Archive for ஹரன் பிரசன்னா

பாலகுமாரன் – அஞ்சலி

பாலகுமாரன் – அஞ்சலி
 
பாலகுமாரன் எழுத்தைப் படித்தே நான் புத்தக வாசிப்புக்குள் வந்தேன். இளமையில் பாலகுமாரன் எழுத்தைப் படிப்பது ஒரு அனுபவம். ஒரு பெண்ணைக் காதலிப்பது போல, ஒரு பெண்ணின் உடல் தரும் கிளர்ச்சி போல, பாலகுமாரனின் எழுத்தை வாசிப்பதும் பெரிய கிறக்கத்தைத் தந்தது. தத்துவம் என்கிற பெயரில் பாலகுமாரன் சொன்னவை பாதி புரிந்தும் பாதி புரியாமல் இருந்தாலும் பாலகுமாரன் எழுத்தே ஒரு விஷயத்தின் பல்வேறு கோணங்களை யோசிக்கக் கற்றுத் தந்தது. தோல்வியை ஏற்றுக்கொள்ள, பழகிக்கொள்ள அரைகுறை புரிதலைத் தந்தது. பின்பு அதிலிருந்து மேலேறிச் செல்ல உதவியது. பாலகுமாரனின் பிற்கால எழுத்துகள் முழுவதும் ஆன்மிகமாகவிட்ட போது, மிக எளிதாக பாலகுமாரனைத் துண்டித்துக்கொள்ளவும் முடிந்தது. ஆனால் வாசித்த காலங்களில் உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர் பாலகுமாரனே என்ற எண்ணம் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருந்தது.
 
பெண்களைப் பற்றி பாலகுமாரன் எழுதியவை எல்லாமே ஆண் பார்வையாக இருக்கலாம். ஒரு ஆணுக்கு அந்த எழுத்து தரும் பரவசம் அளவற்றது. பெண்மையை உயர்த்தும் ஆண்மை என்பது தரும் கிறக்கம் அது. அதில் உண்மை இல்லாமல் இருந்திருக்கலாம், முழுக்க நாடகப் பாணியிலானதாக இருக்கலாம். ஆனால் அது மிக நெருக்கமாக இருந்தது. பெரும் ஈர்ப்பைத் தந்தது.
 
உணவுக்கும் உடலுக்கும் பெண்ணுக்குமான சித்திரங்களை பாலகுமாரன் வரைந்து தள்ளினார். எல்லாவற்றின் அடிநாதமும் ஒன்றேதான் என இன்று யோசிக்கும்போது புரிகிறது. ஆனால் அன்றைய வாசிப்பில் ஒவ்வொன்றும் ஒரு தினுசாக இருந்தது. கண்ணீர் மல்கவே சில பக்கங்களை வாசிக்கவேண்டி இருக்கும். எத்தனை எத்தனை நாவல்கள்! ஒவ்வொரு வியாழக்கிழமையும் (என நினைக்கிறேன்) நாவல் டைம் அல்லது மேகலா வருவதற்காக அதிகாலையே பத்திரிகைக் கடையில் காத்து நின்றிருக்கிறேன். அன்புள்ள அப்பா, செந்தூரச் சொந்தம், திருப்பூந்துருத்தி, கடலோரக் குருவிகள், என்றென்றும் அன்புடன், கண்ணாடி கோபுரங்கள் என்று எத்தனையோ நாவல்களை மாத நாவல்களாக வாங்கியும் நூலகத்திலும் வாசித்துத் தள்ளினேன்.
 
அந்திமழை இதழுக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலை மீண்டும் வாசித்தபோது என் இளமையின் அந்தரங்க நிமிடங்களை நானே திரும்பிப் பார்ப்பது போன்ற ஒரு சந்தோஷமான திடுக்கிடலை உணர்ந்தேன். நமக்கு நிறைய வாசித்துவிட்ட உணர்வு பெருகும்போது பாலகுமாரன் தேங்கிவிட்டதாகத் தோன்றியதும் தோன்றுவதும் உண்மைதான். ஆனால் அந்த எழுத்துத்தான் என்னை அப்படிப் பிடித்துக்கொண்டது என்பதும் நிஜம்தான். யோசித்துப் பார்த்தால் பாலகுமாரன் ஒரு குறிப்பிட்ட வயதுக்காக எழுதி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த வயதொத்தவர்களைப் பிடித்துக்கொள்ளும் பூதம் போன்ற எழுத்து அது. இன்று சாகவாசமாக அதை விமர்சிக்கலாம். அது எளிது. ஆனால் அன்றைய தேதியில் அந்த பாலகுமாரன் தந்த கிளர்ச்சியை, அனுபவத்தை, தத்துவம் மீதான புருவ உயர்த்தலை எல்லாம் மறக்கவே முடியாது. என்றென்றும் நினைவில் இருப்பார் பாலகுமாரன்.
 
திரைத் துறையிலும் பாலகுமாரன் ஒரு வசனகர்த்தாவாக சாதனை செய்தார் என்பதே என் எண்ணம். இளையராஜா மற்றும் கமலுக்கு இணையாக அவர் குணாவிலும் என்றென்றும் தெரிவார் என்றே நம்புகிறேன்.
 
ஓம் ஷாந்தி.
Share

காலா பாடல்கள்

கபாலி படத்தில் – மாய நதி பாடலும் உலகம் ஒருவனுக்கா பாடலும் எனக்குப் பிடிக்காதவை. பிடித்தவை – நெருங்குடா பாடலும் வீரத் துரந்தரா பாடலும்தான். இதை மனத்தில் கொண்டு மற்றவற்றைப் படிக்கவும்.
 
காலாவில் முதல் பாடல் செம வெயிட்டுடா வெளியிடப்பட்ட போது ரொம்ப டிப்ரஸிங்காகவே இருந்தது. பிடிக்கவே இல்லை. நேற்று எல்லாப் பாடல்களும் வெளியிடப்பட்டன. அவற்றைக் கேட்டதில் (3 முறை கேட்டிருக்கிறேன்) –
 
நிக்கல் நிக்கல் – கிளம்பு கிளம்பு பாடல் மிக அட்டகாசம். இதுவே பெஸ்ட் இப்போதைக்கு. யார் வெச்சது யார் வெச்சது உங்க சட்டமடா அடுத்த கலக்கல். கிளம்பு பெஸ்ட்டா யார் வெச்சது பெஸ்ட்டா என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே அட்டகாசம். நிலமே என் உரிமையின் பின்னணியில் வரும் (இஸ்லாமியப் பாடல்களின் சாயலுடன் வரும்) ஆலாபனை இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
 
இன்னொரு பாட்டில், ஒத்தையில நிக்கிற வேங்கடா தில்லிருந்தா மொத்தமா வாங்கடா என்பதைப் பாடலிலேயே வைத்தவிதம் அழகு.
 
சந்தோஷ் நாராயண் ரஜினியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். பாடல்கள், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தைப் பெரிய அளவில் தூண்டுகின்றன. இந்த இசையமைப்பாளரை நேற்றைய விழாவில் ரஜினி மறந்தது ஆச்சரியம். (மறந்தாரா? கடைசியில் ரஜினி பேசுவதை மட்டுமே கேட்டேன்.) கடைசியில் அவரை அழைத்து மேடையில் சொல்லி சமாதானம் செய்தார். உண்மையில் சந்தோஷ் நொந்திருப்பார் என்றே நினைக்கிறேன். பிரச்சினையில்லை, இது வரலாற்றில் இடம் பெறும். 🙂
 
மாய நதி போலவே, கண்ணம்மா பாடலும் பிடிக்கவில்லை. ஆனால் மாயநதியைவிட இது பெட்டர்தான்.
 
போராடுவோம் மற்றும் தெருவிளக்கு பாடல்கள் – பல பாடல்களின் சாயலுடன் உள்ளன! குறிப்பாக ஹிப் ஹாப் தமிழாவின் பாடலைப் போன்று உள்ளது.
 
