ஞாநி போட்டிருக்கும் ஸ்டேட்டஸ் இது:
https://www.facebook.com/gnani.sankaran/posts/10200867431320770
//இன்றைய உடனடித் தேவை சுயசாதி மறுப்பாள்ர்களே. " நான் பிறப்பால் வன்னியன் என்றார்கள். ஆனால் நான் சாதியற்றவன். சாதிக் கலப்பையும் சமத்துவத்தையும் ஆதரிப்பவன். எல்லா சாதி வெறியையும் எதிர்ப்பேன்" என்று ஒவ்வொரு சாதியிலிருந்தும் குரல் வரவேண்டும். குரல் கொடுப்போர் இங்கு வந்து பதிய அழைக்கிறேன். முதல் குரல் என்னுடையது. நான் பிரந்த பார்ப்பன சாதியை நான் உதறிவிட்டேன். பார்ப்பபன சாதி வெறி உட்பட எல்லா சாதி வெறியர்களையும் நான் தொடர்ந்து எதிர்ப்பேன். சாதிக் கலப்பை ஆதரிப்பேன். இங்கே வந்து பதிவு செய்யும்படி முதன்மையாக வன்னியராகப் பிறக்க நேர்ந்த சாதி மறுப்பாளர்களை அழைக்கிறேன்.//
இதில் உள்ள மறுமொழிகளைப் படித்துவிடவும். இது தொடர்பாக என் கருத்து முதலில்:
இப்போதைக்கு எனக்கு ஜாதிய எண்ணம் இல்லை என்றே நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் பூணூல் அணிவதில்லை. இதனால் ஜாதி எண்ணம் ஒழிந்துவிட்டதா என்றால் தெரியவில்லை என்றே சொல்லுவேன். ஏனென்றால் என் குடும்ப வழக்கம் எல்லாவற்றிலும் ஜாதியின் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளது. நான் ஜாதியைப் புறக்கணிக்க வேண்டுமானால் முதலில் என் சொந்தங்களை என் கொள்கையை முன்வைத்து மறுக்கவேண்டும். என்னால் அது இயலவே இயலாது. எனவே நான் முற்றும் ஜாதியைத் துறந்துவிடவில்லை என்பதே உண்மையாகிறது.
நாளை என் மகனுக்கு உபநயனம் செய்விக்காமல் இருப்பேன் என்று என்னால் உறுதி கூற முடியாது. என் அம்மா, என் உறவினர் அனைவருக்கும் இது கடுமையான மன உளைச்சலை விளைவிக்கும். அவர்களை எதிர்க்க எனக்கு உறுதி இல்லை. இது ஒரு நொண்டிச் சாக்கு என்று சிலர் சொல்லலாம். சொல்லிக்கொள்ளட்டும்.
நானே முன் வந்து என் மகனுக்கோ மகளுக்கோ வேறு சாதியில் வரன் பார்த்துத் திருமணம் செய்விப்பேன் என்று இன்றைய நிலையில் என்னால் நிச்சயம் உறுதி கூற முடியாது. அதையும் இப்போதே சொல்லி வைக்கிறேன். ஆனால் என் மகனோ மகளோ அவர்களாக வேறு ஒரு சாதியில் யாரையேனும் விரும்பினால் (ஹிந்து மதம் தவிர வேறெந்த மதத்தையும் ஏற்கமாட்டேன்) அவர்கள் குடும்பமும் அந்த வரனும் நல்ல விதமாக எனக்குத் தோன்றினால் நிச்சயம் மணம் செய்து வைப்பேன். அதேபோல் அவர்களாகவே விரும்புவது இன்னொரு பிராமண வரன் என்றால், அந்த வரனோ அக்குடும்பமோ நல்ல விதமாக இல்லை என்றால் நிச்சயம் திருமணம் செய்விக்க மாட்டேன். இதுவே என் இன்றைய நிலை.
நான் முதலில் இதைச் சொல்லிவிடுவதன் நோக்கம், ஞாநியின் ஸ்டேட்டஸ் குறித்து ஐயங்களை எழுப்பத்தான்.
01. முதலில் இங்கே வந்து நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொல்பவர்களெல்லாம் (பெரும்பாலும்) ஹிப்போகிரஸியை வளர்ப்பவர்களாகவே இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். சும்மா வாய் வார்த்தை சொல்வது எந்த வகையில் சரி? இவர்கள் இதை எப்படி நிரூபிக்கப் போகிறார்கள்?
02. பொதுவாகவே உணர்ச்சிவசப்பட்டு பேசுவது நம் அனைவருக்குமே உரிய ஒன்று. இளவரசனின் மரணம் தந்த உளைச்சல் யாவருக்கும் உரியதே. எனக்கும் கடுமையாகவே இருந்தது. அவர் குடித்துவிட்டு செத்துக் கிடக்கிறார் என்று சொன்னவர்களை என் ஃபேஸ்புக்கில் அன்று நான் ப்ளாக் செய்தேன். எனக்கு ஒரு மகிழ்ச்சி இப்படி ப்ளாக் செய்வதில். அதே உணர்ச்சி வேகத்தில் நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொன்னால், அதை எப்படி காலாகாலத்துக்கும் கடைப்பிடிப்பது என்று இவர்கள் யோசித்தார்களா இல்லையா?
03. மிக முக்கியமான கேள்வி, இப்படி ஜாதியை கைவிட்டுவிட்டவர்கள் ரிசர்வேஷன் அடிப்படையில் எச்சலுகையையும் கோரி பெறமாட்டார்களா? இதைப் பற்றி ஞாநியும் எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை.
04. இந்திய நாட்டில் ஜாதி என்ற ஒன்று நிஜமாகவே வெறும் மோசம் செய்ய மட்டும்தான் இருக்கின்றதா? எத்தனை எத்தனை ஜாதிகள். நம் வரையறையில் கொஞ்சம் கூட் யோசிக்க முடியாத அளவுக்கு ஜாதிகளும் அதன் பழக்கங்களும் அதன் பாரம்பரியமும் உள்ளனவே. இவைதானே பன்மைத்துவத்தின் உச்சம். ஒற்றை செயல் அடிப்படையில் இவற்றை எல்லாம் நாம் கை கழுவினால், என்ன ஆகும்? இதைப் பற்றியெல்லாம் நாம் விவாதித்திருக்கிறோமா?
இவற்றுக்கெல்லாம் பதில் சொன்னால்தான் ஜாதியைக் கைவிடுபவர்களைப் பற்றி நேர்மையாக என்னால் யோசிக்கமுடியும்.
பின்குறிப்பு: நான் ஜாதி வெறியன் என்று சொல்லப்போகிறவர்களுக்கு – நான் ஜாதி வெறியன் இல்லை என்று மட்டுமே சொல்லமுடியும். அதை என்னால் நிரூபிக்கமுடியாது என்று ஒப்புக்கொள்கிறேன். இப்போதைக்கு என் நிலை இதுதான் என்பதை எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்லிக்கொள்வது தேவை என்று கருதி இதைச் சொல்கிறேன். நன்றி.
பின்குறிப்பு 2: நான் இதை ஞாநியின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸிலேயே கேட்கமுடியும். விவாதம் திசை திரும்பிவிடும் என்பதற்காக மட்டுமே தனியாகப் பதிகிறேன்.