பிம்பம் பற்றிய கவிதைகள்

கை நழுவிக் கீழே விழும்
கண்ணாடிக் கோப்பை
தரையைத் தொடுமுன்
கைநீட்டியிருக்கவேண்டும்
தேவதை
உன் பிம்பத்தைக் காப்பாற்ற

*

உடைந்த பலூனின் சிதறல்கள்
பெரிதும் சிறிதுமாய்
கலைந்தபோன கோலக் கம்பிகளுக்குள்
தெறித்துப்போன உன் பிம்பம் போல
ரசமுள்ள கண்ணாடியா என்ன
ஒவ்வொன்றும் தனித்துவம் பெற?

*

பிம்பமற்ற
பிம்பத்துக்குள்
அடங்கிவிட வேண்டும்
அதுவே பிம்பமென!

*

மறைத்து வைத்திருக்கும்
முகச் சலனங்கள்
ஓடும் நீரின் மேற்பிம்பத்தில்
தெளிவாக, மிகத் தெளிவாக.

*

Share

பிரசாத் – சிறுகதை

பிரசாத்தின் கையிலிருந்து காலாவதியாகிக்கொண்டிருக்கும் சிகரெட்டின் மீது நிலைக்குத்தி நின்றிருந்தன என் கண்கள். அந்தச் சமையலறையின் வாஷ் பேசினில் சரியாக அடைக்கப்படாத நீர் சொட்டிக்கொண்டிருந்தது. பிரசாத் பேசாதபோது சொட்டும் நீரின் ஒலியே எனக்குத் துணை.

பிரசாத் ஏதோ ஒரு மோன நிலையில் லயித்தவர் போல, தன்னிலையில் இல்லாது வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தார். குடித்தவன் வார்த்தைகள் போல அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. பிரசாத் குடித்திருந்தார்தார். தொடர்பற்ற வாக்கியங்களுக்கு இடையில் ஒரு தொடர்பை நம்மால் உருவாக்கிக்கொள்ள இயலுமானால் பிரசாத்தின் வார்த்தைகள் மிகப் பலம் பொருந்தியவை.

மெதுவாக நகரும் கலைப்படம் மாதிரி எங்கள் இருப்பை நினைத்துக்கொண்டேன். பிரசாத் வார்த்தைகளைக் கொட்டுவதற்குத் தேவையான இடைவெளியை எடுத்துக்கொண்டார். ஒரு வரியைச் சொல்லி முடித்துவிட்டு, மிக ஆழமான ஒரு இழுப்பை இழுத்தார். புகையை சில வினாடிகள் உள்ளுக்குள் அடக்கி, மிகவும் இரசித்து வெளிவிட்டார். புகை அடர்த்தியாக வெளிவந்து, சமையலறையுள் விரவி நீர்த்தது. அறையெங்கும் மிக இலேசான புகை மூட்டம் இருப்பதை வெளியில் இருந்து அறையினுள் வரும் புதுமனிதர்கள் மட்டுமே கண்டுகொள்ளமுடியும். என்னாலோ பிரசாத்தாலோ முடியாது. யாராவது வந்து ‘வீடு ஒரே புகையா இருக்கே’ என்னும்போதுதான் அதைக் கவனிப்போம்.

பிரசாத்தின் மேலிருந்து வந்த விஸ்கி வாசமும் சிகரெட் வாசமும் ஒன்று கலந்து ஒருவித நெடியை சமையலறைக்குள் பரவி விட்டிருந்தது. அதுவும் எனக்குப் பழகிவிட்டிருந்தது.

மெதுவாக நகரும் எங்கள் கலைப்படத்திலும் எப்போதோ ஒருமுறைதான் பிரசாத் பேசினார். அந்த வார்த்தைகள் பிரசாத்தின் ஆழ்மனத்தில் அவர் கொண்டிருந்த சோகத்தின் வெளிப்பாடாக இருந்தன. பிரசாத் பேசும்போது அவரின் கண்ணிமைகள் மேலேயும் கீழேயும் அலைந்தன. அவர் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியானார். கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் இழுத்தார். எதிரே நின்றுகொண்டிருக்கும் என்னை உற்றுப் பார்த்தார். நான் ஏதேனும் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ என்று நினைத்து, வாயில் வந்ததைச் சொல்ல எத்தனித்தேன். அதற்குள் அவர் பார்வை கேஸ் அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரின் மேல் மாறி நிலைத்தது.

நான் என் கவனத்தைச் சொட்டும் நீரின் மேல் மாற்றினேன். எங்களைச் சுற்றிய கலைப்படம் அந்த நேரத்தில் மிகவும் இரசிக்கத்தக்கதாயிருக்கிறது என்று நினைத்தேன். இந்நேரத்தில் பிரசாத்தைப் பற்றிக் கொஞ்சம் நினைக்கலாம். பிரசாத்தின் அறிமுகம் கலீக் என்ற வகையில்தான் தொடங்கியது. சிகரெட் குடிப்பவர்கள் அரைமணிக்கொருதரம் வெளியில் செல்லும் போது கொஞ்சம் இறுகியது. குடிப்பவர்கள் இராத்திரி கூடும் பொழுதில் இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டது. நாற்பத்தைந்து வயதில் திருமணம் ஆகாமலிருக்கும் ஒருவர் குடித்தால், அவர் தன்னிலையில் இல்லாதபோது அவரிடமிருந்து வரும் குமுறலின் பலத்தை பிரசாத்திடம்தான் கண்டேன். பிரசாத் ஒருகாலத்தில் அவரை இலக்கியவாதியாகவும் நினைத்துக்கொண்டவர்.அதனால் அவரது குமுறல் இரண்டு மடங்காக இருந்தது. ஒரு முப்பது வயது இளைஞனைப்போல் தோற்றமும் சிவப்புத் தோல் சருமமும் கைநிறையச் சம்பளமும் உள்ள பிரசாத் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்காக அவர் சொல்லாத காரணங்களில்லை. கொஞ்சம் தொகுத்துப்பார்த்தால் இவர் காதலித்த பெண் இவரை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லலாம். ஏனென்றால் இந்த ஒரு காரணத்தை மட்டுமே அவர் சொல்லவில்லை. ஆனால் இந்தக் காரணத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோக அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவேண்டும் என்ற பலத்த சந்தேகம் எனக்கு இருந்தது.

