தலித்துகளும் பிராமணர்களும்

 

 

தலித்துகளும் பிராமணர்களும் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ’அந்தணர் வரலாறு’ எழுதிய கே.சி. லட்சுமி நாராயணன் எழுதியது. இவர் எழுதிய ’அந்தணர் வரலாறு’ தந்த பயம் காரணமாக, இவரது எழுத்துகள் மீது கொஞ்சம் விலகல் இருந்தது. இந்தப் புத்தகம் அந்த விலகலைத் துடைத்துப் போட்டிருக்கிறது.

’தலித்துகளும் பிராமணர்களும்’ புத்தகத்தை ஒவ்வொரு தலித்தும் ஒவ்வொரு தலித் தலைவர்களும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்று நூலாசிரியர் விரும்புவதாகத் தெரிகிறது. தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையே நிலவும் மனத்தடை காரணமாக இவர் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

எனக்கென்னவோ உண்மையில் ஒவ்வொரு (தங்களை அப்படி உணரும்) பிராமணரும் படிக்கவேண்டிய நூல் என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதரும் இன்னொரு (தங்களை பிராமணராகவே உணரும்) பிராமணருக்கு இந்த நூலை வாங்கித் தருவது அவசியம். வாங்கித் தரும்போது மறக்காமல் சொல்லவேண்டியது, ’இந்த நூலைப் படிக்கவேண்டியதன் அவசியம் உங்கள் பிராமணப் பெருமைகளைப் புதுப்பித்துக்கொள்ள அல்ல, மாறாக பல முக்கியமான பிராமணர்கள் எப்படி தலித்துகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதன்வழி நீங்களும் வாழவேண்டும் என்பதே.’

கே.சி. லட்ச்மி நாராயணன் பல விஷயங்களில் கவனம் செலுத்தி இந்நூலை எழுதியிருக்கிறார். உண்மையில் தலித்துகள் தங்கள் மீது ஆதிக்கத்தை நிகழ்த்தும் உண்மையான ஆதிக்க சாதிகள் எவை என்பதை உணரவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. தேவையான நூல்தான். அதே சமயத்தில், இந்நூல் பிராமணர்கள் தலித்துகளுக்கு ஆற்றிய பங்குக்கு முக்கியமான ஆவணமாகவும் திகழும். அரிஜன அய்யங்கார், கக்கனின் குருநாதர், வைத்தியநாத ஐயர், அம்பேத்கரின் ஆசிரியர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் அபாரம். தலித்துகள் புரிந்துகொள்ளவேண்டும், தலித் தலைவர்கள் உணரவேண்டும் என்னும் ‘சாதி’ நூலுக்கான க்ளிஷேவைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் பிராமண வெறுப்பாளர்கள் எளிதில் எரிசலடையும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுவதையும் தவிர்த்திருந்திருக்கலாம். மற்றபடி மிக மிக முக்கியமான ஆவண நூல் இது.

’அரிஜன அய்யங்கார்’ என்னும் தன் வரலாற்று நூலை அடிப்படையாக வைத்து ஆலந்தூர் மள்ளன் எழுதிய (உணர்வு-பிரசார!) சிறுகதை இங்கே.

நூல் விவரம்:

 

தலித்துகளும் பிராமணர்களும், ஆசிரியர்: கே.சி.லட்சுமி நாராயணன், Rs. 120,  வெளியீடு: LKM Publications, Old No 15/4, New No 33/4, Ramanathan Street, T Nagar, Chennai – 600017, +(91)-(44)-24361141, 24340599, +(91)-9940682929

இந்நூல் பற்றிய தினமலர் புத்தக அறிமுகம் இங்கே.

தற்போது படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்: ஊரும் சேரியும் – சித்தலிங்கய்யா, கவர்மெண்ட் பிராமணன் – அர்விந்த் மாளகத்தி. இவை பற்றிய சிறிய குறிப்புகள் பின்னர். 

 

Share

Comments Closed