ஆசிஃப்மீரான் நடத்தும் பண்புடன் குழுமத்தின் முதலாண்டு விழாவிற்காக எழுதிய குறுநாவல் இது. குறு நாவல் ரொம்ப குறுகிவிட்டதால், நெடுங்கதை என்று பெயரிட்டுவிட்டேன். 🙂
நன்றி: பண்புடன் குழுமம்.
திறப்பு
(1)
அனு ஆழ்ந்த மயக்கத்திலிருப்பதாக சீனிவாச ராவும் விஜயலெக்ஷ்மியும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அனுவின் மூச்சு சீராக இயங்கிக்கொண்டிருந்தது. பெரியதாக திறந்துகிடந்த பழங்கால மருத்துவமனையின் ஓர் ஓரத்தில் உள்ள படுக்கையில், பச்சை நிறப் போர்வை மூடி, அனு செயலற்றுக் கிடந்தாள். ஜன்னல்கள் வழியே வரும் காற்று அங்கிருப்பவர்களின் எண்ணங்களைக் கலைத்துப் போட்டுக்கொண்டிருந்தது. அனுவைப் பார்க்க வருபவர்களிடமெல்லாம் சீனிவாசன் தன் மகளைப் பற்றி டாக்டர்கள் சொன்னதை கொஞ்சம் இட்டுக்கட்டி கூடுதலாகச் சொல்லிக்கொண்டிருந்தார். விஜயலெக்ஷ்மி நொடிக்கொருதடவை வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். போலியோவால் பாதிக்கப்பட்டு சூம்பிக் கிடக்கும் அனுவின் ஒரு காலை அனிச்சையாகத் தடவிக்கொண்டிருந்தாள் விஜயலெக்ஷ்மி. அனு தன் வயிற்றில் பிறந்ததே தேவையற்றது என்று பலமுறை நினைத்துக்கொண்டிருக்கிறாள். அப்போதும் அவளுக்கு அதே எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. அனுவால் தானும் தன் கணவனும் என்ன சந்தோஷப்பட்டுவிட்டோம் என்று யோசிக்கத் துவங்கினாள். இதில் ஆஸ்பத்திரியில் தங்கவேண்டியதும் இங்கேயே படுத்து உறங்கி இங்கேயே இருக்கவேண்டியிருப்பது குறித்த தீராத எரிச்சலும் விஜயலெக்ஷ்மிக்கு ஏற்பட்டிருந்தது. அனு இங்கு வந்து சேர்ந்து 5 நாள்கள் ஓடிவிட்டிருந்தது. அன்றைக்கு கக்கூஸை ஒழுங்காகக் கழுவியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருந்திருக்காது. அனு ஐயோ என்ற சத்தத்தோடு விழுந்தாள். தலையில் ரத்தம் சொட்ட அவளைத் தூக்கிக்கொண்டு இங்கு ஓடிவந்தார்கள்.
சீனிவாசனின் வாழ்க்கை அந்த அந்த நிமிடங்களின் நினைப்பிலேயே கழிந்துவிடும். அப்போது அந்த நிமிடத்தில் ஜன்னலில் அங்குமிங்கும் ஓடும் அணிலைப் பார்த்துக்கொண்டிருந்தார். தன் கையில் பணமில்லாதது பற்றியோ, அனுவிற்கு அந்த மருத்துவமனையில் அளிக்கப்படும் மோசமான சிகிச்சை பற்றியோ அவர் யோசிக்கவில்லை. இப்படி அனுவைப் பார்த்துக்கொண்டு, அணிலைப் பார்த்துக்கொண்டு, சதா அழுகை முகத்தோடு எங்கேயோ வெறித்துக்கொண்டிருக்கும் விஜயலெக்ஷ்மியைப் பார்த்துக்கொண்டு இருப்பது அவருக்கு பெரும் எரிச்சல் தந்தது. அந்த எரிச்சல் பழக்கப்பட்டும் விட்டது. எதிர் படுக்கையிலிருந்த சிறுமியுடன் தங்கியிருக்கும் அவளது அம்மாவும் அப்பாவும் ரொம்ப அன்னியோன்யமாக இருந்தது காரணமில்லாமல் அவருக்கு எரிச்சலைத் தந்தது. எப்போது இந்த ஆஸ்பத்திரியை விட்டுப் போவோம் என்றிருந்தது.
அனு அவளைச் சுற்றி நடப்பதையெல்லாம் உணர்ந்துகொண்டிருந்தாள். தலைமாட்டில் அணில் ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன் அம்மா தன் காலைத் தடவிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தாள். தான் பிறந்த முப்பந்தைந்து வருடத்தில் அவள் தன் சூம்பிப் போன காலைத் தடவியதாக நினைவில்லை. அதனால் தன் அம்மா இப்போது தன் காலைத் தடவிக்கொண்டிருப்பது பற்றி ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷப்படவேண்டுமா என்று யோசித்தாள் ஏதேனும் வேறு நினைவில் அவள் காலைத் தடவிக்கொண்டிருக்கலாம் என்றும் நினைத்தாள். எதிர் படுக்கையிலிருக்கும் சிறுமியின் அப்பாவும் அம்மாவும் இப்போதும்கூட ஏதேனும் பேசி சிரித்துக்கொண்டிருப்பார்களோ என்று எண்ணம் ஓடியது. டாக்டர் வந்து ஊசி போடும்போது ‘இன்னும் எத்தன நாள் இப்படி’ என்று கேட்க நினைத்தது நினைவுக்கு வந்தது. ஒரு காலை ஊன்றி, இன்னொரு காலை இழுத்துக்கொண்டு நடக்கும்போது, ஒரு கால் வழுகிவிட்டால் இப்படித்தான் விழவேண்டியிருக்கும். விழுந்து விழுந்து நடை பழகி, பின்பு நடக்கும்போதெல்லாம் விழுவதைப் பழக்கமாக்கிக் கொண்டவள். வயதுக்கு வந்த மறுநாள் திடீரென தான் ஒரே நாளில் பெரிய மனுஷியாகிவிட்ட தோரணையில், இந்த உலகமே சுருங்கிப் போய் சாதாரண விஷயமான நினைப்பில் நடந்துகொண்டிருந்தபோது, பஸ் ஸ்டாண்டில் அவளையொத்த சிறுவர்கள் முன்னிலையில் திடீரெனக் கீழே விழுந்தாள். அவள் கட்டியிருந்த பாவாடையும் மேலேயேறி சூம்பிப் போன காலும் கன்னங் கரேலென தொடையும் வெளியில் தெரிந்தபோது, எத்தனை நாளானாலும் தான் பெரிய மனுஷியாகமுடியாது என்கிற எண்ணம் வந்தது. இப்போதும் நினைத்துக்கொண்டாள், தான் பெரிய மனுஷியில்லை. பெரிய மனுஷி என்றால், கல்யாணம் ஆகியிருக்கவேண்டும். குழந்தை இருக்கவேண்டும். அதட்டவும் திட்டு வாங்கவும் திட்டவும் கணவன் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் நல்ல காலாவது இருக்கவேண்டும்.
கக்கூஸைக் கழுவி விடச் சொல்லிச் சொல்லி அனு அலுத்த நாளில்தான் நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். ‘கால் முடியாது, சரி. அதுக்காக சின்ன சின்ன வேலையயும் பாக்கக்கூடாதா? ஒரு பொண்ணுக்கு இது நல்லதில்லம்மா’ என்கிற அம்மாவின் ஜபத்தின் எரிச்சலில் வேகமாக நடந்தபோதுதான் விழுந்தாள். காலில்லை என்கிற சலுகையே எரிச்சலாக மாறிப்போன வீட்டில் இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அனுவிற்கு அவள் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு நிரந்தரமாகப் போகும் நேரமே வாய்க்கவில்லை.
