Archive for ஹரன் பிரசன்னா

நேற்றைய இரவு

நேற்றைய இரவு
—ஹரன்பிரசன்னா

வழுக்கும் வரப்பில்
கால்குத்தி நிறுத்திய
கண்ணாடி வளையலின் ஒரு துண்டு
– கால்கள் பின்னியிருந்ததை
– வெம்மை பரிமாறப்பட்டதை
– வெற்றுடல்களின் போர்வையாய் இருள் இருந்ததை
நேற்றிரவுக்குள் தள்ளுமுன்
நினைத்தேன்-
கண்ணுள்ள பானைத்தலை
கந்தல் வெள்ளையாடை
வெக்கங்கெட்ட சோளக்காட்டு பொம்மை
கண்மூடியிருக்காது என.

Share

தீப்பெட்டிக்குள்…

தீப்பெட்டிக்குள்…
–ஹரன்பிரசன்னா

மரக்குச்சிகள் சுமந்து
மரத்துப் போயிருந்த தீப்பெட்டி
உயிர்த்திருக்கிறது

சிணுங்கிவிட்டுக் காணாமல் போன தூறலில்
நிமிர்ந்த பசுந்தளிர்களின் வழியே
நடந்து, நனைந்து
சுகித்திருக்கவேண்டிய பொன்வண்டு
சிறையிடப்பட்டிருக்கிறது

படுத்துக்கொள்ளப் புல்மெத்தை
எப்போதும் போர்த்தியிருக்கும் மேலட்டை
அவ்வப்போது வானம்
இது போதாதா?

திறக்கவும்
முன்னிரு கொம்புகள் அலையவும்
பிஞ்சு முகம் சிரிக்கவும்
இலக்கியமென்க

விடுதலை வேண்டும் வண்டு
இணைகூடாமல்
மூச்சுமுட்டி இறக்குமானால்
சொர்க்கம் சேரும்
நிச்சயம்.

Share

மழை நாள்

ஒரு காதல் கதை
—ஹரன் பிரசன்னா

னக்குப் பாண்டிமாரோடு இருந்த கோபங்கள் எல்லாம் இப்படிச் சடாரென நீர்த்துப் போகும் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவேயில்லை. இத்தனை நாள் தனக்கிருந்த இனவெறியால் சிந்திக்க முடியாமல் போனதை நினத்து வருந்தும் வேளையில் நிஜத்தைத் தெரியவைத்தச் சொர்ணலதாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டான். நன்றி சொல்லத் தேவையில்லை என்றது அவனது உள்மனம். மூன்றாம் நபர்களுக்குள் இருக்கவேண்டிய
ஒரு சொல் அவர்களுக்கிடையில் வருவதை அவன் அறவே விரும்பவில்லை.

கிருஷ்ணன் பிள்ளை, தனது காதலை சொர்ணலதாவிடம் சொல்லி மூன்று நாள்தான் ஆயிருக்கும். அவளும் நாணிக் கோணி வெட்கி அதை ஏற்றுக்கொண்ட நிமிடம் சடாரென வானத்தில் நீந்தி, மேகத்தைக் கிண்டல் செய்து விட்டு, சூரியனை முறைத்துவிட்டு, நிலவிடம் சேதி சொல்லிவிட்டுத் தரைக்கு வருவதற்குள் சொர்ணா கம்ப்யூட்டர் சென்டரை விட்டு, வெட்கத்தையும் சேர்த்தெடுத்துக்கொண்டு, ஓடிப்பொயிருந்தாள். சொர்ணலாதவை கடந்த மூன்று நாளாய் சொர்ணா என்றுதான் கூப்பிட்டான் கிருஷ்ணன் பிள்ளை. அதை இரசித்தாள் சொர்ணா என்பதை அவன் அறிந்தபோது இனித் தொடர்ந்து அப்படியே கூப்பிட முடிவு செய்தான். அவன் என்ன சொன்னாலும் அவள் சிரித்தாள். அவர்களுக்குள் மூன்று வருடங்கள்.. இல்லை இல்லை… முப்பது வருடங்கள் காதல் இருந்ததாய்த் தோன்றியது அவனுக்கு.

கலமசேரியில் மலையாளக் குட்டிகளை சைட் அடித்துக்கொண்டு தனது இளவயதைக் கழித்துக்கொண்டிருந்த கிருஷ்ணன்பிள்ளைக்குக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் திருநெல்வேலியில் வேலை கிடைத்தது. போயும் போயும் பாண்டிமாரோடு வேலை பார்க்கப்போறியா என்ற கூட்டுக்காரர்களின் கிண்டலையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தமிழ் மண்ணை மிதித்தான். அன்று அவனிருந்த மனநிலையில் அவனிடம் யாராவது நீ ஒரு தமிழ்ப்பெண்ணைத்தான் மணக்கப்போகிறாய் என்று சொல்லியிருந்தால், சொல்லியது யாரானலும், காறி உமிழ்ந்திருப்பான். அதற்குக் காரணம் இருந்தது. அவன் அதுவரை சொர்ணாவைச் சந்தித்திருக்கவில்லை.

மலையாளி கொலையாளி; மலைப்பாம்பை நம்பினாலும் மலையாளத்தானை நம்பாதே என்று எல்லோரும் அவன் காது படப் பேசுவதெல்லாம் பழகிப் போய், எல்லாம் தன் தலையெழுத்து என்று மனம் நொந்த ஒரு நிமிடத்தில்தான் சொர்ணலாதவைச் சந்தித்தான்.
அவள் கண்கள் பேசுவதைக் கண்டு கொஞ்சம் வசமிழந்த மனசை அதட்டு உருட்டி – ஆ குரங்கி தமிழானு – அடக்கி வைத்தான். அவள் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து அளந்து கொணட்டி கொணட்டிப் பேசினாள். ஏஸியும் ஏர் ·ப்ரெஷ்ணரின் மணமும் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர்கள் நிறைந்த அறையும் அவளை படபடப்பாக்கியிருக்கலாம். தினம் தினம் எத்தனை பெண்களும் பையன்களும் இப்படி வந்து போகிறார்கள்..

“சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +..”

அவளின் ஆங்கிலம் கண்டு கிருஷ்ணன்பிள்ளை சிரித்துக்கொண்டான். ஆனால் வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது. உடனே தமிழன்மார்கள் எல்லாம் லோரி என்றும் ஸோரி என்றும் கோப்ம்பெனி என்றும் ஆரம்பித்துவிடுவார்கள் என அவனுக்குத் தெரியும். ஒருவழியாய் தனக்குத் தெரிந்த தமிழில் சொல்லி அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டு அவளைச் சேர்த்துக்கொண்டான். கிருஷ்ணன் பிள்ளை நினைத்திருந்தால் சொர்ணலதாவுக்கு கொஞ்சம் கூடுதல் டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாம்தான். தமிழச்சிக்குப் போய் கொடுப்பானேன் என விட்டுவிட்டான்.

இபோது கிருஷ்ணன் பிள்ளைக்கு, அன்று டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. அவளைக் கண்ட முதல் நாள் முதல் நேற்று முதல்நாள் சொன்ன ஐ லவ் யூ வரைக்கும் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக்கொண்டான்.

“சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +..”
“சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +..”எனத் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துச் சிரித்துக்கொண்டான். இன்று உறங்குவோம் என்று கிருஷ்ணன் பிள்ளைக்குத் தோன்றவில்லை.

கிருஷ்ணன்பிள்ளை காதல் அவனை இந்தப் பாடு படுத்தும் என எதிர்பார்க்கவில்லை. மிகுந்த பிரயாசைக்குப் பின் தூங்க ஆரம்பிக்கும்போது கனவில் சொர்ணா வந்து, “என்ன தூக்கம் வரலியா?”என்பாள். இவன் உடனே, “நீ பறையுன்ன தமிழ் எத்தற சுகமானு அறியோ?”என்பான். இப்படி மாறி மாறி ஆளுக்கொரு பாஷயில் கதைத்து முடிக்கும் போது காலை விடிந்திருக்கும். இல்லையென்றால் கனவில் அவள் வந்து “அஞ்சனம் வெச்சக் கண்ணல்லோ மஞ்சக் குளிச்ச நெஞ்சல்லோ”என்பாள். இவன் பதிலுக்கு “இனிக்குந் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே”என்பான். இப்படியே பாடிப் பாடி காலை விடிந்திருக்கும்.

இன்றைக்கு காலையில் நேர்ந்த அந்தச் சம்பவத்துக்குப் பின் , இனித் தூங்கக்கூட முடியாது என்று தோன்றியது கிருஷ்ணன் பிள்ளைக்கு. அவன் இன்னும் தன் புறங்கையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான். இதுவரை இல்லாத ஒரு மிருதுத்தன்மை அவனது புறங்கைக்கு எப்படி வந்தது என்ற ஆச்சரியம் இன்னும் அடங்கவில்லை. காலையில் கிருஷ்ணங்கோவிலுக்குப் போயிவிட்டு வரும்போது தெரியாத்தனாமாக சொர்ணாவின் புறங்கையில் அவன் புறங்கை பட்டுவிட்டது. அதிர்ந்து போனான் கிருஷ்ணன் பிள்ளை. சொர்ணாவும் ஒரு நொடி அதிர்ந்தாள். பின் வெட்கப்பட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை தான் ஒரு கவிஞனாய் இல்லாமல் போய்விட்டோமோ என்று முதன்முறையாக வருந்தினான். இருந்திருந்தால் அப்படியே காதல் ரசம் சொட்டச் சொட்ட அந்த நிமிடத்தையும் சொர்ணாவின் வெட்கத்தையும் வார்த்தைகளில் கொட்டியிருப்பான்.

கையின் புறங்கையை முகர்ந்து பார்த்தான். எங்கிருந்தோ காற்றில் “சந்தனத்தில் கடஞ்செடுத்தொரு சுந்தரி சில்பம்”என்ற வரிகள் மிதந்து வந்தது. சொர்ணா வெள்ளைப் பட்டுடுத்தி சந்தனக் கீறலிட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை வெள்ளைப் பட்டில் முண்டுடுத்தி மோகமாய் அவளை நெருங்கினான். அவள் “வேண்டாம்.. வேண்டாம் “எனச் சிணுங்கினாள். அவளின் சிணுங்கல் அவனை மேலும் தூண்ட… அந்த நேரத்தில் போன் ஒலிக்காமல் இருந்திருந்தால் அவளை முத்தமிட்டிருப்பான். ஏக எரிச்சலில் போனை எடுத்தான். கிருஷ்ணன்பிள்ளையின் அம்மா அழுதுகொண்டே அவனது பாட்டி இழுத்துக்கொண்டிருப்பதாய்ச் சொன்னாள். கிருஷ்ணன் பிள்ளைக்கு ரொம்ப வருத்தம் மேலிட்டது. அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பாட்டி இழுத்துக்கொண்டிருக்கிறாள் என்ற கேட்டவுடனேயே கலமசேரிக்குப் போய் அவளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது அவனுக்கு.

கிருஷ்ணன் பிள்ளைக்கு தலையைச் சுற்றியது. அப்பாவிடமிருந்த கம்யூனிச இரத்தம் அவனுக்குள் இல்லையென்பது அவனுக்குத் தெரியும். அந்த இரத்தம் அப்படியே கிருஷ்ணன் பிள்ளைக்கும் வந்திருந்தால் இப்படி அவசியமில்லாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்ள நேர்ந்திருக்காது. அவனது கொச்சச்சன் சுகுந்தன்நாயரை நினைத்தாலே கிருஷ்ணன் பிள்ளைக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவன் வீட்டில் சொர்ணா விஷயம் தெரிந்த ஒரே நபர் சுகுந்தன் நாயர் மட்டுமே.

சின்ன வயதிலேயிருந்து கொச்சச்சன் மேலே கிருஷ்ணன்பிள்ளைக்கு பாசம் அதிகம் இருந்தது. சுகுந்தன்நாயருக்கும் கிருஷ்ணன்பிள்ளை மேலே வாஞ்சை ஜாஸ்தி. தனது முதல் பையனாகத்தான் அவனைப் பார்த்தார் சுகுந்தன் நாயர். அவனை “மோனே”என்று விளிக்கும்போதே அவரின் நிஜமான வாத்சல்யம் அதில் தெரியும். அந்தச் சுதந்திரம் தந்த தைரியத்தில்தான் கிருஷ்ணன்பிள்ளை தன் பிரேம விஷயத்தை நாயரிடம் சொன்னதும்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் நாயர், “இது சரியா வராது மகனே “என்றார். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுகுந்தன் நாயர் இப்படி நிறைய விஷயங்களில் குறி சொல்வதுமாதிரி ஏதாவது உளறி வைப்பார். அதைக் கேட்கும்போது கிருஷ்ணன் பிள்ளைக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வரும். மரியாதை காரணமாயும் அவர் மேல் வைத்த உண்மையான பாசம் காரணமாயும் அதை அப்படியே விட்டுவிடுவான். நாயர் தன் காரியத்திலேயே இப்படி ஏதாவது சொல்லி வைப்பார் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கலவரமடைந்து போனான்.

“அது என்ன கொச்சச்சா? அப்படிச் சொல்லிட்டீங்க”என்றான் கிருஷ்ணன் பிள்ளை. நாயர் பெரிதாய் விளக்கம் ஒன்றும் கொடுக்கவில்லை. “நம்ம குடும்பத்துக்கு நல்லதில்லை. இது சரியாகாது மோனே”என்று மீண்டும் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டார்.

கிருஷ்ணன்பிள்ளை இதைக் கேட்ட சில தினங்களுக்குக் கொஞ்சம் வருத்தமாய் இருந்தான். பின் ஒரு தடவை சொர்ணாவைப் போனில் கூப்பிட்டுப் பேசிய பின் கொச்சச்சனையும், அவர் சொன்ன விஷயங்களையும் மறந்துபோய்விட்டான். ஆனால் நேற்று நடந்த சம்பவம் அவனை மீண்டும் கொஞ்சம் கலவரப்படுத்தியிருந்தது.

