தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா?
தமிழ்நாட்டின் தொன்மம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா?
மத்திய அரசின் உள்நோக்கம் என்ன?
கீழடி அரசியல் குறித்த விரிவான விவாதம் – எஸ்.கிருஷ்ணனுடன்.
தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா?
தமிழ்நாட்டின் தொன்மம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா?
மத்திய அரசின் உள்நோக்கம் என்ன?
கீழடி அரசியல் குறித்த விரிவான விவாதம் – எஸ்.கிருஷ்ணனுடன்.
வடக்கன் (M) – சுமாரான திரைப்படம்தான். ஆனால்…
சில மலையாளப் படங்களை சுமார் என்று சொல்லிவிட்டு ஆனாலும் புறக்கணிக்க முடியாததாக இருக்கிறது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. அதிலும் சமீபமாகப் பார்த்த திரைப்படங்கள் எல்லாமே அந்த வகையில் வருகின்றன. ஆஹா ஓஹோ என்று கொண்டாடவும் முடியவில்லை. சுத்தக் குப்பை என்று தள்ளவும் முடியவில்லை. அதில் ஒன்று வடக்கன்.(ஹிந்தி வடக்கன் என்ற பொருளில் அல்ல.)
பேய்த் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். நமக்கு அதிகம் அறிமுகமானது காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள்தான். ஆனால் மலையாளத்தில் வேறு வகையும் வருகின்றன. குமாரி, பூதகாலம், பிரமயுகம் போன்ற சைக்காலஜிக்கல் ஹாரர். இதில் இந்த மூன்றுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானவை. அந்த மூன்று திரைப்படங்களிலும் எனக்குச் சில குறைகள் இருந்தாலும் கூட, அவை முக்கியமான திரைப்படங்கள் என்பதில் மாற்றமில்லை.
இந்தத் திரைப்படம் அந்த அளவுக்குப் போகவில்லை என்பது பெரிய குறை. முதல் முக்கால் மணி நேரம் சாகடித்து விட்டார்கள். ஏன் இந்தக் கொடுமையைப் பார்க்க வேண்டும் என்று விடை தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மெல்ல மெல்ல கதை விறுவிறுப்பாகிறது. சைக்கலாஜிக்கல் தில்லர் வகைக்குள் போகிறது. ஃபிளாஷ்பேக் கட்சிகளில் ஜாதிய வேறுபாடு, தெய்யம் ஆட்டம், அதன் பின்னால் இருக்கும் காமம் என்று பலவற்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கதையில் எந்தப் புதுமையும் கிடையாது. ஆனால் அதை எடுத்த விதம் பார்க்க வைக்கிறது. குறிப்பாக அந்தப் பாடல் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
வழக்கமான பேய்ப் படங்கள் போல அல்லாமல் ஒரு சீரியஸான பேய்ப் படமாக எடுத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் கதாநாயகியின் நடிப்பு, ஐந்து நிமிடங்கள்தான் என்றாலும் கூட, மிரள வைக்கிறது. இன்னொரு குறை என்று பார்த்தால் கதாநாயகனாக கிஷோரை நடிக்க வைத்தது.
பொறுமையாக, கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் வேண்டும் என்று நினைப்பவர்கள் நேரமிருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
முக்கியமான விஷயம் 18+ திரைப்படம்.
மூன்று விதிகள்
ஒரு விருதைத் தீர்மானிக்கும் நடுவர் குழுவில் இடதுசாரி ஆதரவாளர்களோ திராவிட இயக்க ஆதர்வாளர்களோ இருந்தால், அந்த விருது பாஜக தலைமையிலான அரசு தரும் விருதாகவே இருந்தாலும் கூட, அவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது கொள்கைக்கு எதிரான புத்தகங்களையோ எழுத்தாளர்களையோ கௌரவிக்கவே மாட்டார்கள். இது விதி 1.
அதே பாஜக அரசில் இடதுசாரி எதிர்ப்பாளர்களோ திராவிட எதிர்ப்பாளர்களோ நடுவர்களாக அமரும்போது, அவர்கள் தங்களை நடுநிலையானவர்கள் என்று 100% நம்பிக்கொண்டு அவர்களும் இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் திராவிட ஆதரவு எழுத்தாளர்களுக்குமே பரிசுகளைத் தருவார்கள். இது விதி 2.
விதி 3: இதுவே தலைவிதி.
விருதுகள் தகுதியானவர்களுக்குத் தரப்படுவதில்லை, அதில் லாபி இருக்கிறது என்று இடதுசாரிகளும் திராவிட ஆதர்வாளர்களும் கூடுதலாக எழுத்தாளர்களுமாக இருப்பவர்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே விருதுகள் எதிர்-இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் எதிர்-திராவிட எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படுவதில்லை என்பதில் உள்ள லாபியைப் பற்றி, அறமின்மையைப் பற்றி, அரசியலைப் பற்றி ஒருபோதும் இவர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். சந்தோஷமும் படுவார்கள்.
