Two movies

Adiyos Amigo (M) – பேசி பேசியே சாவடித்துவிட்டார்கள். சூரஜ் வெஞ்சரமூடுவின் ஒரே போன்ற முகபாவமும் நடிப்பும் எரிச்சலூட்டுகின்றன. ஆசிஃப் அலி உயிரைக் கொடுத்து நடித்தாலும் எவ்வளவு நேரம் ஒரே காட்சியை, நகராத திரைக்கதையை மீண்டும் மீண்டும் காண்பது? அலவலாதித்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கும் ஓர் அளவில்லையா! சாலையைச் சலிக்க சலிக்க காட்டுவதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை. எப்படி இதைச் சிலர் புகழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமே.

படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

லப்பர் பந்து – சமீபத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் அபாரமான திரைக்கதை கொண்ட சிறந்த கமர்சியல் படம் இதுவே. பெரிய இயக்குநர்களின் படங்களுக்குரிய கச்சிதம் இதில் இல்லை என்றாலும், அந்த இயக்குநர்களின் ஆரம்பப் படங்களில் இருக்கும் அந்த rawness இந்தப் படத்தில் இருப்பது பெரிய ப்ளஸ். பின்னால் இந்த rawnessஐ இந்த இயக்குநர் தவற விடாமல் இருக்க வேண்டும். படத்தில் மாமியார் மருமகள் உருகும் காட்சி கொஞ்சம் இழுவை. அதை மட்டும் விட்டு விட்டால் மற்ற அனைத்துக் காட்சிகளும் பக்காவான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான் கிரிக்கெட்டில் தனக்குப் போட்டி என்பது அவனுக்குத் தெரியாதா என்ற கேள்வியை மறக்க வைக்கிறது பரபரப்பான திரைக்கதை. 80களின் இசை பின்னணியில் வந்தால் அந்தப் படம் எந்த அளவுக்கு நம்மை கவர்ந்திழுக்கும் என்பதற்கு இந்தப் படம் இன்னும் ஒரு உதாரணம்.

Share

Two Tamil novels

ராஜ வனம் – ராம் தங்கம் எழுதிய சிறு நாவல். கிண்டிலில் வாசித்தேன். காடு, அவன் காட்டை வென்றான், கெடைக்காடு, ஆரண்யக், கானகன் போன்ற நாவல்களைப் படிக்காதவர்களுக்கு இந்த நாவல் காட்டைப் பற்றி ஓர் ஆச்சரியத்தைச் சிறிய அளவில் தரக்கூடும். அந்த நாவல்களை வாசித்தவர்களுக்கு இது இன்னும் ஒரு காட்டைப் பற்றி நாவலாகவே மிஞ்சும். காட்டைப் பற்றிய நாவலுக்கு அபாரமான கற்பனையும் யதார்த்தமான காட்டு வாழ்க்கை அனுபவமும் தேவை. இந்த நாவலில் காட்டைப் பற்றிய இடங்கள் கொஞ்சம் தேங்கினாலும், கூறியதே மீண்டும் மீண்டும் கூறுவதாகப் பட்டாலும், பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் கொஞ்சம் மேலெழுந்து வருகின்றன. இன்னும் ஆழமாக விரிவாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை.

வேசடை – ஏக்நாத்தின் சிறு நாவல். ஏற்கெனவே இவர் எழுதிய கெடைகாடு நாவலைப் படித்திருக்கிறேன். அந்த நாவிலிலும் கதை என்று ஒன்று கிடையாது. வட்டாரம், இடங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றிய விவரணைகளும் அதனூடாகச் செல்லப்படும் சில நிகழ்வுகளுமே கதை. அதே போல் தான் இந்த நாவலும். அந்த நாவலில் இயற்கையான காடு ஒன்றைப் பார்க்க முடிந்தது. இந்த நாவலில் ஒரு சிறிய பற்றுக்கோடாகக் கதை என்ற ஒன்று இருக்கிறது. மற்றபடி பல்வேறு காலங்களில் நிகழும் காலமாற்றம், அதை ஒட்டிய ஒரு கிராமத்து மனிதனின் நினைவுகளுமாகக் கதை நீள்கிறது. கெடைகாடு அளவுக்கு இல்லை என்றாலும், இதை வாசிக்கலாம். இன்னும் ஆழமாக அடர்த்தியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதை மறுக்க முடியாது. நாவலில் வரும் நிகழ்வுகள் எவையுமே புதியதாக இல்லை என்பதும் ஒரு குறை. நெல்லை வட்டார வழக்கு பிடித்தவர்களுக்கு இந்த நாவல் கூடுதலாக ஒட்டிக்கொள்ளக் கூடும்.