சட்டென்று எல்லாப் பாடல்களுமே ஒரே போல் தோன்றும். மெல்ல மெல்ல இது மாறும் – சிலருக்காவது.
 
பாடல்களில் என்னவோ 80களின் சாயல் தெரிவது போல் உள்ளது. என் பிரமையா எனத் தெரியவில்லை. சிறியதும் பெரியதுமாக 9 பாடல்கள் என்பது தரும் யூகமா என்றும் புரியவில்லை. படம் நாயகன் திரைப்படம் போன்ற ஒன்றாக இருக்க வாய்ப்பிருப்பதாக இன்னொரு பக்கம் தோன்றுகிறது.
 
ரஜினியின் அரசியல் வருகைக்கு ஏற்ப வரிகள் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன. படத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்பது நிச்சயம். ஆனால் அது எனக்குப் பொருட்டே அல்ல. 🙂 அண்ணாமலை திரைப்படம் வந்த சமயத்தில் ரஜினியின் ஒரு வரி பன்ச்சுக்காக தியேட்டரே அதிர்ந்தது நினைவுக்கு வருகிறது. இப்போது அப்படி அதிர வாய்ப்பு (ரசிகர்கள் ஷோ தவிர மற்ற ஷோக்களில்) குறைவுதான். ஆனால் இது அதிகம் பலன் தரும் என்றே யூகிக்கிறேன். வெற்றி நிச்சயம்.
 
ரஜினி திரைப்படம் எதிர்பார்ப்புக்கு நடுவேயும், தோற்றுப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கும் இடையேதான் வெளிவந்துள்ளது. முதல் முறையாக, ரஜினியின் அரசியல் அறிவிப்படை அடுத்து, வெறுப்புக்கு நடுவில் வெளியாகிறது. இந்த வெறுப்பும் ஃபேஸ்புக் அறிவாளிகளின் வெறுப்புதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்படம் வென்றால், உடனே இது திரைப்படத்துக்கான வெற்றி மட்டுமே என்று சொல்வார்கள். தோற்றால், அரசியலிலும் தோல்வி என்பார்கள். நான் இரண்டையுமே நம்பவில்லை. இந்த வெற்றியும் அரசியல் வெற்றியும் வேறு வேறானவை. இரண்டிலும் ரஜினி வெல்வார் என்றே நினைக்கிறேன்.
 
அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நீங்கிய நிலையில் ரஜினி திரைப்படம் வெளியாவது, எனக்கு மிக முக்கியமானதாகவும் சந்தோஷம் தருவதாகவும் உள்ளது. எவ்விதப் படபடப்பும் இன்றிப் படம் பார்க்கலாம்.
 
ஒரே பிரச்சினை, இந்தப் படத்தில் ரஞ்சித் முன்வைக்கப்போகும் அரசியல். அது தலித் அரசியல் மட்டும் என்றால், நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது, பாராட்டப்படவேண்டியது. அதன் பின்னணியில் ஹிந்துத்துவ / ஹிந்து மத எதிர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என் ஒரே எதிர்பார்ப்பு. மற்ற மதங்களைத் தூக்கிப் பிடிப்பதில் பெரிய பிரச்சினையோ கேள்வியோ இல்லை – ஹிந்து மதத்தைத் தூற்றாத வரை. காலா அறிவிப்பு வந்த தினம் முதல் இந்த ஐயம் கடுமையாக எழுந்துள்ளது. கபாலி வந்தபோது இந்த அச்சம் வரவில்லை. ஏனென்று தெரியவில்லை. ரஜினிக்கு இருக்கும் ஒரு அரசியல் பெரிய வட்டத்தை இப்படம் குறுக்காமல் இருந்தாலே, இப்படம் ரஜினிக்கு செய்திருக்கும் பெரிய நன்மையாக இருக்கும். பார்க்கலாம்.
 
காலா – காத்திருக்கிறேன்.
Share

ரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018

ரீச் ஃபௌண்டேஷனின் விருது வழங்கும் விழா நேற்று (29-ஏப்ரல்-2018) அன்று தமிழ் இணையப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் ஜி.கே.வாசன் மற்றும் அரவிந்தன் நீலகண்டன்.

* விழா மிகச் சரியாக 9.30க்குத் துவங்கியது.

* மெல்ல நடந்து வந்த மெலிந்த 85 வயது முதியவர் நாற்காலியில் அமர்ந்து இறை வணக்கப் பாடல்களைத் துவங்கினார். 85 வயதுக்குள்ளிருந்து வெளிவந்த கணீரென்ற குரல் என்னைக் கலங்கடித்துவிட்டது. மிகச் சிறப்பாக திருமுறை பாடல்களைப் பாடினார். அழுத்தம் திருத்தமாக வித்வான் குடந்தை லக்ஷ்மணன் அவர்கள் பாடியதைக் கேட்ட தமிழே மெய்மறந்து நின்றிருக்கும். அப்பெரியவருக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம்.


வித்வான் குடந்தை லக்ஷ்மணன்

* மிக முக்கியமான ஆளுமைகளுக்கு, நம் கலாசாரத்தைப் பேணும் மனிதர்களுக்குத் தேடித் தேடி விருது கொடுத்தார்கள். மாணவர்களுக்கு நம் கலாசாரத்தைப் பேண கற்றுத் தரும் ஆசிரியர் ராஜகுரு, சென்னை தினத்தின் முதுகெலும்பாக விளங்கிய ராஜா சீதாராமன் போன்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

* ராஜா சீதாராமன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதால் அவரது 81 வயது தாயார் வந்து விருதைப் பெற்றுக்கொண்டது நெகிழ்வான தருணம்.

* ஜிகே வாசன் ரீச் ஃபௌண்டேஷனின் தேவையை, அவர்களது சேவையைப் பாராட்டிப் பேசினார்.

* அரவிந்தன் நீலகண்டன், நேரம் குறைவாகவே இருந்தால் சிறிய உரையை ஆற்றினார். இவரது உரை பலத்த வரவேற்பைப் பெற்றது. விழா முடிந்ததும் பலர், இவர் இன்னும் நிறைய நேரம் பேசி இருக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

* விருது பெற்றவர்கள் அனைவரும் சிற்றுரை ஆற்றினார்கள். இது முக்கியமான விஷயம். ராஜகுரு கொஞ்சம் நீண்ட உரையை ஆற்றினார். எப்படி மாணவர்களை ஒருங்கிணத்துச் செயல்பட்டார் என்பதை விளக்கினார்.

* கல்வெட்டாய்வாளர்/ஆய்வாளர் ராமசந்திரன் பலருக்கும் கல்வெட்டுகளைப் படிப்பது பற்றிப் பாடங்கள் எடுக்கிறார். அவரது 9 வது பாட்ச் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அடுத்த பாட்ச் ஜூன் இறுதியில் தொடங்குகிறது. விருப்பப்படுபவர்கள் ரீச் ஃபௌண்டேஷனை அணுகவும்.

* விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் நாட்டுப் பண்ணும் பாடினார்கள். தப்பித்தார்கள்.

* மதிய உணவுடன் விழா இனிதே முடிவடைந்தது. விழா மிக ரிச்சாக இருந்தது. ரீச் ஃபௌண்டேஷனுக்கும் விழாவுக்கு உழைத்தவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

* விருது பெற்றவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சிறிய ஆவணப் படம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. வழக்கம்போல ஆடியோ வரவில்லை. போராடிப் பார்த்தார்கள். ஆடியோ முடியாது என்று சொல்லிவிட்டது. ஒவ்வொரு விழாவிலும் இதே போன்ற பிரச்சினைகளைப் பார்க்கிறேன். இதை எத்தனை சரி செய்துகொண்டு போனாலும் விழாவில் கழுத்தறுத்துவிடுகிறது. இந்த ஆவணப் படங்கள் திரையிடலும் நடைபெற்றிருந்தால் விழாவின் தரம் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கும். இப்போதும் தாழ்வில்லை என்பது வேறு விஷயம். இந்த ஆவணப் படங்கள் ரீச் ஃபௌண்டேஷனின் தளத்தில் வெளியிடப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். விருப்பப்படுபவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.

