Archive for குறுங்கதை

வார்த்தை விளையாட்டு

பக்கத்து வீட்டுக்காரர் அவர். முதல்முறை அவர் பேசியபோது ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் அந்த வீட்டுக்குக் குடி வந்து இரண்டு மூன்று நாள்களில், என்னைப் பார்த்து அவர் சொன்னது இதுதான். ‘பக்கத்து வீட்ல யாரும் திருடலை.’ சிரித்துக்கொண்டே உள்ளே போனார். ஆள் தொளதொளவென கதர்ச் சட்டைதான் அணிவார். ஒரு முடி விடாமல் அனைத்தும் நரைத்திருந்தது. சோடா புட்டி கண்ணாடி அணிந்திருந்தார். முன்னே தெரிந்த இரண்டு பற்கள் பெரிய புளியங்கொட்டை சைஸில் இருந்தன. அதே நிறத்திலும். தலையை நடுவாக வகிடெடுத்துச் சீவி இருந்தார். மொத்தத்தில் எந்த வகைக்குள்ளும் சிக்காதவராக இருந்தார். அன்றுதான் முதலில் அவரைப் பார்க்கிறேன். அவர் பாட்டுக்கு ‘பக்கத்து வீட்ல யாரும் திருடலை’ என்று சொல்லிவிட்டுத் தன் வீட்டுக்குள் போய்விட்டார். யார் இவர், என்ன சொல்கிறார், யார் வீட்டில் திருடவில்லை, இது என்ன கதை என எதுவும் பிடிபடவில்லை.

பின்னர் கண்டுபிடித்தேன். அவர் எல்லாவற்றையும் வேண்டுமென்றே மாற்றி மாற்றிப் பேசுவாராம். அது ஒரு விளையாட்டு அவருக்கு. திருடி விட்டார்கள் என்றால் திருடலை என்பாராம். திடீரென ‘இன்னும் போஸ்ட் எரியலை’ என்பாராம். அதாவது தெருவில் உள்ள பொது விளக்கை ஈபிக்காரன் அணைக்கவில்லை, இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டுமாம். அவர் வீட்டில் இருந்து ஒரு குட்டிப் பெண்ணிடம் பேசிக் கண்டுபிடித்த கதை இதுவெல்லாம்.

எனக்கு வயது 40க்கு மேல். அவருக்கு 65 இருக்கலாம். நான் என்ன சின்ன பையனா என்னிடம் இப்படி விளையாட என்று தோன்றியது. பிறகு இப்படியும் ஒரு கேரக்டரா என்ற சுவாரசியம் வந்துவிட்டது.

அடிக்கடி எதாவது சொல்வார். கரண்ட்டு வந்துட்டு என்பார். கரண்ட் போயிருக்கும். கரண்ட் போயிட்டு என்பார், கரண்ட் வந்திருக்கும். ரசித்துப் பாடிக்கொண்டே ‘பாட்டு சகிக்கலை’ என்பார். மாப்பிள்ளை ரொம்ப நல்ல மாதிரி என்பார். ‘பத்தினி அவ’ என்பார். எப்படிப் புரிந்துகொள்வது என எனக்குத் திக்கென்று இருக்கும். ‘எங்க வீட்டு கிரண்டர் செமயா ஓடுது, உங்க வீட்ல ஓடலையா?’ என்பார். அதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஐந்து நிமிடம் ஆகும். ஒருமுறை ‘நீங்க ரொம்ப ஒல்லி. நல்லா சாப்பிடுங்க’ என்றார். பதிலுக்கு நான் என்ன சொல்கிறேன் என்பதையெல்லாம் கவனிக்கக் கூட மாட்டார்.

ஒருதடவை அவரது வீட்டுக் குட்டிப் பெண் என்னிடம் சொன்னாள், ‘ஏந்தான் எங்க அப்பா எல்லாத்தையும் இப்படி மாத்தி மாத்தி பேசுதோ?’ நான் அதிர்ச்சியுடன் கேட்டேன், ‘உங்க அப்பாவா?’ அந்தக் குட்டிப் பெண் சொன்னாள், ‘தாத்தாதான். ஆனா அப்பான்னு சொல்வேன். அவர மாதிரியே’ என்றது அந்த ஆறு வயசுப் பிசாசு. கடுப்பாகிவிட்டேன். குடும்பத்திலேயே எதோ பிரச்சினை போல என நினைத்துக்கொண்டேன்.

நேற்று அதிகாலை அவர்கள் வீட்டில் எதோ சத்தம். அவர்கள் வீட்டில் சத்தம் என்றால் எங்கள் வீட்டில் தெளிவாகக் கேட்கும். ஆனால் இந்த முறை தெளிவில்லாமல் இருந்தது. ஓடிப் போய்ப் பார்த்தேன். அந்தப் பெரியவரின் மனைவியை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு நினைவே இல்லை. பாவமாக இருந்தது. அவர்கள் வீட்டில் இன்னும் யாருடனும் அத்தனை பழகவில்லை என்பதால் என்ன ஏது என்று கேட்க கூச்சமாக இருந்தது.

