
சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவையுமே தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை என்பது நமது சாபம். அந்த சாபத்தைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவதுண்டு. விருமாண்டி, ஆடுகளம், வம்சம், சுப்ரமணியபுரம், காதல் போன்றவை. அந்த வகையில் இன்னொரு திரைப்படம், அதுவும் வம்சம், விருமாண்டி படங்களின் பலவீனங்கள் இல்லாமல் சிறப்பான ஒரு திரைப்படமாக ‘மதயானைக் கூட்டம்’ உருவாகியிருக்கிறது.
ஒருவனின் இரண்டு மனைவிகளுக்குள்ளான உணர்ச்சிகள், அவர்களின் வாரிசுகளுக்குள்ளே எழும் பிரச்சினைகளை மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ நகர்ப்புற எலைட்டுகளின் வாழ்க்கையை மையமாக வைத்துச் சொன்னது என்றால், மதயானைக் கூட்டம் அதே பிரச்சினைகளை கிராமத்தையும் ரத்தமும் சதையுமான மனிதர்களை முன்வைத்துப் பேசுகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் செய்யத் தவறிய நுணுக்கங்களோடு.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடுகிறது. கதையைச் சொல்லத் தொடங்கும் விதமும் அக்கதை மெல்ல நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமும் அழகு. திரையெங்கும் உண்மையான மனிதர்களை உலவவிட்டது போன்ற நடிகர்களின் கச்சிதமான தேர்வு, நடிப்பு. நல்ல பின்னணி இசை (ரகுநந்தன்). காட்சிக்கேற்ற பாடல்கள். மிகத் திறமையான பாடல் வரிகள் (ஏகாதசி). மனதை அள்ளும் ஒளிப்பதிவு. அதிலும் காட்சிகளின் மாறும் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம் என எல்லாவற்றிலும் மதயானைக் கூட்டம் நம்மைக் கட்டிப் போடுகிறது.
திரைக்கதையை மிகச் செறிவாக மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். ஒரு எதிர்பாராத சாவும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கொலைகளும் நம்மை பரபரப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. இந்த சாவுக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான விதம் தனியே சொல்லப்படவேண்டியது. பொதுவாகவே இயக்குநர்கள் நுணுக்கமான காட்சிகளில் அத்தனை கவனம் செலுத்துவதில்லை. கதை நிகழும் இடம், அதோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்கள் பேச்சு வழக்கு, அவர்களது பாரம்பரியம் என எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்துப் பதிவு செய்வது மிக முக்கியமானது. பார்வையாளர்கள் இதன் எல்லா நுணுக்கங்களையும் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் இந்த நுணுக்கங்கள் தரும் ஒட்டுமொத்த மனப்பதிவு அபாரமானது. அதையே மதயானைக் கூட்டம் சாதித்திருக்கிறது.
நம்மிடம் கதை இல்லை, எல்லாக் கதைகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்று சொல்வதெல்லாம் ஹம்பக் என்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கிறது. எத்தனையோ கதைகளை நம் மண்ணோடு பொருத்தி மீண்டும் மிக அழகாக எடுக்கலாம் என்பதற்கு மதயானைக் கூட்டம் இன்னொரு உதாரணம். அந்த வகையில் இது முக்கியமான படம்.
ஒரு சில குறைகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்னும் அளவுக்கு திரைப்படம் சிறந்து விளங்குகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். ஆனால் படத்துக்கு இசை ரகுநந்தன். இளம் படைப்பாளிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது.
இப்படத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வீரச் சந்தானம் (அவள் பெயர் தமிழரசி), வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்) வரிசையில் இப்படத்தில் வேல ராமமூர்த்தி. விருதும் பெற்றுவிடுவார்.
பாடலாசிரியர் ஏகாதசி இதற்குமுன் என்ன என்ன பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்படத்தில் பாடல்களை மிகச் சிறப்பாக, படத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறார்.
இப்படம் தேவர்களின் ஜாதிப் பெருமையைப் பேசுகிறது என்று மேம்போக்கான விமர்சனங்கள் எழக்கூடும். நம் வாழ்க்கையைப் பேசவேண்டுமென்றால், அதற்குரிய சில குணங்களை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அதை மட்டுமே இந்தப் படம் செய்திருக்கிறதே ஒழிய, வலிந்த ஜாதிப் புகழ் மாலைகள் இல்லை. மிகத் தெளிவாக இப்படம் ஒரே ஜாதிக்குள், அதாவது தேவர்களுக்குள் நிகழும் மோதலையே காட்சிப்படுத்தியிருக்கிறது. அவர்களே அவர்களைப் பற்றிய மிதமிஞ்சிய புகழுரைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களே அவர்களைப் பற்றிய இகழ்ச்சியையும் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறி மோதிக் கொள்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளாகிக் கழுத்தை அறுத்துக் கொள்கிறார்கள்.
மிகச் சாதாரணமான கதையை, அதற்குரிய களத்தில், அக்களத்துக்குரிய விவரணைகளோடு வைத்து, நம் படத்தை நாம் திரையில் பார்க்கிறோம் என்கிற பெருமிதத்தைக் கொண்டு வந்திருக்கிறது மதயானைக் கூட்டம். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருப்பதால், படத்தோடு எளிதில் ஒன்றிவிட முடிகிறது. ஆடுகளத்தில் வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறந்த இயக்குநர் விருது நிச்சயம். இயக்குநர் விக்ரம் சுகுமாரனும், தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷும் பாராட்டுக்குரியவர்கள்
ராவண தேசம்
சில நேரங்களில் நாம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத களம் ஒன்றில் திரைப்படங்கள் வந்துவிடக்கூடும். அப்படி ஒரு நிகழ்வு தமிழ்த் திரைப்பட உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. தமிழில் வெளிவர சாத்தியமே இல்லை என்று நாம் நம்பவைக்கப்பட்டுவிட்ட களம் ஒன்றை அஜெய் நூத்தகி திரைப்படமாக்கியிருக்கிறார்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மேலோட்டமாக ஈழத் தமிழர்களின் இன்னல்களைக் கோடிட்டுக் காட்டும் படங்கள் சில தமிழில் வந்ததுண்டு. அவை எதுவுமே ஈழ மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அராஜகத்துக்கு எந்த வித நியாயத்தையும் செய்ததில்லை. மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் காட்சிப்படுத்திய திரைப்படம். ஆனால் அதுவும்கூட, ஈழத்தைப் பின்னணியாக மட்டும் வைத்துக்கொண்டு, வழக்கமான தமிழ்த் திரைப்பட செண்டிமெண்ட்டை மட்டுமே முன்னெடுத்தது.
இந்தக் குறையைப் போக்கும் வகையில் மகிழ்ச்சியான அதிர்ச்சியைத் தருகிறது ராவண தேசம். இந்தப் படத்தை எப்படி சென்சார் அனுமதித்தது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படம் எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரானதாக இல்லை. என்றாலும், புலித் தலைவர் வரும் ஒரு திரைப்படத்துக்கு சென்சார் குழு அனுமதி அளித்ததே ஆச்சரியமான விஷயம்தான்.
