Archive for திரை

சிகை

சிகை திரைப்படம் – நல்ல முயற்சி. இன்னும் மிகச் சிறப்பாக வந்திருக்கவேண்டியது ஏன் சறுக்கியது என்று யோசித்ததில்:

* நல்ல படங்களுக்கு ஏற்படும் லாஜிக் சிக்கல் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெத்துவிடும். பாலியல் புரோக்கராக வருபவர் இத்தனை கருணை கொண்டவராகவும் அறத்தைப் பார்ப்பவராகவும் நியாயமானவராகவும் இருக்கிறார். இத்தனை நல்லியல்புகள் கொண்டவர் ஏன் புரோக்கராக இருக்கவேண்டும் என்று பிடிபடவே இல்லை. இது இப்படித்தான் என்றோ, இது இப்படியும் இருக்கலாமே என்றோ கடந்துபோகமுடியவில்லை.

* என்னதான் புரோக்கர் நல்லவராக இருந்தாலும் ஒரு கொலையைக் கண்ட பின்பும் ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்வதெல்லாம் ஒட்டவே இல்லை. இதையும் மீறி நாம் நம்புவதன் காரணம், அந்த புரோக்கராக வரும் நடிகரின் அமைதியான யதார்த்தமான நடிப்பும், படமாக்கப்பட்ட விதமும்தான்.

* சிகை படம் பற்றிய ஆர்வம் வந்ததே கதிர் பெண் போன்ற வேடத்தில் இருந்த புகைப்படம் மூலமாகத்தான். அசரடிக்கும் வகையிலான மேக்கப்புடன் அந்தப் புகைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் படத்தில் அந்தக் கதாபாத்திரம் வருவதோ மிகச் சொற்ப நேரம்தான். அதனால் மனம் அந்தக் கதாபாத்திரத்தையே எதிர்நோக்கி இருந்தது.

* கதிரின் பாத்திரம் தொடர்பான காட்சிகளைவிட, முதல் பாதி காட்சிகள் உயிரோட்டமாக இருந்தன. நம்பகத்தன்மை என்ற ஒன்றைத்தாண்டி, காட்சிகளின் படமாக்கம் நன்றாக இருந்தது.

* ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள முயல்வதும் ஆண்மையவாதத்தைக் கேள்வி கேட்பதும் கணவன் கொலை செய்ய முயன்றான் என்று சொல்வதுமான காட்சிகள் தேவையற்றவை, வலிந்து திணிக்க முற்பட்டவை போன்ற தோற்றம் தருகின்றன. அதுவரை கதை செல்லும் பார்வையிலிருந்து ஒரு மாற்றம் திடீரென்று வருகிறது.

* ஒரே இரவில் இரண்டு கொலைகளை கதிர் செய்துவிடுவதையெல்லாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசித்திருக்கலாம்.

* கதிரின் திருநங்கை பாத்திரம் அத்தனை சிறிய இடைவெளியில் முடிந்துபோவதைத் தவிர்த்திருக்கலாம்.

* இந்தப் படத்தை ஒரு திரில்லர் போல யோசித்தது ஏன் என்று புரியவில்லை. அப்படி யோசிக்காமல் இருந்திருந்தால் மிக நல்ல படம் என்றாகி இருக்கும். ஆனால் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது படம் இரண்டும் இல்லாமல் வந்துவிட்டது.

கொஞ்சம் யோசித்து மெனக்கெட்டிருந்தால், எத்தனையோ மொக்கையான கேவலமான படங்களுக்கு மத்தியில் ஒரு டீசண்டான படம் என்ற இமேஜைத் தாண்டி வேறு ஒரு தளத்துக்குப் போயிருக்கும்.

Share

சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி

சூப்பர் டீலக்ஸ் – தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் வந்தபொழுது கவனிக்கப்படாமல், பிறகு தமிழின் முக்கியமான படம் என்ற தகுதியை அடைந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் திரைபடம், சந்தேகமே இல்லாமல் தமிழின் முக்கியமான மைல்கல்களுள் ஒன்று. உண்மையில் ஒரு தடவை மட்டுமே பார்த்துவிட்டு இப்படத்துக்கு விமர்சனம் எழுதுவது நியாயமாகாது.

முக்கியமான குறிப்பு, படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம். நிஜமாகவே வயதுக்கு வந்த திரைப்படம். எனவே குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு, என்னதான் ஸ்பாய்லர்ஸ் இல்லாமல் எழுத நினைத்தாலும் அது சாத்தியமாகாமல் போகலாம். எனவே, ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

தமிழின் திரையில் இதுபோன்ற மாயங்கள் நிகழ்வது அபூர்வம். அப்படி நிகழும்போது, அதை முதல் காட்சியில் பார்ப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். இப்படம் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியின் கலை பூர்வமானதாகவும், இயக்குநர் நினைத்து நினைத்து வாழ்ந்து செதுக்கி இருப்பதாகவும் அமைவது இப்படத்தில் மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு காட்சியும் அழுத்தமாக மிக அழுத்தமாக நகர்வதோடு, பெரிய அதிர்ச்சியையும் கொண்டு வருகிறது. அதிர்ச்சி என்றால், ஒவ்வொன்று ஒவ்வொரு வகையிலான அதிர்ச்சி. கடைசி அரை மணி நேரம் வரை, இது போன்ற காட்சிகளைத் திரைப்படம் முழுக்க உலவ விட்டிருக்கிறார் இயக்குநர். நினைத்துப் பார்க்கமுடியாத சாதனை இது.

நடிகர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு தமிழ்ப் படத்தில், தாம் எப்பேற்படத்த படத்தில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு, அனைவரும் சிறப்பாக நடிப்பதெல்லாம் எப்போதாவது நிகழும் ஒன்று. அது இப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.

பின்னணி இசை, உச்சம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படம் முழுக்க தக்க வைத்திருக்கும் ஒரு மெல்லிய பதற்றம் அசாதாரணமானது. தேவையற்ற இடங்களில் இசை இல்லாமல் இருப்பதும் முக்கியமானது.

