைப்பது, ஹிந்துக் கைதிகளிடையே அநியாயமாகப் புகுந்துவிட்ட சாதியக் கொடுமைகளை அகற்றுவது, அந்தமான் சிறையின் நிலையை இந்தியாவில் இருக்கும் அரசுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் தெரிவித்து சிறையின் நிலையை முன்னேற்ற உதவுவது, இந்தியாவில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்குத் தன்னால் இயன்ற கருத்துகளைச் சொல்வது, எப்படியாவது இந்தச் சிறையில் இருந்து தப்பித்து இந்தியா சென்று இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடுவது – இத்தனை எண்ணங்களுடன் அலைக்கழிகிறார் சாவர்க்கர்.

உங்களால் நம்பமுடிகிறதா? இவை அனைத்தையும் செய்து முடிக்கிறார். ஒருவர் ஏன் தலைவர் என்று கொண்டாடப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் இவற்றில் உள்ளன. இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். இதனைத் தமிழில் கொண்டு வந்த ஒவ்வொருவரும், அதற்கு உதவிய ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். பல ஆண்டுகள் நீடித்து நிற்கப் போகும் ஆவணம் இது.

அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டபோது பிரிட்டிஷாரின் ஒரே நோக்கம், எக்காரணம் கொண்டும் சாவர்க்கர் உயிருடன் இந்தியா மீண்டுவிடக்கூடாது என்பதாகவே இருந்தது. அஹிம்சைப் போராட்டங்களை எப்படியும் எதிர்கொண்டுவிடலாம் என்று நம்பிய பிரிட்டிஷ் அரசு, புரட்சிப் போராட்டத்தை எதிர்கொள்ள அஞ்சியது. அதை ஒடுக்குவதே ஒரே வழி என்று புரிந்துகொண்டது. அதுவும் வெறும் வாய் வார்த்தை பேசி அரசை மிரட்ட மட்டுமே செய்பவர் அல்ல சாவர்க்கர், செயலையும் நிகழ்த்திக் காட்டுபவர் என்பது புரிந்தபோது, அவரை இந்தியாவுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் விலக்கி வைப்பது நல்லது என்ற முடிவுக்கு வருகிறது.

ஆனால் அந்தமான் சிறை அனுபவம் சாவர்க்கரை அவரளவில் பெரிய தலைவராக உயர்த்துகிறது. (அதேசமயம் மக்கள் தலைவர் என்னும் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக விலகவும் செய்துவிட்டது என்பது சோகமான வரலாற்று நிகழ்வு.) பிரிட்டிஷ் அதிகாரிகள்கூட அந்தமானுக்கு வந்தால் சாவர்க்கரைச் சந்திக்காமல் செல்வதில்லை. எல்லோருடனும் உரையாடத் தயாராக இருக்கும் சாவர்க்கர், அனைவரிடமும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி விவாதிக்கிறார். சாவர்க்கரின் பரந்துபட்ட அறிவும், இலக்கியப் பரிட்சயமும், உலக நாடுகள் பற்றிய வரலாற்று ஞானமும், அவரால் எத்தகைய எதிர்க்கேள்விகளையும் எதிர்கொள்ள வைக்கின்றன. இந்த நூலில் அவை அனைத்தும் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதமாற்றம் செய்யப்படும் ஹிந்துக் கைதிகள் பற்றிப் பேசும்போது மிகத் தெளிவாக தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார். தானாக மனம் உணர்ந்து மதம் மாறுபவர்களைப் பற்றி சாவர்க்கருக்கு எந்தப் புகாரும் இல்லை. அது அவர்களது சுதந்திரம். ஆனால், கைதிகள் முஸ்லீமாக மதம் மாறினால் அவர்களுக்குச் சிறையில் சில சுதந்திரங்கள் தரப்படும், ஜமேதாராகலாம் என்பன போன்ற சலுகைகள் தரப்படுகின்றன. சிறையில் படும் கஷ்டங்கள் தாங்காமல் பலர் மதம் மாறுகிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஹிந்துக்களிடையே உள்ள சாதி வேற்றுமை மற்றும் சில மூட நம்பிக்கை. ஒருவன் ஒரு தடவை முஸ்லீம்களிடையே இருந்து உணவருந்தினாலும் அவன் ஹிந்து அல்ல என்று முடிவு செய்து அவனை விலக்கி வைக்கிறார்கள். இதனால் அவன் தாய் மதம் திரும்பும் வாய்ப்பே இல்லாமல் போய், முஸ்லீமாகவே ஆகிவிடுகிறான். அதுவும் ஒரு சக ஹிந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் இது இன்னும் எந்த அளவுக்குப் போகும் என்று சொல்வதற்கில்லை. சாவர்க்கர் இதையெல்லாம் எதிர்க்கிறார். முஸ்லீம்களுடன் உணவருந்திய ஒருவருடன் இவரே அமர்ந்து உணவு உண்கிறார். பிறகு மெல்ல நான்கைந்து பேர் இவர்களுடன் சேர்ந்து உணவு உண்கிறார்கள். பிறகு வேறு வழியின்றி அனைவரும் சேர்ந்து உணவு உண்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு செயலையும் தானே முன் நின்று செய்கிறார்.