முள்ளி வாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்படும் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்குகிறது திரைப்படம். முள்ளி வாய்க்காலை இலங்கை சிங்கள ராணுவம் கைப்பற்றுகிறது. அங்குள்ள தமிழர்களுக்கு சிங்கள ராணுவம் செய்யும் கொடுமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள் காண்பிக்கப்படுகின்றன. முள்ளி வாய்க்காலை மீண்டும் புலிகள் (புலிகள் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) கைப்பற்றுகிறார்கள். சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம், எனவே தமிழர்கள் யாரும் முள்ளி வாய்க்காலை விட்டு வெளியேறவேண்டியதில்லை, மீறி வெளியேறினால், கொல்லப்படுவார்கள் என்று அறிவிக்கிறது போராளிகள் குழு.
அங்குள்ள மக்கள் தங்களுக்குப் போரே வேண்டாம், இந்த மண்ணும் வேண்டாம், உயிர்தான் வேண்டும் என்கிறார்கள். தங்கள் கண்ணெதிரே தங்கள் சொந்தங்கள் சாவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை என்கிறார்கள். இங்கேதான் ஒரு திருப்பம் நிகழ்கிறது.
தன் கூட்டாளி ஒருவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து, போராளிகளின் தலைவர் (பிரபாகரன் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) தன்னைச் சுடும்படிச் சொல்கிறார். அவரும் சுட்டுவிடுகிறார். தலைவர் வீர மரணம் எய்துகிறார். சிங்கள ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று சொல்ல இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்படிப் காட்சிப்படுத்தியிருப்பது எவ்வித நம்பகத்தன்மையையும் அளிக்கவில்லை.
இனியும் இங்கிருந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று சொல்லும் பத்து பேர் அடங்கிய குழு, புலிகளுக்குத் தெரியாமல் கடல் வழியாக இந்தியா செல்ல முடிவெடுத்து, அங்கிருந்து தப்பிக்கிறது. அவர்கள் கடலில் எதிர்கொள்ளும் உயிரை உறைய வைக்கும் பிரச்சினைகளே மீதிப் படம்.
கடலில் திசை தெரியாமல் வழிதவறிப் போகிறார்கள். கொண்டு வந்த உணவு காலியாகிவிடுகிறது. பணப்பேராசை பிடித்த ஏஜெண்ட் தன் உணவை யாருக்கும் தருவதில்லை. தங்கள் மகனைப் பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்கும் வயதான கிழவி அந்தப் பயணத்திலேயே மரணமடைய, அந்த உடலை கடலில் வீசிவிட்டு பயணத்தைத் தொடர்கிறார்கள். கைக் குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக வேறு வழியின்றி கடல் நீரைப் பருகுகிறாள் ஒரு தாய். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் கரு கலைகிறது. இப்படி அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மை மிரள வைக்கின்றன.
ராம தேசத்தைப் பார்க்கப் போவதில்லை என்று நினைத்து கதாநாயகன் ராம தேசத்து மக்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். தங்கள் சாவுக்கு மௌன சாட்சிகளாக விளங்கும் இந்திய தேசம் என்றேனும் ஒருநாள் தங்கள் மனசாட்சிக்கேனும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற பொருளில் அக்கடிதம் அமைகிறது.
ஒரு அகதியாகக்கூட வழியின்றித்தான் ஈழத் தமிழனின் நிலை உள்ளது என்பதை மிகவும் அழுத்தமாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
ஆனால் திரைப்படம் என்ற வலிமையான ஊடக மொழியின்படி இப்படம் மிகவும் செயற்கைத்தனமாக உள்ளது என்றே சொல்லவேண்டும். இடைவேளை வரும் காட்சிகள் மிகவும் நாடகத்தனமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமத்து மக்களின் போராட்டம் என்ற அளவில்கூட, ஒரு நாட்டு மக்களின் போராட்டம் இப்படத்தில் பதிவாகவில்லை.
தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மக்களைக் கேடயமாகப் புலிகள் பயன்படுத்தியைப் பற்றியெல்லாம் எவ்விதக் குறிப்புகளும் இல்லை. ஆனால் திடீரென்று மக்கள் எங்களுக்கு உயிர்தான் வேண்டும் என்ற காட்சி மட்டும் உள்ளது. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் காட்டப்படவில்லை.
இந்திய தேசத்துக்குச் செல்ல முடிவெடுக்கும் பத்து பேர் அடங்கிய குழுவை எப்படி இந்தியா எதிர்கொள்கிறது என்கிற சவாலுக்குள்ளேயே இயக்குநர் செல்லவில்லை. கடலோடு படத்தை முடித்துவிட்டது பெரிய ஏமாற்றம். கடலில் சாகும் தறுவாயில் கதாநாயகன் கடிதம் எழுதும்போது குறிப்படப்படும் தேதியும், பிரபாகரன் மரணத் தேதியும் பொருந்தாமல் உள்ளது.
ஈழத்தில் இறந்து மடிந்த ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள். இப்படத்தில் ஈழத் தமிழராக ஹிந்து அடையாளத்தோடு காண்பிக்கப்படும் மனிதரோ மிகவும் மோசமானவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். படத்தின் கதாநாயகன், அவரது நண்பர்கள் எல்லாம் நல்ல, அப்பாவிக் கிறித்துவர்களாக மத அடையாளத்தோடு காட்டப்படுகிறார்கள்.இவ்வளவு துயரத்துக்குப் பிறகும் ஒரு தமிழன் ஹிந்து என்பதாலேயே வெறுக்கப்படும் அரசியலை நினைத்து வேதனையே மிஞ்சுகிறது.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் பற்றிப் படமே எடுக்கமுடியாது என்று சொல்லித் திரிபவர்கள் எல்லாருமே கோழைகளாகவோ அல்லது ஊரை ஏமாற்றிக்கொண்டோ இருக்கவேண்டும். இத்திரைப்படம் அதை வலுவாக நிரூபிக்கிறது. இதுபோன்று ஒரு பத்து திரைப்படங்கள் வந்தால், மிகத் தீவிரமான அரசியல் படங்கள் ஈழத்தை மையாக வைத்து வர வாய்ப்புண்டு. அந்தக் கதவை இந்தத் திரைப்படம் திறந்து வைத்திருக்கிறது.