* ரீச் ஃபௌண்டேஷனின் சார்பில் முன்பு யாளி ஒன்று இதழ் வந்துகொண்டிருந்தது. இப்போது அது வருவதில்லை என நினைக்கிறேன்.

* மனதுக்கு நிறைவான விழா. ரீச் ஃபௌண்டேஷனின் வலைப்பக்கம்: http://conserveheritage.org/

Share

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்

அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் – ஒரு தந்தையின் புலம்பல்

இரண்டு மாதங்களாகவே அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்துக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என அபிராம் சொல்லிக்கொண்டிருந்தான். ஏப்ரல் 27 காலா ரிலீஸ் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்ப அதுக்குத்தான முதல்ல போவ என்று சோகமானான். காலா ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதும் இந்தப் படத்துக்குப் போவது உறுதியானது அவனவளவில் பெரிய நிம்மதி.

குழந்தைகள் பார்க்கும் சானல்கள் அத்தனையிலும் விடாமல் விளம்பரம் துரத்திக்கொண்டிருந்தது. கூகிளில் தேடி இப்படம் பற்றிய அனைத்து விவரங்களையும் அபிராம் தெரிந்து வைத்திருந்தான். கூடவே நண்பர்களிடம் பேசியதில் இருந்தும். பேட் மேன் சூப்பர்மேன் எல்லாம் வரமாட்டாங்களா என்று தெரியாமல் கேட்ட தினத்தில்தான் நான் இதைக் கண்டுபிடித்தேன். அவெஞ்சர்ஸ் என்றால் யார், மார்வெல் என்ற நிறுவனம், அது இது என அள்ளி அடித்தான். இதெல்லாம் பெரிய அறுவையான புள்ளிவிவரங்கள் என்ற ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டேன். ஒருவழியாக நேற்று படத்துக்குப் போனேன்.

*

ஏற்கெனவே பேட் மேன் வெர்சஸ் சூப்பர் மேன் தந்த சூடு ஞாபகம் இருந்தது. இந்தப் படத்தில் வரிசையாக அவெஞ்சர்கள் வந்தவாறு இருந்தார்கள். படத்திலும் சரி, பார்க்கவும் சரி, சரியான கூட்டம். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அத்தனை பெற்றோர்களும் என்னைப் போலவே விழித்துக்கொண்டுதான் தியேட்டரில் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொரு அவெஞ்சர் தோன்றும் காட்சியிலும் கைத்தட்டும் விசிலும் காதைப் பிளந்தன. நிஜமாகவே சொல்கிறேன். நான் கொஞ்சம் பயந்துவிட்டேன். இது என்ன ஊர், ஏன் இப்படி மாறிப் போனது என்றெல்லாம் குழப்பம். என் பக்கத்து சீட்டில் இருந்த பையன் ஒவ்வொரு அவெஞ்சரின் வருகையின்போதும் சரியாக அந்த அவெஞ்சரின் பெயரையும் அந்த நடிகரின் பெயரையும் சொல்லிக்கொண்டே இருந்தான். ஆச்சரியமாக இருந்தது. ஸ்பைடர் மேன், ஐயன் (சாதி அல்ல!) மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா தவிர எந்த அவெஞ்சரும் எனக்குப் பழக்கமில்லை. ஆண்ட் மேன், ஸ்ட்ரேஞ்ச், தோர் மேன், ப்ளேக் பேந்தர், விசன், ப்ளாக் விடோ, ஃபால்கன், மார்வெல் எனப் பலரை இப்படத்தில்தான் கண்டுகொண்டேன். இத்தனை பேருக்கும் தனித்தனியே படங்கள் இருக்கின்றனவாம். மார்வெல் காமிக்ஸின் சாதனை பெரியதுதான். ப்க்கத்தில் இருந்த வாண்டுகளெல்லாம் இவர்களை நம் வீட்டுச் சொந்தக்காரர்கள் போல, இவனைத் தெரியலையா என்று தம் பெற்றோர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தன.

*

அவெஞ்சர்ஸ் படம் சூப்பர்மேன் வெர்சஸ் பேட்மேன் அளவுக்கு மோசமில்லை. முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் அப்படி இப்படிப் போனாலும் கடைசி ஒரு மணி நேரத்தில் மிரட்டி எடுக்கிறார்கள். பூமியைப் போன்ற பல கிரகங்கள். அத்தனையிலும் நடக்கும் கதை. இதைவிட விளக்கமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அத்தனை அவெஞ்சர்ஸையும் காண்பிக்கவேண்டி இருப்பதால் திரைக்கதை அங்குமிங்குமாக ஓடுகிறது. எந்த நேரத்தில் எந்த அவெஞ்சர் இன்னொரு எந்த அவெஞ்சரைக் காப்பாற்ற வருவார் என்பது திரைக்கதை எழுதியவருக்கே தெரியாது என நினைக்கிறேன்.

ஹல்க்கை காமெடி பீஸாக்கிவிட்டார்கள். தோரை உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். இந்தப் படத்திலும் ஸ்பைடர் மேன் ஐயன் மேனிடம் கெஞ்சிக்கொண்டே இருக்கிறார். தானோஸ் அதிரடி. படமே இவர் தோளில்தான். மிகப் பெரிய அளவில் வில்லனைக் காட்டி, அவர் முன் அனைத்து அவெஞ்சர்ஸ்களும் பிச்சை எடுக்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள்.

ஏற்கெனவே ஒரு ரத்தினக் கல்லைப் பெற்றுக்கொண்டுவிட்ட தானோஸ் மீதி ஐந்து கல்லை எடுக்கப் போராடுவதுதான் கதை. அப்படி எடுத்துவிட்டால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஆளும் சக்தி வந்துவிடும். தானோஸின் நோக்கம் ஒன்றுதான், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் உள்ள மனிதர்களில் (!) பாதி பேரைக் குறைப்பது. குறைக்கும் வழி கொலைகள். இதை எதிர்த்து அவெஞ்சர்ஸ் போராடுகிறார்கள். ஆறு கல்லையும் தானோஸ் அடைகிறார். பின்னர் என்ன ஆகிறது? இன்னும் ஒரு வருடம் காத்திருக்கவேண்டும்.

ஆறாவது கல்லை அடையும் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. அதேபோல் தன் வளர்ப்பு மகளை பலி கொடுக்கும் காட்சி மிக நன்றாக உள்ளது. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை கிராஃபிக்ஸ்தான். எதோ ஒரு தனியான உலகத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொண்டு வருகிறார்கள். தானோஸ் இறுதிக் காட்சியில் இறுக்கமான முகத்துடன் பிரபஞ்சத்தைப் பார்த்தவண்ணம் அமரும் காட்சி பல விஷயங்களைச் சொல்கிறது. கவித்துவமாக தானோஸைப் படைத்திருக்கிறார்கள்.

படம் முழுக்க இருட்டில் நடக்கிறது. சில காட்சிகள் மட்டுமே வெளிச்சத்தில் தெரிகின்றன. அவெஞ்சர்ஸ் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் காமெடிக் காட்சிகள், இப்படத்தையே சுவாசமாகக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடுதலாகப் புரியும். தமிழ் டப்பிங்கில் பாகுபலியையெல்லாம் சேர்த்து கைத்தட்டு வாங்கிக் கொள்கிறார்கள். தமிழில் பார்க்காமல் ஆங்கிலத்தில் பார்த்திருந்தால் தூக்கில் தொங்கி இருப்பேன் என்றே நினைக்கிறேன். சில வழக்கமான, ஹெல்மெட் மண்டையா என்பதைப் போன்ற வசனங்களைத் தவிர மற்றவை பாதகமில்லை. இந்த ஹெல்மெட் மண்டையா வசனத்துக்கு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த வாண்டு வானம் வரை குதித்தான். மீண்டும் மீண்டும் ‘ஹெல்மெட் மண்டையனாம்ப்பா’ எனச் சொல்லிக்கொண்டே இருந்தான். சரியாக பல்ஸ் பிடித்து வைத்திருக்கிறார்கள். அல்லது ட்யூன் செய்து வைத்திருக்கிறார்கள்.