முஸ்லிம் கைதிகள், குறிப்பாக பதான் – சிந்தி – பலூச்சி முஸ்லீம்கள் (தமிழகம் மகாராஷ்ட்ரம் போன்ற இடங்களில் இருந்து வந்த முஸ்லிம்கள் இத்தனை கொடூரமானவர்கள் அல்ல என்கிறார்) அடாவடி செய்யும்போது அதே போக்கில் ஹிந்துக் கைதிகளை அடாவடி செய்யத் தூண்டுகிறார். இதனால் சிறையில் பெரிய பிரச்சினைகள் எழுகின்றன. மேலதிகாரிகளின் விசாரணையின்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வர, இரு தரப்பு இந்த அடாவடிகளைச் செய்யக்கூடாது என்று முடிவாகிறது. இதை ஒரு போராட்ட வடிவமாகவே சிறையில் செய்கிறார் சாவர்க்கர். ஹிந்துக் கைதிகளின் உணவை வேண்டுமென்றே முஸ்லிம் கைதிகள் தொட்டுவிட்டு, அது தீட்டு என்பதால் ஹிந்துக் கைதிகள் உணவை உண்ணாமல் இருக்க, அந்த உணவையும் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதே பாணியை ஹிந்துக் கைதிகளை வைத்துச் செய்ய வைக்கிறார். வேறு வழியின்றி முஸ்லீம் கைதிகள் அமைதியாகிறார்கள். அதிகாலை நேரத்தில் தொழுகையால் வரும் பிரச்சினையையும் இப்படியே எதிர்கொள்கிறார். சங்கநாதம் எழுப்பச் சொல்லி ஹிந்துக் கைதிகளைத் தூண்டுகிறார். முதல் உலகப் போரின்போது கெய்சர் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார் என்ற செய்தியை முஸ்லீம் கைதிகள் பரப்ப, இவர் பதிலுக்கு அவர் ஆர்யசமாஜி ஆகிவிட்டார் என்கிற செய்தியைப் பரப்பச் சொல்கிறார். உருதுவில் எழுதுவதே மேன்மையானது என்கிற எண்ணத்தை உடைத்து, ஹிந்தியில் எழுதச் சொல்கிறார். இவையெல்லாம் சிறைக்குள் அத்தனை இன்னல்களுக்குள் சாவர்க்கரால் செய்யப்பட்டவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

சிறையிலும் சிறைக்கு வெளியே அந்தமான் தீவிலும் தாய்மதம் திரும்புவதை ஒரு சடங்காகவே செய்ய ஆரம்பித்தார் சாவர்க்கர். இதனால் திணறிப் போன பிரிட்டிஷ் அரசு, சிறைக்குள் எந்த ஒரு மதத்தில் இருந்தும் இன்னொரு மதத்துக்கு மதம் மாற்றுவதைத் தடை செய்கிறது. இதுதான் சாவர்க்கர் எதிர்பார்த்ததும்கூட!

மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதரோடு முடியக்கூடியதல்ல, அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு மதத்துக்கான அடித்தளமாக மாறும் இயல்புடையது என்கிறார். குற்றவாளியாகவே இருந்தாலும் ஒருவர் ஹிந்து மதத்தில் தொடரவேண்டிய அவசியத்தை, அதன் அடுத்தடுத்த தலைமுறைகளை மனதில் வைத்துச் சொல்கிறார். இதற்காக உலக வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை முன்வைக்கிறார். நூல் முழுக்க இப்படித்தான், எதிர்காலத்தில் என்ன நடக்கும், அதற்கான உலக வரலாற்று ஆதாரங்கள் என்ன என்பதோடு நம் புராணங்களின் ஆதாரங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.

சிறைக்குள் எழுத்தறிவிக்க சாவர்க்கர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், எழுத்தறிவிப்பவன் இறைவன் என்றால் இப்படி எழுத்தறிவித்தவன் அதற்கு மேல் என்றே சொல்லவேண்டும். மூன்று ஆர் (Reading, wRiting, aRithmetic) என்பதை ஒருவன் எப்பாடுபட்டாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

தான் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதில் சாவர்க்கருக்கு இருந்த ஆர்வம் அளப்பரியது. சிறையின் சுவர்களையே காகிதமாக்கி, சிறையில் கிடைக்கும் ஒரு ஆணியை மறைத்து வைத்து அதிலேயே தன் கருத்துகளை எழுதுகிறார். புத்தகங்கள் பற்றிய குறிப்புகள், புதிய கவிதை என்று எழுதுகிறார். வேறு அறைக்கு மாற்றப்பட்டால், இந்த அறை மற்ற கைதிகளுக்கு ஒரு புத்தகமாகிறது. மாற்றப்பட்ட சிறையிலும் இப்படி வேறு ஒன்றை எழுதுகிறார்.