திரைப்படங்கள் இதுவரை பல வகைகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலைக்காக, பிரசாரத்துக்காக, இயக்கத்துக்காக, பொழுது போக்கிற்காக என. இன்று உலகக் கவனம் பெறும் திரைப்படங்கள் எல்லாமே தங்கள் நாட்டின் தங்கள் மக்களின் தங்கள் இனத்தின் பிரச்சினைகளைப் பேசுபவையே. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் இதைப் பற்றியெல்லாம் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. இன்னும் தமிழ்த் திரைப்படங்கள் உலகத் திரைப்படங்களோடு ஒப்பிடத் தகுந்த வகையில், தங்கள் இனம் பற்றியோ மண் பற்றியோ பேசத் துவங்கவில்லை. மேலோட்டமான முயற்சிகள் உண்டு. அவை இன்னும் சரியான அளவில் வடிவம் பெற்று மேலெழவில்லை. இத்திரைப்படம் திரைப்பட மொழியில் மிகவும் மோசமாகத் தோற்றாலும், தன் மக்களைப் பற்றிப் பேசவேண்டும் என்ற உந்துதல் உள்ளது நல்ல விஷயம்தான். முக்கியமான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு தெலுங்கர்.
(நன்றி: ஆழம், டிசம்பர் 2013 இதழ்)
அபிலாஷ் எழுதிய இந்த விமர்சனம் ஜூன் மாதம் உயிர்மையில் வந்தது. சூது கவ்வும் திரைப்படத்தைவிட அபத்த நகைச்சுவையாகப் பட்டது. ஒரு படத்தைப் புகழவேண்டும் என்று முடிவு கட்டி, அதில் வரும் சாதாரணக் காட்சிகளைக்கூடப் புகழ்ந்து தள்ளுவதும் (சாரு இப்ப்டித்தான் செய்வார், ஆனால் சாருவின் திரைப்பட விமர்சனம், நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ இல்லையோ, நிச்சயம் உருப்படியானதாக இருக்கும். வார்த்தைகளில் விளையாடும் ஏமாற்றெல்லாம் இருக்காது) எதாவது ஒன்றிரண்டு ஹங்கேரிய மங்கோலிய இயக்குநர்களின் பெயர்களை உள்ளே இழுத்துவிடுவதுமென இலக்கியப் பத்திரிகைக்கான சம்பிரதாயங்களில் இருந்து சிறிதும் விலகாத விமர்சனம் இது.
இந்த மாத உயிர்மையில் வாசகர் கடிதம் பகுதியில் திருமாவளவன் என்பவர் சரியாக இவ்விமர்சனத்தைப் பற்றிக் கருத்துரைத்துள்ளார். திருமாளவன் இன்னும் கொஞ்சம் ஆழமாக இவ்விமர்சனத்தின் அலட்டல்களையும் செயற்கைத்தனத்தையும் சொல்லியிருக்கலாம்.
இவ்விமர்சனத்தைப் படித்த சூது கவ்வும் இயக்குநர் தனக்குத் தெரியாததெல்லாம் அபிலாஷுக்குத் தெரிந்திருப்பது பற்றி நிச்சயம் அதிர்ச்சியும் கவலையும் கொண்டிருக்கக்கூடும். ஏனென்றால் இந்த விமர்சகர்கள் ஒரு படத்தைப் பாராட்டினால் அடுத்த படத்தைக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிட்டுவிடுவார்களே! பாவம் நலன். அதிலும் திடீரென்று அபிலாஷ் தத்துவ நோக்கில் அடித்துச் செல்லும் வரிகள் எல்லாம் – நெஜமாவே முடியலை!
இன்னொரு முக்கியமான விஷயம், சூது கவ்வும் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த அபத்த விமர்சனத்தைப் படித்தபின்பும் எனக்கும் சூது கவ்வும் இன்னும் பிடித்தமானதாகவே இருக்கிறது என்றால், அப்படத்தின் சாதனையைப் புரிந்துகொள்ளுங்கள். சூது கவ்வும் அபத்த நகைச்சுவை என்றால், இவ்விமர்சனம் அபத்தம்.
* தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் பிரச்சினையை பிரதிபலிக்கவேண்டிய படம், கிறித்துவ மதமாற்றத்தைச் சொல்லும் படமாக வந்ததில், ஓர் ஹிந்துத்துவ ஆவணமாக ஆகிப் போனதில், வருந்தவா மகிழவா எனத் தெரியவில்லை.
* டேனியலுக்கு இப்பேற்பட்ட துரோகத்தை, அநியாயத்தை பாலா செய்திருக்கவேண்டாம்.
*முதல் பாதியில் நடிப்பு அதீதம். இசை அதீதம். பார்க்க சகிக்கவில்லை. முதல் பாதியில் படத்தில் ஒன்றும் இல்லை. இரண்டாம் பாதியோ வெறும் தொகுப்பாகப் போய்விட்டது.
* நாஞ்சில் நாடனுக்கும் செழியனுக்கும் அந்த மூதாட்டிக்கும் (என்ன ஒரு யதார்த்தம்) வாழ்த்துகள்.
அறிவுமதி மனுஷ்யபுத்திரன் கடும் விவாதம் என்றார்கள். கடைசியில் பார்த்தால் மனுஷ்யபுத்திரன் மட்டுமே விவாதிக்கிறார். அறிவுமதி கெஞ்சுகிறார். பின்பு கோபப்படுகிறார். இந்தக் கெஞ்சலும் கோபமுமே மனுஷ்யபுத்திரனின் கருத்துகளில் உள்ள உண்மைக்கு அச்சாரமாக அமைந்துவிடுகிறது.
ஒரு திரைப்படத்தை ஒருவர் விமர்சிக்கிறார் என்றால், அது மிகவும் சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் அறிவுமதி சொல்வதென்ன? இந்த ஃபீல்டுக்குள்ள வந்துட்டீங்க, இங்க ரொம்ப கஷ்டப்படறோம், கொஞ்சம் பார்த்துப் போடுங்க என்பது போன்ற வாதங்களை. கறாரான விமர்சகர் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. அதிலும் மனுஷ்யபுத்திரன் குத்து படத்தையோ தூள் படத்தையோ விமர்சிக்கவில்லை. தமிழர்களால் உச்சி மோந்து கொண்டாடப்படும் ஒரு படத்தின் போலித் தன்மையைச் சுட்டிக் காட்டவேண்டியது அவசியம் என்ற அளவில் இதனைச் சொல்கிறார். இணைய விமர்சகர் மகாதேவன் செய்வதும் (சுரேஷ்கண்ணன் இப்ப அவுட் ஆஃப் பார்ம்) இதையே. ஆனால் அறிவுமதி சொல்வது என்ன? இப்போதுதான் படம் எடுக்கிறோம், இப்போதுதான் கதை எழுதுகிறோம், இனிமே சரியா வரும் என்பது போன்ற சப்பைக்கட்டுகளை.
