Archive for திரை

என் டி ஆர்: மகா நாயகடு

ஏற்கெனவே ‘கதா நாயகடு’ பற்றி எழுதி இருந்தேன். இது அதன் இரண்டாம் பாகம், ‘மகா நாயகடு.’ கதா நாயகடு, என்.டி.ஆர் கட்சி ஆரம்பிப்பதோடு நிறைவடைகிறது. இது அவர் அரசியலில் வெல்வதைக் காட்டுகிறது. முதல் பாகத்தில் பாலகிருஷ்ணா என்.டி.ஆரின் இள வயது சேஷ்டைகளை நடிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் வயதான என்.டி.ஆராக அட்டகாசமாக நடித்திருக்கிறார். என்.டி.ஆர் பேசும்போது அவர் செய்யும் உடல்மொழியை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். என்.டி.ஆர் தமிழில் நடித்த திரைப்படங்களிலும் இந்த உடல்மொழியை நாம் பார்த்திருக்கிறோம்.

தெரிந்த கதையை மிக நன்றாகவே திரையாக்கம் செய்திருக்கிறார்கள். பாஸ்கர் ராவ் உதவியோடு கட்சியைத் தொடங்கி, வென்று, முதலமைச்சர் ஆகும் என்.டி.ஆர்., அதே பாஸ்கர் ராவால் கவிழ்க்கப்படுகிறார். இந்திராவின் பின்னணி உதவியுடன் இது நடைபெறுகிறது. சந்திரபாபு நாயுடுவின் உதவியுடன் அதை முறியடித்துக் காட்டுகிறார் என்.டி.ஆர். இவருக்குப் பின்னணியில் ஆந்திராவின் மக்கள் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு இதே பாணியில் என்.டி.ஆரிடமிருந்து ஆட்சியை இதே சந்திர பாபு நாயுடு பறிப்பது வரலாற்றில் பின்னர் நிகழ்கிறது. இது இப்படத்தில் வரவில்லை. ஏனென்றால் என்.டி.ஆர் பாஸ்கர் ராவையும் காங்கிரஸையும் முறியடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதுடன் படம் நிறைவடைகிறது.

இந்திரா ஜனாதிபதியிடம், ‘என்.டி.ஆர் டெல்லி வந்தால் நீங்கள் அவரைப் பார்க்கலாம்’ என்று உள்ளர்த்தத்தோடு சொல்கிறார். ரயிலில் ஏறி டெல்லி வரும் எம்.எல்.ஏக்களை சில குண்டர்கள் தாக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் டெல்லிக்கு வந்துவிடக்கூடாது என்பதே இந்திராவின் எண்ணம். எம்.எல்.ஏக்கள் தாக்கப்படும்போது, உதவிக்கு திடீரென ஒரு கூட்டம் வருகிறது. காக்கி டவுசருடன் வந்து அவர்களைக் காப்பாற்றிவிட்டு பாரத் மாதா கி ஜே சொல்லிவிட்டுப் போகிறார்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள். அதற்கு முந்தைய காட்சியில், என்.டி.ஆர் காக்கி உடை அணிந்து இந்தியக் கொடியை வணங்குகிறார். அவரது கம்பீரமான வணக்கத்தை சிலாகிக்கும் கட்சிக்காரரிடம் சந்திரபாபு நாயுடு சொல்கிறார், ‘எனக்குப் பார்க்க ஒரு கொடியே இன்னொரு கொடியை வணங்குவது போல இருக்கிறது’ என்று. அந்தக் காட்சியில் வான்வெளியில் இந்தியக் கொடி பறக்க காவிக்கொடி போன்ற என்.டி.ஆர் வணங்குகிறார்.

ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகச் சித்தரிக்கப்படும் படங்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். இப்படத்தில் வரலாற்றில் நிகழ்ந்ததை எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் என்.டி.ஆர் அப்பழுக்கற்றவர் என்றோ, தூய ஹிந்துத்துவ அரசியலைக் கைகொண்டார் என்றோ நான் சொல்லவில்லை. படத்திலும் அப்படிக் காட்டப்படவில்லை. தொடர்ந்து அனைத்து முற்போக்கு ஸூடோ செக்யூலர் கட்சித் தலைவர்களும் அவர்களது கொடிகளும் காட்டுப்படுகின்றன. இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் உதவியைப் பதிவு செய்தது மகிழ்ச்சி அளித்தது என்பதை மட்டுமே இங்கே சொல்கிறேன்.

