Tag Archive for Bapasi

Pity Bapasi

ஒருமுறை பரிக்ஷா ஞாநியிடம், இப்படிப் பல தவறுகளைப் பற்றிப் பேசுகிறீர்களே, பபாசியின் தவறுகளைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்று கேட்டேன். அவர் மிகத் தெளிவாக, மிகப் பொறுமையாக, பபாசி என்பது பதிப்பாளர்களுக்கான கூட்டமைப்பு, பொதுமக்களுக்கும் அதற்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை, எனவே அதை நாங்கள் எங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றார். அதுதான் மிகச் சரியான பதிலும் கூட.

இன்று எதற்கெடுத்தாலும் பபாசியை அனைவரும் ஒரு தட்டு தட்டுவதைப் பார்க்கிறேன். பபாசியில் சில குறைகள் இருக்கலாம். சில பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியது இருக்கலாம். ஆனால் அது பொதுமக்கள் கோபம் கொண்டு தாக்கக்கூடிய அளவுக்கான அமைப்பு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்

அங்கே இடதுசாரிகளும் திகவினரும் கூடுதலாக இருக்கிறார்கள் என்றால், இயல்பாகவே தமிழ்நாட்டில் அப்படித்தான் பதிப்புலகம் இருந்தது. பபாசி அதை வேண்டுமென்றே உருவாக்கவில்லை. வேண்டுமென்றே எந்த ஒரு பதிப்பாளருக்கும் மதத்தை காரணம் காட்டி அல்லது கொள்கையைக் காரணம் காட்டி எதுவும் தரப்படாமல் போனதில்லை. பொதுவாகப் பல பதிப்பகங்கள் பபாசியின் மெம்பர்ஷிப்புக்குக் காத்திருக்கின்றன என்பது தனிக் கதை. தொடர்ந்து எத்தனையோ ஆன்மீகப் பதிப்பகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கூடுதலான பதிப்பகங்கள் நம் கொள்கையில் வர வேண்டும் என்றால் அதற்கு நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். குறைந்தபட்சம், அப்படி ஒரு நோக்கத்துடன் செயல்படும் பதிப்பகங்களில் புத்தகங்களை வாங்கியாவது ஆதரிக்க வேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டியது, செய்ய முடிவது.

எனவே பாசியை விட்டுவிடுங்கள். அது ஒரு சிறிய அமைப்பு. நீங்கள் கோபம் கொள்ள எத்தனையோ அநியாயங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. முடிந்தால் அதன் பக்கம் பார்வையைத் திருப்புங்கள்.

Share