Archive for ஹரன் பிரசன்னா

நதி

நதி
–ஹரன் பிரசன்னா

நதிக்கரையில் பரவிக்கிடக்கிறது
என் ஆச்சி கட்டி விளையாடிய
மண்கோபுரத்தில் இருந்த
மணற்துகள்கள்

சிதிலமடைந்துவிட்ட
மண்டபங்களின் உட்சுவர்களிலும்
கல்தூண்களிலும் தென்படும்
மாயாதக் கிறுக்கல்களில்
ஏதேனும் ஒன்று
இளவட்டத் தாத்தாவினது

முயங்கிய பின்னான வேர்வை
இந்நதியின் வழியோடித்தான்
கடலில் கலந்திருக்கும்.

வயசுல உங்க தாத்தா
கோவணத்தக் கட்டிக்கிட்டு
மண்டபத்து மேலேயிருந்து
அந்தர் பல்டி அடிப்பாரு பாரு
என
காற்றை நெட்டி முறிக்கும்
தொஞ்சும் காதில்
பாம்படை அணிந்த என் ஆச்சி
இந்த நதிக்கரையில்தான்
அலைந்துகொண்டிருப்பாள்
கோவணம் கட்டியத் தாத்தாவுடன்.

நினைவுகளைச் சுமந்தபடி
என்
நதி.

Share

அய்யனார்

அய்யனார்
–ஹரன் பிரசன்னா

அய்யனார் கோயிலின்
ஆலமரத்துக்குக் கீழே
அன்று பிறந்த குழந்தை ஒன்று
பசியில் அழுதபடி

பிடதியில் இருகைகளையும் கோர்த்து
ஒட்டப்பட்டிருக்கும் புதிய சுவரோட்டியில்
பிதுங்கி வழியும் மார்பை
கள்ளத்தனமாய் இரசிக்கும் விடலைகள்
ஒருகாலத்தில்
இப்படி அழுதவர்கள்

பூட்டப்பட்டிருக்கும் வீட்டின்
கதவுகளுக்குள்
ஏதோ ஒன்றில்
முலை சுரந்துகொண்டிருக்கும்.

முன்னங்கால்கள் காற்றில் பாவ
புடைத்திருக்கும் திமிலின் கர்வம்
கண்ணில் தெரிய
பாதி பறக்கும் குதிரையின் மேலே
விரித்த விழி
முறுக்கிய மீசை
கையில் தூக்கிய வாளுடன்
உக்கிரமாய்
அமைதியாயிருக்கிறது
அய்யனார் சிலை

Share

இறங்குமுகம்


இறங்குமுகம்

–ஹரன் பிரசன்னா

கையில் கடவுச்சீட்டுடன் விமான தளத்தில் கிஷ் செல்லும் பயணிகள் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்த சிலர் வரிசையில் நின்றிருந்தார்கள். நானும் சேர்ந்துகொண்டேன். மற்ற விமான சேவைகளில் அளிக்கப்படும் உபசாரமும் மரியாதையும் கிஷ்ஷ¤க்குச் செல்லும் விமான சேவையில் இருக்காது என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்ததால் மரியாதைக் குறைச்சல் கோபம் தரவில்லை. இருந்தாலும் விசிட் விசா முடிந்து மற்றொரு விசிட் விசா வாங்கி வரவேண்டியிருக்கும் கூட்டத்தில் என்னையும் சேர்த்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கொஞ்சம் மேதைமை உள்ளவன். அடித்தட்டுக் கூட்டத்திலிருந்து எந்த செய்கைகள் என்னை தனித்தாக்குமென்று அறிவேன். கையிலிருந்த கனத்த ஆங்கிலப் புத்தகத்தில் லயிப்பது போன்ற பாவனையின் மூலம் என் தனித்துவத்தை விரும்பி நிறுவ முயன்றேன்.

வரிசை நகருவதாகவேத் தெரியவில்லை. விமானத்தில் மரியாதைக் குறைச்சல் எதிர்பார்த்திருந்த எனக்கு விமான தளத்தில் மரியாதைக்குறைச்சல் எதிர்பாராததாய்ப் பட்டது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற உடனடி முடிவுக்கு வந்தேன். கொஞ்சம் தூரத்தில் முழுக்க வெள்ளையாய் ஒரு அரபி ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பி, செல்லில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தான். அவன் விமானதளத்தின் ஒரு அதிகாரியாக இருக்கவேண்டும் என்று தோன்றவே வரிசையிலிருந்து விலகி அவனிடம் சென்று அவன் பேச்சு முடியும்வரைக் காத்திருந்தேன். சாவகாசமாய் பேசி முடித்துவிட்டு “சொல்லுங்கள் அன்பரே”என்றான். மிகத் தெளிவான ஆங்கிலத்தில் மறுமொழி அளித்தேன். கேள்வியை உள்ளடக்கிய ஒரு மறுமொழியில் அவன் என் ஆங்கிலத்தின் தரமும் வழக்கமான விசிட் விசா கூட்டத்தில் நான் ஒருவன் அல்லன் என்பதும் அவனுக்குப் பிடிபட்டிருக்கவேண்டும். கொஞ்சம் சுவாரஸ்யமானான்.

“உங்கள் பயணச்சீட்டைப் பார்க்கலாமா”என்றான். “சந்தோஷத்துடன்”என்று சொல்லி பயணச்சீட்டைக் காண்பித்தேன். சரிபார்த்துவிட்டுத் திருப்பித் தந்தான். “எல்லோரும் விசா மாற்றத்திற்காக மட்டுமே செல்லும் கிஷ்ஷ¤க்கு துபாயின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற நீங்கள் செல்வது ஒரு ச்சரியமான நிகழ்வுதான்”என்றான். சிரித்துவிட்டுக் கேட்டேன்.