இளையராஜாவும் பாரதிராஜாவும் இல்லையென்றால் நாங்கள் வந்திருக்கவே முடியாது என்கிறார் அறிவுமதி. இது சாதிய பின்புலத்திலும் சமூகப் பின்புலத்திலும் புரிந்துகொள்ளத் தக்கது. இதனையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு விமர்சனத்தை முன்வைக்கவேண்டுமானால், அது கலையை நீக்கிவிட்டு, அந்தக் கலையை யார் பயன்படுத்தினார்களோ அவர்களது சாதிக்காகவும் அவர்களது சமூக நிலைக்காகவும் தாராள மனப்பானமையுடன் பேசப்பட்டதாகிவிடும். அறிவுமதி விரும்புவதை அதைத்தான். அது அவரது கொள்கை நிலைப்பாடு. அதற்கும் விமர்சனத்துக்கும் தொடர்பு இருக்கவேண்டிய தேவை இல்லை.
ஆனால் மனுஷ்யபுத்திரனோ காலச்சுவடோ இப்படிச் செயல்படக்கூடாது. அழகர்சாமியின் குதிரையைக் கிழித்துவிட்டார்கள் என்கிறார் அறிவுமதி. அந்தக் குப்பையைக் கிழிக்கத்தான் முடியும். நல்ல முயற்சி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டால் நல்லது என்று நினைப்பவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அதை மட்டுமே சொல்லிவிட்டுச் சென்றுவிடமுடியாது என்பதுதான் உண்மை. எடிட்டர் மோகன் தெளிவாகச் சொல்கிறார், விமர்சனம் கலெஷனைப் பாதிக்கக்கூடாது என்று. அறிவுமதியும் இதே வியாபாரத்தைத்தான் வேறு வேறு மொழிகளில் சொல்கிறார். எடிட்டர் மோகனின் நேர்மை முக்கியமானது. வியாபாரமே குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்வதில் சலனமில்லை. ஆனால் அறிவுமதி இலக்கியத்துக்கும் வியாபாரத்துக்கும் ஒரு நிலைக்கோட்டை வரையவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். எனவே தத்தளிக்கவும் செய்கிறார். எடிட்டர் மோகன் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுச் சொல்லுங்க என்கிறார். இது இன்னும் மோசமானது. ஒவ்வொரு இயக்குநரும் இப்படி தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுத் திட்டப்பட்டால் என்னாகும் என்பதை வியாபாரி எடிட்டர் மோகன் யோசிக்கவேண்டும். கொஞ்சம் கருணை காட்டுங்கள் மோகன். அறிவுமதியும் மனுஷ்யபுத்திரனைத் தனியே கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம் என்பதை சொல்லாமல் எடிட் செய்துவிட்டீர்களே மோகன்!
கமலை மனுஷ்யபுத்திரன் விற்றார் என்பதால் அவருக்கு விமர்சனம் செய்யத் சொல்லத் தகுதியில்லை என்றும் சொல்கிறார் அறிவுமதி. இதை காமெடி என்று தாண்டிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. மனுஷ்யபுத்திரனை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் எதையாவது சொல்லவேண்டிய பதற்றத்தில் அறிவுமதி உளறிக்கொட்டியதாக மட்டுமே இதனைச் சொல்லமுடியும். எஸ்ராவின் விழாவில் ரஜினியை அழைத்தது நிச்சயம் வியாபாரமே. ஆனால் அவர் வியாபாரம் செய்கிறார் என்பதற்காகவே இலக்கிய ரீதியிலான முக்கியமான கருத்தை முன்வைக்கத் தகுதியில்லாமல் ஆகிறார் என்பது சரியல்ல.
வழக்கு எண் போன்ற ஒரு சாதாரண படத்தை சாதாரண படம் என்று மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமை விமர்சகர்களுக்கு உள்ளது. இதைப் பார்த்து வருத்தப்படுபவர்கள் படம் எடுக்காமல் இருக்கட்டும் அல்லது விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கட்டும். விமர்சகர்களே பொங்கி எழுங்கள். 🙂 தமிழின் விடிவுகாலமே வழக்கு எண் என்ற லொட்டை படம்தான் என்னும்போதும் விமர்சகர்கள் வாய்மூடிக்கொண்டிருக்க அது என்ன ரஜினி படமா? கூல்!
முன்குறிப்பு: இந்தத் தலைப்பை வைத்துத்தான் கட்டுரையை ‘நிழல்’ இதழுக்கு அனுப்ப நினைத்தேன். ஆனால் கைகூடவில்லை. எனவே இங்கே இந்தத் தலைப்பு வைக்கப்படுகிறது!
—
இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும். (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்.) இந்தக் கட்டுரையின் முதல் வரி அல்ல இது. இதுதான் புத்தகத்தின் பெயரே. எழுதியவர் பி.ஆர். மகாதேவன். இந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகும் தமிழ் இயக்குநர்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, என்ன நேர்ந்தாலும் டென்ஷன் ஆகக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டு படிப்பது நல்லது. ரத்த அழுத்தத்துக்காக குளிகைகளை விழுங்கும் இயக்குநர்கள் இந்தப் புத்தகம் அருகில் வராமல் இருப்பதே நல்லது. தமிழகம் போற்றும் எந்த ஒரு வணிகப்பட இயக்குநருக்கும், கலை இயக்குநருக்கும் இது பொருந்தும். விமர்சனம் என்று வந்துவிட்டால் யாரை விமர்சிக்கிறோம் என்பதல்ல பொருட்டு. நேர்மையாக விமர்சிக்கிறோமா, நாம் விமர்சிப்பதில் ஓர் அடிப்படை நியாயம் ஒரு தார்மிகமும் உள்ளதா என்பது மட்டுமே பொருட்டு என்று வைத்துக்கொண்டு, யாரையும் விட்டுவைக்காமல் எவ்வித சமரசமும் இல்லாமல் வெளுத்து வாங்குகிறார் மகாதேவன்.
இங்கே பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், இந்த மகாதேவன் திரையுலகத்துக்குள் புக விரும்புகிறார் என்பது. இந்தப் புத்தகம் அதற்கு உதவும் என்று அவர் நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால் எனக்கென்னவோ இந்தப் புத்தகமே அவருக்கு எதிரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இதுவும் ஒரு கொடுப்பினையே. மகாதேவனுக்கு வாழ்த்துகள்.
எட்டு முக்கியமான திரைப்படங்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் பிரச்சினைகள் என்ன என்ன, அவை எப்படி திரைக்கதையாக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று விளக்குகிறார். ஒரு சிறிய காட்சியைக்கூட விட்டுவைப்பதில்லை. கதையையே மாற்றவேண்டுமானாலும் சிறிதும் தயங்குவதில்லை. (தான் எந்த விதத்திலும் கதையை மாற்றவில்லை என்று தன் நிலையை நியாயப்படுத்த அவர் முனையக்கூடும்.) முக்கியமான விஷயம், தான் விமர்சிக்க எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு படத்துக்கும் மேம்பட்ட தனது திரைக்கதையையும் பதிவு செய்கிறார்.