சிறைக் கைதிகளுக்குள்ளே ரகசிய முறையில் செய்திகளைப் பரிமாற சாவர்க்கர் செய்யும் விஷயங்கள் எல்லாம் கற்பனைக்குள் அடங்காதவை. code முறையில் பேசிக்கொள்வது, பானைத் துண்டுகளில் செய்திகளைப் பரப்புவது, கிடைக்கும் காகிதங்களில் எழுதி சுருட்டி எரிந்து பரப்புவது என்று என்னவெல்லாமோ செய்கிறார். கைதிகளையும் அதில் பங்கெடுக்க வைக்கிறார்.

முதல் உலகப் போரின்போது சிறைக் கைதிகளுக்கு அரசியல் அறிவைப் புகட்ட வாரம் தோறும் பிரசங்கம் செய்கிறார். அவர்களுடன் விவாதிக்கிறார். உலக அரசியல் அறிவில்லாமல் சுதந்திரப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்று விளக்குகிறார். அதே சமயம் ஒரு கனிவான ஆசிரியர் போல அவர்களுக்கு போதிக்கிறார். அவசரப்படுவதில்லை. மெல்ல மெல்ல சொல்லித் தருகிறார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது, இரண்டு ராஜா சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் என்று யோசித்துக்கொண்டிருந்த கைதிகளுக்கு அரசியல் சொல்லித் தருகிறார். இதைத் தொடர்ந்து சிறையில் நூலகம் தொடங்குகிறார். தன் சகோதரர்கள் மூலம் புத்தகங்களைச் சிறைக்குக் கொண்டு வருகிறார். சிறையில் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இதை எதிர்த்தாலும், கிண்டலாகப் பேசினாலும், உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்று, இதை வெற்றிகரமாகச் செய்து காண்பிக்கிறார் சாவர்க்கர்.

முதல் உலகப் போரின்போது கெய்சரின் படையினர் அந்தமான் சிறையைத் தகர்த்து சாவர்க்கரை மீட்கப் போகிறார்கள் என்கிற புரளி வருகிறது. அந்தமான் கடற்கரையில் கிடைக்கும் வெடிகுண்டு ஒன்றை வைத்து இந்த முடிவுக்கு வருகிறார்கள் பிரிட்டிஷ் சிறை அதிகாரிகள். இதையெல்லாம் நம்பவேண்டாம் என்று எத்தனையோ சொன்னாலும், சாவர்க்கரை பெரிய அளவில் கண்காணிக்கிறது பிரிட்டிஷ் அரசு.

காந்திஜியைப் பற்றிய இரண்டு அல்லது மூன்று குறிப்புகள் இந்த நூலில் உள்ளன. மகாத்மா என்றே குறிப்பிடுகிறார் சாவர்க்கர். ஆங்கில மொழிபெயர்ப்பில் இப்படி வருகிறதா அல்லது மராட்டியிலேயே இப்படித்தான் இருந்ததா என்பது தெரியவில்லை. மகாத்மா என்று குறிப்பிட்டாலும் காந்தியின் தவறான அகிம்சை போதனைப் புரிதல்களைக் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்குகிறார் சாவர்க்கர். ஒத்துழையாமை இயக்கத்தைவிட நமக்குத் தேவையானது பொறுப்புள்ள ஒத்துழைப்பு (*Responsive cooperation) என்பதுதான் என்று வாதிடுகிறார்.

ஐந்து ஆண்டுகள் அந்தமான் சிறைத் தண்டனைக்குப் பிறகு சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் ஒரு உரிமை, அந்தமான் தீவில் குடும்பத்துடன் வசிக்கும் உரிமை. அது யாருக்குத் தரப்பட்டாலும் சாவர்க்கருக்குத் தரப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது பிரிட்டிஷ் அரசு. ஒரு வழியாக அந்த அனுமதி கிடைக்கும்போது அங்கே சென்றும் சுதந்திரப் போராட்டக் கனலைப் பரப்புகிறார். அவற்றையெல்லாம் புல்லரிப்பு இல்லாமல் படிக்கமுடியாது.

