Tag Archive for கன்னடம்

கீதா (கன்னடம்)

கீதா (க) – கோகக் கிளர்ச்சி என்று சொல்லப்படும் கிளர்ச்சி, கர்நாடகத்தில் கோகக் (ஞானபீட விருது பெற்றவர்) என்பவரால் கன்னட மொழிக்காக தொடங்கப்பட்ட கிளர்ச்சி. மூன்று மொழிக் கல்விக் கொள்கையைக் கைக்கொண்டிருந்த கர்நாடகாவில், பள்ளிகளில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகள் கன்னடத்தைவிட அதிகம் முக்கியத்துவம் பெற்றதால், அதை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சி இது. இப்படியே போனால் எதிர்கால சந்ததி கன்னடத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்று அஞ்சி, கன்னடத்தை அலுவல் மொழியாக ஆக்க இக்கிளர்ச்சி செய்யப்பட்டது. முதலில் சுணங்கி இருந்த இந்தப் போராட்டம், ராஜ்குமார் தலைமையில் கர்நாடகாவின் முழு ஆதரவையும் பெற்றது. இந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம் கீதா! இந்தப் பின்னணியில் வரும் காட்சிகளில், பள்ளிகளில் ஹிந்தி ஆங்கிலத் திணிப்பைக் காட்டாமல், ஊரில் மற்ற மொழிக்காரர்களின் வளர்ச்சியைக் காண்பித்து, அதை எதிர்த்துப் போராட்டம் என்று கொண்டு போகிறார்கள். அதிலும் தமிழ் பேசும் நான்கு பேரை கணேஷ் அடித்து நிமிர்த்துகிறார். அடுத்த காட்சியிலேயே பெங்காலிப் பெண்ணைக் காதலிக்கிறார். கோகக் கிளர்ச்சியை மையமாகக் கொண்டு வரும் காட்சிகள் வரை படம் பார்க்கும்படியாகவே உள்ளது. அதற்குப் பின்பு அது காதல் படமாகி எங்கெங்கோ அலைந்து எப்படியோ போய், சீக்கிரம் முடிங்கய்யா என்று கதறும்போது முடிகிறது. இதெல்லாம் நமக்கெதுக்கு? ஆனால் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.

ஷங்கர் நாக்-கின் (பழைய) கீதா என்னும் திரைப்படம் கன்னட க்ளாஸிக் என்று சொல்லப்படுகிறது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சாகா வரம் பெற்றவை. ஜொதயலி ஜொத ஜொதயலி (விழியிலே மணி விழியில் – தமிழில்) பாடல் கர்நாடகாவின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தில் வரும் கேளதே நிமகீஹா (தேவதை இளம் தேவி – தமிழில்) பாடலும் மிக நன்றாக இருக்கும். அதே போல் சந்தோஷக்கே ஹாடு என்ற பாடல் கர்நாடகாவின் பட்டி தொட்டிகளிலும் நிச்சயம் ஒலித்திருக்கும். இளையராஜா ரம்மியமான ஒரு பொழுதில் இந்தப் படத்தின் பாடல்களைப் போட்டிருக்கவேண்டும். ஏனே கேளு கொடுவே ஈகா பாடல் அத்தனை இனிமையாக இருக்கும். இந்த ஜொத ஜொதயலி பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்றே கணக்கில்லை.

(புதிய) கீதா படத்தில் முதல் காட்சியிலேயே (பழைய கீதா படத்தின்) ‘கீதா சங்கீதா’ பாடல்தான். ஹெட்போனில் படம் பார்க்க ஆரம்பித்தபோது இந்தப் பாடல் ஒலிக்கவும் ஏற்பட்ட புல்லரிப்பு கொஞ்சநஞ்சமல்ல. இளையராஜாவின் இசை என்னை எங்கோ கொண்டு போய்விட்டது. கமலின் ஏக் துஜே கேலியே படத்தைப் பார்க்கப் போகும் ஹீரோயினுக்கு கணேஷ் ராஜ்குமாரின் பெருமைகளைச் சொல்லி, கமலே புகழ்ந்த நடிகர் ராஜ்குமார் என்று சொல்லும் வசனமும் உண்டு. கன்னடத்தின் பெருமைகளைச் சொல்லும் கணேஷ், ராஜ்குமாரின் ஒரு பாடலைக் குறிப்பிட்டு சிலாகிக்கிறார். அது, ஜீவா ஹூவாகிதே. இதுவும் ராஜா இசை! கேட்டாலே மனதை உருக்கிவிடும் ஒரு காதல் பாடல்.