இன்று காலை அவர்கள் வீட்டை எட்டிப் பார்த்தேன். வீட்டைப் பூட்டிக்கொண்டு அந்தப் பெரியவர் வேர்க்க விறுவிறுக்க வெளியே வந்துகொண்டிருந்தார். மருத்துவமனைக்குப் போகிறார் போல. அவரிடம் “வீட்ல எப்படி இருக்காங்க?” என்று வாய் தவறிக் கேட்டுவிட்டேன். அவர் பதில் சொல்வதற்குள் பதறியடித்து என்  வீட்டுக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டேன்.

#குறுங்கதை

Share

மாய விளையாட்டு

இப்படி அத்தை வந்து என்னைப் பிடித்துக்கொள்வாள் என்று நான் நினைக்கவே இல்லை. எதோ ஆவி விளையாட்டு, ஆவியுடன் பேசலாம் என்று ஆரம்பிக்கப் போய், நான் பார்த்தே இராத, நான் பிறப்பதற்கு முன்பே செத்துப் போய்விட்ட என் அத்தை வந்து என்னைப் பிடித்துக்கொண்டாள். மனைவி பிரசவத்துக்காக ஊர் போயிருந்த நேரத்தில் அத்தை தினம் தினம் வந்து அன்பாக மிரட்டுவாள், ‘தாயம் விளையாட வா.’

செத்துப் போன அத்தையின் மாமாவை நன்றாகத் தெரியும். அவர் அத்தையின் துராங்காரத்தைப் பற்றிப் பல தடவை சொல்லி இருக்கிறார். இப்போது அத்தை பேயாகவும் ஆகிவிட்டதால் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. தினமும் இரவு பத்து மணிக்கு அத்தையுடன் தாயம் விளையாடவேண்டும். மூன்று மாதமாக இந்தக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. யார் வீட்டில் என்ன நடந்தாலும் அத்தைக்குக் கவலை இல்லை. இனி முடியாது என்று மெல்ல அத்தையிடம் சொன்னபோது அவளது நிஜ முகத்தைக் காட்டினாள். பயந்து போய்விட்டேன். செத்துப் போன அம்மாவைப் பிடித்து, ‘இது என்னம்மா அத்தை இப்படி படுத்துது?’ என்று கேட்டேன், ‘அவளை ஒண்ணும் பண்ண முடியாதுடா… தாயம்தான விளையாடச் சொல்றா? விளையாடு’ என்று சொல்லிவிட்டாள்.

தாயக்கட்டை ஆட்டத்தில் எனக்குத் தெரியாததே இல்லை என்றாகிவிட்டது. தாயம், பன்னிரண்டு, ஆறு, ஈரஞ்சு, மூணு என்றால் ஒரு காய் எந்தக் கட்டத்தில் இருந்து எங்கே போகும் என்பதை அத்தைப் பேய் சொல்வதற்கு முன்பாக நான் சொல்லிவிடுவேன். தனக்கு நிகராக தாயம் ஆடத் தெரிந்த ஒரே ஆள் நான்தான் என்று அத்தைப் பேய் பாராட்டினாள்.

ஒரு கட்டத்தில் ஆட்டம் சலித்துப் போனது. எரிச்சலாக வந்தது. விடுபடவும் வழி தெரியவில்லை. அம்மா வந்து ‘மாமாவை கேட்டுப் பாருடா’ என்று சொல்லிவிட்டுப் போனாள். மாமா செத்துப் போய் பத்து வருடம் இருக்கும். எப்படியோ மாமாவைப் பிடித்தேன். பாசமாகப் பேசினார். முதலில் ‘நீ வேணா அத்தைகிட்ட உன் பொண்டாட்டிய பேசச் சொல்லி பாரேன்’ என்றார். ‘ஐயோ.. மாசமா இருக்கா.. வாயில்லாப் பூச்சி மாமா’ என்றேன். அத்தைப் பேயின் தாய விளையாட்டு அட்டகாசத்தைச் சொல்லவும், தான் உதவுவதாகச் சொன்னார். கொஞ்சம் பயந்துகொண்டேதான் சொன்னார்.

மாமா பேயை அத்தைப் பேய் எதிர்பார்க்கவில்லை. மாமாவைப் பார்த்ததும் அத்தையின் முகம் மாறிப் போனது. உக்கிரமானது. ‘உன்னை யார் வரச் சொன்னா?’ என்றாள். ‘நீயெல்லாம் ஒரு பொம்பளையா? மருமவன ஏன் இந்தப் பாடு படுத்துத?’ என்று கேட்ட மறு நொடி, மாமாவின் செவுளிலேயே அத்தை விட்ட அறையைப் பார்த்ததும் என் அடி வயிறு கலங்கிப் போனது. மாமா அவமானத்துடன் உட்கார்ந்திருந்தார். மெல்ல சமாளித்துக்கொண்டு, ‘எனக்கும் அடிக்கத் தெரியும். ஆனா வேண்டாம்னு பாக்கேன். தாயம் தாயம்னு அவன போட்டு உசிர எடுக்கியே.. என் கூட ஆடி ஜெயிச்சு காட்டு பாப்பம்’ என்றார். அத்தை வீடதிரச் சிரித்தாள்.

