Dies Irea (M) – சமீப காலங்களில் பேய்ப் படங்கள் எடுப்பதில் இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதுவது ராகுல் சதாசிவனைத்தான். பேய்ப் படங்களில் நான் பார்த்த அவரது முதல் திரைப்படம் பூத காலம். வித்தியாசமான சைகலாஜிகல் ஹாரர். கடைசியில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. அந்தப் படத்தில் பேயை காட்ட வேண்டுமா அல்லது பயம் மட்டும் போதுமா என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது.
பேய் இருக்கா இல்லையா என்பதைப் பற்றிப் பலருக்குப் பல சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் பேய் பற்றிய பயம் உலகம் முழுக்க நிஜம். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் அந்தப் படத்தில் அவர் காட்சிப்படுத்தியிருந்தார். அப்படி அத்தனை அழகாக யோசித்தவர் கடைசியில் பேயைக் காட்டினார் என்பதில் அந்தப் படம் எனக்குக் கொஞ்சம் விலகலைத்் தந்து விட்டது. மற்றபடி அது நல்ல திரைப்பட அனுபவமே.
பின்னர் வந்தது பிரமயுகம். அந்தப் படத்தில் மம்முட்டியின் நடிப்பு மிரட்டல். கதையும் ஓரளவு வித்தியாசமான கதை. ஆனால் மிக மெல்ல நகரும் காட்சி அமைப்பும் சில தேவையற்ற காட்சிகளும் எனக்குக் கொஞ்சம் விலகலைத் தந்தன. ஆனால் சந்தேகமே இல்லாமல் அதுவும் முக்கியமான படமே. குறிப்பாக மம்முட்டியின் மிகச் சிறந்த படங்களில் அந்தப் படத்துக்கு என்றைக்கும் ஓர் இடம் உண்டு.
இதனால் அந்த இயக்குநர் இப்போது எடுத்து வெளியாகி இருக்கும் டியஸ் இரியே (Dies Irea – கோப நாள்) என்ற படத்தைப் பார்க்க முதல் நாளே போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். இன்னொரு காரணம் பிரணவ் மோகன்லால்.
பேய்ப் பயம் பற்றிய அனுபவம்தான் முதன்மை என்றால் இந்தப் படத்திலும் ராகுல் சதாசிவன் நம்மை ஏமாற்றவில்லை. ஆனால் தனது கடைசி இரண்டு படங்களில் அவர் கையாண்ட அந்த சைக்காலஜிக்கல் மாயாஜாலத்தைக் கைவிட்டு விட்டு முற்றிலுமான பேய்ப் படத்துக்குள் வந்து விட்டார். இது ஒரு சமரசம்.
இடைவேளை வரை நம்மை என்னென்னவோ யோசிக்க வைத்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை எழுதி, இடைவேளையில் அசர வைத்திருக்கிறார். ஒரு திரைப்படமாக ஃப்ரேம் பை ஃப்ரேம் மிரட்டி இருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தக் கதையாக யோசித்தால் புதுமையாக ஒன்றுமில்லை. அப்படி இருந்தும் கூட இந்த அளவு முதல் கட்சியிலிருந்து கடைசி நொடிவரை நம்மைக் கட்டி போட்டது பெரிய விஷயம்.
Spoiler alert.
படத்தில் பல காட்சிகளில் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். ஆனால் கதையாகச் சில குழப்பம் படத்தில் இருக்கிறது. தம்பிக்கு ஏன் அப்படி நேர்ந்தது என்பதிலிருந்து, அந்த அப்பா கேரக்டர் யார் என்ன ஆனது, உதவி செய்பவனைக் கொல்ல நினைப்பது ஏன் என்பதெல்லாம் குழப்பங்கள். இதையெல்லாம் படமாக எடுத்து வெட்டித் தள்ளி விட்டாரா இல்லை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரா என்பது புரியவில்லை.
தமிழில், கன்னடத்தில், ஹிந்தியில் பேய்ப் படங்கள் என்னும் போர்வையில் கண்ட கண்ட கருமத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது இத்தனை அழகாக இத்தனை அழகியலுடன் இத்தனை மெல்ல நகர்ந்தாலும் இத்தனை விறுவிறுப்பாக ஒரு படம் எடுக்கும் இயக்குநரைப் பார்த்து நிச்சயம் நான் ஆச்சரியப்படுகிறேன்.
அனுபவத்திற்காக என்றால் நிச்சயம் பார்க்கலாம். பிரமயுகம், பூத காலத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் கீழேதான்.
மேலதிக எண்ணங்கள்
Full of spoilers
திரைப்படம் என்னதான் நவீன காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் அடிப்படை, கெட்டவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கெட்டவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் பார்த்தால் இந்த படத்தின் ஹீரோதான் கொல்லப்பட வேண்டும். பேய் அவனை விரட்டி விரட்டிக் கொல்ல வரும்போது அவன் பிழைக்க வேண்டுமே என்ற எண்ணம் நமக்கு வராமல் இருப்பதற்குக் காரணம், அவன் செய்த சேட்டைகள். செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரு காரில் உட்கார்ந்து கொண்டு மொபைலைப் பார்த்தபடி ஐ அம் சாரி என்று சொல்லிவிட்டால் செய்ததெல்லாம் அப்படியே காற்றோடு மறைந்து போய்விடாது.
எத்தனையோ வருடங்கள் கழித்துச் சந்தித்த அப்பாவிப் பெண்ணை, அவள் சம்மதத்தோடு தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்திவிட்டு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள் என்றதும், திருமணமா வாட் இஸ் திஸ் என்று சொல்லி அவளை மொத்தமாக அப்படியே விட்டு விட்டால் அது என்ன நியாயம்?
திருமணம் செய்து கொள் என்று அந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால், அந்தப் பெண்ணை மிகவும் நல்லவளாகக் காட்டி இருப்பதைப் பின்புலமாக வைத்துக் கொண்டால், தன்னைக் கழற்றி விட்டவனைக் கூட பேயான பின்பும் தலையை வருடிக் கொடுப்பதைப் பார்த்தால், அந்தப் பெண், இவன் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பித்தான் அவனுடன் இருந்திருக்கிறாள் என்பது புலனாகிறது.
நியாயப்படி பார்த்தால் மூடுபனிக்கார பாடிதான் ஹீரோ. நமக்கு ஹீரோவாக அறிவிக்கப்பட்டிருப்பவன்தான் வில்லன். இந்த வில்லன் அந்த நல்ல பாடியையும் சேர்த்து எரித்து விட்டிருக்கிறான். என்ன கொடுமை இதெல்லாம்.
படம் தந்த அனுபவம் வேறு. ஆனால் படம் சொல்வது இதைத்தான்.
நானே சிந்தித்தேன். : )