படத்தின் ஒவ்வொரு வசனங்களும் மிகக் கூர்மையானவை. எத்தனை முறை யோசித்து இப்படி எழுதி இருப்பார்கள் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் காட்சியாக்கமும் டோனும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகிப் பொருந்திப் போகின்றன.

படம் முழுக்க அசைவ வசனங்கள்தான். முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை. எனவே இப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்.

புதிய அலை இயக்குநர்களின் படம் என்பதாலேயே ஹிந்து மதம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற அச்சத்தோடுதான் போனேன். ஆனால் இந்த முறை சிக்கி இருப்பது கிறித்துவ மதம். மிகத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே இதில் வரும் மத ரீதியான காட்சிகள் யாரையும் புண்படுத்த அல்ல, கற்பனையாக மட்டுமே என்று காட்டுகிறார்கள். அடுத்து, ஒரு வசனத்தில் மிகத் தெளிவாக இது கிறித்துவ மதம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். பின்பு கிறித்துவ மதத்தின் மதப்பிரசார முறைகளை, இதுவரை எந்தப் படமும் செய்ய துணியாத அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் காட்டுகிறார்கள். அதிலும் மருத்துவமனையிலும் பிரசாரமா என்ற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். கடைசிக் காட்சியில் வரும் வசனம், மிகத் தெளிவாக, ஜீசஸ் பெயரையும் கிறித்துவ மதத்தின் பெயரையும் குறிப்பிடுகிறது. என்ன ஒரு தெளிவு! அனைவரையும் குழப்பி, சென்சாரைக் குழப்பி, இப்படிச் சொல்லியும் வைப்பதெல்லாம், பின்நவீனத்துவத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும்.

பல காட்சிகள் உறைய வைப்பவை. தன் கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் முன் கணவன் வந்திறங்கும் காட்சி, அந்தப் பையன் தண்ணீரில் தன் கையைத் தேய்த்து தேய்த்துக் கழுவும் காட்சி, தன் குழந்தை முன்பு பெண்ணாகிப் போன ஆண் அழும் காட்சி, அனைத்து காவல்நிலையக் காட்சிகளும், ரம்யா கிருஷ்ணன் மருத்துவமனையில் கதறும் காட்சி, ஃபஹத் ஃபாஸில் சார் சார் என்று சந்தோஷத்துடன் இறுதியில் கத்தும் காட்சி, சம்ந்தாவின் அலட்டல் இல்லாத நடிப்பு, மயக்கம் தெளிந்து உணர்வுபெற்ற பையன் அம்மாவிடம் சொல்லும் முதல் வசனம் – ஒவ்வொன்றும் அட்டகாசம். அதிலும் விஜய் சேதுபதி வழுக்கைத் தலையுடன் காவலதிகாரியைத் தாக்க வரும் காட்சி – தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் விஜய் சேதுபதியின் திரை வாழ்விலும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

இத்தனையோடு ஏமாற்றமே இப்படத்தில் இல்லையா என்றால், நிச்சயம் உண்டு. அவை – லாஜிக் தொடர்பானவை. அனைத்துக் கதைகளின் பின்னேயும் ஒரு சிறிய நம்பிக்கையின்மை இருக்கிறது. இப்படி நடக்கமுடியுமா, இப்படிச் செய்வார்களா என்று யோசிக்கிறோம். இது ஒரு பலவீனம். இதை ஏற்றுக்கொண்டு விட்டால் பொக்கிஷத்தின் கதவுகள் திறந்துவிடும். அடுத்த குறை, யதார்த்தங்கள் நிகழ்த்தும் பெரிய விஷயங்கள். பொதுவாகவே புதிய அலை இயக்குநர்களுக்கு இந்தத் தத்துவத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருப்பதைப் பார்க்கிறேன். இப்படத்திலும் இது உள்ளது. மூன்றாவது குறை, தத்துவ அறிவியல் ரீதியான குழப்பத்தைத் திரைப்படத்தில் காட்ட நினைத்தது. இது குறை என்பது எந்த நோக்கில் என்றால், அதுவரை பறந்த படத்தின் வேகம் தொடர்ச்சியான இந்த இரண்டு காட்சிகளில் எதிர்கொள்ளும் தடையின் காரணமாகச் சொல்கிறேன். மிஷ்கினின் அறிவுக்கண் திறக்கும் காட்சியும், ஏலியன் காட்சிகளும் பெரிய தடையைக் கொடுக்கின்றன. அதேசமயம் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியத்துவமும் கொண்டவை. இன்னொரு குறை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு பயணங்களின் தொடர் காட்சிகள். இதுபோன்ற படங்கள், ‘நேரம்’ தொடங்கி நிறைய வந்துவிட்டன. 

தமிழில் எப்போதாவது நிகழும் அபூர்வம் இப்படம். இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே, சாதிவெறி நாட்டுப் பற்று தொடர்பான விஷயங்கள், ஃபஹத் சமந்தா தொடர்பான உறவுச் சிக்கலெல்லாம் புரியும். நியாயமான விமர்சகர் இப்படத்தை இரண்டு முறையாவது பார்க்கவேண்டிய அவசியத்தை, அதிலும் மிகச் சிறந்த திரையரங்கில் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்வார். நான் உணர்கிறேன். தவறவிடாதீர்கள். குழந்தைகளுடன் செல்லாமல் தனியாகச் செல்லுங்கள்.

– ஹரன் பிரசன்னா

Share

ஐரா: இரும்புக் கோடரியும் தங்கக் கோடரியும்

மார்ச் மாதத்தில் தேர்வுகள் முடிவடைந்ததுமே குழந்தைகளைத் திரையரங்குக்கு ஈர்க்கும் நோக்கில் பேய்ப்படங்கள் வரத் துவங்கிவிடும். இந்தமுறை வரும் அனைத்துப் பேய்ப்படங்களையும் என்ன ஆனாலும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஹே ராம்! முதல் போணி ஐரா. எப்படியாவது ஒரு ஹிட் பேய்ப்படத்தைத் தந்துவிடுவது என்ற வெறியில் இருக்கும் நயந்தாராவிடம் இன்னும் எத்தனை முறை சிக்கிக்கொள்வோம் என்று தெரியவில்லை.