மாமா முதலிலேயே என்னிடம் சொல்லிவைத்த திட்டம்தான் அது. அத்தை வீராவேசமாக ஒப்புக்கொண்டாள். மாமா பத்து எண்களைச் சொல்வாள். அத்தை சரியாக அதை வீசவேண்டும். வீசிவிட்டால் மாமா தோற்றார். இல்லையென்றால் அத்தை தோற்றுவிட்டாள்.

மாமா சொல்ல ஆரம்பித்தார். ‘தாயம்.’ சரியாகத் தாயம் விழுந்தது. அத்தை சிரிக்கவே இல்லை. மாமா அடுத்து சொன்னார், ‘ஈரஞ்சு.’ அத்தை தாயத்தை இடதுகையில் உருட்டினாள். விழுந்தது. ‘பன்னெண்டு ஈராறு தாயம் அஞ்சு மூணு’ என்றார் மாமா. அத்தனையும் வரிசையாக விழுந்தது. அடுத்து மாமா என்னைப் பார்த்தபடியே சொன்னார், ‘ஏழு.’

அத்தை கடுப்பாகி மீண்டும் மாமாவை அறையப் போகும்போது நான் கத்தினேன். ‘இதெல்லாம் மொதல்லயே நீ யோசிச்சிருக்கணும். கை நீட்டத் தெரியுதுல்ல?’ என்றேன். அத்தை கடுப்போடு சொன்னாள், ‘கள்ளாட்ட இது.’ மாமா சொன்னார், ‘போடுதியா? ஓடுதியா?’ அத்தை மௌனமாக உட்கார்ந்திருந்தாள். தோல்வி என்று இதை அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மாமா நீண்ட காலப் பழியைத் தீர்த்துவிட்ட பெருமிதத்தில் இருந்தார். நான் அமைதியாக இருந்தேன். அத்தை தாயக்கட்டையை இடது கையில் உருட்டினாள். ஏழு விழுந்தது.

அந்த அறையை விட்டு அலறிக்கொண்டே நான் வெளியே ஓடினேன். அத்தை அடித்த அடியில் மாமா நிச்சயம் மீண்டும் செத்திருப்பார். அதன்பின்பு அத்தையின் தொல்லை இல்லை. மாமாதான் என்னிடம் பேசவேண்டும் என்று துடியாய்த் துடித்தார். நான் பிடிகொடுக்கவே இல்லை. ஒரே ஒரு தடவை என்று கெஞ்சியதால் சம்மதித்தேன். ஒன்று மட்டும் சொன்னார். ‘மருமவனே, அத்தை கல்யாணம் ஆகி வந்தப்ப வாயில்லாப் பூச்சியாத்தாண்டா இருந்தா.’

Share

இரண்டு தோட்டாக்கள்

ஒரு இரவு மட்டும் துப்பாக்கி கிடைக்கும். போலிஸின் துப்பாக்கி. குண்டுகள் தனியே தரப்படும். யாரைச் சொல்கிறார்களோ அவர்களைக் கொலை செய்யவேண்டும். மீதி குண்டுகளையும் துப்பாக்கியையும் ஒழுங்காக போலிஸிடம் கொடுத்துவிடவேண்டும். மற்றதை எல்லாம் போலிஸ் பார்த்துக் கொள்ளும். எளிய வேலை. தல குணாதான் நம்பர் 1 ஆள். நம்பகமானவன். அடுத்து டமால் குமார். அன்று ஒரு துப்பாக்கியும் இரண்டு குண்டுகளும் தல குணாவுக்குத் தரப்பட்டன. ஆனால் பட்சி பறந்துவிட்டது. போலிஸுக்குச் சொல்லிவிட்டு துப்பாக்கியுடன் குடிக்கப் போனான். அங்கே டமால் குமார் குடித்துக்கொண்டிருந்தான். இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். பேசத் தொடங்கினார்கள். போதையில் குமார் புலம்பத் தொடங்கினான். ஒரே ஒப்பாரி. கோபம். காறி காறித் துப்பினான்.

‘பொம்பளைங்கள நம்பக்கூடாதுரா குணா. நல்லா தெரியும் குணா, அவளுக்கு இன்னொருத்தன் கூட தொடர்பு இருக்குன்னு. ஒவ்வொரு நாளும் துப்பாக்கியோட அவள போட்ரணும்னுதான் போவேன். ஆனா முடில. நெஜமா லவ் பண்ணேன் குணா அவள. துரோகம் பண்ணிட்டா.. இன்னைக்கி விட மாட்டேன். இன்னையோட முடிஞ்சது அவ கதை. அவ கண்ணை பாத்தாலே எனக்கு பத்திக்கிட்டு எரியுது. ஒண்ணுமே நடக்காத மாதிரி அப்படியே அவ விரலால என் உடம்பெல்லாம் வருடுவா பாரு. ச்சை தூ.. ஒரு மாச போராட்டம் இன்னைக்கு முடியப் போகுது குணா.. இன்னைக்கு போடறேன். உன்கிட்ட பேசினதும் இன்னும் கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருக்கு. ஓத்தா.. நாளைக்கு அவ செத்தா. ஆம்பளைக்கு துரோகம் பண்ற பொம்பளைகிட்ட என்னடா கருணை?’ என்றான்.