திருவனந்தபுரம் ரோட்டில் சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பிடித்துக்கொண்டது. பக்கத்திலிருக்கும் ஒரு பள்ளி வளாகத்தில் ஒதுங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமையான காரணத்தால் பள்ளியில் யாருமில்லை. சுற்றிலும் மரங்கள் பசுமையாய் சிலிர்த்துப் போயிருந்தது. மழையின் மண்வாசனையும் தூறலும் சொர்ணாவின் அருகாமையும் கிருஷ்ணன்பிள்ளைக்கு ஒரு கிளர்ச்சியை தந்துவிட்டது. சொர்ணாவும் அதே நிலையில்தான் இருந்தாள். சொர்ணாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. தனிமையும் மழையும் பலப்பல எண்ணங்களைக் கிளற மெல்ல முன்னேறி அவள் கைகளைப் பற்றினான். கையை உதறுவாள் என்று எதிர்பார்த்திருந்த கிருஷ்ணன்பிள்ளைக்கு அவள் அப்படிச் செய்யாதது தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் முன்னேறினான். மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவள் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. ஒரு நீர்த்துளி உதட்டில் இருந்துகொண்டு கிருஷ்ணன்பிள்ளையின் உயிரை வாங்கியது. அவள் கைகள் ஒருவித நடுக்கத்தில் இருப்பதை உணர்ந்த கிருஷ்ணன்பிள்ளை பிடியை இறுக்கினான்.

எங்கிருந்தோ வந்த ஆடு ஒன்று மே என்று கத்தியபடி அவர்களைக் கடந்து கொண்டு ஓடியது. மழைக்குப் பயந்து அதுவும் ஒதுங்கியிருக்கவேண்டும். ஆட்டின் குரல் சொர்ணாவை தன்நிலைக்குக் கொண்டுவந்தது. மென்மையாக கிருஷ்ணன்பிள்ளையின் பிடியைத் தளர்த்திவிட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்றாள். கிருஷ்ணன்பிள்ளை ஆட்டைத் துரத்திக்கொண்டு ஓடினான். சொர்ணலதா அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

மழை வெறித்த பின்பு தன் அறைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்பிள்ளை எப்போதும் போல் வீட்டிற்குப் போன் செய்தான். சுகுந்தன் நாயருக்கு நெஞ்சுவலி வந்ததாயும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாயும் அவன் அம்மா வருத்தம் கலந்த குரலில் சொன்னாள். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டது. “இது சரியா வராது”என்று சுகுந்தன் நாயர் சொல்வது போலத் தோன்றியது அவனுக்கு.

இப்போது ஒன்றன் பின் ஒன்றாய் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்ததில் சுகுந்தன் நாயர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று தோன்றத் தொடங்கியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. அவளது புறங்கை மேலே பட்ட அன்றுதான் அவனது முத்தச்சிக்கு மேல் சரியில்லாமல் போனது. பகவதி புண்ணியத்தில் அவள் பிழைத்துக்கொண்டாள். நேற்று சொர்ணாவை மீண்டும் தொட்டபோது கொச்சச்சனுக்கு நெஞ்சு வலி வந்தது.

இப்படியெல்லாம் கண்மூடித்தனமாய் யோசிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டாலும் இந்த எண்ணங்களை, கிருஷ்ணன்பிள்ளையால் களைய முடியவில்லை. நெடு நேரத் தீவிர யோசனைக்குப் பின் அயர்ச்சியில் அப்படியே உறங்கிப் போனான்.

அதிகாலையிலேயே சொர்ணா கூப்பிடுவாள் என்று எதிர்பார்க்காத அவனுக்கு, அவள் குரலைக் கேட்டதும் சந்தோஷமாய் இருந்தது. அவளுடன் பேச ஆரம்பித்தக் கொஞ்ச நேரத்திற்கெல்லாம், நேற்று இரவு தானாய் ஏற்படுத்திக்கொண்ட கற்பனைகள் எத்தனை மோசமானவை என்று அவனுக்குப் புரிந்தது. இனி அப்படி நினைக்கக்கூடாது என்பதை ஒரு சபதமாகவே எடுத்துக்கொண்டான்.

ரொம்பத் தயங்கித் தயங்கி சொர்ணா கேட்டாள்.

“இன்னைக்கு ·ப்ரீயா இருந்தா படத்துக்குப் போகலாம். எங்க வீட்டுல எல்லாரும் மதுரைக்குப் போயிருக்கிறாங்க. எனக்கு படிக்க வேண்டியிருக்குதுன்னு நான் வரலைனு சொல்லிருக்கேன். இன்னைக்கு உங்களுக்கு டைம் இருக்குமா?”

கிருஷ்ணன் பிள்ளைக்கு நம்பவே முடியவில்லை. எத்தனை நாளாய்க் கெஞ்சியிருப்பான். ஒருநாள் கூட மசியாத சொர்ணா, தானே அழைத்து சினிமாவுக்குப் போகலாமா என்கிறாள். அந்தச் சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகளில்லை அவனிடம்.

“செரி..”என்றான். அவன் குரலில் இருந்த சந்தோஷம் அவனுக்கே தெரிந்தது.

திரையில் காட்சிகள் வேகவேகமாய் மாறிக்கொண்டிருந்தன. கொஞ்சம் புரிந்தும் நிறைய புரியாமலும் படத்தை இரசித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. சொர்ணாவின் அருகாமை அவனுக்குச் சொல்லமுடியாத சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இருவரின் கைகளும் அருகருகில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் சொர்ணாவின் கையைப் பிடிக்கலாம். அவள் ஒன்றும் உதறி விட மாட்டாள் என்று தெரியும் அவனுக்கு. உதறவேண்டுமானால் மழைக்கு ஒதுங்கிய நாளிலேயே உதறியிருக்கலாம். கையை இன்னும் இரண்டடி நகர்த்தினால் சொர்ணாவின் மிருதுவான கைகளைப் பற்றி விட முடியும்.

இப்படி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் லேசான வெப்பத்தோடு சொர்ணாவின் கைகள் தன் கைகள் மீது பரவுவதைக் கண்டு அவளைப் பார்த்தான். அவனும் அவள் கையை
பலமாகப் பற்றிக்கொண்டான். கைகளை மெல்ல இறுக்கினான்.

தோளை அவள் பக்கமாகச் சாய்த்து அவள் முகத்தை மிக அருகில் இருந்து இரசித்தான். அவள் அவன் கைகளை மேலும் மேலும் இறுக்கினாள். இன்னும் கொஞ்சம் வசமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கொஞ்சம் நெருங்கி, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளின் கன்னங்களில் உதடுகளால் லேசாய் முத்தமிட்டான். அவள் கண்களைத் திரைகளிலிருந்து விலக்கவே இல்லை. அதே சமயம் கிருஷ்ணன்பிள்ளையின் கைகளை இன்னும் இறுக்கினாள்.

கைகளை மெல்ல விடுவித்துக்கொண்டான் கிருஷ்ணன்பிள்ளை. அவளின் முகத்தை அவனை நோக்கித் திருப்பினான். அவளது சுவாசம் அவன் மீது வெம்மையாகத் தாக்கியது. அவளின் கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. கண்கள் பாதி சொருகிய நிலையில் இருப்பதாகப் பட்டது கிருஷ்ணன்பிள்ளைக்கு.