“நான் அதிக நேரமாய் அந்த நகராத வரிசையில் நின்று பொறுமை இழந்துவிட்டேன். எங்கள் ஊரில் புகைவண்டி நிலையத்தில் கூட இத்தனை நேரம் நின்றதாய் நினைவில்லை. ஒரு விமான தளத்தில் அதுவும் ஒரு நாற்பத்தைந்து நேர நிமிட பயணத்தில் அடையக்கூடிய இலக்கிற்கு இத்தனை நேரம் காக்க வைத்ததன் மூலம் உங்களை அறியாமலேயே நீங்கள் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள்”என்றேன். பொறுமையின்றி சிரித்தான். ஒரு புகைவண்டி நிலையத்தை, அதுவும் ஒரு இந்தியப் புகைவண்டி நிலையத்தை துபாயின் பன்னாட்டு விமான தளத்துடன் ஒப்பிட்ட எனது இரசிப்புத்தன்மையை அவன் விரும்பியிருக்க மாட்டானென்றறிவேன். ஆனால் இது போன்ற எதிராளியைக் கொஞ்சம் கூச வைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது. அதிலிருக்கும் சந்தோஷமே அலாதியானது.

அவன் கொஞ்சம் பொறுமை காக்கவும் என்று சொல்லி விலகிச் சென்றான். எல்லோருக்குள்ளும் பதில் சொல்லாமல் நழுவும் என் இந்தியநாட்டு மனப்பான்மை ஒளிந்திருக்கிறது. ஒருவழியாய் வரிசை நகர ஆரம்பித்தது.

மிகச் சிறிய இரஷிய விமானம் என்னைத் தூக்கிக்கொண்டு பறந்தது. இதுபோன்ற விமானங்களில் பயணிப்பது என் மாட்சிமையைக் குறைக்குமென்றாலும் தொழில் கருதி பொறுக்க வேண்டியிருக்கிறது. விசா மாற்றத்திற்குச் செல்லும் இந்தியர்களின் அவலநிலை குறித்த ஆய்வுக்கட்டுரை என் தலையில் விழுமென்பது நானே எதிர்பாராததுதான். ஆனாலும் மோசமில்லை. மோனியுடன் மீண்டும் ஒரு இனிமையான இரவைக் கழிக்க முடியும்.

பயணிக்கும் ஏறத்தாழ நாற்பது நபர்களில் என்னுள்ளிட்ட ஒன்றிரண்டு பேர்தான் கனவாண்கள். பெரும்பான்மை இந்தியர்களும் சில பாகிஸ்தானிகளும் கடைமட்டக் கூலிகளாயிருக்கவேண்டும். கட்டுரையில் அவர்களை எவ்விதம் வர்ணிக்கலாமென்ற உள்ளூறும் யோசனையினூடே ஒவ்வொருவராய் நோட்டமிட்டபோது “தமிழகத்தின் பொருளாதார நெருக்கடிகள் – கம்யூனிசப் பார்வை”என்ற புத்தகத் தலைப்பு என்னை நிறுத்தியது. நான் படித்திருக்கும் மிகச்சில தமிழ்ப்புத்தகங்களில் அதுவுமொன்று என்பது காரணமாயிருக்கலாம் என்று நிறுவிக்கொண்டேன். காரணமில்லாமல் எதுவுமே நிகழாதென்பது எனக்குள்ளாய் நிரூபிக்கப்பட்டுவிட்ட கொள்கை.

அந்தப் புத்தகம் முப்பதுகளைத் தொலைத்துக்கொண்டிருக்கும் ஒரு கணவானின் கையிலிருந்தது. நான் கொண்டுள்ள கணவான்களின் இலக்கணத்தில் பொறுத்திப் பார்த்த போது தேறினான் என்பதால் அவனை கணவான் என்கிறேன். மூக்கின் நுனியிலிருக்கும் கண்ணாடியின் வழியே ஒவ்வொரு வரிக்கும் மாறும் லாவகம் அவன் கண்களின் அசைவில் தெரிந்தது. வழுக்கையும் தொப்பையும் இல்லாதிருந்தால் வடிவில் எனக்குப் போட்டியாளானாய் இருந்திருப்பான். அரைமணி நேரப் பயணத்தில் அந்த இலங்கைக் காரனுடன் – அவன் இலங்கைக்காரனாய்த்தான் இருக்கவேண்டும்; என் உள்ளுணர்வுகள் தவறுவதேயில்லை என்று உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்- கொஞ்சம் கதைக்கலாமென்று விழைந்தேன். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத்தான் வேண்டும். கண்ணில் தெரிகிறதே.

மிகப்பெரிய முன்னுரையோ தொடர்ச்சியான முகமன்களோ எனக்கு பிடிக்காதென்பதால் நேரடியாகத் தொடங்கினேன்.

“இந்தப் புத்தகத்தில் பெரியதாய் ஒன்றுமில்லை. வழக்கம்போல இந்தியா கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிசப் பார்வை என்பதெல்லாம் வெற்றுப் புலம்பல். கம்யூனிஸம் குருடாகி நாள்கள் ஆகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒற்றை வரியில் சொல்வதானால் இடதுசாரி மனப்பான்மையின் தாக்குதல்களின் தொகுப்பாய் இப்புத்தகத்தைக் கொள்ளலாம்”என்றேன். பதிலாய் “யார் நீங்கள்?”என்றான். ஆங்கிலத்தில் என்னைப் பற்றிய மிகச்சிறிய குறிப்பைத் தந்துவிட்டு என் விவர அட்டையை நீட்டினேன். வாங்கினான். ஆனால் அதை நோட்டமிடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான். “உங்களுக்கு என்ன வேண்டும்?”அந்த ஒரு கேள்வியால் என் பேச்சில் கவரப்பாடத கணவானும் இருக்கிறானோ என்ற சந்தேகம் என்னுள் முளைவிடத் தொடங்கிற்று. “உங்களுடன் சில நிமிடங்கள் கதைக்கலாமென்று.. ..”மறித்து பதிலளித்தான்.