சூம்பிப் போன கால்களுக்கு மேல் பெருத்துப்போன தொடைகளுடன் பெருத்துப்போன உடலுடன் கன்னங் கரிய நிறந்த்தில் லட்சமணற்ற தனது முகத்திற்கு திருமணம் நடக்காது என்பதை அனு மெல்லவே புரிந்துகொண்டாள். உடலைத் தூக்கி நடக்கமுடியாத நேரத்தில், சோம்பேறித் தனத்தில் அப்படியே அவள் தவழும்போது, சீனிவாசன் தலையில் அடித்துக்கொண்டு, ‘கொட்டிக்காத, கொஞ்சமா தின்னுன்னா புத்தி இருக்குதா. இப்ப பாரு, ஒடம்பு பெருத்துப் போய் இருக்கிற ஒரு கால வெச்சும் நடக்க முடியல’ என்று சலித்துக்கொள்வார். “நானாதான இழுத்துக்கறேன், உன்ன கூப்பிடலயே.” “வாய்க்கு ஒண்ணும் கம்மியில்ல, இன்னும் கொஞ்சம் உடம்பு பெருத்துச்சுன்னா, நாந்தான் அள்ளிப் போடணும்.” இரண்டு கைகளைச் சேர்த்து சைகையில் காண்பித்தபடியே சொன்னார். அனுவிற்கு இப்படி உடம்பை இழுத்துக்கொண்டு போவதைக் காட்டிலும், படுக்கையில் விழுந்துவிட்டால்கூட நல்லது என்று தோன்றியது.
தன் கால்மாட்டில் அம்மாவின் பேச்சுச் சத்தம் கேட்டது. மெல்ல கண்களை திறக்க எத்தனித்தாள். எத்தனை முயன்றும் அவளால் கண்களைத் திறக்கமுடியவில்லை. அம்மாவின் பேச்சிலிருந்து, பக்கத்து வீட்டுப் பையன்கள் வந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது. இந்த உலகத்தில் பிரச்சினையில்லாதது ஆண்களாகப் பிறந்துவிடுவது. அனுவிற்கு தான் பெண்ணாகப் பிற்ந்ததுகுறித்த பெருத்த அவமானம் எப்போதும் இருந்தது. அதிலும் அழகான கால்களுடன், சிவப்புத் தோலுடன், எடுப்பான மார்போடு கர்வத்துடன் நடக்கும் பெண்களைக் கண்டுவிட்டால், அவளுக்கு தன் பிறப்பைப் பற்றிய அவமானம் பிடுங்கித் தின்றுவிடும். ஆனால் ஆண்களாகப் பிறந்துவிட்டால் அசிங்கமாக இருந்தாலும் பிரச்சினையில்லை. காலில்லாவிட்டால் கூட பிரச்சினையில்லை. ஆண்களை இந்த உலகம் கண்டிப்பதில்லை. அவன் வயசுக்கேற்ற விஷயங்களை அவன் செய்துகொண்டிருக்கலாம். வயசுக்கு ஒத்துவராத விஷயங்களைக் கூடச் செய்யலாம். யாரும் கேட்கப்போவதில்லை. தன் 35 வயதில், முழு நிர்வாணமாக ஓர் ஆணின் படத்தைக்கூட அவள் பார்த்ததில்லை. ஆனால் அன்றொருநாள் தற்செயலாக பக்கத்துவிட்டு ஜன்னல் வழிப் பார்த்தபோது, பையன்கள் உட்கார்ந்து டிவியில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். படத்தில் யார் உடலிலும் ஒட்டுத்துணி கூட இல்லை. அவளுக்கு அங்கேயே நிற்பதா, போய்விடுவதா என்கிற எண்ணம் ஒரு நிமிடம் எழுந்தது. அதற்குள் ஒரு பையன் வந்து திறந்திருந்த ஜன்னலை மூடி விட்டுச் சென்றான். சட்டென அந்த இடத்தில் இருந்து விலகி வீட்டிற்கு வந்தாள். அந்த ஒரு நிமிடத்தில் கண்ணில் பட்ட காட்சி அன்று முழுவதும் அனுவை அலைக்கழித்தது. ஆண்களாகப் பிறந்திருந்தால் இந்த அலைச்சல் இல்லை. எப்படியும் குறைந்தது ஒரு பெண்ணையாவது அவன் அனுபவிக்கலாம். இப்படி ஆண் வாசனை என்ன என்றே அறியாமல், கண்ணில் பட்ட ஒரு காட்சியை காலம் முழுவதும் மனதில் இருத்தி கற்பனை செய்துகொண்டிருக்கவேண்டியதில்லை. திடீரென வாசலில் சத்தமும் சண்டையும் கேட்டது. பக்கத்து வீட்டுப் பையனின் அண்ணன் அவன் தம்பியை ஓங்கி செவிட்டில் அறைந்தான். மற்ற பையன்கள் அவமானம் பிடுங்கித் தின்ன அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அன்று அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது.
பையன்கள் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படுவது தெரிந்தது. ஆண்களாகப் பிறந்தால், எந்த அவமானம் நேர்ந்தாலும் அடுத்து ஒன்றுமே நடக்காததுபோல் இருக்கலாம். அவளுக்கு அப்போதும் தான் ஏன் ஓர் ஆணாகப் பிறக்காமல் போனோம் என்று தோன்றியது. பெண்ணாகப் பிறந்ததில் கூட பிசகில்லை, கால் நன்றாக இருந்திருந்தால், ஒரு கல்யாணமாவது ஆகியிருந்திருக்கலாம்.
இருபது வயதாக இருக்கும்போது எப்படியும் தனக்கு கல்யாணம் நடக்கும் என்றே நம்பினாள் அனு. 35 வயதில் அந்த நம்பிக்கை மறைந்து, காண்போரிடமெல்லாம் அது எரிச்சலாக வந்து விழ ஆரம்பித்து, உலகத்தில் அவளுக்கு யாரையும் பிடிக்காமல் போனது. தன்னையும் யாருக்கும் பிடிக்காது என்றே நினைத்தாள்.
பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் சில வருடங்களுக்கு முன்யு ஒருநாள் பேசிக்கொண்டிருந்தாள். உடல் பெருத்துப் போயிருப்பதால் நடக்கமுடியவில்லை. முதுகு வலிக்கிறது. வயிற்றின் கீழ்ப்பகுதியில் எப்போதும் ஒருவித வலி இருக்கிறது. இரவு படுத்தால் தூக்கம் வருவதில்லை. இப்படி பல வியாதிகள் அவளுக்கு இருப்பதாக அவள் சொல்லிக்கொண்டாள். அதைக் கேட்டுக்கொண்ட அந்த பக்கத்து வீட்டுப் பெண், ‘காலா காலத்துல கல்யாணம் ஆயிட்டா இந்த நோயெல்லாம் வராது’ என்றாள். அனுவிற்குக் கேட்கவே சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ‘அப்படியா சொல்ற? கல்யாணம் ஆயிட்டா சரியாயிடுமா?’ ‘பின்ன. நைட் ஒழுங்கா தூக்கம் வரும். இந்த மத்த பிரச்சினையெல்லாம் வராது. சீக்கிரம் உங்க வீட்டுல கல்யாணம் பண்ணச் சொல்லு.’ இப்படி பேசியதிலிருந்து தன் பிரச்சினைகளுக்கான மிக எளிய வைத்தியமான திருமணத்தை ஏன் தன் வீட்டார்கள் சிரமேற்கொண்டு செய்வதில்லை என்கிற எரிச்சலும் அனுவிற்குச் சேர்ந்துகொண்டது. பக்கத்துவீட்டுப் பெண் கல்யாணமாகி, கர்ப்பமாகி, குழந்தை பெற்று, இரண்டாவது கர்ப்பமாகி… அவளைப் பார்க்கப்போவதையே தவிர்த்துவிட்டாள் அனு.