நல்லா எழுதுறீங்கய்யா வசனமும் திரைக்கதையும்!

Share

ஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்

சென்ற ஞாயிற்றுக் கிழமை இரவு. சென்னை மழையில் குளிர்ந்துகொண்டிருந்த வேளையில் என்ன செய்வது என்று தெரியாமல், மூளைக்கு வேலையே வைக்காத படம் எதாவது பார்ப்போம் என்று அமேஸான் ப்ரைமில் தேடினேன். கிட்டத்தட்ட 40 நாள்களாக எந்தப் படமும் பார்த்திருக்கவில்லை. தேடுதலில் கண்ணில் பட்டது, ஆயுஷ்மான்பவ என்ற கன்னடப் படம். ஷிவராஜ்குமார் நடித்தது. இயக்கம் பி.வாசு என்று கண்ணில் படவும், இதுதான் நான் தேடிய படம் என்று பார்க்கத் துவங்கினேன்.

வாசுவுக்கு இசையின் மீது என்னவோ அடங்காத வெறுப்பு இருக்கிறது. அதை இசையின் மீதான காதல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். இசை எல்லாவற்றையும் சரி செய்கிறது. குடும்பத்துக்குள் இருக்கும் சண்டையை, பைத்தியத்தைக் கூட குணம் செய்கிறது. ஏன் ஷிவ்ராஜ்குமார் இதையெல்லாம் செய்கிறார் என்றால், அவர் டாக்டர், மனோதத்துவ நிபுணர், பாட வரும், ஆட வரும், சண்டை போட வரும், சமைக்க வரும், அன்பு பொழிய வரும். சந்திரமுகி ரஜினிக்கும் அண்ணன்! பைத்தியக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய், காடெல்லாம் சுற்றி, கிராஃபிக்ஸ் புலி துரத்த, குத்துப் பாட்டு ஆட, போலிஸ் தேட, இசையாலே அந்தப் பெண்ணைக் குணப்படுத்துகிறார். உதவுவது எப்போதும் நெற்றியைச் சுருக்கியபடியே பேசும் சுஹாசினி அக்கா! பத்தாததற்கு ஷிவராஜ் குமாரின் அப்பா நம்ம ஊர் பிரபு. அவரால் உட்காரவோ எழுந்திருக்கவோ முடியவில்லை. பாவமாக இருந்தது. சின்னதம்பி நினைவுக்கு வந்தது! கடைசியில் ஷிவ்ராஜ் குமார் அந்தப் பெண்ணையே கைப் பிடிக்கிறார். ஆனந்த் நாக்தான் தாத்தா.

இடைவேளை வரை கொஞ்சம் அறுவையாக இருந்த படம், இடைவேளைக்குப் பிறகு தாங்கவே முடியாத அறுவையாகிவிட்டது. இரண்டே இரண்டு விஷயங்கள் கொஞ்சம் பரவாயில்லை, ஒன்று பாடல்கள். இன்னொன்று, காமெடி. காமெடி என்றால் சாது கோகிலாவின் இரட்டை அர்த்த காமெடி அல்ல. அது சந்திரமுகியின் வடிவேலு-ரஜினி காமெடியின் நகல். இங்கே நன்றாக இருந்தது, ரங்காயன ரகுவின் காமெடி. கலக்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும். ஷிவராஜ்குமார் மிக நன்றாகவே நடித்தார். படம் நொந்து நூலாகி முடிந்தபோது ஞாயிறு முடிந்துவிட்டிருந்தது. மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்த்து நம்மை நாமே திட்டிக் கொள்ள ஏற்ற படம். தேவைப்படுபவர்கள் பார்க்கவும்.

Share

உலிதவரு கண்டந்த்தெ – Ulidavaru kandanthe

நேற்றைய தி ஹிந்துவில் வெளியாகி இருந்த நவின் பாலியின் பேட்டிக்குப் பின்னர்தான் அவர் நடித்து வெளிவரப்போகும் ரிச்சி திரைப்படம், உலிதவரு கண்டந்த்தெ (மற்றவர்களின் பார்வையில்) என்ற கன்னடப் படத்தின் ரீமேக் எனத் தெரிந்தது. உடனே இப்படத்தைப் பார்க்க ஆர்வம் கொண்டேன். டொரண்ட் சரணம். இந்த உலிதவரு கண்டந்த்தெ என்ற பெயர் மனதில் பதியவே மாட்டேன் என்கிறது. உச்சரிப்பும் இதுதான் சரியா எனத் தீர்மானமாகத் தெரியவில்லை. இப்படியெல்லாம் தமிழில் சோதிக்காமல் ரிச்சி என்று தெளிவாக வைத்துவிட்டார்கள்.