ஜனாதிபதி முன்பு என்.டி.ஆர் பெரும்பான்மையை நிரூபித்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கொடுக்கும் அனைத்து தடங்கலையும், சந்திர பாபு நாயுடு எதிர்கொள்ளும் விதம், இன்றும் நம் அரசியலில் நடந்துகொண்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் அமர்வது, எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்று தமிழ்நாட்டின் அரசியலுக்கு ஏகப்பட்ட ‘முதல்’களை வழங்கியது ஆந்திராதான் போல.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காக எப்படியாவது கலவரத்தை உருவாக்க நினைக்கும் பாஸ்கர  ராவ் தரப்பு செய்யும் தூண்டல்கள் அட்டகாசம். என்.டி.ஆரை மோசமாகத் திட்டுவது, அவர் முன்பே வளையல்களை உடைப்பது, இதனால் என்.டி.ஆர் கட்சிக்காரர்கள் கோபம் கொண்டு சட்டசபையில் அமளிதுமளி ஏற்படுவது என நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகிறது. இந்தக் காட்சிகளெல்லாம் படு சுவாரஸ்யம். தெலுங்கர்கள் இப்படத்தைக் கொண்டாடி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து இதே போன்று ஒரு படத்தை உருவாக்கலாம். திரைப்பட நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர் அரசியலிலும் இருந்தார் என்பதும், அப்போது அவர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் என்பதும் கூடுதல் சுவையுள்ள பரபரப்புக் காட்சிகள். எம்.ஜி.ஆரின் அரசியல் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணியை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கும் எம்ஜியாரின் ஆட்சி கலைக்கப்பட்டு அடுத்து நடக்கும் சட்டசபைத் தேர்தலில் வெல்வது அட்டகாசமான திரைத் தருணத்தைக் கொண்டுவரும். நடிக்க மோகன்லால் என்ற தலைசிறந்த நடிகரை ஏற்கெனவே ‘இருவர்’ படத்தில் மணிரத்னம் அடையாளம் காட்டிவிட்டார்.

Share

Sui Dhaga

சூய் தாகா (ஹிந்தி) – 1970களில் வந்து அனைவரையும் கதற வைத்து, புல்லரிக்க வைத்து நனைந்த கைக்குட்டையும் சிரிப்புமாக வெளியே அனுப்பி இருக்கவேண்டிய படம், கொஞ்சம் தவறி, வருண், அனுஷ்கா ஷர்மாவுடன் 2019ல் வெளியாக, நான் சிக்கிக்கொண்டேன் – வழக்கம்போல. என்ன ஆனாலும் அனுஷ்கா ஷர்மாவின் மீது விரல் நகம் கூடப் பட்டுவிடக்கூடாது என்று கோஹ்லி சொன்னாரோ என்னவோ, வருண் அத்தனை மரியாதையாக தம்பி போல தள்ளி நின்று மனைவியுடன் பேசுகிறார், நடிக்கிறார், சிரிக்கிறார். நல்ல வசனங்கள். அனுஷ்கா ஷர்மாவின் வாழ்நாள் படமாக இருக்கலாம். அத்தனை அழகு, பாந்தம், கண்களிலேயே நடிக்கிறார், அட்டகாசமான முகபாவங்கள். மேக் இன் இண்டியாவை பிரசாரப்படுத்தும் பிரசாரப்படம் போல. வருண் அழகான அம்மாஞ்சி போல இருக்கிறார், நன்றாகவே நடிக்கிறார். படம் மொத்தமும் அநியாய க்ளிஷே. ஆனாலும் பார்க்கலாம்.

நான் சொல்ல வந்தது வேறு விஷயம்.

நான் அமேஸான் ப்ரைமில் தமிழ் சப்-டைட்டிலுடன் பார்த்தேன். இந்தப் படத்துக்கு ‘மொழிபெயர்ப்பு’ செய்தவரைக் கண்டுபிடித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். 2100களில் தமிழ் தேயும்போது அதை மேலே எடுத்துச் செல்ல இவர் தேவைப்படுவார். தமிழ் ஆய்வாளர் போல.