டாக்டர் ஊசி போடுவது தெரிந்தது. அணில்களும் பையன்களும் பக்கத்துவீட்டுப் பையன்களும் மெல்ல அவள் நினைவிலிருந்து மறைந்தார்கள்.
(2)
சீனிவாசனை பெண்ணுடல் இரவும் பகலும் தூக்கமின்றி அலைய வைத்தது. விஜயலக்ஷ்மியின் சிணுங்கல்கள் அவனை போதையேற்றின. அவளின் அசட்டுத்தனங்கள் எல்லாம் இரவுகளில் காமத்தில் முடிந்தன. தான் என்ன சொன்னாலும், செய்தாலும் தன் கணவனை இரவில் வீழ்த்திவிடமுடியும் என்று நம்பினாள் விஜயலக்ஷ்மி. திருமணத்தின் ஆரம்பகால மயக்கங்கள் கடைசிவரைக்கும் நிலைக்கும் என்று அவள் நினைத்தாள். திருமண நாளன்று நடந்த பல்வேறு குளறுபடிகளையும் பற்றி சீனிவாசனின் அம்மா புலம்பியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அவன் இரவுக்காகக் காத்திருந்தான். சீனிவாசனின் அம்மா சீனிவாசனை வாயில் வந்தபடியெல்லாம் வைதாள். விஜயலக்ஷ்மி தன் மகனை முந்தானையில் முடிந்துகொண்டதாகச் சொன்னாள். விஜயலக்ஷ்மி எதுவுமே நடக்காதவாறு முந்தானையை விரித்து உதறி திரும்ப முடிந்துகொண்டாள். சீனிவாசனின் அம்மா கைகளை நெட்டிமுறித்து என் சாபம் சும்மா போகாது என்றாள்.
விஜயலக்ஷ்மி சீனிவாசனிடம் தன் அம்மா தன்னுடன் இருக்கவேண்டும் என்று கேட்டாள். அப்போது சீனிவாசன் விஜயலக்ஷ்மியின் மார்பில் தலைவைத்துப் படுத்து அவளின் திமிறும் இடையை அடக்கிக்கொண்டிருந்தான். அவள் என்ன சொன்னாலும் சரி என்றான். மறுநாளே விஜயலக்ஷ்மியின் அம்மா ஊர் வந்து சேர்ந்தாள். எடுத்த எடுப்பில் சீனிவாசனின் அம்மா தன் மகளை ரொம்பப் படுத்துகிறாள் என்று ஆரம்பித்தாள். விஜயலக்ஷ்மிக்கே தன் அம்மா இப்படி முதல்நாளிலேயே தொடங்குவது குறித்து கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் தன் இடையின்மீதும் முலையின்மீதும் பெரும் நம்பிக்கை இருந்தது. அதனால் தன் அம்மா சொல்வது சரி என்பதுபோல சீனிவாசனிடம் பேசினாள். சீனிவாசனுக்குக் கொஞ்சம் எரிச்சல் வரத் தொடங்கியது. விஜயலக்ஷ்மி சொல்வதற்கும் தன் மாமியார் சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்களை அவன் உணரத் தொடங்கினான். வீட்டின்பின்னால் இருக்கும் கன்னி தெய்வத்தின் முன்னால் உட்கார்ந்து எப்போதும் அழுதுகொண்டிருக்கும் அம்மாவைப் பார்க்கவும் கொஞ்சம் பாவமாக இருந்தது. ஒருதடவையாவது விஜயலக்ஷ்மியைக் கண்டிக்கத்தான் வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
வீட்டிற்குள் நுழைந்த சீனிவாசனின் கால்களில் சோற்றுப் பருக்கைகள் ஒட்டின. வீடெங்கும் சிதறிக் கிடக்கும் சோற்றுப் பருக்கைகளைக் கண்டவுடன் கடும் கோபம் கொண்டான். அவனது கோபத்தைக் கவனித்துவிட்ட விஜயலக்ஷ்மியின் அம்மா புலம்பத் தொடங்கினாள். சீனிவாசனின் அம்மாதான் உணவு பிடிக்கவில்லை என்று சிதறி அடித்தாள் என்றாள். இது எதுவுமே நடந்திராத மாதிரி கன்னி தெய்வத்தின் முன்பு உட்கார்ந்து விளக்கிட்டுக்கொண்டிருந்தாள் சீனிவாசனின் அம்மா. சீனிவாசனுக்கு யோசனையாக இருந்தது. விஜயலக்ஷ்மியை அழைத்தான். அவள் உறங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள் விஜயலக்ஷ்மியின் அம்மா. விளக்கேற்றும் நேரத்தில் என்ன தூக்கம் என்ற கேள்வியைக் கேட்டான். பின்னாலிருந்து அவன் அம்மா பதில் சொன்னாள். ‘அது ஆம்பிளைக்கான கேள்வி. உனக்கென்ன?’ என்று. அவன் கோபம் தலைக்கேறியது. கல்யாணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகியும் தன் மகள் கர்ப்பமாகவில்லை என்பதைத்தான் அவள் குத்திக்காட்டுவதாக ஆரம்பித்தாள் விஜயலக்ஷ்மியின் அம்மா. இதைக் கேட்டதும் சீனிவாசனுக்கு உடல் பதறத் தொடங்கியது. என்ன செய்வது, யாரைத் திட்டுவது எனத் தெரியாமல், ஒட்டுமொத்த கோபமும் விஜயலக்ஷ்மியின் மீது பாய, அவள் தூங்கிக்கொண்டிருக்கும் கதவை வேகமாகத் திறந்து, அவளை எட்டி உதைத்தான். அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத சமயத்தில் அவள் இடுப்பில் ஓங்கி மிதித்தான். அவள் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தாள். தன் கணவன் தன்னை மிதித்தான் என்பதை அவள் நம்பவே சில நிமிடங்கள் பிடித்தது. பெரும் சத்தமிட்டு அழுதாள். அவள் அழுதுகொண்டிருக்கும்போது விஜயலக்ஷ்மியின் அம்மா சொன்னாள், ‘இந்த வீடு உருப்படுமா, ஒரு புள்ளத்தாச்சின்னு பாக்காம மிதிக்கிறானே கட்டயில போறவன்’ என்று. சீனிவாசனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் தன் அம்மா சொன்னதை, தான் ஆண்மையற்றவன் என்று சொன்னதாகத் திரித்தவள் இப்போது மீண்டும் மாற்றிப் பேசுவது ஏன் என்று யோசித்தான். ஏன் தன்னிடம்கூட விஜயலக்ஷ்மி தான் கர்ப்பமுற்றதைச் சொல்லவில்லை என நினைத்தான். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆதரவாக விஜயலக்ஷ்மியை மெல்ல நெருங்கி தடவிக்கொடுத்தான். அவள் அவன் கையைத் தட்டிவிட்டு, ‘நீங்க வந்ததும் சொல்லணும்னு இருந்தேன்..’ என்றாள் அழுதுகொண்டே. இது எதுவும் நடக்காத மாதிரி அம்மா விளக்கேற்றினாள். இனி தன் மகன் அடிக்கடி மிதிப்பான் என்று நம்பினாள். விரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும் என நினைத்துக்கொண்டாள். சீனிவாசனின் அப்பா அவளை மிதிக்காத நாளில்லை.