சிறைக்குள் வரும் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் சாவர்க்கருக்கு விடுதலை என்கிற செய்தி வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. சிறையே இதனால் சந்தோஷம் கொள்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் சாவர்க்கருக்கு மட்டும் விடுதலை தரப்படாது. புத்தகத்தைப் படிக்கும் நமக்கே இது பெரிய அசதியைக் கொண்டு வரும் என்றால் அங்கே வாழ்ந்தவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

முதல் உலகப் போரை ஒட்டி பொது மன்னிப்பு என்கிற விஷயம் எழுகிறது. சிறையில் இருக்கும் கைதிகள் ஒவ்வொருவரையும் இந்தப் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்குமாறு சாவர்க்கர் சொல்கிறார். அனைவரையும் விண்ணப்பிக்க வைக்கிறார். அப்படி விண்ணப்பித்தவர்களுள் ஒருவரே சாவர்க்கர். அன்று பிரிட்டிஷ் அரசுக்கு மனு அளிப்பது ஒன்றே வழி. அந்த வழியையே சாவர்க்கர் பின்பற்றினார். அதில் இருக்கும் வரிகளை மேற்கோள் காட்டி, சாவர்க்கர் இந்த அளவுக்குப் போனார் என்பது அடுத்த குற்றச்சாட்டு. The Mighty alone can afford to be merciful and therefore where else can the prodigal son return but to the parental doors of the Government? சாவர்க்கரின் கவிதை தோய்ந்த மொழி எப்போதுமே அப்படியானதுதான். உருவகமும் உலகப் புகழ்பெற்ற காவியங்களின் வரிகளும் முழுக்க இழையோடித்தான் அவரால் எழுதமுடியும். இதில் கவனிக்கவேண்டியவை என்ன? ஒன்று, சாவர்க்கர் எல்லாக் கைதிகளையும் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்கச் சொல்கிறார். காரணம், சிறையில் உழன்று அழுகிச் சாவதில் பொருளே இல்லை என்றும், ஒரு புரட்சியாளன் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே போகவேண்டும் என்றே நினைக்கவேண்டும் என்றும், அதற்கான காரணம் அப்படி வெளியே செல்வது பாரத அன்னைக்கு சுதந்திர மலரைச் சூட்டப் போராடுவதற்காகத்தான் என்றும் பல முறை பதிவு செய்திருக்கிறார். அனைவருக்கும் பொது மன்னிப்பு தரப்பட்டாலும் சாவர்க்கர் சகோதர்களுக்கு மட்டும் அந்த நேரத்தில் தரப்படவில்லை! இரண்டாவதாகக் கவனிக்கவேண்டியது, மிகத் தெளிவாக சாவர்க்கர் சொல்கிறார், “என் பொருட்டு ஒருவேளை அனைவருக்கும் பொது மன்னிப்பு மறுக்கப்படும் என்றால், மற்ற அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குங்கள், என்னைச் சிறையிலேயே வையுங்கள், மற்றவர்களுக்குத் தரப்படும் மன்னிப்பு எனக்குத் தரப்படுவதைப் போன்றதே” என்கிறார். இதை வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை. இந்தப் புத்தகத்திலேயே இதைப் பல இடங்களில் பல கட்டங்களில் சொல்கிறார். மூன்றாவதாக, சிறையில் இவரைச் சந்தித்து உரையாடிய பிரிட்டிஷ் அதிகாரி சர் ரெஜினால் க்ரடாக் சொல்வது: “கருணை மனுவுக்குப் பின்னரும்கூட, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செய்தது குறித்த எவ்வித குற்ற உணர்ச்சியும் இவரிடம் இல்லை” என்பது. நான்காவதாக, அந்தமான் சிறையில் இருந்து 2 மே1921ல் மாற்றப்பட்டு இவர் ரத்னகிரியிலும் எரவாடா சிறையிலும் மூன்று ஆண்டுகளுக்குச் சிறையில் வைக்கப்படுகிறார். பின்னர் ரத்னகிரி மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐந்து ஆண்டுகள் ரத்னகிரியில் கழிக்கிறார். பின்னரும் 1937 வரை தீவிரமாகக் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார். ஆனாலும் சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்கைத் தீவிரமாகவே செலுத்துகிறார். எனவே சாவர்க்கர் மன்னிப்புக் கேட்டார் என்பது, ஒற்றை வரி அரசியலைச் செய்பவர்களுக்கான வெற்றரசியல் மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அதிக காலம் சிறையில் இருந்தவர் சாவர்க்கரே. அதுவும் கொடும் சிறை, தனிமைச் சிறை. இதைப் புரிந்துகொள்ள தேசம் பற்றிய எண்ணமும், சுதந்திரப் போராட்டம் பற்றிய புரிதலும் வேண்டும்.

அந்தமான் சிறையிலிருந்து ரத்னகிரிக்கு மாற்றப்படும் சாவர்க்கர் சகோதரர்கள் பாரத மண்ணில் கால் பதிக்கும்போது சாவர்க்கரின் வரிகள் பெரும் கவித்துவம் பெறுகின்றன. நாடி நரம்பெல்லாம் தேசபக்தி உள்ளவர்களால் மட்டுமே அப்படி எழுத முடியும், அதைப் புரிந்துகொள்ள முடியும்.