“இன்னொரு சமயம். இப்போது என்னால் முடியாமைக்கு வருந்துகிறேன். சந்திப்போம்”என்று சொல்லி நான் நகரும் முன்னமே புத்தகத்தைத் தொடர்ந்தான். நான் என் இருக்கைகுக்குச் செலுத்தப்பட்டேன். அவமானப் படுத்தப் பட்ட கணங்களை நான் மறப்பதே இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

கிஷ் பெருத்த ஈரப்பதத்துடன் இரவு பன்னிரண்டு மணிக்கு எங்களை உள்வாங்கிக் கொண்டது. என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு என் பார்வை அந்த இலங்கைக்காரனைச் சந்திக்காதிருந்தது. ஆனால் மனம் சொல் பேச்சு கேட்பதேயில்லை. அவமதிக்கப்பட்ட் நிமிடங்களை மீண்டும் மீண்டும் நினைத்தவண்ணம் சுழன்றது.

என் பெயர் எழுதப்பட்ட அட்டையைத் தூக்கியபடி ஒரு ·பிலிப்பனோக்காரி நின்றிருந்தாள். என் பெயருக்குக் கீழாய் ஜார்ஜ் என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. நான் அந்த ·பிலிப்பினோக்காரியை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “கிஷ் தீவுக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்”என்றாள். நன்றியுரைத்துவிட்டு, செல்லலாமா என்றேன். “திரு. ஜார்ஜுக்காய் உங்களையும் காத்திருக்க வைப்பதில் வருந்துகிறேன்”என்றாள். “நான் ஏன் ஜார்ஜுக்காய் காத்திருக்கவேண்டும்”என்றேன். “மன்னிக்கவும்”என்று சொல்லிச் சிரித்தாள். இதுபோன்ற சமாளிப்புகளை நான் அறவே ஏற்பதில்லை என்றாலும் எதிராளி என் முன்னே நெளிகிறான் என்ற சந்தோஷம் என்னுள் பரவியதல் கொஞ்சம் அமைதிகாத்தேன். என் எரிச்சல் கோபமாகுமுன் அந்த இலங்கைக்காரன் வேகமாய் எங்களை நெருங்கி தன்னை ஜார்ஜ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அவள் என்னிடம் சொன்ன அதே வரவேற்புகளை எழுத்துப் பிசகாமல் அவனிடமும் சொன்னாள். எங்களை ஒரு சொகுசு காரில் ஏற்ற்¢க்கொண்டு தங்குமிடத்திற்கு கூட்டிச் சென்றாள். அடுத்தடுத்து அமர்ந்திருந்தும் நானும் இலங்கைக்காரனும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ள வில்லை.

நாங்கள் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் எதிரெதிர் அறைகளில் தங்க வைக்கப்பட்டோம்.
பயணக் களைப்பை குளியலில் கொஞ்சம் குறைத்துவிட்டு வரவேற்பை அடைந்து மோனியை நலம் விசாரித்தேன். இரவில் அவளின் தேவையைச் சொன்னேன். இன்றேவா என்றாள். நான் இன்றேவா என்றால் என்று எதிர்க்கேள்வி கேட்டேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நன்றி என்றேன். இன்னும் அரைமணி நேரத்தில் வருவதாய்ச் சொன்னாள். அவளை கடந்த முறை முதலாய்க் கண்ட மாத்திரத்திலேயே ஆப்கானிஸ்தானி என்று உணர்ந்தேன். என் யூகத்திறனை அறிந்து வியந்தாள். வெகுவாய்ப் புகழ்ந்தாள். காணும் அனைவரும் அவளை இரானி என்றே நினைப்பதாயும் நான் ஒருவன் மட்டுமே ஆப்கானிஸ்தானி என்று அறிந்ததாயும் சொன்னாள். இதுபோன்ற புகழ்ச்சியின் இறுதி என்னவென்று அறியாதவனாய் என்னை அவள் நினைத்திருக்கக்கூடும். இருநூறு எமாரத்திய திர்ஹாம்கள் அதிகமாகும்.

ப்கானிஸ்தானிய பாலியல் தொழிலாளிகள் கூட நேரம் தவறலை விரும்புவதில்லை போல. மிகச்சரியாய் அரைமணி நேரத்தில் அறைக்குள் வந்தாள். மணி இரண்டைத் தொட்டிருந்தது. சொந்தக்கதைகளை சொல்லிய வண்ணம் இருந்தாள். அவளின் தம்பி இரசாக் பதிநான்கு வயதில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் குழுவிற்கு தன்னை அர்பணித்துக்கொண்டானாம். அவனுக்கு போன மாதம் நடந்து முடிந்த திருமணத்திற்கு இவள் ப்கானிஸ்தான் சென்று வந்தாளாம். பாலியல் தொழிலில் பேச்சுத்தடைச்சட்டம் வந்தால் நல்லது. எனக்குத் தூக்கம் வருகிறது என்றேன். பெருமூச்செறிந்தாள். அறையின் விளக்குகளை அணைக்கலாமா என்றாள். விளக்குகள் இருக்கட்டும் என்றேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நான் அழகை அனுபவிக்க மட்டுமல்லாமல் இரசிக்கவும் தெரிந்தவர்கள் என்றேன். இது இரசனை இல்லை நோயின் அறிகுறி என்றாள். பணம் வாங்கும்போது பாவங்கள் கரைவதுபோல உடல் தளர்ந்து விலகும்போது நோயும் கரையும் பெண்ணே என்றேன். அதற்கு மேல் எனக்குப் பொறுமையில்லை. எதிர் அறையில் விளக்கு இன்னும் ஏன் எரிகிறது என்ற யோசனையை தள்ளி வைத்துவிட்டு மோனியை முகரத் தொடங்கினேன். அவள் எரியும் விளக்கைப் பார்த்த வண்ணம் ஒத்துழைத்தாள்.

இரவு எத்தனை மணிக்கு உறங்கினேன் என்பதோ மோனி எப்போது என் அறையைவிட்டு வெளியே சென்றாள் என்பதோ எனக்கு நினைவில்லை. எதிரறையில் இருந்து காட்டுத்தனமாக வந்த ஒரு இசை என்னை எழுப்பியதை உணர்ந்தேன். அது எந்த மொழிப்பாடல் என்று நான் தெரிந்திருக்கவில்லை என்பது என் மனதுள் ஒரு ஆற்றாமையை உண்டாக்கியது. அந்த இலங்கைக்காரன் -பெயர் கூட ஜார்ஜ் என்று நினைவு- கொஞ்சம் திறமையுள்ளவன் என்று ஒரு எண்ணம் கிளர்ந்தபோது உடனே அதை வேசமாய் பிய்த்து எறிந்தேன். அவமானப்படுத்தப்படுவது மறப்பதற்கல்ல.