*

ஒரு படம் பார்த்து முடித்ததும் அதைப் பற்றி அதிகம் பேசக்கூடாது என்று வீட்டில் ஒரு சின்ன சட்டம். நேற்று அந்த சட்டத்தைக் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு அபிராமிடம் பேசினேன். ஏனென்றால் எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதால். இடைவேளையின்போதே மெல்ல கூகிளில் நோட்டம் விட்டிருந்தேன். அபிராம் அடித்து முழக்கினான். எப்படிடா இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட என்று சொன்னதுக்கு அவன் சொன்ன பதில் – நானெல்லாம் ஒண்ணுமே இல்லைப்பா, திருநெல்வேலில அரவிந்த் இதைவிட அதிகம் சொல்லுவான். அரவிந்த் என் அண்ணா பையன். இன்னும் என் தங்கை பையன்களுடனெல்லாம் பேசினால்தான் தெரியும், அவெஞ்சர்ஸ் எந்த அளவுக்கு நம் சமூகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என.

குழந்தைகளுக்கான சானல்களே இவர்கள் நம் சமூகத்தில் இத்தனை தீவிரமாக வெற்றிகரமாக நுழைந்தற்கான வழி என நினைக்கிறேன். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு வெற்றி பெறுகிறார்கள். படத்தையும் ஏனோ தானோ என்று எடுப்பதில்லை. மிகக் கச்சிதமான திட்டமிடல். அசுர உழைப்பு. ‘கேமராவுக்கும் கிராஃபிக்ஸுக்குமே காசு சரியா போச்சு’ என்கிறான் அபிராம். உண்மைதான். எல்லாமே உச்சம்தான். பாகுபலி முதல் பாகத்தைப் போல அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் முடிந்திருக்கிறது. பல விஷயங்கள் தெளிவாகவில்லை. பாகுபலியைக் கொன்றது யார் என்பது போல, காற்றில் உதிரும் அவெஞ்சர்ஸ்க்கு என்ன ஆச்சு என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. மீண்டும் ரத்தினக் கற்கள் கைக்கு வருமா? விஷன் திரும்ப வருவானா? அவெஞ்சர்ஸ் 2ல் இவையெல்லாம் தெரிய வரும் என்று நான் சொன்னபோது, இது அவெஞ்சர்ஸ் 3, அடுத்து அவெஞ்சர்ஸ் 4 என்ற பதில் கிடைத்தது. நேக்கு தெரிஞ்சதெல்லாம் ரஜினி கமல் புளிப்பு மிட்டாய் என்று காலம் ஓடிவிட்டது. ஆனால் இந்தப் பொடியன்கள்… இன்னும் முழித்துக்கொண்டிருக்கிறேன்.

*

மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் ஏப்ரல் 27ம் தேதி இரண்டு தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டிருந்தன. தியா மற்றும் பக்கா. அவெஞ்சர்ஸ்க்கு வந்த கூட்டத்தை அடுத்து, எல்லாக் காட்சிகளுமாக இந்தப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். சுவரொட்டிகளைப் பார்த்து ஏமாற வேண்டாம். 

*

Share

அறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி

கலைக்கான படங்களில் பிரசாரமும் பிரசாரப் படங்களில் கலையும் முக்கியமானவை. உண்மையில் ஒரு கலைப்படத்தில் உள்ள பிரசாரத் தன்மையும் பிரசாரப் படத்தில் உள்ள கலைத்தன்மையும் ஒரு திரைப்படத்தின் விவாதங்களைப் பல முனைகளுக்கு எடுத்துச் செல்ல வல்லவை. கலைப்படத்தில் உள்ள பிராசரத்தையும் ஒரு பிராசரப் படத்தில் உள்ள கலைத்தன்மையையும் சேர்த்தோ தனித்தனியாகவோ எதிர்கொள்வது எளிதானதல்ல. இவை இரண்டும் சரியாகப் பொருந்திப் போகும் ஒரு படம், பிரசாரவாதிகளின் கனவாகவே இருக்கும்.

 

அறம் இப்படியானதொரு படம். இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை ஒரு தரமான திரைப்படம் என்று சொல்லும்படியான தன்மையுடன் இயக்குநர் கோபி நயினார் இயக்கி இருக்கிறார். எப்படி ஒரு திரைப்படத்தில், தவிர்க்கமுடியாத பிரச்சினைகளையும் இந்திய எதிர்ப்பையும் ஒரே புள்ளியில் இணைக்கமுடியும் என்பதை மிக அழகாகச் செய்து காட்டி இருக்கிறார்.

 

இந்த மாதிரியான படங்களின் அரசியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தரமான மற்றும் உணர்வு ரீதியான திரைப்படம் என்ற வகையில் மட்டும் புரிந்துகொள்ளும் சாமானியர்களை, மிக எளிதாக இந்திய எதிர்ப்பு அரசியல் அவர்களது பிரக்ஞை இன்றியே சென்று சேரும். இதுதான் இந்திய எதிர்ப்புப் பிரசாரப் படங்களின் நோக்கம். ஆனால் இதைச் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. கொஞ்சம் பிரசாரம் தூக்கினாலும் படத்தை சாமானியர்கள் நிராகரித்துவிடுவார்கள். பல படங்கள் இப்படி வெற்றுப் பிரசாரப் படங்களாகவே தேங்கிவிடும். கலைத்தன்மை மட்டும் அதிகரித்து மாற்றுத் திரைப்படமாகத் தோன்றினால் அது சாமானியர்களுக்கான படமல்ல என்கிற ஒரு கருத்து உருவாகிவிடும். பிரசாரப் படங்கள் சாமானியர்களிடம் இருந்து விலகுமானால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறாது. இரண்டும் இல்லாமல் அந்தரத்தில் அலையும் படங்களாகப் பல படங்கள் அமைந்துவிடும்.

 

இப்படி எந்தப் பிரச்சினையும் இல்லாமல், இந்திய எதிர்ப்பு என்னும் தன் நோக்கத்தைத் தெளிவாக பிரசாரம் செய்திருக்கிறார் கோபி நயினார்.

 

*

 

பொது மக்களுக்கு எதிரான ஒரு அரசு, அது எந்த அரசாக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியது. மக்களிடம் அந்த அரசுக்குரிய பிரச்சினைகளைக் கொண்டு செல்லவேண்டியது ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். கூடவே அது பொதுமக்களின் கடமையும்கூட. ஆனால் எந்த அரசை எந்தக் காரணங்களுக்காக அம்பலப்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. காரணங்களைக் கண்டுகொண்டு அதற்குப் பொறுப்பான அரசை எதிர்ப்பதுதான் சரியான அரசியல். ஆனால் இங்கே முற்போக்கு என்னும் முகமூடியில் நடப்பதெல்லாம், எந்த அரசை எதிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு, பின்பு அதற்கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து உருவாக்கி அந்த அரசின் மீது சுமத்துவது.

 

இப்படிச் செய்வதிலாவது ஒரு குறைந்தபட்ச நேர்மை இருக்கவேண்டும். ஆசை வெட்கம் அறியாது என்பதைப் போல, மாநில அரசுக்குரிய பொறுப்புக்களைக் கூட மத்திய அரசின் குற்றப்பட்டியலில் சேர்ப்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. காரணம் மத்தியில் இருப்பது ஹிந்து ஆதரவு மற்றும் ஹிந்துத்துவ ஆதரவு அரசு. மோதியின் தலைமையிலான இந்த அரசைக் குறை சொல்வதுதான் ஒரே நோக்கம். இந்த நோக்கத்துக்காக எந்த ஒரு பிரச்சினையும் மத்திய அரசின் பிரச்சினையாகக் காட்ட போலி முற்போக்காளர்கள் தயாராகவே இருப்பார்கள். அவர்கள் பல வழிகளில் இதைச் செய்வார்கள். திரைப்படம் என்பது இன்னும் ஒரு ஊடகம். வலுவான ஊடகம். அதை நேர்மையற்ற முறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருக்கிறார் கோபி நயினார்.