கலைப்படத்தில் பிரசாத் பேசத்தொடங்கினார். அவரின் பார்வை கொதிக்கும் சாம்பாரின் மீதுதான் இன்னும் நிலைக்குத்தி இருந்தது. இந்த முறை பிரசாத்தின் வசவு எங்கள் மேனேஜரின் மீதானது. அவர் பிரசாத்தை அண்டர் எஸ்டிமேட் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டு, தன் நேரம் வரும்போது தன்னை நிரூபித்து அவர் முகத்தில் கரியைப் பூசுவதாகத் துணை நினைவை எழுப்பிக்கொண்டு, அதன்பின் சொன்ன வார்த்தைகளே பிரசாத் சொன்னவை. வரிகளுக்குப் பின்னால் சென்று பார்த்து அதைப் புரிந்துகொண்டேன். அவர் சொல்வதை மட்டும் கேட்டால் ஒன்றும் புரியாது. தினமும் பிரசாத்திடம் பேசுவதால் “பின் சென்று பார்ப்பதில்” எனக்குக் கஷ்டம் இருப்பதில்லை.

பிரசாத் சிகரெட்டை மீண்டும் இரசித்து இழுத்தார். இந்த முறை பாதிப் புகையை மூக்கின் வழி விட்டார். நான் என் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தேன். அதைப் பற்ற வைக்க பிரசாத்திடம் சிகரெட்டைக் கேட்க எத்தனித்தேன். பிரசாத்தின் கவனம் என் மீது விழவேயில்லை. ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் சிறுத்துக்கொண்டிருக்கும் சிகரெட்டின் மீது இருந்தது. லேசாகச் சிரித்தார். கலைப்படத்தின் காட்சிகள் ஏதோ ஒரு கணத்தில் இறுக்கத்தை இழப்பது போல. இரண்டு வினாடிகள் இடைவெளியில் சத்தமில்லாமல் மெல்ல குலுங்கிச் சிரித்தார். நான் அவரை “என்ன?” என்பது போலப் பார்த்தேன். இலேசான சிரிப்பினூடே, இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கும் சிகரெட்டைக் காட்டி, “அல்மோஸ்ட் செக்ஸி!” என்றார். நானும் சிரித்தேன். கட்டை விரலால் சிகரெட்டி பின்பக்கத்தைத் தட்டி சிகரெட்டைக் கொஞ்சம் முன்னகர்த்தினார். நான் சிரித்தேன். என்கையிலிருக்கும் சிகரெட்டைப் பற்ற வைக்க அவரின் சிகரெட் வேண்டும் என்று நான் கேட்க வாயெடுக்க நினைத்தபோது, கொஞ்சம் பலமாகச் சிரித்தார். “செக்ஸி!” என்றார். சிகரெட்டின் எரியும் முனையில் சாம்பல் சேர்ந்துவிட்டிருந்தது. கட்டை விரலால் இரண்டு முறை தட்டினார். சாம்பல் தெறித்துக் காற்றில் பறந்தது. ஒரு சிறிய துகள் காற்றிலாடி கொதிக்கும் சாம்பாரில் விழுந்தது போலிருந்தது. பிரசாத் அதைக் கவனிக்கவில்லை. பிரசாத் மீண்டும் மௌனமானார். என் கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் உள்ளே வைத்துவிடலாமா என்று நினைத்தேன். பிரசாத் சொட்டிக்கொண்டிருக்கும் குழாயை, பலமாகத் திருகி அடைத்தார். சொட்டும் நீர் நின்றது. சாம்பார் கொதிக்கும் சப்தத்தை மீறி அறையில் அமானுஷ்ய மௌனமும் இலேசான புகையும் சிகரெட்டின் நெடியும் பிரசாத்தின் கடந்த கால ஏக்கங்களும் அவர் மீதான என் வருத்தங்களும் நிறைந்திருந்தன. கலைப்படத்தின் அமைதியான காட்சிகள் அவை.

வாசல் மணி ஒலித்தது. இலேசாக அதிர்ந்து அடங்கினேன். பிரசாத் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வேகமாக விரைந்தார். ஒரு பாட்டில் விஸ்கியும் ஒரு சிகரெட் பாக்கெட்டும் சாம்பாருக்குத் தாளிக்க கடுகும் வாங்கிவரச் சொல்லியிருந்த பையன் வந்திருப்பான். அவனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு பிரசாத் சமையலறைக்குள் வந்தார். அவர் கையில் சிகரெட் பாக்கெட்டும் கடுகும் மட்டுமே இருந்தது.

அவர் வருவதற்குள் எரியும் கேஸ் அடுப்பில் என் சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தேன். பிரசாத்தைப் போல் நிதானமாக, இரசித்து என்னால் சிகரெட் புகைக்க முடியாது. கடனென இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு வீசியெறிந்துவிடுவேன். அப்படிச் செய்யும்போதெல்லாம் ஏதோ நினைவு வந்தவராக பிரசாத் சிரிப்பார். ஏன் சிரிக்கிறார் என நான் புரிந்துகொண்டதில்லை.

பிரசாத்தின் இரவுகள் சட்டெனத் தீராது. மறுநாள் விடுமுறையென்றால் நீண்டுகொண்டே இருக்கும். விஸ்கி பாட்டில் காலியாகும் வரை அவர் உறக்கம் தொடங்காது. சிகரெட் பாக்கெட்டுகள் எண்ணற்றவை காலியாகிக் கிடக்கும். இதைப் பற்றியெல்லாம் என்றுமே பிரசாத் நினைத்துப்பார்த்ததில்லை. கேட்டால் மேன்சன் வாழ்க்கை என்பார்.

எனக்கான இரவு முடியும் நேரம் நெருங்கிவிட்டது. பிரசாத்திடம் சொல்லிவிட்டுச் சென்று படுத்துக்கொள்ளலாம். படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை. எதையேனும் யோசித்துக்கொண்டிருப்பேன். பிரசாத் சாம்பாரில் தாளித்துக்கொட்டுவதில் மும்முரமாக இருந்தார். ஒரு சிறிய வாணலியில் எண்ணெயை இட்டு, அதில் கடுகை இட்டு வெடிக்க வைத்தார். யாருக்கோ சொல்வதுபோல “கருவேப்பிலை இல்ல” என்றார்.