பேய்ப் படம் என்றால் ஒரு காட்சியில் கூடப் பயம் இருக்கக்கூடாது என்பதே தமிழ்ப் பேய்ப்படங்களின் தலைவிதி. காஞ்சனா, அரண்மனை போன்ற கொடுமைகள் பெற்ற வெற்றி, தொடர்ச்சியாக காமெடிப் பேய்ப் படங்களைக் கொண்டு வந்தன. கொஞ்சம் நல்ல முயற்சிகளான, தமிழின் உருப்படியான பேய்ப்படங்களான பீட்ஸா, மாயா மற்றும் டிமாண்டி காலணி போன்றவை வசூலில் ஒப்பீட்டளவில் பின்தங்கிப் போக, அசட்டு காமெடிப் பேய்ப் படங்கள் வசூலைக் குவித்தன. இந்த ஆசையில் வந்த படங்களுக்கு மத்தியில் ஐரா கொஞ்சம் வித்தியாசமானது. ஆம், இதில் அசட்டு காமெடிகூடக் கிடையாது!

கதை என்ற ஒன்று இல்லவே இல்லாமல், ஒரு காட்சி கூடப் பயமே இல்லாமல், ஒரு காட்சி கூடச் சிரிப்பே இல்லாமல் ஒரு படம். அதுவும் பேய்ப் படம். அதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக். அந்த ஃப்ளாஷ் பேக், 1960களில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் அழுது வடிவதைவிடக் கூடுதலாக அழுது வடிகிறது. அதிலும் அந்த க்ளைமாக்ஸ், ஐயகோ.

நயந்தாராவுக்கு வயதாகிக்கொண்டே வருவது தெளிவாகத் தெரிகிறது. உடலைக் கச்சிதமாக வைப்பதன் மூலம் இளமையாகத் தெரிய முயல்கிறார். தெரிகிறார். முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆனாலும் அழகாகவே இருக்கிறார். ஓம் சாந்தி! கருப்பு நயந்தாராவாக அவர் ஓவராக நடிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம். தாங்கமுடியவில்லை.

யோகி பாபு ஏன் வந்தார், குலப்புள்ளி லீலா ஏன் செத்தார் என்பதெல்லாம் படுபயங்கர சஸ்பென்ஸ் காட்சிகள். அதைவிட அந்தப் வண்ணத்துப் பூச்சி ஏன் வந்தது என்பதை இயக்குநர் இனி வரும் படத்தில் சொன்னால்தான் உண்டு. வண்ணத்துப் பூச்சியே வெறுத்துப் போகும் அளவு அதை கிராஃபிக்ஸில் காண்பிக்கிறார்கள்.

கருப்பு நிறத் தோல், ராசியற்ற பெண் என்ற கொடுமையையெல்லாம் அப்படியே பொறுமையாக, மெல்ல, நீளமாக, தூக்கம் வருமளவுக்குக் காட்டுகிறார்கள். அந்தக் குழந்தை பிறந்ததும் அப்பா இடி தாக்கி இறப்பதாக எடுக்கவெல்லாம் எதையும் எதிர்கொள்ளும் தைரியமான மனது ஒரு இயக்குநருக்கு இருக்கவேண்டும்.

இதையெல்லாம் தாண்டி சிவப்பு நயந்தாராவை கருப்பு நயந்தாரா ஏன் கொல்ல நினைக்கிறார் என்பதற்குக் காட்டப்படும் காரணம், ஐயையோ ரகம். ஹீரோ கருப்பு நயந்தாராவைக் காதலித்து, இரும்புக் கோடரியைத் தொலைத்தவனுக்கு வனதேவதையின் மூலம் தங்கக் கோடரி கிடைப்பது போல சிவப்பு நயந்தாரா கிடைக்க, ஒரு நிமிடம் பொறாமைப்பட்டுவிட்டேன். ஆனால் இயக்குநர் பொலிடிகல்லி கரெக்நெஸ்ஸைக் கைவிடாமல் இன்னொரு க்ளைமாக்ஸ் வைத்து நம்மை மந்திரித்து அனுப்பிவைக்கிறார்.

மிக சுமாரான படமாக்கம், நாடகம் போன்ற காட்சிகள் என்று எல்லாவிதமான மொக்கைகளும் ஒருங்கே அமைந்த ஒரு திரைப்படம். நயந்தாரா நடிக்காமல் இருந்தால் அழகாக இருக்கிறார். ஆனால் படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயம் வேறு. நம்மைக் கதறடிக்கிறார். அடுத்த பேய்ப் படமாவது நயந்தாராவுக்குச் சரியாக அமையட்டும்.

இந்தக் கொடுமையையெல்லாம் விஞ்சும் இன்னொரு கொடுமையைச் சொல்லாவிட்டால் முழுமையாகாது. ஐராவதம் என்ற யானையின் நினைவு சக்தியை மையமாக வைத்து இந்தப் படத்துக்கு ஐரா என்று பெயர் வைத்தார்களாம். :சுவரில் முட்டிகொள்ளும் ஜிஃப்:

நன்றி:
https://oreindianews.com/?p=4294

Share

KGF

பரிந்துரைத்திருந்தால்கூடப் பரவாயில்லை, இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதில்லையா, வாழ்க்கைல பாதி போச்சு என்ற அளவுக்கு ஏத்திவிட்ட அந்த விஷமிகள் சில நாள்களுக்கு என் கண்ணில் படாமல் இருப்பது நல்லது. அவ்வளவு நல்ல கன்னடப் படமா, என்னடா இது ஆக்ஸிமோரனாக இருக்கிறதே என்று பார்த்தேன்.

