அமுதனின் கதை!

இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

*

அவன் பெயர் வசதிக்காக அமுதன் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெண்ணின் பெயர் அமுதா! அமுதன் என்னுடன் கல்லூரியில் படித்தான். நான் மற்ற நண்பர்கள் வீட்டுக்குப் போகும்போது அமுதனும் வருவான். அங்கே அமுதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் இந்த அமுதனுக்கு தூரத்துக்கு உறவு. இது அமுதனுக்குத் தெரிய வந்ததும் அவனுக்கு அமுதா மேல் காதல் வந்துவிட்டது. அமுதாவின் வீட்டுக்காரர்கள் அமுதன் தங்கள் தூரத்துச் சொந்தம் என்பதால் ஓவராக அவனுக்காக உருகினார்கள். தினமும் காஃபிதான் வடைதான். இவனும் அடிக்கடி வருவான் போவான். அந்தப் பெண்ணுக்கும் இவனை உள்ளூரப் பிடித்திருந்தது. ஆனால் இருவரும் பரஸ்பரம் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. இப்படியே காதலை பொத்தி பொத்தி வளர்த்தார்கள். என்னிடம் மட்டும் அமுதன் அமுதாவைப் பற்றி அப்படி இப்படி என்றெல்லாம் பேசி பெரிய அறுவையைப் போடுவான். தலையெழுத்தே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். நாங்களெல்லாம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம் பார்க்கும் வேகத்தில் இருக்க, இவன் அறுபதுகளின் காதலை எங்கள் காதில் ஓதி கடுப்பைக் கிளப்பிக்கொண்டிருந்தான். அமுதா அப்படி சிரித்தாள், அமுதா அப்படி பார்த்தாள், அமுதா வேண்டுமென்றே பார்க்காமல் போனாள், அமுதா அப்படிச் செய்தால் அதன் அர்த்தம் அவங்க அம்மாப்பாவுக்குக் கூடத் தெரியாது, தனக்குத்தான் தெரியும் இத்யாதி இத்யாதி. ஒருநாள் அமுதா என்ற பெயரை ஒரு பேப்பரில் ரத்தத்தில் எழுதிக்கொண்டு வந்து பெருமையாகக் காண்பித்தான். அடதாயளி என்பதே என் அதிகபட்ச ரீயாக்‌ஷனாக இருக்கவும் நொந்து போனான். அந்த பேப்பரை நாலாக எட்டாக மடித்து ஒரு முத்தம் கொடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டு, ‘வாழ்க்கை முழுக்க இது என் கூட இருக்கும் மக்கா’ என்றான். வாக்தேவி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டாள். அந்த பேப்பர் மட்டுமே நிலைத்தது. அமுதாவின் வீட்டில், ‘சொந்தமெல்லாம் சரிதான், ஆனா கல்யாணமெல்லாம் வேண்டாம்’ என்று முடிவெடுக்க, அதே மனநிலையில் அமுதனின் வீடும் இருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் அமுதாவுக்கு வேறொரு தடியனுடன் கல்யாணம் ஆனது. கல்யாணத்துக்கு போய் பந்தி பரிமாறி மொய் வைத்துச் சிறப்பித்து போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்தான் அமுதன். நாங்களும் போயிருந்தோம்!

அன்றிரவு முழுக்க அமுதன் அரற்றிக்கொண்டே இருந்தான். கூட இருந்த பையனெல்லாம் சும்மா இல்லாமல், எல இப்ப என்னல ஆயிருக்கும் என்றெல்லாம் கேட்டு வைக்க அமுதன் அழுவதா சிரிப்பதா எரிந்து விழுவதா என்று தெரியாமல் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தான். இன்னொருத்தன் சொன்னான், ‘அதுக்குத்தான் அன்னைக்கே டெக் போடும்போது கூப்பிட்டேன். அதுமட்டும்தாம்ல நெஜம்’ என்று சொல்லி வைத்தான்.

அமுதன் அழகாக இருப்பான். நன்றாகப் படிப்பான். அவனை ஏன் அமுதாவின் குடும்பம் விட்டுக்கொடுத்தது என்பதே எங்களுக்கு விளங்கவில்லை. அமுதன் இன்னும் படித்து வெளிநாடு போய் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆனபோது அவனுக்கு அழகான பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு அமுதா என்றெல்லாம் பெயர் வைக்காமல் தந்திரமாகத் தன் மனைவியிடம் இருந்து தப்பித்துக்கொண்டான். இடையிடையே என்னுடன் பேசுவான். வாட்சப் புண்ணியத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி.

இதற்கிடையில் அமுதாவின் சொந்தக்காரர்கள் மூலம் அந்தப் பெண்ணின் மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என்றறிந்தேன்.

இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா பாட்டு. அதுதான் அமுதன் அமுதாவின் ஃபேவரைட் பாட்டு. இந்தப் பாட்டு காதில் விழவும் அமுதனின் ஞாபகம் வர, கூடவே அமுதாவின் மகள் பெரியவளான செய்தியும் வர, உடனே அமுதனை அழைத்தேன்.

“எல, அமுதாவோட பொண்ணு வயசுக்கு வந்துட்டாம்ல” என்றேன்.

“எவல அவ?” என்றான்.

Share

Comments Closed