இன்று மாலை ஐந்து மணிக்கு துபாய் திரும்பவேண்டும். நாளை காலை கட்டுரையின் முதல் பிரதியைத் தரவேண்டும் என்ற எண்ணம் வந்தது. எழுதுவது அத்தனை கடினமல்ல. சிற்சில கடினமான ஆங்கிய பிரயோகங்களுடன் சில மேற்கோள்களையும் கூட்டிச் சேர்த்தால் உலகம் கைதட்டும். மோனியைத் தொலைபேசியில் அழைத்தேன். வரவேற்பில் ஒருத்தி மோனி இன்று வரவில்லை என்றாள். குரலில் இந்தியத்தனம் இருந்தது. எனக்கு இந்தியப் பெண்கள் மீது மோகம் இல்லை. மோனியின் செல்·போன் எண்ணைக் கேட்டேன். கொடுத்தாள். உடனே தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பில் இன்றுமா என்றாள். அவளின் ஹாஸ்யம் இரசிக்கத்தக்கதாய் இல்லை. சில நிர்வாண நிமிடங்கள் தரும் சலுகையினால் மோனி தப்பித்தாள். கட்டுரை எழுதத் தேவையான சில புத்தகங்கள் வேண்டுமென்றேன். வரவேற்பைத் தொடர்புகொள்ளச் சொன்னாள். நீ வரமுடியாதா என்றேன். இரண்டு நிமிடங்களில் வருகிறேன் என்று தொடர்பைத் துண்டித்தாள்.

இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாயே வந்துவிட்டாள்.

“விடுதியில் தான் இருந்தாயா? வரவேற்பில் நீ வரவில்லை என்றார்கள்”என்றேன்.

“நான்தான் அப்படிச் சொல்லச் சொல்லியிருந்தேன். எதிரறையில்தான் இருந்தேன்.”என்றாள்.

“அந்த இரசனைகெட்ட இலங்கைக்காரனுடனா?”

“உங்களுக்குத் தெரியுமா ஜார்ஜை? மறக்கமுடியாத அதிசயமான மனிதர். வரிக்கு வரி தாய்நாடு தாய்மொழி என்கிறார் தெரியுமா?.. “என்றாள்.

“பசப்பில் மயங்காதே பெண்ணே. இவர்களுக்கெல்லாம் நாடு களம். மொழி ஒரு ஆயுதம். கிணற்றுத்தவளைகள். மொழியை அவர்கள் வாழவைப்பதாய்ச் சொல்வார்கள். அதுவும் இலங்கைத் தமிழனல்லவா. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்படுவான். உலக அறிவு இருக்காது”

“இல்லை திரு. பென்னி. நீங்கள் தவறாய்ச் சொல்லுகிறீர்கள். ஆப்கானிஸ்தான் பற்றி என்ன அழகாய்ச் சொன்னார் தெரியுமா? உருதில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையாம். அழுதே விட்டேன் தெரியுமா.. ஓ என் தாய்நாடே என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டீர்களானால் உணர்வீர்கள்”என்றாள்.

“பசப்பு மொழிகளின் கூரிய ஆயுதம் கவிதை என்றறிவாயா நீ?”

“எனக்கு வாதிக்கத் தெரியாது திரு. பென்னி.

“எந்த நாட்டில் பூக்கள் மலர்வதில்லையோ
எந்த நாட்டில் குண்டுச் சத்தம் மூச்சுச்சத்தத்தைவிட அதிகம் கேட்கிறதோ
எந்த நாட்டில் குழந்தைகள் முலைப்பால் குடிப்பதில்லையோ
அந்த நாட்டிலும் பெண்கள் ருதுவாகிறார்கள் “

என்ற வரிகளைக் கேட்டவுடன் ஆப்கானிஸ்தானின் புழுதி நிறைந்த தெருக்களும் போரில் பெற்றோரை இழந்த குழந்தையின் அழுகையும் என் ந்¢னைவில் வந்து போனதை நீங்கள் அறிய மாட்டீர்கள். “

“நீ அதிகம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிந்திக்கிறாய் மோனி. கவிதை என்பது உயற்சியாகச் சொல்லுதல் மட்டுமே.”

“எனக்குத் தெரியவில்லை. எனக்குப் பிடித்த வரிகளைச் சொன்னேன். சரி விடுங்கள். உங்களுக்கு நான் இப்போது எந்த வகையில் உதவ முடியும்? சொல்லுங்கள்”என்றாள்.

என் தேவைகளைச் சொன்னேன். அரைமணிநேரத்தில் எல்லாம் கொண்டு வந்து தந்தாள். விடைபெற்றுச் சென்றாள். ஜன்னல் திரைகளை விலக்கி அவள் எங்கே செல்கிறாள் என்று நோட்டமிட்டேன். அவள் அந்த எதிரறைக்குள் சென்றாள். எனக்கு ஏனோ கோபமாய் வந்தது.

***

இந்த முறை இரஷிய விமானத்தில் என் வலது பக்கத்தில் அந்த இலங்கைக்காரன் இருந்தான். அவனைப் பார்க்கும்போதே இனம்புரியாத ஒரு எரிச்சல் உள்ளுள் பரவுவதை அறிந்தேன். அவன் என்னை எப்படி உணருகிறான் என்று தெரியவில்லை.

இன்னும் பதினைந்து நிமிடங்களில் துபாயில் விமானம் தரையிறங்கும். அதற்குமுன்னாய் அவன் என்னை மறக்காதவாறு ஒரு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது. எனக்குத் தோன்றினால் சரியாய்த்தான் இருக்கும். ஆனால் அவன் ஏதோ ஒரு ஆங்கிலப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான். என்பக்கம் திரும்பவேயில்லை. வேறு வழியின்றி நானே தொடங்கினேன்.