விரல்களால் சொர்ணாவின் உதடுகளை மெல்ல வருடினான். அவளது கழுத்து நரம்புகள் புடைத்து அடங்குவது, அந்த மங்கலான வெளிச்சத்தில் கூடத் தெளிவாய்த் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை உதடுகளை வருடினான். முகத்தை முன்னே இழுத்து, மிக அழுத்தமாய் உதடுகளில் முத்தமிட்டான் கிருஷ்ணன்பிள்ளை. சூர்யா யாரையோ சுட்டுக்கொண்டிருந்தபோது சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தார்கள்.

படம் முடிந்து வரும்போது இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ஒரு தடவை ஸாரி சொல்லிவிடலாமா என்று கூடத்தோன்றியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. ஆனாலும் அமைதியாய் இருந்துவிட்டான்.

அவளை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டுத் தானும் பஸ் பிடித்து ரூமிற்குள் நுழையவும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. வேகமாய் எடுக்கப் போனான். கட்டாகி விட்டது. யார் அழைத்திருப்பார்கள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. சொர்ணா அழைத்திருப்பாளோ? இருக்காது. இப்போதுதானே போனாள். ஒருவேளை.. கலமசேரியிலிருந்து அழைத்திருப்பார்களோ.. இப்படித் தோன்றிய போதே கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது அவனுக்கு. இன்றைக்கும் ஏதாவாது நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. நேற்றுதான் கொச்சச்சனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாய் அம்மா சொன்னாள். ஒருவேளை அவருக்கு ஏதாவது…

மீண்டும் போன் ஒலித்தது. அவனுக்கு அதை எடுக்கவே பயமாய் இருந்தது. “நம்ம குடும்பத்துக்கு இது சரியாகாது”என்று கொச்சச்சன் சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. இந்த முறையும் எதாவது நேர்ந்திருந்தால் என்ன செய்வது என்றே கிருஷ்ணன் பிள்ளையால் யோசிக்க முடியவில்லை. மனதை அடக்கிக்கொண்டு போனை எடுத்தான்.

“ஹலோ”

“சொரணா பேசறேன்”

கொஞ்சம் நிம்மதியானது கிருஷ்ணன் பிள்ளைக்கு.

“ம் பறா..”என்றான் கிருஷ்ணன் பிள்ளை. விசும்பல் சத்தத்திற்கிடையில் சொர்ணா சொன்னாள்.

“ஏதோ ஆகிஸிடெண்ட்டாம். அப்பாவை சீரியஸாக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறாங்க”என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள்.

000

Share

ஒரு காதல் கதை

மழை நாள்
—ஹரன் பிரசன்னா

சலனமற்றிருக்கும் வானம் தன்
சல்லடைத் துளைகளின் வழியே
சமைந்த மரங்களுக்குப்
பூப்புனித நீராட்டும்
மழைநாள்

ஆர்ப்பரிக்கும் வானத்தைத் தடுக்கும்
பலவண்ணப் பூக்கள் குடைகளாய்
சில தலைகள்

மாலை கடந்து காலையும் தொடர்ந்தால்
பள்ளிசெல்லும் தொல்லையில்லையெனச்
சில மனங்கள்

இறங்கி வரும் துளிகளில்
ஒரு துளி தொட்டாலும்
விலக்கவொவ்வா களங்கம் வருமென
நீட்டப்பட்ட நிழற்குடைகளில் நிற்கின்றன
சில கால்கள்

மழையை புகையால் துரத்தும்
முயற்சியாய் புகைகின்றன
சில கைகள்

மழைச்சாரல் மனதுள் பதித்துச் சென்ற
மயக்கத் தடங்களில் முந்தானை தொடுகின்றன
சில விரல்கள்

நனைந்து ரசிக்காமல்
வீணாகப்போய்க்கொண்டிருக்கிறது
மற்றுமொரு மழைநாள்

இந்தக் கவிதை மாலனின் மின்னிதழானத் திசைகளில் வெளியாகியிருந்தது.

Share

தேவன்

தேவன்
–ஹரன்பிரசன்னா

தேவன் ஒரு நகைச்சுவை கட்டுரையாளர் மற்றும் கதையாளர் என்ற ஒரு வரி அறிமுகம் மட்டுமே இருந்தது எனக்கு.அவர் எழுதிய கதைகளையோ கவிதைகளையோ ஒன்றைக்கூட வாசித்ததில்லை (கற்றதும் பெற்றதும்-இல் சுஜாதா தந்த அறிமுகக்கட்டுரை தவிர). தேசிகண் பக்கத்தைப் பார்வையிட்டபோது அதில் முதலில் சுஜாதாவின் படைப்புகளை மட்டுந்தான் பார்த்தேன். அதில் சிரிக்க, சிந்திக்க என்ற தலைப்பிலிருந்த சுட்டியைச் சொடுக்கியபோது அதனுள் தேவனின் எழுத்துகள் இருப்பது தெரிந்தது.

கற்றதும் பெற்றதும் பகுதியில் ஒருமுறை தேவன் பற்றிச் சொல்லப்பட்டதாக நினைவு. அதில் தேவனின் ஒரு கட்டுரையையும் வெளியிட்டிருந்தார் சுஜாதா. அந்தக் கட்டுரையைப் படித்தபோது அதில் அத்தனை தூரம் நகைச்சுவை இருந்ததாகத் தெரியவில்லை அந்த வயதில். நகைச்சுவை என்றால் திரைப்படத்தில் வரும் காட்சிகளும். வெடிச்சிரிப்பும் மட்டுமே என்றளவில்தான் எனக்கு அறிமுகமாகியிருந்த வயது அது. தேவனை ஏன் சுஜாதா இத்தனை புகழ்கிறார் என்று நினைத்துக்கொண்டு அதை மறந்துவிட்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பாக, கிரேஸி மோகன் ஏதோ ஒரு பேட்டியில் தன் எழுத்துகளுக்கு இன்ஸ்பிரேஷனாக தேவனைக் குறிப்பிட்டார். பெரிய ச்சரியம் எனக்கு. சுஜாதா தந்த கட்டுரையைத் தொடர்ந்த என் எண்ணம் கொஞ்சம் சிதையுற ரம்பித்தது கிரேஸி மோகஆனால்தான். கிரேஸி மோகனின் டைமிங் ஜோக் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு
அப்போது. அவரே தேவனைப் பற்றிச் சொன்னதைக் கேட்டபோது, தேவன் மீது ஆர்வம்பிறந்தது. ஆனாலும் தேவனைத் தேடிப்பிடித்துப் படிக்கக்கூடிய வெறி இல்லாமல் போனது.

கல்கியின் நகைச்சுவை ததும்பும் கட்டுரைகளைப் படித்தபோது, எனக்கு மென்மையான நகைச்சுவைக் கட்டுரைகள் மீதும், நகைச்சுவை எழுத்தின் மீதும் ஒரு பெரிய கவனிப்பு பிறந்ததாக உணர்கிறேன். அலையோசையில் வரும் இரண்டு கதாபாத்திரங்கள் தொடர்ந்து
பத்திரிகையில் மாறி மாறி அடித்துக்கொள்வார்கள். அதை விவரித்த விதம் மென்நகைச்சுவை எழுத்துகளைப் பற்றிய ஒரு ஆர்வத்தைத் தந்தது. அப்போதும் தேவனின் எழுத்துகளைப் படிக்க நினைத்துக்கொண்டேன்.

