Library Order – TamilNadu – Scam – 2026

பெருமாள் முருகனின் கட்டுரை இங்கே.

நூலக ஆணையில் கடந்த திமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டது என்று அனைவரும் அப்போது எழுதினார்கள். அது தவறு என்று நான் அப்போதே சொன்னேன். பேசு தமிழா யூ டியூப் சானலில் ஒரு பேட்டியில் இது குறித்துத் தெளிவாகச் சொன்னேன். இந்த அரசு செய்தது, நூலக ஆணைக்காக நூல்களை அப்ளை செய்வதை ஆன்லைனில் கொண்டு வந்தது. வெளிப்படைத்தன்மை என்பது ப்ராசசை மாற்றுவது அல்ல, யார் யார் என்னென்ன புத்தகங்களைப் பதிப்பித்தார்கள், என்ன என்ன புத்தகங்களை நூலகத்துக்குச் சமர்ப்பித்தார்கள், எந்தெந்த நூல்களுக்கு ஆணை வழங்கப்பட்டது, எந்தெந்த நூல்களுக்கு வழங்கப்படவில்லை என அனைத்தையுமே ஒருவர் தெரிந்து கொள்ளும் சுதந்திரம் இருக்க வேண்டும். அதாவது ஆர் டி ஐ ரை டு இன்ஃபர்மேஷன் அல்ல, நாமாகவே தெரிந்து கொள்ளும் சுதந்திரம், right to know. எப்படி ஒரு தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் நிற்கிறார்கள், எத்தனை பேர் ஏற்கப்பட்டார்கள், எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டார்கள் என்று நாம் யாரிடமும் கேட்காமல் தெரிந்து கொள்கிறோமோ, அதுபோல.‌ இது நிகழாத வரை வெளிப்படைத்தன்மை நூலகப் புத்தக கொள்முதலில் வந்தது என்று சொல்லவே முடியாது. மாறாக கடந்த திமுக அரசு செய்தது என்னவென்றால் இந்த பிராசஸை எளிமையாக்கியது. அது மிகப்பெரிய முன்னெடுப்பு, அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் அதனாலேயே அதில் ஊழல் நடைபெறாது என்று நம்ப இடமில்லை. இதை நான் எனது பேட்டியிலேயே தெளிவாகச் சொல்லி இருந்தேன். இன்று கண்முன்‌ காண்கிறோம்.

-oOo-

எழுத்தாளர்களின் கொந்தளிப்பைப் பார்க்கிறேன். நூலக ஆணை மோசடி விவகாரத்தில் மறந்தும் கூட திமுக என்றோ திராவிடம் என்றோ ஒரு சொல் வராமல் பார்த்துக் கொண்டு அழகாகக் கண்டிக்கிறார்கள். எழுத்தாளர்கள் என்றால் சும்மாவா!!

சிஎம் விஜய் மட்டும்தான் அடித்து நொறுக்குகிறார்.

இன்னும் எத்தனை காலம் தான் எழுத்தாளர்கள் இப்படியே காலத்தை ஓட்டுகிறார்கள் என்று நானும் பார்க்கிறேன்.

-oOo-

புத்தகங்களைப் பரிந்துரைக்கும் குழுவில் நான் இருந்தேன் என்று ஆளாளுக்கு வரிசையாகச் சொல்லும் பொழுது இவர்களைத் தாண்டி எப்படி கம்யூனிசமல்லாத திராவிடமல்லாத புத்தகங்கள் நூலகங்களுக்குள் வரும் என யோசித்துப் பாருங்கள். இங்கு மாற்றுக் குரலுக்கு இடமே கிடையாது. ஒரே குரல் தான் அது திக திராவிட கம்யூனிசக் குரல் மட்டுமே. மாற்றுக் குரல்களும் அவர்கள் மட்டுமே. இப்போது நடக்கும் ஊழல் மற்றும் பிற சண்டைகளும் இந்தக் கருத்துகளுக்குள்ளாகவே. மற்றவர்கள் யாரும் ஒரு பொருட்டே அல்ல.

