5 கவிதைகள்

கனவின் அலைதல்

என்னை கௌவிக்கொண்டு
வழிதவறிச் சென்ற தட்டான்
மலைமுகட்டிலிருந்து
திரும்ப வரும்போது
என்னை மறந்துவிட்டிருந்தது
நான் தூங்கிவிட்டிருந்தேன்
அங்கே
என் கனவில்
கையில் தட்டானை ஏந்திக்கொண்டிருந்தேன்
கைகள் விரிக்கவும் மூடவும்
தட்டான் இறக்கையை அடித்துப் பறக்கவும்
கடந்துகொண்டே இருக்கிறது
நிமிடம் நாள் மலைகள் ஆறுகள்
யுகமுடிவில்
அங்கே தட்டான் இல்லை
நானில்லை
மலைமுகடில்லை
ஆனால் அலையும்
என் கனவு மட்டும் இருக்கிறது.

மீண்டு வரும் ஒரு சித்திரம்

கண்ணில் தெரியும் கதைகளில்
உருவாகி வரும் சித்திரத்தில்
நான் சேர்த்த சில வரிகள் இருக்கின்றன
நீங்கள் நீக்கிய சில வரிகள் இல்லை
அவன் கிழித்த கோடுகள் உள்ளன
அவள் வரைந்த ஓவியத்தின் ஒருபகுதி தெரிகிறது
போக வர கைகள் கிறுக்கிய கோடுகளோடு
உள்ளிருந்து
உயிர்ச்சொல்லென
மேலெழும்
வார்த்தைகளொடு
அழிக்கப்பட்ட தடங்களின் மௌனத்தோடு
கண்ணில் தெரிகிறது புதிய கதை

ரணங்களில் துளிர்க்கும் ஒரு சிறு செடி

கனன்றுகொண்டிருக்கும்
இன்னும்
அச்சொல்லை நீ சொல்லாதிருந்திருக்கலாம்
நான் மறந்திருக்கலாம்.
இரவுகளில் நம் நிர்வாணம்
பொத்தி வைத்துக் கொண்டிருக்கும்
அநேகக் கதைகளை
ஒவ்வொன்றாகப் பிரித்தால்
இன்னொரு உலகமென
நாமறிவோம்
நம் பாவனைகள்
அதை மறப்பதை ஒட்டியே என்றாலும்.
மீள மீள
நீர் தெறிக்க
வீசப்பட்டுக்கொண்டே இருக்கும்
கல்லும்
ரணமும்
இதற்கிடையில்
ரணத்தில் மெல்ல துளிர்க்கிறது
ஒரு சிறு செடி.

இடுகை

ஃபேஸ்புக்கின் முகமிலிகள்
அலுக்கத் துவங்கும்போது
யாரோ யாரையோ
வசைபாடத் துவங்கினார்கள்.
அவன் ஒரு பக்கம் சேர்ந்தான்.
சில வரிகள் உள்ளிட்டான்.
அவன் மூக்கு ரத்தத்தை மோப்பம் கொண்டது.
உள்பெட்டியின் வசைகளில் தனித்து நின்றது ஒரு கெட்ட வார்த்தை.
நான்கைந்து முறை சொல்லிப் பார்க்கவும்
இளவயதின் கிராமம் விரிந்தது.
ரத்தமும் சதையுமான மனிதர்களைத் தேடி
தெருவோர தேநீர்க் கடைக்கு ஓடினான்.
யாரும் யாரையும் திட்டவில்லை.
அவனுக்கு ஒரு தும்மல் வந்தது.
என்ன சமூகம் இது என்றான்.
கைபேசியில்
ஃபேஸ்புக்கைத் திறந்து
தாயளி என எழுதத் துவங்கினான்.

சிறுமியின் புன்னகை

அச் சிறுமியின் புன்னகையில்
உயிர்கள் தோற்று மண்டியிட்டன
பறவைகள் பறக்க மறந்து உறைந்தன
உலகக் கடவுளர்கள்
கை கட்டி
வாய்பொத்தி
மெய்குழைந்து
வரிசை கட்டிக் காத்திருந்தனர்,
அவள் உறங்கிவிட்டிருந்தாள்.
அந்தச் சிறுமி
தன் மென்கைக்குள்
உலகைச் சுருட்டி இருந்தாள்
எங்கேயும்
இரவுபகல்
பேதமின்றி
பூக்கள் பூத்தன
அணுகுண்டு வெடித்த வெளிகளில்
அவளையொத்த சிறுமிகள்
புன்னகையைத் தெளித்தவண்ணம் இருந்தனர்
சாத்தான் உலகச் சிறுமிகளை
ஒற்றை ஓவியமாக்கிப் பார்த்தான்,
அந்த ஓவியத்திலிருந்து
ஆயிரம் ஆயிரம் சிறுமிகள்
மொட்டென வெடித்துப் பரவி
கடவுளானபடியே இருந்தார்கள்.
சிறுமிகள் கால்பட்ட நிலத்தின்
கூழாங்கற்கள் சிலிர்த்தன.
கருமேகம் எப்போதும் அவர்கள்பின்
சென்றபடி இருக்க,
பூமியின் சமநிலை
புன்னகை பூத்த
சிறுமிகளால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

Share

Comments Closed