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஒரு பில்டப் கொடுத்து, எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்று ரஜினி சொல்லும்போது ஜிவ்வென்று ஏறுமே… ரஜினி ஸ்லோமோஷனில் நடக்க பின்னணியில் இசை ஒலிக்க… நான் ஒரு தடவை சொன்னா என்ற பஞ்ச்… ரஜினி அடிபம்ப்பை பிடுங்கி அடிக்க ஒருத்தன் ஒன்றரை கிலோமீட்டர் பறந்து விழ… இதெல்லாம் ஒரு படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இது மட்டுமே வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இவருக்கு என்ன பின்னணி, எப்படி இப்படி ஆனார் என்றெல்லாம் சொல்லாமல் இதை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் சத்யராஜ் மாதிரி ஒருவர் நடித்தால் எப்படி இருக்கும்? அந்தக் கருமம்தான் கே ஜி எஃப்.

தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமா எங்கோ இருக்க இப்போதுதான் கன்னட உலகம் மெல்ல விழிக்கிறது போலும். அதற்கே ஆஹா ஓஹோ என்று சொல்லிக்கொள்வார்கள் போல. பல காட்சிகள் ஏனோ தானோவென்று இருக்கின்றன. ஆளாளாளுக்கு ஹீரோ பற்றிய பில்டப்பை கிளைமாக்ஸ் வரை தருகிறார்கள். தோல் விடைத்து ரோமம் சிலிர்த்து ரத்தமெல்லாம் வெளியே பீய்ச்சி அடிக்கும் நிலை வந்தபோதும் இந்த ஹீரோவைப் புகழ்வதை நிறுத்தவே இல்லை. வயிற்றுக்குள் இருக்கும் கரு மட்டும்தான் ஹீரோவைப் புகழவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தக் கண்றாவியில் அவருக்குக் காதல் வேறு வருகிறது. ஏனென்றே தெரியாமல் ஒரு பெண்ணும் காதலிக்கிறார். இந்தக் கொடுமைக்குள் இன்னொரு கொடுமையாக, சிறுத்தை, அந்தப்புரம் போன்ற படங்களில் வரும் கொடூரமான பகுதியில் தங்கி அங்கே தங்க வயல்களில் கட்டாயத்தின் பேரிலும் மிரட்டலின் பேரிலும் வேலை பார்ப்பவர்களைக் காப்பாற்றி… ரொம்ப கூலாக கிருஷ்ணா சொல்கிறார், இது பார்ட் 1 தான் பேபி, பார்ட் 2 இருக்கு, இப்பதான் ஆரம்பம் என்று. ஆள விடுங்கடா சாமிகளா என்று கதற வைக்கிறார்கள்.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை எல்லாரும் பன்ச் டயலாக் மட்டுமே பேசிய படம் என்ற வகையில், பன்ச் டயலாக் தவிர வேறு வசனங்களே கிடையாது என்ற வகையில், ஹீரோ ஸ்லோமோஷனில் வரும் காட்சிகளையெல்லாம் சாதாரணமாக எடுத்திருந்தால் ஒரு முக்கால் மணி நேரம் கம்மியாகி இருக்கும் என்ற வகையில், ஒரு ஹீரோ நாற்பது பேரை அடிப்பதெல்லாம் சும்மா 400 பேரை அடிப்பார் என்ற வகையில், கிளைமாக்ஸ் வரை என்னென்னவோ காட்சிகள் மாறி மாறி வந்த வகையில் இப்படம் ரொம்ப புதுசு என்றால், பிரதமர் ‘இந்திரா’வே இந்த வில்லனிஷ்ஹீரோவைப் பிடிக்க ஒரு படையையே அனுப்பிய வகையில்.. இதுக்கு மேல முடியலைங்க.

Share

யூரி – துல்லியமான தாக்குதல்

How is the Josh? Very high Sir!

பாகிஸ்தானுக்குள் எல்லை கடந்துசென்று அதன் தீவிரவாதப் பகுதிகளைத் (லாஞ்ச் பேட்) தாக்கிய இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நம் பெருமைகளுள் ஒன்று. மோடியைப் பற்றிப் பேசினாலே, பக்தாஸ் என்றும் எல்லையில் இந்திய ராணுவம் என்றும் பகடி செய்தும், தேசப்பற்று என்ற ஒன்றைக் கிண்டலுக்கும் கேவலத்துக்கும் உரியது என்றும் ஒரு பெருங்கூட்டம் இன்று ஆக்கிவரும் நிலையில், இத்திரைப்படத்தின் தேவை முன்னெப்போதையும்விட மிக அதிகமாக இருக்கிறது. அதாவது மோடியை ஓட்டுகிறோம் என்ற போர்வையில் இவர்களுக்குள்ளே இருக்கும் இந்திய வெறுப்பைக் கிண்டல் என்ற பெயரில் உலவவிடுகிறார்கள் என்பதெல்லாம் நமக்குப் புரியாமலில்லை. அர்பன் நக்ஸல்களின் ஃபேஸ்புக் அப்ரெசெண்டிகளுக்கு இத்திரைப்படத்தைக் காணிக்கையாக்குவது சரியானது.

கதை என்ற ஒன்று கிடையாது. இந்தியாவின் ராணுவத் தாக்குதல் என்ற மூன்று வார்த்தைகளே இலக்கு. இப்படி ஒரு படத்தை ஹாலிவுட்டில் நிறையப் பார்க்கலாம். இந்திய வரலாற்றின் முக்கியப் பக்கங்களை நம்மால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. பணத் தேவை தொடங்கிப் பல காரணங்கள் இருந்தாலும் நம்மால் இதுவரை இவற்றைத் திறம்படச் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. அதிலும் சமகால வரலாற்றுத் திரைப்படங்கள் என்றால் நம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். குறைந்தது ஹிந்தியிலாவது சில படங்கள் வந்திருக்கின்றன. அந்தவகையில் நம்மைப் பெருமை கொள்ளச் செய்யும் ஒரு படமாக இத்திரைப்படம் வந்திருக்கிறது.