 

சில படங்களை ஏன் ஆர்வம் கொண்டு ரீமேக் செய்கிறார்கள் என்பது புரியாத புதிர். சிலர் சில படங்களை ஏன் தயாரிக்கிறார்கள் என்பதும் புதிரே. லூஸியா அற்புதமான திரைப்படம். சமீபத்தில் வந்த இந்தியத் திரைப்படங்களில் இது முக்கியமானது என்பது என் பார்வை. அதைத் தமிழில் எடுக்க சித்தார்த் நினைத்தது எனக்குத் தந்த ஆச்சரியம் இன்னும் தீரவில்லை. இப்படம் ஓடாது என்று நிச்சயம் சித்தார்த்துக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆனாலும் தமிழில் எடுத்தார். தமிழிலும் எனக்குப் பிடித்திருந்தது. சிலர் தமிழில் நன்றாக இல்லை என்றார்கள். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதேபோல், நடிகை சௌந்தர்யா த்வீபா என்ற படத்தைத் தயாரித்ததும் எனக்கு ஆச்சரியமான ஒன்றே. இப்படிச் சில ஆச்சரியங்களைத் திரைப் பிரபலங்கள் தந்தவண்ணம் உள்ளார்கள்.

தமிழில் (மலையாளத்திலும் வருகிறது எனத் தெரிகிறது) உலிதவரு கண்டந்த்தெ ரிச்சியாக வருவது இன்னொரு ஆச்சரியம். இந்தப் படம் லூஸியா போல் வணிக ரீதியாக நிச்சயம் வெற்றியடைய முடியாது என்று சொல்லமுடியாது. கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஓரளவு நல்ல வசூலைச் செய்துள்ளது எனத் தெரிகிறது. படம் நல்ல பாராட்டைப் பெற்றிருக்கிறது. இப்படியே தமிழில் எடுத்தால் இப்படம் பாராட்டப்படும் என்றாலும், வணிக வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஆனால் கொஞ்சம் தமிழுக்கு ஏற்றபடி மாற்றினால் நிச்சயம் விக்ரம் வேதா அளவுக்கு நல்ல பெயர் பெறுவதோடு நல்ல வசூலையும் செய்யலாம்.

ஆய்த எழுத்து, விருமாண்டி மாதிரியான உத்தி கொண்ட திரைப்படம். இந்த உத்தி இல்லாவிட்டால் இதெல்லாம் ஒரு கதையே அல்ல என்று இடதுகையில் தள்ளிவிட்டுப் போய்விடலாம். படம் பார்த்த முடிந்த பின்பும் இதில் கதையே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் படத்தை எடுத்த விதம் அசத்தலாக உள்ளது. பொதுவாக கன்னடப் படங்களில் (நான் மிகக் குறைந்த படங்களையே பார்த்துள்ளேன்) இது விஷுவலாக கொஞ்சம் மேன்மை காட்டுகிறது. (இதிலும் சில காட்சிகள் டெக்னிகலாக கொஞ்சம் பின் தங்கி உள்ளன என்பதும் உண்மையே.) இதையெல்லாம் தமிழில் பக்காவாகச் செய்தால் இன்னும் மெருகு கூடலாம்.

கன்னடத்தில் உடுப்பியைக் களமாகக் கொண்டு ஜன்மாஷ்டமி தினம் நடக்கும் மாறுவேடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை. நேற்றைய தி ஹிந்து பேட்டியில் திருநெல்வேலி வட்டார வழக்கைப் பேசத்தான் 50 நாள்கள் ஆகியது என்றும் படம் எடுக்க 30 நாள்தான் ஆனது என்றும் நவின் பாலி சொன்னதை வைத்துப் பார்த்தால், குலசேகரன் பட்டணத்தில் நடக்கும் தசராவை எடுத்துக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது. டீஸரை வைத்து இதை முடிவு செய்யமுடியவில்லை. படம் வந்தால்தான் தெரியும்.

