Archive for திரை

Theatres of Tirunelveli in 1990s

தாமிரபரணி பாயும் – ஓடும் அல்ல – நிஜமாகவே பாயும் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் கூனியூர். ‘கூனியூருக்குப் போகணும்னா குனிஞ்சிக்கிட்டே போகணுமா’ என்னும் பழமொழியில் இந்த ஊரின் பேரை நீங்கள் கேட்டிருக்கலாம். எப்படியும் பல இடங்களில் இந்தப் பெயரில் ஊர்கள் நிச்சயம் இருக்கும். இது சேரன்மாதேவியின் கூனியூர்.

சேர்மாதேவியில் இருந்து பொடிநடையாக நடந்தால் அரைமணி நேரத்தில் கூனியூருக்குப் போய்விடலாம். அப்படித்தான் நடப்போம். ஓரளவுக்குப் பெரிய கிராமமான சேரன்மாதேவிக்கு இல்லாத ஒரு பெருமை கூனியூருக்கு வந்துவிட்டிருந்தது. டூரிங் டாக்கீஸ்.

அந்த தியேட்டரின் பெயர் கூட நினைவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டால் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் அந்தச் சாலையில் நடக்கும். ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ பாடல் கேட்டுவிட்டால், அத்தனை கூட்டமும், ஆரம்பிச்சிட்டான் அரம்பிச்சிட்டான் என்று வெரசலாக நடக்கத் தொடங்கும். ஆம், ‘டிக்கெட் கொடுக்கப் போகிறோம்’ என்பதற்கான சமிக்ஞையே அந்தப் பாடல்.
கூனியூரில் மூன்று நாளைக்கு ஒரு படம் மாற்றிவிடுவான். ஒரு வாரம் ஒரு படம் ஓடிவிட்டால் அது வெள்ளிவிழா திரைப்படம். சிவாஜி, எம்ஜியாரெல்லாம் வரிசையாக வந்து கல்லா கட்டுவார்கள். புதிய கலர்ப் படம் வந்துவிட்டால் சேர்மாதேவி, கூனியூர், வீரவநல்லூர் என எல்லா ஊர்களும் வண்ணம் கொண்டு விடும். திரைப்படம் ஓர் அனுபவம் என்றால், திரைப்படத்துக்குப் போய்விட்டு வருவதே ஓர் அனுபவம்.

அனைவரும் ஒரே சாலையில் ஒன்றாக நடந்துவந்தாலும், காதில் ‘விநாயகன்’ விழுந்தவுடன், யாருக்கு டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்பதில் ஒரு வேகம் இருக்கும். மண் தரை ஏழைகளுக்கு. உடைந்து போன மர பெஞ்சு பணக்காரர்களுக்கு. டிக்கெட் வித்தியாசம் ஐம்பது பைசா இருக்கும்.

இடைவேளை ஒரு தடவைதான் என்றாலும், கார்பன் தேய்ந்துவிட்டால், கூடுதலாக இரண்டு இடைவேளைகள் வரும். அந்த சிறிய இடைவேளைகளில், கண்ணாடி போட்டிருக்கும் டின் டப்பாக்களில் வைத்து முறுக்கு விற்பார்கள். சோள மாவு முறுக்கின் மணம் இப்போதும் உங்கள் நாக்கில் எட்டிப் பார்த்தால், நீங்களும் ஏதோ ஒரு கிராமத்தில் படம் பார்த்திருப்பீர்கள் என்றே அர்த்தம்.

அந்த டூரிங் தியேட்டருக்கு லைசன்ஸ் மூன்று வருடங்கள்தான் என்ற செய்தி ஊரெங்கும் நெருப்புப் போல பரவியது. எப்படியோ இன்னொரு மூன்று வருடங்களுக்கு லைசன்ஸ் வாங்கிவிட்டார் அதன் உரிமையாளர்.

வாரத்துக்கு இரண்டு படங்கள் எனப் பார்த்துக் குவித்த படங்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியாது. வேறு பொழுது போக்குகளே இல்லாத நிலையில், ஊரில் இருந்த ஒரே டூரிங் தியேட்டர் மட்டுமே மன அமைதி பெற ஒரே வழி.
டூரிங் தியேட்டர் என்பதால் மாலைக் காட்சியும் இரவுக் காட்சியும் மட்டுமே. மாலைக் காட்சி, இரவு கவியும்போதுதான் தொடங்கும். மூன்று இடைவேளைகள் விட்டு இரவு பத்து மணிக்குத்தான் முடியும். ஆதிபராசக்தி படத்திற்கும், சம்பூர்ண ராமாயணம் படத்திற்கும் கூடுதலாக ஒரு இடைவேளை என்று ஊரெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டோம்.

இந்த டூரிங் தியேட்டர் வருவதற்கு முன்பு சேரன்மகாதேவிக்கார்களுக்கு வீரவநல்லூரே கதி. இல்லையென்றால் திருநெல்வேலிக்குப் போகவேண்டும். அது செலவு பிடிக்கும் வேலை. ஆனாலும் இதையே ஒரு திருவிழாக மாற்றிவிடுவோம். அதிகாலை எழுந்து குளித்து காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதியச் சாப்பாட்டையும் கட்டிக்கொண்டு காலைக் காட்சிக்கு திருநெல்வேலிக்குப் போய்விடுவோம். பாப்புலர், ராயல், ரத்னா, பார்வதி, செண்ட்ரல், சிவசக்தி அத்தனை தியேட்டர்களும் இரண்டு கிலோமீட்டர்களுக்கு உள்ளாகத்தான். காலைக்காட்சி பார்த்துவிட்டு, அடுத்த தியேட்டருக்கு நடந்தே போய், அவன் டிக்கட் கொடுப்பதற்குள் அந்த தியேட்டரிலேயே ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டு நாம் கொண்டு போன சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, படம் பார்த்துவிட்டு, அங்கேயே பஸ் பிடித்தால் இரவு 7 மணிக்கு சேர்மாதேவிக்கு ஹாயாக வந்துவிடலாம். ஒருநாளில் இரண்டு படங்கள், அடுத்தடுத்த காட்சியில்!

அதிலும் ரத்னா தியேட்டரும் பார்வதி தியேட்டரும் எதிரெதிர் வீட்டுக்காரர்கள். அப்படி இரண்டு படம் பார்ப்பதென்றால் மிகவும் எளிது என்பதால், பெரும்பாலும் அப்படி இருக்கும்படிப் பார்த்துக்கொள்வோம்.

இந்த வசதி இல்லாதவர்களுக்கு வீரவநல்லூரே கதி, கூனியூர் டூரிங் தியேட்டர் வரும் வரை. வீரவநல்லூருக்குள் நுழைவதற்கு முன்பாகவே மெய்ன்ரோட்டில் காந்திமதி தியேட்டர் இருந்தது. ஊருக்குள் சண்முகா தியேட்டர். இரண்டிலும் மூன்று நாளைக்கு ஒரு தடவை படம் மாற்றுவார்கள். எந்த நாளில் படம் மாற்றுவது என்பதில் அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. காந்திமதியில் போட்ட படம் சண்முகாவில் வராது. விதிவிலக்காகச் சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் மட்டும் வரும். அப்படி காந்திமதியிலும் வந்து சண்முகாவிலும் வந்த படம், புதுக்கவிதை. இரண்டு தியேட்டரிலும் பார்த்தவர்கள் அதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள்.