முதலில் இத்திரைப்படத்தின் குறைகளில் இருந்து துவங்குவோம். திரைக்கதை என்ற ஒன்றை உருவாக்குவதற்காக தேய்வழக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அல்ஸைமைர் அம்மா, தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழக்கும் அக்காவின் கணவர், இறக்கும் சிப்பாய்க்கு ஒரு அழகான மகள் மற்றும் கர்ப்பிணி மனைவி, இவர்களுக்கு மத்தியில் ஹீரோ. இவை எதுவுமே இல்லாமல் நேரடியாக சர்ஜிகல் ஸ்ட்ரைக்-க்குள் போயிருந்தாலும் சரியாகவே இருந்திருக்கும். ஆனால் உணர்வு ரீதியாக இணைக்கிறேன் என்று இயக்குநர் இப்படிச் செய்திருக்கிறார் போல.

ஒரு பிரசாரப் படம் என்று பார்த்தால் திரைக்கதையை இப்படி அமைத்துக்கொள்வதில் தவறில்லை. இயக்குநரும் இப்படி இப்படத்தை பாஜகவுக்கான பிரசாரப் படமாக எடுத்துக்கொண்டிருக்கலாம் என்றே யூகிக்கிறேன். என்னதான் ஒரு பொதுவான ஒன்றுக்காகப் போராடினாலும் அதன் பின்னே ஒரு சுயநலமும் அல்லது தனிப்பட்ட காரணமும் உள்ளது என்பது மிக வெற்றிகரமான சூத்திரமே. அதிலும் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழக்கும் மேஜரின் கர்ப்பிணி மனைவியும் மகளும் அழும் அந்த இரண்டு நிமிடக் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. (அந்த இரண்டு பேரும் ஜஸ்ட் ஒரு நிமிடத்தில் எப்படி நடிக்கிறார்கள்!)

மோடி, அஜித் தோவல், ராஜ்நாத் சிங், மனோஹர் பரிக்கர், அருண் ஜெட்லி (?) என மிகத் தேவையானவர்களை மட்டுமே படத்தில் காண்பிக்கிறார்கள். அஜித் தோவல் மட்டுமே மிக நீண்ட நேரம் படம் முழுக்க வருகிறார். மற்றவர்கள் எல்லாம் சில காட்சிகள் மட்டுமே. மனோகர் பரிக்கராக வரும் நடிகரின் தேர்வு அசரடிக்கிறது. மனத்தின் மூலையில் இனம்புரியாத சோகமும் வருகிறது. ராஜ்நாத் சிங்காக நடித்திருக்கும் நடிகரைப் பார்த்தால் அவரைப் பார்த்து பரிதாபப்படுவதா ராஜ்நாத் சிங்கைப் பார்த்து பரிதாபப்படுவதா என்று புரியாமல் போகிறது.

ஒரு ட்ரோனை வைத்துக்கொண்டு இத்தனை தூரம் செய்யமுடியுமா என்பது புரியவில்லை. இதைக்கூடவா பாகிஸ்தானால் கண்டுபிடித்திருக்கமுடியாது என்பதும் தெரியவில்லை. பாகிஸ்தானில் இருக்கும் உளவாளிகள் இந்தியர்களைவிட அதிகம் உதவுகிறார்கள்! ஆனால் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது வெற்றிகரமான ஒன்று. அதன் உண்மைத்தன்மையின் பின்னணியில்தான் இதையும், இதுபோன்ற பிற குறைகளையும் கடக்கவேண்டி இருக்கிறது.

படத்தின் துல்லியங்களே மிகப் பெரிய பலம். இதுபோன்ற உண்மைகளைப் படமாக எடுப்பவர்கள் அமெர்ச்சூர்த்தனமாக எடுத்து வைத்து நம்மைக் கலங்கடிப்பார்கள். இத்திரைப்படத்தில் அக்குறை எங்கேயும் இல்லை. எதிலும் துல்லியம். அசரடிக்கும் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் ஒலித் துல்லியம் – இந்த இரண்டும் நம்மைக் களத்துக்கே கொண்டு செல்கின்றன.

இறுதிக் காட்சிகள் மட்டும் அரை மணி நேரம் – வெறும் துப்பாக்கிச் சூடும் எறி குண்டுகளுமே. இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன அந்த ஒலிகள்.

யூரி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து 19 இந்திய ராணுவத்தினரைக் கொன்றொழிக்கும் பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டுகிறது இந்தியா. துல்லியமான பிசகாத சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் ஒரு இந்திய ராணுவத்தினர்கூட பலியாகவில்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயமே. ஐஎன்ஏ பேட்டியில் மோடி இதைக் குறிப்பிட்டிருந்தார். “சர்ஜிகல் ஸ்ட்ரைக் தோல்வி என்றாலும்கூடப் பிரச்சினையில்லை, ஒரு வீரர்கூட உயிரிழக்கக்கூடாது” என்று. இந்திய ராணுவத்துக்கு மோடியின் ஆட்சி நிச்சயம் பொற்காலம் என்றே சொல்லவேண்டும்.

இப்படம் நிச்சயம் பாஜகவின் பிரசாரமாகத்தான் பார்க்கப்படும் என்றாலும், மிகத் தெளிவாக, மிக சப்டிலாக இதை எடுத்ததில் வென்றிருக்கிறார்கள். எங்கேயும் பிரசாரத் தொனி இல்லை. எப்படியோ பாஜகவுக்கு புத்தி வந்திருக்கிறது என்பது பெரிய ஆச்சரியம். அதிலும் இறுதிக்காட்சி சட்டென முடிகிறது. எவ்வித விளக்கமும் அறிவுரையும் வேண்டுதல்களும் இல்லை. பெரிய ஆசுவாசம்.

ஒலி/ஒளிப்பதிவின் துல்லியத்துக்காகவும் விக்கி கௌஷலின் நடிப்புக்காகவும் (ராஸியில் நடித்தவர்), ஒரு முழுமையான இந்திய சமகால வரலாற்றுத் தருண திரைப்படமாக வந்ததற்காகவும் நிச்சயம் பார்க்கவேண்டும்.