தான் அப்பாவின் வாரிசு என்பதை மிக சீக்கிரத்தில் நிரூபிக்கத் துவங்கினான் சீனிவாசன். எது எதற்கு என்றில்லாமல் எல்லாவற்றிற்கும் ஏசவும் அடிக்கவும் மிதிக்கவும் தொடங்கினான் சீனிவாசன். விஜயலக்ஷ்மி வாய் திறப்பதையே நிறுத்தினாள். கல்யாணம் ஆன புதிதில் தன்னைக் கொஞ்சிக் கிடந்த கணவன் இவன் இல்லையோ என்பது போன்ற விநோதமான கற்பனைகள் அவளிடத்தில் ஏற்பட்டன. விஜயலக்ஷ்மியின் அம்மாவால் நடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. கர்ப்பிணியை ஒரு ஆண்மகன் மிதிப்பான் என்று அவளால் நினைக்கக்கூட முடியவில்லை. அவளது கணவன் அவளை அதிர்ந்து பேசியதுகூட கிடையாது. அவள் கடும் கோபம் கொண்ட ஒரு நாளில் தன் மாப்பிள்ளைக்கு சாபம் வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். ‘பொம்பளையை மிதிக்கிறவன் ஆம்பளையே இல்லை. இதுக்கெல்லாம் அனுபவிப்ப… அந்தக் கன்னி தெய்வமே வரும்டா…’ என்று சொல்லிவிட்டுப் படியிறங்கினாள். சீனிவாசனின் அம்மா தான் எதுவுமே செய்யாமல் இந்த நல்ல காரியம் நடந்ததை எண்ணி சந்தோஷப்பட்டாள். உள்ளூர தன் மகன் ஒரு கர்ப்பிணியை மிதித்தது பற்றிய பயமும் இருந்தது.
விஜயலக்ஷ்மி வரிசையாகப் பிள்ளைகள் பெற்றாள். ஏதோ ஒரு நோயில் எல்லாக் குழந்தையும் இறந்தன. அவளது உடல் பெருத்து, இடைகள் வீங்கி, முலைகள் சரிந்து, முகம் விரிந்து போயிருந்தது. கல்யாணத்தில் இருந்த கொடியிடைப் பெண் தானல்ல என்றே நினைத்துக்கொள்வாள் விஜயலக்ஷ்மி. சீனிவாசனின் அம்மா இறந்த பத்தாவது மாதத்திலும் அவள் குழந்தை பெற்றாள். ஊரில் இதைப் பற்றி ஓரிருவர் கிண்டலாகப் பேசினார்கள். சீனிவாசன் காதுக்கு இவையெல்லாம் விழுந்தததாகவே தெரியவில்லை. இரவில் அவளோடு படுப்பதும், பகலில் அவளை ஏசுவதும் மிதிப்பதுமன்றி அவன் எதையும் அறிந்திருக்கவில்லை. தன் கணவனைப் பற்றி நினைக்கும்போதே அவன் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மிதிக்கவரும் காட்சியே விஜயலக்ஷ்மியின் மனதில் வந்தது. அவள் கன்னி தெய்வத்துக்கு விளக்கிடும்போது மனமுருகிக் கும்பிட்டாள். ‘இந்த நரகத்துலேர்ந்து என்னைக் கூப்பிட்டுக்கோ…’ கன்னித் தெய்வத்தின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அந்த ஆண்டும் அவள் கர்ப்பமானாள். அது அவளுக்கு எட்டாவது கர்ப்பம். ஏழு குழந்தைகள் பிறந்து இறந்து போயிருந்தன. பிறந்த ஒரு மாதத்தில், ஐந்து மாதங்களில் என எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து போயிருந்தன. கன்னித் தெய்வத்தின் பழிதான் அது என்கிற நினைப்பு விஜயலக்ஷ்மிக்குத் தோன்றவும், கன்னித் தெய்வத்திற்கு விளக்கிட்டு கும்பிட ஆரம்பித்தாள். தன் மாமியார் கன்னி தெய்வத்திற்கு பூஜை செய்வதை அவள் பார்த்திருக்கிறாள். கைகளை நெட்டி முறித்து சாபமிடும் மாமியார் நினைப்பு வந்தது. தன் மாமியாரிடமும் மானசீகமான மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். எட்டாவது முறையாகக் கர்ப்பமானாள். காலையில் வீடு பெருக்கி, உணவு பொங்கி, உண்பதைப் போல, கர்ப்பமும் அவளுக்கு ஒரு வேலை. அதனுள்ளே இருப்பது ஓர் உயிர் என்கிற எண்ணம் அவளுக்கு வந்ததே இல்லை. தன் வேலையை ஒழுங்காகச் செய்யும் ஓர் ஊழியன்போல அவள் பிள்ளை பெற்றாள். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கருப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு அனு என்று பெயரிட்டாள். அன்று பெய்த கடும் மழையில் கன்னித் தெய்வம் முழுவதுமாக நனைந்தது. மழையில் கன்னித் தெய்வத்திற்கு விளக்கேற்ற முடியாமல் போனது குறித்து விஜயலக்ஷ்மி விசனப்பட்டாள். அதேசமயம், மழையில் கன்னித் தெய்வம் குளிர்ந்தது என்றும் நினைத்துக்கொண்டாள்.