ராம் ராம் என்பதை வணக்கம் என்று சொல்லத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சீதாராம் என்று சாதாரணமாக வீட்டில் சொல்வதற்குக் கூட, எல்லாம் வல்ல சீதா தேவி வாழ்க, எல்லாம் வல்ல ராமர் வாழ்க என்றெல்லாம் ‘வார்த்தைக்கு வார்த்தை’ இறங்கி அடித்துவிட்டார். பில்குல் என்ற வார்த்தைக்கு சமய சந்தர்ப்பமில்லாமல் முற்றிலும் என்கிறார். அப்பாவும் மகனும் பேசும்போது என்ன ஆச்சு என்பதைக்கூட என்ன கெடுதி உங்களுக்கு வந்துவிட்டது என்றெல்லாம் எழுதி தமிழை ஒரு படி மேலே உயர்த்திவிட்டார். இன்னும் இதுபோன்ற சேவைகள் பல இந்தப் படத்தில் இருக்கின்றன. தூய தமிழில் கலக்கி எடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். பஸ்ஸில் போனேன் என்பதை பஸ் எடுத்தேன் என்றெல்லாம் அட்டகாசம் செய்திருக்கிறார்.

இனி தமிழில் சப்டைட்டில் கிடைக்கும் படங்களை மட்டுமே பார்த்து இதில் ஒரு டாக்டரேட் செய்யலாம் என்றிருக்கிறேன். ராமா ராமா. (ராம் ராம் என்பதின் மொழிபெயர்ப்பு என்றறிக.)

Share

என் டி ஆர்: கதாநாயகடு

என் டி ஆர்: கதாநாயகடு – என் டி ராமாவின் மகன் பாலகிருஷ்ணா என்டிஆரைப் போலவே நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பிற்கால என் டி ஆரின் உடல்மொழியை ஓரளவுக்கு தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார் என்றாலும் ஆரம்பகால என் டி ஆராக இவர் நடிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. இவர் என்டிஆரைப் போலவே இருக்கிறார். ஆனால் நிஜ ஆரம்ப கால என் டி ஆர் அழகாக இருந்தார்! இவரை பார்க்க எரிச்சல்தான் வருகிறது.

பாலகிருஷ்ணா மீசையை எடுத்த பிறகு ஓரளவு என்டிஆரின் கெட்டப்பை நெருங்கினாலும், கிருஷ்ணன் போன்ற மேக்கப்பில் கொஞ்சம் ஒப்பேற்றினாலும், பெரும்பாலான காட்சிகளில் எவ்வித முகபாவனையும் இல்லாமல் அப்படியே சும்மா இருப்பது கடுப்பாகிறது. ஸ்ரீதேவியுடன் என் டி ஆர் ஆடுவது போன்ற காட்சிகளையெல்லாம் பாலகிருஷ்ணா சிறப்பாகவே செய்திருக்கிறார்.  பிற்கால என் டி ஆர் போல பாலகிருஷ்ணா நடனமாடும் காட்சிகள் அப்படியே அச்சு அசலாக இருக்கக் காரணம், இருவருக்குமே ஆட வராது என்பதாக இருக்கலாம். இதுபோன்று தன்னை இளமையாகக் காட்டும் காதல் சில்மிஷக் கொடூரங்களை அந்தக் கால சிவாஜிகணேசனும் செய்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாகேஸ்வரராவும் ராஜ்குமாரும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்துவிட்டார்களோ? நாகேஸ்வரராவும் ராதிகாவும் ஆடும் ஒரு பாடல் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்கிறது என்றாலும், சிவாஜி என் டி ஆர் அளவுக்குப் போயிருப்பாரா என்பது தெரியவில்லை. 

இதுபோன்ற பயோ பிக்சர்ஸ் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எதை எந்த நோக்கத்தில் எடுக்கிறோம் என்பது முக்கியமானது. பாலகிருஷ்ணா, என் டி ஆரின் புகழையும், அவரது மகனான தனது புகழையும் இந்தப் படத்தின் மூலம் தனக்குப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கிறார் என்பது தெரியாமல் நான்தான் சிக்கிவிட்டேன் போல.

கடைசி 20 நிமிடங்கள், அதாவது அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது போன்ற காட்சிகள், கொஞ்சம் பரவாயில்லை ரகம். எமர்ஜென்ஸியின்போது தனது படத்தின் சுருளை எடுக்க அந்த பஞ்சகச்ச வேட்டியை மடக்கிக்கொண்டு வரும் ஒரு காட்சி, பாலகிருஷ்ணா என் டி ஆரை நெருங்கிய காட்சிகளில் ஒன்று. என் டி ஆர் நடித்த பழைய படங்களில் இருந்து காட்சிகளை எவ்வித உயிர்ப்பும் இன்றி உருவாக்கி இருக்கிறார்கள். பழைய ஒரிஜினலைப் பார்த்துவிடமாட்டோமா என்றிருந்தது! படம் முழுக்க ஒரு அமெச்சூர்த்தனம் இருந்தது. நாடகம் போன்ற, நாடகத்தனமான காட்சிகள். இவற்றையெல்லாம் மீறி இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்ததை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். நடிகையர் திலகம் படம் போலவே இந்தப் படத்திலும் மிகக் கொடூரமான பின்னணி இசை.

