Archive for கவிதை

தவறுகளின் கோட்டை – கவிதை

நானறியாத ஒரு பொழுதில்
தவறுகளின் கோட்டைக்குள் விழுந்தேன்.
கதவோவியம் கேலி பேசியது
நான் மறந்ததாக நினைத்துக்கொண்டிருந்த
நொடிப்பொழுதின் பிரதியாக நின்று.
வாசல் கடந்த அறைகளின்
பக்கச் சுவர்களில் பலப்பல ஓவியங்கள்
என் முகச்சாயலுடன்.
சிலவற்றின் குரூரப்பார்வை
மனத்தின் மூலைகளில் சவுக்கடித்தது.
சிலவற்றை அமைதியின் உறைவிடமென
யாரும் கூறக்கூடும் (யார் உள்நுழைந்துவிட
முடியும் என்னைத் தவிர)- ஆனால்
அவற்றின் உள்ளோடும் நினைவுகள்
எனக்கு மட்டுமே அத்துப்பிடி.
பற்பல அறைகளில் மேலும் பல
நிறையப் பேசி
என்னைப் பிய்த்து எறிந்தன.

என் நிர்வாணம்
எனக்கெதிரே
சரிந்து கிடந்தபோது
திடீரென்று திறந்துகொண்டது
பெருங்கதவு.
உள்ளே
கடவுளாக அறியப்படும்
ஆன்மாவின் சிலையொன்று.

Share

தெருக்கள் – கவிதை

தெருக்கள்
இப்படியில்லாமல்
‘ப’ – வாகவோ
‘ட’ – வாகவோ இருந்திருக்கலாம்
ஒரு தொடக்கத்துடனும்
ஒரு முடிவுடனும்
மனிதர்கள்
இப்படி அப்படி எப்படியும்
நடந்து நடந்து
அவர்களைப் போலவே
மாறிவிட்டதோ என்னவோ
ஒரு தெருவிலிருந்து
எந்த வித முகமுமில்லாமல்
திடீரென வளைகிற
இன்னொரு தெருவின்
தோற்றவாயிலில்
கலங்கி நின்றிருக்கிறேன்,
இரண்டு தெருக்களும்
அப்புள்ளியில்
தம்மை இழந்து விட்ட
சோகத்தை நினைத்து.

Share

அந்த நிமிடம் – கவிதை

அந்த நிமிடத்திற்கான
காத்திருப்பு
அவஸ்தை நிரம்பியது
எதிர்பார்ப்பு நிறைந்தது
படபடப்பைக் கொண்டது
சந்தோஷம் தருவது
துக்கம் தருவது
ஏதோவொன்றாக
அல்லது எல்லாமுமாக
நீண்ட காத்திருப்பு அது
வருடங்கள், மாதங்கள்
நாள்கள் எனக் கழிந்து
நிமிடங்கள் எனக் குறைந்து
நொடிகளாகி
ஒரு சொல் தொடங்கும்போதே
முடிந்துவிடுவதுபோல
கடந்து போனது
அந்நிமிடம்.
இனி அந்நிமிடத்தைப் பற்றிச்
சொல்ல ஒன்றுமில்லை.

Share

பிம்பம் பற்றிய கவிதைகள்

கை நழுவிக் கீழே விழும்
கண்ணாடிக் கோப்பை
தரையைத் தொடுமுன்
கைநீட்டியிருக்கவேண்டும்
தேவதை
உன் பிம்பத்தைக் காப்பாற்ற

*

உடைந்த பலூனின் சிதறல்கள்
பெரிதும் சிறிதுமாய்
கலைந்தபோன கோலக் கம்பிகளுக்குள்
தெறித்துப்போன உன் பிம்பம் போல
ரசமுள்ள கண்ணாடியா என்ன
ஒவ்வொன்றும் தனித்துவம் பெற?

*

பிம்பமற்ற
பிம்பத்துக்குள்
அடங்கிவிட வேண்டும்
அதுவே பிம்பமென!

*

மறைத்து வைத்திருக்கும்
முகச் சலனங்கள்
ஓடும் நீரின் மேற்பிம்பத்தில்
தெளிவாக, மிகத் தெளிவாக.