கூனியூர் டூரிங் தியேட்டர் வரவும் சேர்மாதேவிக்காரர்கள் வீரவநல்லூர்ப் பக்கம் ஒதுங்குவதைக் கைவிட்டுவிட, சண்முகா தியேட்டர் நலிந்து போனது. ஒரு கட்டத்தில் கூனியூர் தியேட்டரின் லைசன்ஸும் முடிய, சேரன்மகாதேவியிலேயே ஒரு தியேட்டர் எட்டிப் பார்த்தது. டூரிங் தியேட்டர் அல்ல, சிமிண்ட் கட்டட தியேட்டர்!

ஊருக்குள் போலிஸ் ஸ்டேஷன் கிடையாது, தியேட்டர் கிடையாது என்னும் பெருமைகள் பறந்து போக, ஊருக்குள்ள தியேட்டரே இருக்கு என்கிற புதிய பெருமை சேரன்மகாதேவிக்கு ஒட்டிக்கொண்டது. ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பு சேரன்மகாதேவியில் நடந்தபோது ஊரில் தியேட்டர் இல்லை, அந்தப் படம் வரும்போதும் தியேட்டர் இல்லை, தியேட்டர் வந்த பின்பு அந்தப் படம் அங்கே திரையிடப்பட்டபோது, நம்ம ஊர்ல எடுத்த படம் என்று மக்கள் விழுந்து விழுந்து பார்த்தார்கள். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பு எல்லாம் கடைசிச் சொட்டு உயிர் இருக்கும் வரை எனக்கு மறக்காது.

பின்னர் நான் கல்லுப்பட்டிக்குப் போய்விட்டிருந்தேன். அங்கே ஒரு தியேட்டர் இருந்தது, லட்சுமி தியேட்டர். பதினெட்டுப் பட்டி கிராமத்துக்கும் ஒரே சின்ன தியேட்டர் லட்சுமி தியேட்டர். பேரையூரில் ஒரு தியேட்டர் இருந்த நினைவு. நான் போனதில்லை. அல்லது அந்த தியேட்டர் அப்போது இல்லை. லட்சுமி தியேட்டருக்கு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, டிராக்டரில் கும்பலாக ஏறிக்கொண்டு படம் பார்க்க வருவார்கள்.

ரஜினி படம் என்றால் திருவிழா என்று அர்த்தம். எந்தப் படம் வந்தாலும் கூட்டம் வரும். விக்ரம் படம் பார்க்க பெருங்கூட்டம் வரிசையில் நின்றது இப்போதும் நினைவில் இருக்கிறது. டிக்கெட் விலை அறுபது பைசாவோ என்னவோ. அதற்கு மேல் பத்து பைசா கூடச் செலவழிக்காமல் பெண்கள் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’ இருபத்து ஐந்து நாள்களுக்கு மேல் ஓடி சாதனை கண்டது.

எங்கேயும் பார்க்க முடியாத ‘பொம்மை’ போன்ற திரைப்படங்களை எல்லாம் மதியக் காட்சியாகப் போடுவார்கள். தூர்தர்ஷன் திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்ததும், பழைய சிவாஜி எம்ஜியார் படங்களைப் பார்க்க மக்கள் வருவது குறைய ஆரம்பித்தது. தூர்தர்ஷனில் வருவதற்கு முன்பாகத் திரைப்படங்களைத் திரையிடவேண்டிய கட்டாயம் வந்தது. இதனால் தொடர்ந்து புதிய படங்கள் (படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்தும் எங்களுக்கு அவை புதுப்படங்கள்தான்!) பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

கல்லுப்பட்டியில் இருந்து மதுரை அழகரடிக்குப் போனேன். அழகரடியில் எங்கள் தெருவில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருந்த தியேட்டர் பரமேஸ்வரி தியேட்டர். டிக்கெட் விலை ரூ 1.10. ஒன்னு பத்து தாம்மா என்று கேட்டாலே அது படம் பார்க்க என்று அர்த்தம். ஒன்னு அறுபது என்றால் ஹை க்ளாஸ். அங்கே ஒரு ரூபாய்க்கு ஒரு தேங்காய் பப்ஸ் விற்பார்கள். அது மிகவும் பிரசித்தம். அங்கே பார்த்துத் தள்ளிய படங்களுக்குக் கணக்கே இல்லை.

இரண்டு தெரு தள்ளி இருந்த தியேட்டர் என்பதால் சாவதானமாக நடந்து போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம். காலையில் சாம்பார் செய்துவிட்டு, பொடி நடையாக தியேட்டருக்குப் போய் காலைக்காட்சி பார்த்துவிட்டு மதியம் வந்து உலை வைத்து மூன்று மணிக்குச் சாப்பிடுவது பெண்களின் வழக்கமாக இருந்தது. இளையராஜாவின் பாடல்கள் திரும்பும் இடமெல்லாம் கேட்கும். தொடர்ந்து படங்கள் வந்துகொண்டே இருக்கும். இப்போது போல் அல்லாமல், அதிகம் அரசியல், மண்டை பிளக்கும் ஆய்வு என எதுவும் இருக்காது. படம் பார்க்கப் போவதே ஜாலிக்கு என்று இருந்த நேரம். ‘கேளடி கண்மணி’ போல எப்போதாவது சீரியஸ் படங்கள் வரும். அவையும் ஹிட்டடிக்கும்.

பரமேஸ்வரி தியேட்டரை இன்னொரு காரணத்துக்காகவும் மறக்கமுடியாது. நடிகர் சிவாஜியின் மகள் திருமணம் அந்தத் திரையரங்கில்தான் நடந்தது. யார் வேண்டுமானாலும் போகலாம், சாப்பிடலாம் என்று கேள்விப்பட்டு, பள்ளி நண்பர்கள் அனைவரும் பரமேஸ்வரி தியேட்டர் பக்கம் போய் எட்டிப் பார்த்தோம். உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து போனோம். அங்கே வெளியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிகளில், நேரலையாக தியேட்டருக்குள் இருந்த சிவாஜியைப் பார்த்துவிட்டுச் சாப்பிடாலேயே பள்ளிக்கு ஓடினோம்.

என் வாழ்க்கையின் பொற்காலம் என்றால் இங்கே இருந்த இந்த மூன்று வருடங்களைத்தான் சொல்வேன். மனம் இரண்டாகப் பிரிந்து கிடந்த நேரம். ஒரு பக்கம் முழுக்க படிப்பு, இன்னொரு பக்கம் முழுக்க திரைப்படங்கள். இப்படித்தான் பத்தாவது முடித்து ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் வாங்கி மீண்டும் நெல்லைக்குப் போனேன்.

நெல்லையே தியேட்டர்களின் சொர்க்கம் என்பதை என் பதின்ம வயதில் புரிந்துகொண்ட போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. மதுரை, கல்லுப்பட்டி, வீரவநல்லூர், சேரன்மகாதேவியில் எல்லாம் நடந்து போகும் தூரத்தில் ஒரே ஒரு தியேட்டர். ஆனால் நெல்லையில் ஆறு தியேட்டர்கள்! அப்போதுதான் புதியதாக அருணகிரி தியேட்டரைத் திறந்திருந்தார்கள்.

அங்கே சின்னதம்பி 175 நாளாக ஓடியது. நான் பத்தாவது படிக்கும்போது வெளியான படம், 11ம் வகுப்புப் படிக்கும்போதும் ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே பார்த்த படத்தை மீண்டும் பார்க்கவேண்டுமா என்று தோன்றினாலும், அப்போதைக்குப் பெரும் புகழ் பெற்றிருந்த அந்தப் புதிய ‘அருணகிரி’யைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ‘சின்னத்தம்பி’க்கு மீண்டும் போனேன். படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு. ஊர் முழுக்க இதே பேச்சுதான்.