அரசியலுக்கு என் டி ஆர் வந்தது, ஆந்திர அரசியலில் மிக முக்கியமான திருப்பம். அதிலும் சந்திரபாபு நாயுடு அவரிடமிருந்து ஆட்சியைப் பறித்ததும், சிவபார்வதியுடனான என் டி ஆர் உறவும், இந்தச் சூழலில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் என் டி ஆர் பெரிய வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் என் டி ஆர் மரணமடைகிறார். இந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் வேறு ஒரு படமாகத்தான் வர வேண்டும். ஏனென்றால், தெலுகு தேசம் என்ற அறிவிப்புடன் இப்படம் நிறைவடைகிறது. அரசியல் நிகழ்வுகளின் படம் இந்தப் படத்தைவிட  நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இத்திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. எம்ஜியார் பெயரில்லை, சிவாஜி கணேசன் பெயரில்லை, முத்துவேலர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் பெயர்! எமர்ஜென்ஸியில் அவர் பட்ட கஷ்டத்தைச் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. எந்த அளவுக்குப் பரப்புரை செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.  

இந்தத் திரைப்படத்தில் மிகவும் நன்றாக உருவாகி வந்தது, நாகேஸ்வரராவ் என் டி ஆர் இடையிலான உண்மையான ஆத்மார்த்தமான நட்பு மட்டுமே. நம் சிவாஜி கணேசன், எம்ஜியார் (தனித்தனியாக) பற்றிய படங்களையும் நாம் இப்படி இல்லாமல் நன்றாக உருவாக்க முடியும். நடிகராக அவர்களது வெற்றிகளில் அதீத கவனம் குவியாமல் திரைக்கதையில் பார்த்துக்கொள்வது நல்லது. அவர்கள் மனம் எதிர்கொண்ட அழுத்தத்தை மையமாக வைத்து, அதீத புகழ்ச்சிகளைக் கைவிட்டு, சரியான நடிகர்களைக் கொண்டு (இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சி மட்டுமே வந்தாலும் சந்திரபாபு நாயுடுவாக வரும் ராணா, நாகேஸ்வர ராவாக நடிக்கும் அவரது பேரன் சுமந்த் இவையெல்லாம் இதற்கு உதாரணம்) முன்னும் பின்னுமாகக் கதை பின்னிணால் சரியாக வரலாம் எனத் தோன்றுகிறது. இருவர் திரைப்படம் முழுமையான ஒரு படமில்லை என்றாலும், அதனளவில் அது எத்தனை அருமையான முதிர்ச்சியான முயற்சி என்று தெரிகிறது.

பின்குறிப்பு: இப்படத்தில் ஒரு புதுமை, வித்யா பாலன் என் டி ஆரின் மனைவியாக வருகிறார். இழுத்துப் போர்த்திக்கொண்டு, சில காட்சிகளில் முகம்கூடத் தெரியவில்லை!

Share

Gully Boy

Gully Boy. Highly predictable story. But an excellent experience to watch. No wonder why it had a great box office collection. Ranveer Singh, the lady acted as his mother, Alia Bhatt, the actor who appeared as Sher – everybody performed very well. What a change over in Ranveer Singh, simply amazing. Music is awesome. I was remembering AR Rahman for his Petta Rap song and No problem song. All songs in this movie have a close resemblance of those songs what I mentioned above. Santhosh Narayan took this Gana of Chennai to a different level I must agree. Tamil version of Gully Boy if planned, Santhosh Narayan would deliver some great songs I believe. But finding the perfect matching actors might be a difficult one.

Even though the movie revolves around a slum and a Muslim family, not even a single unnecessary attack on India. Tamil film might use this same plot to criticise Indian government I am sure. 🙂