“மன்னிக்கவேண்டும் திரு. ஜார்ஜ்”என்றேன். சொல்லுங்கள் என்ற பாவனையில் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி மூக்குக்கண்டாடிக்கும் நெற்றிக்குமான இடைவழியேப் பார்த்தான்.

“நேற்று மோனி நீங்கள் ஒரு கவிதை சொன்னதாய்ச் சொன்னாள்”

“மோனி.. ஓ அந்த ஆப்கானிஸ்தான் விபச்சாரியா?”

எனக்கு சட்டென்று ஒரு கோபம் பரவி அடங்கியது.

“திரு ஜார்ஜ். எப்படி உங்களால் இப்படிச் சொல்ல முடிகிறது?”

“நிஜத்தை நிஜமாய் சொல்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள். எந்த வித சுற்றிவளைத்தலோ ஆபரணமோ இல்லாமல் அம்மணமாய் இருப்பது போன்ற ஒன்று உங்களுக்கு விருப்பம் என்றறிந்தேன்.”

“நானாய் பேச எத்தனித்தேன் என்ற ஒரு காரணத்திற்காய் நீங்கள் என்ன வேண்டுமானால் பேசலாம் என்பதில்லை”

“அப்படியானால் மிக்க நல்லது. இத்தோடு நமது பேச்சை நிறுத்திக்கொள்ளலாம்”

“சரி நிறுத்திக்கொள்ளலாம். னால் ஒன்றைச் சொல்லத்தான் வேண்டும். உங்கள் இரசனைக்கும் வெளி அங்க அசைவுகளுக்கும் அதிக தூரம்”

“இருக்கலாம். ஆனால் எல்லா இரவிலும் நான் விளக்கை அணைக்கிறேன். குருடாகிப் போனப் பார்வையென்றாலும்.”

கொஞ்சம் புரியாத அவன் பதிலை உள்வாங்கிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது நான் மிகுந்த அவமானமாய், நாற்சந்தியில் நிர்வாணமாய் நிற்பதாய் உணர்ந்தேன்.

விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.

Share

கிஷ் தீவு-ஒரு அறிமுகம்


கிஷ் தீவு-ஒரு அறிமுகம்

–ஹரன் பிரசன்னா

அமீரகத்தில் இருப்பவர்களுக்கு, அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்லாமல் இருப்பவர்களுக்கு கிஷ் தீவு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும் அமீரகத்தில் ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தில்
இந்தியாவிலேயே இருந்துவிடாமல், விசிட் விசாவில் அமீரகம் வந்து வேலை தேடலாம் என்று நினைக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் ஏராளம் பேர். முன்னொரு காலத்தில் அமீரகம் வந்தவர்கள், எந்தத் தகுதியாய்
இருந்தாலும், வேலை கிடைக்காமல் திரும்பிப் போனதே இல்லை எனலாம். ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை. அமீரகம் அதன் கவர்ச்சியை இழந்துவிட்டது. வேலையில் இருப்பவர்கள் கூட ஆள் குறைப்பு என்னும் போர்வையில் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வேலை கிடைக்காதவர்களைவிட வேலை கிடைத்து, பின்அதை இழந்து தாயகம் செல்லும் மக்களின் மனநிலை மிக மோசமானது. இது குறித்து இன்னொரு முறை பேசுவோம்.

இது போன்ற அமீரக நெருக்கடிகளை உணராதவர்கள் இன்னமும் விசிட்டில் வந்து ஏதாவது வேலை கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் தினமும் classifieds பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வேலை அமீரகத்திலும் குதிரைக்கொம்பாகி வருஷங்கள் ஆகின்றன.

சிலர் வேலை கிடைத்தாலும் முதலில் விசிட்டில்தான் வருகிறார்கள். இங்கு வந்து பின் வேலைசெய்யும் உரிமையுடைய விசா (employement visa) வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில். இப்படி வருபவர்களுக்கு பெரும்பாலும் employement visa கிடைத்துவிடுகிறது. அமீரகத்தில் விசிட் விசா என்பது இரண்டு மாதங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. 500 திர்ஹாம்கள் கட்டி அதை மூன்றாவது மாதத்திற்கு நீட்டிக்கொள்ளலாம்.
மூன்று மாதத்திற்குப் பின் அமீரகத்தை விட்டு வெளியேறியே ஆகவேண்டும். அதன்பின் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் நூறு திர்ஹாம்கள் அபராதம். விசிட்டில் வந்து மூன்று மாதத்தில் வேலை கிடைக்காதவர்கள் சொந்த
நாட்டிற்குச் சென்று திரும்பி வர அதிகம் செலவாகும். உதாரணமாய், அமீரகத்திலிருந்து சென்னை சென்று திரும்பிவர டிக்கட் மட்டும் கிட்டத்தட்ட 22000 இந்திய ரூபாய். (இந்த மதிப்பு இந்திய ரூபாயின் டாலருக்கு நிகரான ம
திப்பையும் இந்தியா சென்று வரும் சீசன் காலங்களையும் பொறுத்து கூடும்; குறையும்). அப்படி விசிட் முடிந்து செல்லும் பெரும்பாலானவர்கள் மீண்டும் விசிட்டில் வந்து வேலை தேடத்தான் ஆசைப் படுவார்கள். ஒவ்வொரு
விசிட்டுக்கும் 22000 இந்திய ரூபாய் செலவழிப்பதற்கான வசதியிருந்தால் அவர்களுக்கு துபாயில் வேலை தேடும் நிமித்தம் இருந்திருக்காது. இது போன்றவர்களின் வயிற்றில் பால் வார்ப்பது கிஷ் தீவு.

முதலில் விசிட்டில் வந்து, பின் employment visa பெறும் நபர்களுக்கும் பேருதவியாய் இருப்பது கிஷ் தீவுதான்.