தேசிகனின் பக்கத்தில் தேவனைப் பார்த்தபோது எனக்குத் தேவனையே நேரில் பார்த்தது மாதிரி இருந்தது. உடனடியாக இறக்கம் செய்து ப்ரிண்ட் எடுத்து, படித்து முடித்து, ரொம்ப இரசித்து, மீண்டும் படித்து அதை உங்களுக்கும் அறிமுகம் செய்யலாம் என நினைத்து, இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தேவனைப் பற்றிய பெரிய அறிமுகம் என்ஆனால் தரமுடியாது என்பதை மிகத் தெளிவாக உணர்கிறேன். தேசிகனின் பக்கத்தில் உள்ள தேவனின் கட்டுரைகள் மட்டும் தேவனைப் பற்றி முழுமையாகச் சொல்லாது என்ற என் எண்ணம்தான் அதற்குக் காரணம். ஆனால் தேவனின் நகைச்சுவை உணர்வைப் பற்றிய ஒரு அறிமுகம் நிச்சயம் கிடைக்கும். இந்த
நகைச்சுவையில் எத்தனை பேருக்குக் கருத்து பேதம் இருக்கும் எனத் தெரியவில்லை. காரணம், முதலில் மென்மையான நகைச்சுவை. படித்த மாத்திரத்தில் பொங்கிப் பொங்கிச் சிரிக்க முடியாது. ஆனால் கட்டுரை முழுதும் ஒரு விதமான புன்னகையை வரவழைக்கும் தொடர்களும் வார்த்தைகளும் விரவி இருப்பதைக் காணலாம். இரண்டாவது அந்தக்
கட்டுரையின் காலகட்டம். ஒரு படைப்பை உள்வாங்கும்போது அது எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்ற பார்வையும் அதற்கு ஏற்றாற்போன்ற ஒரு உள்வாங்குதலும் அவசியமாகிறது. (பாரதி மட்டும் விதிவிலக்கு. எந்தக் காலத்திற்கும் அவன் கவிதைகள்
பொருந்திவருகின்றன). தேவனின் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்பது மிகச்சரியாக எனக்குத் தெரியவில்லை. (யாராவது சொன்ஆனால் நன்றி). ஆனாலும் கட்டுரையை முழுமையாக உள்வாங்க முடிந்ததாகத்தான் தோன்றியது.

எந்த வித இருண்மையும் இல்லாத மிகத்தெளிவான வரிகள். பூடகமில்லாத நேரடியான நகைச்சுவை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள். மனத்தை நோகச்செய்யாத கிண்டல் மற்றும் நையாண்டி, அதன் வாயிலாக எல்லோருக்கும் போய்ச்சேரவேண்டிய கருத்து – இவையெல்லாம் தேவனின் எழுத்துகளின் பலமாக என் பார்வைக்குத் தெரிகிறது.

தமிழ் எழுத்துலகில் மிகக்குறைவாகவே தரமான நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் தேவனுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
“புகழும் புகழ்ச்சியும்”என்ற கட்டுரை மிகப்பெரிய அறிவுரை தொனியுடன் துவங்குகிறது. போகப் போக தேவனின் வரிகள் ஹாஸ்யத்தைத் தர ரம்பிக்கின்றன. Slow and steady wins the race! இந்தச் சூத்திரம் தேவனுக்கு மிக இஷ்டமானதாக இருந்திருக்கவேண்டும். அந்தக்
கட்டுரையிலிருந்து சில வரிகள்.

“நான் கரூருக்குப் போனவாரம் போய்விட்டு வந்தேன். போகும்போது என்னைப் பார்த்தவர்கள், ஒரு வாரம் விச்ராந்தியாகப் போய், குடும்பத்தாருடன் இருந்துவிட்டு வரப்போகிறான் என்று எண்ணியிருப்பார்கள். வருகிறபோது நான் சந்தோஷமாகத்தான் திரும்பினேன். அப்போது என்னைக் கவனித்தவர்கள், குஷியாகக் காலந்தள்ளிவிட்டு நிஷ்கவலையாக வருகிறான் என்றுதான் எண்ணியிருக்க வேண்டும்………….
……..வியாழக் கிழமை சாயந்திரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சாமி தலைதெறிக்க ஓடிப்போய், ரயில் வண்டிக்குள் புகுந்ததை ஸ்டேஷன் மாஸ்டர் நாலைந்து போட்டார்கள், ஒரு கார்டு, சுமார் ஐம்பது ஜனங்கள் இத்தனை பேரும் பார்த்திருப்பார்கள். அப்படி ஓடினவன் நாந்தான் என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறேன்…”

அப்படி ஓடினவன் நாந்தான் என அறிமுகப்படுத்திக்கொள்கிறேன் என்று தேவன் எழுதியதைப் படித்தபோது எனக்கு நிஜமாகவே சிரிப்பு வந்துவிட்டது. வருடங்கள் பல கடந்தாலும், இன்னும் சிரிக்க முடிகிறதென்றால், அதை விட பெரிய வெற்றி ஒரு எழுத்திற்கு, வேறெதாக இருக்க முடியும்?

அதே கட்டுரையில், வீட்டில் சுண்டெலியின் தொல்லை தாங்கமுடியவில்லை என்று சொல்லி வீட்டுக்காரரிடம் முறையிடுவதாக ஒரு காட்சியை அமைத்திருக்கிறார்.

“காலையில் வீட்டுக்காரரிடம் “உங்கள் வீட்டில் சுண்டெலி நடமாடுகிறதோ?”

“ஹ¥ம் சொப்பனம் கண்டிருப்பீர்”என்றார் அவர்.

“இல்லை நிஜமாக வருகிறது”என்றேன்.

“ஏங்காணும் வீணாய்? இந்த வீட்டிற்கு வருந்தி வருந்தி அழைத்தால் கூடச் சுண்டெலி வராதே! ஆயிரம் ரூபாய் தருகிறேன், ஒரு சுண்டெலி காணியும்”என்றார்!

அவர் சொல்வதைப் பார்த்தால், நான் ஆயிரம் ரூபாய் கண்டிராதவன். அதைச் சொல்வதற்காக அவரிடம் சுண்டெலி இருப்பதாகச் சொல்கிறேன் என்றுதான் அவர் எண்ணுகிறார் என்று தோன்றிற்று.

“ஓய்.. எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டாம். எலி வராமல் இருந்தால் போதும்”என்றேன்.

ஊரெல்லாம் வீடு காலி இல்லை என்று பேச்சாயிருக்கும்போது, சுண்டெலி விஷயமாக, வீட்டுக்காரருடன் வாக்குவாதம் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர், “என் வீட்டிற்குச் சுண்டெலிதான் முக்கியம். உம்ம குடும்பம் முக்கிய மில்லை”என்று சொல்லி விடலாமல்லாவா? “

நகைச்சுவையின் நாசூக்கான, நளினமான வெளிப்பாடு என்று தோன்றியது இந்தக் கட்டுரையைப் படித்தபோது.