Share

Avengers: End game

அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்

மிக ‘எளிமையான கதை’. ஒரே நொடியில் உலகின் மக்கள்தொகையில் பாதியை அழித்துவிட்ட தானோசை அழித்து, ஆறு இன்ஃபினிட்டி கற்களையும் மீளக் கண்டடைந்து, அழிந்தவர்களையும் அழிந்த சூப்பர் பவர்களையும் மீண்டும் உலகுக்குக் கொண்டு வர ஆயத்தமாகிறார்கள் ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், ப்ளாக் விடோ, ஆண்ட் மேன், வார்மெஷின், கேப்டன் மார்வெல் போன்ற பல மிச்சமிருக்கும் சூப்பர் பவர்ஸ் எல்லாரும் சேர்ந்து, காலச் சக்கரத்தில் க்வாண்டம் தியரி மூலம் பயணிக்கிறார்கள். ஐயர்ன் மேனை ஐயர்ன்மேனே பார்க்கிறார். கேப்டன் அமெரிக்காவும் கேப்டன் அமெரிக்காவும் மோதுகிறார்கள். நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் மோதல். காலவிளையாட்டு அதன் உச்சத்தில். நிகழ்கால ப்ளாக் விடோ கடந்த காலத்தில் இறந்து போகிறார். நிகழ்கால நெபுலாவின் நினைவைக் கடந்தகால தானோஸ் படித்து, தன் இறுதிக்காலத்தைப் பார்த்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வருகிறார். அதற்குள் ஆறு இனிஃபினிட்டி கற்களையும் வைத்து ஹல்க் கடந்தகாலத்தில் இறந்த மனிதர்களை உயிர்ப்பிக்கிறார். மீண்டும் பெரும் சண்டை. அனைத்து சூப்பர் பவர்களும் திரும்ப வர, தானோஸ் கையில் கற்கள் கிடைக்காமல் இருக்க ஐயர்ன் மேன் தன் உயிரைத் தியாகம் செய்கிறார். கேப்டன் அமெரிக்கா மீண்டும் கற்களை வைக்கப் போய் வயதாகித் திரும்புகிறார். நிகழ்கால 5 நொடிகள் க்வாண்டம் தியரியிலான காலச் சக்கரத்தில் பல வருடங்கள்! அந்த வருடங்களில் அங்கேயே தன் துணையுடன் வாழ்கிறார். வயதான எதிர்கால நிகழ்காலத்தில் தன் கவசத்தை சாம்-இடம் ஒப்படைக்கிறார். இதையெல்லாம் மண்டையை முட்டி மோதி, என் பக்கத்தில் இருந்த என் பையனிடமும் பெண்ணிடமும் வெட்கத்தை விட்டுக் கேட்டுப் புரிந்துகொண்டவை. இந்தப் படம் வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே இப்படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போகவேண்டும் என்று உத்தரவாதம் வாங்கி இருந்தான் அபிராம். இப்படம் புரியவேண்டும் என்றால், இதற்கு முந்தைய பாகங்களைப் பார்க்கவேண்டும் என்று சொன்னதை நான் பீலா என்றே நினைத்தேன். ஆனால் அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது. அப்படி இல்லை என்றால், என்னைப் போல் பக்கத்திலிருக்கும் பையன்களிடம் வெட்கப்படாமல் கேட்கத்தான் வேண்டியிருக்கும்.

கற்பனைக்கெட்டாத கதைப்பரப்பு. காலத்தை வைத்துக்கொண்டு வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள். இனிஃபினிட்டி வார் போல சண்டைகள் அதிகம் இல்லை. 3 மணி நேரத்தில் 20 நிமிடங்கள் சண்டை வந்தாலே அதிகபட்சம். ஆனால் அந்த இருபது நிமிடத்தையும் அசரடிக்கிறார்கள்.

தமிழில் இதுபோன்ற தொடர்ந்து கைத்தட்டு பெறும் படங்களைப் பார்க்கவே முடியாது. ரஜினி விஜய் அஜித் என யார் படங்களிலும் இது சாத்தியமில்லை. ஒவ்வொரு அவெஞ்சர் வரும்போதும், ஒவ்வொருமுறை அவர்களுக்கு சக்தி வரும்போது கைத்தட்டு காதைப் பிளக்கிறது. அதிலும் அந்த 20 நிமிடச் சண்டையில் இப்படித் தொடர்ச்சியாகக் கைத்தட்டை தமிழ்நாட்டில் எந்தப் படத்திலும் நீங்கள் பார்த்திருக்கமுடியாது.

கால விளையாட்டின் போதான காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்கள். பழைய மார்வெல்ஸ் படங்கள் பார்த்திருந்தால் மிக நன்றாகப் புரியும். இல்லையென்றால் திருவிழாவில் ஆட்டைத் தொலைத்தவன் போலத்தான் விழிக்கவேண்டி இருக்கும். ஐயர்ன்மேனும் அவரது அப்பாவும் சந்திக்கும் இடங்கள், தோரும் அவரது அம்மாவும் சந்திக்கும் இடங்கள் எல்லாம் அட்டகாசம். இன்று நேற்று நாளை என்ற நம்மூர்ப் படத்தில் பார்த்த கற்பனையை அதன் உச்சத்துக்குச் சென்று கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள், கற்பனை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும். இசை, கிராஃபிக்ஸ், கேமரா என ஒவ்வொன்றும் அற்புதம்.