 

*

 

ஒரு ஊரில் தண்ணீர் இல்லை, அந்த ஊரை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை, புறக்கணிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதை யாரும் ஏற்கமாட்டார்கள். ஹிந்துத்துவவாதிகளும் இப்படியான ஒரு அநியாயத்தை ஏற்கப் போகிறார்களா என்ன? நிச்சயம் இல்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு முதன்மையான பொறுப்பு யாருக்கு உள்ளது? மாநில அரசுக்குத்தானே? ஆனால் ராக்கெட் விடும் மத்திய அரசுக்கு இதைப் பற்றி அக்கறை இல்லை என்கிற பிரசாரம் படம் முழுக்கப் பரப்பப்படுகிறது. அதைவிட முக்கியமாக மத்திய அரசுக்கான எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல இந்திய எதிர்ப்பாகிறது.

 

ஆழ்துளைக் கிணற்றுக் குழியில் குழந்தை விழுந்துவிடுகிறது. அடிக்கடி இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்த வண்ணம் இருக்கிறோம். இது போன்ற செய்திகள் தரும் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. இதுபோன்ற செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் நான்கைந்து நாள் தூக்கம் இழந்து தவிப்போம். இப்படிக் குழந்தைகள் விழுவதும் இறப்பதும் பெரிய கொடுமை. இதற்கான பொறுப்பை உண்மையில் மாநில அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மத்திய அரசுக்கு இதில் பொறுப்பே இல்லை என்பதல்ல. வேறொரு வகையில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான்.

 

 

ஏன் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் உள்ளன என்பது முதல் கேள்வி. ஒவ்வொரு குழந்தை சாகும்போதும் எதாவது நிவாரணப் பணம் கொடுக்கும் அரசு, இதை ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது ஏன் என்பது இரண்டாவது கேள்வி. மூன்றாவது கேள்விதான், அப்படி குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்ற, குழந்தையை வெளியே எடுக்கத் தேவையான கருவிகளை மத்திய மாநில அரசுகள் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்பது. இந்த மூன்றுமே முக்கியமானவைதான். கோபி நயினார் மூன்றாவது கேள்வியை மட்டும் மையமாக்கி மத்திய அரசை மட்டும் பொறுப்பாக்குகிறார். கருவிகள் கண்டுபிடிக்கப்படாதது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மை என்றாக்கி அத்தகைய இந்தியாவை எல்லா விதங்களிலும் எதிர்க்கலாம் என்பதை நோக்கிப் போகிறார்.

 

மத்திய அரசைப் பொறுப்பாக்குவதால் மாநில அளவில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் முதல் குஞ்சு குளுவான் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மாநில அரசியலில், அதுவும் கருணாநிதி ஜெயலலிதா அரசியலில் இருந்த வரை வெளிப்படையாக மாநில அரசியலைக் கேள்வி கேட்டு இவர்களுக்குப் பழக்கமில்லை. அதே பழக்கத்தை இப்போதும் தொடர்கிறார்கள்.

 

*

 

திண்ணைப் பேச்சுக்காரர்கள் வம்பளக்கும்போது எதாவது ஒன்றை எதோ ஒன்றுடன் கோர்த்துப் பேசுவார்கள் என்பதைப் பார்த்திருப்போம். ராணுவத்துக்குக் கோடி கோடியாகச் செலவழிக்கிறோம், ஆனால் தெருவில் பாதுகாப்பில்லை என்பது தொடங்கி, சைன்ஸ் சைன்ஸ்னு சொல்றாங்க, 21ம் நூற்றாண்டுன்னு சொல்றாங்க, ஒரு குழந்தையைக் காப்பாத்த முடியலை என்பார்கள். இதில் மேம்போக்கான நியாயம் உள்ளது என்பது சரிதான். ஆனால் நியாயம் மேம்போக்காக மட்டுமே உள்ளது என்பதுதான் பிரச்சினை.

 

இந்தத் திண்ணை வம்பின் ஒரு பரிமாணத்தை மட்டுமே இயக்குநர் அறம் படத்தில் காட்டி இருக்கிறார். பல கோடி ரூபாயில் ராக்கெட் விடும் அரசுக்கு ஒரு குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லை என்றால், ராக்கெட் ஒரு கேடா என்பதுதான் கம்யூனிஸ இயக்குநரின் புலம்பல். ராக்கெட் விடுவதும் அதனால் வரும் நன்மைகளை மக்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் வேறு. குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பது வேறு. ராக்கெட் விடுவதில் கவனம் செலுத்தும் அரசு குழந்தையைக் காப்பாற்ற கவனம் செலுத்தாது என்று சொன்னால் அது அயோக்கியத்தனமே. குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு ராக்கெட் விடுவது மோசடி என்பதும் இதற்கு இணையான இன்னுமொரு அயோக்கியத்தனமே.

 

எல்லோருக்கும் ஏற்பில்லாத நீர்ப் பற்றாக்குறை, ஆழ் துளைக் கிணறு பிரச்சினைகளையெல்லாம் ராக்கெட் விடுவதோடு தொடர்புபடுத்தி மத்திய அரசையும் எனவே இந்தியாவையும் அதை ஆதரிப்பவர்களையும் அராஜகவாதிகளாகச் சித்திரிக்கிறார் இயக்குநர்.  ராக்கெட் விடுபவர்களை ஆதரிப்பவர்களும் நீர்ப்பற்றாக்குறையையும் ஆழ் துளைக் கிணற்றில் குழந்தைகள் இறக்கும் பிரச்சினையை எதிர்க்கத்தானே செய்கிறார்கள் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதோடு ராக்கெட் விடுவது என்னவோ ஒரு அவசியமற்ற வேலை என்பதான எண்ணத்தை வெகுஜனங்களின் மத்தியில் விதைக்க பெரிய அளவில் மெனக்கெடுகிறார். இவை எல்லாமே ஆபத்தான மற்றும் நியாயமற்ற போக்குகள்.

 

இந்தப் போக்குகளின் ஊடே இன்னும் இரண்டு அநியாயங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர். ஒன்று, ஐஏஎஸ் அதிகாரி முட்டாள்தனமாக உணர்ச்சிப் பெருக்கில் செயல்படுவதுதான் சரி என்பதோடு, யோசித்து யதார்த்தமாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் எல்லாம் முட்டாள்கள், அநியாயக்காரர்கள், கொலைகாரர்கள் என்கிற பார்வையைப் படம் நெடுகிலும் கொண்டு வந்தது. இன்னொன்று, அறிவியல் என்பதே அவசியமற்றது, மாறாக அசட்டு நம்பிக்கையே தேவையானது என்ற பார்வை.