*

Share

நிழலின் மீதான யுத்தம் – கவிதை

நான் விட்டுச் செல்லும்
காலடிச் சத்தம்
ஒரு பூனையின் லாகவத்தோடு
பதுங்கியிருக்க
பொழுதுகளில்
காற்றில் கரையும்
என் மூச்சும் வேர்வையும்
எங்கோ ஓரிடத்தில்
நிலைகொள்ள
தரையில் விரிந்து
நீர்த்துப்போகும் நிழலும்
காத்திருக்கின்றன
மீண்டும் என் வருகைக்காய்

விரிந்து பரந்த உலகத்தில்
என் உலகம்
தினம் நான் செல்லும் சாலைகளும்
கோயில்களுமென
அங்கே காத்திருக்கும்
என் காலடிச் சத்தமும்
மூச்சும் வேர்வையும் நிழலுமென
மிகச் சிறியதாகிவிட்டது

எப்போதும் நடந்துகொண்டிருக்கும்
நிழலின் மீதான யுத்தம்
தன் சத்தத்தை
இரவுகளில் நிறுத்திக்கொள்ளும்போது
மெர்க்குரிப்பூவின்
வெளிச்சத்தில்
என் மீது சரிகிறது
மதில் சுவரின் நிழல்

Share

பிறப்பு – கவிதை

இரண்டு வருடம் முன்பு செத்துப்போன
முப்பாட்டி ஞாபகமும் கொஞ்சம்
27 வருடம் கழித்துத் தாத்தா பிறந்தார்
யாரும் எதிர்பார்க்காத மாதிரி
பாலா மாமாவின் பெயரைச் சொன்னாள் அம்மா
அவளுக்கு பாலா மாமா என்றாலே தனிப்பிரியம்தான்
மாமனாரும் மாமியாரும்
அவர்கள் சொந்தத்தில் ஒருவரைத் தேர்ந்தார்கள்; உடனே
எங்கள் பக்கத்துக்காரர்கள் அதை மறுத்தார்கள்
நான் என் பங்குக்கு என் சித்தப்பாவைச் சொன்னேன்
மரச்சட்டத்தினுள் மாட்டிக்கிடந்த மனிதர்கள்
இறக்கை பூட்டிக்கொண்டார்கள்
இரும்பாலான கதவுகள்
இளகிக்கொள்ள
வீட்டு மரத்தூண்களில்
பாசி படரத் தொடங்கியது
குழந்தையின் ஒவ்வொரு சிணுங்கலிலும்
ஒவ்வொரு நெட்டி முறிப்பிலும்
அவர்கள் தங்களைச் சேர்த்துக்கொள்ள
-தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்-

Share

சின்னஞ் சிறு கவிதை

அரவமற்ற
மண்டபத்தின் நிசப்தத்துள்
விரவிக் கிடக்கிறது
சிலைகளின் கேவல்

வௌவால்கள்
தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு
கண்டடையமுடியாத
மௌனத்தைத் தேடிய வண்ணம்

காற்றடிக்கும்போதெல்லாம்
சிறிய அலையை ஏற்படுத்தும்
தேங்கிய குளத்தின் பச்சை நீர்
இறுக்கத்துடன்

சன்னிதியில்
எரிந்துகொண்டிருக்கும்
அகல்விளக்கு

அனைத்தையும் கலைத்துப் போடுகிறது
சிறு கை எறியும் பொரி

Share

சலனம் – கவிதை

தலைக்கு மேல்
பயணிக்கிறது நதி

வெளியுலகைச்
சுவீகரித்து
உள் அனுப்புகிறது நீர்

நதியின் மீதான சலனத்தில்
அசைந்து கொண்டிருக்கவேண்டும்
கரை மர நிழல்

நீர் மோதும்
பாறைகளின்
மிக நுண்ணிய சலனங்கள்
பிரபஞ்சத்தின் பேரமையில்
கேட்பதாயிருக்கும்

மெல்ல கண் திறக்க
நீர் வளையம்

என்னைச் சுற்றிக்கொண்டிருக்கிறது
வெளிர் மஞ்சள் நிறத்தில்
சூரிய ஒளியும் சில துகள்களும்

108 எண்ணி முடித்திருப்பான் முருகன்
இன்னும் சில எண்களில்
நான் நீர் வளையத்தைத் துறந்தாக வேண்டும்

நீரை ஒரு மிடறு விழுங்க
என்னுள் அடங்குகிறது
அந்நதி
அத்தனைச் சலனங்களுடனும்

Share