Tag Archive for ஹிந்தி

Parasakthi – Tamil Movie

பராசக்தி – இயக்குநர் சுதா கொங்கரா தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்தினை நக்சலைட் போராட்டம் என்று புரிந்து கொண்டிருக்கிறார். தேடி தேடி மாணவர்களை காவல்துறை வேட்டையாடுவதும், போராட்டம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் வன்முறைகளும் படமுழுக்கக் கொட்டிக் கிடைக்கின்றன. மாணவர்களுக்கு நல்ல பெயர் வருவதற்காக, போராட்டக்காரர்கள் புகைவண்டியில் இருப்பவர்களை இறக்கிவிடுவது போலக் காண்பிப்பதும், பின்னர் தன் தம்பியை அடிக்க வருபவனைக் கொளுத்துவதும் என முன்னுக்குப் பின் முரணாகப் பல காட்சிகள். வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிட்டுப் பின்னர் இன்னொருத்தனை நடுத் தெருவில் கொளுத்துவானேன்?

உண்மையில் மாணவர்களால் நடத்தப்பட்ட (அப்படிச் சொல்லப்பட்ட) போராட்டம் இங்கே இந்த படத்தின் மூலம் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. மாணவர்கள் தன்னிச்சையாகப் போராட்டம் நடத்தினார்கள் என்பதை நம்ப முடியாது. எப்போதுமே எங்கேயுமே தன்னிச்சையாகப் போராட்டம் இந்தியாவில் நடக்க வாய்ப்புகள் குறைவு. யாரோ ஒருவர் பின்னால் இருந்துதான் நிச்சயம் அதை வழி நடத்தி இருக்க வேண்டும். சுதா கொங்கராவுக்கு திமுக மேல் என்ன கோபமோ தெரியவில்லை, மிகத் தெளிவாக இந்தப் போராட்டத்திற்கும் திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் திமுகவினர் ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டதாகக் கூட அவர் காண்பிக்கவில்லை.

ஹிந்தித் திணிப்பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் என்ன என்பதைப் பற்றிய விரிவான பிரச்சினைகளும் இந்தப் படத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை. ஒரே ஒரு நேர்காணலை மட்டும் காட்டிவிட்டு, திரைப்படத்துக்கு அது போதும் என்று முடிவு கட்டி விட்டார்கள்.

இயக்குநரின் இன்னொரு பிரச்சினை, இந்தியா முழுக்கத் தனக்கு நல்ல பெயர் வேண்டும் என்கிற எண்ணம். அதுதான் திரைப்படத்தின் திரைக்கதையே கந்தரகோலம் ஆக்கி விட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் இது ஹிந்திக்கு எதிரான போட்டம்தான், ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிரானதல்ல என்று சொல்வது படு செயற்கைத்தனம். சினிமாவில், மேடையில் இப்படி வசனம் பேசலாம். ஆனால் ஒரு போராட்டம் இப்படிப் பார்த்து பார்த்து இலையில் உணவு பரிமாறுவதுபோல் நடக்காது. எந்த வன்முறைக்கும் எந்தப் பேதமும் கிடையாது.

காலம் காலமாகத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தெலுங்கர்களும் ஆந்திரத் தெலுங்கர்களும் ஒன்றல்ல (இது கன்னடர்களுக்கும் பொருந்தும்) என்கிற புரிதல் மிக முக்கியம். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பக்கத்து வீட்டுத் தெலுங்கர்கள் தங்கள் வீட்டில் பேசிக்கொள்ளும் மொழி தெலுங்காக இருந்தாலும், அவர்கள் வீட்டுக்குள் செய்து கொள்ளும் சடங்குகள் தெலுங்கர்களுடையதாக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இணையாகவே (கூடுதலாகவே தமிழ் உணர்வுடன் என்று கூடச் சொல்லலாம்) வாழ்கிறார்கள். இது சக தமிழர்களுக்கும் தெரியும். இந்தப் படம் அதைச் சரியாகக் காண்பிக்கவில்லை. நல்லவேளை, கடைசியில் அந்தப் பெண் ஒரு வசனம் பேசுவதாகவாவது வைத்தார்கள்.