 

ஐஏஎஸ் அதிகாரியாக நயன்தாரா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான வாழ்நாள் வேடமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த ஐஏஎஸ் கதாபாத்திரம் வார்க்கப்பட்டிருக்கும் விதம், ஒரு கம்யூனிஸ்ட்டின் கனவு என்பதைத் தாண்டி எந்த வகையிலும் யதார்த்தம் கொள்ளவில்லை. குழந்தை உயிருக்குப் போராடும்போது மக்களின் கண்ணீர் துடைக்கிறேன் என்று அரசு ஊழியர்களையே கேள்வி கேட்பதும் மக்களோடு சேர்ந்துகொண்டு இன்னொரு குழந்தையை உள்ளே செலுத்துவது என்று முட்டாள்தனமான முடிவெடுப்பதும் என இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

ரஜினியோ அஜித்தோ தன் எதிரிகளை ஆயிரம் பேரை ஒரே ஆளாகத் தூக்கிப் போட்டு மிதிக்கும் கற்பனைகள்கூட ஆபத்தில்லாதவை. அவற்றில் முட்டாள்தனம் மட்டுமே உண்டு, அதற்குப் பின்னால் அரசியல் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட ஐஏஎஸ் கதாபாத்திரத்தின் அசட்டுத் துணிச்சலுக்குப் பின்னே, ஆளும் வர்க்கத்தின் மீது நம்பிக்கையின்மையை விதைக்கும் அரசியல் உள்ளது. ஆளும் வர்க்கம் புனிதமானது அல்ல. அதே சமயம் அந்தப் புனிதத்தன்மையைக் கேள்வி கேட்பது முட்டாள்தனத்தின் வழியாகவோ, மக்களை உணர்வுரீதியாக மட்டுமே தூண்டிவிடும் முயற்சிகளின் வழியாகவோ இருக்கக்கூடாது. கோபி நயினார் எவ்விதத் தர்க்கமும் இன்றி இந்தியாவின் அறிவியல் முயற்சிகளைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கில் மனம் போன போக்கில் மட்டுமே அணுகுகிறார்.

 

மத்திய அரசுக்கு எதிரான ஒரு போக்கு ஒருவேளை சிலருக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் கூட, அதை அப்படியே இந்தியாவுக்கு எதிராகக் கட்டமைக்கவேண்டும் என்பது மட்டுமே கோபி நயினாரின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. மத்திய அரசுக்கு எதிரானவர்கள் இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது அவர்கள் சொல்லும் கருத்துக்கும், இந்தியாவின் மீது வெறுப்பைக் கொண்டிருப்பவர்கள் அதே கருத்தைச் சொல்லும்போது அது எதிர்கொள்ளப்படும் விதத்துக்கும் நிச்சயம் வேறுபாடு இருந்தே தீரும்.

 

இந்த எதிர்ப்பில் பிற்போக்குத்தனமான கருத்துகளைச் சொல்வதோடு உதவ வரும் அரசு இயந்திரங்களையும் கேலி பேசுகிறார் இயக்குநர். தன் மனைவி மயக்கம் போட்டு விழும்போது மருத்துவர்களின் உதவி தேவையில்லை என்பதை நியாயப்படுத்தும் இயக்குநர் சொல்ல வருவது என்ன? யாருடைய உதவியும் தேவையில்லை, நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம் என்றொரு கிராமம் எல்லா சமயத்திலும் முடிவெடுக்க முடியுமா? இத்தனைக்கும் ஒரு குழந்தை குழியினுள்ளே விழுந்ததும் அனைத்து அரசு இயந்திரமும் விழுந்தடித்துக்கொண்டே அங்கே வருகிறது. அங்கேயே நிற்கிறது. இப்படிக் குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்றத் தேவையான வசதிகளும் கருவிகளும் இல்லை என்று அந்த அரசு இயந்திரமும் கவலைப்படத்தான் செய்கிறது. இதையெல்லாம் தன்னை அறியாமலேயே படத்தில் பதிவு செய்திருக்கிறார் கோபி நயினார்.

 

இத்தனைக்குப் பிறகும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் பங்களிப்பையும் சிறுமைப்படுத்தும் விதமாகவும் மறைக்கும் விதமாகவும் இந்திய எதிர்ப்பு இந்தப் படத்தில் மையச் சரடாகப் பின்னப்பட்டுள்ளது. காவல் துறையின் உதவி, அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, இந்திய அரசு அதிகாரியான ஐஏஎஸ்ஸின் அர்ப்பணிப்பு (மடத்தனமாக நடந்துகொண்டபோதும் உள்நோக்கம் குழந்தையைக் காப்பாற்றுவதுதான்) என எல்லாவற்றையும் பின் தள்ளி, இந்திய எதிர்ப்புக் குரலும் அறிவியலைக் கிண்டலடிக்கும் அறிவீனக் குரலும் ஓங்கி ஒலிக்கின்றன.

 

இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் குடித்துவிட்டு, குழியினுள் விழுந்த குழந்தையின் தந்தையைப் பார்த்தும் காவல்துறையைப் பார்த்தும் பேசிக்கொண்டே இருக்கும். குழந்தையின் தந்தையைப் பார்த்து, இவங்க நம்ம குழந்தையைக் காப்பாத்த மாட்டாங்க என்றும் அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் கேலி செய்தும் புலம்பிக்கொண்டே இருக்கும். அக்கதாபாத்திரம் வேறு யாருமல்ல, முற்போக்காளர்கள் என்ற பெயரில் அவநம்பிக்கையை மட்டுமே விதைத்துக்கொண்டிருக்கும் நபர்களின் உருவம்தான். இந்திய எதிர்ப்பையே எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கும் நபரின் பிரதிபலிப்புதான் அந்தக் கதாபாத்திரம். ஒருவகையில் அவர் இயக்குநர் கோபி நயினார்தான்.

 

*

 

1990ல் மாலூட்டி என்றொரு மலையாளத் திரைப்படம் பரதன் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து பரவலாகக் கவனம் பெற்றது. அச்சு அசலாக ‘அறம்’ திரைப்படத்தின் அதே கதைதான். ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட செல்லக் குழந்தை ஆழ் துளைக்காகத் தோண்டப்பட்ட கிணற்றுக் குழியில் விழுந்துவிடும். அதை எப்படித் தூக்குகிறார்கள் என்பதே கதை.

 

 

‘அறம்’ திரைப்படத்தைப் போலவே முதல் காட்சிகளில் கணவன் மனைவியின் கூடல் காட்சிகளெல்லாம் வரும். மாலூட்டியில் அக்காட்சிகள் மிகுந்த செயற்கைத்தனத்துடன் இருக்கும். ‘அறம்’ படத்தில் இக்காட்சிகள் மிக யதார்த்தமாக உள்ளன. இக்காட்சிகளில் வரும் நடிகை, இப்படத்தின் கதாநாயகி நயன்தாராவின் நடிப்பையும் தாண்டிச் செல்கிறார். ‘அறம்’ படத்தைப் போலவே ‘மாலூட்டி’ படத்திலும் காவல்துறை, அரசு இயந்திரம் என எல்லாரும் சேர்ந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவார்கள். எனவே ‘அறம்’ திரைப்படம் கதை மற்றும் திரைக்கதை என்ற வகையில் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆனால் அக்களத்தைத் தன் அரசியலுக்குத் தேவையான வகையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். ‘மாலூட்டி’ படத்தில் இத்தகைய அரசியல் எதையும் பரதன் முன்வைக்கவில்லை. ஒரு கடினமான நேரத்தில் பொது மக்கள் சொல்லும் குறைகளும் புலம்பல்களும் காட்டப்படத்தான் செய்தன. ஆனால் அப்படியே அவை வளர்ந்து இந்திய வெறுப்புத் தோற்றத்தைக் கைக்கொள்ளவில்லை. அங்கேதான் ‘அறம்’ அரசியல் படமாகிறது.

 

*

 

‘அறம்’ திரைப்படத்தில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கில் மனம் வெறுத்துத் தன் வேலையை ராஜினாமா செய்யும் ஐஏஎஸ் அதிகாரி எம்எல்ஏ ஆகிறார். அல்லது முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ ஆகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் கொள்கைகளைப் பார்த்தால் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகவே இருக்கமுடியும் என்று யூகிக்கலாம். அல்லது சுயேச்சையாக வென்றிருக்கலாம் என்று தர்க்கம் செய்யலாம். எப்படி இருந்தாலும் அது இயக்குநரின் கனவு என்பதைப் புரிந்துகொள்ளலாம். அரசு அதிகாரி அரசுக்கு எதிராக மனம் நொந்து அரசுப் பணியில் இருந்து விலகி அரசின் அங்கமாகவே மாறும் ஒரு கனவு. உண்மையில் இந்தக் கனவு இன்றும் சாத்தியம் என்பதுவே இந்தியா நமக்களித்திருக்கும் கொடை. ஆனால் இயக்குநர் இந்தக் கனவைச் சொல்ல இந்திய எதிர்ப்புக்கான களத்தை அமைத்துக்கொள்கிறார். ராக்கெட் விடுவதைக் கேலி செய்யும் காட்சிகள் உணர்வு ரீதியாக மக்களைத் தன்வயப்படுத்த மட்டுமே. உண்மையில் நமக்குத் தேவை, ராக்கெட் விடுவதும்தான், இனி ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடாமல் இருப்பதும்தான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பதும், ஒன்று நிகழும் வரை இன்னொன்று நிகழ்வது ஒரு கேடா என்று சொல்வதும், அறிவுபூர்வமான தர்க்கங்களல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். இந்தப் புரிதல் இருந்தால் மட்டுமே அறம் போன்ற திரைப்படங்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்கமுடியும்.