நான் பொறுமை இழந்து அடுத்த சிகரெட்டை எடுத்தேன். பிரசாத்தின் விரல்களிலிருந்த சிகரெட் இறுதியை எட்டியிருந்தது. அவர் இழுத்ததைவிட, வெறுமனே அது காற்றில் புகைந்த நேரமே அதிகம். இடது கையின் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் மத்தியில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, வலதுகையால் தாளித்த எண்ணெயெயைச் சாம்பாரில் கொட்டினார். சத்தத்துடன் சாம்பாரின் ஒரு துளி பிரசாத்தின் கையின் மீது தெறித்தது. பிரசாத் கையை உதறினார். சிகரெட் கீழே விழுந்து அணைந்தது. பிரசாத் அதை எடுத்து, டேப்பைத் திறந்து நீரில் காண்பித்து முழுவதுமாக அணைத்தார். பின் ட்ஸ்ட்பின்னில் தூக்கி எறிந்தார்.

சமைத்தவற்றை எடுத்துக்கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றார். வேறு வழியின்றி நானும் அவர் பின்னே சென்றேன். அவர் மீதிருந்த கழிவிரக்கம் மெல்ல விலகி, நான் தூங்கப் போகவேண்டும் என்ற எண்ணம் தலைகொண்டது.

பிரசாத் ஒரு வித்தியாசமான ஆளுமை. அவருக்கு என்னை விட்டால் வேறு யாரையும் நண்பர்கள் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால் பல பெயர்களைச் சொல்லி அவர்களெல்லாம் என் நண்பர்கள் என்பார். இன்றிருக்கும் பெரிய எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லி, நாங்களெல்லாம் ஒரே சமயத்தில் எழுதினோம் என்பார். இவற்றையெல்லாம் வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவே எனக்குப் பிடிக்கும். அவற்றில் எவ்வளவு உண்மையிருக்கும் என்பதைப் பற்றி யோசிப்பதை நான் நிறுத்திவிட்டிருந்தேன். சில சமயங்களில் பிரசாத் என்னை வடிகாலாக வைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைப்பதுண்டு. இருந்தாலும் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு அமைதியாகிவிடுவேன்.

இப்போது பிரசாத் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இடது கையில் புகையும் சிகரெட். பிரசாத்தின் சித்திரத்தை கையில் சிகரெட் இல்லாமல் யோசிக்கமுடிந்ததே இல்லை. அவரது வாழ்க்கையையும் நிறையப் புகை நிறைந்ததே. அவர் எல்லோரிடமும் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றே சொல்லி வைத்திருந்தார். ஆனால் அதில் எனக்குப் பலத்த சந்தேகம் இருந்தது. அவரது அறையில் காணக் கிடைத்த சில கடிதங்களும் அடிக்கடி வரும் தொலைபேசிகளும் எனக்கு அந்தச் சந்தேகத்தை அளித்திருந்தன. ஆனால் அவர் அடிக்கடி தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் அதை நம்புவதே அவருக்குத் திருப்தி தரும் என்று நம்பத் தொடங்கினேன்.

மூன்றாம் அறையிலிருந்து கேசவன் வந்தான். எங்களைப் பார்த்துச் சிரித்தான். பிரசாத் அவனைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நான் கேசவனைப் பார்த்துச் சிரித்தேன். “கிச்சன் ·ப்ரீயாயிட்டு போலயே. அப்ப நான் சமைக்கலாம்” என்றான். நான் கிச்சனில் சமைப்பதில்லை. வெளியில்தான் சாப்பிடுகிறேன். அதனால் இந்தக் கேள்வி பிரசாத்திற்குரியது. ஆனால் பிரசாத் பதில் சொல்லவில்லை.

பிரசாத் யாருடனும் அவ்வளவு எளிதில் பேசமாட்டார். கேசவனுக்கு எரிச்சல் வந்திருக்கவேண்டும். அவன் என்னிடம் பிரசாத்தைப் பற்றிப் பல முறை திட்டித் தீர்த்திருக்கிறான். இன்றோ நாளையோ அவன் கேட்ட கேள்விக்குச் பிரசாத் பதில் சொல்லாமல் இருந்ததைப் பற்றித் திட்டித் தீர்க்கத்தான் போகிறான். “பிரசாத் சமைச்சிட்டார். நீ சமை” என்றேன் லேசான புன்னகையோடு. கேசவன் என்னை ஆழமாகப் பார்த்துவிட்டு, அவன் அறைக்குச் சென்றுவிட்டான். நாளை என்னைப் பார்க்கும்போது, பிரசாத்தை மேன்சனை விட்டுக் காலி செய்யச் சொல்லவேண்டும் என்பதைப் பற்றி கேசவன் நிச்சயம் வலியுறுத்துவான்.

கேசவன் வந்த அடையாளமோ நாங்கள் பேசிக்கொண்டதன் சலனமோ பிரசாத்திடம் இல்லை. பிரசாத் தட்டை வழித்து நக்கினார். சமையலறையில் உள்ள வாஷ் பேசினில் தட்டைக் கழுவினார். அங்கேயே வாய்க்கொப்பளித்துத் துப்பினார். பிரசாத் இப்படி சமையலறை வாஷ் பேசினில் வாய் கொப்பளித்துத் துப்புவதைப் பற்றிப் பலமுறை கேசவன் கோபப்பட்டிருக்கிறான். நானும் பிரசாத்திடம் சொல்லியிருக்கிறேன். “கேசவன் கோபப்பட்டானா? அவன் யாரு கோபப்பட” என்றார் ஒருமுறை. இன்னொரு முறை “அவன் கெடக்கான் தாயோளீ” என்றார்.

சமையலறையில் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு மெயின் ஹாலில் வந்து அமர்ந்தார். டிவியை ஆன் செய்து, விசிடி ப்ளேயருக்குள் ஒரு விசிடியைச் செருகினார். திரை உமிழ்ந்தது. நீலப்படம். தினம் ஒரு நீலப்படம் பார்க்காமல் பிரசாத் உறங்கியதே இல்லை. பலமுறை பார்த்துவிட்ட அந்நீலப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எனக்கு மனப்பாடம். பிரசாத் கையிலிருந்த சிகரெட்டிலிருந்து அறையெங்கும் புகை சூழ்ந்தது.