தன் இந்திய இமேஜைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழர்களின் போராட்டத்தில் தெலுங்கர்கள், கன்னடர்கள், சௌராஷ்ட்ராவினர், மலையாளிகள், இது போதாது என்று பெங்காலி பேசுபவர்கள் என அனைவரும் உயிரைக் கொடுத்தார்கள் என்று காண்பித்ததெல்லாம் அதீதம். இது படத்தின் நோக்கத்தைச் சிதைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிற மாநிலங்களில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு இணையாக (அத்தனை தீவிரமாக இல்லையென்றாலும்) தமிழ்/தமிழர் எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. அப்படி இருக்கும்போது அவர்கள் தமிழ்நாட்டுக்கு ரத்தம் சிந்தினார்கள் என்பதெல்லாம் காதில் பூச்சுற்றல். பேருந்தின் மீது ஏறி நின்று இங்கே ஹிந்திதான் வேண்டும் என்பதுதான் எங்கள் போராட்டம் என்று கதாநாயகன் சொல்வதெல்லாம் நகைச்சுவை வசனமின்றி வேறில்லை.

அதைவிட கொடுமை மாணவர்களின் போராட்டத்தை ஒரு காவல்துறை அதிகாரியின் ஈகோ கதையாக மாற்றியது. அதில் அவருக்கு அடையாளச் சிக்கல் வேறு. தான் தமிழனுக்குப் பிறந்தாலும் தன் உடம்பில் ஓடுவது ஹிந்தி ரத்தமே என்பதை நிரூபிக்கத்தான் இத்தனையும் அவர் செய்கிறார் என்பதெல்லாம், ஒட்டுமொத்தப் போராட்டத்தின் நியாயத்தைத் தவிடுபொடியாக்கிவிட்டது.

இது அப்பட்டமான பிரசாரப் படம் என்பதால், இந்தப் போராட்டத்தினால் உயிரிழந்த காவல்துறைக்காரர்களைப் பற்றி எதையுமே காண்பிக்கவில்லை. மொத்தம் பத்து காவல்துறை அதிகாரிகளாவது இறந்திருப்பார்கள் என்று வரலாறு சொல்கிறது. சமீபத்தில் கூட இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட காவல்துறை வீரர் ஒருவரது மனைவியின் பேட்டியை நாம் பார்த்தது நினைவிருக்கலாம்.

இந்தப் போராட்டம் நடந்தபோது முதல்வராக இருந்த பக்தவத்சலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் கொடுமை. அதிலும் பொள்ளாச்சியில் அனைவரையும் கொன்று குவிக்கிறேன் என்று காவல்துறை அதிகாரி செல்லும்போது, அதை ஒரு கொடூரமான மகிழ்ச்சியுடன் அவர் ஏற்பது போலக் காட்டியிருப்பதெல்லாம் கேவலம். தமிழில் ஒரு நடிகர் இதை நடித்தால் பிரச்சினை வரும் என்று நினைத்தார்களோ என்னவோ, ஒரு கன்னட நடிகரை (பிரகாஷ் பெலவாடி – நல்ல நடிகர்) நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் ரவி மோகனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்ற எல்லாமே வேஸ்ட்.

இந்திரா காந்தியாக நடிக்கும் அந்தப் பெண்ணின் பார்வை ஏன் அப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. டெல்லி சாலையில் நடக்கும் பைத்தியக்காரத்தனமான போராட்டத்தின் போது அவர் சாலையில் நின்று சிவகார்த்திகேயனை பார்த்த பார்வையைக் கண்டு, அடுத்த நொடியில் அவர் ஐ லவ் யூ சொல்லிடுவார் என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை.

