Archive for கவிதை

மௌனத்திலுறைந்து – கவிதை


மௌனத்தினாலான பெண்ணொருத்தியின்

உயிர்த்தழுவலுக்குப்பின் தொடர்ந்த தினங்களில்

என் விளையாட்டின் விதிகள் மாறி மாறி

குரூரமாகிப் போய்க்கொண்டேயிருக்கிறது, அவளென்னவோ

எப்போதும்போல் மௌனத்தையெல்லாம் திரட்டிஒரு சிரிப்பாக்கி.

உள்ளமுடையும் நிமிடமொன்றில்

முகம் சிவந்து

சினந்து

வெடிக்கப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கும்போது

விழுதுகள் கொண்டு அடங்கிவிட்ட

மரத்தையொத்த புன்சிரிப்பு

ஆற்றாமையின் உச்சத்தில்

பெருந்தவிப்போடு

அடுத்த விதி மீறல் பக்கத்தில் நான்,

அதையும் வெல்லும் மௌனத்தைப் பயிலும் யோகத்தில் நீ.

எல்லா மௌன மரங்களிலும்

பறவைகளேனும் சப்திக்கின்றன என்பதறிவாயா நீ

நான் வெல்லும் நீ தோற்கும்

மகிழ்ச்சியும் பயமும் புணரும் அவ்வுச்சிப்புள்ளிக்கு

செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறேன், என்றேனும்

தாங்கவொண்ணாத விளையாட்டில்

நீ வெடித்துச் சிதறும்போது

அவ்வெம்மையின் இம்மியையேனும் தாங்கும் வல்லமை தா

சக்தி அல்லது நீயேயேனும்.

Share

கிளியைப் பற்றி நான்கு கவிதைகள்

(1)

இதுவென்று இனங்காண முடியாதவாறு

உருமாறிப்போனாலும் சிரித்துக்கொண்டிருக்கிறது

அக்கிளி.

மரத்தாலான அக்கிளியை

தூர நின்று கொஞ்சிக்கொண்டிருக்கிறது

குழந்தையொன்று, கையில்

கிளியின் உடைந்த வால் உயிர்த்துடிப்புடன்.

(2)

அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட

பச்சைக்கிளியொன்று

கழுத்தின் நிறமின்றி, கண் திறப்பின்றி

ஒரு வயிறு உள்ளடங்கி

கிளியின்றி ப்ளாஸ்டிக்குடன்

·பேன் காற்றில்

அங்குமிங்கும் ட

பதுங்கிக் காத்திருக்கிறது பூனையொன்று

(3)

விர்ச்சுவல் கிளிகள் சொல்லச் சொல்லச் சொல்லுவதில்லை.

கணினித் திரையில் இணைப்பைச் சொடுக்கவும்

சிறகுகள் படபடக்கப் பறந்து

காரியம் முடிந்தவுடன் அமைதியாகின்றன;

சில சமயம் ஸ்கிரீன் ஸேவராகவும்.

(4)

வானத்தில் பறக்கிறது ஒரு நிஜக்கிளி.

-oOo-

Share

மனனமாகிப்போன சில பொழுதுகள் – கவிதை


மரச்செறிவுகளுக்குள்ளே சூரிய ஒளி வந்து வந்து

போய்க்கொண்டிருந்த ஒரு நேரத்தில்

கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஓடை நீரை

அளந்துகொண்டிருந்தேன், கொண்டிருந்தாய்.

பின்னொரு

கடற்கரை நுரைதள்ளிய நாளில்

ஒரு குமிழை ஊதிப் பெரிதாக்கி

மனதுள் வெடிக்கச் செய்துகொண்டிருந்தேன், கொண்டிருந்தாய்

பலா காய்ச்சித் தொங்கும் மரத்தடியில்

பலாவை எண்ணிக்கொண்டிருந்தோம், கிரிக்கெட் பந்து பட்டு

மரம் சப்தமிட்டு அமர்ந்தது

உதிரும் இலைகள் உதிர்ந்து அமைந்தன

நம்மைப் பற்றிய பிரக்ஞையில்லாமல்.

இரவுகளில்

இடைவெளி குறையும்போதும் கூடும்போதும்

போர்வை நுனி எழுப்பும்போதும்

வீதிகளின் நுண்சப்தங்கள்

நமக்கு மனனம்.

எதையோ இழந்து

எதையோ வாங்கிக்கொண்ட பொழுதுகளில்

மிக நுட்பமாக

சுற்றுப்புறத்தையும் அதன் தனிமையையும்

இருவரும் தனித்தனியே உள்வாங்கிக்கொண்டோம்

நீயாவது ஏதேனும் பேசியிருக்கலாமோ

என்ற கேவலுடன்.