அன்று அந்தக் காட்சிக்கு வந்தவர்களுக்கு மட்டும் ஒரு டோக்கன் தரப்பட்டு மறுநாள் மீண்டும் இலவசக் காட்சி திரையிடப்பட்டது. ஊர் இப்போது இரண்டு மடங்காகப் பேசியது, ‘சே… நமக்கு இப்படி ஒரு பிரைஸ் அடிக்காம போயிட்டே!’ ஆம், நான் தியேட்டரில் ‘சின்னத்தம்பி’யை ஒன்றரை தடவை பார்த்திருக்கிறேன்!

திருநெல்வேலிதான் தியேட்டர்களின் சொர்க்கம். வீட்டுக்கு அப்பால் பெண்களின் ஒரே புகலிடம் தியேட்டர்களே. 11.30க்குக் காலைக் காட்சி. 11.25க்குத்தான் பவுடர் அப்புவார்கள் பெண்கள். 11.30க்குத்தான் டிக்கெட் எடுப்பார்கள். தியேட்டருக்குளிருந்து கேட்கும், ‘மனைவி வீட்டின் மருமகளானாள்’.

ஆரம்கேவியின் உலகப் புகழ் பெற்ற விளம்பரம். ‘சே ரெண்டு நிமிஷம் முன்னாடி வந்திருந்தா இந்த விளம்பரத்தை பாத்துருக்கலாமே’. நிஜமாகவே வருத்தப்படுவார்கள். அந்த விளம்பரத்தின் நாதஸ்வர ஓசைக்குக் கைத்தட்டு விழுவதை இப்போதும் என் காதில் கேட்கிறேன். புல்லரிக்கிறது.

தியேட்டரே வாழ்வாக, வாழ்வே தியேட்டராக திருநெல்வேலி வாழ்ந்தது. ஐம்பதுகளில், அறுபதுகளில் தொடங்கிய அப்பழக்கம் தொண்ணூறுகளின் இறுதி வரை இருந்தது. சிவாஜி கணேசன் ஒரு வார இடைவெளியில் நான்கு திரைப்படங்களை வெளியிட, நெல்லையின் பத்து தியேட்டர்களில் நான்கு தியேட்டர்களின் சிவாஜி கணேசன் படம் ஓட, எம்ஜியார் ரசிகர்கள் காண்டானதெல்லாம் வரலாறு. எத்தனை முறை படகோட்டி படம் போட்டாலும் கூட்டம் அம்முதுப்பா என்று சிவாஜி ரசிகர்கள் எரிச்சலானதும் வரலாறுதான்.

செண்ட்ரல் தியேட்டர்

ரஜினி புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், இது பாதி உண்மைதான். திரையரங்க வரலாற்றில் திருநெல்வேலி இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. வேறெங்கும் பார்க்கவே முடியாத வினோதங்களை திருநெல்வேலி செய்து காண்பித்தது.

ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

ஏதேனும் ஒரு காட்சி, ஹீரோயிஸக் காட்சி வந்துவிட்டால், வெள்ளித்திரையைச் சுற்றி பளபள பல்புகள் மின்னும். சில சமயம் முழுப் பாடலுக்கும் வெள்ளித்திரை பல்புகள் மட்டுமல்ல, தியேட்டர் முழுக்க இருக்கும் பல்புகளும் மின்னும். ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலுக்கு தியேட்டரின் பல்புகள் அப்படி மின்னின. நான் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ‘செம்பருத்தி’ படத்தில், ஒரு பைக்கைத் தாண்டி பிரசாந்த் குதிக்கும் காட்சியில், திரையைச் சுற்றி பல்புகள் மின்ன, அது அந்தக் காட்சியை விட அழகாக இருந்தது. ‘வசந்த காலப் பறவை’ படத்தில் நீதிமன்றக் காட்சியில் பல்பு மின்னியது நினைவிருக்கிறது. ‘கறவை மாடு மூனு காளை மாடு ஒன்னு’ பாடலுக்கு ஒட்டுமொத்த தியேட்டரும் டான்ஸ் ஆட, கூடவே வெள்ளித்திரை பல்புகளும் தியேட்டர் பல்புகளும் ஆடின. ஏ.ஆர்.ரஹ்மானின் புயலில் ‘முக்காலா’ பாட்டுக்கும் ‘ஊர்வசி’ பாட்டுக்கும் ‘பேட்ட ராப்’புக்கும் தியேட்டர் இடிந்து விழாமல் இருந்தது ஆச்சரியம்தான்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து வேலை பார்த்த நண்பன் ஒருத்தன் என்னுடன் திருநெல்வேலியில் படம் பார்க்க வந்து, இந்த பல்புகளின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘சை, சரியான பட்டிக்காடு’ என்றான். அப்போதுதான், ‘ஓ… இதெல்லாம் பிடிக்காத ஒரு கூட்டமும் இருக்கா’ என்று எனக்கு உறைத்தது. அப்படி ரத்தத்தோடு எங்களுக்கு ஊட்டி வளர்த்து வைத்திருந்தது திருநெல்வேலி. இப்போதும் கூட நெல்லையில் ஏதேனும் ஒரு தியேட்டரில் ஒரு முக்கியமான காட்சியில் பல்புகள் மின்னிக் கொண்டிருக்கக் கூடும்.

ரஜினியின் ‘அண்ணாமலை’ மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளி வந்தது. இளையராஜாவின் இசை இல்லாமல் தேவாவின் இசையில் வெளிவந்த படம் என்பதால் கொஞ்சம் எதிர்மறைப் பேச்சுகள் இருந்தன. ரஜினி வெளிப்படையாகச் சொன்னார், ‘இந்தப் படம் என் படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்று.

அது உண்மையானது. ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த மோதலை ஒட்டி திரைப்படத்தின் சில வசனங்கள் புரிந்துகொள்ளப்பட்டன. எனவே ரஜினியே எதிர்பாராத ஒரு வெற்றி அண்ணாமலைக்குக் கிடைத்தது. அண்ணாமலை திருநெல்வேலி திரை வரலாற்றில் இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.

பூர்ணகலாவில் வெளியான இத்திரைப்படத்துக்கு வந்த கூட்டம், மேம்பாலத்தையும் தாண்டி இரண்டு கிலோமீட்டருக்கு நீண்டது. ஜெயலலிதாவின் போலிஸ் கையைப் பிசைந்துகொண்டு நின்றது. இதைப் பணமாக்க நினைத்த திரையரங்க உரிமையாளர், முதலிலேயே இந்த வெற்றியை யோசித்து ஒரு விஷயத்தைச் செய்தார். ஆம், முதல் காட்சி அதிகாலை நான்கு மணிக்கு. அதற்கு டிக்கெட் வாங்க, முந்தைய நாள் இரவு குவிந்த மக்கள் விடிய விடிய தியேட்டரில் கிடந்தார்கள். இதைக் கண்டுகொண்ட அனைத்து தியேட்டர்களும் அடுத்து வந்த எல்லாம் சூப்பர்ஹிட் படங்களுக்கும் இதை வழக்கமாக்கின.