இது தவிர, வரலாற்று ரீதியாக ஆயிரம் ஓட்டைகள். இந்திரா காந்தி கோவையில் நின்று கொண்டிருக்கும்போது எரிந்துகொண்டே புகைவண்டி வருவதெல்லாம் – ஏன் தமிழ் இயக்குநர்கள் இன்னும் இத்தனை பைத்தியங்களாக இருக்கிறார்கள் என்று நினைக்க வைத்த தருணம். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற தமிழ் வரலாற்றின் முக்கிய நிகழ்வைக் கூட இவர்களால் ஒரு ஹீரோயிஸப் படமாகத்தான் யோசிக்க முடிகிறது என்பது எத்தனை அவலம்! பெரிய மீனின் முள் போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு கதாநாயகி ரேடியோவில் பேசும் சீரியஸான காட்சிகளை எல்லாம் படமாக எடுக்கக் கூசி இருக்க வேண்டாமா? புறநானூற்றுப் படை என்று கப்சா விடும்போது அசிங்கப்பட்டிருக்க வேண்டாமா!

படத்தின் ஆக்கமும் மிக மோசம். தேவையேற்ற பல காட்சிகள். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் செயற்கைத் தனம். காதல் காட்சிகள், அண்ணன் தம்பி பாசம் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம். பார்க்கச் சகிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ஒரே ஒரு நன்மையை மட்டும் செய்திருக்கிறது. ஹிந்திக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை வைத்து மிக தீவிரமான ஒரு திரைப்படம் வருவதை இந்தப் படம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. அந்த வகையில் சுதா கொங்கராவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இசையைப் பற்றித் தனியே சொல்ல வேண்டும். மகா மட்டம்.

Share

Vedaa Hindi Movie

வேதா (H) – தலித் கொடுமைகளுக்கு எதிரான ஒரு ஹீரோயிஸத் திரைப்படம். இந்த வரிக்குள்தான் ஒரு படமாக இந்தப் படத்தின் தோல்வியும் அமைகிறது. தலித் திரைப்படங்களுக்கே உரிய யதார்த்தம் படம் நெடுக மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் அதை முறியடிக்கும் விதமோ, கொஞ்சம் கூட யதார்த்தமே இல்லாத ஹீரோயிஸ பாணியில் அமைகிறது.

Spoilers alert.

ஜான் ஆப்ரஹாம் சுடுகிறார் சுடுகிறார் சுட்டுக்கொண்டே இருக்கிறார். யாராக இருந்தாலும் அடித்துப் போட்டு துவம்சம் செய்கிறார். இவர் இதையெல்லாம் செய்யக் கூடியவர்தான் என்று பார்வையாளர்களை நம்ப வைப்பதற்காக, பக்காவாக முதல் காட்சியை வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனியாளாகச் சென்று, இந்திய ராணுவ உதவியுடன், பயங்கரவாதிகளைப் போட்டுத் தள்ளுகிறார். எனவே இவர் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்தாம் என்று வலுக்கட்டாயமாக நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

தலித் பெண் பாக்ஸிங் கற்றுக் கொள்ள நினைப்பதை, எப்படி உயர்ஜாதிக்காரர்கள் எதிரிக்கிறார்கள், எப்படி அந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஜாதிய வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் என்பதுதான் மையக் கதை.

ராஜஸ்தானில் நடக்கும் கதை. ராஜஸ்தானின் கிராமங்களையும் அங்கே நடக்கும் அநியாயங்களை ஒளிப்பதிவு அத்தனை அட்டமாசமாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இவையே படத்தின் பலம்.

ஜான் ஆப்ரஹாம் மொத்தமாக ஒரு பக்கம் வசனம் பேசினால் அதிகம். வழக்கம்போல பார்க்கிறார். சிரித்தால் விருது நிச்சயம் என்பது போலவே இருக்கிறார். தாலி கட்டும்போது மறந்து போய் சிரிக்கிறார்.

படத்தின் சுவாரஸ்யம் என்ன? படம் முடிந்த பின்பு சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இறுதிக் காட்சியில், இந்தக் கதை உண்மைக் கதைகளை மையமாக வைத்து எடுத்தது என்று சில சிலைடுகளைக் காட்டுகிறார்கள்.