சீனிவாசனுக்கு உள்ளூர பயம் இருந்தது, இந்தக் குழந்தையும் இறந்துவிடுமோ என்று. அவனை ஏதோ சூனியம் சூழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்தான். அவன் விஜயலக்ஷ்மியைக் கல்யாணம் செய்துகொண்ட பின்பே இப்படி ஒரு நிலையில்லாமல் அலைக்கழிக்கப்படுவதாக உணர்ந்தான். அதுமுதல் விஜயலக்ஷ்மியை அடிப்பதும் மிதிப்பதும் அதிகமாகிப் போனது. விஜயலக்ஷ்மி விடாமல் கன்னித் தெய்வத்தைப் பூஜித்தாள். ஒருநாள் அவள் கனவில் ஒரு சிறிய பெண் பட்டுப்பாவாடை உடுத்தி வந்தாள். சந்தேகமே இல்லை, அது கன்னித் தெய்வம்தான். வீட்டின் வெளியில் திண்ணையில் உட்கார்ந்திருந்த கன்னித் தெய்வம் அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் பலமுறை கன்னித் தெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தும் அக்கன்னித் தெய்வம் வீட்டிற்குள் வரவே இல்லை. கன்னித் தெய்வத்தின் கண்கள் அருள் பொங்குவதாகவும் முகம் மலர்ந்த செந்தாமரை போலவும் உடல் மென்மையாகவும் சிவந்த நிறத்திலும் இருந்தாள். யாரைப் போல் இருக்கிறாள் என்பது விஜயலக்ஷ்மிக்குப் புலப்படவே இல்லை. ஒரு சாயலில் அவளுக்கு தன் தாயைப் போலத் தெரிந்தது. இன்னொரு சாயலில் தன் மாமியார் போல இருந்தது. இன்னொரு சாயலில் தன்னைப் போலத் தெரியவும் திடுக்கிட்டு விழித்தாள். வாசலில் காற்று வீசிக்கொண்டிருந்தது. கன்னித் தெய்வத்தைக் காணவில்லை. மறுநாள் தன் கணவனிடம் கனவைச் சொன்னாள். கன்னித் தெய்வம் வீட்டிற்குள் வர மறுக்கிறது என்றால் என்னவோ பிரச்சினை இருக்கிறது என்றாள். ஏற்கெனவே சூனியம் பற்றிப் பயந்துபோயிருந்த சீனிவாசன் விஜயலக்ஷ்மி சொன்னதைக் கேட்டு இன்னும் அரண்டு போனான். உப்பு சப்பில்லாத காரணங்களுக்கு அவளை ஏசினான். ரசத்தில் புளிப்பு அதிகம் என்பதற்காக ஓங்கி மிதித்தான். குழந்தை அனு ஓடி வந்து ‘அம்மாவை அடிக்காதீங்க’ என்று சொல்லி, சீனிவாசனை அடித்தாள். என்ன செய்கிறோம் என்கிற நினைப்பில்லாமல் சீனிவாசன் அனுவையும் ஓங்கி மிதித்தான். வீறிட்டுக் கொண்டு தூர விழுந்த அனுவை ஓடிச் சென்று தூக்கிய விஜயலக்ஷ்மி, அழுதுகொண்டே சொன்னாள், ‘பச்ச கொழந்தைய மிதிக்கிறீங்க. உங்க கால் வெளங்காமத்தான் போகும்.’ தனக்கு அடிமையாக இருக்கவேண்டியவள் கொடுத்த சாபம் சீனிவாசனை மேலும் கோபம் கொள்ள வைத்தது. கைக்கு வந்தமாதிரி அவளை அடித்துவிட்டுப் போனான். மறுநாள் காலையில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த அனு திடீரென்று கீழே விழுந்தாள். ஒரு காலை அவளால் அசைக்கவே முடியவில்லை. டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். விஜயலக்ஷ்மி வாய்விட்டு அழுதாள். எல்லாவற்றிற்கும் காரணம் தன் கணவன்தான் என்றாள். அவனுக்கும் இதேபோல் ஒருநாள் கால் விளங்காமல் போகும் என்றாள். இருக்கும் ஒரு குழந்தைக்கும் கால் விளங்காமல் போனது ஏன் என்று யோசிக்கத் தொடங்கினாள்.
(3)
விஜயலக்ஷ்மிக்கு கதை கேட்பது போலிருந்தது. சீனிவாசனின் சின்ன தாத்தா தனது நடுங்கும் குரலில் சொன்னதையெல்லாம் கேட்கும்போது அதிக பயமும் கொஞ்சம் ஆர்வமும் இருந்தன. ஆனால் அவளால் அதைக் கேட்காமல் இருக்கவோ நம்பாமல் இருக்கவோ முடியவில்லை.
‘நிறைமாச கர்ப்பிணி. தூக்கிக்கிட்டு ஓடினாங்க. மாட்டுவண்டிலதான் கொண்டு போனாங்களாம். மாட்டை அடி அடின்னு அடிச்சான் மாட்டுவண்டிக்காரன். மாடுங்க பயந்து வெறிபிடிச்சு ஓடிச்சுங்க. அவ உள்ள இருந்து வலி தாங்காம கத்துறா. முதல்நாள் நல்ல மழை வேற. அப்பல்லாம் கரண்ட்டு வேற கிடையாது. பிரசவம் பாக்க பக்கத்துக்கு ஊருக்குத் தூக்கிக்கிட்டு ஓடணும். போற வழியெல்லாம் தண்ணி, மேடு பள்ளம். கொண்டு போறதுக்குள்ள உயிர் போயிடும்னுதான் பயந்திருக்காங்க. பனிக்குடமும் உடைஞ்சிடுச்சு போல. கூட இருந்த அவ அம்மா வேண்டாத தெய்வம் பாக்கியில்ல. பக்கத்து கிராமத்துல மருத்துவச்சி வீட்டுக்கு கொண்டு போகும்போது அவளுக்கு நினைப்பே இல்லை. எப்படியோ குழந்தை பொறந்தது. அவ தன் குழந்தையைப் பார்க்காமயே மயங்கிட்டா. பெண் குழந்தை. அதைப் பார்த்தவங்க பயந்து போயிட்டாங்க. அப்படி ஒரு விகாரமான முகம். இதை எப்படி இவ வளர்க்கப்போறான்னு பயம். மெல்ல ஊருக்குள்ள சாமி குத்தம்தான் அப்படி பொறந்திருக்குன்னு பேச்சு பரவிப்போச்சு. பெத்தவனுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. ஆனா ஒரு மணி நேரத்துல அந்தக் குழந்தை செத்துப்போச்சு. அதை வீட்டுக்குப் பின்னாடியே பொதைச்சிட்டாங்களாம். அந்த இடத்துலேர்ந்து ஒரு கல்லை எடுத்து வெச்சி கும்பிட ஆரம்பிச்சாங்களாம். என்ன சாமி குத்தம் இருந்தாலும் மன்னிச்சுக்கோமான்னு சொல்லி அதையே கும்பிட ஆரம்பிச்சாங்களாம். அதுதான் கன்னி தெய்வம். இதெல்லாம் முன்னூறு நானூறு வருசத்துக் கதை. அது கல்லுதான். ஆனா நினைச்ச உருவத்துல வரும். சிவப்புப் பாவாடை காட்டிக்கிட்டு சின்ன பொண்ணா நானே பார்த்திருக்கேன்.’ அவர் உடல் விக்கித்துப்போய் இருந்தது.
பின்னாலிருக்கும் புளியமரமும் கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக அங்கிருக்கிறது என்ற ஒரு கதையைக் கேட்டிருக்கிறாள். இரவுகளில் கருப்பசாமி அங்கே வந்துவிட்டுப் போகும் என்றும் ஒரு கதை உண்டு. சிலர் அதைப் பொய் என்று மறுத்தார்கள். ‘எப்படி கன்னித் தெய்வம் இருக்கிறப்ப கருப்பசாமி வரும்’ என்பது அவர்கள் கேள்வி. இரண்டு காவல்தெய்வங்கள் தங்கள் எல்லைகளை மீறுவதில்லை என்று நம்பினார்கள். இதுபோன்று பல கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் விஜயலக்ஷ்மி. இந்தக் கதைகளுக்குப் பின்னர் கன்னித் தெய்வத்தின் மீது அவளுக்கு ஒரு பயம் வந்தது. தன் மாமியார் விடாமல் கன்னித் தெய்வத்துக்கு செய்து வந்த பூஜையை அவளும் செய்யத் தொடங்கினாள்.
ஆஸ்பத்திரியில் விஜயலக்ஷ்மி அனுவின் அருகில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். டாக்டர்கள் அனுவின் இடுப்பெலும்பு பலமிழந்து போய்விட்டதாகச் சொன்னார்கள். அவள் கைகளை ஊன்றி நடப்பதால் உடலின் எடை முழுவதும் இடுப்பெலும்பில் இறங்கி, இடுப்பெலும்பு நொறுங்கிவிட்டது என்றார்கள். தலையில் அடி பட்டால் எப்படி இடுப்பெலும்பு தேயும் என்று விஜயலக்ஷ்மி ஒன்றும் புரியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அனு இரண்டு கைகளையும் குறுக்கக் கட்டிப் படுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சீனிவாசன் வெளியே யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பெயர் ராமச்சந்திர ராவ். விரை வீங்கிப்போய் ஆபரேஷனுக்காக முதல்நாள்தான் அட்மிட் ஆகியிருந்தார். எதிர் படுக்கையில் கொஞ்சிக்கொண்டிருந்த ஜோடிகள் டிஸ்ஜார்ஜ் ஆன அன்று சீனிவாசன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
வெளியில் ராவும் சீனிவாசனும் பேசிக்கொண்டிருந்தார்கள். ராவுக்குத் தெரியாத விஷயங்களே இருக்காதோ என்று அதிசயப்பட்டுப் போனார் சீனிவாசன். எதைச் சொன்னாலும் அதிலிருக்கும் நியாய, அநியாயங்களை ராவ் பிரித்தெடுத்து வைத்து, இரண்டுக்குமான காரணங்களை அடுக்கியபோது அவன் ஒரு மகான் என்று கூட நினைத்துக்கொண்டார். ஒரு மகானுக்கு ஏன் ஓதம் தள்ளவேண்டும் என்றும் நினைத்தார். ஆனால் உடனே அந்த நினைப்பைப் போக்கிகொண்டார். என்ன இருந்தாலும் அவரும் ஒரு மாத்வர்.