வழக்கமாக்கும்போது அப்படியே செய்தால் அதில் என்ன சந்தோஷம் இருக்கிறது? மெல்ல மெல்ல நேரத்தைக் குறைத்துக்கொண்டே போனார்கள். ஒரு கட்டத்தில் அதிகாலை ஒரு மணிக்கு முதல் காட்சி. அதாவது நள்ளிரவுக் காட்சி. இதுவும் தியேட்டர்களுக்கு பத்தல! இன்னொன்றைச் செய்ய ஆரம்பித்தார்கள். உலகில் எங்கேயும் கேள்விப்பட்டிருக்காத விஷயம். மாலை ஆறு மணிக் காட்சிக்கு மதியம் ஒரு மணிக்கு டிக்கெட் தருவார்கள். இரண்டு மணிக்குத் தியேட்டருக்குள் விட்டு அடைத்துவிடுவார்கள். இரண்டு மணிக் காட்சி அப்போதுதான் தொடங்கி இருக்கும். ஆறு மணிக்காட்சிக்கு ஹவுஸ்ஃபுல் என்று போர்ட் தொங்க விட்டிருப்பார்கள். ஆறு மணிக்காட்சியைக் காண நான்கு மணி நேரம் தியேட்டருக்குள் அடைபட்டிருப்போம். நாங்கள் ஆறு மணிக் காட்சிக்குப் படம் பார்க்க தியேட்டருக்குள் போகும்போது, எங்கள் இடத்தை இரவு பத்து மணிக் காட்சிக்காரன் பிடித்துக்கொண்டிருப்பான். அங்கே வந்து தண்ணீர், போண்டா எல்லாம் வேறு விற்பார்கள். திருப்பதியின் மாடலைத் தியேட்டருக்குள் புகுத்தி வைத்தார்கள்.

விழித்துக்கொண்ட மாவட்ட அரசு நிர்வாகம், அத்தனைக்கும் ஒரேடியாகத் தடை விதித்தது. அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக அன்றைய காட்சிகள் தொடங்கக் கூடாது, உள்ளே அடைத்து வைக்கக் கூடாது என்று அறிவிப்புகள் வந்தன.

மதியம் இரண்டு மணிக் காட்சி என்று நினைத்து, படையப்பாவுக்கு இத்தனை ஈஸியா டிக்கெட் கிடைக்குதே என்று கிண்டல் செய்தபடி என்னுடன் படம் பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த கமல் ரசிகன் ஒருத்தன், டிக்கெட் கிடைத்தது ஆறு மணிக் காட்சிக்கு என்றும், அதுவரை தியேட்டரில் அடைப்பட்டுக் கிடைக்கவேண்டும் என்று தெரிந்து கிட்டத்தட்ட மூர்ச்சையாகிப் போனான். ‘இந்த ஊர் உருப்படவே உருப்படாது’ என்று சாபமிட்டுவிட்டு பஸ் ஏறினான்.

திருநெல்வேலியும் தியேட்டர்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. தேவர்மகனுக்கு போலிஸில் அடி வாங்காமல் படம் பார்த்தவர்கள் குறைவு. திருநெல்வேலியின் ஒரே பொழுதுபோக்கு தியேட்டர்களே. மூன்று கிலோமீட்டர் நீளமான பெரிய சாலைக்குள்ளாக பத்து தியேட்டர்கள். பேருந்து நிறுத்தமே தியேட்டர்களின் பெயர்கள்தான். ஒரு ரத்னா, ஒரு ராயல், ஒரு செண்ட்ரல், ஒரு சிவசக்தி இப்படித்தான் டிக்கெட்டே வாங்குவோம்.
இன்று காணாமல் போன தியேட்டர்களை எண்ணினால், இருக்கும் தியேட்டர்களைவிட அதிக எண்ணிக்கை வருகின்றது. பாப்புலர் (ஸ்ரீ கணேஷ்), லக்ஷ்மி, ராயல், பார்வதி, செண்ட்ரல், சிவசக்தி, ஸ்ரீ செல்வம் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இவையெல்லாம் வெறும் தியேட்டர்கள் அல்ல. வரலாறுகள்.

இது போக, இளமை வரலாறு ஒன்றிருக்கிறது, கலைவாணி தியேட்டர். இந்த இளமை வரலாற்றைத் தனியேதான் சொல்லவேண்டும். அந்த தியேட்டரும் இன்றில்லை. இழந்தவற்றின் வலியும் அங்கே பெற்றவற்றின் சந்தோஷமும் ஒன்றுக்கொன்று முட்டி நிற்கின்றன. இதுதான் வாழ்க்கை. மீண்டும் பெறவே முடியாமல் இழந்தவற்றின் சுகமான தொகுப்புகளே மீதமிருக்கும் வாழ்க்கை.

2022 செப்டம்பரில் மெட்ராஸ் பேப்பர் வலைத்தளத்தில் வெளியான கட்டுரை.

Share

Janaki V Vs Kerala State Review

Jaanaki V Vs Kerala State (M) – கிறித்துவரான சுரேஷ் கோபியின் கதாபாத்திரம், ‘கன்னியாஸ்திரிகளுக்கத் தொல்லை கொடுக்கும் பாதிரியாருக்கு எதிரான வழக்கை நடத்தாமல் விடமாட்டேன், நேர்மையே முக்கியம்’ என்பதாக அறிமுகம் ஆகிறது. இதுதான் கதை என்று நினைத்தால் கதை வேறு ஒரு பக்கம் நகர்கிறது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனக்கு நீதி வேண்டும் என்று போராடுகிறாள். அவளது தந்தை இறந்ததற்கு ஒரு வகையில்  ஹீரோவின் பிரபலம் காரணமாக இருக்க, பிரச்சினை பெரிதாகிறது‌. அந்தப் பெண்ணுக்கு எதிராக ஹீரோ சகட்டுமேனிக்கு வாதாட, அந்தப் பெண் கற்பழிக்கப்படவே இல்லை என்று நீதி வழங்கப்படுகிறது.

முன்பு ‘மன்னிக்க வேண்டுகிறேன், என்று ஒரு திரைப்படம் வந்தது. டப்பிங் திரைப்படம். டாக்டர் ராஜசேகரின் திரைப்படம்‌. மேக்கிங் வகையில் மொக்கையாக இருந்தாலும், கதையாக எனக்கு அந்தத் திரைப்படம் அந்த வயதில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவளைக் கொலை செய்வதற்காகத் தான் இறந்ததாக உலகை நம்ப வைத்து விடும் ஹீரோ, அவளை கொல்லச் செல்லும் போது அவள் நிரபராதி என்பதைப் புரிந்து கொள்கிறான். தான் இறந்தது போல ஊரை நம்ப வைப்பதற்காக அவன் ஆடிய நாடகம் அவனுக்கே எதிராகிறது. தன்னை நல்லவன் என்று நம்ப வைக்க மீண்டும் போராட ஆரம்பிப்பான். குன்ஸாக இதுதான் திரைக்கதை.

அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் போல இந்தத் திரைப்படம் நகரும் என்று நினைத்தேன். அதே மாதிரிதான் ஆனது.

ஆனால் பெரிய மைனஸ் பாயிண்ட் என்னவென்றால், சுரேஷ்கோபி தான் முன்பு வாதாடியதற்கு எதிராக வாதாடுவதற்குப் பதிலாக தனது தங்கை வாதாடுவார் என்று சொல்லிவிடுகிறார்.  படத்தின் தலைப்பான ஜானகி வெர்ஸஸ் கேரளா ஸ்டேட் என்பதற்குள் அப்போதுதான் வருகிறார்கள்.