நம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஜாதிய வன்கொடுமை ஏதேனும் நடக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும். எனவே ஆதாரம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும், இந்த ஆதாரங்களை ஆராய்ந்தேன். அங்கேதான் சில சுவாரஸ்யங்கள் கிடைத்தன.

இந்தப் படம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான படம். இதற்காக உண்மை நிகழ்வுகளைத் தங்களுக்கு வசதியாக, ஒரு திரைப்படத்துக்காக வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறில்லை. ஆனால் உண்மை நிகழ்வுகளைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

2015ல் மீனாக்‌ஷி குமாரி மற்றும் அவரது தங்கை இருவரையும் அந்த ஊர்ப் பஞ்சாயத்து பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஏன் சொல்லப்படுகிறது என்று சொல்கிறேன் என்றால், வழக்கில் இதற்கான ஆதாரம் தரப்படவில்லை. பெண்கள் சொன்ன வாக்குமூலத்தை வைத்தே வழக்கு பதியப்படுகிறது. காரணம் என்ன?

2011ல் இந்த இரு பெண்களின் சகோதரன், உயர்ஜாதிப் பெண், அதுவும் திருமணமான பெண்ணுடன் ஓடிப் போகிறான். இதன் காரணமாகவே இப்படி ஒரு தீர்ப்பு. இதை எதிர்த்து வழக்கு 2015ல் பதியப்படுகிறது.

இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த வழக்கு, அதாவது இரு பெண்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட ஊர்ப் பஞ்சாயத்தின் தீர்ப்பு பேசப்பட்டதாக கூகிள் சொல்கிறது. காரணம், ஆம்னெஸ்டி அமைப்பு இந்த வழக்கைக் கையில் எடுக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சகோதரிகளைப் பாதுகாக்கச் சொல்லி இந்தியாவுக்குச் சொல்லுங்கள் என்ற பிரசாரம் உலகம் முழுக்க வலுக்கிறது. வழக்கம் போல சி என் என், பிபிசி எல்லாம் களத்தில் குதிக்கின்றன.

திரைப்படத்தில், இரு பெண்களின் சகோதரன், திருமணமாகாத ஒரு பெண்ணைக் காதலித்து ஓடிப் போவதாகக் காட்டுகிறார்கள். திருமணமான பெண்ணுடன் ஓடிப் போவதாகக் காட்டி இருந்தால், ஒட்டுமொத்த படத்தின் ஆதாரமும் சிதைந்து போயிருக்கும். இப்படிச் சொல்வதால், பஞ்சாயத்து சொன்னது சரி என்பதல்ல. உண்மையில் பஞ்சாயத்துக்கு இப்படி எல்லாம் தீர்ப்புச் சொல்ல அதிகாரம் இருந்தது என்பதே அசிங்கம்.

சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இந்தப் பஞ்சாயத்து முறையை எப்படி ரொமாண்டிசைஸ் செய்தோம் என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் ஒரு நீதிபதியை கார் ஓட்டுநர் கேள்வி கேட்டு அசிங்கம் வேறு செய்வார். திரைப்படம் என்பது எதை நாம் காட்டுகிறோம் என்பதுதான்!

இந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்படும் இன்னொரு வழக்கு, 2007 மனோஜ் பாப்லி வழக்கு. இருவரும் காதலித்து ஓடிப் போய் கல்யாணம் செய்கிறார்கள். இருவரும் ஒரே ஜாதி. ஜாட். ஆனால் இவர்களது கல்யாணம் செல்லாது என்று ஊர்ப் பஞ்சாயத்து அறிவிக்கிறது. பெண்ணின் உறவினர்கள் போலிஸ் உதவியுடன் பெண்ணையும் பையனையும் தூக்குகிறார்கள். இருவரையும் சித்திரவதை செய்து, கொன்று, குட்டையில் வீசுகிறார்கள்.