Share

அந்திமழை ஏப்ரல் 2018

அந்திமழை ஏப்ரல் 2018 இதழ் –

(உடனே அடுத்த அந்திமழை இதழில் நான் எழுதப் போகிறேனா என்று கேட்கப் போகிறவர்கள் நடையைக் கட்டவும்.)

நாற்காலிக் கனவுகள் என்ற தலைப்பின் கீழ் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. என்றாலும் தூக்கிச் சாப்பிடும் கட்டுரை நாற்காலிக் கனவைப் பற்றியதல்ல. டி.எம். சௌந்தர ராஜனைப் பற்றியது. இன்னும் துலக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், விஜயராஜ் என்பவர் டி.எம்.எஸ்ஸைப் பற்றி எடுத்திருக்கும் ஆவணப்படம் பற்றியது. (மதிமலர் என்பவர் எழுதி இருக்கிறார்.)

1968லேயே இளையராஜா இசையமைப்பில் தீபம் என்ற படத்துக்காக (பின்னர் சிவாஜி நடித்து வெளிவந்த தீபம் அல்ல) ‘சித்தம் தெளிவடைய முருகனருள் தேடு’ என்ற பாடலை டி.எம்.எஸ் பாடி இருக்கிறார் என்ற தகவலை கங்கை அமரன் சொல்லி இருக்கிறார்! அந்தப் பாட்டை இந்த ஆவணப்படத்தில் சேர்த்திருக்கிறாராம் விஜயராஜ். ஆச்சரியம். (சொக்கன் முன்பு சொல்லித்தான், தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு நபிநாதரிடம் போய்ச் சொல்லு பாடலும் ராஜா இசையமைத்தது என்ற ஆச்சரியமான தகவல் தெரியும்!) இந்தக் கட்டுரையை வாசிக்க: http://andhimazhai.com/news/view/tms-special-article-642018.html (ஆன்லைனில் தொடரும் என்று போட்டிருக்கிறார்கள். அச்சிதழில் தொடரும் என்றெல்லாம் இல்லை.)

இன்னுமொரு சுவாரஸ்யம், ஆவணப்படத்துக்காக ராஜாவும் டிஎம்எஸ்ஸும் சந்தித்துப் பேசியது. அதில், புதிய குரல்களுக்காகத்தான் டிஎம்எஸ்ஸைப் பயன்படுத்தவில்லையே தவிர அவரை ஒதுக்கவில்லை என்று ராஜா அவரிடமே சொல்லி இருக்கிறார். மற்றபடி தான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த ஆண்குரல் டிஎம் எஸ் என்று ராஜா சொல்லி இருக்கிறார்.

இந்த ஒரு கட்டுரைக்காக இந்த இதழை வாசிக்கவேண்டும். சிறிய கட்டுரைதான்.

நாற்காலிக் கனவுகள் தலைப்பில் வந்த கட்டுரையில் மாலனின் கட்டுரை (வைகோ பற்றியது) அட்டகாசம். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அதை வெளியிட்டார் என நினைக்கிறேன். மற்றவை எல்லாம் மிக அவசரத்தில் அல்லது இடப்பற்றாக்குறையில் எழுதப்பட்டவை போல உள்ளன.

அகில் எழுதிய கட்டுரையில், எம்ஜியார் எஸ் எஸ் ஆர் கழகம் என்ற பெயரில் எஸ் எஸ் ஆர் ஒரு கட்சி தொடங்கினார் என்ற செய்தி (மட்டும்!) வியப்பளித்தது.

இந்த இதழில் சில பக்கங்கள் கனடா சிறப்பிதழாகவும் வந்துள்ளது. அதில் அ.முத்துலிங்கத்தின் (சுமாரான) பேட்டி ஒன்றும் வெளியாகியுள்ளது.

மேக்ஸ்டரில் கிடைக்கும் என நினைக்கிறேன். தேவைப்படுபவர்கள் வாங்கி வாசிக்கவும்.

Share

போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்

போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்

* அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் உடைக்கப்படும் பஸ்கள் மற்றும் ரயில்களுக்கான சேதாரத்தை அந்தக் கட்சியிடமிருந்து வசூலிக்கவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் அந்தக் கட்சியைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. கடைக்காரரே உடைத்துக்கொண்டார் என்றால் அதை கட்சியே நிரூபிக்கவேண்டும். நிரூபிக்க முடியாதே என்றால் போராட்டம் நடத்தக்கூடாது. இது பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, அதிமுக, திமுக என எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதென்பதறிக.

* அரசியல் கட்சிகள் அல்லாத அமைப்புகள் போராட்டம் நடத்தி அதனால் ஏற்படும் நஷ்டங்களை அந்த அமைப்பு தரவேண்டும். இல்லையென்றால் அந்த அமைப்பைத் தடை செய்யவேண்டும். இது ஆர் எஸ் எஸ் உட்பட்ட எல்லா அமைப்புக்கும் பொருந்துமென்பதறிக.

* பரிட்சை நடக்கும் நாளில் எவ்விதப் போராட்டமும் நடக்கக்கூடாது. அப்படி அல்லாமல் ஏதேனும் கட்சியோ அமைப்போ போராட்டத்தை அறிவிக்குமானால் அந்த அமைப்பின் தலைவர்களைக் கைது செய்யவேண்டும். போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், அந்தக் கட்சி தேர்தலில் பங்கேற்பதை ஒரு தடவை தடை செய்யவேண்டும். அமைப்பை ஒரு வருடத்துக்குத் தடை செய்யவேண்டும்.

* உண்ணாவிரதம் என்பதே குறைந்தது மூன்று நாள் உண்ணாவிரதமாக இருக்கவேண்டும். காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரையிலான டுபாக்கூர் உண்ணாவிரதத்தை உடனே தடை செய்யவேண்டும். மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்து, முதல் ஒரு மணி நேரத்திலேயே உண்ணாவிரதத்தின் காரணம் சரியானால்கூட, மூன்று நாள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து நடத்தி முடிக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயவேண்டும். அப்படி ஒருவேளை, தெரியாத்தனமா இருந்துட்டேன் என்று உண்ணாவிரதம் இருப்பவர் கதறினால், பொதுவில் இனி ஒருநாளும் என் வாழ்நாளில் உண்ணாவிரதம் இருக்கமாட்டேன் என்று அவரைச் சொல்லச் சொல்லி அதை லைவ் வீடியோவாக ஒளிபரப்பவும் வேண்டும். பின்னர் மட்டுமே அவர் அந்த உண்ணாவிரதத்தைக் கைவிடலாம். கருணாநிதி தொடங்கி ஜீயர் வரை அனைவருக்கும் இவ்விதி பொருந்துமென்றறிக.

* வெள்ளிக் கிழமையோ திங்கள் கிழமையோ அல்லது இரண்டு விடுமுறைகள் வரும் நாளுக்கு முதல் நாளோ மறுநாளோ பந்தோ கடையடைப்போ நடத்தக்கூடாது.

* எந்தத் தொலைக்காட்சியும் பந்தை நேரடியாக அரை மணி நேரத்துக்கு மேல் ஒளிபரப்பக்கூடாது. கலவரம் என்றால் நிச்சயம் ஒளிபரப்பக்கூடாது. இரண்டு நாள் கழித்து கொஞ்சம் வேகம் அடங்கியதும் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிக்கொள்ளலாம்.