ராவ் ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கையுள்ளவர் என்பது அவர் பேசிய இரண்டொரு நிமிடங்களில் தெரிந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் ஒரு ஜோசியம் சொன்னார். காரணங்கள் சொன்னார். சீனிவாசனின் பிறந்த நாள் தேதியைக் கேட்டுவிட்டு, அந்த எண்ணைக் கூட்டி என்னவோ மனதில் நினைத்துக்கொண்டு, ‘நீங்க பிறந்த தேதி சரியில்லை, வேற தேதியில பிறந்திருக்கணும்’ என்றார். நியூமரலாஜியும் அவருக்குத் தெரியும். சீனிவாசனும் விஜயலக்ஷ்மியும் தாலி கட்டிக்கொண்ட நாள் சரியில்லை என்றும், அதற்கு பிராயசித்தமாக மறுதாலி கட்டவேண்டும் என்றும் சொன்னார் ராவ். தனது எழுபதாவது வயதில் மறுதாலி கட்டி என்ன ஆகப்போகிறது என்று யோசித்தார் சீனிவாசன். ‘கொழந்தைங்களுக்கு நல்லது இல்லையா’ என்றார் ராவ். ராவ் சொன்னதிலும் விஷயம் உண்டு என்று எண்ணிக்கொண்டார் சீனிவாசன்.
பேச்சு சீனிவாசனின் பெற்றோர்கள் பக்கம் திரும்பியது. சீனிவாசன் தன் கதைகளை எல்லாம், தன்மீது தவறில்லாதவாறு சொன்னார். அனுவின் நிலைமையையும் அதற்கான தன் வருத்தங்களையும் சொன்னார். சட்டென்று கேட்டார் ராவ். ‘பித்ருக்கள் காரியமெல்லாம் செய்றீங்கள்ல?’ சீனிவாசன் உதட்டைப் பிதுக்கினார். தனது தந்தைக்கும் பித்ருக்களுக்குக் காரியம் செய்யும் வழக்கமில்லை என்றார். உடனே பிடித்துக்கொண்டார் ராவ். எல்லாவற்றிற்கும் பித்ருக்கள் சாபமே காரணம் என்றார். ஏழு குழந்தைகள் பிறந்து இறந்ததும், எட்டாவது குழந்தை நன்றாகப் பிறந்தும் கால் சரியில்லாமல் போனதும் என எல்லாமே பித்ருக்கள் சாபம் என்றார். ‘நாம நல்லது செஞ்சா அது எப்படி நம்ம சந்ததிக்கு வருதோ நம்ம பாவங்களும் அப்படியே அவங்களுக்குத்தான் வருது. வண்டி வண்டியா பாவம் செஞ்சு வெச்சிருக்கிறீங்க. உடனே காரியமெல்லாம் செய்ங்க’ என்றார். சீனிவாசனின் தாய் தந்தை இறந்த திதிக்களைக் கண்டுபிடித்து, எந்த எந்த நாளில் திதி செய்யவேண்டும் என எழுதிக்கொடுத்தார். தனக்கு இந்த வயதில் இப்படி ஒரு நண்பரா என ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டுப் போனார் சீனிவாசன். இப்படி ஒருத்தன் தன் வயசுக்காலத்திலேயே இருந்திருந்தால் தனக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டார்.
ராவ் தனக்குத் தெரிந்த ஐயரையே ஏற்பாடு செய்துகொடுத்தார். அனுவைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி, விஜயலக்ஷ்மியையும் சீனிவாசனையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். வீட்டில் ஹோமங்கள் வளர்த்து, மந்திரங்கள் சொல்லி, பிண்டம் வைத்தார் சீனிவாசன். தனது அம்மாவையும் அப்பாவையும் மானசீகமாக வணங்கினார். அம்மாவிடம் பலவாறாக மன்னிப்புக் கேட்டார். கன்னித் தெய்வம் குளிர குளிர அன்றும் மழை பெய்தது.
(4)
அனுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு பொறாமையாகவும் இருந்தது. அவளுக்குத் தெரிந்து ரமணனை சிறிய பையனாகப் பார்த்திருக்கிறாள். இன்று அவன் ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று அறிந்தபோது அவளால் அதை நம்பவே முடியவில்லை. ஓர் ஆணாய்ப் பிறந்திருக்கவேண்டியதின் அவசியத்தை மீண்டும் உணர்ந்தாள்.
ரமணனிடம் எதைப் பார்த்து மயங்கி ஒருத்தி ஓடினாள் என்று தெரியவில்லை. ரமணன் படித்துக்கொண்டிருக்கிறான். ஓடிப்போனால் மறுவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்திரவாதமில்லை. ரமணன் மிகப்பெரிய அழகனுமில்லை. ஆறடி உயரத்தில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்னும் தோற்றத்தில் இருப்பான். அவன் முகத்திலேயே மூக்கு ஒன்றுதான் இருக்கும். இவனை நம்பி எப்படி ஒரு பெண் ஓடினாள்? ஆனால் ரமணனுக்கு இரண்டு கால்களும் இருக்கின்றன. ஓடிய பெண்ணுக்கும் நிச்சயம் இரண்டு கால்களும் இருந்திருக்கும்.
அன்று இரவு முழுவதும் ரமணனைத் தேடினார்கள். ரமணன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. ஓடிய பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்கள் ரமணனின் அப்பாவை மிரட்டிவிட்டுப் போனதாக விஜயலக்ஷ்மி சொன்னாள். அன்று இரவு ரமணன் எங்கே தங்கியிருப்பான்? எப்படியும் அன்றிரவு ரமணனும் அப்பெண்ணும் உறவு கொண்டிருப்பார்கள். இப்படி நினைத்தபோதே அனுவிற்கும் பொறாமையும் ஏக்கமும் ஒரு சேர எழுந்தன. தனக்குத் திருமணம் ஆகாதது குறித்து பெரும் வேதனைகள் அவளுக்கு இருந்தன. தன் திருமணத்தைப் பற்றி யாரும் சிந்திக்கிறார்களா என்பதுகூட அவளுக்குத் தெரியவில்லை. அம்மாவிடம் சொன்னால் அவள் தான் பார்த்த வரன்களைச் சொல்லி, ‘எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கோம், ஒண்ணும் அமையலை’ என்று சொல்லக்கூடும்.
அம்மாவிடம் திடீரென்று தன் கல்யாணம் பற்றிக் கேட்டாள். ‘பார்த்துக்கிட்டுதான இருக்கிறோம். சனிக்கிழமை சனிக்கிழமை நவக்கிரகத்துக்கு பூஜை செய்யறேன். நிச்சயம் உனக்கு இந்த வருஷத்துல வரன் அமைஞ்சிடும்’ என்றாள். அனுவிற்கு எரிச்சலும் கோபமும் மண்டிக்கொண்டு வந்தது. நிதானம் இழக்கத் தொடங்கினாள்.