Share

Amma

இன்று முருங்கைக்காய் சாம்பார். முருங்கைக்காயைப் பிளந்து அதில் ஒவ்வொரு வரியாகச் சதையை வழித்து எடுத்து ஒவ்வொரு உருண்டை மேலேயும் அம்மா வைப்பாள். எப்போதும் கைதுத்து தருவதே அம்மாவின் வழக்கம். இருக்கும் முருங்கைக்காயைக் கடைசி உருண்டை வரை வழித்து விழுதை வைத்துக் கொண்டே இருப்பாள். அம்மா பார்த்து பார்த்து எங்களை வளர்த்தாள். இன்று முருங்கைக்காய் சாப்பிடும்போது அம்மாவின் நினைவு வந்து கண்ணீர் முட்டிவிட்டது.

Share

Ragu Thatha Tamil movie review

ரகு தாதா – ஹிந்தி எதிர்ப்பில் சொந்தச் செலவில் சூனியம்.

படம் இடைவேளை வரை சுமார். அதன் பிறகு அறுவை. படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால், நடிகர்களின் நடிப்பு. அனைவருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் அண்ணன் மற்றும் அண்ணியின் நடிப்பு குறிப்பிடவேண்டியது. படத்தின் மேக்கிங் நன்றாக இருக்கிறது. இயக்குநர் அரசியல் ஜல்லியைக் கைவிட்டால் பெரிய அளவில் வர வாய்ப்பிருக்கிறது. படத்துக்கு ரகு தாதா என்று பெயர் வைத்திருப்பது சிறப்பு.

ஹிந்தி எதிர்ப்பை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் கட்சிகள் ஜல்லி அடிக்கின்றனவோ அதே போல் இயக்குநரும் அடித்த ஜல்லி கொஞ்ச நஞ்சமல்ல. ஹிந்தி ஒழிக என்று கத்துகிறார்கள். ஆனால் கடைசியில் எங்கே ஹிந்தி ஒழிகன்னு நாங்க சொன்னோம், ஹிந்தித் திணிப்பு ஒழிகன்னுதானே சொன்னோம் என்று சொல்லி காமெடி செய்கிறார்கள்.

ஆனாலும் இயக்குநர் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளத் தவறவில்லை.

பெரிய கொள்கைவாதியாக ஹீரோவைக் காண்பிக்கும் இயக்குநர், பெரிய அரசியல் பிரசாரப் படம் போல என்று நினைத்துப் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தருகிறார். எப்படி கொள்கைவாதிகள் வாய் கிழியப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்கள் பெண்ணியத்தின் எதிரிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் இருப்பார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார். இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் என்று என்னை சந்தோஷப்பட வைத்துவிட்டார். அதிலும் அந்த ஹீரோ ஈவெராவை அடிக்கடி மேற்கோள் காட்டுபவர். மேற்கோள் மட்டும் காட்டுபவர்.

இதை இயக்குநர் ஹீரோவுடன் மட்டும் நிறுத்தவில்லை. ஹீரோயினையும் இந்தச் சிப்பிக்குள் அடைத்துவிட்டார். அத்தனை கோஷம் போட்டு ஹிந்திக்குத் தார் பூசும் பெண், தனக்கு ஒரு தேவை என்று வந்ததும் ஹிந்தி கற்கத் தயாராகிறாள். இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் மொமண்ட் 2.

ஹிந்தி தன் புத்திக்கு ஒத்துவரவில்லை என்பதும் அந்தப் பெண் கொள்கைச் சிங்கம் ஊழலுக்குத் தயாராகிறது. பேப்பரை மாற்றி ஹிந்தித் தேர்வில் ஜெயிக்கிறது. இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் மொமண்ட் 3.

படத்தில் ஹிந்தி பேசும் அனைவரும் அத்தனை நல்லவர்கள். யதார்த்தவாதிகள். இ.நா.சொ. மொமெண்ட் 4 மற்றும் சொந்தச் செலவில் சூனியம் மொமெண்ட் 2.