நன்றி: https://oreindianews.com/?p=2988

பின்குறிப்புகள்:

  1. அல்ஸைமர் போதும். திரைப்படங்களில் இந்தக் கொடுமையைப் பார்க்கமுடியவில்லை. பாவம், விட்ருங்க எங்களை.
  2. சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்தபோது நான் வலம் இதழில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்லவும்: http://www.valamonline.in/2017/02/surgicalstrike.html
Share

சீதக்காதி

சீதக்காதி திரைப்படம் பார்த்தேன். மிகவும் வேறுபட்ட முயற்சிகளுக்குரிய படத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்காமல் அதனளவில் நின்று பார்ப்பது நல்லது. ஆனால் சில வேற்று முயற்சித் திரைப்படங்களை நாம் இந்த நல்ல அளவுகோலுடன்கூட அணுகிவிடமுடியாது. சீதக்காதியை அணுகலாம். இதுதான் இதன் முதல் ஆறுதல்.

படத்தின் முதல் சில நிமிடங்கள் மட்டுமே வரும் விஜய் சேதுபதியால் எந்த ஒரு நாடகக் காட்சியிலும் சிறப்பாக நடிக்கமுடியவில்லை. அவர் ஔரங்கசீப்பாக நடித்தாலும் விஜய் சேதுபதியாகவே இருக்கிறார். அதிலும் அவர் தூய தமிழ் வசனத்தைப் பேசும்போதெல்லாம் சென்னைத் தமிழில் பேச முற்படும் அவர் முகம் மட்டுமே கண் முன்னால் வருகிறது. ஆனால் அவர் இறந்தபின்பு அவரது ஆன்மா புகுந்து நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் அசத்திவிடுகிறார்கள். படத்தின் மிகப்பெரிய பளஸ் இதுவே.

இது தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய ஒரு பகடியாகவும், அதைவிட, தமிழ்த் திரையுலகத்தையும் ரசிகர்களையும் பற்றிய கூடுதலான பகடியாகவும் அமைந்திருக்கிறது. பல நுணுக்கமான காட்சிகளில் இயக்குநர் தென்படுகிறார். இதுபோன்ற பகடித் திரைப்படத்தில் எதைப் பகடியாக்குகிறார்களோ அதில் சரணடையவேண்டி வரும். இதிலும் அப்படி வருகிறதுதான். ஆனால் அதை சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

இத்தகைய படங்களில், இறுதியில் என்ன செய்வது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்ள நேரும். இத்திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல. பகடியாகவும் ஒன்றைப் பயன்படுத்தி, அதை அறிவியல் ரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டிய சிக்கலும் இப்படத்துக்கு கூடுதலான பிரச்சினையாக இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஒரு வசனத்தில் படத்தை முடிப்பதெல்லாம் வேறு வழியின்றி, இருக்கும் வழிகளில் சிறந்த ஒன்றென இதை ஏற்றுக்கொண்டு செய்வது.

அய்யா நடிக்க வராவிட்டால் என்னாகும் என்பதை ஒரே மாதிரியான தொடர்ச்சியான நீளமான இரண்டு காட்சிகளில் காண நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. இதைத் தவிர்த்திருந்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட மலினமான பேய் நகைச்சுவைப் படம் அளவுக்குப் போய்விட்டது. அக்காட்சிகளில் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பால் கொஞ்சம் சிரிக்கமுடிகிறது என்பதும் உண்மைதான்.

இந்தக் கதையை இன்னும் எப்படி வேறு விதமாகக் கையாண்டிருக்கலாம் என்று யோசித்ததில் தோன்றியது, முதலில் வரும் அய்யாவாக வேறு ஒரு முக்கியமான நடிகரை (கமல்!) நடிக்கவைத்துவிட்டு, அதற்கு அடுத்து அவர் ஆன்மா புகும் ஒரு நடிகராக விஜய் சேதுபதியை மாற்றி இருந்தால் படத்துக்கு வேறொரு பார்வை கிட்டி இருக்கும். ஆனால் இப்படி நடிகர்களை மாற்றிக்கொண்டே செல்லும் திரைக்கதையை மாற்றவேண்டி இருக்கும்.

ஒட்டுமொத்தமாக படத்தின் மேக்கிங் தரம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். பல காட்சிகள் சாதாரண தொலைக்காட்சி நாடகங்களைப் போல இருந்தன.

அய்யா என்ற பெயரை ஈவெரா என்று யோசித்துப் பார்த்தேன். கொஞ்சம் திக்கென்று இருந்தது. பின்னர் சிரிப்பாகவும் வந்தது. (கமான் பாலாஜி தரணிதரன், நீங்க என்ன நினைச்சு இதைச் செஞ்சீங்க?)

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பெயர். சீதக்காதி. நல்ல யோசனை. இதைப் போன்ற படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நினைத்துப் பாவமாக இருந்தது. பாலாஜி தரணிதரனுக்கு அடுத்த படம் கிடைத்து அது ஒட்டுமொத்தமாக எல்லா வகையிலும் நல்லதாக அமையட்டும்.

பின்குறிப்பு: பிராயசித்தமாக பூர்ணம் விஸ்வநாதனின் ஊஞ்சல் நாடகத்தைப் பார்க்கவேண்டும். அதில் நடிக்கும்போது அய்யா செத்துப் போவது நல்ல விமர்சனம்தான்.

Share

இளையராஜா பேட்டி – 1979

இளையராஜா 1979ல் அப்துல் ஹமீதுக்கு அளித்த பேட்டி. மிக வேகமாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் இளைய இளையராஜாவைக் கேட்கவே சந்தோஷமாக இருந்தது. அப்போதே கடவுள் என்றெல்லாம் பதில் சொல்லி இருந்தாலும், இப்போதைய அளவுக்கு ஆன்மிக பதில்கள் இல்லை. மிகப் பெரிய கனவுகளுடன் பேசி இருக்கிறார். இவரது இசை ஒரே போல இருக்கிறது என்ற புகார் அப்போது இருந்திருக்கிறது. அதற்குத் தெளிவாகப் பதில் சொல்கிறார். கர்நாடக சங்கீதப் பயிற்சி இல்லாமல் சிறந்த இசையமைப்பாளராக முடியாது என்று சொல்லி, கூடவே கர்நாடக இசை விற்பன்னர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பதில்லை என்ற விமர்சனத்தையும் சொல்கிறார்.