-oOo-

டெண்டர் கொடுத்து, கொள்முதல் வாங்கியது கடந்த ஆட்சியில் என்று அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளரே சொல்லிவிட்டார். இனியாவது திமுகவினர் உருட்டாமல் இருங்கள்.

-oOo-

கோயமுத்தூர் பெரியார் அறிவுலகம் மாட்டிக்கொண்டது. திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருச்சி, தென்காசி போன்ற ஊர்களில் உள்ள நூலகங்களுக்கும் ஆணை இதே சமயத்தில்தான் வழங்கப்பட்டது. இன்னும் கூடுதலாகச் சில ஊர்கள் இருக்கலாம். அந்த ஊர்களில் உள்ள புத்தங்களையும், நூலக ஆணைகளையும் சோதிக்கவேண்டும்.

பொதுவாகத் தரப்படும் மையப்படுத்தப்பட்ட நூலக ஆணைகளுக்கான சமர்ப்பிப்பு ஆன்லைனில் நடந்தது. அதில் ஓரளவுக்கு நியாயமான நடைமுறை இருந்தது. ஆனால், அங்கேயும் இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டனவா என்பதையும் சோதிப்பது நல்லது. அதாவது இரண்டு வகை செயல்பாடுகள் உள்ளன. நியாயமான புத்தகங்களுக்கு ஆர்டர் தருவது. அது நடந்திருக்கும். கூடவே அநியாயமான புத்தகங்களுக்கும் ஆர்டர் தருவது. அது நடந்திருக்கிறதா என்று முழு சோதனை அவசியம்.

இதை யாராவது தவெக அரசுக்குச் சொல்லுங்கள்.

-oOo-

சூட்டோட சூட்டாக இதற்கும் சேர்த்து ஒரு பதில் கண்டுபிடித்து விடுங்கள். தேன் சிட்டு, ஊஞ்சல் என்ற இதழ்கள் எல்லாம் எப்போதிருந்து கொண்டுவரப்பட்டன? எந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன? இந்தப் பத்திரிகையை நடத்தியது யார்? ஆசிரியராக இருந்தது யார்? ஆசிரியரை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட்டது? இதில் கட்டுரை எழுதியவர்கள் யார் யார்? அவர்களுக்கு என்ன பணம் தரப்பட்டது? அல்லது மாணவர்களுக்காக ஒரு பைசாவும் வாங்காமல் எழுத்தாளர்கள் எழுதித் தந்தார்களா? எப்படி கட்டுரை எழுத வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? பொதுவில் அறிவித்து யார் வேண்டுமானாலும் கட்டுரை அனுப்பலாம் என்று சொல்லி அந்தக் கட்டுரைகளை தேர்ந்தெடுத்தார்களா? தனியார்ப் பள்ளிகள் இந்த‌ இதழ்களை வாங்கினவா? எத்தனை தனியார் பள்ளிகள் வாங்கின? எத்தனை இதழ்கள் மாதம்தோறும் அச்சிடப்பட்டன? எந்த இடத்தில் அச்சிடப்பப்பட்டது? ஒரு இதழுக்கு எவ்வளவு ரூபாய் செலவானது? அதேபோல லேஅவுட் செய்ய எவ்வளவு பணம் யாருக்கு எப்போது எப்படித் தரப்பட்டது? இந்த இதழ் இப்போதும் வருகிறதா?

இப்படி எல்லாம் பல சந்தேகங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டு விட்டால் நல்லது.

இதில் எனக்கு எதுவுமே தெரியாது. பார்வையாளராக இதெல்லாம் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்ற அர்த்தத்தில் மட்டும் தான் இதை எழுதுகிறேன். மிக நேர்மையாக நடந்து ஊழலே நடைபெற்றிருக்காவிட்டால் அதற்காக அந்த அரசைப் பாராட்டத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றேன். எனது ஆசையை நிறைவேற்றி விடுங்கள்.

Share

Comments Closed