ஜெயமோகனின் ஆலம் நாவல் வாசித்தேன்.
நாவலின் ப்ளஸ் பாயிண்ட் என்ன என்று பார்த்தால், கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்தில் படித்து முடித்தேன் என்பதுதான். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவே இருக்கிறது.
ஆனால், இது ஒரு இலக்கிய நாவலைப் போல இருக்கிறதா என்றால் இல்லை. இதற்கான காரணம், இது நாவலாக எழுதப்படாமல் ஒரு வலைத் தொடராக எழுதப்பட்டு, பின்னர் நாவலாக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்கிறேன்.
முன்பு அனல் காற்று வாசித்தபோதும் எனக்கு இப்படி ஒரு எண்ணம் எழுந்தது. நாவலாக எழுதப்படும் ஜெயமோகனின் எழுத்துகளை விட, இப்படி எழுதப்படும் நாவல்கள் தேவையே இன்றி அதீத வேகத்தில், எந்தவிதத் தர்க்கமும் இன்றி, ஒரு இலக்கிய நாவலுக்குரிய ஆழத்தை விட்டுச் செல்கின்றன என்பதே என் மனப்பதிவு. இந்த நாவலில் அது பல மடங்கு எனக்குத் தெரிந்தது.
அதேபோல், நிறுத்தி நிதானமாக அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு, சினிமாவுக்கே உரிய அடுத்தடுத்த காட்சிக்கான பரபரப்பு தோன்றும் வகையில் நாவல் முழுக்க எனக்குத் தென்பட்டது. ஒருவேளை வலைத் தொடருக்காக எழுதப்பட்டது என்ற ஆழ்மனப் பதிவில் நான் படித்ததால் எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம்.
ஆனாலும், ஜெயமோகனின் பல முக்கியமான நாவல்கள் தரும் அழுத்தம் இதில் இல்லை. பல வசனங்கள், குறிப்பாக வார்த்தைத் தேடல்கள், வேண்டுமென்றே ஒரு அதிர்ச்சியைத் தர வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டது போல் தோன்றின. அதாவது, அந்த வரிக்குரிய எதார்த்தமான வார்த்தைகளாக அவை இருந்திருக்கவில்லை. அதே சமயம், ஒரு திரைப்படமாகவோ வலைத் தொடராகவோ வந்தால் இந்த வார்த்தைகள் கண்டிப்பாகக் கவனிக்கப்படும் என்பதிலும் மாற்றம் இல்லை.
ஒரு பிராமணக் கதாபாத்திரம் வருகிறது. வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், அந்தச் சுவாரஸ்யத்திற்காகவே அது பிராமணக் கதாபாத்திரமாகப் படைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. திரைப்படமாக யோசித்துப் பார்த்தால், இந்தக் கதாபாத்திரம் மற்ற எந்த ஒரு கதாபாத்திரத்தையும் விட மிகப் பிரமாதமாக மேலெழுந்து வந்திருக்கும்.
அதேபோல், இறுதிக் காட்சியில் சந்தானத்தைத் தேடி மடிப்பிச்சை ஏந்தி அம்மாவும் மகனும் நிற்கும்போது, ஏதோ ஒரு வகையில் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையின் இறுதி முடிவை எனக்கு ஞாபகப்படுத்தியது. இரண்டுக்கும் ஸ்நானப் பிராப்தியே கிடையாது. ஆனாலும், உள்ளார்ந்த ஓர் ஒற்றுமை எனக்குத் தோன்றியது. நாவலின் இறுதியில் இரண்டு நாவல்களும் ஒரே புள்ளியில் சந்தித்தன என்பதிலும் மாற்றமில்லை.
உண்மையில், இது திரைக்கதையாக வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். நிச்சயம் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால், அதை வலைத் தொடராகப் பார்த்திருந்தால் எப்படி வந்திருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. ஏனென்றால், அது நடிக்கும் நடிகர்களையும் எடுக்கப்படும் விதத்தையும் சார்ந்தது.
நேரம் இருப்பவர்கள், ஒரு த்ரில்லர் திரைப்படத்தை இலக்கியப் பிரதியாக வாசித்துப் பார்க்கலாம் என நினைப்பவர்கள் வாசிக்கலாம். Don’t miss வகையறா என்ற நாவலுக்குள் இது வரவில்லை.


