நான் யார்?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம்
ஒரு நாள் கிரீடத்துடன்
மறுநாள் அலுமனியத் தட்டேந்தி
இன்னொரு நாள் இராமன்
வேறொரு நாளில் இராவணன்
சில சமயம் துகிலுரிகிறேன்
சில சமயம் சேலை கொடுக்கிறேன்
சிகண்டியாய் நடித்த போது சிலாகித்திருக்கிறார்கள்
வேடத்துடன் பொருந்திப் போனதாய்
மாலை, கைதட்டுடன்
தட்டி மறைவில்
அயற்சியில் அரிதாரம் கலைக்கும்போது
நான் என்கிறது
என் கம்புக்கூட்டு வீச்சம்.
 

Share

Comments Closed