குணா அமைதியாக இருந்தான். தன் வீட்டுக்குப் போனான். தன் மனைவியின் கண்ணைப் பார்த்தான். அவனை வருடும் விரல்களைப் பார்த்தான். அவன் உடல் பற்றிக்கொண்டு வந்தது. குமார் சொன்னது காதில் ஒலித்தது. ‘சாவுடி.’ கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டான். ஒரு குண்டில் அவள் பொத்தெனச் சரிந்தாள். அப்படியே அடங்கிப் போனாள். அவள் அருகே உட்கார்ந்து கொண்டு அழுதான். ‘எப்படி லவ் பண்ணேண்டி உன்ன.. ஙொம்மாள..’ துப்பாக்கியுடன் குமாரைப் பார்க்க ஓடினான்.

குணாவைப் பார்த்ததும் குமார் சொன்னான், “முடில தல. ரொம்ப லவ் பண்ட்டேனா.. நாம மட்டும் என்ன ஒழுங்கா சொல்லு? ஏரியால எவள‌ விட்டுவெச்சோம் சொல்லு? என்னவோ நேரம் தப்பு பண்ணிட்டா.. சொன்னா கேட்டுக்கப் போறா… ஏன் அவள போடணும்? அவனை போட்டுட்டா? என்னன்ற? எனக்காக அவனை நீயே போடு குணா. நீதான் தல போட்ற” என்றான்.

அதற்குப் பின் டமால் குமார் பேசவே இல்லை. போலிஸிடம் வெற்றுத் துப்பாக்கியை மட்டும் குணா கொடுத்தான்.

இரட்டைத் தோட்டாக்கள் கதைச் சுருக்கத்தைப் படித்து முடித்தார் தரணீதரன். சாராய பிஸினஸ். அரசியல் செல்வாக்கு. ஆள் பலம். சுற்றி எப்போதும் ரௌடிகள். திரைப்படத் தயாரிப்பாளர். தன் மேஜை ட்ராயரில் இருந்து துப்பாக்கியை எடுத்து அதில் இருக்கும் குண்டுகளை எல்லாம் அன்லோட் செய்து குப்பைக் கூடையில் போட்டார். ‘தாயோளிங்க, வீட்டுக்குள்ள இருந்து பாத்த மாதிரியே ஸ்க்ரிப்ட் எழுதுறானுங்க.. மொதல்ல இவனுங்களை போடணும்’ என்றார்.

Share

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி

சரியாக எங்கள் தெருவைத் தாண்டிப் போகும்போது எங்களுடன் நிற்கும் சூர்யா அண்ணனைத் திரும்பிப் பார்த்து வெட்கமாகப் புன்னகைத்தபடி போனாள் சாந்தி. எங்கள் எல்லாருக்குள்ளும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சூர்யா அண்ணன் மயங்கியே விழுந்துவிட்டான். எப்பல ஸ்வீட் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவனுடன் கூடப் படித்துக்கொண்டிருந்தவன் சொன்னான், ‘சீக்கிரம் ரூம் போடுல.’ சூர்யா அண்ணன் அமைதியே உருவாகச் சொன்னான், சீரியஸாகச் சொன்னான், இது தெய்வீகக் காதல்-ல என்று. மற்றவர்கள் கமுக்கமாகச் சிரிப்பதாக வெளிப்படையாகவே சிரித்தோம். அது தனக்குப் பிடிபடவில்லை என்ற ரீதியில் கமுக்கமாக இருந்தான் சூர்யா அண்ணன்.

தினம் அவள் எந்த எந்தத் தெருவில் எல்லாம் போகிறாளோ அங்கெல்லாம் போய் நின்றான் சூர்யா அண்ணன். அந்தப் பெண் யாரும் எதிர்பார்க்காத பொழுதொன்றில் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனாள். சூர்யா அண்ணன் கிறுகிறுத்துப் போய் நின்றான். எதோ ஒரு தெருவில் இருவரும் தெரியாமல் ஒருவரை ஒருவர் லேசாக உரசிக்கொண்ட போது இருவரும் மாறி மாறி ஸாரி சொல்லிக்கொண்டார்கள்.

‘எவ்ளோ நாள் பாத்துக்கிட்டே இருப்ப, பேசுல’ என்றான் இன்னொரு அண்ணன். உங்களுக்குப் புரியாது, இது தெய்வீகக் காதல் என்றான் சூர்யா அண்ணன். ‘அவ அமைதி என்னைய கொல்லுதுல.. இதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும். எல்லாம் வாய தொறந்து பேசினாத்தானா?’ என்றான். ‘எத்தன நாளைக்கி..’ என்று தொடங்கிய இன்னொரு அண்ணனை அனைவரும் சேர்த்து வாயைப் பொத்தினோம்.