சாவர்க்கர் எப்பேற்பட்ட சிந்தனையாளர், சுயமான தலைவர் என்பதற்கு இந்த நூல் ஒரு ஆதாரம். இந்த நூலை வாசிக்காமல் போவது பெரிய இழப்பு. இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. நூலை வாசித்தால் நான் சொல்வது புரியும். நான் இந்த நூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசித்தேன். எஸ்.ஜி. சூர்யாவின் மொழிபெயர்ப்பில் தமிழில் மிக அற்புதமாக வெளி வந்திருக்கிறது. நண்பர் பாலாவும், நானும் இதை எடிட் செய்தோம். மிக முக்கியமான நூல் இது. தவற விட்டுவிடாதீர்கள். வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.

Share

கோமாளி

கோமாளி என்றொரு கொடுமையைப் பார்த்தேன். (ஹாட்ஸ்டாரில் விஐபி-யிலேயே கிடைக்கிறது.) ஒரு நல்ல முடிச்சை எடுத்துக்கொண்டு அதை காமெடியாக எடுப்பதா அல்லது சீரியஸாக எடுப்பதா என்று தெரியாமல் குழப்பி அடித்திருக்கிறார்கள். இதில் சோஷியல் மீடியா ஏற்படுத்தும் விலக்கம் பற்றியும் மீண்டும் மனிதாபிமானமே முக்கியம் என்ற ‘புத்தம் புதிய’ கருத்தையும் சொல்ல நினைத்து கசக்கி எறிந்துவிட்டார்கள். எல்லா சாதிகளும் இனங்களும் வேற்றுமை மறந்து வெள்ளத்தின்போது உதவினார்கள் என்பதை வலிந்து வலிந்து காட்டுகிறார்கள். அதில் பூணூல் தெரிய பிராமணர் உதவ, சிங் உதவ, இஸ்லாமியர் உதவ, கிறித்துவர் ஜோசஃப் என்று தன் பெயர் சொல்லிப் போகிறார். அப்படியும் பிராமணரை விடவில்லை. இன்னொரு காட்சியில், “தோப்பனார் கிட்ட சொல்வேன்” என்று வசனம் வைத்து, யோகி பாபு அதற்கு பதிலாக “தோப்பனார் தொண்டையை கிழிச்சிருவேன்” என்று என்னவோ சொல்கிறார். இது சின்ன விஷயம், சின்ன கிண்டல், சின்ன சீண்டல்தான். ஆனால் ஏன் இதை வைத்தார்கள் என்பதுதான் விஷயம். 40 வயதான ஆண் ஒருத்தன் ஒரு பிரச்சினைக்கு என்றைக்காவது “என் தோப்பனார்கிட்ட சொல்வேன்” என்று சொல்வானா? இந்தப் படத்தில் சொல்கிறான். சின்ன பையன் சொல்வது போலவாவது வைத்திருக்கலாம். ஒரு காட்சியை இப்படி வைக்கும்போதே உரைக்காதா என்ன? ஆனாலும் வைக்கிறார்கள் என்னும் எண்ணத்தின் பின்னணியில் உள்ள விஷயமே முக்கியமானது. ஆனாலும் இயக்குநர் மற்ற காட்சிகளில் இப்படி படுத்தவில்லை.

மோடியை யோகிபாபு என்னவோ சொல்கிறார், அது ம்யூட் ஆகிவிட்டது. ப்ளம்பர் என்று சொல்கிறார் எனக் கேள்விப்பட்டேன். ரஜினி குறித்த காட்சி நீக்கப்பட்டு நாஞ்சில் சம்பத் வருகிறார். இதுவே ஒரு குறியீடோ என்ன எழவோ. ரஜினி பற்றிய காட்சி, லாஜிக்கே இல்லாத, ஆனால் மக்கள் மனதில் இருக்கும் கருத்துடன் பொருந்திப் போன நல்ல காட்சிதான். ஏன் இத்தனை பொங்கி நீக்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 2017 வரை ரஜினி வெளிப்படையாக என்றும் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னதே இல்லை. அப்படியானால் அதைக் காட்சியாக வைத்து எப்படி ஜெயம் ரவி இன்னும் இது 1996 என்று சொல்லமுடியும்? லாஜிக் தவறான காட்சியை வைத்துவிட்டு அதை உணர்ந்து நீக்கினார்களோ என்னவோ.

மொத்தத்தில் கர்ண கொடூரமான படம்!