உலிதவரு கண்டந்தெ படத்தில் நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி (இவரே இயக்குநரும் கூட என அறிந்தபோது ஆச்சரியம் இரண்டு மடங்காகிவிட்டது) அசரடித்துவிட்டார். உண்மையில் படம் பார்க்க ஆரம்பிக்கும் முன்பு, கன்னடத்தில் யார் நடித்திருந்தாலும் அதைவிடப் பல மடங்கு நிச்சயம் நவின் பாலி நன்றாக நடிப்பார் என நினைத்துக்கொண்டுதான் பார்க்கத் துவங்கினேன். ஆனால் படம் பார்த்தபின்பு, ரக்‌ஷித் ஷெட்டி அளவுக்கு நவின் பாலியால் நடிக்கமுடியாது என்று எண்ணம் வந்துவிட்டது. ரக்‌ஷித் ஷெட்டியின் நடையும் துள்ளலும் அலட்டலும் வசனம் பேசும் விதமும் அந்த பெல்ட்டை அணிந்துகொண்டிருக்கும் விதமும் – என்ன சொல்ல, அற்புதம். (இவரே கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு படத்தில் நடித்தவர். அந்தப் படத்திலும் அட்டகாசமாக நடித்திருந்தார். உண்மையில் அந்தப் படத்தில் அவர் அப்பாவுடன் சேர்கிறாரோ இல்லையோ, அவரது காதலியுடன் சேரவேண்டும் என்ற நினைப்பைக் கொண்டு வந்தது அவரது நடிப்பு!) நவின் பாலியும் நிச்சயம் கலக்குவார் என்பது உறுதி. ஆனால் திருநெல்வேலி வட்டார வழக்கு என்பதுதான் கொஞ்சம் நடுக்கத்தை வரவழைக்கிறது.

இந்தப் படத்தை ஏன் நவின் பாலி நடிக்க எடுத்தார் என்பது இன்னொரு ஆச்சரியம். ஏனென்றால் இப்படத்தில் மூன்று நடிகர்களுக்குச் சமமான வாய்ப்பு. தமிழில் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வேறு ஒரு தமிழ் நாயகன் என்றால் கூறு போட்டிருப்பார். இது நவின் பாலி என்பதால் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். கன்னடத்தில் நாயகியாக வரும் நடிகையைவிட தமிழில் வரப்போகும் ஸ்ரெத்தா அதிகம் நம்பிக்கை தருகிறார்.

உலிதவரு கண்டந்த்தெ மிக மெதுவாகவே நகர்கிறது. தமிழிலும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். எனவே படம் வந்தவுடனேயே பார்த்துவிடவேண்டும். நவின் பாலியின் முதல் தமிழ்ப்படம் என்று சொல்கிறார்கள். நேரம் படமும் தமிழ்ப்படம்தானே? இருமொழிப் படம் என்றுதான் நினைவு. இதுவும் இருமொழிப் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தால் மலையாளத்தில் நிச்சயம் ஒரு ப்ளாக் பஸ்டராக இருக்க வாய்ப்பு அதிகம். தமிழில்தான் என்ன நடக்கும் என்று சொல்லமுடியவில்லை. என் கணிப்பில் நல்ல பெயர் வாங்கி, அதிலுள்ள குறைகள் முன்னிறுத்தப்பட்டு படம் வசூலில் சுணங்கும் என்றே தோன்றுகிறது. அப்படி நடக்காமல் இருக்கட்டும்.

Share

நானு அவனல்லா, அவளு (கன்னடம்)

நானு அவனல்லா, அவளு (கன்னடம்)

மரத்தடி யாஹூ குழுமத்தில் (2002வாக்கில் இருக்கலாம்) ஒரு கவிதைப் போட்டி நடைபெற்றது. ஒரு கவிதை அனைவரையும் திடுக்கிட வைத்தது. அனைவரையும் அக்கவிதையைப் பற்றிப் பேச வைத்தது. ஒரு கவிதையை யாரோ எழுதுவதற்கும், பாதிக்கப்பட்ட ஒருவர் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை மிகத் துல்லியமாகக் காட்டியது அக்கவிதை. கவித்துவம் என்ற தூய அளவுகோல் கூட உணர்ச்சிக் குவியலின் நேர்மையின் முன்பு தகர்ந்துபோகும் என்பதற்கு அக்கவிதை ஒரு உதாரணம். அக்கவிதையை எழுதிய லிவிங் ஸ்மைல் வித்யா ஒரே நாளில் மரத்தடி யாஹூ குழுமத்தில் பிரபலமானார்.

2005/06 வாக்கில் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு புத்தகம் அனைவரையும் பேச வைத்தது. புத்தகக் கண்காட்சியில் மட்டும் ஆயிரம் புத்தகங்களுக்கு அருகில் விற்ற முதல் புத்தகம் அதுவாக இருக்கலாம் என நினைக்கிறேன். கிழக்கு பதிப்பகம் அப்போதுதான் தோன்றியிருந்த புதிய பதிப்பகம். அந்தப் புத்தகம், நான் (சரவணன்) வித்யா.