எத்தனையோ மலையாளிகள் திரைப்படத்தில் இருக்க, படத்தின் கருவுக்கான பழியை ஒரு ஹிந்திக்காரன் மேல் போட்டு விடுகிறார்கள். அவன் இந்திக்காரன்தானா என்பதிலும் ஒரு சந்தேகம் இருக்க, எத்தனையோ தேடிப் பார்த்தேன். யாரும் எங்கேயும் அதைப்பற்றி எழுதவே இல்லை. அவன் திடீரென்று பெண் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு நம்ம ஊர் குலசேகரப்பட்டினம் திருவிழா போல கேரளக் கிராமம் ஒன்றில்  ஆடுகிறான். அங்கே சென்று ஹீரோ பந்தாடி அவனைத் தூக்கிக்கொண்டு வர, படம் முடிவடைந்து விடும் என்று நினைத்தால், படத்தின் ஆதாரக் கேள்வி அப்போதுதான் ஆரம்பமாகிறது.

பலாத்காரம் மூலம் உருவான குழந்தையை தான் ஏன் சுமக்க வேண்டும் என்பதுதான் கதாநாயகியின் கேள்வி. அதற்காகத்தான் அந்தப் பெண் அரசை எதிர்த்துப் போராடுகிறார்.

ஜானகி எதிர் கேரள மாநிலம் என இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்கள் உண்டாகி இருக்கின்றன. ஜானகி என்பது சீதையைக் குறிக்கும் சொல் என்பதால் இந்தப் படம் ஹிந்து மதத்தினைப் புண்படுத்தக் கூடும் என்று சென்ஸாரில் பெயரை மாற்றச் சொல்லி விடுகிறார்கள். அதற்கு எதிராக தயாரிப்பாளர்கள் கேரள ஹை கோர்ட் செல்ல, நீதிபதி படத்தைப் பார்த்துவிட்டு, அப்படி ஒன்றும் இல்லை ஜானகி என்பது சாதாரணப் பெயர்தான் என்று தீர்ப்பு சொல்லி, இருந்தாலும் ஜானகி வி அதாவது அவரது தந்தை பெயர் வித்யாதரன் எதிர் கேரள மாநிலம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

இப்படி மூன்று கதைகளை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட படம் ரொம்ப சுமார். மிக மோசமான நடிப்பு, சுரேஷ் கோபி உட்பட. ஹீரோயினாக வரும் பெண் மட்டுமே மிக நன்றாக நடிக்கிறார். நீதிமன்றக் காட்சிகள் பிடிப்பவர்களுக்கு இந்தப் படம் சுமாராகவாவது தோன்றலாம். மற்றபடி இந்தப் படத்தில் பார்க்க ஒன்றுமே இல்லை.

பார்க்க ஒன்றுமே இல்லாத படத்திற்கு எத்தனை பெரிய விமர்சனம் என்று நீங்கள் நினைக்கலாம். என் வாழ்க்கை உங்களுக்காகத் தியாகம் செய்யப் பட்டது என்பதை நான் ஏன் மீண்டும் சொல்ல வேண்டும்? இனி தியாகம்.

மலையாளப் படங்களுக்கே உரிய கிறித்துவத்தன்மை போலப் படம் முழுக்க கிறிஸ்தவ மயம். ஹீரோ உட்பட பல கதாபாத்திரங்கள் கிறித்துவர்கள். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் வருகிறது. அட்டகாசமாக அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு மரணத்திற்குத் தான் நேரடியாகக் காரணம் இல்லை என்ற போதும், தானும் அதற்கு ஒரு காரணம் என்று நினைக்கும் அந்தக் கதாபாத்திரம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பிரச்சினைக்குரிய ஹிந்திக்காரன் மதம் இந்து மதமாக இருக்கிறது.

Share

Anirudh and Resonance

நான் பத்தாம் வகுப்பு (அல்லது பன்னிரண்டு) படிக்கும்போது முதன்முதலில் அந்த வார்த்தையைக் கேள்விப்படுகிறேன். ஒத்ததிர்வு. அதாவது resonance என்னும் வார்த்தைக்கான தமிழ் வார்த்தை.

அதற்கு ஓர் உதாரணம் கொடுக்கப்பட்டிருந்தது. மேம்பாலங்களில் நடக்கும் போது ராணுவ வீரர்கள் மார்ச் பாஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்களின் நடை அதிர்வெண்ணும் மேம்பாலத்தின் இயல் அதிர்வெண்ணும் ஒன்றாக ஒரு புள்ளியில் இயைந்து, ஒத்ததிர்வு ஏற்பட்டு, பாலம் இடிந்து விட சாத்தியக்கூறு இருக்கிறது. இதுதான் நான் படித்தது.

மொபைல் ஃபோனை வைப்ரேஷன் மோடில் நெஞ்சருகே வைக்கும் போதெல்லாம் எனக்கு ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். நெஞ்சமும் மொபைலும் ஒத்ததிர்வில் ஈடுபட்டால் என்னாகும் என்று. உடனே மொபைலைத் தள்ளு வைத்து விடுவேன்.

இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்றால்…

அனிருத் இசை அமைக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், என்றாவது ஒருநாள் நிச்சயம் ஒரு பத்து பேருக்காவது திரையரங்கில் ஒத்ததிர்வு ஏற்படத்தான் போகிறது. அனிருத் இப்போதே முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

Share

Coolie Movie Review

கூலி – இடைவேளை வரைபடம் பட்டாசு. பெண்கள் தங்கும் விடுதியில் வரும் அந்தச் சண்டைக்காட்சியில் நீண்ட காலத்திற்குப் பிறகு பழைய ரஜினியைப் பார்க்க முடிந்தது.

பின்னர் வரும் தேவையற்ற ஒரு பாடல் படத்தின் போக்கைக் கொஞ்சம் இடறினாலும் அதன் பிறகு வரும் காட்சிகள் குறிப்பாக நாகர்ஜுனா ரஜினியின் காட்சிகள் பிரமாதமாக அமைந்திருக்கின்றன. இடைவேளை பிளாட் அருமை. அதோடு பல மடங்கு எதிர்பார்ப்பையும் தந்து விடுகிறது.

அதன் பிறகு படம் கொஞ்சம் தொய்வடைகிறது. ஏன் எதற்கு ஓடுகிறார்கள், ஒருவரை ஒருவர் ஏன் துரத்துகிறார்கள் என்பதெல்லாம் புரியாமலேயே பல நிமிடங்கள் படம் ஓடுகிறது. பிறகு மீண்டும் கொஞ்சம் பரபரப்பாகிறது.

இறுதிக்காட்சியில் அமீர்கான் வருவதெல்லாம் விக்ரம் திரைப்படத்தை மீண்டும் பார்ப்பது போலவே இருந்தது. ரஜினி நாகார்ஜுனா சௌபின் ஷாபிர் மூவரும் கலக்கி விட்டார்கள். லோகேஷ் விக்ரமின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என்பது படம் நெடுகத் தெரிகிறது. பல காட்சிகள் விக்ரமை நினைவூட்டுகின்றன. அதுமட்டுமின்றி ரஜினியின் பிற பிடங்களையும் விஜயின் படங்களையும் பல காட்சிகள் நினைவூட்டுவது படத்திற்கு மைனஸ் பாயிண்ட். சத்யராஜ் கௌரவ வேடம் போல அவ்வப்போது வந்து போகிறார்‌ ஸ்ருதிஹாசன் அழுவதைப் பார்க்கச் சகிக்கவில்லை. அப்படியே சௌகார் ஜானகி ஆக்கிவிட்டார்கள்.