Share

தர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்

மிக மோசமான, அடிப்படையற்ற ஒரு படம். லாஜிக்கே இல்லாமல் இப்படிப் படம் எடுப்பது தமிழில் புதிதல்ல. ஆனால் இதில் ஒரு புதிய சாதனை செய்திருக்கிறார்கள். ஒரு படம் முழுக்க ஹிந்து மதத்தை, ஹிந்து மதத்தின் கடவுளர்களைக் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். தமிழில் இதுபோன்ற சாதனை இதுவரை வந்ததில்லை. கூடவே ஈவெராவையும் (இன்னும் 3 தலைவர்களையும்) கிறித்துவ மதத்தையும் தெரஸாவையும் புகழ்ந்திருக்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களையும்விட மோசமான உருவாக்கத்தில் வந்திருக்கும் இப்படத்தைப் பார்ப்பதே ஒரு தியாகம்தான். இந்தப் படத்தைப் பற்றி எழுத ஒரு அவசியமுல்லை. ஆனால் தமிழ்த் திரையுலகம் எந்த அளவுக்கு ஹிந்து மத வெறுப்பையும் அதன் ஒட்டாக கிறித்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என்பதையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பார்த்தேன், எழுதுகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் முத்துக்குமரன். இவருக்குப் படம் எடுக்கத் தெரியுமா என்பதையும் தாண்டி, இவர் ஒரு நல்ல படத்தையாவது பார்த்திருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதில் பெயர் மட்டும் முத்துக்குமரன். உண்மையில் இவர் ஹிந்து மதத்துக்குச் செய்யும் பெரிய சேவை ஒன்று இருக்குமானால், தன் பெயரை உடனே மாற்றிக்கொண்டு விடுவது. திரையுலகத்துக்குச் செய்யும் சேவை என்று ஒன்று இருக்குமானால், இனி படங்களையே எடுக்காமல் இருப்பது. இப்படத்தில் கதையே இல்லை என்பதோடு, திரைக்கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை, ஒன்றுமே இல்லை. ஆனால் பிரசாரம் மட்டும் பலமாக இருக்கிறது.

தமிழ்த் திரையுலகம் மிகப்பெரிய மாயவலையில் சிக்கி இருக்கிறது என்பதை எத்தனையோ முறை எத்தனையோ பேர் சொல்லி இருக்கிறார்கள். அதன் இன்னொரு நிரூபணம் இத்திரைப்படம்.

* படத்தின் முதல்  காட்சியே இரட்டை அர்த்த வசனத்தில் தொடங்குகிறது. பேசுபவர் யமன்.

* யமனின் மகனாக வரும் யோகி பாபு புதிய யமனாகிறார். இவர் வாயைத் திறந்தாலே யாரையாவது எதற்காகவாவது திட்டிக்கொண்டே இருக்கிறார்.

* நடனம் என்பதை சிவன் கொச்சைப்படுத்திப் பேசி, முருகன் பிள்ளையாருடன் குத்தாட்டம் போடுகிறார்.

* சிவன் போடா வெண்ண என்றெல்லாம் வசனம் பேசுகிறார்.

* நரகத்துக்கு அழைத்துச் செல்ல கருப்பான மனிதர்கள் அரக்கர்கள் வருகிறார்கள். அவர்கள் அரக்கர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆனால் சொர்க்கத்துக்குச் செல்ல வெண்ணிற தேவதைகள், கிறித்துவ பாணியில் இறக்கைகளுடன் வருகிறார்கள். அதாவது கெட்டவர்கள் என்றால் கருப்பாக ஹிந்து அடையாளங்களுடன் இருப்பார்கள். உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் நல்லவர்கள் எல்லாம் கிறித்துவ அடையாளங்களுடன் வெள்ளையாக இருப்பார்கள்.

* பாம்புக்குப் பால் ஊற்றினால் பாம்புக் குட்டிகள் செத்துப் போகும் என்று படத்தில் சொல்கிறார்கள். யார் சொன்னது? பாம்பே சொன்னது!

* யானையைப் பிச்சை எடுக்க வைத்தால் யானை பாகனைக் கொல்லும். ஆனால் யமன் அந்த யானையை மீண்டும் திருவண்ணாமலைக்கு அனுப்புகிறார். திருவண்ணாமலைக்குப் போய் அந்த யானை என்ன செய்யும்? இவ்வளவுதான் இயக்குநர் முத்துக்குமரனின் மூளை!

* யமன் கிறித்துவ தேவாலயத்துக்குள் போய் படுத்து உறங்குகிறார். ஏசுவை யமனே ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார். ஏசுவிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் சித்திரகுப்தனை!

* இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு யமலோகம் வருகிறார்கள். அவர்களை வளர்க்க யமன் அவர்களை யாரிடம் ஒப்படைக்கிறார்? தெரஸாவிடம்! தெரஸா புகழ் வேறு உண்டு. மறந்தும் ஹிந்து சன்னியாசிகள் அனாதைக் குழந்தைகளை வளர்ப்பதாகக் காண்பிக்கமாட்டார்கள். இப்படியான பொதுப்புத்தியை வளர்ப்பதே இயக்குநர் முத்துக்குமரன்களின் நோக்கம்..

