பாம்பான பூனையின் தத்துவ விசாரம்

அந்தப் பூனை குறுக்கே போனது. குறுக்கே போனதும் அந்த மனிதன் செத்துப் போவான் என்று பூனை நினைத்தது. ஆனால் பூனை செத்துப் போய்விட்டது. எப்படி இது சாத்தியம் என்று நினைப்பதற்குள் பூனை செத்துப் போய்விட்டதால் எப்படி இது சாத்தியமானது என்று அதனால் யோசிக்கவே முடியவில்லை.

பூனையின் ஆத்மா யமலோகம் போனது. அங்கே சித்திர குப்தன் பூனைக்கு மறுபிறப்பு உண்டு என்று சொல்லி பாம்பாக அதை மீண்டும் பூமிக்கு அனுப்பி வைத்தான். பாம்பாக மாறிய பூனை குஷியாகிவிட்டது. எப்படியாவது அந்த மனிதனை போட்டே தீரவேண்டும் என்று வன்மம் கொண்டது.

பாம்புகளோடு பாம்புகளாக இந்தப் பாம்பு கடும் கோபத்தோடும் சீற்றத்தோடும் திரிந்தது. மனிதர்கள் ஏனோ அதற்கு வித்தியாசமாகப் பட்டார்கள். ஆனாலும் பாம்பு சீற்றத்துடன் இருந்தது. முந்தைய ஜென்மத்து மனிதனை மட்டும் அது மறக்கவில்லை. இந்தப் பூனைக்கு இது எப்படி இன்னும் நினைவிருக்கிறது என்று சித்திர குப்தன் தலையைச் சொறிந்தாலும், யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லாமல் மறைத்துவிட்டான்.

தன்னைவிட இன்னொரு பாம்பு அதிகம் சீறுவதைப் பார்த்தது பாம்பு. உடனே அதை நண்பனாக்கிக் கொண்டது. இப்படியே எல்லாப் பாம்புகளும் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒரே போடாகப் போட்டுவிட்டு.. இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே எதோ ஒரு மனிதக் கை அந்த இன்னொரு பாம்பை அப்படியே தூக்கியது. மறு நொடியில் அந்த இன்னொரு பாம்பு கொதிக்கும் எண்ணெய்ச் செட்டியில் பொறிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இதைப் பார்த்ததும் நம் பாம்பு பயந்து போய்விட்டது. என்னடா இது கொடுமை என்று கடுப்பாகி நுனி வாலில் நான்கு நாள்கள் அசையாமல் நின்று தற்கொலை செய்துகொண்டது. மீண்டும் யமலோகம் போனது.

யமன் அந்தப் பாம்பின் அடுத்த பிறவி என்ன என்று சித்திர குப்தனிடம் பேசியபோது, “மறு பிறப்பில் என்னை ஏன் எங்கோ கொண்டு போய் போட்டீர்கள்?” என்றது பாம்பு. யமன் ஆச்சரியப்பட்டார். எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது, இல்லையென்றால் இதெல்லாம் எப்படி பாம்புக்கு நினைவிருக்கும் என்று யோசித்தார். தவறுக்குப் பிராயசித்தம் செய்வது போல் அன்பாகப் பேசினார்.

தன் இஷ்டப்படி தான் பிறக்கவேண்டும் என்று பாம்பு எகிறியது. யமன் பாம்புக்கு ஒரு சலுகை தந்தார். இதுவரை நிகழ்ந்த அத்தனை மனிதப் பிறப்பு, மற்ற எல்லா ஜீவராசிகளின் பிறப்பையும் அந்தப் பாம்பின் ஆத்மா ஒரு நொடிக்குள் வாழ்ந்து கொள்ளலாம் என்று சொன்னார். ஒரே நொடியில் அத்தனை காலத்தையும் அது வாழ்ந்து பார்த்து, அதற்குப் பிடித்தமான பிறப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யமன் உறுதி அளித்தார்.

ஒரு நொடி நிகழ்ந்தது. பாம்பு ஆணாக, பெண்ணாக, நாயாக, பூனையாக, செடியாக, கொடியாக, தாசியாக, வேசியாக, நல்லவனாக, கெட்டவனாக, புழுவாக, பூச்சியாக வாழ்ந்து பார்த்தது. தான் குறுக்கே போன மனிதனாகவும் வாழ்ந்து பார்த்தது. அப்போது மீண்டும் பூனையாகி மீண்டும் செத்துப் போனது. ஒரு நொடி முடிந்து போனது.

யமன் சொன்னார், “நன்றாக யோசித்துச் சொல் பாம்பே. இது எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு. பேரதிர்ஷ்டம்.”

பாம்பு சொன்னது, “நான் அதே இடத்தில் மீண்டும் பாம்பாகவே பிறந்துகொள்கிறேன்.”

Share

Comments Closed