எல்லா கட்டுரைகளிலும் கிண்டலும் அங்கதமும் கலந்துகட்டி வருகின்றன. சொப்பனம் பலிக்குமா என்ற கட்டுரை ஒரு சிறுகதை மாதிரி இருக்கிறது. குறிப்பாய் முடிவு. முடிவு அப்படியே சுஜாதா ஸ்டைல்.

தேசிகன பக்கத்திலுள்ள தேவனின் மற்ற கட்டுரைகளையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

தேவன் பக்கத்தில்-

பொழுதைப் போக்காதே கட்டுரையில் தீடீரென பிரபுதேவா பற்றியும் சதானந்த ஸ்வாமிகள் பற்றியும் இயக்குநர் விக்ரமன் பற்றியும் வர டிப்போய்விட்டேன். தேவன் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குக் குழப்பம் வந்ததே இந்த இடத்தில்தான். 🙁

ஏதோ பிழை நேர்ந்திருக்கிறது. நண்பர் தேசிகனுக்கு வலையேற்றியபின் படித்துத் திருத்த நேரமிருந்திருக்காது. அதைப் படித்துவிட்டு நண்பர்கள் என்னைப் போல் குழம்பிக்கொள்ள வேண்டாம் என்பதற்காக்த்தான் சொல்கிறேன்.

சுஜாதா அறிமுகப்படுத்திய, பொம்மைக்கடையில் பார்க்கும் நாயைப் பற்றிய கட்டுரை தேசிகன் பக்கத்தில் இல்லை. யாரிடமாவது இருந்தால், தயவுசெய்து உள்ளிடவும்.

இந்த மடலை மரத்தடிக்குழுமத்தில் உள்ளிட்டபோது பத்ரி எதிர்வினைத்திருந்தார். அவரின் மடல்.

“தேவன் (இயற்பெயர் ர்.மகாதேவன்) பிறந்தது: 08/09/1913 இறந்தது: 05/05/1957. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் BA படித்துவிட்டு 1934 முதல் 1957 (சாகும்) வரை விகடனில் பணி யாற்றினார், அதில் கடைசி 13 வருடங்கள் விகடனின் நிர்வாக சிரியராக.

அவரது கதைகளில் கும்பகோணமும், சென்னையும் பிரதானமாக வரும்.

கல்கியில் (12/09/1982) சுஜாதா தேவனப் பற்றி எழுதுகையில் “அமரர் தேவனின் கதைகளை ஏறக் குறைய ஒன்று விடாமல் படித்தவன் நான். என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு
முன்னோடியாகவும், மானசீக குருவாகவும் இருந்திருக்கும், திரு.கல்கி, திரு. தேவன் போன்றவர்களை எங்களால் மறப்பது சாத்தியமில்லை.”என்று சொல்லியிருக்கிறார். (மேற்கோள் ‘மிஸ்டர்
வேதாந்தம்’ புத்தகத்திலிருந்து)

தேவன் ‘துப்பறியும் சாம்பு’ என்னும் பாத்திரத்தை உருவாக்கியவர். நகைச்சுவை அவரது எழுத்தில் எப்பொழுதும் வழிந்தோடும் (கட்டுரைகளில் மட்டுமல்ல, கதைகளிலும்). தேவன் கதை சொல்வதில் வல்லவர். தீவிர இலக்கியம் படைக்கவில்லை என்றாலும், மிக வேகமாகச் செல்லக்கூடிய, திருப்பங்கள் நிறைந்த (கிட்டத்தட்ட இன்றைய மெகா சீரியல் மாதிரி, ஆனால் இன்றைய கேவலமான
ஜவ்வு இழுக்கும் பேத்தல்கள் மாதிரி இல்லாமல், தரத்துடன்) வெகுஜனங்கள் விரும்பும் கதையையும், வெகுஜனங்கள் அவரது பாத்திரத்தோடு ஒன்றி விடும் கதாபாத்திரங்களையும் படைப்பதில் வல்லவர்.

மிஸ்டர் வேதாந்தம் அந்த வகையில் அருமையான நாவல். அதைத் தவிர ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஸி.ஐ.டி.சந்துரு, ஸ்ரீமான் சுதர்சனம், கோமதியின் காதலன் போன்ற கதைகளை எழுதியுள்ளார். எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.”

நண்பர் யக்ஞநாராயணனும் தேவன் பற்றிச் சொல்லியிருந்தார்.

தேவன் (R.Mahadevan) 8-9-13ல் திருவிடைமருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும், பின்னர் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் B.A. பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி சிரியராகப் பணியாற்றிய பின், ‘னந்த விகடன்’ல் உதவி சிரியராகச் சேர்ந்தார். பிறகு 1942ம் ண்டு முதல் 1957ம் ண்டு வரை நிர்வாக சிரியர் இருந்தார். 23 ண்டு காலம் அப்பத்திரிகையில் பல்வேறு சுவையான கதைகள், கட்டுரைகள் எழுதி சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். நகைச்சுவை நிறைந்த இவருடய எழுத்துக்களில் ‘துப்பறியும் சாம்பு’, ‘விச்சுவுக்குக் கடிதங்கள்’, ‘ராஜாமணி’, ‘கோமதியின் காதலன்’ – போன்ற படைப்புகள் மிகப் பிரபலமானவை. ‘தேவன்’ தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்து, சிறந்து தொண்டாற்றினார். பத்திரிகை எழுத்துத் துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் அவர் எழுதி வந்தார். 1957ம் ண்டு ‘தேவன்’ தம்முடைய 44-வது வயதில் இறைவனடி எய்தினார்.”

அப்புசாமி.காம் வலைத்தளத்திலும் தேவனின் சில கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன.

Share

நான் யார்?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம்
ஒரு நாள் கிரீடத்துடன்
மறுநாள் அலுமனியத் தட்டேந்தி
இன்னொரு நாள் இராமன்
வேறொரு நாளில் இராவணன்
சில சமயம் துகிலுரிகிறேன்
சில சமயம் சேலை கொடுக்கிறேன்
சிகண்டியாய் நடித்த போது சிலாகித்திருக்கிறார்கள்
வேடத்துடன் பொருந்திப் போனதாய்
மாலை, கைதட்டுடன்
தட்டி மறைவில்
அயற்சியில் அரிதாரம் கலைக்கும்போது
நான் என்கிறது
என் கம்புக்கூட்டு வீச்சம்.
 

Share

மரணம்

சூன்யத்தின் பார்வை சூன்யம் நிறைந்ததாக, கொடூரமானதாக இருக்கிறது. அதன் கண்கள் தாங்கமுடியாத வெம்மையை உமிழ்கின்றன. மனதை சுழற்றியடிக்கிறது ஊளையிடும் பெருங்காற்று.

காந்தி ஓ வென்று பெருங்குரலெடுத்து அழுகிறாள். பெத்த வயிறு என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெருப்பின் ஜ்வாலை காற்றில் நீந்துகிறது.