பெண்ணின் குடும்பத்தினர் ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கிறது விசாரணை நீதிமன்றம். பஞ்சாயத்துத் தலைவருக்கு ஆயுள் தண்டனை. போலிஸுக்கு 7 வருடம் சிறை. ஆனால் உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடி, 2018ல் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.

இந்த இரண்டு வழக்குகளும் ஊர்ப் பஞ்சாயத்து முறைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. இதை அடிப்படையாக வைத்துத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஜாதியில் திருமணம். பெண் வீட்டார் ஏன் கொலை வரை சென்றார்கள்? இருவரும் ஒரே கோத்திரம். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதால் கொலைக்கு உத்தரவிட்டிருக்கிறது ஊர்ப் பஞ்சாயத்து! இதை பையன் வீட்டார் எதிர்க்க, அவர்கள் மீதும் கடும் கோபத்தில் இருந்திருக்கிறது பஞ்சாயத்து.

இப்படி ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்துகொண்டவர்களுக்காக ஹீரோ போராடினால் யார் பார்ப்பார்கள்? எனவே திரைப்படத்தில் தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மூன்றாவதாகக் காட்டப்பட்ட வழக்கு விவரம் நடந்தது தமிழ்நாட்டில்.

2011ல் ஆறுமுகம் சேர்வை வழக்குத் தீர்ப்பு. 1999ல் மதுரையில் ஜல்லிக்கட்டு சமயத்தில் தாழ்த்தப்பட்டவர்களை அவர்களது சாதியைச் சொல்லித் திட்டப்பட்ட வழக்கு. 500 ரூபாய் அபராதம், ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை தீர்ப்பு.

மேலே சொன்ன மூன்று வழக்கையும் வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

கதாநாயகி நீதிமன்றத்தை நம்பி ஓடுகிறாள். நீதிமன்றமே தாக்கப்படுகிறது. ஜாதியின் கைகளுக்குப் பயந்து நீதிபதிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். ஆனாலும் நீதி கேட்டு நிற்கிறாள் கதாநாயகி.

இந்தத் திரைப்படத்தில் ஹீரோவின் பெயர் அபிமன்யு. கடைசியில் ஜாதியவாதிகளின் வியூகத்தில் சிக்கித் தோற்கவேண்டும். ஆனால் அவன் யதா யதா ஹித்தர்மஸ்ய என்று சொல்லி, திரௌபதி வெல்லாமல் விடமாட்டாள் என்று நம்பிக்கையோடு கூறி, வில்லனைக் கொல்கிறான்.

நல்ல படமாக வந்திருக்கவேண்டியது, ரஜினி பாணி ஹீரோயிஸக் காட்சிகளால் கீழிறங்குகிறது. ஆனாலும் பார்க்கலாம்.

Share

Tehran Hindi Movie

Tehran (H) – ஜான் ஆபிரஹாமுக்கு எப்போதுமே ஒரு துரதிர்ஷ்டம் உண்டு. அவரது திரைப்படங்களுக்கு நிச்சயம் ஒரு மினிமம் கேரண்டி இருந்தாலும், ஏனோ அவை அதைத் தாண்டி மிகப் பெரிய வெற்றியைப் பெறாமல் போகும். அவரது திரைப்படங்கள் பெரும்பாலும், நம்ம ஊர் அர்ஜூன் / விஜய்காந்த்தின் திரைப்படங்கள் போல, நம் நாட்டுப் பற்றை ஒட்டியதாகவே இருக்கும். ஆனால் தரம், இவர்களின் படம் போல சப்பையாக இருக்காது. நிச்சயம் நன்றாகவே இருக்கும்.

டெஹ்ரான் அதற்குச் சிகரம் வைத்தது போல வெளியாகி இருக்கிறது. மேக்கிங்கைப் பொருத்தவரை இது ஹிந்திப் படம் என்ற பெயரில் வந்திருக்கும் ஆங்கிலப் படம்.