“ஜன்னலைத் திறந்து வைக்கட்டுமா” என்று பிரசாத்தைக் கேட்டேன்.

“இப்பவா” என்றார்.

“புகையா இருக்கே”

“திறந்து வெச்சா புகை போயிடுமா”

“சரி நான் படுத்துக்கப் போறேன்”

“அப்ப புகை போயிடுமா”

அமைதியாக இருந்தேன்.

“என்ன பேச்ச காணோம்?”

“சும்மாதான்”

“புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல் தெரியுமா? என்னைக்காவது ஒரு நாள் முழுக்க சலனமோ குழப்பமோ சந்தேகமோ அடுத்த நாள் பற்றிய பயமோ இல்லாம இருந்திருக்கியா? குழந்தையா இருக்கிறப்ப விட்று. நான் சொல்றது நீ யோசிக்க ஆரம்பிச்ச பின்னாடி. நீ யாருன்னு ஒனக்குத் தெரிஞ்ச பின்னாடி. என்னைக்காவது புகையில்லாம இருந்திருக்கியா? புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல். ஜன்னலைத் திறந்து வெச்சிட்டா புகை போயிடும்னு சொல்றது அசட்டுத்தனம் இல்லையா?”

“எனக்குத் தூக்கம் வருது”

“தூங்கு. ஆனா தூக்கம் வருமா”

“தெரியலை”

“சரி.. போய் படு,” என்று சொல்லிவிட்டு டிவிக்குள் ஆழ்ந்தார். நான் மெயின் ஹாலைவிட்டு விலகி என் அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டுப் படுத்தேன்.

படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தேன். கேசவன்.

“என்னடா தூங்கிட்டியா”

“இல்ல, இப்பத்தான் படுத்தேன்”

“என்னடா ஆச்சு உனக்கு?”

“ஏன், ஒண்ணுமில்லையே. நல்லாத்தானே இருக்கேன்”

“டேய், சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. ஒரு ரெண்டு மாசம் லீவு போட்டுட்டு ஊருக்குப் போயிட்டு வா. நா மேனேஜர் கிட்ட சொல்லியிருக்கேன். லீவு தர்றேன்னு சொல்லியிருக்கார்”

“எனக்கு எதுக்கு லீவு?”

“பிரசாத் பிரசாத்னு அவனோட சுத்தாதடா. அவன் ஆள் சரியில்லை. நம்ம ஆபிஸ்ல யாராவது அவனோட பேசறாங்களா? எப்பவும் குடி, சிகரெட்.”

மெயின் ஹாலை எட்டிப் பார்த்தேன். பிரசாத்தின் முன்னே விஸ்கியும் இடது கையில் சிகரெட்டும் இருந்தது. நீலப்படத்தின் ஏதோ ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு தலையை லேசாக உயர்த்தி லேசாகச் சிரித்தார்.

“ஒரு நாள்கூட அவரால ப்ளூ ·பிலிம் பார்க்காம இருக்கமுடியலை. அவர் வயசு என்ன? உன் வயசு என்ன? எப்பவும் அவர்கூட சுத்திக்கிட்டு, உம்மனா மூஞ்சி மாதிரி… நம்ம ஊர்ல எப்படியெல்லாம் இருந்த? ஏண்டா இப்படி மாறின? என் கூட நீ பேசறதே இல்லை”

“கேசவன். போதும் நிறுத்து. எனக்குத் தூக்கம் வருது”

“சொல்றதைக் கேளு. ரெண்டு மாசம் லீவு போட்டு ஊருக்குப் போயிட்டு வா. எல்லாம் சரியாயிடும். அதுக்குள்ள அவரை நம்ம ரூமை விட்டுக் காலி பண்ணிடறேன். இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு. நேத்து சீனு சொல்றான், ஒனக்கும் அவருக்கும் இடையில என்னவோ தப்பு இருக்குன்னு. இதெல்லாம் ஒனக்குத் தேவையா?”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அவரை என்னைக்கோ ரூமை விட்டு அனுப்பியிருப்பேன். உன் பிடிவாதத்தாலதான் வெச்சிருக்கேன்”

நான் குழப்பத்தில் நின்றிருந்தேன். சில சமயம் நானே யோசித்திருக்கிறேன், பிரசாத்தை விட்டுக் கொஞ்சம் விலகி இருப்பது நல்லது என்று.

“சரி இப்ப போய் படு. நாளைக்குப் பார்த்துக்கலாம்” என்றான்.

அறைக்குள் சென்று படுத்தேன். அரைத்தூக்கத்தில் ஏதேதோ பிம்பங்கள் என் கண்ணில் நிழலாடின. பிரசாத் சத்தமாகச் சிரித்தார். அமைதியாக இருந்தார். நிறையத் தத்துவங்கள் சொன்னார். திடீரென என் மீது பாய்ந்தார். திடுக்கிட்டு விழித்தேன். அவரது பெட் காலியாக இருந்தது. மெயின் ஹால் விளக்கின் வெளிச்சம் என் அறையில் கசிந்தது. பிரசாத் இன்னும் டிவி பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

எப்போது உறங்கினேன் எனத் தெரியாமல் உறங்கிப்போனேன்.

அறைக்கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். மீண்டும் கேசவன். பதட்டமாக இருந்தான். என் கையை இழுத்துக்கொண்டு சென்று மெயின் ஹாலில் நிறுத்தினான். பிரசாத் மெயின் ஹாலின் மெத்தையில் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு சாய்ந்து கிடந்தார். அவரது வாயின் ஓரத்திலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவர் இறந்துவிட்டதாகக் கேசவன் கூறினான்.

“சூசயிட் பண்ணிக்கிட்டார்டா. என்ன பண்றதுன்னு தெரியலை. மேனேஜர்க்கு போன் பண்ணி சொல்லியிருக்கேன். அவரோட ·ப்ரெண்ட் ஒருத்தர் வக்கீலாம். அவரையும் கூட்டிக்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கார்”

எங்கள் கலைப்படத்தின் இக்காட்சி எனக்கு விளங்கவில்லை.