நெருப்பின் மீதான என் பார்வை விலகவே இல்லை. என் கண் எரிகிறது. சூடாகிறது. நெருப்புக்குச் சுடுமா? சுட்டாலும் அது நெருப்புக்கு இஷ்டமானதாய் இருக்கவேண்டும். எதையிட்டாலும் உள்வாங்கி எரியும் நெருப்புக்குப் பேதமில்லை. அதன் சிவந்த நாக்கின் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கணத்தில் இறந்து போன பாலா மாதிரியும் கூட. எனக்கு ஜில்லிடுகிறது. என்னையறியாது கண்கள் பனிக்கின்றன.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது.

என் நினைவுக்குத் தெரிந்து நேர்ந்த முதல் மரணம் பாட்டியினுடையது.

தரையில் விழாமல் பம்பரத்தைக் கையிலெடுத்து எல்லோருக்கும் என் பராக்கிரமத்தைக் காட்டிக்கொண்டிருந்தேன். தெருவில் நிறைய சுள்ளான்கள் என்னைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு நாளாய் வீட்டில் ஏகப்பட்ட ள்கள். பாட்டிக்கு இழுத்துக்கொண்டிருக்கிறது. இப்போ அப்போ என்று எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டி எமகாதகி. சாவதாயில்லை. எலும்பும் தோலுமாய் இருக்கும் பாட்டியைக் கண்டாலே பிடிக்காது எனக்கு. காய்ந்து போன மார்புகளை ரவிக்கையால் அடிக்கடி மூடிக்கொள்வாள். அவென் ஏம் பேராண்டி என்று என்னை இறுக்கக் கட்டிக்கொண்ட நாள்களும் உண்டு. இப்போது இழுத்துக்கொண்டு கிடக்கிறாள். எல்லோரின் கவனமும் பாட்டியின் சாவு மேலேயே இருந்ததால் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. இரண்டு நாளாய் யாரும் என்னைப் படிக்கச் சொல்லவில்லை. நான் பம்பரமும் கையுமாக அலைவதை என் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாலும் சும்மாயிருந்தாள். வந்தவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து, பாட்டியின் இல்லாத மேன்மைகளைத் தேடிப்பிடித்து சொல்வதற்குத்தான் அம்மாவிற்கு நேரமிருந்தது. பாட்டி இன்னும் இரண்டு நாள் இழுத்துக்கொண்டிருந்துவிட்டு பின் செத்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

என் நினைப்பில் இடியைப் போட்டுவிட்டு அன்று இரவே பாட்டி செத்தாள். ஒப்பாரிக்கு ள் சொல்லி அனுப்பினார்கள். நான்கைந்து பொம்பளைகள் வந்து ஒரு வட்டமாகக் கூடி அமர்ந்து மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். ஒருத்தி பாட்டியை இந்திராணி என்றாள். இன்னொருத்தி ஒரு படி மேலே போய் உலகத்துக்கே படியளந்த த்தா என்றும் சொன்னதாக நினைவிருக்கிறது. எவளோ என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவளும் ஒப்பாரி இடவந்த மற்ற பொம்பளைகள் போலவே ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. னால் அவளின் மார்புகள் பாட்டியினுடையதைப் போல் உலர்ந்தில்லாமல் செழுமையானதாக இருந்தன. அவளிடமிருந்து வேர்வையும் மண்ணெண்ணையும் கலந்த ஒரு வீச்சம் எழுந்தது. போயும் போயும் மண்ணெண்ணெயைக் குடிப்பார்களா என்ன? எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

பாட்டியின் மரணத்தில் அன்று மனதுக்குள் அமர்ந்து கொண்ட ஏதோவொரு வாடை இப்போது இங்கே என் வீட்டில் இருக்கிறது. பத்தி எரிகிறது. அந்த வாடையா? இல்லை. மண்ணெண்ணெய் நெடியும் இல்லை. பின் எந்த வாடை? எல்லா சாவு வீட்டிலும் இதே வாடை இருக்குமோ என்னவோ. பதினைந்து வயதில் முகர்ந்த வாடை இன்னும் உள்ளிருப்பதே இன்னொரு சாவில்தான் தெரிகிறது.

னால் அன்றைய எழவிற்கும் இன்றைய சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள். அன்றைய மரணம் எதிர்பார்த்தது. நான் அதிகம் நேசிக்காத உறவினுடையது.

நான் நேர்கொண்ட அடுத்த மரணம் அப்பாவினுடையது.

அப்பா எனனுள் மிக ழமாய் பதிந்தவரல்ல. எனக்குள் அவ்வப்போது தலைதூக்கும் வக்கிரம் அப்பாவிடமிருந்து வந்ததாய்த்தான் இருக்கவேண்டும்.

போர்வையை மூடிக்கொண்டு, அன்று படித்த மஞ்சள் பத்திரிகையின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அம்மாவின் எதிர்ப்பும் அப்பாவின் கெஞ்சலும் கேட்டு அயற்சியாய் உணர்ந்ததுண்டு. அம்மா பலமாய் எதிர்க்கிறாளா ஊடுகிறாளா என்று தெரியுமுன்னரே அப்பா இறந்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார்.

மீண்டும் ஒப்பாரிப் பெண்கள். அம்மாவின் அழுகை. மண்ணெண்ணெய் நெடி. சாவு வீடு எனக்கு மட்டும் இரசிக்க முடிந்ததாய்ப் போனது கண்டு எனக்கே என்னைக் குறித்த ச்சரியம்.

நான் இரசித்துக்கொண்டிருக்க தொடர்ந்து அப்பாவும் பாட்டிகளும் மட்டும் இறப்பதில்லை. மரணங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை சொல்லியும் சொல்லாமலும் செல்லும் விஷயங்கள் கனத்தவை. இன்று நேர்ந்து விட்ட பாலாவினது மாதிரி. பாலா. கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்துவிட்ட ஜனனம். கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்து விட்ட மரணம்.

காந்தியின் அன்றைய எதிர்ப்பார்ப்புகள் நியாயமானவை. நானும் பங்கெடுத்துக்கொண்டவை. முதலிரவில் சங்கமித்த நிமிடங்கள் முதல் பாலா பிறந்தது வரை அவள் அவளாய்த்தான் இருந்தாள். கருவுற்றதை என்னிடம் சொல்லி வெட்கித்த நிமிடங்கள் காவியம் என்பேன். பாலா பிறந்த பின் எல்லாம் மாறிப்போயின.

எதற்காய் அத்தனை பெரிய தண்டனை என்று நான் யோசிக்காத நாளேயில்லை. காந்தி அழாது உறங்கிய இரவே இல்லை.

பாலா பிறந்த போதே முதுகில் பெரிய கட்டி. பிறந்த தினமே பரேஷன் என்றார்கள். ரொம்ப ரிஸ்க் என்றார்கள். கடவுளை நம்புங்க என்றார்கள். கவலைப்படாதீங்க என்றார்கள்.

….என்றார்கள். ….என்றார்கள். … என்றார்கள். இத்யாதி.