கதையெல்லாம் அதே நாட்டுப் பற்றுதான். ஆனால் அதை இந்தியாவில் நடந்த ஓர் பயங்கரவாத் தாக்குதல் முயற்சியுடன் முடிச்சுப் போட்டதிலும், அதை ஒட்டி அந்தக் கால அரசியலை மறைமுகமாக, உள்ளுறையாக விமர்சித்துக் காட்டியதிலும்தான் கவர்கிறது.

2012 வாக்கில் உலகின் மூன்று பகுதிகளில் ஒரே நாளில் இஸ்ரேலிய உயரதிகாரிகள் குறிவைக்கப்படுகிறார்கள். ஜார்ஜியா, தாய்லாந்து, மூன்றாவதாக இந்தியா. அதில் சம்பந்தமே இல்லாமல் பூ விற்கும் சிறுமி அநியாயமாகக் கொல்லப்பட, ஜான் அப்ரஹாம் இதற்குப் பின் உள்ள பின்னலைக் கண்டறிய முற்படுகிறார். இது சர்வதேசச் சதி என்று தெரிந்துகொண்டு, அதை முறியடிக்கக் கிளம்புகிறார்.

ஆனால் அவர் இந்தியாவால் கை விடப் படுகிறார். ஏன்? எண்ணெய் மற்றும் ஊழல் அரசியல். இஸ்ரேலால் புறந்தள்ளப்படுகிறார். ஈரானால் குறி வைக்கப்படுகிறார்.

இவற்றை எல்லாம் சமாளித்து எப்படி ஒட்டுமொத்த கும்பலையும் கண்டறிந்து சர்வர்தேச வலைப் பின்னலை முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை.

தொடக்கத்தில் வரும் சேஸிங் காட்சிகள் கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும், இந்திய அரசு ஆபரேஷனைக் கைவிடச் சொல்லியும் தன் திட்டப்படி ஜான் ஆப்ரஹாம் ஈரான் செல்ல முடிவெடுக்கும் காட்சியில் இருந்து இறுதி வரை படம் விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது. அபுதாபி மற்றும் ஈரான் காட்சிகள் கலக்குகின்றன.

வில்லனாக வரும் நடிகர் கலக்கிவிட்டார்.

மொத்தத்தில் தரமான படம். உண்மைச் சம்பவத்தில் எப்படிக் கற்பனையைக் கலந்து சிறப்பாக எடுக்கலாம் என்று பாடம் சொல்லும் இன்னுமொரு திரைப்படம்.

நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். ஸீ 5ல் கிடைக்கிறது.

Share

Hissab Barabar

Hissab Barabar (H)

கணக்கை நேர் செய்துவிட்டேன் என்று அர்த்தம். இன்னொரு ஆம் ஆத்மி படம். ஆம் ஆத்மி என்றால் அரசியல் கட்சி அல்ல, சாதாரண மனிதனின் படம். சாதாரண மனிதன் எப்படி தன்னை கார்ப்பரேட் வங்கி சுரண்டுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை மக்கள் முன் தோலுரிக்கும் கதை. அஞ்சு பைசா திருடினா தப்பா? அஞ்சு அஞ்சு பைசாவா அம்பது தடவை அம்பது கோடி பேர் திருடினா? இதுதான் கதையின் ஒன்லைனர்! சீரியஸான கதையை நகைச்சுவையாகச் சொல்கிறேன் என்று சோதித்துவிட்டார்கள். மாதவன் தானாகச் சிரித்துக்கொள்கிறாரே ஒழிய நமக்குச் சிரிப்பே வருவதில்லை. உச்சக்கட்டக் காட்சியில் 1,500 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டும் காட்சி, நம்ம ஊர் மெகா சீரியல்களில் கூட இதைவிட நன்றாக இருக்கும். நேர விரயம் செய்யத் தயாராக இருப்பவர்கள் பார்க்கலாம்.