இளையராஜா தான் இசையமைக்க வந்த காலம் தொட்டுத் தனக்கு முன்பிருந்த திரை இசைக் கலைஞர்களைக் கொண்டாடத் தவறவே இல்லை. இப்பேட்டியிலும் எம் எஸ் வியையும் எஸ்.வி. வெங்கட்ராமனையும் (காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு இசையமைத்தவர்) குறிப்பிட்டுச் சொல்கிறார். சி.ஆர். சுப்புராமன் இசையமைத்த எல்லாப் பாடல்களும் பிடிக்கும் என்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது இப்படி ஒரு வரிகூடச் சொல்லி இருக்கவில்லை. அப்போதைக்கு அது ஒரு விநோதமான செயலாக எனக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் ஒரு இதழில் வெளிவந்திருந்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ரீதியில் சொல்லி இருந்தார்: இந்த நேரத்தில் என்னைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நானும் பேசாமல் இருப்பது சரியானது என்ற பொருளில் சொல்லி இருந்தார். இது எனக்கு ஒரு சிறிய புரிதலைக் கொடுத்தது. இளையராஜா தனது முன்னோர்களைக் கொண்டாடியதையும் ரஹ்மான் வெளிப்படையாகப் பேசாததையும் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ள முயன்றேன். ஒன்று, தலைமுறை இடைவெளி. இன்னொன்று, ரஹ்மானுக்கு வாய்ப்பளித்தவர்கள் இளையராஜாவுக்கு எதிர்ப்புறம் நின்றவர்கள். ராஜாவுக்கு இந்தச் சிக்கல்கள் இருந்திருக்கவில்லை. இதையெல்லாம் மீறி, ரஹ்மான் ராஜாவைக் கொண்டாடியிருக்கவேண்டும் என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இதில் எப்போது பிரச்சினை வருகிறது என்றால், ஏன் ராஜா ரஹ்மானைக் கொண்டாடவில்லை என்று ராஜாவின் எதிர்ப்பாளர்கள் கேட்கும்போதுதான். இருவரும் ஒருவரை கொண்டாடிக்கொள்ளாமல் இருப்பது கூட ஒருவகையில் சரிதான். ஆனால் அது நடக்கவேண்டும் என்றால் அது ரஹ்மான் தரப்பிலிருந்துதான் தொடங்கி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

தனக்குப் பிடித்த சிறந்த இசைக்கருவி தம்புரா என்று ராஜா சொல்லி ஒரு பிரச்சினை அந்தக் காலத்தில் ஓடியிருக்கிறது. இன்று ராஜா மாணவிகள் மத்தியில் கல்லூரியில் பேசும்போது தனக்குப் பிடித்த இசைக்கருவி எது என்ற கேள்விக்குச் சொன்ன பதில், மனம்! எப்பேற்பட்ட நகர்வு.

நம் தமிழ் இயக்குநர்களின் பல திராபையான படங்களில் ராஜா இசையமைத்து உன்னதமான பாடல்களைத் தந்திருக்கிறார். ஆனாலும் இந்த இயக்குநர்களைக் கொண்டாடவே வேண்டும். ஒரே காரணம், இப்படியான பல பொக்கிஷங்களுக்கான சூழலைத் தங்கள் திரைப்படங்களில் உருவாக்கியதற்காகத்தான். இன்று வரும் இசையமைப்பாளர்களுக்கு இத்தனை விதங்களில் பாடல் அமைப்பதற்கான நாடகத்தனமான சந்தர்ப்பங்கள் வாய்க்கப் போவதே இல்லை. அந்த வகையில் அந்த இயக்குநர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

Share

பேரன்பு – துயரத்துள் வாழ்தல்

கத்தி மேல் நடக்க வேண்டிய ஒரு கதை. மிகக் கவனமாகவே கையாண்டிருக்கிறார் ராம். இயக்குநர் ராமின் திரைப்படங்களில் எப்படியோ தோற்றம் கொள்ளும் (அல்லது அப்படி எனக்குத் தோன்றும்) ஏதோ ஒன்றின் மீதான வெறுப்பு இத்திரைப்படத்தில் இல்லை. எனவேதான் படத்துக்கான பெயரைக் கூடப் பேரன்பு என்று வைத்துவிட்டார்.

ராம் திரைப்படங்களில் உள்ள பிரச்சினை யாரோ ஒருவரின் அதீத நடிப்பாக இருக்கும். தங்கமீன்கள் திரைப்படத்தில் அவரே அப்படியாக இருந்தார். அந்தத் தவறை எக்காரணம் கொண்டும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே மம்முட்டியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மூழ்கிக் கொல்லும் வதை வரும் போதிலும் ஒரு இம்மி அளவு கூடத் தன் நிலையில் இருந்து விலகிவிடாமல் ஒரு கதாபாத்திரம். அதை அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் மம்மூட்டி. தங்க மீன்கள் படத்தில் அதீத நடிப்பு செய்த அதே பெண் இந்தப் படத்தில் தன் நடிப்பின் மூலம் அசர வைத்திருக்கிறார். முகத்தையும் உடல்மொழியையும் முதலில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரியாக அவர் வைத்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அப்படி இருக்கும் மனிதர்களின் வேதனை என்ன என்பதை நினைக்க வைத்து பதட்டத்தையும் கொண்டு வருகிறார்.

இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களின் செக்ஸ் சார்ந்த சிந்தனைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பலமுறை நான் யோசித்திருக்கிறேன். இளவயதில் என் நண்பர்கள் பலர் செவிலியராக இருந்தவர்களே. அதில் சிலர் மனநலக் காப்பகத்தில் பணியாற்றியவர்கள். இது போன்ற மனிதர்களின் பல கதைகளைச் சொல்லி இருக்கிறச்ர்கள். அப்போதே எனக்கு சொல்லமுடியாத மனபாரம் அழுத்தி இருக்கிறது. இப்படி குடும்பத்தில் யாருக்கும் நேராத வரை எல்லாம் நமக்கு மிக எளிதான, வருத்தப் படும் சம்பவம் மட்டுமே. ஆனால் அதே துயரில் வாழ்வது வேறு. இதே பிரச்சினையை ஒரு படம் முழுக்க அலசியிருக்கிறார் ராம்.

