Archive for திரை

Good Bad Ugly Tamil movie

குட் பேட் அக்லி – எத்தனையோ குப்பைகளைப் பார்த்திருக்கிறேன். இது குப்பையிலும் குப்பை. இதை தியேட்டரில் பார்த்தவர்கள் நிலை அந்தோ பரிதாபம். ஒரு சீரியஸான காட்சியில் சிம்ரன் வருவதும் இன்னொரு காட்சியில் கிங்க்ஸ்லீ வருவதும் சகிக்க முடியாதவை. இதனால் மற்ற காட்சிகள் சகிக்க முடிந்தவை என்று நினைத்துவிட வேண்டாம். குட் உடைந்து பேட் வந்தாலும் பேட் உடைந்து அக்லி வந்தாலும் படம் தொடக்கம் முதல் இறுதி வரை அக்லிதான். நானும் 5 வருடங்களாக எப்படியாவது அஜித்தைப் பாராட்டிவிட நினைக்கிறேன்‌ வருவதெல்லாம் இப்படியாபட்ட குப்பைகள்தான். கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் என எல்லாமே அக்மார்க் குப்பை.

ஏகே என்ற பெயரை எல்லாரும் சொல்கிறார்கள். அதை நீக்கி இருந்தால் அரை மணி நேரம் மிச்சமாகி இருக்கும். அஜித்தைப் புகழ்வதைத் தூக்கி இருந்தால் இன்னும் ஒரு அரை மணி நேரம் மிச்சமாகி இருக்கும். படம் 2 மணி நேரம் மட்டுமே என்பதுவே பெரிய ஆறுதல்.

வாட்ஸப் க்ரூப்பில் அஜித் படத்தைப் பார்த்ததும் வில்லன்கள் விலகுவது மட்டும் மாஸ் காட்சி.

Share

Mithya Kannada Movie

மித்யா (K) – எமோஷனலான படம். விருதுத் திரைப்படங்களுக்கே உரிய கேமரா. கேமராவே பாதி உணர்ச்சிகளைக் கொண்டு வந்துவிடுகிறது. நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு. அதிலும் அந்தச் சிறுவனும், கோபால்கிருஷ்ண தேஷ்பாண்டேவும் கலக்கிவிட்டார்கள். அதிலும் அந்தக் குழந்தை – நோ சான்ஸ்.

கேமராவுக்கு இணையாக அந்தக் கன்னட வட்டார வழக்கு இன்னொரு அழகு.

மெல்ல நகரும் திரைப்படம். ஆனால் ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்ச்சிமயம். கடைசி இரண்டு நொடி பதற வைத்துவிட்டார்கள். பார்க்கத்தான் வேண்டுமா என்றெல்லாம் தோன்றிவிட்டது. ஆனால் அற்புதமாக முடித்துவிட்டார்கள்.

ஒரு திரைப்படம் மானுடத்தைக் கையேந்தவேண்டும் என்றால், இந்தப் படம் அப்படி ஓர் அனுபவம். அதிலும் குறிப்பாக அந்தக் கதாநாயகச் சிறுவனின் சித்தி மற்றும் சித்தப்பா குடும்பக் காட்சிகள் அருமை.

ப்ரைமில் கிடைக்கிறது.

Share

Am Aha Malayalam and Pravinkoodu shappu Malayalam Movies

அம் அஹ (அம்மா) – (M) – விதந்தோதத்தக்க படம் அல்ல என்றாலும், மனதைக் கனக்கச் செய்துவிட்ட படம். படத்தின் முதல் பாதி த்ரில்லர் போலச் சென்றது. அதற்கான காரணத்தை விவரிக்கும்போது கலங்கடித்துவிட்டது. குறிப்பாக அந்தக் குழந்தையின் கள்ளம் கபடமற்ற முகம்.

அனைத்து நடிகர்களும் மிக இயல்பாக நடிக்கிறார்கள். நம்ம ஊர் தேவதர்ஷினிக்கு வாழ்நாள் கதாபாத்திரம். நன்றாக முயன்றிருக்கிறார் என்றாலும், நாம் பழக்கப்பட்டுவிட்ட தேவதர்ஷினியைத் தாண்டி, இந்தக் கதாபாத்திரத்துக்குள் செல்ல முடியவில்லை. வேறு நடிகையை நடிக்க வைத்திருக்கலாம். பாடல்களைக் குறைத்திருக்கலாம்.