சூர்யா அண்ணன் தன் நண்பர்களிடம் ஒரு உதவி கேட்டான். தன்னிடம் பைக் இல்லாததால் பைக் இருக்கும் ஒருவன் வந்து காலை ஒன்பது மணிக்கு அவனை பிக் அப் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்ய முடிந்தால் அவளை பாளை பஸ் ஸ்டாண்டில் இன்னொரு தடவை பார்க்கலாம். உடனே ஒருத்தன் தான் டிரைவர் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டான்.

அவன் ஒன்பது மணிக்கு வரும் முன்னரே இன்னொருத்தன் எட்டு மணிக்கு சூர்யா அண்ணன் வீட்டில் வந்து ஹாரன் அடித்தான். ‘ஒம்பது மணிக்கு அவன் வாரேன்னான்.. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.. நீ எதுக்குல இப்பமே வந்த?’ என்ற சூர்யா அண்ணனிடம் அவன் சொன்னான், ‘நீ வால சொல்லுதேன்’ என்று இழுத்துக்கொண்டு போனான்.

பழைய பேட்டையின் ஒரு திருப்பத்தில் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்ஸில் ஃபுட் போர்டில் தொங்கியபடி, துப்பாட்டாவை தலையில் முண்டாசு போல கட்டி, கூலிங் க்ளாஸ் போட்டு, பாட்டம் பேண்ட்டை பாதி காலுக்குச் சுருட்டி, விசில் அடித்தபடி, முன்னே போகும் சைக்கிளில் இருக்கும் ஒரு பையனை, பஸ்ஸில் இருந்தவாறே சாந்தி தட்ட, அந்தப் பையன் தட்டுத் தடுமாறி முன்னே போய் விழுந்தான். உடனே அவள் விசில் அடித்துக் குதித்தாள். புதிய சாந்தியைப் பார்த்து சூர்யா அண்ணன் எச்சில் விழுங்கிக் கொண்டிருக்கும்போது, அவனைக் கூட்டிக்கொண்டு போன அண்ணன் சொன்னான், ‘சரியா ஒம்பது மணிக்கு பாளை பஸ் ஸ்டாண்டுக்கு வேற மாதிரி வருவா. போகணுமா?’

Share

பாம்பான பூனையின் தத்துவ விசாரம்

அந்தப் பூனை குறுக்கே போனது. குறுக்கே போனதும் அந்த மனிதன் செத்துப் போவான் என்று பூனை நினைத்தது. ஆனால் பூனை செத்துப் போய்விட்டது. எப்படி இது சாத்தியம் என்று நினைப்பதற்குள் பூனை செத்துப் போய்விட்டதால் எப்படி இது சாத்தியமானது என்று அதனால் யோசிக்கவே முடியவில்லை.

பூனையின் ஆத்மா யமலோகம் போனது. அங்கே சித்திர குப்தன் பூனைக்கு மறுபிறப்பு உண்டு என்று சொல்லி பாம்பாக அதை மீண்டும் பூமிக்கு அனுப்பி வைத்தான். பாம்பாக மாறிய பூனை குஷியாகிவிட்டது. எப்படியாவது அந்த மனிதனை போட்டே தீரவேண்டும் என்று வன்மம் கொண்டது.

பாம்புகளோடு பாம்புகளாக இந்தப் பாம்பு கடும் கோபத்தோடும் சீற்றத்தோடும் திரிந்தது. மனிதர்கள் ஏனோ அதற்கு வித்தியாசமாகப் பட்டார்கள். ஆனாலும் பாம்பு சீற்றத்துடன் இருந்தது. முந்தைய ஜென்மத்து மனிதனை மட்டும் அது மறக்கவில்லை. இந்தப் பூனைக்கு இது எப்படி இன்னும் நினைவிருக்கிறது என்று சித்திர குப்தன் தலையைச் சொறிந்தாலும், யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லாமல் மறைத்துவிட்டான்.

தன்னைவிட இன்னொரு பாம்பு அதிகம் சீறுவதைப் பார்த்தது பாம்பு. உடனே அதை நண்பனாக்கிக் கொண்டது. இப்படியே எல்லாப் பாம்புகளும் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒரே போடாகப் போட்டுவிட்டு.. இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே எதோ ஒரு மனிதக் கை அந்த இன்னொரு பாம்பை அப்படியே தூக்கியது. மறு நொடியில் அந்த இன்னொரு பாம்பு கொதிக்கும் எண்ணெய்ச் செட்டியில் பொறிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இதைப் பார்த்ததும் நம் பாம்பு பயந்து போய்விட்டது. என்னடா இது கொடுமை என்று கடுப்பாகி நுனி வாலில் நான்கு நாள்கள் அசையாமல் நின்று தற்கொலை செய்துகொண்டது. மீண்டும் யமலோகம் போனது.

யமன் அந்தப் பாம்பின் அடுத்த பிறவி என்ன என்று சித்திர குப்தனிடம் பேசியபோது, “மறு பிறப்பில் என்னை ஏன் எங்கோ கொண்டு போய் போட்டீர்கள்?” என்றது பாம்பு. யமன் ஆச்சரியப்பட்டார். எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது, இல்லையென்றால் இதெல்லாம் எப்படி பாம்புக்கு நினைவிருக்கும் என்று யோசித்தார். தவறுக்குப் பிராயசித்தம் செய்வது போல் அன்பாகப் பேசினார்.