அதிரவைக்கும் காட்சிகள் படத்தில் இரண்டு மூன்று உண்டு. அதில் உச்சகட்டத்தில் வரும் பதற்றம் தரும் காட்சியின் நீளம் கொஞ்சம் அதிகம். இசையற்ற அலை ஓசை இன்னும் காதில். மற்ற இரண்டு காட்சிகள் மிகச் சிறியவை. சில நொடிகள் கூட நீடிக்காதவை. இக்காட்சிகள் தரும் பதற்றமும் கொஞ்ச நஞ்சமல்ல. முதலாவது, தன் மகளுடன் ஒரே படுக்கையில் அன்புடன் உறங்கும் மம்முட்டி, மறுநாள் எழுந்து பார்க்கும் பொழுது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், சோர்ந்து போய் ஒருநொடி தலையில் கை வைத்துக் கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சியில் அந்தப் பெண் ஒரு பொம்மைக்கு வண்ணம் தீட்டுவது. இது போன்ற சில காட்சிகள் நம்மை வருத்தப்பட வைக்கத்தான் செய்கின்றன.

இந்தப் படத்தில் இரண்டு அஞ்சலிகள். முதல் அஞ்சலி நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அழகாக வருகிறார். அழகாக நடிக்கிறார். இரண்டாவது அஞ்சலி, அஞ்சலி அமீர், மலையாளி. மலையாளத்தில் பிக் பாஸ் வெளியானபோது அதில் இவரும் ஒரு போட்டியாளராக நடுவில் வந்து சேர்ந்து கொண்டார். திருநங்கை. இந்தப் படத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பது இவரே. மிக அழகாக இருக்கிறார்.

இப்படத்தின் பிரச்சினைகள் என்ன என்று பார்த்தால் படம் மிக மிக மெல்லவே நகருகிறது. இதுபோன்ற படங்களுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல என்றாலும் கூட, முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரைக்குமான எங்கேயும் நகராத திரைக்கதை ஒரு சலிப்பைக் கொண்டு வருகிறது. இப்படி வெளிப்படையாகச் சொல்வதன் மூலம் மிகச் சிக்கலான ஒரு விஷயத்தைக் கையாளும் படத்தை மலினப்படுத்தக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடனேயே சொல்கிறேன். அதேசமயம் அந்தச் சலிப்பு ஏற்படுவது உண்மைதான். தமிழ்நடிகை அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் குழப்பமாக இருக்கிறது. தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு நாவலின் அத்தியாயங்கள் போல நகர்ந்தாலும் ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டிய புதிர்த்தன்மையைப் படத்தில் அஞ்சலி பாத்திரத்தில் நுழைத்தது ஏதோ ஒரு வகையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் நல்லவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வசனத்தை வைப்பதற்காகவே அந்தக் காட்சியில் புதிர்த்தன்மை விளக்கப்படாமல், வேண்டுமென்று நுழைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஏற்கனவே மணமான ஒரு பெண் தன்னையே இழக்கத் துணிவது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இதற்கான காரணத்தை விளக்கி இருந்தால் கூட இந்தக் குழப்பம் வந்திருக்காது. அது ஒரு க்ளிஷே என்ற அளவில் மட்டும் போயிருக்கும்.

குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் அஞ்சலியைச் சுற்றி நிகழும் காட்சிகள் தேவையற்ற ஒரு திரில்லிங் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவர் ஏன் குழந்தையைக் கொலை செய்யும் அளவுக்குப் போக வேண்டும் என்பதெல்லாம் குழப்பத்தைத் தரும் தேவையற்ற காட்சிகள்.

திருநங்கையாக வரும் அஞ்சலி படத்துக்கு உள்ளே வரும் காட்சியிலேயே அவர்தான் பேரன்பைத் தரப் போகிறார் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற படங்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அவற்றை எப்படி வளர்ப்பது, முடிப்பது என்பதுதான். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பாவும் மகளும் ராசியாகும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இதைச் சமாளித்திருக்கவேண்டும்.

இந்தப் படத்தில் என்னளவில் நேர்ந்த பிரச்சினை, எந்தக் காட்சிடுடனும் முதலில் உணர்வுரீதியாக இணைந்து கொள்ள முடியாமல் போனதுதான். எடுத்த எடுப்பிலிருந்து பிரச்சினைக்குள் படம் நுழைந்ததால் வந்த பிரச்சினையாக இருக்கலாம். இதே போன்ற படத்தை, இந்த அளவுக்குத் தீவிரமாக, சிக்கலான ஒன்றைக் கையாளவில்லை இல்லை என்றாலும், மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தை ஒப்பு நோக்கலாம். அஞ்சலி திரைப்படம் சிரிப்பும் கும்மாளமுமாகத் தொடங்கி, அதற்கே பழகிப்போன நம்மை சட்டென உள்ளிழுத்துக்கொண்டு, அதற்குப் பிறகு குடும்பத்தில் நுழையும் ஒரு குழந்தையின் மூலம் அந்த பிரச்சினையைக் கையாளத் துவங்குகிறது. ஒரு வணிக சினிமாவுக்கான தேவை இதில் இருந்தாலும் கூட, சொல்லவேண்டிய பிரச்சினையின் தீவிரத்தைக் கொண்டு சேர்க்க அது ஓரளவுக்கு உதவியது என்றே நம்புகிறேன். இந்தப்படம் அது போன்ற மாயையில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்துக் கொள்ளுமா என்பது குறித்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க துணிந்ததற்காகவே இயக்குநர் ராம் பாராட்டப்பட வேண்டும். அதிலும் இதற்கு முன் அவரது படங்களில் இருந்த எந்தக் குழப்பங்களும் பிரச்சினைகளும் இந்தப் படத்தில் இல்லை. மிகத் தெளிவான கொதிக்கும் நீரோடை போல இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

பின்குறிப்பு: இசை யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசை தொடக்கக் காட்சிகளில் மிக சுமாராக இருந்தது. பின்னர் பரவாயில்லை.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்.

Share