Share

12th fail

12th Fail (H) – ஒரு நல்ல திரைப்படமும் நல்ல புத்தகமும் ஒரு வகையில் ஒன்றுதான். எப்போது அது நமக்கு நிகழ வேண்டும் என்றிருக்கிறதோ அப்போதே நிகழும். இந்தத் திரைப்படத்தைப் பல பல சமயங்களில் பலர் பார்க்கச் சொல்லியும் ஏதோ ஓர் உந்துதல் இன்றிப் பார்க்காமலேயே இருந்தேன். இன்று பார்த்தேன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு மனதைக் கொள்ளை கொள்ளும் மிக அருமையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. இது திரைப்படம் அல்ல, ஓர் அனுபவம். ஒவ்வொரு நடிகரும் எத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அதுவும் இறுதிக் கட்டக் காட்சியில் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது.

ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்படும் திரைப்படம், இருப்பதிலேயே சவாலானது. ஆனால்‌ இதில் கலக்கிவிட்டார்கள்.

ஒரே ஒரு வருத்தம்தான். இந்த ஐபிஎஸ் அதிகாரி அரசுக்கும் சமூகத்திற்கும் மண்டியிடாமல் கடைசிவரை இதே நேர்மையுடன் இருக்க வேண்டுமே என்பதுதான். ஓர் உட்டோப்பியன் உலகமாக இருந்திருக்கும் சாத்தியக்கூறு வந்திருந்தாலும் கூட, இந்தத் திரைப்படத்தில் இது உண்மைக் கதை என்று சொல்லாமல் இருந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அந்த அளவுக்கு இந்தக் கதாபாத்திரம் நேர்மையைத் தூக்கிப் பிடிக்கிறது. இயல்பான வாழ்க்கையில் அது அத்தனை எளிதானதல்ல. இந்தத் திரைக் கதாபாத்திரம் நிஜத்தில் தோற்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது உண்மைக் கதை என்பதை காட்டாமல் இயக்குநர் தவிர்த்திருக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் ஒன்றி விட்டேன்.

பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்து விடுங்கள். இந்தியத் திரை உலகம் பெருமை கொள்ளும் ஓர் அனுபவம் இந்த திரைப்படம்.

ஒவ்வொரு திரைப்படம் சில சமயம் மெதுவாகப் போகும். ஆனால் அப்படி மெதுவாகப் போகும் காட்சிகள் கூட ஒரு பரபரப்பை உருவாக்கினால் அதுவே அந்தத் திரைப்படத்தின் வெற்றி. இந்தத் திரைப்படம் அந்த வகையைச் சார்ந்தது. இறுதிக் காட்சியில் மெல்ல மெல்ல நகரும் விதமும், அந்த இசையும், அந்தப் பாடலும், கண்கலங்க நிற்கும் ஹீரோவும், ஃபோனில் பேசும் அம்மாவும், கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விடும் நண்பர்களும் என உணர்ச்சிமயமான தருணம். மறக்க முடியாத தருணம்.

தமிழ்த் திரைப்படங்களுக்கும் இத்திரைப்படத்தில் ஒரு செய்தி உள்ளது. இந்தப் படமும் ஒரு வகையில் ஒதுக்கப்பட்டவர்களின் நசுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் திரைப்படம்தான். ஆனால் இந்தத் திரைப்படத்தில் எந்த ஒரு சமூகத்தின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ வெளிப்படவில்லை. ஒட்டுமொத்தமான சமூகத்தின் மீதான கோபமும், அந்தச் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்கிற சரியான நோக்கமும் மிகக் கச்சிதமாக வெளிப்படும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்குரிய உண்மையான மனிதர் சம்பல் பள்ளத்தாக்கிலிருந்து வந்த ஒரு பிராமணர் என்று சொல்லப்பட்டாலும், திரைப்படத்தில் அவர் எந்த ஜாதி என்பதைக் காட்டவில்லை. மாறாக, மிகுந்த பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்து ஆங்கிலம் தெரியாமல் போராடும் ஒரு மனிதன், இந்தச் சமூகத்தில் எந்த அளவு கஷ்டப்படுகிறான் என்பதை விரிவாகக் காட்டி இருக்கிறார்கள். அப்படிக் காட்டும்போது அந்த மனிதருடன் சேர்ந்து, வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடும் மற்ற மனிதர்களின் கதைகளைச் சொல்லும் பொழுது, எந்த ஒரு குரோதத்தையும் வெளிப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார்கள். வீம்புக்காக யோசிக்காமல் அன்புக்காக யோசிக்கும் இயக்குநரால் மட்டுமே இப்படி ஒரு திரை அனுபவத்தை வழங்க முடியும்.

