மாய விளையாட்டு

இப்படி அத்தை வந்து என்னைப் பிடித்துக்கொள்வாள் என்று நான் நினைக்கவே இல்லை. எதோ ஆவி விளையாட்டு, ஆவியுடன் பேசலாம் என்று ஆரம்பிக்கப் போய், நான் பார்த்தே இராத, நான் பிறப்பதற்கு முன்பே செத்துப் போய்விட்ட என் அத்தை வந்து என்னைப் பிடித்துக்கொண்டாள். மனைவி பிரசவத்துக்காக ஊர் போயிருந்த நேரத்தில் அத்தை தினம் தினம் வந்து அன்பாக மிரட்டுவாள், ‘தாயம் விளையாட வா.’

செத்துப் போன அத்தையின் மாமாவை நன்றாகத் தெரியும். அவர் அத்தையின் துராங்காரத்தைப் பற்றிப் பல தடவை சொல்லி இருக்கிறார். இப்போது அத்தை பேயாகவும் ஆகிவிட்டதால் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. தினமும் இரவு பத்து மணிக்கு அத்தையுடன் தாயம் விளையாடவேண்டும். மூன்று மாதமாக இந்தக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. யார் வீட்டில் என்ன நடந்தாலும் அத்தைக்குக் கவலை இல்லை. இனி முடியாது என்று மெல்ல அத்தையிடம் சொன்னபோது அவளது நிஜ முகத்தைக் காட்டினாள். பயந்து போய்விட்டேன். செத்துப் போன அம்மாவைப் பிடித்து, ‘இது என்னம்மா அத்தை இப்படி படுத்துது?’ என்று கேட்டேன், ‘அவளை ஒண்ணும் பண்ண முடியாதுடா… தாயம்தான விளையாடச் சொல்றா? விளையாடு’ என்று சொல்லிவிட்டாள்.

தாயக்கட்டை ஆட்டத்தில் எனக்குத் தெரியாததே இல்லை என்றாகிவிட்டது. தாயம், பன்னிரண்டு, ஆறு, ஈரஞ்சு, மூணு என்றால் ஒரு காய் எந்தக் கட்டத்தில் இருந்து எங்கே போகும் என்பதை அத்தைப் பேய் சொல்வதற்கு முன்பாக நான் சொல்லிவிடுவேன். தனக்கு நிகராக தாயம் ஆடத் தெரிந்த ஒரே ஆள் நான்தான் என்று அத்தைப் பேய் பாராட்டினாள்.

ஒரு கட்டத்தில் ஆட்டம் சலித்துப் போனது. எரிச்சலாக வந்தது. விடுபடவும் வழி தெரியவில்லை. அம்மா வந்து ‘மாமாவை கேட்டுப் பாருடா’ என்று சொல்லிவிட்டுப் போனாள். மாமா செத்துப் போய் பத்து வருடம் இருக்கும். எப்படியோ மாமாவைப் பிடித்தேன். பாசமாகப் பேசினார். முதலில் ‘நீ வேணா அத்தைகிட்ட உன் பொண்டாட்டிய பேசச் சொல்லி பாரேன்’ என்றார். ‘ஐயோ.. மாசமா இருக்கா.. வாயில்லாப் பூச்சி மாமா’ என்றேன். அத்தைப் பேயின் தாய விளையாட்டு அட்டகாசத்தைச் சொல்லவும், தான் உதவுவதாகச் சொன்னார். கொஞ்சம் பயந்துகொண்டேதான் சொன்னார்.

மாமா பேயை அத்தைப் பேய் எதிர்பார்க்கவில்லை. மாமாவைப் பார்த்ததும் அத்தையின் முகம் மாறிப் போனது. உக்கிரமானது. ‘உன்னை யார் வரச் சொன்னா?’ என்றாள். ‘நீயெல்லாம் ஒரு பொம்பளையா? மருமவன ஏன் இந்தப் பாடு படுத்துத?’ என்று கேட்ட மறு நொடி, மாமாவின் செவுளிலேயே அத்தை விட்ட அறையைப் பார்த்ததும் என் அடி வயிறு கலங்கிப் போனது. மாமா அவமானத்துடன் உட்கார்ந்திருந்தார். மெல்ல சமாளித்துக்கொண்டு, ‘எனக்கும் அடிக்கத் தெரியும். ஆனா வேண்டாம்னு பாக்கேன். தாயம் தாயம்னு அவன போட்டு உசிர எடுக்கியே.. என் கூட ஆடி ஜெயிச்சு காட்டு பாப்பம்’ என்றார். அத்தை வீடதிரச் சிரித்தாள்.

மாமா முதலிலேயே என்னிடம் சொல்லிவைத்த திட்டம்தான் அது. அத்தை வீராவேசமாக ஒப்புக்கொண்டாள். மாமா பத்து எண்களைச் சொல்வாள். அத்தை சரியாக அதை வீசவேண்டும். வீசிவிட்டால் மாமா தோற்றார். இல்லையென்றால் அத்தை தோற்றுவிட்டாள்.

மாமா சொல்ல ஆரம்பித்தார். ‘தாயம்.’ சரியாகத் தாயம் விழுந்தது. அத்தை சிரிக்கவே இல்லை. மாமா அடுத்து சொன்னார், ‘ஈரஞ்சு.’ அத்தை தாயத்தை இடதுகையில் உருட்டினாள். விழுந்தது. ‘பன்னெண்டு ஈராறு தாயம் அஞ்சு மூணு’ என்றார் மாமா. அத்தனையும் வரிசையாக விழுந்தது. அடுத்து மாமா என்னைப் பார்த்தபடியே சொன்னார், ‘ஏழு.’

அத்தை கடுப்பாகி மீண்டும் மாமாவை அறையப் போகும்போது நான் கத்தினேன். ‘இதெல்லாம் மொதல்லயே நீ யோசிச்சிருக்கணும். கை நீட்டத் தெரியுதுல்ல?’ என்றேன். அத்தை கடுப்போடு சொன்னாள், ‘கள்ளாட்ட இது.’ மாமா சொன்னார், ‘போடுதியா? ஓடுதியா?’ அத்தை மௌனமாக உட்கார்ந்திருந்தாள். தோல்வி என்று இதை அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மாமா நீண்ட காலப் பழியைத் தீர்த்துவிட்ட பெருமிதத்தில் இருந்தார். நான் அமைதியாக இருந்தேன். அத்தை தாயக்கட்டையை இடது கையில் உருட்டினாள். ஏழு விழுந்தது.

அந்த அறையை விட்டு அலறிக்கொண்டே நான் வெளியே ஓடினேன். அத்தை அடித்த அடியில் மாமா நிச்சயம் மீண்டும் செத்திருப்பார். அதன்பின்பு அத்தையின் தொல்லை இல்லை. மாமாதான் என்னிடம் பேசவேண்டும் என்று துடியாய்த் துடித்தார். நான் பிடிகொடுக்கவே இல்லை. ஒரே ஒரு தடவை என்று கெஞ்சியதால் சம்மதித்தேன். ஒன்று மட்டும் சொன்னார். ‘மருமவனே, அத்தை கல்யாணம் ஆகி வந்தப்ப வாயில்லாப் பூச்சியாத்தாண்டா இருந்தா.’

Share

Comments Closed