தோழரின் திருமணம்

கூடவேதான் வளர்ந்தான். ஒன்றாகத்தான் படித்தோம். பெங்களூருவுக்கு வேலைக்குப் போய் திரும்பி வந்தவன் சம்பந்தமே இல்லாமல் தோழர் என்று அழைக்க ஆரம்பித்தான். ஏல போல வால எல்லாம் காணாமல் போனது. என்னவோ விட்டுப் போனது போல் ஒரு எண்ணம் வந்துவிட்டது. பின்னர் எனக்குத் திருமணம். அவனுக்குப் பெண் பார்த்தார்கள், பார்த்தார்கள், ஜாதகம் பொருந்தவே இல்லை. அவனது அப்பா பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு நாமம் தரித்துக்கொண்டு ஸ்லோகங்கள் சொல்லியபடி தெருவில் நடந்து போகும்போது இவன் வீட்டு மாடியில் லுங்கி கட்டிக்கொண்டு கம்யூனிஸப் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பான். நெற்றியில் வைப்பதை முதலில் கைவிட்டவன், பின்னர் சாமி கும்பிடுவதையும் விட்டுவிட்டான். அவன் வீட்டில் யாரும் இதை ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது.

அவன் பொதுவாகவே தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். கடவுள் இல்லை என்றோ பெண்ணடிமை அது இது என்றோ எதுவும் யாரிடமும் சொல்லமாட்டான். தன் கருத்துகளைத் தன்னளவில் வைத்துக்கொள்வான். இது ஒரு நிம்மதி. நாமாகப் பேசினால் விடமாட்டான். பிராமணீயம், பார்ப்பனீயம், சாதிய அடுக்குகள், வர்ணப் பாகுபாடுகள், வர்க்க வேறுபாடுகள் என்று என்னவெல்லாமோ சொல்வான். மற்றவர்கள் சொல்வதைக் கேட்கவே மாட்டான் என்பதால், அவன் சொல்வதில் மட்டுமே அவனுக்கு கவனம் இருக்கும். இனியும் இவனிடம் பேசுவது வெட்டி என்று உணர்ந்துகொண்ட நான் அவனிடம் இந்த டாபிக் பற்றியெல்லாம் வாயே திறக்கமாட்டேன்.

வாழ்க்கை ஓட்டத்தில் எப்போதாவது ஒரு முறை ஹாய் சொல்வது என்று எங்கள் நட்பு சுருங்கிப் போனது. அவனுக்குப் பெண் மட்டும் கிடைக்கவே இல்லை. அதனால் மார்க்ஸ் லெனினைவிட அதிகமாக கம்யூனிஸப் புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டான். இனி அவனே எழுதினால்தான் உண்டு என்ற நிலை கூட வந்தது. ஆனால் கல்யாணம் மட்டும் ஆகவில்லை. வீட்டில் விடாமல் பெண் பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் ஜாதகம் பார்க்கவேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அப்போது அவனுக்கு வயது 40 ஆகி இருந்தது.

ஒருநாள் திடீரென்று வீட்டுக்கு வந்தான். பத்து நாள்ல கல்யாணம்ல என்றான். ஆச்சரியமாக இருந்தது. தோழர் என்ன சொல்றீங்க என்றேன். முறைத்தான். கல்யாணம் பெங்களூருவில். வந்து சேரச் சொல்லிப் போய்விட்டான். பேச நேரமில்லை என்று சொல்லிவிட்டுப் போனான். பத்திரிகையை இமெயிலில் அனுப்பினான். என்ன இருந்தாலும் சின்ன வயது நட்பு என்று ஒரு நாள் முன்னரே பெங்களூருவுக்குக் குடும்பத்துடன் போனோம். கோட் சூட்டில் கையில் பூச்செண்டுடன் நின்றிருந்தான். ஆளே மாறிப் போய் இருந்தான். அவனைத் தொட்டுக்கொண்டு பெண் புன்னகையுடன் நின்றிருந்தாள். வாய் நிறையச் சிரிப்பு.

அவன் என்னை அருகில் அழைத்து என் காதில் சொன்னான், “பெண் ஏன் அடிமையானாள் கிஃப்ட் கொடுத்தேன்.” அவன் எப்பவோ வாங்கி வைத்த புத்தகம் அது. பெண் கிடைக்கத்தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. எரிச்சலுடன் புன்னகைத்தேன். என்னை இழுத்துப் பிடித்து அவளிடம் அறிமுகம் செய்து வைத்தான். என் பெயரைக் கேட்டதும் அந்தப் பெண் கூவும் குரலில் அவனிடமும் என்னிடமுமாகச் சொன்னாள். “பெருமாளே.. ஸொல்லிண்டே இருப்பேளே, இவரா? நன்னாருக்கேளில்லியோ? ஸாப்ட்டேளா?” நிஜமாகவே புன்னகைத்தேன்.

Share

Comments Closed