எங்க இருந்து கூப்படறீங்க, உங்க பேரைச் சொல்லுங்க.
நா கிருஷ்ணாபுரத்துல கூப்புடுதென் மேடம். பேரு ..
என்ன ஜோக் சொல்லப் போறீங்க?
ரெண்டு ஜோக் மேடம்.
சொல்லுங்க.
மாமியாக்காரி மாடில இருந்து விழுந்துட்டா. ஏட்டி தூக்குட்டின்னு சொல்லுதா. ஆனா மருமவ தூக்கமாட்டெங்கா. ஏன்?
ஏன்? தெரியலையே..
என்ன வெய்ட் தூக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்கன்னு சொல்லுதா.
ஓ.. எம்மாடி..
இன்னொரு ஜோக் சொல்லுதென். ஒரு வாத்தியாரும் ப்ரொசரும் ஒரு ஸ்கூலுக்கு செக் செய்ய போறாங்க.
ரெண்டும் ஒருத்தர்தானே..
இல்ல மேடம்.. ஒருத்தர் அட்மினு..
ஓ
போம்போதெ சொல்லுதாங்க எல்லாரும். ஸ்கூல் ரொம்ப விவகாரமானதுன்னு. அங்க போய் பையனுவ கிட்ட பேர கேக்காரு ப்ரொபாச்ரு.. உம் பேர் என்னல? பளனி. அப்பா பேரு? பளனியப்பன். எலேய், உம் பேரு? காசி. உங்கப்பா பேரு? காசியப்பன். ஆத்தாடின்னு ஓடி வந்துட்டாங்க மேடம்.
ஓ! எப்படி இருக்காங்க பாருங்க நம்ம ஆளுங்க.
ஆமா மேடம்.
சரி, நேயர்களே அடுத்த பாடல் அருள் படத்தில் இருந்து ஒட்டியாணம் செஞ்சி தாரேன் வாரியா பாடல் ஒலிபரப்பாகிறது.
பாட்டு ஒலிபரப்பாகிறது.
அடுத்த நேயர்.
வணக்கம் மேடம். நல்லா இருக்கீங்கலா?
நலமா இருக்கேன் சொல்லுங்க. என்ன ஜோக் சொல்லப் போறீங்க?
ஒருத்தன் டாக்டர பாக்க போறான். நூறு வயசு வாளனும் சார். என்ன செய்யணும்னு கேக்கான். டாக்டர் கேக்காரு.. கல்யாணம் ஆயிட்டான்னு.. அடுத்த வாரம் கல்யாணங்கான். கல்யாணம் ஆன பின்னாடி வாடேன்னு சொல்லி அனுப்பிடுதாரு. ஏன்?
ஏன்?
டாக்டர் சொல்லுதாரு, அப்புறம் நீ வந்து நூறு வயசு வாழணும்னு கேக்கமாட்டங்காரு..
ஓ.. விவரமான டாக்டரா இருக்காரே.
நேயர்களே உங்களுக்கான அடுத்த பாடல் மதுர படத்தில் இருந்து. பம்பரக் கண்ணு பச்ச மொளகாய் பாட்டு ஒலிபரப்பாகிறது.
அடுத்த நேயர்.
மேடம்.. ஜோக் சொல்லட்டா.. ஒருத்தர் டாக்டர்கிட்ட போறான். (இவரும் இரண்டு டாக்டர் ஜோக்ஸ் சொல்கிறார்! மறந்துவிட்டது)
ஏன் எல்லாரும் டாக்டர் ஜோக்கா சொல்றீங்க இன்னைக்கு? தெறிக்க விடுதாங்களே நம்ம ஆள்கள். நேயர்களே உங்களுக்கான அடுத்த பாடல்..
**
இவையெல்லாம் முந்தாநாள் திருநெல்வேலி பண்பலையில் கேட்ட நிகழ்ச்சியில் காதில் விழுந்தவை. இருபது வருடத்துக்கு முந்தைய திருநெல்வேலியை அங்குலம் கூட மாறாமல் அப்படியே பாதுகாத்து வெச்சிருக்கீங்களேடே! I am blown away!