ஹிந்திக்காரன் தனக்குத் தேவை என்றால் சுத்தமாகத் தமிழைக் கற்றுப் பேசுகிறான். அவனுக்குத் தமிழ் மேல் எந்த வெறுப்பும் இல்லை. எல்லா மொழிகள் மேலும் அவனுக்குக் காதல் இருக்கிறது. இ.நா.சொ. மொமெண்ட் 4.

கதாநாயகி கல்கத்தா போக முடிவெடுப்பதன் காரணம், பப்ளிஷர் அங்கதான் இருக்காங்களாம். இவள் எழுதுவது தமிழில். அங்கே என்ன பதிப்பாளர் இருக்கிறார்? கொடுமை. கதாநாயகி இன்னொன்றும் சொல்கிறாள். இவளது எழுத்து இந்தியா முழுமைக்கும் பரவவேண்டுமாம். அப்ப ஹிந்தி படி! இ.நா.சொ. மொமெண்ட் 5.

படத்தில் இரண்டு பிராமண கதாபாத்திரங்கள். ஒரு பிராமண கேரக்டர் கதாநாயகியின் தோழி. அவள் மேல் குறையே சொல்ல முடியாது. அத்தனை நல்லவள்! இன்னொரு பிராமண கதாபாத்திரம் ஹிந்தி சபாவின் ஆசிரியர். அவர் மேலும் குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர் ஹிந்தித் திணிப்பை எங்கேயும் செய்யவில்லை. ஹிந்தி சொல்லித் தருகிறார், அவ்வளவுதான். ஆனால் ஹீரோயின் தமிழ் வெறிகொண்டு அந்த இடத்தை அடித்து நொறுக்குகிறாள். ஏன், அந்த இடத்தைப் பூட்டுப் போட்டால் மட்டும் போதாதா? ஹிந்தி ஒழிப்பிற்கு முன்னணியில் நிற்கும் கதாநாயகியின் தாத்தா தன் பேத்திக்குத் திருமணம் என்று வரவும், சபா நடக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். என்ன அருமையான திருப்பம்!

உண்மையில் ஹிந்தித் திணிப்பைச் செய்வது வங்கி. அங்கே சம்பளத்துக்காக வாய் பொத்தி, ஹிந்தித் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகி, ரௌடித்தனமெல்லாம் செய்வதில்லை. வங்கியை அடித்து உடைப்பதில்லை. வேலையை விடுகிறேன் என்று வாய் தவறிக் கூட சொல்வதில்லை. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கைப் பிடிப்பு என்றால் சும்மாவா!

இது ஹிந்தி எதிர்ப்புத் திரைப்படம் என்று மக்களை நம்ப வைத்தது பற்றிப் புகாரில்லை. ஆனால் யாரோ இயக்குநரையும் நம்ப வைத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பதாகச் சொல்லி, கொள்கை அரசியல் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றுபவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் திரைப்படம். 🙂

Share

Chattambi (M)

மகாநதி திரைப்படத்தில் கமலை ஆசை காட்டி மோசம் செய்வது ஒரு மலையாளி. அதில் நடித்ததும் ஒரு மலையாளி. கொச்சின் ஹனீஃபா.

சட்டம்பி என்றொரு மலையாளத் திரைப்படம். 2022ல் வெளியான படத்தை நேற்றுதான் பார்த்தேன். சுமாரான படம்.  நாம் எப்படி மலையாளிகளைக் காண்பிக்கிறோமோ அதே போல் தமிழர்களை பாண்டி என்று அழைக்கும் இன்னுமொரு திரைப்படம். இதில் ஹீரோ மட்டும் ஒரு தமிழனை நம்புகிறான். ஆனால் ஹீரோவின் எதிரி ஹீரோவிடம் தமிழனை நம்புவதற்குப் பதிலாக (கெட்டவார்த்தை) என்று சொல்கிறான். அதையும் மீறி ஹீரோ தமிழனை நம்புகிறான். கடைசிக் காட்சியில் அந்தத் தமிழன் ஹீரோவைப் பணத்துக்காக நயவஞ்சமாக, ஹீரோவின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்கிறான். அந்தத் தமிழன் பாத்திரத்தில் நடித்திருப்பது தமிழ் நடிகர் சோம சுந்தரம். மிக நல்ல நடிகர். நடிப்புக்கு மொழி அவசியமே இல்லை என்று அவர் எப்போதும் உரக்கச் சொல்வார் என்று நம்புகிறேன், ஜி என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலா வருது என்று சொல்லி நடித்ததும் நடிப்பு மட்டுமே என்று சொல்வார் என்று நம்புவதைப் போல.