தன் இஷ்டப்படி தான் பிறக்கவேண்டும் என்று பாம்பு எகிறியது. யமன் பாம்புக்கு ஒரு சலுகை தந்தார். இதுவரை நிகழ்ந்த அத்தனை மனிதப் பிறப்பு, மற்ற எல்லா ஜீவராசிகளின் பிறப்பையும் அந்தப் பாம்பின் ஆத்மா ஒரு நொடிக்குள் வாழ்ந்து கொள்ளலாம் என்று சொன்னார். ஒரே நொடியில் அத்தனை காலத்தையும் அது வாழ்ந்து பார்த்து, அதற்குப் பிடித்தமான பிறப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யமன் உறுதி அளித்தார்.

ஒரு நொடி நிகழ்ந்தது. பாம்பு ஆணாக, பெண்ணாக, நாயாக, பூனையாக, செடியாக, கொடியாக, தாசியாக, வேசியாக, நல்லவனாக, கெட்டவனாக, புழுவாக, பூச்சியாக வாழ்ந்து பார்த்தது. தான் குறுக்கே போன மனிதனாகவும் வாழ்ந்து பார்த்தது. அப்போது மீண்டும் பூனையாகி மீண்டும் செத்துப் போனது. ஒரு நொடி முடிந்து போனது.

யமன் சொன்னார், “நன்றாக யோசித்துச் சொல் பாம்பே. இது எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு. பேரதிர்ஷ்டம்.”

பாம்பு சொன்னது, “நான் அதே இடத்தில் மீண்டும் பாம்பாகவே பிறந்துகொள்கிறேன்.”

Share

டயக்னோசிஸ்

மருத்துவமனையில் நல்ல கூட்டம். வெளியில் டாக்டருக்கு நல்ல கூட்டம் காத்திருந்தது. நர்ஸுகள் அங்கேயும் இங்கேயும் அலைபாய்ந்துகொண்டிருந்தார்கள்.

அறைக்குள்ளே டாக்டர் சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். இருந்தார் என்று சொல்வதைவிட இருந்தான் என்றே சொல்லவேண்டும். அத்தனை சின்ன பையன். கண்ணாடி இல்லை. வெள்ளை ஓவர் கோட் இல்லை. சிவப்பு நிறத்தில் சுருள் முடியுடன். கட்டம் போட்ட சட்டையை இன் செய்து, நன்கு அயர்ன் செய்யப்பட்ட பேண்ட்டுடன், எதிரில் அமர்ந்திருக்கும் மனிதரின் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவருக்கு வயது ஐம்பது இருக்கலாம். தலையில் ஒரு முடி கூட இல்லை. படபடவெனப் பேசினார்.

“ஒரே தொல்லை சார். ஒரு வயசுக்கு மேல போன்னு விட வேண்டாமா? ஆனா பெட்ரூமுக்குள்ள வரமாட்டார் சார். எதுவா இருந்தாலும் ஹால்லதான். நேத்து என்ன நைட் உன் ரூம்ல வளையல் சத்தம்னு கேப்பாரு சார். எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க! அப்பாவா சார் அவன்? ஒரு அளவில்லையா சார்? ஆனா என் பொண்டாட்டி கண்டுக்கிறதில்லை சார். அப்படி ஒரு ஜீவன் இல்லாத மாதிரியே நடந்துக்குவா. ஒவ்வொரு சமயம் கோவம் வரும். ஒவ்வொரு சமயம் அதுவும் நல்லதுக்குத்தான்னு தோணும் சார். நேத்து நைட் நடு ராத்திரில கதவ தட்றாரு சார். பெட்ரூம் கதவை. திறந்தா சும்மான்னு சொல்றார். என்னமோ ஆயிடுச்சு, டாக்டர்கிட்ட வான்னா, வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாரு சார். என்ன பண்றதுன்னு தெரியல. எதுனா மருந்து கொடுங்க சார்.”

டாக்டர் சிரித்தார். “அப்படில்லாம் குடுக்க முடியாதுங்க. அவரை எப்படியாச்சும் கூட்டிட்டு வாங்க. பாத்துக்கலாம்.”

டக்கென நர்ஸ் கதவைத் திறந்து பார்த்தாள். சத்தம் வராமல் மூடிவிட்டுப் போனாள்.

டாக்டர் தொடர்ந்தார். “வயசான காலத்துல என்னவோ குழப்பம். ஈஸியா சரி பண்ணிடலாம்” என்றார். வந்தவர் அரை மனதாக எழுந்து போனார்.

அவர் போன வேகத்தில் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். டாக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது. டாக்டர் பேசும் முன் வந்தவள் சொன்னாள், “இப்ப வந்தாரே, அந்த ஆளோட பொண்டாட்டி சார் நானு.” அவளை அமரச் சொல்லி டாக்டர் கை காட்டினார். அவள் உட்கார்ந்தபடியே சொன்னாள், “ஒரே ரோதனை சார்.”