“ரொம்ப புகையா இருக்குடா”

“எங்கடா”

“ஒண்ணுமில்லை விடு. நான் ஊர்க்குப் போகணும்”

“அதான் நல்லது, போய்ட்டு வா. நா பார்த்துக்கறேன்”

கேசவன் சில காரியங்களை அடுக்கிக்கொண்டே போனான். நான் ஜன்னல் கதவைத் திறந்துவைத்தேன். மீண்டும் பிரசாத்தைப் பார்த்தேன். அவரது இடது கையின் கீழே ஒரு சிகரெட் துண்டு கிடந்தது. புகையற்றிருந்த சிகரெட்டின் மீது பிரசாத்தின் கண்கள் நிலைக்குத்தி நின்றிருந்தன.

* * *

Share

நிழலின் மீதான யுத்தம் – கவிதை

நான் விட்டுச் செல்லும்
காலடிச் சத்தம்
ஒரு பூனையின் லாகவத்தோடு
பதுங்கியிருக்க
பொழுதுகளில்
காற்றில் கரையும்
என் மூச்சும் வேர்வையும்
எங்கோ ஓரிடத்தில்
நிலைகொள்ள
தரையில் விரிந்து
நீர்த்துப்போகும் நிழலும்
காத்திருக்கின்றன
மீண்டும் என் வருகைக்காய்

விரிந்து பரந்த உலகத்தில்
என் உலகம்
தினம் நான் செல்லும் சாலைகளும்
கோயில்களுமென
அங்கே காத்திருக்கும்
என் காலடிச் சத்தமும்
மூச்சும் வேர்வையும் நிழலுமென
மிகச் சிறியதாகிவிட்டது

எப்போதும் நடந்துகொண்டிருக்கும்
நிழலின் மீதான யுத்தம்
தன் சத்தத்தை
இரவுகளில் நிறுத்திக்கொள்ளும்போது
மெர்க்குரிப்பூவின்
வெளிச்சத்தில்
என் மீது சரிகிறது
மதில் சுவரின் நிழல்

Share

பிறப்பு – கவிதை

இரண்டு வருடம் முன்பு செத்துப்போன
முப்பாட்டி ஞாபகமும் கொஞ்சம்
27 வருடம் கழித்துத் தாத்தா பிறந்தார்
யாரும் எதிர்பார்க்காத மாதிரி
பாலா மாமாவின் பெயரைச் சொன்னாள் அம்மா
அவளுக்கு பாலா மாமா என்றாலே தனிப்பிரியம்தான்
மாமனாரும் மாமியாரும்
அவர்கள் சொந்தத்தில் ஒருவரைத் தேர்ந்தார்கள்; உடனே
எங்கள் பக்கத்துக்காரர்கள் அதை மறுத்தார்கள்
நான் என் பங்குக்கு என் சித்தப்பாவைச் சொன்னேன்
மரச்சட்டத்தினுள் மாட்டிக்கிடந்த மனிதர்கள்
இறக்கை பூட்டிக்கொண்டார்கள்
இரும்பாலான கதவுகள்
இளகிக்கொள்ள
வீட்டு மரத்தூண்களில்
பாசி படரத் தொடங்கியது
குழந்தையின் ஒவ்வொரு சிணுங்கலிலும்
ஒவ்வொரு நெட்டி முறிப்பிலும்
அவர்கள் தங்களைச் சேர்த்துக்கொள்ள
-தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்-

Share

சின்னஞ் சிறு கவிதை

அரவமற்ற
மண்டபத்தின் நிசப்தத்துள்
விரவிக் கிடக்கிறது
சிலைகளின் கேவல்

வௌவால்கள்
தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு
கண்டடையமுடியாத
மௌனத்தைத் தேடிய வண்ணம்

காற்றடிக்கும்போதெல்லாம்
சிறிய அலையை ஏற்படுத்தும்
தேங்கிய குளத்தின் பச்சை நீர்
இறுக்கத்துடன்

சன்னிதியில்
எரிந்துகொண்டிருக்கும்
அகல்விளக்கு

அனைத்தையும் கலைத்துப் போடுகிறது
சிறு கை எறியும் பொரி

Share

சலனம் – கவிதை

தலைக்கு மேல்
பயணிக்கிறது நதி

வெளியுலகைச்
சுவீகரித்து
உள் அனுப்புகிறது நீர்

நதியின் மீதான சலனத்தில்
அசைந்து கொண்டிருக்கவேண்டும்
கரை மர நிழல்

நீர் மோதும்
பாறைகளின்
மிக நுண்ணிய சலனங்கள்
பிரபஞ்சத்தின் பேரமையில்
கேட்பதாயிருக்கும்

மெல்ல கண் திறக்க
நீர் வளையம்

என்னைச் சுற்றிக்கொண்டிருக்கிறது
வெளிர் மஞ்சள் நிறத்தில்
சூரிய ஒளியும் சில துகள்களும்

108 எண்ணி முடித்திருப்பான் முருகன்
இன்னும் சில எண்களில்
நான் நீர் வளையத்தைத் துறந்தாக வேண்டும்

நீரை ஒரு மிடறு விழுங்க
என்னுள் அடங்குகிறது
அந்நதி
அத்தனைச் சலனங்களுடனும்

Share

சாலை – கவிதை

தவிர்க்கவியலாத
கரும்பாம்பின் வசீகரத்தோடு
விரிகின்றன
சாலையோரங்கள்

செல்லும் வழியெங்கும்
முலை தரையழுந்த
ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள்
நீலி

பகுதி நிழல் படர்ந்து
ஒதுங்கியிருக்கும்
காரின்
கணத்தோற்றம்
ஓவியம்

நிழல் கருமை
இருள் கருமை
கருமையுள்
மூழ்கி
வெளி திளைக்கிறது
அதிகாலை
மனமெங்கும் விரவிக்கிடக்கும்
அழுத்தங்களை
துடைத்தெடுக்கிறது
பால் நீல வானம்
வானம் கடல்
அலையும் அமைதியுமாக
அலைந்தும் பரந்தும்
கிடக்கிறது கடல்
அமைதி
பேரமைதி

வாய் பிளந்து நிற்கும்
சாலையோர நீலியின்
வாய்க்குள் புகுந்து
வெளி வருகிறது
என் சுஸுகி

-oOo-oOo-

Share

கொல்லப்பட்டவர்கள் – சிறுகதை

அவன் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த அந்தக் குறுகிய சந்திலிருந்து இன்னொரு சிறிய முடுக்கு பிரிந்து சென்றது. அதனுள் மூக்கைப் பிடித்துகொள்ளாமல் நடக்கமுடியாது. மூத்திர நெடி கடுமையாக இருக்கும். அந்த மூத்திரச் சந்திற்குள் சென்றான் அவன். அவன் வாய் அவனையுமறியாமல் ஏதோ உளறிக்கொண்டிருந்தது. மதுவின் கட்டுப்பாட்டில் அவன் இருக்கும்போது அவனுக்கு இந்த உலகம் மிக எளிதாகிவிடுகிறது. அவன் உளறிக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொண்டே உளறிக்கொண்டிருந்தான். ஆனால் என்ன உளறுகிறான் என்பது பற்றிய பிரக்ஞை அவனிடம் இல்லை.