இந்தப் புத்தகத்தில் அலச அவர் எடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள்: நந்தலாலா, அங்காடித் தெரு, ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், ஏழாம் அறிவு, எங்கேயும் எப்போதும், நான் கடவுள். இந்தத் திரைப்படங்களை அலச அவர் எடுத்துக்கொள்ளும் மிக முக்கியமான விதி – எல்லாப் படங்களையும் கலைப்படங்களாக மாற்ற முனைவதில்லை. கலைப்படங்களே தமிழின் மிக முக்கியமான படங்களாக இருக்கவேண்டும் என்றுதான் மகாதேவனும் விரும்புகிறார். என்றாலும் வணிகப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் ஏன் கலைத்தன்மை இல்லை என்று விவரிக்கத் தொடங்கி இல்லாத ஊருக்குப் போகாத வழியை அவர் காண்பிப்பதில்லை. வணிகப்படங்களின் மேம்பாடாக அவர் சொல்லும் திரைக்கதையும் வணிகப்படங்களை ஒத்ததாகவே உள்ளது. அடிப்படையில் வணிகப்படங்களை அவர் ஏற்காவிட்டாலும், அவற்றின் அடிப்படைக் கதையையும் அதற்கேற்ற பிசகாத ஒரு திரைக்கதையையும் முன்வைப்பதன்மூலம் மேம்பட்ட வடிவத்தைக் கொடுக்க இயலும் என்பதுதான் அவர் சொல்ல வருவது. இதனைப் புத்தகம் நெடுகிலும் எவ்வித சறுக்கலும் இன்றிக் கடைப்பிடிக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
அதேபோல் எவ்விதக் கவனிப்பும் இன்றிக் கேட்பாரற்ற திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் குறைகளைச் சொல்ல முனையவில்லை. ஓரளவுக்கு மக்கள் வரவேற்பையும் ஓரளவுக்கு இலக்கியக் கவனிப்பையும் பெற்ற படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அவற்றின் மேம்பாட்டுத் திட்டங்களை முன்வைக்கிறார். இதனால் மிக எளிதாக தனது திரையறிவு பற்றிய அஸ்திவாரத்தை நிறுவிக்கொள்கிறார். தான் ஓர் இலக்கியவாதியாகத் திரைப்படத்தை அணுகுகிறோம் என்கிற பெருமிதம் இருப்பதை முன்னுரையிலேயே உணர்ந்துகொண்டுவிடமுடிகிறது.
ஆனால் ஒருவகையில் முன்னுரையே இவருக்கு எதிரான அஸ்திரமாகத் திரும்பக்கூடும். முன்னுரையில் இவரது வாதங்கள் எல்லாமே ஒரு படைப்பு எப்படிக் கலையாக வேண்டும் என்பதன் பொருட்டே உள்ளது. ஆனால் திரைப்பட அலசல்கள் என்று வரும்போது வணிக ரீதியான படங்களை அதே அலைவரிசையில் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகிறார். முன்னுரையைப் படித்துவிட்டு திரைப்பட அலசல்களை எதிர்கொள்ளும் வாசகன் மிக எளிதாக ‘கலையை அடிப்படையாக கொண்ட விமர்சகரின் திரைக்கதை ஏன் மீண்டும் வணிகக்குப்பைக்குள் செல்கிறது’ என்ற கேள்விக்குள் சென்றுவிடமுடியும். இதற்கான பதிலை மகாதேவனின் தொடர் திரைக்கதை அலசல்கள்தானே தருகின்றனவே ஒழிய, முன்னுரை தரவில்லை.
இந்த நூலின் வழியாக மகாதேவன் எதிர்கொள்ளப் போகும் இன்னொரு விமர்சனத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு படைப்பை ஒரு இயக்குநர் எடுக்கிறார். அது அவரது படைப்பு. அதில் நிறை குறைகள் இருக்கலாம். ஆனால் அந்தப் படைப்பு அப்படைப்பாளியின் சுயம் சார்ந்தது. (காப்பி அடிக்கப்படும் படங்களுக்கு இது பொருந்தாது.) அவரது சுதந்திரம் சார்ந்தது. இதை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் உண்டு. இதே உரிமையில்தான் மகாதேவன் செயல்படும் இடமும் இருக்கிறது. ஆனால் அப்படைப்பாளி அப்படி எடுக்கக்கூடாது, இப்படி எடுக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை விமர்சகனுக்கு இல்லை. அதேபோல் படைப்பாளியின் திரைக்கதையில் உள்ள ஓட்டையை தன் திரைக்கதை மூலம் எப்படிச் சரி செய்யலாம் என்று சொல்ல முனையும்போது, ஒட்டுமொத்தக் கதையையே எப்படி மாற்றுவது என்று சொல்ல முனைவதும் சரியானதல்ல என்றே தோன்றுகிறது. திரைக்கதைகளின் பழுது நீக்கம் ஒரு கட்டத்தில் கதையின் பழுது நீக்கமாகிறது.
இந்தப் பிரச்சினையைப் புத்தகத்தில் அலசப்படும் ஒவ்வொரு திரைப்படத்தின் மேம்பட்ட திரைக்கதையிலும் காணமுடிகிறது. நந்தலாலாவின் கதையில் யார் யாரைத் தேடவேண்டும் என்று முடிவெடுக்கிறார். அங்காடித் தெருவின் கதையே மாறிப் போகிறது. ஆடுகளத்திலும் இப்படியே. அழகர்சாமியின் குதிரையில் கதையைக் கொஞ்சம் மாற்றினாலும், பாஸ்கர் சக்தியின் மூல சிறுகதையோடு அதை ஒட்ட வைப்பதன்மூலம், தனது கதை மாற்றலுக்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொள்கிறார் நூலாசிரியர். தெய்வத்திருமகள் கதையிலும் இதனை அதன் மூல வடிவோடு ஒப்பிட்டு மேம்படுத்த முனைந்துவிடுகிறார். நான் கடவுளின் கதையே மாற்றம் பெறுகிறது. இதன் அடிப்படையாக மகாதேவன் சொல்வது, ஒவ்வொரு கதையின் அடிப்படையையும் நான் மாற்றவில்லை, மாறாக அதன் போக்கில் செய்யும் மாற்றம் மூலம் அதை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியே பேசுகிறேன் என்பது. அதாவது ஒவ்வொரு கதையும் என்னதான் ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும், அதன் அடிப்படை ஒரு விதிக்குள் கட்டுப்பட்டதே என்றும், விதியை மீறிய ஆட்டம் கதைக்கு ஆகாது என்றும் வாதிடுகிறார்.