மொத்தத்தில் ஒரு மிரட்டல்.

திருஷ்டிப் பொட்டு, தமிழில் வசனங்களும் விஜய் சேதுபதியின் கொடூரமான பின்னணிக் குரலும். தாங்கமுடியவில்லை. ஐயர்ன் மேன் இவராலேயே பாதி செத்தார், மீதி கதையிலும் செத்தார். நல்லவேளை செத்தார், இல்லையென்றால் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியைப் போட்டு நம்மை நடுங்க வைத்திருப்பார்கள்.

Share

மணிகர்னிகா

மணிகர்னிகா – அட்டகாசமான கமர்ஷியல் சிறுவர் திரைப்படம். சிறுவர் திரைப்படம், அவ்வளவே. உலகளவில் அதிகமாக ஹர்ஹர் மகாதேவ் என்ற விளி வரும் படம் இதுவாகவே இருக்கும். கங்கனா மிக அழகாக இருக்கிறார், ராணி என்பதையும் தாண்டி! கணவர் இறந்த பின்பும் பொட்டு மற்றும் அதன் பிரசாரம், எப்போதும் விரித்துப் போட்ட கூந்தல் – இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா அல்லது இன்றைய குரலின் பாதிப்பா எனத் தெரியவில்லை. குத்துப் பாட்டு போன்ற ஒன்றுக்கு அரசியே ஆடுவது ரொம்ப பெண்ணியமாகிவிட்டதோ? நான்தான் வளர வேண்டுமோ? பின்னணி இசையும் ஒளிப்பதிவும் செட்டிங்க்ஸும் கங்கனாவின் நடிப்பும் அட்டகாசம். கிராபிக்ஸ் சுமார். இன்னும் கவனமாக எடுத்திருக்கலாம்.

பிகு: என்க்கு ஈநாட் மேலே ம்ர்யாதெ இல்லே ரக பறங்கியர்த் தமிழ் வசனங்கள் இன்னுமாய்யா? ஹிந்தில எப்படி இருந்ததோ!

Share

சிகை

சிகை திரைப்படம் – நல்ல முயற்சி. இன்னும் மிகச் சிறப்பாக வந்திருக்கவேண்டியது ஏன் சறுக்கியது என்று யோசித்ததில்:

* நல்ல படங்களுக்கு ஏற்படும் லாஜிக் சிக்கல் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெத்துவிடும். பாலியல் புரோக்கராக வருபவர் இத்தனை கருணை கொண்டவராகவும் அறத்தைப் பார்ப்பவராகவும் நியாயமானவராகவும் இருக்கிறார். இத்தனை நல்லியல்புகள் கொண்டவர் ஏன் புரோக்கராக இருக்கவேண்டும் என்று பிடிபடவே இல்லை. இது இப்படித்தான் என்றோ, இது இப்படியும் இருக்கலாமே என்றோ கடந்துபோகமுடியவில்லை.

* என்னதான் புரோக்கர் நல்லவராக இருந்தாலும் ஒரு கொலையைக் கண்ட பின்பும் ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்வதெல்லாம் ஒட்டவே இல்லை. இதையும் மீறி நாம் நம்புவதன் காரணம், அந்த புரோக்கராக வரும் நடிகரின் அமைதியான யதார்த்தமான நடிப்பும், படமாக்கப்பட்ட விதமும்தான்.

* சிகை படம் பற்றிய ஆர்வம் வந்ததே கதிர் பெண் போன்ற வேடத்தில் இருந்த புகைப்படம் மூலமாகத்தான். அசரடிக்கும் வகையிலான மேக்கப்புடன் அந்தப் புகைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் படத்தில் அந்தக் கதாபாத்திரம் வருவதோ மிகச் சொற்ப நேரம்தான். அதனால் மனம் அந்தக் கதாபாத்திரத்தையே எதிர்நோக்கி இருந்தது.

* கதிரின் பாத்திரம் தொடர்பான காட்சிகளைவிட, முதல் பாதி காட்சிகள் உயிரோட்டமாக இருந்தன. நம்பகத்தன்மை என்ற ஒன்றைத்தாண்டி, காட்சிகளின் படமாக்கம் நன்றாக இருந்தது.

* ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள முயல்வதும் ஆண்மையவாதத்தைக் கேள்வி கேட்பதும் கணவன் கொலை செய்ய முயன்றான் என்று சொல்வதுமான காட்சிகள் தேவையற்றவை, வலிந்து திணிக்க முற்பட்டவை போன்ற தோற்றம் தருகின்றன. அதுவரை கதை செல்லும் பார்வையிலிருந்து ஒரு மாற்றம் திடீரென்று வருகிறது.

* ஒரே இரவில் இரண்டு கொலைகளை கதிர் செய்துவிடுவதையெல்லாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசித்திருக்கலாம்.

* கதிரின் திருநங்கை பாத்திரம் அத்தனை சிறிய இடைவெளியில் முடிந்துபோவதைத் தவிர்த்திருக்கலாம்.

* இந்தப் படத்தை ஒரு திரில்லர் போல யோசித்தது ஏன் என்று புரியவில்லை. அப்படி யோசிக்காமல் இருந்திருந்தால் மிக நல்ல படம் என்றாகி இருக்கும். ஆனால் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது படம் இரண்டும் இல்லாமல் வந்துவிட்டது.

கொஞ்சம் யோசித்து மெனக்கெட்டிருந்தால், எத்தனையோ மொக்கையான கேவலமான படங்களுக்கு மத்தியில் ஒரு டீசண்டான படம் என்ற இமேஜைத் தாண்டி வேறு ஒரு தளத்துக்குப் போயிருக்கும்.

Share

சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி

சூப்பர் டீலக்ஸ் – தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் வந்தபொழுது கவனிக்கப்படாமல், பிறகு தமிழின் முக்கியமான படம் என்ற தகுதியை அடைந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் திரைபடம், சந்தேகமே இல்லாமல் தமிழின் முக்கியமான மைல்கல்களுள் ஒன்று. உண்மையில் ஒரு தடவை மட்டுமே பார்த்துவிட்டு இப்படத்துக்கு விமர்சனம் எழுதுவது நியாயமாகாது.

முக்கியமான குறிப்பு, படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம். நிஜமாகவே வயதுக்கு வந்த திரைப்படம். எனவே குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு, என்னதான் ஸ்பாய்லர்ஸ் இல்லாமல் எழுத நினைத்தாலும் அது சாத்தியமாகாமல் போகலாம். எனவே, ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

தமிழின் திரையில் இதுபோன்ற மாயங்கள் நிகழ்வது அபூர்வம். அப்படி நிகழும்போது, அதை முதல் காட்சியில் பார்ப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். இப்படம் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியின் கலை பூர்வமானதாகவும், இயக்குநர் நினைத்து நினைத்து வாழ்ந்து செதுக்கி இருப்பதாகவும் அமைவது இப்படத்தில் மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு காட்சியும் அழுத்தமாக மிக அழுத்தமாக நகர்வதோடு, பெரிய அதிர்ச்சியையும் கொண்டு வருகிறது. அதிர்ச்சி என்றால், ஒவ்வொன்று ஒவ்வொரு வகையிலான அதிர்ச்சி. கடைசி அரை மணி நேரம் வரை, இது போன்ற காட்சிகளைத் திரைப்படம் முழுக்க உலவ விட்டிருக்கிறார் இயக்குநர். நினைத்துப் பார்க்கமுடியாத சாதனை இது.

நடிகர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு தமிழ்ப் படத்தில், தாம் எப்பேற்படத்த படத்தில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு, அனைவரும் சிறப்பாக நடிப்பதெல்லாம் எப்போதாவது நிகழும் ஒன்று. அது இப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.

பின்னணி இசை, உச்சம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படம் முழுக்க தக்க வைத்திருக்கும் ஒரு மெல்லிய பதற்றம் அசாதாரணமானது. தேவையற்ற இடங்களில் இசை இல்லாமல் இருப்பதும் முக்கியமானது.

படத்தின் ஒவ்வொரு வசனங்களும் மிகக் கூர்மையானவை. எத்தனை முறை யோசித்து இப்படி எழுதி இருப்பார்கள் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் காட்சியாக்கமும் டோனும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகிப் பொருந்திப் போகின்றன.

படம் முழுக்க அசைவ வசனங்கள்தான். முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை. எனவே இப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்.