மனம் இருண்டு கிடக்கும் நேரத்தில் ஒரு மகிழ்ச்சிச் செய்தி வந்து, புது மழை கசடை எல்லாம் நீக்கி குளிரச் செய்துவிடுவது போன்ற கடைசி இரண்டு நிமிடம் – மறக்கவே முடியாத மகிழ்ச்சியான தருணம்.

கதைக் களம் நடக்கும் இடம் மலை சார்ந்த பகுதி. இப்படிப்பட்ட ஊரில் எப்படி வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று ஒவ்வொரு நொடியும் அதிசயிக்க வைக்கிறார்கள். தங்கள் படத்தில் தங்கள் நிலத்தை இத்தனை அழுத்தமாகக் காண்பிப்பதில் மலையாளிகளுக்கு நிகர் எவருமில்லை.

திலீஷ் போத்தன் தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் சிறப்பாக நடிக்கிறார் என்றாலும், இத்தனை நல்ல இயக்குநர் இப்படி நடிப்பில் கவனம் செலுத்தி வீணாகிப் போகிறாரே என்ற வருத்தம் எழாமல் இல்லை.

அம் ஆ – பொறுமை இருப்பவர்களுக்கான படம்.

Primeல்கிடைக்கிறது.

ப்றாவின்கூடு ஷாப்பு (M) – ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தரம். கதை எல்லாம் பார்த்து பார்த்து அலுத்துப் போன கதைதான். ஆனால் அதைப் படமாக்கிய விதம் அட்டகாசம்.

பாஸில் ஜோசஃப் படம் என்று நினைத்து கொஞ்சம் அசுவாரஸ்யமாகப் பார்க்கத் தொடங்கினேன். வந்தார் சௌபின் ஷாஹிர். கூடவே செம்பன் வினோத். இவர்கள் இருவரும் இருப்பது தெரிந்திருந்தால் எப்போதோ பார்த்திருப்பேன். மூவரும் கலக்கிவிட்டார்கள். உண்மையில் இது சௌபின் படம். அவரது மேக்கப்பும் நடையும் அட்டகாசம். நடிப்பு அதகளம்.

ச்சாந்தினி – நோ சான்ஸ். செம அழகு, செம நடிப்பு.

எப்படி இத்தனை விதம் விதமான கொலை த்ரில்லர்களை எடுக்கிறார்களோ மலையாளிகள். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு, எடிட்டிங் இசை என அனைத்திலும் துல்லியம்.

ஏன் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடிக்கவில்லை என்பது புரியாத புதிர்தான்.

டோன்ட் மிஸ் வகையறா படம். அதிலும் கொலையாளி யார் என்று நின்று நிதனமாகச் சொல்லும் காட்சி தரத்திலும் தரம்.

சோனி லைவில் கிடைக்கிறது.

Share

Bougainvillea Malayalam Movie

போகன்வில்லா (M) – சைக்கலாஜிக்கல் திரில்லர் வகை. படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றால் மேக்கிங் மிக அருமையாக இருக்கிறது. இசை அருமை. கடைசி வரை ஏன் இப்படி நடக்கிறது என்று யூகிக்க முடியாமல் சஸ்பென்ஸைத் தக்க வைத்தது சிறப்பு. மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் ஹீரோதான் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்க வேண்டும் என்பது சீக்கிரமே தெரிந்து விடுகிறது. ஃபகத் ஃபாசிலை இத்தனை வீணடித்திருக்கக் கூடாது. பல காட்சிகள் அவர் இல்லாமலேயே நகர்கின்றன. கடைசியில் நம்ம ஊர் சினிமா போலீஸ் போலத் துப்பாக்கியுடன் வந்து கைது செய்து விட்டுப் போவதற்கு அவர் எதற்கு? ஹீரோதான் காரணம் என்று தெரிந்த பிறகு வரும் காட்சிகள் நீளம். சுமாரான படம்.

Share

Five Movies

கிருஷ்ணம் ப்ரணய சகி (K) – கணேஷின் திரைப்படம் ஃபீல் குட் முவீயாக இருக்குமே என்று பார்க்க நினைத்தது ஒரு குத்தமாய்யா? சிதைச்சி விட்டுட்டாய்ங்க. கட்டுன பொண்டாட்டியையே காதலிக்கிற கதையை ஃபீல் குட்டா காமிக்க நினைச்சி, நான்லீனியர் கதையை அதுல செருகி, அப்படியே நம்ம தலைலையும் அதை செருகி.. மிடில.