டாக்டர் சொன்னார், “ஆமா.. அவரும் சொன்னாரு. நீங்க..”

“சார், ரோதனை இந்தாளோட அப்பாவால இல்ல. அந்த ஆள் செத்து இருபது வருஷம் ஆச்சு. ரோதனை இந்தாளாலதான். அப்பா கூப்பிடறாரு அப்பா கூப்பிடறான்னு எப்ப பாரு..” என்றாள்.

டாக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

திடீரென நர்ஸ் கதவைத் திறந்து பார்த்தாள். எதோ யோசனை வந்தவள் போல கதவை மூடிவிட்டுப் போனாள்.

டாக்டர் அமைதியாக இருந்தார். வந்தவளும் அமைதியாக இருந்தாள். மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் எழுந்து போனாள். டாக்டர் அவளைக் கூப்பிடவில்லை.

மீண்டும் கதவைத் திறந்து நர்ஸ் வந்து நின்றாள். டாக்டரின் கண்கள் அவளையே பார்த்தன. முன்பொருநாள் இதே அறையில், தான் உட்கார்ந்திருக்கும் சேரில் அவளைத் தள்ளி ஆவேசமாகக் கைகள் பரபரக்க எங்கும் பரவி.. டாக்டரின் முகம் வாடிப் போய் இருந்தது.

நர்ஸ் பின்னால் திரும்பிப் பார்த்தாள். கதவு மூடி இருந்தது. சேருக்கு நெருங்கி வந்து நின்று ஒரு நொடி சேரையே பார்த்தாள். சேரை கொஞ்சம் வாகாக இழுத்துப் போட்டு அதில் அமர்ந்தாள். அப்படியே சாய்ந்துகொண்டாள். அவள் கண்களில் ஒரு சொட்டு நீர் அரும்பி நின்றது.

Share

தோழரின் திருமணம்

கூடவேதான் வளர்ந்தான். ஒன்றாகத்தான் படித்தோம். பெங்களூருவுக்கு வேலைக்குப் போய் திரும்பி வந்தவன் சம்பந்தமே இல்லாமல் தோழர் என்று அழைக்க ஆரம்பித்தான். ஏல போல வால எல்லாம் காணாமல் போனது. என்னவோ விட்டுப் போனது போல் ஒரு எண்ணம் வந்துவிட்டது. பின்னர் எனக்குத் திருமணம். அவனுக்குப் பெண் பார்த்தார்கள், பார்த்தார்கள், ஜாதகம் பொருந்தவே இல்லை. அவனது அப்பா பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு நாமம் தரித்துக்கொண்டு ஸ்லோகங்கள் சொல்லியபடி தெருவில் நடந்து போகும்போது இவன் வீட்டு மாடியில் லுங்கி கட்டிக்கொண்டு கம்யூனிஸப் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பான். நெற்றியில் வைப்பதை முதலில் கைவிட்டவன், பின்னர் சாமி கும்பிடுவதையும் விட்டுவிட்டான். அவன் வீட்டில் யாரும் இதை ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது.

அவன் பொதுவாகவே தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். கடவுள் இல்லை என்றோ பெண்ணடிமை அது இது என்றோ எதுவும் யாரிடமும் சொல்லமாட்டான். தன் கருத்துகளைத் தன்னளவில் வைத்துக்கொள்வான். இது ஒரு நிம்மதி. நாமாகப் பேசினால் விடமாட்டான். பிராமணீயம், பார்ப்பனீயம், சாதிய அடுக்குகள், வர்ணப் பாகுபாடுகள், வர்க்க வேறுபாடுகள் என்று என்னவெல்லாமோ சொல்வான். மற்றவர்கள் சொல்வதைக் கேட்கவே மாட்டான் என்பதால், அவன் சொல்வதில் மட்டுமே அவனுக்கு கவனம் இருக்கும். இனியும் இவனிடம் பேசுவது வெட்டி என்று உணர்ந்துகொண்ட நான் அவனிடம் இந்த டாபிக் பற்றியெல்லாம் வாயே திறக்கமாட்டேன்.

வாழ்க்கை ஓட்டத்தில் எப்போதாவது ஒரு முறை ஹாய் சொல்வது என்று எங்கள் நட்பு சுருங்கிப் போனது. அவனுக்குப் பெண் மட்டும் கிடைக்கவே இல்லை. அதனால் மார்க்ஸ் லெனினைவிட அதிகமாக கம்யூனிஸப் புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டான். இனி அவனே எழுதினால்தான் உண்டு என்ற நிலை கூட வந்தது. ஆனால் கல்யாணம் மட்டும் ஆகவில்லை. வீட்டில் விடாமல் பெண் பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் ஜாதகம் பார்க்கவேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அப்போது அவனுக்கு வயது 40 ஆகி இருந்தது.