ஜோடி குரூஸ் போன்ற ஒருவருக்கு ஒருவேளை எப்போதாவது விருது கிடைத்துவிட்டால் அவர் அந்தக் காலத்தில் மோடி ஆதரவாளர் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டு, அவருக்கு எப்படி விருது தரலாம் என்று பொங்கவும் செய்வார்கள். விருதுக்கு முதலில் ஆதரவு தந்தவர்களோ பயந்து போய் ‘அவர் இப்படி ஒரு அரசியலுக்கு ஆதரவாளராக இருப்பார் என்பது எங்களுக்குத் தெரியாது’ என்று பம்மு பம்மென்று பம்மவுவும் செய்வார்கள்.
‘நீங்க மட்டும் மோடியையும் பாஜகவையும் சப்போர்ட் செய்யலன்னா நல்லா இருக்கும்’ என்று என் காது படவும் என் காதுக்குப் பின்னாலும் பேசியிருக்கிறார்கள். அதில் இருப்பது அக்கறை என்றாலும் இதைச் சொல்பவர்களே இடதுசாரி மற்றும் திராவிட ஆதரவாளர்களுக்குச் சிங்கி அடிப்பதை மறந்து விடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நெஞ்சம் முழுக்க, ‘நான் ஒரு நடுநிலையாளர். ஏனென்றால் நான் எழுத்தாளர்’ என்கிற சுய-ஏமாற்று மண்டிக் கிடக்கிறது.
இரட்டை நாக்குகள் இப்படித்தான் உருவாகி இதுவே நியாயம் நேர்மை என்று நிலை செய்யப்படுகின்றன. அதைத் தாண்டி இந்த லாபிச் சண்டை எல்லாம் சொல்ல வருவது, ‘நானும் திராவிட இயக்க ஆதரவாளர்தானே… நானும் இடதுசாரி ஜால்ராதானே… எனக்கு ஏன் தரப்படுவதில்லை?’ என்பதைத்தான். ‘என்னை விட சிறப்பாக எழுதும் எதிர்க் கருத்துக் காரனுக்கு ஏன் தரப்படுவதில்லை?’ என்பதை அல்ல.
நான் விருதுகள் குறித்து இன்று எழுதியவை, அது கிடைக்கவில்லையே என்று எழுதப்பட்ட பதிவுகளைப் படித்து மட்டுமே.
விருதுகள் பெற்றவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு விருதைப் பெற்றுத் தந்திருக்கும் புத்தகங்களைப் படிக்காமல் கருத்துச் சொல்வது தவறு. ஒருநாளும் நான் அதைச் செய்ய மாட்டேன். மேலும் அவர்கள் எழுதிய எந்த ஒரு நூலையும் நான் இதுவரை வாசித்ததில்லை என்னும்போது நான் கருத்துச் சொல்ல அல்ல, நினைக்கக் கூடக் கூடாது!
என் ஆதங்கமெல்லாம் விருதுக்குப் பின்னால் இருக்கும் அல்லது விருது வழங்கிய பிறகு நடக்கும் சடங்குகளைப் பற்றி மட்டுமே.
விருது பெற்ற புத்தகங்கள் நன்றாக இருக்குமானால், அதை ஏற்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது நன்றாக இல்லை என்றால் அதைப் பொதுவில் சொல்லவும் எனக்குத் தயக்கமில்லை. முன்பே சொல்லியும் இருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். அதாவது மீ டூ ஸேம் நடுநிலை! :>
இந்த விளக்கம் எதற்கென்றால் என் இடுகைகளில் சிலர் ‘விருது பெற்றவர்கள் மீது எனக்கு வருத்தம்’ என்ற பொருளில் கமெண்ட் போட்டதால்தான்.
Eleven (T) – இந்தப் படம் மிக நல்ல படம் என்று அனைவரும் சொல்கிறார்கள் என்றால் தமிழ்ப் படங்களைப் பார்த்து பார்த்து தமிழர்கள் எத்தனை காய்ந்து போய்க் கிடக்கிறார்கள் என்பது புரியும். படத்தின் முதல் ஒரு மணி நேரம் தாங்க முடியாத அறுவை. பின்பு போனால் போகிறது என்று மெல்ல வேகம் எடுக்கத் தொடங்குகிறது. அப்போதும் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். அடுத்தடுத்து என்ன வரும் என்று வசனத்திலிருந்து கதை முதல் அத்தனையையும் சொல்லிக் கொண்டே வர, அனைத்தும் அப்படியே திரையில் வந்தன.
கடைசியாக ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். படம் பார்க்கிறவனை எல்லாம் பைத்தியக்காரன் என்று இயக்குநர் நினைத்தால்தான் அப்படி ட்விஸ்ட் வைக்கத் தோன்றும். அந்த டிவிஸ்ட்டுக்கு அடுத்து இன்னொரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். அது மட்டும் கொஞ்சம் ஓகே. ஆனால் இதைப் போன்ற படங்கள் எல்லாம் எரிச்சலைத் தருகின்றன.