கிஷ்தீவு இரானின் வசமுள்ள ஒரு தீவு. அமீரகத்திலிருந்து 40 நிமிட விமானப் பயணத்தில் கிஷ்ஷை அடையலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கிஷ்ஷைக் கொஞ்சம் இயற்கை அழகுள்ள பாலைவனம் எனலாம்.
பெரிய பெரிய கட்டடங்கள், மனதை மயக்கும் ரெஸ்டாரண்டுகள், கோல்·ப் மைதானங்கள் என ஒன்றும் இருக்காது. வெறும் வெட்ட வெளி. கிஷ¤க்கு வந்து தங்கிச் செல்லும் பயணிகளுக்கு அபயம் அளிக்க இரண்டு மூன்று
நல்ல தங்கும் விடுதிகள். பலான மேட்டருக்கு வசதிகள். அவ்வளவே.

துபாயிலிருந்து கிஷ்ஷ¤க்குச் சென்று வர இந்திய ரூபாயில் ஏறக்குறைய 4500 ரூபாய் அகிறது. ஒரு நாள் தங்கும் செலவை, நாம் செல்லும் ஏர்வேஸ்காரர்களே ஏற்கிறார்கள்.நல்ல விடுதியில் தங்கவைத்து, மறுவிசிட் விசாவின் நகலோ அல்லது employement visit ன் நகலோ கிடைத்துவிட்டால், மிக மரியாதையாய் மீண்டும் கிஷ்ஷின் விமானநிலையத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்.

சிலருக்கு ஒரு நாளில் மறு விசிட்டோ அல்லது employement visa வோ கிடைக்காது. அவர்களெல்லாம் 14 நாள்கள் வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள். கிஷ்ஷின் விதிகளின்படி 14 நாளகளுக்கு மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். அந்த பதிநான்கு நாள்களுக்கு தனியாய்ப் பணம் செலுத்திவிடவேண்டும்.

பதிநான்கு நாள்களிலும் விசிட்விசாவோ employment visaவோ கிடைக்கப்பெறாதவர்கள் பத்திரமாய் கிஷ்விமானதளத்திற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் அமீரகம் அனுப்பப்பட்டு அங்கிருந்து வலுக்கட்டாயமாய்
சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இதற்கான எல்லா ஏற்பாடுகளைச் செய்த பின்னரே அமீரக எமிக்ரேஷன், கிஷ் செல்வதற்கான பயண டிக்கட்டைவழங்கும்.

கிஷ் செல்வதற்கான இன்னொரு காரணம், கிஷ் செல்ல விசா வாங்கவேண்டியதில்லை என்பது. பயண டிக்கெட் மட்டும் எடுத்தாலே 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதியும் சேர்த்துக் கிடைத்துவிடும்.

நான் அமீரகத்திற்கு விசிட்டில் வந்தேன். முதல் மூன்று மாதத்தில் எனக்கு employment visa கிடைக்கவில்லை. வழக்கம்போல கிஷ் போனேன். அப்போது எங்கள் பி ர் ஓ வின் தயவால், செல்லுமுன்னரே அடுத்த விசிட்டிற்கான
விசா எனக்குக் கிடைத்துவிட்டது. இது சட்டப்படி தவறு. னாலும் பிர் ஓ அதை சாதித்துவிட்டார். அதனால் நான் கிஷ்ஷில் கால் வைத்த அடுத்த ஒரு மணிநேரத்தில் அடுத்த விமானம் பிடித்து புதிய விசிட் விசாவில்
துபாய் வந்துவிட்டேன். அதனால் முதல் விசிட்டில் என்னால் கிஷ் தீவின் உள் செல்ல முடியவில்லை. வெறும் விமான நிலையத்தோடு சரி. transit launchல் employment visa கிடைக்குமா கிடைக்காதா என்று யோசித்துக் கொண்டு
இருந்ததோடு எனக்கும் கிஷ்ஷ¤க்குமான முதல் சந்திப்பு முடிந்து போனது.

அடுத்த மூன்று மாதத்திலும் எனக்கு employment visa கிடைக்கவில்லை. மீண்டும் கிஷ்ஷ¤க்கு அனுப்பப்பட்டேன். இந்த பி. ர். ஓவின் ஜம்பம் பலிக்கவில்லை. அதனால் அமீரக எமிக்ரேஷனில் நான் இந்தியா
செல்வதற்குரிய பணத்தைக் காப்புத்தொகையாகச் செலுத்திய பிறகு எனக்கு கிஷ்ஷ¤க்கான டிக்கட் தந்தார்கள். கிஷ்ஷில் இறங்கும்போது இரவு 2.30. வழக்கம்போல இந்த முறையும் employment visa கிடைக்காது
என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. இரண்டு நாளாய் விசிட் விசாவும் கிடைக்காமல் போனது எதிர்பாராதது. ரெண்டு நாளாய் சாப்பிட வெஜிடேரியன் ஐட்டங்கள் எதுவும் கிடைக்காமல் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.
வெஜிடேரியன் என்றாலே என்னவென்று தெரியாதெனப் பார்த்த ஹோட்டல்காரர்கள்அதிகம். வெறும் பிரட்டும் சாஸ¤ம் பழங்களும் தாம் என்னைக் காப்பாற்றியது.

கிட்டத்தட்ட எல்லா இரானிகளுக்கும் ஹிந்தியும் பார்ஸியும் நன்றாய்த் தெரிந்திருந்தது. எனக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே. அதுவேறு இன்னொரு கஷ்டம். எல்லா திராவிடத் தலைவர்களையும் மனதிற்குள் திட்டித்
தீர்த்தேன். ஒருவழியாய் புதிய விசிட் விசா கிடைக்க, அதிகம் தங்கிய இரண்டு நாள்களுக்கானப் பணத்தைக் கட்டிவிட்டு, ஆப்கானிஸ்தான் ரிஷப்சனிலிஸ்ட்க்கு (ஆண்!) நன்றி சொல்லிவிட்டு, துபாய்க்குப் பறந்தேன்.

அந்த முறை கிஷ்ஷில் சந்தித்த நபர்கள் சுவாரஸ்யமானவர்கள். விசிட்டில் வந்து கணவனுடன் சந்தோஷமாய் இருந்ததில் கர்ப்பமாகி மீண்டும் புதிய விசிட் வாங்க வந்த இந்திய பெண்மணி. ஏழுமாதம் என்றாள். அடிக்கடி தலை சுத்துது
என்றாள்.