விதியை மீறும் ஆட்டம் என்பதே ஒரு கலையின் முன்னகர்வைக் கொண்டுவரும். இந்த இடத்தில் நான் மகாதேவனுடன் கடுமையாக வேறுபடுகிறேன். உதாரணத்துக்கு ஆடுகளம் படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் எப்படி ஒரு குருவை அப்படிச் சித்திரிக்கலாம் என்றும், ஒரு குரு என்பவர் அப்படிச் செயல்படமாட்டார் என்றும் வாதிட்டு குரு சார்ந்து ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அக நம்பிக்கைகளுக்குள் இறங்கிவிடுகிறார். ஆனால் ஒரு குரு என்பவரை ஒரு படைப்பாளி எப்படிப் படைக்கவேண்டும் என்பது அவரது சுதந்திரம் அல்லவா. துரோகம் செய்யாத குரு உலகத்தில் இல்லையா என்ன? அல்லது அப்படி ஒரு கற்பனையை உருவாக்கக்கூடாதா? இது போன்ற உளச்சிக்கல்களே இந்நூலாசிரியரின் பிரச்சினைகளாக உள்ளன. இன்னொரு மனப்பதிவு, இந்நூலில் தொடர்ந்து பதிவு செய்யப்படும் கிராமத்து மனிதர்கள் பற்றியது. கிராமத்து மனிதர்கள் பற்றிய ஒரு பதிவை இவராக மனத்தில் உருவாக்கிக்கொண்டு, ஒரு திரைப்படத்தில் வரும் கிராமத்து மனிதர்கள் பற்றிய காட்சி அந்தப் பதிவுக்கு மாறானதாக இருக்குமானால், அதனை விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறார். எல்லா மனிதர்களையும் போல கிராமத்து மனிதர்களும் எல்லா நிறங்களும் கலந்த கலவைகளே. அங்காடித் தெரு பற்றிய விமர்சனத்தில், முலையைக் கசக்கும் கங்காணியைப் பொறுத்துக்கொண்டு எப்படி ஒரு கிராமத்துப் பெண் அமைதியாக இருப்பாள் என்கிறார். அதே திரைப்படத்துக்கு இவர் முன்வைக்கும் மேம்பட்ட திரைக்கதை வடிவத்தில் வரும் காட்சியில், கிராமத்து அம்மா முன்பு அதே கங்காணியால் திருடனாக நிற்க வைக்கப்படும் மகனைப் பார்த்தும், அந்தக் கிராமத்துப் பெண் சீறாமல் தலையைக் கவழ்ந்துகொண்டு, தன் நிலையை நினைத்துக்கொண்டு போகிறாள். அது எப்படி ஒரு கிராமத்தில் இருந்து வந்த இரு பெண்கள் இரு மாதிரியாகச் செயல்படமுடியும்? இதிலேயே இருக்கிறது மகாதேவனுக்கான விடை. ஒவ்வொரு படைப்பாளியும் தன் மனிதர்களைத் தன் தர்க்கத்துக்குள்ளே படைத்துக்கொள்ள முடியும். அது அவனது சுதந்திரம். அந்த சுதந்திரம் என்பது வாழ்க்கையின் மிக ஆதாரமான யதார்த்தத்தை மீறக்கூடாது என்பது மட்டுமே. மாறாக, இந்த யதார்த்தம் எந்தவித குண இயல்புகளையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்த முடியாது.
இந்தப் புத்தகத்தில் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் மகாதேவன் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அக்கட்டுரைகளின் தொகுப்பே புத்தகமாக்கப்பட்டுள்ளது. வலைப்பதிவின் கட்டற்ற சுதந்திரம் இல்லையேல், இது போன்ற கட்டுரைகள் எந்த இதழில் வந்திருக்கும் என்ற ஆச்சரியம் தோன்றாமலில்லை. கட்டற்ற சுதந்திரமே இணையத்தின் வரமும் சாபமும். வரம் என்று இக்கட்டுரைகளை எடுத்துக்கொண்டால், சாபம் என்று இக்கட்டுரைகளில் வரும் சில வார்த்தைப் பிரயோகங்களைக் குறிப்பிடவேண்டும். தணிக்கை செய்யப்படாத பச்சை எழுத்து தரும் அதிர்ச்சி, வலைப்பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஏற்படாது. அதனையே தொடர்ந்து எழுதும் வலைப்பதிவர்களுக்கும் ஏற்படாது. ஏனென்றால் அதில் என்ன தவறு என்ற மனப்பதிவு ஆழமாக ஏற்பட்டிருக்கும். அடிமையில் மோகம் போல. அதிலிருந்து விலகி ஒரு புத்தகமாகப் படிக்கும்போது அந்த மொழி தரும் அதிர்ச்சி சொல்லமுடியாதது. இந்த அபாயத்தை முன்வைத்தே பல இயக்குநர்கள் இந்தப் புத்தகத்தைப் புறக்கணிக்கவோ பழிக்கவோ கூடும். இதனை இந்நூலாசிரியர் தவிர்த்திருக்கலாம்
இந்நூலில் வரும் இன்னொரு எளிமையான தவறு – தனது தர்க்கத்தை ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்கிக் காட்டுவது. எடுத்துக்காட்டுகள் வெறும் எடுத்துக்காட்டுகளே அன்றி அவை உண்மை அல்ல. இதனாலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் ஒன்று ஓர் எளிமையான எடுத்துக்காட்டு மூலம் விளக்கப்படும்போது அதன் உணர்ச்சிகரமான மூலம் எல்லாவற்றையும் இழந்து வெறும் வார்த்தையாகிவிடுகிறது. இதனை எதிர்கொள்பவர்கள் இன்னொரு எடுத்துக்காட்டின் மூலம் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். இதனால் விவாதம் என்பது மூலத்தின் கருவிலிருந்து விலகி எங்கேயோ சம்பந்தமற்ற ஒரு வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும். பட்டிமன்றங்களில் நாம் அடிக்கடி இதனைப் பார்க்கலாம். எதை விவாதிக்கவேண்டுமோ அதனை விட்டுவிட்டு அது தொடர்பாகச் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகளில் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். இதனையும் நூலாசிரியர் தவிர்த்திருந்திருக்கலாம்.
அதேபோல் நூலாசிரியர் செய்யும் இன்னொரு தவறு, யதார்த்தம் என்ற ஒன்றை தனக்கு நேரும் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து கட்டமைப்பது. இதில் உண்மை இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தே யதார்த்தமின்மைக்குட்பட்ட பல நிகழ்வுகளும் உருவாகின்றன என்ற இன்னொரு எளிய உண்மையை வைத்துப் பார்த்தால், தனிப்பட்ட அனுபவங்கள் என்பவை எப்படி வெறும் தனிப்பட்ட அனுபவங்களாகவே எஞ்சிவிடுகின்றன என்பதைப் பார்க்கலாம். தனிப்பட்ட அனுபவங்கள் பொதுக் கருத்தாக முகிழவேண்டுமானால், அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம். மகாதேவன் பாணியிலேயே ஓர் எடுத்துக்காட்டு மூலம் சொல்லவேண்டும் என்றால், காந்தி அல்லது அம்பேத்கரின் தனிப்பட்ட அனுபவத்தின் முக்கியத்துவத்தை யோசிக்கச் சொல்வது ஓர் எளிய வழி. ஒரு தனிப்பட்ட சாதாரண மனிதனுக்கு ஏற்படும் அனுபவமும், அனுபவம் என்ற அளவில் அதற்கு இணையானதே என்றாலும், அதன் வீச்சு எப்படித் தேங்குகிறது என்பதை அறியலாம். இந்த எடுத்துக்காட்டைச் சொல்வதுகூட, ஓர் எடுத்துக்காட்டு என்பதும், தனிப்பட்ட அனுபவமும் பொதுக்கருத்து என்ற பொதுவெளியில் (சில சந்தர்ப்பங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான நேரங்களில்) எத்தனை உள்ளீடு அற்றது என்பதைச் சொல்லவே.
