Archive for கவிதை

அய்யனார்

அய்யனார்
–ஹரன் பிரசன்னா

அய்யனார் கோயிலின்
ஆலமரத்துக்குக் கீழே
அன்று பிறந்த குழந்தை ஒன்று
பசியில் அழுதபடி

பிடதியில் இருகைகளையும் கோர்த்து
ஒட்டப்பட்டிருக்கும் புதிய சுவரோட்டியில்
பிதுங்கி வழியும் மார்பை
கள்ளத்தனமாய் இரசிக்கும் விடலைகள்
ஒருகாலத்தில்
இப்படி அழுதவர்கள்

பூட்டப்பட்டிருக்கும் வீட்டின்
கதவுகளுக்குள்
ஏதோ ஒன்றில்
முலை சுரந்துகொண்டிருக்கும்.

முன்னங்கால்கள் காற்றில் பாவ
புடைத்திருக்கும் திமிலின் கர்வம்
கண்ணில் தெரிய
பாதி பறக்கும் குதிரையின் மேலே
விரித்த விழி
முறுக்கிய மீசை
கையில் தூக்கிய வாளுடன்
உக்கிரமாய்
அமைதியாயிருக்கிறது
அய்யனார் சிலை

Share

பதிவுகள்

ஓடும் ஒரு நதி
ஓரிடத்தில் பிரிகிறது.

இப்போது இரண்டு நதிகள்;
நான்கு கரைகள்.

பிரிந்த நதி
ஏதோ ஓரிடத்தில் இணைகிறது.

மீண்டும்
ஒரு நதி; இரண்டு கரைகள்.

என்றாலும்
பதிவுகளாய்
இடையில் ஏற்பட்டுவிட்ட
தீவுகள்.
 

Share

மயானம்

மயானம்
–ஹரன் பிரசன்னா

எரியும் சிதையின் வெப்ப மிகுதியால்
புலம் பெயர்கின்றன
எறும்புகள்

எங்கோ அழுகிறது
ஒரு காகம்.
யாருடைய சாவுக்காய்?

மரங்கள் தனித்தில்லை.
நெருப்பில் முறுக்கேறும்
எலும்புகளை அடிக்க
உருட்டுக் கட்டையுடன்
எப்போதும் சிரித்திருக்கும்
வெட்டியான் துணைக்கு உண்டு.

வராட்டி மலிவு என்கிறான்
கொள்ளி வைத்தவன்

தூரத்தில் சலசலக்கும்
ஆற்றில் தலை முழுகத்
திரும்பிப் பார்க்காமல்
நடக்கிறேன்,
மண் குளிரும்போது
எறும்புகள் மீளும் என்ற நினைவுடன்.
 

Share