மருமகள் கர்ப்பமாய் இருந்ததால் அவளுக்கு உதவியாய் இருக்க இந்தியாவில் இருந்து விசிட்டில் துபாய் வந்த மாமியார். கர்நாடகாக் காரர். கண்பார்வை வேறு கொஞ்சம் மங்கல். நான் தான் கை பிடித்து நிறைய இடங்களுக்குக்
கூட்டிச் சென்றேன். தேங்க்ஸ் தேங்க்ஸ் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

இது போல நிறைய சுவாரஸ்யமான மனிதர்கள். நான் சொன்னதெல்லாம் சொற்பமான அளவில் வந்தவர்கள்தாம். அதிகம் வந்தவர்கள் மறுவிசிட் கிடைக்குமா கிடைக்காதா, employment visa கிடைக்குமா கிடைக்கதா
என்று (என்னைப்போல்) ஏக்கத்திலிருந்தவர்கள்.

இவர்களைப் பார்த்தவுடன் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும். ஊருக்குப் புதுசா என்று எளிதில் கேட்டுவிடக்கூடிய தோற்றத்தைக் காண்பித்துக்கொண்டு இருப்பார்கள். தமிழ் பேசுறவர் யாராவது இருக்குறாங்களா என்ற நோட்டம். (அதாவது தாய்மொழி). இப்படிப் பல விஷயங்கள்.

நான் சென்ற கிஷ் 18 மாதங்களுக்கு முந்தியது. இப்போது நிறைய மாறிவிட்டதாம். நேற்று கிஷ் சென்று வந்தவர் சொன்ன விஷயங்கள் சந்தோஷமாயும் கொஞ்சம் மலைப்பாயும் இருந்தன.

“அட நீங்க வேற.. நீங்க போன கிஷ் எல்லாம் மாறிப்போச்சு.. இப்ப அது ஒரு குட்டி இந்தியத் தீவு. மலையாளிங்க சாயாக் கடையும் ஹோட்டலும் வெச்சிருக்காங்க. வெஜிடபிள் பாரிக்கும் (அதாவது வெஜிடேரியன், பச்சரிசிச் சோறு), மோட்டாவும் ஈஸியாக் கிடைக்குது. ஹோட்டல்ல ஏகப்பட்ட வசதிங்க.. பொண்ணு கூடக் கிடைக்குது”

“அது நான் போகும்போதே கிடைச்சுதுங்க.. ஒடம்புக்கு ஆகாதுன்னு நாந்தான் வேணானுட்டேன்”

“குறுக்கப் பேசாம கேளுங்க.. ஹோட்டலுக்குப் போன ஒடனே டிவிய ஆன் பண்ணா எல்லாம் மேற்படி சமாச்சாரம். ஆனா ரொம்ப ஒண்ணும் அதிகாமா காமிக்கலை”

“நெசமாவா?”

“ஆமாங்கறேன். மெல்ல விசாரிச்சா 5 திர்ஹாம் கொடுத்தா சுமாரா காண்பிப்பாங்களாம். 8 திர்ஹாம் கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்குமாம். பத்து திர்ஹாம்னா சூப்பராம்.”

“சே.. நான் போகும்போது இப்படியெல்லாம் ஒண்ணும் இல்லாமப் போச்சே..”

‘”ங்களுக்கு மச்சம் இல்லைங்க.. நான் எட்டு திர்ஹாம் கொடுத்துப் பார்த்தேன். அதுக்கே இப்படின்னா பத்து திர்ஹாம் கொடுத்திருந்தா.. எப்பா..”

“மிஸ் பண்ணிட்டீங்களே..”

“அதனால என்ன. இப்பவும் விசிட்ல தான் வந்திருக்கேன். அடுத்த விசிட்டுக்கு அங்கதான போவணும்.. அப்பப் பார்த்துக்குட்டாப் போச்சு”

இப்போதெல்லாம் விசிட்டில் செல்பவர்கள் சீக்கிரம் மறு விசிட்டோ employment visa வோ கிடைத்துவிடக்கூடாது என்றுதான் வருத்தப்படுகிறார்களாம்.

இந்தியர்கள் எந்த இடத்தையும் இந்தியாவாக்காமல் விட்டுவிடுவதில்லை.

எட்டிக்காயாய் இருந்த கிஷ் ரிலாக்ஸிங்க் இடமாக மாறிவிட்டது.

அன்புடன்
பிரசன்னா

பி.கு. எனக்கு எம்ப்ளாய்மெண்ட் விசா கிடைத்தபோது மீண்டும் கிஷ் செல்வேன் என நினைத்திருந்தேன். அந்த ஆப்கானிஸ்தான் நண்பரை மீண்டும் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் என் கம்பெனி என் பணியின் அவசரம் மற்றும் அவசியம் கருதி என்னை மஸ்கட் சென்று வரச் சொல்லிவிட்டது. மஸ்கட் செல்வது
என்பது ஒரு சுவையான விஷயம். இது மாதிரி விசா மாற்றுவர்களுக்காக மட்டுமே ஒரு ஏர்வேஸ் செயல்படுகிறது. மஸ்கட் சென்று வர இந்திய ரூபாயில் 7000 வரை கும். நீங்கள் செய்யவேண்டியது விசிட் விசாவை
ஒப்படைத்துவிட்டு பாஸ்போர்ட்டில் எக்ஸிட் அடித்து வாங்கிக்கொண்டு மஸ்கட் செல்லும் விமானத்தில் ஏறவேண்டியது. அது உங்களைத் தூக்கிக்கொண்டு மஸ்கட் பறக்கும். மஸ்கட்டின் விமான ஓடுதளத்தில்
தரையிறங்குவது மாதிரி இறங்கி, தரையைத் தொடாமல் மீண்டும் வானத்தில் ஏறும். மீண்டும் உங்களைத் துபாய் கொண்டு வந்து விட்டுவிடும். அதாவது ஒண்ணரை மணிநேரம் நீங்கள் விமானத்தில் மட்டும் இருந்தால் போதும்.
மஸ்கட்டில் தரையிறங்காமல் விசா மாற்றம் முடிந்துவிடும்!!! எல்லாம் காசு பிடுங்கும் வேலை. இதற்கு பாஸ்போர்ட்டில் எக்ஸிட் அடித்துவிட்டு, ஒரு ஓரமாய் ஒரு மணிநேரம் ஓரமாய் உட்காரச்சொல்லி மீண்டும் இன் அடித்துக்
கொடுத்தால் போதாதா? விமானத்தில் பறக்கும் அபாயமாவது மிச்சமாகும்! ஆனால் நாம் ரோமில் இருக்கும்போது ரோமியர்களாத்தான் இருக்கவேண்டும்.