மகாதேவன் எழுதியிருக்கும் ஒவ்வொரு திரைப்பட விமர்சனத்துக்கும் மேம்படுத்தப்பட்ட திரைக்கதைக்கும் பதிலாக சில விஷயங்களைச் சொல்லமுடியும். பல இயக்குநர்கள் அப்படி விரும்பவும் கூடும். இப்படி ஒரு விவாதம் உருவாவதும் நல்லதே. ஒரு புத்தகத்தின் தேவையும் இதுதான்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்நூலில் பலம் என்ன? இந்நூலின் பலம், நூலாசிரியரின் நேர்மை. இன்னொன்று, நூலாசிரியரின் சுயம். இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை உயிர்ப்புள்ளதாக்குகின்றன. இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை ஓர் இலக்கியப் பிரதியாக்குகின்றன. இந்த இரண்டும்தான் இந்தப் புத்தகம் குறித்த விவாதத்தை முன்னெடுக்கப்போகும் காரணிகளாகவும் இருக்கும். ஒருவகையில், மகாதேவன் திரைப்பட விமர்சனத்தை முன்வைக்கும்போது இலக்கியவாதியாகவும், திரைக்கதை எழுதும்போது திரைப்படவாதியாகவும் மாறுவதைப் பார்க்கமுடிகிறது. ஓர் எழுத்தாளரின் சுயமான சிந்தனை என்பது மிகவும் முக்கியமானது. சுயத்தோடு கூடிய கடும் உழைப்பு மிகப்பெரிய வாசல்களைத் திறக்கக்கூடியது. இதுவே ஓர் எழுத்தாளனுக்கு இலக்கிய முக்கியத்துவத்தை அளிக்கவல்லது. நேர்மையுடன் கூடிய சுயம் என்பது எல்லாவித நிறை குறைகளுடனும் வசீகரம் மிக்கது. இந்த வசீகரமே இந்நூல்.
இந்நூல் விடுக்கும் செய்தி என்று பார்த்தால், இப்படித் தொகுக்கலாம். தமிழில் நான்கைந்து படங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் [வீடு, சந்தியா ராகம், உன்னைப் போல் ஒருவன் (கமல் படம் அல்ல! ஜெயகாந்தனின் படம்), ஹே ராம் (இது கமல் படம்தான்!)] உலக அளவிலான திரைப்படங்கள் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும். கொஞ்சம் கறார்தன்மையை விட்டுவிட்டுப் பார்த்தால் இன்னொரு 10 படங்கள் தேறலாம். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், அழியாத கோலங்கள் போன்றவை. ஆனால் நமக்கிருக்கும் திறமைக்கு நாம் கொஞ்சம் முனைந்தால் சிறப்பான படங்களை மிகச் சிறப்பான படங்களாக மாற்றலாம். இதுதான் மகாதேவன் சொல்ல வருவது. சொன்னவிதம் கொஞ்சம் கவலரப்படுத்துவதாக இருந்தாலும், அதிலிருக்கும் உண்மை நம்மை அமைதிப்படுத்துகிறது. மெல்லச் சொன்னால் புரிவதில்லை என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இதனை ஒரு வாசகன் புரிந்துகொள்ளக்கூடும். இயக்குநர்கள் புரிந்துகொள்ள கொஞ்சம் திறந்த மனம் வேண்டும். அந்த திறந்த மனத்தை நோக்கிய முதன்மைப் புள்ளிகளில் ஒன்றாக இப்புத்தகமும் அமையவேண்டும். அமையும் என்றே நம்புகிறேன்.
சுமாராக இருக்கும் என்று நினைத்துத்தான் இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். 9 நாள்களில் எடுக்கப்பட்ட படம் என்றும், 90 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் என்று கூகிள் சொல்லவும், இப்படி விளம்பரத்துக்காகவும், சாதனைக்காகவும் எடுக்கப்பட்ட படங்களின் லட்சணங்கள் எப்படி இருக்கும் என்ற ஓர் அனுபவம் தந்த எச்சரிக்கையே இப்படி ஒரு முன்முடிவு வந்ததற்குக் காரணம்.
அதிலும் சுரேஷ் கோபியும் பார்த்திபனும் நடிக்கிறார்கள் என்றதும் என் அச்சம் பலமடங்கு கூடிவிட்டது. போடா புல்லே என்று சொல்லாமல் சுரேஷ் கோபி நடித்த படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும் என்றாலும், அவர் போடா புல்லே சொல்லாத படங்கள் வெகு குறைவு என்பதே என் அச்சத்துக்குக் காரணம். பார்த்திபன் என்ற பெயரே போதும் பயந்து நடுங்க.
இத்தனையையும் மீறியே இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். என்ன அறுவையாக இருந்தாலும், வேற்று மொழி என்பதால் மலையாளப் படத்தைப் பார்த்துவிட முடிகிறது. எனவே இதனையும் பார்த்துவிடலாம் என்று பார்க்கத் தொடங்கினேன்.
ஆனால் தொடங்கிய பத்து நிமிடங்களில் இந்தப் படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. சுரேஷ் கோபியின் அலட்டாத நடிப்பும், (சுகர் வந்து முகம் இறுகிப் போன) பார்த்திபனின் இறுக்கமான நடிப்பும் படத்தைப் பிடிக்கச் செய்துவிட்டது. ஒரே அறைக்குள் நடக்கும் கதை. மேஜர் மார்ஷல் என்ற விசாரணையைப் பற்றிய படம். பார்த்திபன் தன்னைவிட மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்றுவிடுகிறார். இருவரைச் சுடுகிறார், ஆனால் ஒருவர்தான் மரணமடைகிறார். இன்னொருவர் தப்பித்துவிடுகிறார். தாந்தான் சுட்டதாக ஒப்புக்கொள்ளும் பார்த்திபன் மீதான விசாரணையில், டிஃபெண்ஸ் தரப்பில் ஆஜராகி, அவர் ஏன் சுட்டார் என்பதற்கான காரணங்களைக் கண்டடைகிறார் சுரேஷ் கோபி.