ஒருநாள் திடீரென்று வீட்டுக்கு வந்தான். பத்து நாள்ல கல்யாணம்ல என்றான். ஆச்சரியமாக இருந்தது. தோழர் என்ன சொல்றீங்க என்றேன். முறைத்தான். கல்யாணம் பெங்களூருவில். வந்து சேரச் சொல்லிப் போய்விட்டான். பேச நேரமில்லை என்று சொல்லிவிட்டுப் போனான். பத்திரிகையை இமெயிலில் அனுப்பினான். என்ன இருந்தாலும் சின்ன வயது நட்பு என்று ஒரு நாள் முன்னரே பெங்களூருவுக்குக் குடும்பத்துடன் போனோம். கோட் சூட்டில் கையில் பூச்செண்டுடன் நின்றிருந்தான். ஆளே மாறிப் போய் இருந்தான். அவனைத் தொட்டுக்கொண்டு பெண் புன்னகையுடன் நின்றிருந்தாள். வாய் நிறையச் சிரிப்பு.

அவன் என்னை அருகில் அழைத்து என் காதில் சொன்னான், “பெண் ஏன் அடிமையானாள் கிஃப்ட் கொடுத்தேன்.” அவன் எப்பவோ வாங்கி வைத்த புத்தகம் அது. பெண் கிடைக்கத்தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. எரிச்சலுடன் புன்னகைத்தேன். என்னை இழுத்துப் பிடித்து அவளிடம் அறிமுகம் செய்து வைத்தான். என் பெயரைக் கேட்டதும் அந்தப் பெண் கூவும் குரலில் அவனிடமும் என்னிடமுமாகச் சொன்னாள். “பெருமாளே.. ஸொல்லிண்டே இருப்பேளே, இவரா? நன்னாருக்கேளில்லியோ? ஸாப்ட்டேளா?” நிஜமாகவே புன்னகைத்தேன்.

Share

வெட்டுக் கிளிகள்

‘தம்பி, திடீர்னு வெட்டுக் கிளிகளா வருதுன்னா அது சும்மா இல்லை’ என்றார் அந்தப் பெரியவர். டீக்கடையில் ஏதோ சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன. அதையும் மீறி அவர் என்னிடம் பேசினார். ஏன் என்னைத் தேடி வந்து பேசுகிறார் என்பது புரியவில்லை. கையில் ஒரு மஞ்சள் பை வைத்திருந்தார். நடுத்தர வயது. நெற்றியில் சுருக்கங்கள் தெரிந்தன. காப்பி கலரில் ஒரு வேட்டி அணிந்திருந்தார். வெளுத்துப் போய் சுருக்கங்களுடன் இருந்த வேட்டி முழுங்காலுக்கு மேல் சுருண்டு கிடந்தது. நான் ஆர்வம் இல்லாமல் அவரைப் பார்த்தேன்.

‘திடீர்னு வெட்டுக் கிளிங்க இருந்திருந்தாப்ல எங்கேர்ந்து வரும்?’ என்றவர் சொன்னார், ‘எல்லாம் நம்மவங்க ஆத்மா தம்பி. ஆத்மா. உங்களுக்கு நம்பிக்கை உண்டா இல்லையான்னு தெரியல. ஆனா எனக்கு சந்தேகமே இல்ல, ஆத்மா’ என்றவர், டீக்காரரிடம் தனக்கு ஒரு டீ சொல்லிக்கொண்டார். ‘எல்லா ஆத்மாவும் வெட்டுக் கிளிங்களா வந்திருக்கு தம்பி. அதுவே புலியாவோ சிங்கமாவோ வந்திருந்தா? யோசிக்கவே திக்குன்னு இருக்குல்ல? அதுதான் தம்பி, பாவத்துலயும் கொஞ்சம் புண்ணியம் பண்ணிருக்கோம்ன்றேன். இப்பல்லாம் யாரு தாத்தா பாட்டிய நினைக்கிறா, அம்மா அப்பாவை நினைக்கிறா? ஒரு தவசம் இல்லை, பிண்டம் இல்ல. எதுக்கு ஓடறோம்னு தெரியாம ஓடறோம். அதான் தம்பி எல்லா ஆத்மாவும் ஒண்ணா கிளம்பி வந்திருக்குங்க. ஒரு பக்கம் கோவம், ஒரு பக்கம் சோகம் அதுங்களுக்கு’ என்றவர் என்னையே பார்த்தார். என்னைத் தேடி வந்து ஏன் பேய்க்கதை சொல்கிறார் என்ற ஆச்சரியத்தில் இருந்து நான் விடுபடவில்லை. தன் மஞ்சள் பையைத் திறந்து அதிலிருந்து மண்ணாலான வெட்டுக் கிளியை எடுத்தார். என் கண் முன் நீட்டியவாறே, ‘இதை எடுத்துட்டுப் போய் வீட்ல தண்ணில கரைங்க தம்பி. உங்க வீட்ல இருக்கிற ஆத்மா அமைதியாகட்டும். பணமெல்லாம் நீங்க ஒரு பைசா தரவேண்டியதில்லை’ என்றார். நான் சிரித்துக்கொண்டே வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலகிப் போனேன்.

*

வாட்ஸப்பில் வந்த செய்தியைப் படித்துவிட்டு அத்தை என்னிடம் கேட்டாள், ‘எங்கடா கிடைக்கும் இந்த களிமண் வெட்டுக்கிளி?’

Share