விக்ரம், விக்ரமை விட ஜெயிலர், அதை விட இந்தப் படத்தில் கொலைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. பட முழுக்க ரத்தம் ரத்தம் ரத்தம். குடியும் சிகரெட்டும் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.

ரஜினி காந்த், கமல் திரைப்படங்களில் பிளாஷ்பேக்கில் ஏஐ உதவியுடன் இளமையாகக் காட்ட வேண்டும் என்பது கிட்டத்தட்ட சட்டம் ஆகிவிட்டது. இந்தப் படத்திலும் உண்டு.

உபேந்திராவை இந்த அளவு ஏமாற்றி இருக்கக் கூடாது. ஐயோ பாவம். அதனால்தான் அவருக்கு இயக்கத்தான் வரும் என்று ரஜினி சூசகமாக சொன்னார் போல.

அனிருத் தலைவலி.

மொத்தத்தில் வேட்டையன் அளவுக்கு மோசம் இல்லை. தக் லைஃப் அளவிற்குக் கொடுமை என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

தன் கதாபத்திரத்தை உணர்ந்து கொண்டு அதற்கேற்றாற் போல் கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல் நடிக்கும் ஒரு சிறந்த நடிகர் இந்தப் படத்திலும் தன் சிறப்பான நடிப்பை மீண்டும் வெளிப்படுத்துகிறார். அந்த ரஜினிக்காக நிச்சயம் பார்க்க வேண்டும்.

கூலி ஸ்பாய்லர்‌ அஹெட்.

.
.
.

பார் மகளே பார் என்ற ஒரு திரைப்படம். சிவாஜி பெரிய பணக்காரனாகவும் பணக்காரத் திமிர் கொண்டவராகவும் இருப்பார். தன் இளம் வயதில் ஏழையாக இருந்த போது தன்மகளைத் தன் நண்பனின் மகனுக்குக் கல்யாணம் செய்து தர ஒப்புக் கொண்டிருப்பார். ஆனால் பணக்காரனானதும் பணத் திமிரில் அந்த நண்பனை ஏழை என்று இகழ்ந்து பேச, அந்த நண்பன் எல்லார் முன்னிலையிலும் சிவாஜியிடம், உனக்கு இருக்கும் இரண்டு மகளில் ஒன்று உனக்குப் பிறந்ததில்லை என்று சொல்லிவிடுவார். அந்த நண்பராக நடித்தவர் வி கே ராமசாமி. வி கே ராமசாமியின் வாழ்நாள் காட்சி என்றால் இந்தக் காட்சியைத்தான் நான் சொல்லுவேன்.

அதன் பிறகு சிவாஜியின் தவிப்பும் ஈகோவும் அவரைப் பாடாயப்படுத்தும். எது தன்மகள் என்று தெரிந்து கொள்ள சித்திரவதை அனுபவித்து ஒவ்வொரு நாளும் துடிப்பார். கடைசியில் எந்த மகள் அவரது மகள் என்று தெரிய வரும்போது, தெரிய வேண்டாம் இரண்டுமே என் மகளாக இருக்கட்டும் என்று சொல்லிவிடுவார்.

இந்தக் கதையை 20 நாட்களுக்கு முன்புதான் ஜெயக்குமாரிடம் விமானத்தில் வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

இன்று கூலி பார்க்கும் போது அந்தப் படத்தின் நினைவு வந்தது.

முதல் காட்சியிலேயே சந்தேகமாக இந்தக் கதையை என்னால் யூகிக்கவும் முடிந்தது.

Share

Ronth Malayalam Movie

ரோந்த் (M) – எப்படியாவது ஒரு நல்ல படம் கொடுத்துத் திகைக்க வைப்பதில் மலையாளிகளை அடித்துக் கொள்ள முடியாது. அப்படி ஒரு நல்ல திரைப்படம் ரோந்த்.

கதை எல்லாம் எதுவும் இல்லை. அல்லது கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது. காவல் நிலையத்தில் நடப்பதை அப்படியே காண்பிக்க முயன்ற ஆக்‌ஷன் ஹீரோ பிஜு திரைக்கதையைப் போல, ஒரு ரோந்தின் போது நடப்பதை அப்படியே காண்பிக்கும் வகையிலான திரைக்கதை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமும் இருக்கிறது. இது சீரியஸான திரைப்படம். திலீஷ் போத்தன் அசரடிக்கிறார். அவரது உடல்மொழி பிரமிப்பூட்டுகிறது. திலீஷ் போத்தனின் கதாபாத்திரத்தை நுணுக்கமாக எழுதி இருக்கிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு பிரமாதமாக நடித்திருக்கிறார்.

திரைப்படம் நெடுக வரும், குழந்தைகளின் மீதான வன்முறை குறித்த காட்சிகள் பதற வைக்கின்றன. படத்தில் இதுவே பிராதனம்.

கடைசி அரை மணி நேரம் பரபரப்பாகச் செல்கிறது திரைக்கதை. முடிவைப் பற்றிப் பலர் நெகடிவாகக் கருத்துச் சொல்லி இருந்தார்கள். ஒருவகையில் அது சரிதான். அதே சமயம், காவல்துறையின் இன்னொரு முகத்தைக் காண்பிக்கும் அந்த முடிவு சரியாக உள்ளதாகவும் தோன்றுகிறது.

நிச்சயம் பார்க்கவேண்டும். தீலீஷுக்காக.

Share

Saiyaara Hindi movie

சையாரா (H) – நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கில் ஒரு ஹிந்தித் திரைப்படம். அதுவும் துபாயில்.

90களின் ஹிந்தித் திரைப்படம் போன்ற ஒரு கதையை, இன்றைய தேதிக்கு மார்டனாக எடுத்திருக்கிறார்கள். கேன்சர், மூளைக் காய்ச்சல் போன்றவற்றையெல்லாம் காட்டிச் சாவடித்தது போல் இந்த நோயை வைத்துக்கொண்டு இன்னும் என்ன பாடுபடுத்த போகிறார்களோ! என்றாலும் இந்தத் திரைப்படம் பார்க்கும்படியாகவே இருக்கிறது.

தன்மாத்ர திரைப்படம் தந்த அளவு மன அழுத்தத்தையும் பயத்தையும் இந்தப் படம் தரவில்லை. அப்படித் தந்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார்

மிக அழகான ஒரு கதாநாயகன். முதல் படமாம். நம்பவே முடியவில்லை. அதைவிட அழகான கதாநாயகி. இளமை துள்ளும் கேமரா. அட்டகாசமான இசை எனப் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தமிழின் மூன்றாம் பிறை (ஹிந்தியில் சத்மா) திரைப்படத்தின் எதிர்த் திரைக்கதை என்று இந்தத் திரைப்படத்தின் மூலக் கதையைச் சொல்லலாம். அதிலும் இறுதிக் காட்சியில் கிரிக்கெட் வர்ணனையை ஹீரோ சொல்லும்பொழுது கமலஹாசனை நினைவுகூராமல் இருக்கவே முடியாது.

படத்தின் பலம் என்ன? ஐ லவ் யூ மகேஷ் என்று கதாநாயகி கதாநாயகனைப் பார்த்துச் சொல்லும்பொழுது ஒரு திடுக்கிடல் அனைவருக்குள்ளும் வருகிறது. அதைக் கொண்டு வந்ததில்தான் இந்தப் படத்தின் வெற்றியும் இயக்குநரின் சாமர்த்தியமும் இருக்கின்றன. முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொன்று, படத்தில் வில்லன் அடிதடி ரத்தம் துப்பாக்கி என எதுவும் இல்லை. படம் இயல்பாக ஒரே நேர்கோட்டில் செல்கிறது.