Share

ஜமா

ஜமா – இத்தனை தீவிரமான படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பல குறைகள் இருக்கின்றன. முதலில் நிறைகளைப் பார்த்துவிடலாம்.

இயக்குநருக்கு ஒரு தீவிரமான திரைப்படம் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது. தன் கதையின் மீதும் காட்சிமொழியின் மீது நம்பிக்கை இருக்கிறது. பெரிய அளவில் முத்திரை பதிப்பதற்கான அழுத்தமான தடயங்கள் தெரிகின்றன. சாதிக்க வாழ்த்துகள்.

இந்தக் கதை அவதாரம் திரைப்படத்தை நினைவூட்டுவதாகச் சிலர் எழுதி இருந்தார்கள். என்னளவில், இல்லை என்றே சொல்வேன். பெண் வேடம் கட்டும் ஒற்றை இழையைத் தவிர, இரண்டுக்கும் தொடர்பே இல்லை. இன்னும் சொல்லப் போனால், எடுத்துக்கொண்ட களம் என்ற வகையில், அவதாரத்தைவிட இத்திரைப்படம் எள்ளளவு கூட அங்கும் இங்கும் அலைபாயவில்லை. அவதாரம் படத்தில் இருந்தது போன்ற, கொலை, கற்பழிப்புக் காட்சிகள் இதில் இல்லை.

இளையராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் அபாரம். ஆனால் கூத்துக்கு ஏற்ற பாடல் ஒன்று கூட இல்லை. அவதாரம் போன்ற ஃபீல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி இயக்குநர் யோசித்துவிட்டாரோ என்னவோ. கடைசியில் கதாநாயகன் தலையில் அம்மனைச் சுமந்து வரும் காட்சியில் ஒரு பாடல் வைத்திருக்கலாம்.

நம் மண்ணின் மரபான பக்தியை இத்திரைப்படம் வெகு சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. இன்றைய இயக்குநர்கள் பக்தியைக் காட்டினால் அது ஹிந்து மதத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகிவிடும் என்ற போலி முற்போக்குத்துவத்தில் மயங்கிக் கிடக்க, இத்திரைப்படம் அவ்வகைக்குள் சிக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.

இன்னொரு முக்கியமான ஆச்சரியம், பல காட்சிகள் படு யதார்த்தம். நம் கிராமத்தில் நேரில் நடப்பது போன்ற ஓர் உணர்வு. இத்தனைக்கும் நடிப்பவர்கள் அத்தனை பேரும் முகம் தெரியாத நடிகர்கள். அசத்திவிட்டார்கள். உறுத்திக்கொண்டு தெரியும் சென்னை வட்டார வழக்கு போல் அல்லாது, இயல்பான, தேவையான அளவுக்கான வட்டார வழக்கு கூடுதல் பலம்.

ஆனாலும் ஏன் ஒரு திரைப்படமாக இது முழு அனுபவத்தைத் தரவில்லை? அற்புதமான பல நீண்ட காட்சிகளுக்கு இணையான அமெச்சூர் காட்சிகளும் இருப்பது. ஒரே இடத்தில் கதை சுற்றி சுற்றி வருவது போதாது என்று, ஒரே ரீதியிலான வசனங்கள். அதுவும் குறிப்பாக முதல் முக்கால் மணி நேரம் ரொம்பவே இவை அதிகம்.

இது கதை காதல் கதையா, ஜமா உரிமைக் கதையா என்கிற தேவையற்ற குழப்பம் இன்னொரு மைனஸ். ஜமாதான் கதை என்றான பிறகு, கதை கொள்ளும் வேகம் முன்பகுதியில் இல்லை.

ஹீரோவாக வரும் நடிகர் ( இயக்குநரே நடித்திருக்கிறார்) உயிரைக் கொடுத்து நடிக்கிறார் என்றாலும், பல காட்சிகளில் ஏனோ ஒட்டவில்லை. குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்று ஆகிவிட்டது. இது மிகப்பெரிய சறுக்கல்.

சேத்தன் மிக அருமையாக நடித்திருக்கிறார். ஆனாலும் நாசரோ பிரகாஷ்ராஜோ நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல் ஹீரோவின் அப்பா கேரக்டருக்கும் இன்னொரு நல்ல நடிகரை தேர்ந்திருக்கவேண்டும். இந்த மூன்று விஷயத்தில் நடந்ததுதான் படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு போகாமல் கைவிட்டு விட்டது.