இன்று சில பேரை அவன் கொல்லவேண்டியிருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தான். அவனது நிலையில் அவன் இல்லை என்றாலும் என்ன செய்யப்போகிறான் என்பது பற்றிய தீர்மானமான எண்ணம் இருந்தது. உளறிக்கொண்டிருந்தாலும் உள்மனது என்னவோ அவன் கொல்லப்போகிறவர்களைப் பற்றிய பட்டியலைத் துல்லியமாய்த் தயாரித்துவிட்டிருந்தது. கொல்லும் முறைகளில் கூட இரண்டு மூன்று விதங்களை அவன் யோசித்துத் தேர்ந்திருந்தான்.

அவனுக்குப் பிறரைக் கொல்லும் எண்ணம் உதிக்கத் தொடங்கியது பதிமூன்றாம் வயதில்.

அன்றைக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்த ருக்மணி டீச்சர் பாடத்தில் மட்டுமே மும்முரமாக இருந்தாள். அவன் அமர்ந்திருந்த பெஞ்சின் முன்வரிசையில் இருந்த மாணவர்கள் கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்ப்பது மேற்படி புத்தகமாகத்தான் இருக்கவேண்டும் என்று அவன் யூகித்தான். அந்தப் புத்தகத்தைப் பார்த்தே தீருவது என்ற எண்ணம் அவனுக்கு வலுத்தது. மற்றவர்கள் கொஞ்சம் அசந்த நேரத்தில் அவன் அந்தப் புத்தகத்தைக் கைக்கொண்டுவிட்டான். பள்ளியின் கழிப்பறைக்குப் பக்கத்தில் செல்லும் சந்தில் நின்று அந்தப் புத்தகத்தை வாசிக்க அதைப் பிரித்தான். பக்கங்களில் பல இடங்களில் கிழிந்திருந்தன. பல புஷ்டியான பெண்கள் பல விதங்களில் நின்றிருந்தார்கள். அந்தப் புத்தகத்தை வரி விடாமல் வாசிப்பது என்றும் அதைப் பத்திரமாக வைத்திருப்பது என்றும் தேவைப்படும்போது எடுத்துப் படிப்பது என்றும் முடிவு செய்தான். அவன் எதிர்பாராதவாறு பியூன் முத்து அங்கு வந்தார்.

“என்னடா பண்ற?”

அவன் விழித்தான். அவர் அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பறித்துப் பார்த்தார். அவன் பிடரியில் தட்டி, “பிஞ்சுலயே பழுத்திட்டியா? போடா” என்று அதட்டி அவனை அனுப்பினார். அவன் பயந்துகொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினான். பிறகொரு சமயத்தில், அவர் சத்துணவு சமைக்கும் கூடத்தில் வைத்து அந்தப் புத்தகத்தைப் படிப்பதைப் பார்த்தான். அவனுக்குள் சொல்லமுடியாத கோபம் எழுந்தது. அவனுக்கு அவரைக் கொலை செய்தால் என்ன என்று தோன்றியது.

கொலை செய்யவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டதே ஒழிய அதற்கான மார்க்கங்கள் சுலபமில்லை என்பதை அவன் வெகு சீக்கிரமே அறிந்துகொண்டான். முத்து அவனைப் பார்க்கும்போதெல்லாம் கேலியாகப் பார்ப்பது போலவே அவனுக்குத் தோன்றும். அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும். மனதுக்குள் எப்படி அவரைக் கொல்வது என்றே யோசிப்பான். பள்ளி முடித்து, கல்லூரி சேர்ந்து அதைப் பாதியிலேயே டிஸ்கண்டினியூ செய்து, மெக்கானிக் வேலைக்கும் சேர்ந்துவிட்டான். அதுவரை முத்து அந்தப் பள்ளியில் பியூனாகவே இருந்தார். அவரைக் கொல்லும் எண்ணமும் அவனுக்கு வலுவிழந்துவிட்டிருந்தது.

மூன்று வாரங்களுக்கு முன்பு செக்கடி முக்கில் முத்துவை யாரோ கொன்றுவிட்டார்கள் என்று அவன் காதிற்குச் செய்தி வந்தது. ஓடிப்போய்ப் பார்த்தான். ரத்தவெள்ளத்தில் முத்து செத்துக்கிடந்தார். கந்துவட்டிக் கும்பல் கொன்றுவிட்டது என்று பேசிக்கொண்டார்கள்.

அவனுக்குள் முத்து பற்றிய எண்ணங்கள் தீவிரமாகக் கிளர்ந்தெழுந்தன. கொலை செய்யும் அளவிற்கு முத்து பாதகச் செயலை செய்யவில்லை என்றாலும், அன்றைய தினத்தில் அவன் எவ்வளவு அவமானம் அடைந்தான் என்பதும், முதன் முதலில் கொலை எண்ணம் உதித்தது முத்துவின் மேல் என்பதால் அவரைக் கொலை செய்வது அவசியம் என்பதும் அவன் நினைவிற்கு வந்தன. இன்று மிகத் தீர்மானமாய் முத்துவை மீண்டும் கொல்வது என்று முடிவெடுத்தான். அவனுக்குப் பதிமூன்று வயதுதான் என்றும் அவனே தீர்மானித்துக்கொண்டான்.