காந்தி அப்போதுதான் முதன்முதலாய்ப் பெருங்குரலெடுத்து அழுததும். நான் வெளிக்காட்டாது எனக்குள்ளே ஓலமிட்டேன். ஒரே ஒரு குறையுடன் பாலா உயிர்பிழைத்தான். இரண்டு கால்களிலும் உணர்ச்சியில்லை. தவழ்தல் கூட சாத்தியமில்லை. கொஞ்சம் பெரியவனானதும் இன்னொரு பரேஷன் மூலம் நடக்க வைக்க முடிந்தாலும் முடியலாம் என்றார்கள்.

முதல் குழந்தை நடக்க முடியாது ஒரே இடத்திலேயே இருந்து அழுவது கண்டு கண்டு காந்தி அரண்டு போனாள். அவளுக்குள்ளேயே அழுது ஒடுங்கினாள். நான் உட்பட்ட எல்லாமே அவளுக்கு வெறுப்பாகிப் போனது. எப்போதும் பாலாவைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது மட்டும் அவளுக்குப் பிடித்தமானதாயிருந்தது. சிரிப்பு பேச்சு ஒன்றும் இல்லாத காந்தியைக் காணவே கவலையாயிருக்கும் எனக்கு.

பல மாதங்கள் கழித்த ஒரு இரவில் அவளைத் தொட்டபோது ஏதோ தெருவில் போகிறவன் தொட்டபடி கண்கள் காட்டினாள். நான் பயந்து பின்வாங்கினேன். தீர்மானமாய்ச் சொன்னாள் இனி நமக்கு வேண்டாமென்று. ஏன் என்று கேட்கும் தைரியம் எனக்கில்லை. ஏதோ பேச்சுக்குச் சொல்கிறாள் என்ற என் எண்ணம் தவறாய்ப் போனது. காந்தி நெருப்பானாள். நான் என்னை அடக்கக் கற்றுக்கொண்டேன்.

இனி நமக்கு வேண்டாம் என்ற காந்தி தன்னை மறந்த ஒரு இரவில் கட்டை உடைத்துக்கொண்டு விட்டாள். அல்லது நான் உடைத்தேன். அன்றைக்கு காந்தியின் வேகமும் க்ரோஷமும் என்னைக் கொஞ்சம் பயமுறுத்திவிட்டன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இருபத்தைந்து வயதுப் பெண்ணின் சாந்தம் இல்லை. இரண்டு வருடங்களின் தனித்த இரவுகளை ஒரே இரவில் தீர்க்க நினைக்கிறாளோ என்றும் தோன்றியது. மூச்சு வாங்கி மேலே சரிந்தபோது "இப்போ மட்டும் பாலா ஞாபகம் இல்லையா?"என்று கேட்கலாமா என்று நினைத்தேன். நான் கேட்காமல் விட்டதற்கு பாலா எனக்கும் மகன் என்பதும் இனியும் இரவுகள் வரும் என்பதும் காரணங்களாய் அமைந்துவிட்டன.

நேற்று எங்களுக்குள் நடந்த சம்பாஷணைகள் என் தலைக்குள் தெறிக்கின்றன. அவளால் என்னை மட்டுமே குற்றம் சாட்ட முடியவில்லை என்ற ஒரே காரணத்தினால்தான் நான் தப்பித்தேன்.

என் சந்தோஷத்தை அவளோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அவள் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதாயும் அதற்குத் தானும் காரணமாகிவிட்டதாயும் புலம்பித் தீர்த்தாள். பாலா உண்டானதைச் சொன்னபோது நடந்த நிகழ்வுகள் என் மனக்கண்ணில் வந்து மறைந்தன. மெல்ல நெருங்கி உச்சி முகர்ந்து கையால் வயிற்றைத் தடவி உதட்டைக் கௌவி இறுக்கிக் கட்டிப்பிடித்த நிமிடங்கள் நேற்றும் நிகழ்ந்திருக்க வேண்டியவை. னால் நேற்று ஒரு கை ஓசை. பாலாவைக் கருக்கொண்ட அன்று இருவருக்குள்ளிருந்த சந்தோஷம் நேற்று என்னிடம் மட்டும்தான் இருந்தது. நேற்று அவள் மனதுள் நான் குற்றவாளியாக்கப் பட்டிருந்தேன்.

காந்தியின் புலம்பலை மீறி என்னுள் ஒரு சந்தோஷம் பரவியது. இன்னொரு மகனோ மகளோ பிறந்து அது தவழ்வதை, நடப்பதை எல்லாம் ரசிக்க முடியும். காந்தியின் குற்ற உணர்ச்சியும் என் மீதான சாடல்களும் அதைக்காணும்போது மறையும். அப்போது காந்தியிடம் சொல்ல வேண்டும், பாலா இருக்கும்போதே இரண்டாவதாய்க் கருவுற்றது பெரிய பாவமொன்றும் இல்லை என்று.

ஜ்வாலை எண்ணெயில்லாமல் சிறுகத் தொடங்குகிறது. சொந்தக்கார கிழவியருத்தி எண்ணெயிடுகிறாள். கிட்டத் தட்ட எல்லோரும் வந்தாகிவிட்டது. நான் யாருடனும் பேசவில்லை. அமைதியாயிருக்கிறேன். எல்லோரும் காந்தியைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். கொண்டு போகலாம் என்று யாரோ சொல்கிறார்கள். நான் சரி என்கிறேன், எப்படிச் செத்தான் என்ற யோசனையில். முனகல் சத்தம் கேட்டதாய்க்கூட நினைவில்லை.

காந்தியின் வீறிடல் என்னைக் குலுக்குகிறது. என்னிடம் அவளுக்கான தேறுதல் வார்த்தைகளில்லை. என்னை நானே கூட தேற்றிக்கொள்ள முடியாது. என்னைத் தேற்றவும் யாருமில்லை.

பாலாவின் நேற்றைய சிரித்த முகம் மனதை விட்டு இன்னும் கண்ணை விட்டு மறையவில்லை. காந்தி பலமுறை சொல்லி அழுத வரிகளை மீண்டும் சொல்லி அழுகிறாள். "யாருமே என்னைப் புரிஞ்சிக்கலையா..? பாலா.. நான் உன்ன மறந்துருவேன்னு நினைச்சிட்டியா.. பெரிய தண்டனையா கொடுத்திட்டியே..”

எனக்குக் குறுகுறுக்கிறது.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது. பாலா மாதிரி.
 

Share

கவிதைக்காகக் காத்திருக்கிறேன்

நீல வானத்தில்
வெள்ளைத் திட்டுக்களாய்
கால் பாவும் மேகங்கள்
பூமியைப் படித்தபடி
நகர்ந்துகொண்டிருக்க
மிதப்பில் இருக்கின்றன மரங்கள்

காற்றின் குறும்புதாளாது
கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன
என் கையில்
வெள்ளைக் காகிதங்கள்

நான்
கவிதைக்காகக் காத்திருக்கிறேன்

தவத்தைக் கலைக்கிறது
ஓடை நீரில்
தொப்ளக் சத்தம்.

எவனோ குதித்துபோது
தெறித்த துளிகள் பட்டு
திறந்திருக்கும்
தொட்டாச்சிணுங்கிச் செடியின்
இலைகள் மூடிக்கொள்ளும்
அழகைவிட
நல்ல கவிதை
எழுதமுடியாதாகையால்
இன்னும்
வெள்ளையாகவே இருக்கின்றன
காகிதங்கள்

Share