* சமூகத்தில் நடக்கும் விஷயங்களையெல்லாம் பேப்பர் கட்டிங் எடுத்து வைத்துக்கொண்டு படமெடுத்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமரன். அதில் ஒன்று, ஸ்கூட்டரில் செல்லும் தம்பதிகளை ஒரு போலிஸ் காலால் உதைத்துத் தள்ள, அதில் இறந்து போகும் ஒரு பெண்ணைப் பற்றியது. அதில் அப்படி உதைத்துத் தள்ளும் போலிஸ் நெற்றி நிறைய பட்டை போட்டு சந்தனம் குங்குமம் வைத்துக்கொண்டு, ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்ட பக்தர்! ஐயப்ப பக்தர்களைக் கேவலப்படுத்தும் காட்சி அடுத்து அரங்கேறுகிறது.

* ஹிந்துக் கடவுள்கள் என்றால், ஹிந்துக்களின் இயற்கையோடு ஒட்டிய வழிபாடு முதற்கொண்டு கிண்டல் செய்து பகுத்தறிவு பேசுவது, கிறித்துவம் என்று வந்துவிட்டால் புகழ்வது. இதற்கு எதற்கு ஒரு படம்? பேசாமல் ‘எழுப்புதல் கூட்டம்’ ஒன்றில் பேசி வீடியோவாக்கி வெளியிட்டிருக்கலாம்.

* சித்திரகுப்தன் நெற்றியில் பட்டை போட்டிருக்கிறார். அவர் மனிதனாக வரும்போது நாமம் போட்டிருக்கிறார். தெளிவாக பிராமணர் என்று காண்பிக்கிறார்கள். ஏனென்று பார்த்தால் அடுத்த காட்சியிலேயே யமன் ஈவெராவைப் புகழ்கிறார். இந்த பிராமணர் அதை மறுக்கிறார். ஆம், மறுக்கிறார், மரியாதையுடன் மறுக்கிறார், திட்டவில்லை! யமனின் சந்தேகத்தைப் போக்க அதே சித்திரகுப்தன் ஈவெராவின் பெருமைகளை அவிழ்த்துவிடுகிறார். இப்படிப்பட்டவர்களை தன் தந்தையான முதலாம் யமன் ஏன் கொல்கிறார் என்று இந்தப் புதிய யமனே நொந்துகொள்கிறார்.

* அடுத்து அம்பேத்கரைப் பாராட்டுகிறார்கள். அடுத்து சுபாஷ் சந்திர போஸின் சிலையைப் பார்த்துப் புகழ்கிறார்கள். எத்தனை விவரம் பாருங்கள். சுபாஷ் சந்திர போஸைப் புகழும்போது ஒரு வசனம், இவர்தானே உண்மையான தேசத் தந்தை என்று. அதில் உண்மையான என்ற வசனம் ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

* அடுத்து காந்தி சிலையைப் பார்த்து ஜஸ்ட் ஒரு வார்த்தை பாராட்டிச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

* பாஸ்கி என்றொரு நடிகர், சோ-வாக நடிக்கிறார். பாஸ்கிக்கு மண்டைக்கு வெளியே மட்டுமில்லை, உள்ளேயும் ஒன்றும் கிடையாது என்று தெரிகிறது. இவர் இத்தனை நாள் சொல்லிக்கொண்டிருந்தவை எல்லாமே பொய்தானோ என்றும் தோன்றுகிறது. இத்தனைக்கும் இவர் திரைப்படங்களின் விமர்சகர் வேறு. ஒரு படத்தில் யாரை எப்படிக் காண்பிக்கிறார்கள், அதில் நாம் ஏன் நடிக்கிறோம் என்கிற அடிப்படை அறிவுகூட இவருக்கு இல்லை.

* மாமா வேலை பார்த்தே சோ அரசியல் பணி ஆற்றினார் என்றே படத்தில் காட்டுகிறார்கள். தன் வாழ்நாள் முழுக்க திராவிட வெறி அரசியலுக்கு எதிராகப் பேசியவருக்கான மரியாதை இவ்வளவுதான். இதை பாஸ்கியும் அப்படியே நடித்திருக்கிறார் என்பது நமக்குச் சொல்லும் செய்திகள் ஏராளம். இங்கே எல்லாவற்றையும் நிர்ணயிப்பது வாய்ப்பரசியல்தான். உண்மையோ தர்மமோ அல்ல.

* யமன் மாமா வேலை பார்க்கிறார் என்றெல்லாம் வசனம் வருகிறது.

* இதற்கிடையில் இயக்குநர் முத்துக்குமரனுக்கு அரசியல் பகடி செய்ய ஆசையும் வருகிறது. ‘ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலையாம், அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி  கேக்குதாம்’ என்ற வசனம் எனக்கு மட்டும் கேட்டது.