பள்ளிக்குப் பக்கவாட்டில் செல்லும் சந்துக்குள் சென்று பையன்களுக்குத் தெரியாமல் எடுத்த மேற்படி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். சற்று நேரத்திற்கெல்லாம், சொல்லி வைத்த மாதிரி முத்து வந்தார். அவர் சொல்லப்போகும் வசனங்கள் அவனுக்குத் தெரியும். “பிஞ்சுலயே பழுத்திட்டியா? போடா” என்று அவர் அதட்டினார். அவன் “பழுத்தா என்ன?” என்றான். முத்துவுக்கு என்ன சொல்வது என்று தெரியப்போவதில்லை. “ஏண்டா, நானே கஷ்டப்பட்டு புத்தகத்தை லவட்டிக்கிட்டு வந்தா, என்கிட்ட லவட்டிட்டு நீ படிக்கிறயா?” என்று சொல்லிக்கொண்டே, பின்பக்கம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவர் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினான். அவர் அலறிக்கொண்டே கீழே விழுந்தார். அவன் அவர்மேல் அமர்ந்து, அவர் வாயைப் பொத்திக்கொண்டு, அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்தவாறே அவரது குரல்வளையை அறுத்தான். முத்து செத்துப் போனார்.

சட்டையை உதறிக்கொண்டு, கையிலிருந்த கத்தியைத் தூரப் போட்டுவிட்டு அவன் அந்த முடுக்கை விட்டு வெளியேறினான்.

அவனது கொலைப் பட்டியலில் அடுத்து உள்ளது மல்லிகா.

பெண் என்கிற போதை அவனுக்குள் ஆழ வேரூன்றிக்கொண்டிருந்த சமயத்தில் மல்லிகா அவனுக்குப் பரிட்சயமானாள். மல்லிகா அவனுக்கு ஜூனியர். அவளும் அவனைப் போலவே பி.காம் எடுத்திருந்தாள். அடிக்கடி அவனிடம் சந்தேகங்கள் கேட்பாள். அவனுக்கு எதுவும் தெரியாது என்றாலும் தெரிந்த மாதிரி நான்கு வார்த்தைகள் சொல்லிவைப்பான்.

மல்லிகா எடுப்பாக இருப்பாள். அவன் முன் வளைய வளைய வருவதாக அவன் நண்பர்கள் அவனிடம் சொன்னபோது அவளை ஆழ்ந்து பார்க்கத் தொடங்கினான். அவன் அவளது மார்பகங்களையே எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பான். இப்படி ஒரு பெண் இருக்கமுடியும் என்றே அவன் நம்பவில்லை. அவள் அத்தனைப் புஷ்டியாக இருந்தாள். அவன் அவளை அப்படிப் பார்க்கிறான் என்பது அவளுக்கும் தெரியும். அவளுக்குள் அதுகுறித்து பெருமையும் சந்தோஷமும் இருந்தது. அதைத் தாண்டி அவன் எதாவது செய்யமாட்டானா என்றும் ஏங்கினாள். அப்போது அவனுக்கு வயது இருபத்தொன்று இருக்கும். அவனைக் காமம் விடாமல் துரத்திய காலம். அவனது நண்பர்கள் வீட்டில் எல்லாரும் எங்காவது வெளியூருக்குப் போனால் டெக் மற்றும் கேசட்டுடன் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவான். கேசட் வாடகைக்கு விடும் அத்தனைக் கடைகளும் அவனுக்குப் பரிட்சயம். இரண்டே நிமிடங்களில் கேசட் வாங்கிக்கொண்டு வந்துவிடுவான். விதவிதமாகக் கேசட் வாங்குவதில் அவனுக்கு நிகர் யாரும் கிடையாது என்று அவனது நண்பர்கள் சொல்லும்போது அவன் மிகவும் பெருமை கொள்வான். மிருகங்களுடனான கேசட்டை அவன் வாங்கி வந்தபோது அவன் நண்பர்கள் அவனை வியந்தனர்.

மல்லிகாவின் அம்மாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அவள் இரவு நேரங்களில் செல்வதும் வருவதும், அவளது கணவன் கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே அவளை விட்டு ஓடிப்போய்விட்டதும் ஊருக்குள் எப்போதும் பேச்சாயிருக்கும். இந்த விஷயம் அவனுக்கு ஒரு வகையில் தோதாகப் போய்விட்டது. மல்லிகாவை எப்படியும் தொட்டுவிடலாம் என்று கணித்திருந்தான்.

அன்று இரவு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதைப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தான். மல்லிகாவின் வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள். மல்லிகாவும் ஆரம்பத்தில் அவனுக்குக் கொஞ்சம் ஒத்துழைத்தாள். ஆனால் திடீரென்று அவனைத் தள்ளிவிட்டு, “நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை” என்று அழுதாள். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதற்குப் பிறகு அவன் அவளுடன் பேசவில்லை.

மல்லிகாவிற்குத் திருமணம் செய்ய அவளது அம்மா ஆகப்பாடுபட்டாள். ஆனால் எதுவுமே அமையவில்லை. அமையாது என்று அவனுக்குத் தெரியும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரே மல்லிகாவின் வீட்டு முன்னர் திரண்டிருந்தது. அவனும் ஓடிப்போய்ப் பார்த்தான். யாரோ மல்லிகாவைக் கெடுத்துக் கொன்றுவிட்டிருந்தார்கள். மல்லிகாவின் அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். கிழிந்த ஜாக்கெட்டுடன் மல்லிகாவும் மார்பகம் மேல் குத்தி நின்றிருந்தது. அவனுக்கு விகாரமாக இருந்தது.

மல்லிகாவை இன்று விடப்போவதில்லை என்று அவன் தீர்மானித்து வைத்திருந்தான்.

அன்று இரவு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுக்கு இப்போது இருபத்தொன்று வயது. மல்லிகாவும் ஆரம்பத்தில் ஒத்துழைத்தாள். ஆனால் அவனைத் திடீரென்று தள்ளிவிட்டு, “நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை” என்று அழுதாள். “ஏண்டி நீ என்ன பத்தினியா” என்று மூர்க்கமாகக் கத்தினான் அவன். மல்லிகா அதிர்ந்ததைப் பார்க்கும்போது அவனுக்குள் சந்தோஷமும் வெறியும் வலுவடைந்தது. அவளைப் படுக்கையில் தள்ளி, அவள் மேல் பாய்ந்தான். அவளது கைகளைப் பின்புறமாகக் கட்டி, “உன்னல்லாம் கொல்லனும்டி தேவடியா” என்று சொல்லிக்கொண்டே, பின்புறம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்தினான். அவள் கத்திக்கொண்டே அவன் மீது சரிந்தாள். முழுவதுமாகச் சரிந்தாள். அவளின் உடல் முழுதும் அவன் மீது படர்ந்திருந்தது. “இனிமே மயங்க மாட்டாண்டி இவன்” என்று சொல்லி, வயிற்றிலிருந்து கத்தியை உருவி, மீண்டும் குத்தினான். மல்லிகா முழுவதுமாக அடங்கினாள்.