துணை நடிகர்களின் இயல்பான நடிப்பு இத்திரைப்படத்துக்கு பெரிய பலம். அவர்களே இப்படத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இத்திரைப்படத்தை அவசியம் பாருங்கள்.

இயக்குநருக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

பிரைமில் கிடைக்கிறது.

Share

Two movies

Little hearts (M) – சுமாரான படம். ஷேன் நிகம்-க்காகப் பார்த்தேன். சிறிய புன்னகை ஆங்காங்கே வருகிறது என்றாலும் மொத்தத்தில் அறுவை.

கோடி (K) – பார்க்கலாம். மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படம். கொஞ்சம் இழுவையால் நீர்த்துவிட்டது. என்னைப் போல் தனஞ்செய் பிடிக்கும் என்பவர்கள் பார்க்கலாம்.

இரண்டும் ப்ரைமில் கிடைக்கிறது.

Share

வாழை

வாழை – ஒரே வார்த்தையில் செல்வதென்றால் வாழ்க்கை.

Spoilers ahead.

நல்ல திரைப்படம். திரைக்கதையில் நம்மை இணைக்க சிறுவனின் வாழ்க்கையையும் அவனது நட்பையும் சித்தரித்த விதம் அருமை. இந்த காட்சிகளில் இருந்துதான் நாம் திரைப்படத்துக்குள் நுழைகிறோம். அங்கங்கே கதிர் அருவாள் கம்யூனிசம் என்று ஊறுகாய் போல் காட்டினாலும் படம் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையின் வலியை விரிவாகப் பேசுகிறது. நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் எல்லை அறிந்து சிறப்பாக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் இரண்டு சிறுவர்கள் அமர்க்களம் செய்திருக்கிறார்கள். கமல் ரஜினி பற்றிய அளவான வசனங்கள் அள்ளிக்கொண்டு போகின்றன.

குறைகளைப் பேசும் நேரம் இதுவல்ல என்றாலும் 90களின் விருதுத் திரைப்பட சாயலைக் கொஞ்சம் தவிர்த்து இருந்திருக்கலாம். கடைசிக் காட்சியில் வரும் அதீத உணர்ச்சியையும் கொஞ்சம் மட்டுப்படுத்தி இருக்கலாம். எதிர்பாராத திடுக்கிடலுக்கு ஏற்ற இதுவும் ஒருவகை யதார்த்தம்தானே என்றால் அதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மறுப்பதற்கில்லை. ஆனால் உச்ச காட்சிக்குப் பின்னர் அந்தச் சிறுவன் சாப்பிட அமர்வது கதையைத் தாண்டிப் பயணிப்பது போல் எனக்குத் தனிப்பட்ட அளவில் தோன்றியது.

மணிகண்டனின் திரைப்பட‌ வகையில் மாரி செல்வராஜின் படம் இது.

இப்படத்தில் இசைக்கு காது இளையராஜாவுக்காக ஏங்குகிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல் தேவா.‌ ஆனாலும் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

பூங்கொடிதான் பூத்ததம்மா பாடலின் தொடக்க இசை ஒலித்தபோது எனக்கு இறக்கை முளைத்தது நிஜம். இந்த அவஸ்தையை இயக்குநரும் அனுபவித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

திருநெல்வேலி வட்டாரத் தமிழைக் கொலை செய்யாமல் நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக திருநெல்வேலி கிராம வட்டார வழக்கைக் கச்சிதமாக அந்த இரு சிறுவர்களும் இன்னும் முகம் தெரியாத பல நடிகர்களும் பேசுகிறார்கள். கதாநாயக நாயகிகள் வழக்கம்போல் சில இடங்களில் சரியாக திருநெல்வேலித் தமிழையும், சில இடங்களில் வாய்க்கு வந்த தமிழையும் பேசிக் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்றாலும், முழுமையான அளவில் திருநெல்வேலி வட்டாரத் தமிழ் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலிக்கே உரிய வட்டார வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் சிறப்பு.

தங்கலான் எனும் அதீத‌ நடிப்புச் செயற்கைக் காவியம் தந்த ரணத்துக்குக் கொஞ்சம் களிம்பு பூசி இருக்கிறது இந்த யதார்த்தம்.

Share