எதிர்பாராத ஒரு காரணம் சொல்லப்படும் தருணத்தில் அந்தப் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. ஏதேனும் செண்டிமெண்ட்டாக ஒரு காரணம் இருக்குமென்று நினைத்தேன். பாதி படம் கடக்கையில், வேகமாக பார்த்திபன் ஓடி, தனனிவிட உயர்ந்த ரேங்க்கில் இருக்கும் அதிகாரி தோற்கக் காரணம் ஆவதும், அதனால் எரிச்சலடையும் உயரதிகாரி பார்த்திபனை ரேக்குவதும், அந்தக் கோபத்தில்தான் பார்த்திபன் கொன்றிருப்பார் என்றும் நினைத்தேன். அல்லது இதனை ஒட்டிய காரணங்கள் பின்பு விரிவாகும் என்று நினைத்தேன். விரிவாகியது. அனைத்துக்கும் காரணம், பார்த்திபன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்பது.
தன்னைவிட நன்றாக ஓடும் பார்த்திபன், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவன் என்பதைவிட தன்னைவிடத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதே உயரதிகாரியை வெறுப்படைய வைக்கிறது. அவர் பார்த்திபனைத் தொடர்ந்து ஏசுகிறார். தோட்டி என்றும், பறையன் என்றும், பறையனிண்டே மோன் என்றும் ஏசுகிறார். இவரோடு சேர்ந்துகொண்டு இன்னொரு உயர்சாதி அதிகாரியும் பார்த்திபனை ஏசுகிறார். ஒரு கட்டத்தில் பார்த்திபனின் தாயைத் தகாத வார்த்தை கொண்டு ஏசுகிறார்கள். கோபமடையும் பார்த்திபன் துப்பாக்கியால் சுடுகிறார். ஓர் அதிகாரி இறந்துபோகிறார். இன்னொரு அதிகாரி தோள்பட்டையில் குண்டு பாய்ந்து, உயிர் பிழைத்துக்கொள்கிறார்.
இவை அனைத்தும் ஒரே அறையில் சுரேஷ் கோபி செய்யும் விசாரணைகளில் வெளிப்படுகின்றன. ஒரு காட்சிகூட நேரடிக் காட்சி கிடையாது. எல்லாமே விசாரணைகள் மட்டுமே. உயர்சாதி உயரதிகாரி மமதையோடு பேசுகிறார். தரவாடித்துவம் (பாரம்பரியம்) இல்லாதவனெல்லாம் ராணுவத்துக்கு வரப்போய்த்தான் ராணுவ மரியாதையே போய்விட்டது என்கிறார். தனது பாரம்பரியம் எங்கே, இவன் எங்கே என்று பார்த்திபனை தூஷிக்கிறார். இவரது தரவாடித்துவத்தைப் பல கேள்விகளில் சிதறடிக்கிறார் சுரேஷ் கோபி. இக்காட்சி பத்து நிமிடங்கள் வரலாம். திரையில் இப்படி ஒரு காட்சி வருவது அதிசயம் என்றே கொள்ளவேண்டும். ஜாதியைச் சொல்லாமல், மேம்போக்காகப் பேசும் படங்களே நமக்குப் பழக்கமானவை. இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இல்லாமல், உயர்சாதித் திமிர் மிக அழகாக அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபூர்வம்.
தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான பார்த்திபனே, உயர்சாதி அதிகாரிக்காக மரணமடையும் ஒரு ராணுவக்காரரின் மகளைத் தத்தெடுத்து வளர்ப்பது. ஆனால் தனக்காக உயிரிழந்த ராணுவக்காரருக்கு உயர்சாதி அதிகாரி எதுவுமே செய்வதில்லை. இதுதானா தரவாடித்துவம் என்று கேட்கிறார் சுரேஷ் கோபி. உயர்சாதி இதற்குச் சொல்லும் பதில் – அது அவன் கடமை.
இன்னொரு சுவாரஸ்யம், இப்படம் தமிழில் வந்துவிட்டது என்கிற கூகிள். உள்விலாசம் என்ற பெயரில். ஏற்கெனவே மேல்விலாசம் என்ற படம் தமிழில் உள்விலாசம் என்ற பெயரில் வரும் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் வந்ததாகத் தெரியவில்லை. வந்திருந்தால், இந்த பறையன், தோட்டி, உயர்சாதி வசனங்கள் தமிழில் என்னவாகின என்றறிய ஆவலாக உள்ளது. தமிழில் இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு கொடுங்கனவு போலத்தான் இருக்கும். ஆனாலும் யாரேனும் தமிழில் பார்த்தால் அதைப் பற்றிச் சொல்லுங்கள்.
உணர்ச்சிமயமான நாடகத்தனமான இறுதிக்கட்ட காட்சியோடு படம் முடிவடைகிறது. சுட்டது தவறுதான் என்று பார்த்திபனுக்கு மரண தண்டனையை மார்ஷல் விதிக்கிறது. நேர்மையான அதிகாரியான வழக்கை நடத்தும் அதிகாரி தனது தீர்ப்பை பார்த்திபனிடம் சொல்லிவிட்டு, உண்மையை நோக்கி வணக்கம் சொல்வதாகச் சொல்லி சல்யூட் அடிக்கிறார். இதற்கிடையில் உயர்சாதி அதிகாரிக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது. யதார்த்தம்.
படத்தின் குறைகள் என்ன என்று பார்த்தால், இப்படத்தைத் தமிழிலும் வெளிடவேண்டும் என்பதற்காக, சரியாக மலையாளம் பேசத் தெரியாத, தமிழ்போல் மலையாளம் பேசும் நடிகர்களான பார்த்திபனையும், தலைவாசல் விஜய்யையும் நடிக்க வைத்தது. மலையாளத்தைக் கடித்துக் குதறுகிறார்கள். மற்ற படங்களில் மற்ற மலையாள நடிகர்கள் பேசும் தமிழைக் காட்டிலும் இது பேதம் என்பது உண்மையே. ஆனாலும் இவர்கள் தமிழ் பேசுவது போன்றே உள்ளது. ஒரே அறை தரும் அலுப்பு. ஆனாலும் இந்த அலுப்பை இயன்றவரைப் போக்கும் அளவுக்கு வேகமான திரைக்கதை உண்டு என்றே சொல்லவேண்டும். படத்தின் ப்ளஸ், சுரேஷ் கோபியின் சுத்தமான வசனம் பேசும் முறை. படத்தின் பலமே அதுதான் என்று தெரிந்துகொண்டு தெளிவான மலையாளத்தில் அழகாகப் பேசுகிறார். பொதுவாகவே இவர் இப்படித்தான் பேசுவார் என்றாலும், இந்தப் படத்துக்கு இது அப்படியே பொருந்திப் போகிறது. பாடல்களோ, அசட்டு காமெடிகளோ எதுவுமே இல்லை. ஆகச்சிறந்த படம் என்றோ மாற்றுத் திரைப்படம் என்றோ கூற முடியாது. ஆனால் நல்ல படம். நிச்சயம் பார்க்கலாம். ராணுவத்துக்குள்ளே நடக்கும் தகிடுதத்ங்களைச் சொல்லும் படம் என்பதால் முக்கியமான படமும் கூட.