வீட்டை விட்டு வெளியில் வந்து கத்தியைத் தூக்கி எறிந்தான்.

இன்னும் ஒரு கொலை மட்டும் பாக்கியிருக்கிறது.

அவனது சொந்தம் என்று சொல்லிக்கொண்டவர்கள் அவனுக்கு லட்சுமியைக் கட்டி வைத்தார்கள். அவனுக்குக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணமே இருந்திருக்கவில்லை. ஆனால் லட்சுமியைப் பார்த்ததும் அவளின் உடலுக்கு ஆசைப்பட்டு ஒத்துக்கொண்டான். இதை அவனே பலமுறை அவளிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் லட்சுமி எப்போதும் எதையோ பறிகொடுத்தவள் போல இருந்தாள். அவளிடம் ஒரு புதுப்பெண்ணிற்கு உரிய எதுவுமே இருந்ததில்லை. அவனுக்கு அதைப் பற்றிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. இரவில் அவள் தயாராய் இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவனுக்கு தெரிந்த வாழ்க்கை.

ஒருநாள் இரவில் அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஆண்குரல் கேட்டு விழித்தான். லட்சுமியைக் காணவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். லட்சுமி தனபாலுடன் பேசிக்கொண்டிருந்தாள். தனபால் ஏதோ மறுக்க, அவள் விடாமல் அவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அவனுக்கு அவள் என்ன சொல்கிறாள், தனபால் எதை மறுக்கிறான் என்று விளங்கவில்லை. அவனுக்கு கோபம் வந்தது. ஆனாலும் ஒன்றும் நடக்காத மாதிரி சென்று படுத்துக்கொண்டுவிட்டான்.

இரண்டு மூன்று தினங்களில் அவன் எதிர்பார்த்த மாதிரியே லட்சுமி அவனுடன் நன்றாகப் பேசினாள். அவனுக்குச் சந்தேகம் வலுத்தது. அவனுக்குத் தனபால் பற்றியே யோசனையாக இருந்தது. இருவரும் ஓடிப்போகப் போகிறார்களோ? லட்சுமி அதற்கான வேலைகளில்தான் ஈடுபட்டிருந்தாள். லட்சுமி அவனை ஒன்றும் தெரியாதவனாகப் பாவித்திருந்தாள். ஆனால் அவன் லட்சுமியின் மன ஓட்டங்களை மிக எளிதில் கணித்துவிட்டிருந்தான். அவன் அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான். அவள் கொஞ்சம் அதிர்ந்தாலும், மெல்ல சுதாரித்துக்கொண்டு, “ஆமா இப்ப என்ன? உன்கூட எவ இருப்பா? எருமை மாதிரி மேல பாயிரியே. தனபாலுக்குப் பொம்பளை மனசு புரியும்”, என்று சொல்லி அழுதாள். அவளுக்கும் தனபாலுக்கும் கல்யாணத்திற்கு முன்பே தொடுப்பு இருந்தது அவனுக்குப் புரிந்தது. அவள் மேல் கோபம் கோபமாக வந்தாலும் அவனுக்கு அதற்கு மேல் என்ன செய்யவேண்டும் எனத் தெரியவில்லை. அவளை அறைய வேண்டும் என வெறி வந்தது. ஆனால் அறைய முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறினான்.

அன்றிரவு அவன் வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டி இருந்தது. எவ்வளவு தட்டியும் லட்சுமி கதவைத் திறக்கவில்லை. அவனுக்குப் பயம் வந்தது. கதவை உடைத்துப் பார்த்தபோது, லட்சுமி தூக்குப் போட்டுச் செத்துப் போயிருந்தாள்.

ஆனால் இன்று அவன் லட்சுமியை விடப்போவதில்லை. அவன் மனதில் வெறி இருந்தது. அவன் அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான். அவளும் அதே போல் “ஆமா இப்ப என்ன? உன்கூட எவ இருப்பா?”, என்று சொல்லி அழுதாள். “ஏண்டி தேவடியா முண்ட, அந்த நாய் கூட ஓடிப்போகப் போறியா? நா உன்னை சும்மா விடமாட்டேண்டி, பொலி போட்ருவேன்” என்று ஆவேசமாகக் கத்தினான். தொடர்ந்து, “என்னடி பாக்கிற? உன்னல்லாம் உசுரோட விட்டா நா ஆம்பிளைன்னு சொல்லிக்கிட்டுத் திரியறதே கேவலம்டி” என்று சொல்லிக்கொண்டு, ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அரிவாள்மனையை எடுத்து, அவள் உச்சந்தலையில் வெட்டினான். லட்சுமி தலையைப் பிடித்துக்கொண்டே கீழே சரிந்து விழுந்ததைப் பார்த்தான்.

அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. பெரும் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டது போலவும், அவனது வாழ்வின் சிறிய எதிரிகள் எல்லாம் அவனுக்குப் பயந்து அவன் முன் மண்டியிட்டுக் கிடப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. அதிலும் முக்கியமாய், தனபால் “என்னை விட்ருங்கண்னே விட்ருங்கண்னே” என்று கெஞ்சிக்கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்தான். வீட்டை விட்டு வெளியில் வந்து அரிவாள்மனையை வீசி எறிந்தான். அந்தச் சத்தம் கேட்டு, அவன் வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பூனை தாவிக் குதித்து ஓடியது. அவன் கொஞ்சம் பயந்து, பின் சுதாரித்துக்கொண்டு, “தாயோளீ, நாளைக்கு லிஸ்ட்ல உன்னையும் வக்கிறேன் பாரு” என்றான் சன்னதம் வந்த குரலில்.

-oOo=

Share