சரியாக எங்கள் தெருவைத் தாண்டிப் போகும்போது எங்களுடன் நிற்கும் சூர்யா அண்ணனைத் திரும்பிப் பார்த்து வெட்கமாகப் புன்னகைத்தபடி போனாள் சாந்தி. எங்கள் எல்லாருக்குள்ளும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சூர்யா அண்ணன் மயங்கியே விழுந்துவிட்டான். எப்பல ஸ்வீட் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவனுடன் கூடப் படித்துக்கொண்டிருந்தவன் சொன்னான், ‘சீக்கிரம் ரூம் போடுல.’ சூர்யா அண்ணன் அமைதியே உருவாகச் சொன்னான், சீரியஸாகச் சொன்னான், இது தெய்வீகக் காதல்-ல என்று. மற்றவர்கள் கமுக்கமாகச் சிரிப்பதாக வெளிப்படையாகவே சிரித்தோம். அது தனக்குப் பிடிபடவில்லை என்ற ரீதியில் கமுக்கமாக இருந்தான் சூர்யா அண்ணன்.
தினம் அவள் எந்த எந்தத் தெருவில் எல்லாம் போகிறாளோ அங்கெல்லாம் போய் நின்றான் சூர்யா அண்ணன். அந்தப் பெண் யாரும் எதிர்பார்க்காத பொழுதொன்றில் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனாள். சூர்யா அண்ணன் கிறுகிறுத்துப் போய் நின்றான். எதோ ஒரு தெருவில் இருவரும் தெரியாமல் ஒருவரை ஒருவர் லேசாக உரசிக்கொண்ட போது இருவரும் மாறி மாறி ஸாரி சொல்லிக்கொண்டார்கள்.
‘எவ்ளோ நாள் பாத்துக்கிட்டே இருப்ப, பேசுல’ என்றான் இன்னொரு அண்ணன். உங்களுக்குப் புரியாது, இது தெய்வீகக் காதல் என்றான் சூர்யா அண்ணன். ‘அவ அமைதி என்னைய கொல்லுதுல.. இதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும். எல்லாம் வாய தொறந்து பேசினாத்தானா?’ என்றான். ‘எத்தன நாளைக்கி..’ என்று தொடங்கிய இன்னொரு அண்ணனை அனைவரும் சேர்த்து வாயைப் பொத்தினோம்.
சூர்யா அண்ணன் தன் நண்பர்களிடம் ஒரு உதவி கேட்டான். தன்னிடம் பைக் இல்லாததால் பைக் இருக்கும் ஒருவன் வந்து காலை ஒன்பது மணிக்கு அவனை பிக் அப் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்ய முடிந்தால் அவளை பாளை பஸ் ஸ்டாண்டில் இன்னொரு தடவை பார்க்கலாம். உடனே ஒருத்தன் தான் டிரைவர் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டான்.
அவன் ஒன்பது மணிக்கு வரும் முன்னரே இன்னொருத்தன் எட்டு மணிக்கு சூர்யா அண்ணன் வீட்டில் வந்து ஹாரன் அடித்தான். ‘ஒம்பது மணிக்கு அவன் வாரேன்னான்.. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.. நீ எதுக்குல இப்பமே வந்த?’ என்ற சூர்யா அண்ணனிடம் அவன் சொன்னான், ‘நீ வால சொல்லுதேன்’ என்று இழுத்துக்கொண்டு போனான்.
பழைய பேட்டையின் ஒரு திருப்பத்தில் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்ஸில் ஃபுட் போர்டில் தொங்கியபடி, துப்பாட்டாவை தலையில் முண்டாசு போல கட்டி, கூலிங் க்ளாஸ் போட்டு, பாட்டம் பேண்ட்டை பாதி காலுக்குச் சுருட்டி, விசில் அடித்தபடி, முன்னே போகும் சைக்கிளில் இருக்கும் ஒரு பையனை, பஸ்ஸில் இருந்தவாறே சாந்தி தட்ட, அந்தப் பையன் தட்டுத் தடுமாறி முன்னே போய் விழுந்தான். உடனே அவள் விசில் அடித்துக் குதித்தாள். புதிய சாந்தியைப் பார்த்து சூர்யா அண்ணன் எச்சில் விழுங்கிக் கொண்டிருக்கும்போது, அவனைக் கூட்டிக்கொண்டு போன அண்ணன் சொன்னான், ‘சரியா ஒம்பது மணிக்கு பாளை பஸ் ஸ்டாண்டுக்கு வேற மாதிரி வருவா. போகணுமா?’