பொறுமையாக நகரக்கூடிய, இளமைத் துள்ளலான படத்தை பார்க்க விரும்புபவர்கள், முக்கியமாக அழகான ஹீரோவுக்காகவும், சிம்ரனையும் ஆலியாவையும் அனஸ்வரா ராஜனையும் கலந்த, அடுத்த பத்தாண்டு ஹிந்தித் திரை உலகை ஆளப்போகும் திறமையான ஒரு கதாநாயகியையும் பார்க்க விரும்பினால் இந்தத் திரைப்படத்தைத் தவற விடாதீர்கள்.

Share

mareesan movie review

மாரீசன் – மோசம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. அருமை என்று கொண்டாடவும் முடியாது. இரண்டே இரண்டு நடிகர்கள் மட்டும் பெரும்பாலும் படம் முழுவதும் வரும்போது ஏற்படக்கூடிய ஒரு அலுப்பு இந்த படத்தில் பெரிய அளவுக்கு ஏற்படாததற்குக் காரணம், இதில் வந்திருக்கும் இரண்டு நடிகர்கள் ராட்சசர்கள். அந்த இரண்டு நடிகர்களைப் பிடிக்கும் என்றால் இந்தப் படம் நீங்கள் தவற விடக்கூடாதது.

வடிவேலு தன் எல்லை மிகாமல் தெளிவாக ஒரு கோடு போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே பிரமாதப்படுத்தி இருக்கிறார். இதற்கு முந்தைய மாமன்னன் திரைப்படத்தில் வந்ததைவிட இதில் இன்னும் விரிவான பாத்திரம். நன்றாகச் செய்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக்கில் அவர் அழும் காட்சி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.

ஃபகத் ஃபாஸில் பற்றித் தனியே சொல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு நொடியும் முகபாவத்தில் அசரடிக்கிறார். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் பின்னர் விறுவிறுப்பாகிறது. இடைவேளை வரை கவிதை என்றால் இடைவேளைக்குப் பிறகு அந்தக் கவிதை கொஞ்சம் தொலைந்து போனாலும் கூட, இறுதிவரை பார்க்க முடிகிறது.

படத்தின் லாஜிக் ஓட்டைகள் என்று எடுத்துக் கொண்டால் பெரிய பட்டியலே போடலாம். அதிலும் போலீசின் பங்கு இத்தனை கேவலமாக இருந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தானோ என்னவோ கோவை சரளாவை போலீஸாகப் போட்டு சிரிப்பு போலீஸ் என்று சிம்பாலிக்காகக் கட்டியிருக்கிறார்கள் போல. கோவை சரளாவுக்கு நடிக்கவே வரவில்லை.

நேத்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்தோம் பாடல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதில் வரும் இரண்டு நடிகர்களும் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.

ஃபகத் ஃபாசிலுக்காகவும் வடிவேலுக்காகவும் பொறுமை இருந்தால் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

பின்குறிப்பு: படத்தின் மையக்கதை இதுதான் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் படத்துக்குப் போயிருக்கவே மாட்டேன். இது ஒரு ரோடு ஸ்டோரி, அதிலும் ஃபகத்தும் வடிவேலும் நடித்திருக்கிறார்கள் என்பதற்காகவே போனேன். பொதுவாக எனக்கு இதுபோன்ற கதை தரும் படபடப்பு சொல்லி மாளாதது. கதை தெரியாததால் மாட்டிக் கொண்டு விட்டேன்.

Share

Oruvar vaazhum aalayam shooting in Cheranmahadevi

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்

1987. சேரன்மகாதேவியில் தீ பற்றிக் கொண்டது. தீ என்றால் அடங்கும் தீ அல்ல இது. சினிமா தீ.

நடுத்தெருவுக்கு அம்பிகா வந்துருக்காளாம் என்ற செய்தியை முழுதாகக் கேட்பதற்குள், அம்பிகா என்றால் யார் என்றே தெரியாத டிரசர் பாண்டிக் குளுவான்களெல்லாம் மூச்சிரைக்க நடுத்தெருவுக்கு ஓடினோம். ஊர்ல பெரிய நாட்டாமை நாமதான், நமக்கே தெரியாம அம்பிகா வந்துருக்காளா என்று ஆசையாகப் பார்த்தால், வழக்கமாக வாசல் தெளித்துக் கோலம் போடும், இன்றோ நாளையோ பாட்டிகள்தான் கண்ணில் பட்டார்கள்.

நடுத்தெருவுல இல்லையாம், காந்தி பார்க் பக்கத்துலயாம். ஓடு காந்தி பார்க்கிற்கு. அங்கே எப்போதும் சுற்றித் திரியும், சேர்மாதேவிக்கே உரிய மொத்தமான நான்கைந்து காக்காய்கள் கூட அன்று அங்கே இல்லை.

அப்போது எங்களுடன் சுற்றித் திரிந்த வில்லேஜ் விஞ்ஞானி ஒருத்தன் சொன்னான், ‘எப்பவும் பரபரப்பா இருக்க நம்ம ஊரு இப்படி ஆள் அரவமே இல்லாம கெடக்குன்னா, எங்கயோ நிச்சயமா ஷூட்டிங் நடக்குல.’ ஊரைச் சல்லடை போட்டுத் தேட முடிவு செய்தோம். ஆனால் எங்கே ஷூட்டிங் நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தினம் தினம் ஏதாவது செய்தி மட்டும் வரும். அங்கிட்டு ஷூட்டிங்காம், இங்கிட்டு ஷூட்டிங்காம், பிரபு வந்துருக்கான், சிவகுமார் வந்துருக்கான், அம்பிகா வந்துருக்கா, நானே என் கண்ணால பாத்தேன் என்று யாராவது சொல்வார்கள். ஆனால் எங்கள் கண்ணில் எதுவும் படவே இல்லை.

கல்லுப்பட்டியில் படித்துக்கொண்டிருந்த நான், லீவிற்கு சேர்மாதேவி வந்திருந்தபோது நடந்தது இது. சரி, நமக்கு ஷூட்டிங் பார்க்க கொடுப்பினை இல்லை என்ற முடிவுக்கு வந்த போது, அவசர அவசரமாக வீட்டுக்குள் வந்த அம்மா சொன்னாள், ‘போலிஸ் லயன்ல ஷூட்டிங் நடக்காம்!’  அடுத்த நொடி நான் பஞ்சாய்ப் பறந்தேன். என்னுடன் பல நண்பர்களும் வந்தார்கள்.

போலிஸ் லயன் என்றுதான் நினைக்கிறேன். கீழ முதல் தெருவுக்குக் கடைக்கோடியில் இருக்கும் ஓர் இடம் என்ற நினைவு. கூட்டமானால் கூட்டம். சிலர் அங்கு காவலுக்கு நின்று கொண்டு, யாரையும் மேற்கொண்டு வராமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் காமாட்சி கோவில் பக்கமாய்ச் சுற்றி வந்து பின்பக்கமாக உள்ளே நுழைந்து ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்து விட்டோம்.

அங்கே பார்த்தால், கூட்டத்தில் என் பாட்டி! அப்போதே என் பாட்டிக்கு 70 வயதிருக்கும். நான் வருவதற்குள் வந்துவிட்டிருக்கிறார். அதுவும் சிமிண்ட் நடைபாதையில் பல பாட்டிகளுடன் அமர்ந்திருக்கிறார். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.