2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது விஜய் என்ற நடிகருக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் விஜய்யாக இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிந்ததாலேயே யார் இந்த விஜய் என்று பார்க்க ஆர்வம் வந்தது. படத்தின் பெயர், நானு அவனல்ல அவளு என்பது கூடுதல் ஆர்வத்தைக் கொண்டுவந்தது. பின்னர்தான் தெரிந்தது, இப்படம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட லிவிங் ஸ்மைல் வித்யாவின் நான் வித்யா புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று. இப்படத்தைப் பார்க்க நினைத்தேன்.

 

தமிழ்நாட்டில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களைப் பார்த்துவிடலாம். கன்னடப் படங்களைப் பார்ப்பது கடினம். சிடியும் கிடைக்காது. (இன்று வரை ஒரு மொட்ட்யின கதா பார்க்கக் கிடைக்கவில்லை.) பெங்களூருவில் இருக்கும் ஒருவர் மூலம் நானு அவனல்லா அவளு கிடைக்குமா என முயன்றேன். கிடைக்கவில்லை அல்லது விலை அதிகம் என்று என்னவோ காரணங்கள்.

நேற்று தற்செயலாக யூ டியூப்பில் தேடினேன். இப்படம் சிக்கியது. உடனே பார்த்தேன். கொஞ்சம் மோசமான் ப்ரிண்ட் தான், ஆனாலும் வேறு வழியில்லை.

படத்தை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், அட்டகாசம். கண்டிப்பாகப் பாருங்கள். லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருமே அற்புதம்தான். அதிலும் திருநங்கையாக வரும் விஜய் என்ற நடிகரின் நடிப்பு, வாய்ப்பே இல்லை. படத்தின் இயக்குநரின் தெளிவு, இப்படத்தை உணர்ச்சிகரக் குவியலாக மாற்றாமல் அப்படியே எடுத்ததுதான். மிகப் பொறுமையாக நிதானமாகச் செல்லும் திரைக்கதை. திருநங்கைகளின் உலகம் விரியும் காட்சிகள் எல்லாம் பொக்கிஷம். மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இசையும் பாடலும் படத்தோடு அப்படியே பொருந்திப் போகிறது.

இது போன்ற மாற்றுத் திரைப்படங்களுக்கு தொடக்கம் முடிவு என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இப்படத்தின் முடிவு ஒரு மெல்லிய கீற்று தென்படுவதாகக் காட்டப்படுகிறது. மகிழ்ச்சி. யாரையும் குற்றம் சொல்லாமல் யாரையும் திட்டித் தீர்க்காமல் மிகப் பொறுமையாக சமூகத்தை எதிர்கொள்கிறது இத்திரைப்படம். மனிதர்கள் இயல்பிலேயே கெட்டவர்கள் அல்ல. அதேசமயம் இதே மனிதர்களே மிகக் கோரமாகவும் திகழ்கிறார்கள். இந்த முரணுக்கிடையில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் திரைப்படம் இது. நிச்சயம் பாருங்கள்.

நடிகர் விஜய்க்கு விருது கொடுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. சரியாக எப்படி விருது கொடுத்தார்கள் என்று வேண்டுமானால் ஆச்சரியப்படலாம். பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளை ஆண்களின் ஆபாச நகல்களாகவே காட்டுவார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு (பாம்பே, நான் கடவுள், அருவி) மெல்ல வளர்ந்து வருகிறது என்றாலும் முழுமையான திருநங்கைப் படம் என்று ஒன்று வரவில்லை என்றே நினைக்கிறேன். (அல்லது சந்தோஷ் சிவனின் படம் ஒன்று வந்திருக்கிறதா? நவரசா? இதை நான் இன்னும் பார்க்கவில்லை.) உண்மையில் இப்படம் தமிழில் வந்திருக்கவேண்டும். கன்னடத்தில் வந்தது ஆச்சரியம்.

படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள், நடிகர் விஜய்யின் தற்போதைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டுப் படத்தைப் பாருங்கள். எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்று தெரியும். குடும்பத்துடன் பார்க்கலாம்.

யூ ட்யூப் லிங்க்: https://www.youtube.com/watch?v=bZSy3SNy1kA&t=213s

பின்குறிப்பு: லிவிங் ஸ்மைல் வித்யாவின் அரசியல் நிலைப்பாடு, கொள்கைத் தேர்வு எல்லாம் எனக்கும் தெரியும். எனவே அதை முன்வைத்து இப்பதிவை அணுகவேண்டாம்.

Share