Share

பாட்டன் மரம் – கவிதை

 

பலமாத இடைவெளிக்குப் பின்

சாப்பாட்டுத் தட்டுகள் ஒன்றாய் வைக்கப்படுகின்றன

தொடர்ந்து பரிமாறல்

ஊரில் மாவடு கிடைப்பதில்லை என்கிறான் அண்ணன்

கட்டம் போட்ட சிவப்புப் பட்டை

இஸ்திரிக்காரன் பாழாக்கியதைப் புலம்புகிறாள் அண்ணி

செல்லப்பூனை இறந்தகதை அம்மாவுக்கு, கொஞ்சம் விசும்பலோடு

மூன்றாம் வீட்டுப் பெண் ஓடிப்போன சந்தோஷம் அப்பாவுக்கு

ஐம்பது வருடங்கள் இருந்த புளியமரம் வெட்டப்பட்டு

பாட்டன் நிலம் விற்கப்பட்ட கதையைச் சொல்ல

யாருக்கும் நினைவில்லை (அல்லது துணிவில்லை)

வெந்நீர் அடுப்பில்

அப்புளியமரத்தின் புளியங்குச்சிகள்

எரிந்து சாம்பலாகும்போது

எஞ்சியிருந்த பாட்டன் மனசாட்சி

கருகிப்போகும் வகையறியாமல்

சூடாகிக்கொண்டிருக்கிறது நீர்

Share

குழந்தைமை – கவிதை

 

குதிக்கும் குரங்கு பொம்மையின்

வயிற்றை அமுக்கினால்

பீப்பீ சத்தம் வருகிறது.

பின்னிழுத்துவிட்டால் முன்னோடுகிறது கார்

கைதட்டினால் சப்தமிடுகிறது கிளி

கையிரண்டில் வாளோடு

பேட்டரியில் முன்னேறுகிறான் ரோபோ

காற்றில் மெலிதான உலோகச்சத்தம் ஏற்படுத்தி

திருஷ்டி கழிக்கிறது சீன வாஸ்து

இத்தனைக்குப் பின்னும் சிரிப்பை மறந்து

இல்லாத ஒன்றிற்காக

(எதிர்வீட்டுச் சரவணன்

சோப்பு நுரையை ஊதிக்கொண்டிருக்கிறான்)

அழுதுகொண்டேயிருக்கிறது

வீட்டுக்குழந்தை

Share

உள்ளிருப்பு – கவிதை

 
காத்திருந்த அந்த இரவில்

சுவர்க்கோழி கத்திக்கொண்டிருந்தது

பல்லி ஒன்று பிள்ளையார் படத்தின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது

கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தபோது

பெருமாள் கோவிலின் புன்னை மர இலையொன்று

சப்தமின்றி வீழ்ந்தது

காற்றில்லாத பெருமழையில் தெருவிளக்கு அணைந்தது

தெருநாய் ஒன்று தடுப்புத் தேடி அலைந்தது

ஆந்தையொன்று தந்திக்கம்பக் கம்பிகளில் அமர்ந்து

கண்கள் திறந்து பார்த்திருந்தது

கவனம் ஒருகூராக்கி

கையோடு கைகள் பிணைத்து, கழுத்தை வருடியபோது

பயந்து பறந்தது

இறக்கை அடக்கி

மூக்கில் அமர்ந்திருந்த ஓர்


Share

மங்கலம் – கவிதை

 
சுற்றி எல்லாம் சுபம்

இவ்வுலகத்துக் காலம்

என் கனவு நிமிடங்களால் பகுப்பட்டிருக்கிறது

நடுச்சாமம் முழுதும்

எச்சி ஒழுக அரற்றிக்கொண்டிருந்த பசு

ஈன்றிருக்கிறது

வழியெங்கும்

அழகிய மஞ்சள் வட்ட மலர்களைத் தட்டான் சுற்ற

சூரியகாந்திப்பூ சூரியன் நோக்கியிருக்கிறது

கஷாயம் போலிருக்கும்

முக்கு டீக்கடை சாயா பாலுடன் கனக்க

எப்போதும் கரகரக்கும் ட்ரான்சிஸ்டர்

காதற்பாடல்களை ஒலிக்கிறது

நீர்வற்றிப்போயிருந்த பண்டாரங்குளத்தில்

சில தண்ணீர்ப்பூக்கள் தலைநீட்டியிருக்கின்றன

அங்கு

கலந்துகொண்டிருக்கும் நாயிரண்டைச் சுற்றி

சிறுவர் கூட்டமில்லை, கல்லெறிதல் இல்லை.

பலசாதிச் சிறுவர்கள்

தோள் மேல் கை போட்டுக்கொண்டு

தபாலில்லாத ட்ரவுசருடன்

பள்ளி செல்கிறார்கள்

சொன்னதைக் கேட்கிறது வீட்டு நாய்

சேவற் கூவலுடன் அமைதியில் காலை விடிய

கோயில் மணி மெலிதாய் ஒலிக்கிறது

மனவெழுச்சி நிரம்பிய இரம்மியப் பொழுதொன்றில்

இரவு கவிகிறது

எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

Share

மின்மினிப்பூச்சி – கவிதை

 

தெருவெங்கும் முளைத்துவிட்ட

மின்விளக்குகளின் வெளிச்ச எல்லைக்குள்

அமிழ்ந்துவிட்டது

மின்மினிப்பூச்சியின் ஒளிர்வு, என்றாலும்

எல்லை தாண்டிய இருள்வெளியில்

அப்பூச்சி

மனசுக்குள் புரட்டியெழுப்பும்

உணர்வுகளின் தாக்கத்தையடுத்து

கண்பார்வையிலிருந்து மறைகிறது

மஞ்சள் வெளிச்சப் படர்வு

Share