பிரபுவும் அம்பிகாவும் வெளியே வருவார்கள், பார்த்துவிடலாம் என்று காத்திருந்தோம். நேரம் ஆனதுதான் மிச்சம். அவர்கள் யாரும் வெளியே வரவே இல்லை. கேமராமேன், டைரக்டர், லைட் பாய் என்று யார் யாரெல்லாமோ அங்கும் இங்கும் பரபரப்பாக நடக்கிறார்களே தவிர, ஒரு நடிகரும் வெளியே வரவில்லை.

நாங்கள் சோர்ந்து போன நேரத்தில், கூட்டத்தில் ஒரே கூச்சல், ஆரவாரம். பிரபு வெளியே வந்தார். ஏல, பிரபுல என்று சொல்லவும், அனைவரும் ஆச்சரியமாக பிரபுவைப் பார்த்தோம். கல்யாணக் கோலத்தில் இருந்தார். ஒருத்தன் கேட்டான், தனியாவால வந்துருப்பான், இல்ல கூட சிவாஜி வந்துருப்பானா என்று. வில்லேஜ் விஞ்ஞானி அந்தக் கேள்வியை ரசிக்கவில்லை.

பிரபு அனைவரையும் பார்த்துக் கையசைக்கவும், ஒரே கைதட்டல். பிரபு ஸ்டைலாக அங்கும் இங்கும் நடந்தபடி, இரண்டு கைகளால் தனக்குள்ளே குத்திக் கொண்டபடி, சிரித்தபடி இருந்தார். அதைப் பார்த்த என் பாட்டி சத்தமாக, ‘நீ நடக்கறது உன் அப்பா நடக்கற மாதிரி இருக்குப்பா’ என்றார். பிரபு ஆஹான் ஆஹான் என்று கட்டைக்குரலில் பதில் சொல்லிச் சிரித்தார். வீட்டுக்குள்ள அமுக்குளி மாதிரி இருக்கிற பாட்டி தெருவுல என்னா போடு போடுது என்று சந்தோஷமாக இருந்தது.

ஒரு வழியாக மாலை 3 மணி வாக்கில் ஷூட்டிங் ஆரம்பித்தது.

ஆனால் அம்பிகா வரவில்லை. பிரபுவுடன் வேறொரு பெண் வந்தார். தூரத்தில் இருந்து எங்களுக்கு அது அம்பிகா இல்லை என்று எங்கள் யாருக்கும் உறுதியாகச் சொல்லவும் தெரியவில்லை. எங்கள் பரிதவிப்பைப் பார்த்த ஒருவர் சொன்னார், இது அம்பிகா இல்லடே, ராது, அறிமுகமாம். வில்லேஜ் விஞ்ஞானி கேட்டான், அறிமுகமா புதுமுகமா என்று. ரெண்டும் ஒன்னுதாம்ல என்றார் அவர். அதற்கும் அவன் என்னவோ சொல்ல, ஷூட்டிங் வேகத்தில் அவனை யாரும் பொருட்படுத்தவில்லை.

காட்சியின் படி, ஒரு மாட்டுவண்டியில் ராதுவும் பிரபுவும் வந்திறங்க வேண்டும். அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடந்து வரவேண்டும். ஒரு பெண் ஆரத்தி எடுப்பார்.

ராதுவும் பிரபுவும் மாட்டு வண்டியில் இருந்து இறங்குவதை மட்டும் பத்து முறை எடுத்திருப்பார்கள். இருவரும் நடந்து வரும் காட்சியை 30 முறை எடுத்தார்கள். என்ன எழவுடா இது, நடந்து வீட்டுக்குள்ள வர்றதுக்கு எதுக்கு இத்தனை எடுக்கிறார்கள் என்று எரிச்சலாக வந்தது. இதில் ஒருவர் விடாமல் கோழியை தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருக்க, இன்னொருவர் புகை போட்டுக் கொண்டிருந்தார்.

அவுட்டோரில் அன்று மொத்தமாக நடந்த ஷூட்டிங்கே அவ்வளவுதான். இதற்கே மாலை ஆகிவிட்டது. கூட்டம் கலைந்தது.

ஒருவழியாக ஷூட்டிங் பார்த்துவிட்டேன் என்ற சந்தோஷம் எனக்கு. படம் ஒருவர் வாழும் ஆலயம். அதைத் தொடர்ந்து ஒன்றிரண்டு நாள்களில் ராமர் கோவிலில் ஷூட்டிங்காம், சிவகுமார், அம்பிகா வந்திருக்கிறார்களாம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் போகவில்லை.

அந்தப் படம் 1988ல் வெளியானது. ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் முதல் பாடலாக மலையோரம் மயிலே போட்டார்கள். பாடல் அள்ளிக்கொண்டது. அதில் வரும் நதியெல்லாம் சேர்மாதேவியா என்றெல்லாம் யோசித்துக் கொண்டேதான் பார்த்தேன். படம் வெளியாகி சில நாள்கள் கழித்துத்தான் படம் பார்த்தேன். படம் முழுக்க, எப்படா சேர்மாதேவி வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தக் காட்சியும் வந்தது.

இந்தக் காட்சியை நான் ஷூட்டிங்கின் போதே பார்த்திருக்கிறேன் என்று மதுரை நண்பர்களிடம் சொல்லிப் பீற்றிக்கொண்டதில் நான்கைந்து நாள் கெத்தாக இருந்தேன்.

படத்தில் வரும் இடமெல்லாம் சேர்மாதேவிதான் என்று நானே கற்பனை செய்துகொண்டேன். அடுத்த தடவை சேர்மாதேவி போனபோது, அதில் பல இடங்கள் அம்பாசமுத்திரம் பக்கம் என்று சொல்லவும் புஸ்ஸென்றாகிவிட்டது. சேர்மாதேவியில் தற்கொலை முடிவெடுக்கும் ராது எந்த ரயிலின் முன் பாய்கிறார் என்றபோது, அது கல்லிடைக்குறிச்சி என்றார்கள். நடந்தேவா அவ்வளவு தூரம் போனார்? தலை சுற்றிப் போனது. கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் படத்தில் கடல் வந்ததும் நினைவுக்கு வந்தது. அடக் கண்றாவியே என்று தோன்றிவிட்டது.

அடுத்த இரண்டு மாதத்துக்கு எந்தப் படம் பார்த்தாலும், இதை எப்படி எடுத்துருப்பாங்க என்றே யோசிக்கத் தோன்றியது. படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியாமல் போனது. இனி ஷூட்டிங்கே பார்க்கக் கூடாது என்று தோன்றிவிட்டது.

இப்போதும் ஒருவர் வாழும் ஆலயத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, படச் சட்டத்துக்குள் வராத, ஜஸ்ட் சில அடிகள் தள்ளி சிமிண்ட் தரையில் அமர்ந்திருக்கும் பாட்டியை மனம் தேடும். பாட்டி பிரபுவை சிவாஜி மாதிரியே நடக்கறப்பா என்றது காதில் ஒலிக்கும்.

பின்குறிப்பு: அந்தப் படத்தில் வந்த ராதுதான், நிழல்கள் படத்தில் நடித்தவர் என்பது, எனக்குப் படம் பார்க்கும்போதுதான் தெரிந்தது. முதல் படம் நிழல்கள் சரியாகப் போகவில்லை என்பதால் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் போல. அறிமுகமா புதுமுகமா என்று கேட்ட வில்லேஜ் விஞ்ஞானி நினைவுக்கு வந்தான்.

Share