Share

Some movies

உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.

ப்ரைமில் கிடைக்கிறது.

அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்த‌விதம்‌ அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க‌ விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.

Share

பஸ்தர் – ஹிந்தித் திரைப்படம்

பஸ்தர் – தி நக்ஸல் ஸ்டோரி (H) – மாவோயிஸ்ட்டுகளுக்கான எதிர்பிரசாரத் திரைப்படம். கேரளா ஸ்டோரி எடுத்த குழுவிடமிருந்து வந்திருக்கும் படம். ஒரு திரைப்படமாக கேரளா ஸ்டோரியில் இருந்த போதாமைகளும் பின்னடைவுகளும் இந்தப் படத்தில் துருத்திக் கொண்டு வெளிப்படையாக வெளியே தெரிகின்றன.

என்னதான் பிரசாரப் படம் என்றாலும் அடிப்படையில் இது ஒரு சினிமா. அந்த சினிமாவின் மொழியைத் தீவிரமாகவும் லாகமாகவும் கை கொள்ளாத எந்த ஒரு திரைப்படமும் எரிச்சலையே ஏற்படுத்தும். இந்தப் படம் முழுமையாக எரிச்சலை மட்டுமே தருகிறது. நாடகத்தனமான கதை. செயற்கையான நடிப்பு. அதீதத் திணிப்பு.

மிகப் பெரிய நாட்டின் முக்கியமான பிரச்சினையைக் கிறுக்குத்தனமாக கையாண்டிருக்கிறார்கள். பஸ்தர் என்ற ஊரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நிச்சயம் மாவோயிஸ்டுகள் என்ற வார்த்தை நினைவுக்கு வராமல் இருக்காது.

பஸ்தரையும் சரி, பஸ்தரில் இருக்கும் பிரச்சினைகளையும் சரி, மாவோயிஸ்ட்டுகளையும் சரி, மிக மேம்போக்காகப் பேசுகிறது இத்திரைப்படம்.

Share

Laapataa Ladies – Hindi Movie

Laapataa ladies {H} – நம்ப முடியாத கதை. ஆனால் சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் பலரும் பாராட்ட மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன். அந்த அளவுக்குக் கவரவில்லை என்றாலும் சந்தேகமே இல்லாமல் நல்ல ஃபீல் குட் மூவி.

குடும்ப பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டுத் தன் கனவை நோக்கிச் செல்ல நினைக்கும் ஒரு பெண். தன் கணவனே தனக்கு எல்லாம், குடும்பமே எல்லாம் என்ற கனவுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இன்னொரு பெண். இதற்கிடையில், கணவனை வெறுத்து ஒதுக்கி, தன் காலில் தனியாக நின்று கடை நடத்தும் ஒரு பெண். எந்த உறுத்தலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் பெண்ணுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, கூடவே அந்தப் பெண் படிக்க நினைக்கும் கனவையும் வலியுறுத்தி, அனைவருக்கும் நல்லபடியாக முடித்து விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் இன்னும் பல காட்சிகளும் செயற்கைத்தனமாக இருந்தன. ஆனாலும் படம் எடுத்த விதத்திலும் நடித்த விதத்திலும் அதை ஈடு செய்திருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் கடை நடத்தும் அந்த பெண்ணின் நடிப்பு மிக மிக அருமை

படத்தின் பிரச்சினையாக நான் பார்த்தது, படம் முதலில் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. நாம் அதனுடன் பயணிக்கிறோம். திடீரென்று படம் இன்னொரு பெண்ணின் பார்வைக்குத் தடம் மாறுகிறது. இந்தத் தடுமாற்றத்தை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

Share