* எவ்வித அறிவும் இன்றி அரசியல் பகடியை எடுப்பது என்பது நம் தமிழ் இயக்குநர்களுக்கே வந்த கலை. மேம்போக்கான வசனம் ஒன்றை ஒற்றைத் தெறிப்பில் சொல்லிவிட்டு, அசப்பில் ஒரு அரசியல்வாதியைப் போன்ற ஒருவரைக் காட்டிவிட்டு, என்னவோ பகடித் திரைப்பட வரிசையில் பெரிய சாதனை செய்துவிட்டது போல இருப்பதே நம் இயக்குநர்களின் பணி. சத்யராஜின் ‘மகா நடிகன்’ தொடங்கி இன்று வரை இதுதான் இவர்களுக்குப் பழக்கம். மிக அரிதாக சில படங்கள் (அமைதிப்படை, புதுப்பேட்டை போன்றவை) வரும். இந்தப் படத்தில் நம் இயக்குநருக்கு எதுவுமே வரவில்லை என்பதால், இந்தப் பகடியும் வரவில்லை என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை.

* ஓ பி எஸ் வருகிறார். மோடியைப் பெயர் சொல்லாமல், அதுவும் ஒரு பொய்ச் செய்தியைச் சொல்லிக் கிண்டல் செய்கிறார்கள். செல்லூர் ராஜுவைக் கிண்டல் செய்கிறார்கள். தமிழக அதிமுக அமைச்சர்களைக் கிண்டல் செய்கிறார்கள். ஒன்றிலும் ஒரு விஷயஞானமும் இல்லை. ஆனால் மிக விவரமாக இயக்குநர் ஜெயலலிதாவும் கருணாநிதியும் சொர்க்கத்தில் இருப்பதாகச் சொல்லி வைக்கிறார்!

* அடுத்து ஆணவக் கொலைக்குள் போகிறார் இயக்குநர்.

* இறுதியில் ஈவெரா, காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் என நால்வரையும் யமன் மீண்டும் உயிர்ப்பித்து அனுப்பும்போது, என்னடா இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இத்தனை பெரிய தண்டனை என்கிற எண்ணம் நமக்கு எழுகிறது.

இத்தனையிலும் நாம் கவனிக்கவேண்டியது, இத்தனை ஹிந்துக் கடவுள்கள் கிண்டல் செய்யப்பட்டபோதும் ஒரே ஒரு கிறித்துவக் கடவுள் கொண்டாடப்பட்டிருப்பதையும், மறந்தும் இஸ்லாம் என்கிற ஒரு வார்த்தைகூடப் படத்தில் வரவில்லை என்பதையுமே. தமிழில் யமனைப் பற்றிய கேவலமான முதல் படம் இதுதான் என்றில்லை. யமனுக்கு யமன் தொடங்கி லக்கிமேன் வரை பல படங்கள். அவை அனைத்திலும் இயக்குநர்களின் முட்டாள்தனம் மட்டுமே வெளிப்பட்டது. யமன் குத்தாட்டத்தை ரசிப்பதாகக் காட்சிகள் வைப்பார்கள். யமனுக்கு மூளையே கிடையாது, முட்டாள் என்று காண்பிப்பார்கள். யமனை நாடகத்தின் ஒரு நகைச்சுவை நடிகரைப் போலக் காண்பிப்பார்கள். இந்தப் படம் அதே அடிப்படையில் ஹிந்து வெறுப்பையும் கிறித்துவ ஈவெரா பிரசாரத்தையும் இணைத்து அடுத்த தளத்துக்குச் சென்றிருக்கிறது. முட்டாள்கள் இயக்குநரோ பாஸ்கியோ யோகி பாபுவோ அல்ல.

நன்றி: ஒரே இந்தியா

Share

Pondicherry Literary Festival 2019

It was a lovely experience at PondyLitFest2019. Well organized, better planned compared to last year, many excellent sessions and had great interactions with many friends and writers. Most of the attendees expressed their concern in so many ways just about how we are going to take our tradition to the next generation. Many many questions were asked again and again in so many ways to express this concern only. Everybody attended had a great urge to protect and hand over our dharma to the future, but puzzled it seems how to achieve it. This fest either might have enlightened them or confused more, whichever is good. 😊 A session on economy (‘Economy: Is $5 Trillion a Mirage?’) registered so many doubts, questions, concerns, criticisms and ideas with Sanjeev Sanyal (Principal Economic Adviser in the Ministry of Finance) which we can never expect to have happened in any other government other than this current BJP government. Arif Muhammad Khan’s session was the best one I would say. Aravindan Neelakandan’s chaired many sessions, he was received a superstar there, I must say all his sessions were very good, in particular the session in which Jataayu and Ganesh participated, ‘Indigenous Traditions: Beyond conservation’. ‘What good, digging up the past?’ session was so informative that I must watch it again to get the whole data submitted there. The past two days were very insightful. Thanks #PLF2019.

Share