சின்ன வயதில் சிறுவர்கள் தெரியாமல் செய்ததற்கு இத்தனை கொடூரமான தண்டனை. இத்தனைக்கும் அவர்கள் பெரிய அளவில் எதையும் செய்துவிடவில்லை. கல்லூரி என்று காண்பித்திருந்தால் கூட ஓகே. பள்ளியில் பசங்களுக்கு என்ன தெரியும்? அதற்காக 11 பேரை ஒரு சைகோ கொல்கிறான். அவன் மேல் அத்தனை பரிவு வரும்படி திரைக்கதை. அந்த டீச்சர் சரியான பைத்தியக்கார டீச்சராக இருக்க வேண்டும். முதலில் அந்த டீச்சரை உள்ளே தள்ள வேண்டும. என்ன ஆனாலும் பெஞ்சமினுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்கிறார். 10 பேர் இறந்தது அந்தப் பெண்ணுக்குத் பெரிதாக தெரியவில்லை. ஆனால் பெஞ்சமின் உயிர் போய் விடக் கூடாது என்பதில் அத்தனை அக்கறை.
படத்தில் வில்லன் பெயரை பெஞ்சமின் என்றதும் ஆஹா கிறித்துவப் பெயர் வைத்திருக்கிறார்களே, அதுவும் பிரபு சாலமன் தயாரிப்பிலா என்று ஆச்சரியப்பட்டேன். பெஞ்சமின் கொலை செய்வது சரிதான் என்று கடைசி வரை பார்வையாளரை நம்ப வைக்கும்படியான திரைக்கதை எழுதி, அவனைத் தியாகியாக்கி… நல்லா உழைக்கறீங்கப்பா.
நடித்து விடக்கூடாது என்பதில் ஹீரோ மிகக் கவனமாக இருந்திருக்கிறார். ஹீரோயின் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. அடுத்தடுத்த படங்களில் துணை நடிகையாக நடிக்கப் போவது நல்லது. ஹீரோ மெல்ல நடந்து வருகிறார் அவர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து போவதற்குள் இரண்டு முறை பார்வர்ட் செய்து படம் பார்த்தால் சீக்கிரம் படத்தை பார்த்து முடித்து விடலாம். இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி இந்தத் திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
ஆலப்புழா ஜிம்கானா (M) – சுமார். ஆனா…
வித்தியாசமான கதைக் களம். ஆனால் கதையே இல்லை. முழுக்க முழுக்க இளமைக் கொண்டாட்டம். இளைஞர்கள் கூட்டம். எத்தனை எத்தனை இளைஞர்கள்! கலக்குகிறார்கள். படத்தில் முதியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். படத்தின் முதல் ஒரு மணி நேரம் பட்டாசு. நறுக்குத் தெறிக்கும் வசனங்கள் ஆங்காங்கே புன்னகை பூக்க வைக்கின்றன. அதிலும் ஆலப்புழா ஜிம்கானா குத்துச் சண்டை வளையத்துக்குள் இறங்கத் தயாராகும்போது பாடும் பாடல் – அப்படி ஒரு சிரிப்பு வந்தது எனக்கு. ஆனால், படம் பாக்ஸிங் களத்துக்குள் வந்ததும் அதே வைப் தொடர்ந்தாலும், ஒரு கட்டத்தில் சலிப்பாகிறது. அதன் பின்னர் படம் ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறது. நஸ்லேன் காஃபூர் நடிப்புக்காகவும், படத்தின் கேமரா மற்றும் எடிட்டிங்கிறாகவும் நிச்சயம் பாருங்கள்.
படக்களம் (M) – சுமார். ஆனால்…
படம் பார்க்க நினைச்சது ஒரு குத்தமாய்யா! மண்டையை இப்படிக் குழப்பி விட்டீங்களே. இவனுக்குள்ள யாருன்னு அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே படம் பார்த்தேன். கதை பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். அந்தத் திறமையைத் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.
தமிழில் மரகத நாணயம் திரைப்படத்தில் இப்படி ஒரு பிளாட் உண்டு. அதற்காகவே அந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த யோசனையை இந்தப் படத்தில் இன்னும் ஆழமாக விரிவாகக் கையாண்டு இருக்கிறார்கள். பல காட்சிகள் லேசாகச் சிரிக்க வைக்கின்றன. ஆனாலும் இடைவேளைக்குப் பிறகு ஒரு கட்டத்தில் போதும்டா உங்க விளையாட்டு என்று தோன்றாமல் இல்லை
இப்படி ஒரு கதையை யோசித்ததற்காகவே இந்தத் திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாகப் பாருங்கள். குறிப்பாக, குழந்தைகளுடன் பாருங்கள். தமிழில் இந்தக் கதை வந்திருந்தால் ஆபாசமாக ஒரு காட்சியாக வைத்திருப்பார்கள். அப்படி ஆபாசமான காட்சி வைப்பதற்கும் ஏற்ற பிளாட்தான் இந்தத் திரைப்படம். ஆனாலும் அப்படி ஒரு காட்சி கூட இல்லை. மிஸ் செய்து விட்டார்கள் என்றும் சொல்லலாம். அல்லது அப்படி ஒரு காட்சி தேவை இல்லை என்று முடிவெடுத்து விட்டார்கள் என்றும் சொல்லலாம். மூளை கழன்று போகும் அனுபவம் பிடிப்பவர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.