நிபந்தனைக்குட்பட்டு நீங்க போராட்டம் நடத்தி எங்களுக்கு நல்லது செஞ்சா போதும்.

#மனம் நதிநீர் போல அமைதியாக இருக்கும்போது எழுதிய பதிவு இது.

Share

எஸ்ரா உரை – தி ஹிந்து லிட் ஃபார் லைஃப்

எஸ்.ராமகிருஷ்ணன் உரை – தி ஹிந்துவின் லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சியில் பேசியதைக் கேட்டேன். எஸ்ரா ஒட்டுமொத்த பங்களிப்பைப் பற்றிய பேச்சில் வல்லவர். அவரது நினைவாற்றலும் பரந்த வாசிப்பும் அவற்றைப் பொருத்தமாகவும் கச்சிதமாகவும் வெளிப்படுத்துவதிலும் வல்லவர். எடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து பெரும்பாலும் விலகாதவர். இப்பேச்சும் அப்படியே.
 
தமிழ்ச் சிறுகதைகளின் உன்னதத்தைப் பற்றியும் அச்சிறுகதைகளின் பரந்து பட்ட களம் பற்றியும் தெளிவாகப் பேசினார். கதையில் முதல் வரியிலேயே கதை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற பிரபலமான சிறுகதை விதி என்று நம்பப்படுவதை அறவே மறுத்தார். இக்கருத்து பிரஞ்சுக் கதைகளின் வழியே நம்மை வந்தடைந்தது என்றும், ரஷ்ய சிறுகதைகள் இப்படியானதொரு வரைவைக் கொண்டிருக்கவில்லை என்றும் சொன்னார். உலக, இந்தியச் சிறுகதைகளிலும் தமிழ்ச் சிறுகதைகளே பரந்துபட்டவை என்றும், அவற்றிலும் இன்னும் பரவலாக எழுதப்படாத களங்கள் உள்ளன என்று சொல்லி அவற்றில் ஒன்றிரண்டைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
 
ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருக்கிறார் என்பது பெரியதல்ல. அவற்றை நினைவில் வைத்திருக்கிறார் எஸ்ரா என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு கதையின் பெயரைச் சொன்ன உடனேயே, அது முக்கியமான கதையாக இருந்தால், அவற்றை அப்படியே விவரிக்கும் திறமையும் நினைவாற்றலும் எஸ்ராவுக்கு உள்ளது. எனக்குள்ள பிரச்சினை, ஒரு கதை ஒரு காப்ஸ்யூலாகி எனக்குள் உறைந்துவிடும் என்பதுதான். அதை ஒரு உருவகமாகவும் ஒரு வரியாகவும் ஒரு கதையாகவும் மட்டுமே மீண்டும் என்னால் நினைவுக்குக் கொண்டு வரமுடியும். நான் எழுதிய கதைகள் உட்பட! ஆனால் எஸ்ராவுக்கு எல்லாமே நினைவுக்கு வருகிறது. இந்த நினைவாற்றல் மிக முக்கியமானது. ஒரு வழியான பயிற்சியும் கூட இது.
 
நினைவுக்கு வந்த சிறுகதையாளர்களின் பட்டியலை வாசித்தார். பெரும்பாலானவர்களை நானும் வாசித்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவேண்டியவை ஏகப்பட்டவை உள்ளன என்னும் எண்ணம் சோர்வையும் நம்பிக்கையையும் ஒருசேர அளித்தது.
 
கடைசியில் ஒரு கதையைச் சொன்னார் எஸ்ரா. (ரஷ்ய கதை என நினைக்கிறேன்.) அந்தக் கதையின் சர்வாதிகார ராணுவ அதிகாரி, எழுத்தாளர்களைத் தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மனம் மாறுகிறார் – இலக்கியத்தை வாசித்து. இங்கேதான் நான் குழம்பிப் போன இடம். அல்லது என்னைக் குழப்பிக்கொண்ட இடம். இலக்கியத்துக்கென வாழ்வில் நிச்சயம் ஒரு இடம் உள்ளது என்பதை நம்புகிறேன். இலக்கியம் ஒருவனைத் தீவிரமாக்குகிறது என்பதாக மட்டுமே என் நம்பிக்கை இத்தனை காலங்களில் வந்து சேர்ந்திருக்கிறது. நல்லவனை மிகத் தீவிரமான நல்லவனாக, இலக்கிய ரீதியிலான ஆழ்மன தர்க்கங்களுடன் நல்லவனாக ஆக்குகிறது. கெட்டவனையும் அப்படியே. சூதுவாது கொண்டவர்களையும் அப்படியே. இலக்கியம் இவர்கள் எல்லாவருக்குமான இடத்தையும் தர்க்கங்களின் வழியே அமைத்துக் கொடுக்கிறது.
 
அப்படியானால் இலக்கியம் ஒருவனை நல்லவனாக்குவதில்லையா என்றால், என் பதில் – முன்பெல்லாம் திரையரங்குகளில் ‘மேற்படி’ படங்கள் திரையிடப்படும். அதில் இடைவேளைக்குப் பிறகு இருபது நிமிடங்கள் கழித்து, அறிவியல் ரீதியான உண்மைகளைச் சொல்லத் துவங்குவார்கள். இப்படங்களைப் பார்த்து ஒருவர் அறிவியல் ரீதீயான உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது தர்க்க ரீதியாகச் சரிதான். இதே தர்க்க ரீதியாக மட்டுமே இலக்கியம் ஒருவனை நல்லவனாக மாற்றமுடியும். என்னைப் பொருத்தவரை இலக்கியம் ஒருவனை தீவிரமாக சிந்திக்கச் செய்கிறது என்பதை மட்டும் ஏற்கிறேன். மற்றபடி அதன் விளைவு அந்தத் தனிமனிதனின் இயல்பு தொடர்பானதே. அவனுக்குள் இருக்கும் அந்த நல்லவனில் இலக்கியம் உரசினால் அதன் விளைவு நல்லதாக இருக்கும்.
 
இப்படிச் சொல்வதால் நான் இலக்கியத்தை நம்பவில்லை என்பதல்ல. நிச்சயம் நம்புகிறேன். எனக்கான ஒரே திறப்பு அதுதான் என்றும் உறுதியாக நம்புகிறேன். நிபந்தனைக்குட்பட்டு. இதனால் என்னை நம்பிக்கையின்மைவாதி எனலாம். அதுவும் உண்மைதான்.
 
அப்படியானால் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்துக்கும் வாழ்வில் என்ன பங்களிப்பு என யோசித்தேன். அவை சிறுவயது முதலே வாழ்க்கையில் நமக்கு ஊட்டப்படுகின்றன. அவையே நம் வாழ்வின் பற்றுக்கோல்கள் என்ற அளவிற்கோ, மாதிரி என்ற அளவுக்கோ சொல்லப்படுகின்றன. அவற்றைக் கேட்டவர்களும் இன்று வாழ்வில் அதன்படி உள்ளவர்களுக்குமான வேறுபாட்டைப் பார்த்தாலும் நான் சொல்வது பொருந்தித்தான் போகிறது. அதேசமயம் இதிகாசங்களால் வாழ்க்கையில் ஒரு முடிவை எடுத்து வாழ்பவர்களை நம் மரபும் கலாசாரமுமே அப்படி நடக்க வைக்கிறது என்று நம்புகிறேன். இந்த அட்வாண்டேஜ் நவீன இலக்கியங்களுக்கு இன்று இல்லை.
 
நேரம் கருதி எஸ்ரா சுருக்கமாகப் பேசி இருக்கிறார் என நினைக்கிறேன். இது தொடர்பாக எஸ்ரா நீண்ட உரை ஒன்றை விரிவாகப் பேசலாம். அது பெரிய ஆவணமாக இருக்கும்.
 
உரையைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=6huZMOzZGhE
Share