அனு நிதானம் இழந்தால் எப்படிப் பேசுவாள் என்பதை விஜயலக்ஷ்மி அறிந்தவள்தான். இதேபோல முன்பொருமுறை தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது குறித்து என்னவெல்லாமோ பேசத் தொடங்கினாள் அனு. அவளுக்கு அறிவுரை சொல்ல வந்த அனுவின் ஒன்றுவிட்ட தங்கையை அனு கேட்டகேள்விகள் விஜயலக்ஷ்மியையே அதிர வைத்தன. ‘உனக்கு என்ன வயசு? என்னவிட ரெண்டு வயசு சின்னவதானே? உனக்கு ரெண்டு குழந்தைங்க. உனக்கு தோணினப்பல்லாம் உன் புருஷனோட படுத்துக்கலாம்ல?’ வந்த பெண் கேவலமாக உணர்ந்தாள். விஜயலக்ஷ்மியிடம் ‘ரொம்ப கேவலமா பேசறா. கல்யாணத்துக்காக அலையறா. பார்த்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போனாள். உள்ளேயிருந்து அனு கத்தினாள். ‘எவ அலயறா. நீ அலஞ்ச கதை எனக்குத் தெரியாதாடி முண்ட. இனிமே எனக்கு அத சொல்றேன் இத சொல்றேன்னு இங்க வா, தட்டுவாணி பல்ல ஒடைக்கிறேன். உன் புருஷன் செத்தா தெரியும்டி உனக்கு அலயறதுன்னா என்னான்னு.’ விஜயலக்ஷ்மிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அனு கத்திக்கொண்டிருக்க, விஜயலக்ஷ்மி வீட்டின் கதவை அடைத்துவிட்டு கோவிலுக்குப் போனாள்.
எதாவது சொல்லி, அனு மீண்டும் அதேபோல் கத்தத் தொடங்கினால் ஆஸ்பத்திரியில் எல்லார் முன்னும் மானம் போய்விடும் எனப் பயந்து, அனுவோடு பேச்சைத் தொடராமல் ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் போனாள். வெளியில் ரமணாவின் அப்பா வந்துகொண்டிருந்தார். அவர் நடையில் ஒரு வேகம் இருந்தது. விஜயலக்ஷ்மியிடம் ‘சீனிவாசன் இல்லியா’ என்றார். ‘வெளிய போயிருக்கார்’ என்றாள். ‘வந்தா சொல்லுங்க ரமணன் கிடைச்சிட்டான். அந்த பொண்ணை அவங்க வீட்டுலயே விட்டாச்சு. நாலு நாள் சோத்துக்கு இல்லாம அலஞ்சி வேற வழியில்லாம அவனே வந்துட்டான்…’ என்றார். விஜயலக்ஷ்மி தான் இதை தன் கணவனிடம் சொல்லிவிடுவதாகவும் குழந்தையைப் பார்த்துக்கோங்க என்றும் சொல்லி அனுப்பினாள்.
ஆஸ்பத்திரிக்குள்ளே வந்து அனுவிடம் பேச்சு கொடுத்தாள். ரமணா பற்றிச் சொன்னாள். அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது. ’19 வயசுல என்ன கல்யாணம்’ என்றாள். ஆனாலும் நான்கு நாள் இரவுகளில் ரமணனும் அப்பெண்ணும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டாள். அவளை ஏக்கமும் காமும் சூழ்ந்தன.
விஜயலக்ஷ்மி அனுவின் கட்டிலுக்குக் கீழே ஒரு பாயை விரித்து படுத்துக்கொண்டாள். அனுவை பலவிதமான எண்ணங்கள் ஓடின. தனக்கு கால் இல்லாமல் போனது குறித்து தன் வாழ்க்கையில் லட்சத்து ஓராவது முறையாக வருந்தினாள். தான் கொஞ்சம் சிவப்பாகவாவது இருந்திருந்தால் தன் உடலைக்காட்டி யாரையாவது மயக்கியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள். காலை மெல்ல வருடினாள். முழங்காலில் காய் காய்த்து சிறிய சிறிய தோல் உருண்டைகள் காய்த்துத் தொங்க, அவளுக்கே அருவருப்பாக இருந்தது. அதற்குக் கீழே கால் சூம்பித் தொங்கியது. இந்தக் கால்களுக்கு இடையில் படுத்துக்கொள்ள எவன் வருவான் என்று தோன்றியது அவளுக்கு. அவளது பெருமூச்சில் அவளது மார்பு ஒருமுறை விம்மி அடங்கியது. விஜயலக்ஷ்மி அழுவது போலத் தோன்றியது அனுவிற்கு. ‘அம்மா’ என்று அழைத்தாள். பதிலில்லை. மீண்டும் அனு அழைக்காமல் எதையோ யோசிக்கத் தொடங்கினாள்.
(5)
இன்னும் ஒரு வாரம் இருக்கவேண்டியிருக்கும் என்று டாக்டர் சொல்லிவிட்டுப் போனார். அனுவை என்னென்னவோ உடற்பயிற்சிகள் செய்யச் சொன்னார்கள். இதெல்லாம் செய்தால் கல்யாணம் ஆகுமா என்று ஒருதடவை யோசித்து, சிரித்துக்கொண்டாள். ராவ் அவளைப் பார்த்து ‘என்னம்மா தானா சிரிக்கிற’ என்றார். அவள் பதில் சொல்லவில்லை. அவரும் சீனிவாசனும் வெளியில் போனார்கள். இப்போதெல்லாம் ராவ் சொல்லாமல் சீனிவாசன் எதையும் செய்வதில்லை. அவருக்கு ராவ் மீது பெரிய மரியாதை இருந்தது. சீனிவாசனும் ராவும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள். ராவ் அப்படியே வெளியில் நின்றார். உள்ளே வந்த சீனிவாசன், ‘ராவ்க்கு தெரிஞ்ச ஒரு வரன் இருக்காம். அத சொல்லிக்கிட்டு இருந்தார்’ என்றார். அனுவிற்கு ராவின் மீது சட்டென மரியாதை வந்தது. அவர் வந்ததும் அவரைப் பார்த்து சிரிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டாள். சீனிவாசன், ‘நானும் அவரும் கொஞ்ச நேரம் வெளியில போயிட்டு வர்றோம்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
வெளியில் போயிருந்த ராவும் சீனிவாசனும் சற்றைக்கெல்லாம் திரும்ப வந்துவிட்டனர். அனு ராவைப் பார்த்து வலிய சிரித்தாள். சீனிவாசன் விஜயலக்ஷ்மியிடம் தான் பார்த்ததை சொல்லத் தொடங்கினார்.
‘ஸ்ரீதர் செத்துட்டாண்டி. தற்கொலையாம். என்ன ஒரு இருபத்தி அஞ்சு வயசு இருக்குமா? தாமரைக் குளத்துல மொதக்கிறான். ஏன் என்னான்னு தெரியலை’ என்றார். விஜயலக்ஷ்மிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீதர் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று அவளுக்குப் பிடிபடவில்லை. இவனும் ரமணாவைப் போல யாரையாவது காதலித்துத் தொலைத்திருக்கலாம் என நினைத்துக்கொண்டாள். ‘பாக்கவே சகிக்கலைடி. ஒட்டுத்துணியில்லை உடம்புல. ஊதிப்போய் மிதக்குது. நம்ம வீட்டுல வந்து ரசம் ஊத்துங்கன்னு சொல்லி சாப்பிட்டதுதான் நினைவுக்கு வந்தது. பாவம் அவன் அம்மா’ என்றார்.