ஒரு ஜாதி ஜாதகம் (M) – வினீத் ஸ்ரீனிவாசன் நடித்தும் படம் அறுவை. ஆங்காங்கே ஒவ்வொரு சமயம் சிரிக்கிறோம் என்றாலும் மொத்தத்தில் சிரிப்பே வரவில்லை. ஒரு ஆணுக்கு இத்தனை சிரமமா என்றெல்லாம் தோன்றினாலும், கதை நாயகனை இத்தனை அடி அடிக்கும் ஒரு படமா என்று தோன்றினாலும், பலவீனமான கதையும் அதைவிட பலவீனமான திரைக்கதையும் சாவடித்துவிட்டன.

பணி (M) – ஜோஜு ஜார்ஜின் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் திரைப்படம். முதல் பாதி மிக விறுவிறுப்பு. அட்டகாசமான திரைக்கதை. அத்தனையையும் இரண்டாம் பாதியில் கெடுத்து வைத்திருக்கிறார்கள். வெறும் பழிவாங்கும் கதை என்று போய்விட்டது. அதில் சுவாரசியமும் இல்லை. நம்பகத்தன்மையும் இல்லை. முதல் பகுதி அத்தனை புத்திசாலித்தனமாக இருக்க இரண்டாம் பகுதி பைத்தியக்காரத்தனமாகிவிட்டது. ஜோஜு ஜார்ஜின் நடிப்பும் மற்ற அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிக அருமை. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். சோனி‌ லைவில் கிடைக்கிறது.

I am Kathalan (M) – பார்க்கலாம். எனக்குப் பிடித்திருந்தது. டெக்னிகல் கிரைம் த்ரில்லர் வகையறா என்றாலும் படத்தில் ஒரு ஃபீல் குட் தன்மையும் இருந்தது. இளமையான படம். இதில் இருக்கும் தவறுகளை டெக்னிகல் ஆள்கள் கண்டுபிடிக்கலாம். மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகவே இருக்கும். ஆஹா ஓஹோ படமில்லை என்றாலும் ஈகோ கணக்கைத் தீர்த்துக்கொள்ளும் எளிமையான படம். ப்ரைமில் கிடைக்கிறது.

Ponman (m) – எப்படித்தான் இப்படி ஒரு கதையை கண்டுபிடித்தார்களோ. ஒரு வரிக் கதையை வைத்துக்கொண்டு எத்தனை பெரிய படமாக்கி இருக்கிறார்கள்! ஓரளவுக்குப் பார்க்கும்படியாகவே வந்துள்ளது. சில காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை என்று தோன்றினாலும் கூட, படத்தின் விறுவிறுப்பு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. தொண்டி முதலும் திருகாக்‌ஷியும், மகேஷிண்டெ பிரதிகாரம் போன்ற, இருவருக்கிடையேயான ஈகோவை நினைவூட்டும் ஒரு கதை என்றாலும், இந்தக் கதை வேறு களம். உயிரே போனாலும் வெல்ல நினைக்கும் ஒரு பிடிவாதம். கேரளத்தின் நிலம், மக்கள் என அனைத்தையும் அத்தனை அசலாகப் படம் பிடித்திருக்கிறார்கள். சமூக ஊடங்களில் ஆகா ஓகோ என்று கொண்டாடப்பட்ட அளவுக்கு எனக்கு இதில் ஒன்றும் தோன்றவில்லை என்றாலும், நிச்சயம் மோசமான படம் அல்ல.

Share

Two movies

நாராயணீன்டே மூணாண்மக்கள் (ம) – கண்றாவி திரைப்படம். மிக மிக மெல்ல நகர்கிறது. சரி, போய்த் தொலைகிறது என்றால் இன்செஸ்ட் என்று என்னத்தையோ எடுத்து வைத்திருக்கிறார்கள். மூன்று அண்ணன் தம்பிகள் பேசிக் கொள்ளும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்தக் கதை இந்த இன்சஸ்டை நோக்கி நகர்வதால் எரிச்சலும் குமட்டலும்தான் ஏற்படுகின்றன. என்னதான் அந்தப் பையன் பாதி முஸ்லிம் என்று வைத்துக் கொண்டாலும் கன்றாவியான அனுபவம். ரெட்ட திரைப்படத்திலாவது ஓர் பதட்டமும் தவறுக்கான தண்டனையும் பிராயச்சித்தமும் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன. இந்தக் கருமத்தில் அதுவும் இல்லை. நல்ல வேளை, ரெட்ட அளவுக்குத் தீவிரமாகச் செல்லாமல் மேலோட்டமாக நிறுத்திக் கொண்டார்கள். எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக யாராவது உண்ணக் கூடாததை உண்பார்களா என்ன. திரைப்பட விழாவில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கானது.