புதிய அலை இயக்குநர்களின் படம் என்பதாலேயே ஹிந்து மதம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற அச்சத்தோடுதான் போனேன். ஆனால் இந்த முறை சிக்கி இருப்பது கிறித்துவ மதம். மிகத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே இதில் வரும் மத ரீதியான காட்சிகள் யாரையும் புண்படுத்த அல்ல, கற்பனையாக மட்டுமே என்று காட்டுகிறார்கள். அடுத்து, ஒரு வசனத்தில் மிகத் தெளிவாக இது கிறித்துவ மதம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். பின்பு கிறித்துவ மதத்தின் மதப்பிரசார முறைகளை, இதுவரை எந்தப் படமும் செய்ய துணியாத அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் காட்டுகிறார்கள். அதிலும் மருத்துவமனையிலும் பிரசாரமா என்ற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். கடைசிக் காட்சியில் வரும் வசனம், மிகத் தெளிவாக, ஜீசஸ் பெயரையும் கிறித்துவ மதத்தின் பெயரையும் குறிப்பிடுகிறது. என்ன ஒரு தெளிவு! அனைவரையும் குழப்பி, சென்சாரைக் குழப்பி, இப்படிச் சொல்லியும் வைப்பதெல்லாம், பின்நவீனத்துவத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும்.

பல காட்சிகள் உறைய வைப்பவை. தன் கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் முன் கணவன் வந்திறங்கும் காட்சி, அந்தப் பையன் தண்ணீரில் தன் கையைத் தேய்த்து தேய்த்துக் கழுவும் காட்சி, தன் குழந்தை முன்பு பெண்ணாகிப் போன ஆண் அழும் காட்சி, அனைத்து காவல்நிலையக் காட்சிகளும், ரம்யா கிருஷ்ணன் மருத்துவமனையில் கதறும் காட்சி, ஃபஹத் ஃபாஸில் சார் சார் என்று சந்தோஷத்துடன் இறுதியில் கத்தும் காட்சி, சம்ந்தாவின் அலட்டல் இல்லாத நடிப்பு, மயக்கம் தெளிந்து உணர்வுபெற்ற பையன் அம்மாவிடம் சொல்லும் முதல் வசனம் – ஒவ்வொன்றும் அட்டகாசம். அதிலும் விஜய் சேதுபதி வழுக்கைத் தலையுடன் காவலதிகாரியைத் தாக்க வரும் காட்சி – தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் விஜய் சேதுபதியின் திரை வாழ்விலும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

இத்தனையோடு ஏமாற்றமே இப்படத்தில் இல்லையா என்றால், நிச்சயம் உண்டு. அவை – லாஜிக் தொடர்பானவை. அனைத்துக் கதைகளின் பின்னேயும் ஒரு சிறிய நம்பிக்கையின்மை இருக்கிறது. இப்படி நடக்கமுடியுமா, இப்படிச் செய்வார்களா என்று யோசிக்கிறோம். இது ஒரு பலவீனம். இதை ஏற்றுக்கொண்டு விட்டால் பொக்கிஷத்தின் கதவுகள் திறந்துவிடும். அடுத்த குறை, யதார்த்தங்கள் நிகழ்த்தும் பெரிய விஷயங்கள். பொதுவாகவே புதிய அலை இயக்குநர்களுக்கு இந்தத் தத்துவத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருப்பதைப் பார்க்கிறேன். இப்படத்திலும் இது உள்ளது. மூன்றாவது குறை, தத்துவ அறிவியல் ரீதியான குழப்பத்தைத் திரைப்படத்தில் காட்ட நினைத்தது. இது குறை என்பது எந்த நோக்கில் என்றால், அதுவரை பறந்த படத்தின் வேகம் தொடர்ச்சியான இந்த இரண்டு காட்சிகளில் எதிர்கொள்ளும் தடையின் காரணமாகச் சொல்கிறேன். மிஷ்கினின் அறிவுக்கண் திறக்கும் காட்சியும், ஏலியன் காட்சிகளும் பெரிய தடையைக் கொடுக்கின்றன. அதேசமயம் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியத்துவமும் கொண்டவை. இன்னொரு குறை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு பயணங்களின் தொடர் காட்சிகள். இதுபோன்ற படங்கள், ‘நேரம்’ தொடங்கி நிறைய வந்துவிட்டன. 

தமிழில் எப்போதாவது நிகழும் அபூர்வம் இப்படம். இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே, சாதிவெறி நாட்டுப் பற்று தொடர்பான விஷயங்கள், ஃபஹத் சமந்தா தொடர்பான உறவுச் சிக்கலெல்லாம் புரியும். நியாயமான விமர்சகர் இப்படத்தை இரண்டு முறையாவது பார்க்கவேண்டிய அவசியத்தை, அதிலும் மிகச் சிறந்த திரையரங்கில் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்வார். நான் உணர்கிறேன். தவறவிடாதீர்கள். குழந்தைகளுடன் செல்லாமல் தனியாகச் செல்லுங்கள்.

– ஹரன் பிரசன்னா

Share