அனுவிற்கு ஸ்ரீதரை நினைத்தும் கோபமே வந்தது. அவன் வந்து ரசம் கேட்டுக் குடித்த பல தினங்களில் ஒரு தினம் அவன் அங்கேயே உறங்கினான். திடீரென கண்விழித்துப் பார்த்த அனுவிற்கு, அருகில் ஸ்ரீதர் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதேதோ எண்ணங்கள் உதித்ததன. மெல்ல புரண்டு அவன் அருகில் படுத்துக்கொண்டாள். அவன் கைகளைத் தன் மேல் எடுத்து வைத்துக்கொண்டாள். அனுவிற்கு பயமாக இருந்தது. அதே சமயம் அவனைவிட்டு விலகவும் முடியவில்லை. மெல்ல நெருங்கி அவனை அணைக்க முயன்றாள். அவன் திமிறி எழுந்து ஓடினான். அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவளுக்கு அவமானமாக இருந்தது. மறுநாள்முதல் அவன் வீட்டிற்கு வருவதில்லை. இவள் கண்ணில் படாமலேயே நழுவுவான்.
இப்படி ஒரு குளத்தில் ஊதிப் போய் சாகப்போகிற ஒருவன் அன்றைக்கு தன்னைக் கொஞ்சம் சந்தோஷப்படுத்தியிருக்கலாம். ஒருவேளை அவனுக்குத் தேவையான பெண் அழகானவளாகவும் சிவப்பாகவும் கால்கள் நல்ல நிலையிலும் உள்ளவளாகவும் இருக்கவேண்டுமோ என்னவோ. தன்மேல் பட்ட ஒரே ஆணின் கை அவனது கை. அதுவும் அவன் அறியாமலேயே நடந்ததுதான். ஆனாலும் அவள் மேல் ஒரு ஆணின் கை பட்டிருக்கிறது என்கிற நினைப்பைத் தந்தது ஸ்ரீதர்தான்.
அனுவிற்கு ஸ்ரீதரின் மரணம் வருத்தத்தைத் தந்தது.
சீனிவாசன் சொன்னார். ‘வாய் பொளந்து செத்துக் கிடக்கான். வாய் வழியா உயிர் போயிடுச்சு போல இருக்கு. பாவம்.’
உயிர் பிரிவது பற்றி அவளும் கேட்டிருக்கிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழியாக உயிர் பிரிகிறது. ஸ்ரீதருக்கு வாய் வழியே. தன் வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்த ஒரு மாமாவுக்கு மூக்கின் வழியே. அவர் இறந்ததும் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்ததாகச் சொன்னார்கள். மூன்றாம் வீட்டிலிருந்த இன்னொரு மாமி இறந்ததைப் பற்றி அவளது மருமகள் சொன்ன கதை வேறு மாதிரியானது.
‘எப்படியும் போயிடுவான்னு தெரியும். திடீரெனு டர்ர்ர்ர்ன்னு குசு விடற சத்தம். மாமிதான். முகத்தை நெறிக்கிறா. அவ்ளோதான் சட்டுன்னு போயிட்டா. வீடெல்லாம் ஒரே நாத்தம். மாமி போட்ட குசுதான்னு நினைச்சோம். செண்ட் எல்லாம் வாங்கி அடிச்சோம். அப்புறம் அவளைக் குளிப்பாட்டறப்பதான் பார்த்தோம், பின்னாடியெல்லாம் ஒரே நரகல். ஐயோ நினைச்சாலே கொமட்டறது. அதான் அவ்ளோ நாத்தம். அப்புறம் எல்லாரும் சொன்னா, மாமிக்கு பின்னாடி வழியா உயிர் போயிடுத்துன்னு…’
அனுவிற்கு அன்றிரவு பெருங்கனவு சூழ்ந்துகொண்டது.
(6)
அனுவிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ‘இன்னும் அரைமணி நேரத்துல போயிடும்’ என்று எல்லாரும் பேசிக்கொள்வது அவள் காதில் விழுந்தது. அவளுக்கு வாய் விட்டுக் கதறவேண்டும் போல இருந்தது. வார்த்தை வரவில்லை. கன்னித் தெய்வத்தை வேண்டிக்கொண்டாள். தான் பட்டது போதும் என்றும் தான் இன்னும் வாழவேண்டும் என்றும் ஒரே நேரத்தில் நினைத்துக்கொண்டாள்.
அம்மாவிடம் பேசினாள். அது மானசீகமான உரையாடல். அம்மாவிற்கு என்னென்னவோ நன்றிகள் சொன்னாள். தலைமுதல் கால் வரை முத்தங்களிட்டாள். அம்மாவின் மீது அன்பு பொங்கி வழிவது குறித்து அவளுக்கே சந்தோஷமாக இருந்தது. இந்த அன்பு களங்கமற்றது.
அப்பாவை நினைத்துக்கொண்டாள். இப்போது அவளுக்கு அப்பாவைப் பற்றி மிச்சமிருக்கும் ஒரே பிம்பம், பாவம் வயதான ஜீவன். அவர் கஷ்டப்படாமல் கடைசி காலத்தில் நன்றாக இருக்கட்டும் என நினைத்துக்கொண்டாள். இப்போதைய அனுவிற்கு அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவளே இப்படி அவளை அறிந்ததில்லை. அவளுக்கே அவளை நினைத்து சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.
தனக்காக வராமல் போன ஆண்மேல் மட்டும் கொஞ்சம் கோபமிருந்தது. பின்னர் மீண்டும், அவனும்தான் என்ன செய்வான் தான் இப்படி இருக்கும்போது என நினைத்துக்கொண்டு அவன் மீதும் அன்பைப் பொழிந்தாள். தனக்காக வரன் பார்த்த ராவிற்கு நன்றி சொல்லிக்கொண்டாள்.
தன் உடலை விட்டு உயிர் பிரிகிறது என்பதையும் உணரத் தொடங்கினாள். இனி கால்கள் இல்லை என்கிற குமைச்சல் இல்லை. தான் கருப்பாக இருக்கிறோம் என்கிற தாழ்வு மனப்பான்மை இல்லை. தன் பாவாடை விலகினால் தன் கால்களைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ஆண்களை இனி காணவேண்டியதில்லை. அவளே வலிய சென்றாலும், எழுந்து ஓடும் ஆண் தரும் அவமானங்கள் இல்லை. யாரேனும் எங்கேயும் ஓடிப்போனால் அவர்கள் இரவில் என்ன செய்வார்கள் என யோசித்து மருகவேண்டியதில்லை. தன் உயிர் பிரியும் தருணம் மிகச் சிறப்பானது என நினைத்துக்கொண்டாள் அனு.
அவளது உயிர் அவளது உறுப்பு வழியாகப் பிரிந்தது. தன் உறுப்பின் வழியே இரத்தம் வழிவதை உணர்ந்த கணத்தில் அனு மரணமடைந்தாள்.
விஜயலக்ஷ்மியின் ஓலம் காற்றில் கரைந்தது. சீனிவாசன் அழுதுகொண்டே தன் கால்களை நீவிக்கொண்டார்.
அன்றைய கொடுங்கனவு முடிந்து, அணில்கள் தலைமாட்டில் ஓடிக்கொண்டிருக்க, மறுநாள் எப்போதும் போலவே விடிந்தது.
-oOo-