குடும்பஸ்தன் – சொறித்தரமான காமெடியில் ஆரம்பித்து மெல்ல மெல்ல பிக்கப் ஆகி அந்த காமெடிக்குள்ளேயே நாம் அமிழ்ந்து நம்மை அறியாமலேயே பல இடங்களில் சிரிக்க ஆரம்பித்து விடும் வகையான ஒரு திரைப்படம். சில காமெடிகள் மிகவும் தட்டைதான் என்றாலும் மணிகண்டன் நடிப்பால் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. இதையும் மீறி மணிகண்டன் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கில் கால் வைத்து மெல்ல எப்படியோ தப்பி வெளியே வந்து விடுகிறார்.

சோமசுந்தரத்தின் நடிப்பு அலட்டல் மிகுந்ததாக அமைந்துவிட்டது பெரிய துரதிர்ஷ்டம். இவர் வரும் காட்சிகள் அனைத்துமே அறுவை.

பல காட்சிகள் நன்றாக இருக்கும்போதே பல காட்சிகள் மோசமாக இருப்பது படத்தின் பிரச்சினை.

இதில் இன்னொரு விஷயம்.. ஹீரோயின் எஸ் சி பெண்ணை உயர்ஜாதி ஹீரோ வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்கிறான். படத்தின் கதைக்கும் இதற்கும் பெரிய சம்பந்தம் இல்லை. ஆனால் பல இடங்களில் நச் நச் என வசனம் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த மாமியார், நீ ஆக்கிப்போட்டாலும் நான் சாப்பிட்டேன் என்று சொல்ல, அந்தப் பிரசவ வலியிலும் அந்தப் பெண் சோத்ததான ஆக்கி போட்டேன் என்று சொல்லும் வசனம். அதேபோல் ஆயிரம் வருடங்களாக பொறுத்தாச்சு, இனி பொறுக்க முடியாது என்று சொல்லும் வசனம். 2000 வருடம் என்று சொல்லவில்லை என்பது முக்கியமானது.

குடசநாடு கனகம் பற்றித் தனியே சொல்ல வேண்டும். ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கலக்கியவர் இந்தப் படத்தில் பிரமாதப்படுத்திவிட்டார்.

முன்பு கஸ்தூரி மான் படத்தை மலையாளத்தில் பார்த்துவிட்டு குலப்புள்ளி லீலா தமிழில் எப்படி நடித்திருக்கிறார் என்று தமிழில் பார்த்தபோது எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இரண்டிலும் ஒரே மாதிரியான நடிப்பு. ஆனால் தமிழில் புதிய ஒரு அம்மாவை கண்டு கொண்டதாகப் பலர் பாராட்டினார்கள். அதற்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. மருது போன்ற ஒன்றிரண்டு படங்களில் வந்து போனார். இப்போது அப்படி ஒரு அம்மா கதாபாத்திரத்திற்கு பெரிய வறட்சி நிலவுகிறது. கனகம் அந்த இடத்தை நிச்சயம் நிரப்புவார்.

ஜோக் என்று என்ன சொன்னாலும் சிரிப்போம் என்பவர்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய படம் இது.

Share

Vanangaan

வணங்கான் – அரை மணி நேரம் பார்த்திருக்கிறேன். பெரிய இயக்குநர் ஒரு படத்தை சுமாராக எடுக்கலாம். ஆனால் இத்தனை கேவலமாக எடுக்கக் கூடாது. ‘அவன் இவன்’ திரைப்படத்தை விட மோசமான ஒரு திரைப்படத்தை இனி பாலாவால் எடுக்க முடியாது என்கிற எண்ணத்தைப் போட்டு உடைத்திருக்கிறார் பாலா. தனக்குத்தான் காமெடி வரவில்லையே, அப்புறம் எதற்கு அதைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாக் காட்சிகளும் ஏதோ அவரது பழைய திரைப்படத்தில் வந்த காட்சிகள் போலவே இருக்கின்றன. ஆங்காங்கே பிராமண பாஷை, ஆங்காங்கே கிறிஸ்துவக் கிண்டல், மீண்டும் கிறிஸ்துவப் புகழ்ச்சி, ஆங்காங்கே அரசியல் நையாண்டி, ஆங்காங்கே இந்து மதக் கிண்டல் என எல்லாவற்றையும் போகிற போக்கில் தொட்டுக்கொண்டு விட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்று யாரோ பாலாவை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் மகனும் மகளும் கடுப்பாகி, இது என்ன படம், ஒரு மண்ணும் புரியல, ஏன் இதைப் போட்டுக் கழுத்தறுக்க என்று கேட்டார்கள்.

இப்படித்தான் முன்பொரு சமயம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ என்ற கன்னடப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் 20 நிமிடம் பார்த்ததில் ஒன்றுமே புரியவில்லை. பிடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கப் போய் அந்தத் திரைப்படத்தைச் சாப்பிடும் போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம் என்ற வாக்கில் 7 ஞாயிற்றுக்கிழமைகளில் பார்த்து முடித்தேன். முடிவில் உண்மையில் அந்தப் படத்தின் வெறியனாகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ரக்ஷித் ஷெட்டி பிரமாதப்படுத்தி விட்டார். பின்பு அந்தப் படத்தை முழுமையாக மீண்டும் பார்த்தேன்.

அதேபோல் இந்தப் படத்தையும் இனி ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது பார்க்கப் போகிறேன் என என் பையனிடம் சொன்னேன். மறு விநாடி அவன் சொன்னான், ‘இந்த வீட்ல உன்கூட சேர்ந்து சாப்பிடறது இன்னைக்குத்தான் கடைசி’.

வணங்கான் திரைப்படத்தில் ஒரு பாதிரியார் நெற்றி நிறையக் குங்குமம் பூசிக்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி பக்கம் இந்த எழவெடுத்த மரபு ஏதேனும் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Update:

இன்று சாப்பிடும்போது வணங்கான் அடுத்த 30 நிமிடம் பார்த்தேன். முதல் 30 நிமிடமே பரவாயில்லையோ என்று நினைக்க வைக்கும் அடுத்த 30 நிமிடம்! கொடூரம். இயக்குநர் எடிட்டர் என அனைவரும் படத்தைப் பார்த்து மயங்கிய தருணம் ஒன்று இருக்கிறது. பிறவியிலேயே பேச முடியாத காது கேட்க முடியாத ஹீரோ கீழே விழுந்துவிட்ட குழந்தையை வேகமாக ஓடிச் சென்று தூக்கியபடி, அடிப்படலைல்ல ஒன்னும் ஆகலைல்லை என்று வாயசைப்பில் கேட்கும் அந்தக் காட்சி!

Share

Hissab Barabar

Hissab Barabar (H)

கணக்கை நேர் செய்துவிட்டேன் என்று அர்த்தம். இன்னொரு ஆம் ஆத்மி படம். ஆம் ஆத்மி என்றால் அரசியல் கட்சி அல்ல, சாதாரண மனிதனின் படம். சாதாரண மனிதன் எப்படி தன்னை கார்ப்பரேட் வங்கி சுரண்டுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை மக்கள் முன் தோலுரிக்கும் கதை. அஞ்சு பைசா திருடினா தப்பா? அஞ்சு அஞ்சு பைசாவா அம்பது தடவை அம்பது கோடி பேர் திருடினா? இதுதான் கதையின் ஒன்லைனர்! சீரியஸான கதையை நகைச்சுவையாகச் சொல்கிறேன் என்று சோதித்துவிட்டார்கள். மாதவன் தானாகச் சிரித்துக்கொள்கிறாரே ஒழிய நமக்குச் சிரிப்பே வருவதில்லை. உச்சக்கட்டக் காட்சியில் 1,500 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டும் காட்சி, நம்ம ஊர் மெகா சீரியல்களில் கூட இதைவிட நன்றாக இருக்கும். நேர விரயம் செய்யத் தயாராக இருப்பவர்கள் பார்க்கலாம்.

Share