Share

பதிவுகள்

ஓடும் ஒரு நதி
ஓரிடத்தில் பிரிகிறது.

இப்போது இரண்டு நதிகள்;
நான்கு கரைகள்.

பிரிந்த நதி
ஏதோ ஓரிடத்தில் இணைகிறது.

மீண்டும்
ஒரு நதி; இரண்டு கரைகள்.

என்றாலும்
பதிவுகளாய்
இடையில் ஏற்பட்டுவிட்ட
தீவுகள்.
 

Share

அப்பா

அப்பா

–ஹரன் பிரசன்னா

மழை நின்ற பாடில்லை. விடாமல் சோவெனப் பெய்துகொண்டிருந்தது. அப்பாவின் பதட்டமும் தணிந்த பாடில்லை. இந்த அப்பா எனக்குப் புதியது. இப்படி ஒரு நிலையில் அப்பாவைப் பார்த்ததில்லை.

அம்மாவிற்கு அடங்கிய அப்பா, அம்மா மரணத்தில் அழுதுகொண்டே சரி சரி நேரமாயித்து.. சீக்கிரம் எடுங்கோ என்று சொன்ன அப்பா, வைதேகி இந்தக் குடும்பத்துக்கு சாந்தாவுக்குப் பின்னாடி வந்த தெய்வம் மாதிரி.. வீட்டுப் பொம்மனாட்டிங்க கண்ணுல தண்ணி வராத வரைக்கும்தான் அந்தக் குடும்பம் விளங்கும் என்று என் கல்யாணத்தன்றைக்கு என்னிடம் சொன்ன அப்பா , முதலிரவிற்கு மறுநாள் காலையில் என்னடா பெரிய பிரச்சனை ஒண்ணும் இல்லையே என்று கேட்ட அப்பா, மாலை போட்டுண்டிருக்கேன். பத்து நாள்தான். கொஞ்சம் ரகுவைத் தள்ளியிருக்கச் சொல்லும்மா என்று வைதேகியிடம் சொன்ன அப்பா என்று பலத் தோற்றங்கள் கண்ட எனக்கு அப்பாவின் இந்த பதட்டம் புதிது. என்னவென்று கேட்டால் ஒண்ணுமில்லைடா என்ற ஒற்றைத் தெறிப்பாய் பதில் வரும்.

என்ன அப்படி ஒரு பதட்டம்?

வைதேகியைத் தூங்கச் சொல்லிவிட்டு அப்பாவிடம் போனேன்.

"அப்பா தூங்கலையா?"

"நீ தூங்கலையோ?"

"ஏன் இப்படி பதட்டமா இருக்கேள்?"

"ஒண்ணுமில்லையே"

"சுகர் குறைஞ்சிடுத்தா.. கொஞ்சம் ஜீனி கொண்டுவரட்டா?"

"ஒண்ணுமில்லை. போய்த் தூங்கு"

அப்பா அதிகமாய்ப் பேசி நினைவிலில்லை. சிரித்தாலும் வெடித்தாலும் அளவாய்த்தானிருக்கும். பக்கம் பக்கமாய்க் கேள்விகள் கேட்டாலும் நாலு வார்த்தைகளில் பதிலிருக்கும். அதிகம் சொல்லவில்லை என்பதற்காக அந்த பதில் குறைந்துவிடாது. காலத்திற்கும் நிற்கும்.

அப்பாவின் நினைவுகளுடன் கட்டிலில் சரிந்தேன். வைதேகி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.

பாரம் இறக்கிவைக்க ஒரு ஆளிருந்தால் பிரச்சனை இருக்காது. எனக்கு எல்லாம் அவர்தான் என்ற எண்ணம் இருப்பதனால்தான் இந்தப் பெண்களுக்கு சட்டென்று தூக்கம் வந்துவிடுகிறது. கோபம் அழுகை கூச்சலுக்குப் பின் ஒன்றுமே நடக்காதது போல காபி வேணுமா என்று கேட்கும் மனோபலம் இருக்கிறது. என்னால் ஏன் எல்லாமே வைதேகி என்று இருக்க முடியவிலலை. அவளிடம் சொல்லாத எத்தனை விஷயங்கள் என்னிடம் இருக்கின்றன.

எல்லா ஆண்களும் இப்படித்தான் இருக்கவேண்டும். அப்பாவும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். அம்மாவிற்கு அடங்கி அம்மா சொல்வதுதான் வேதம் என்று வாழ்ந்திருந்தாலும் அம்மாவுக்குத் தெரிந்திருக்காத அப்பாவின் இன்னொரு பக்கம் நிச்சயம். எதையும் நீட்டி முழக்காமல் நறுக்குத் தெறித்தார்போல் பேசும் அப்பாவிடம் சுகமாய் இருந்தாளா அம்மா?

ஏனிப்படி என்னை நானே கேள்விகளால் குடைந்துகொண்டிருக்கிறேன். அப்பா தூங்கியிருப்பாரா என்ற எண்ணம் வந்தது. ஜன்னல் வழியே ஏறிட்டேன். நாற்காலியில் ஏறி பரணில் இருந்த ஒரு பெட்டியில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். மணி பார்த்தேன். பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. என்ன ஆச்சு என் அப்பாவுக்கு?

OOO

குருவாயூருக்கு வாருங்கள் என்ற பாடல் ஒலித்துதான் எழும் பழக்கம். அப்பாவிற்கு அந்தப் பாட்டின் மேல் என்ன இஷ்டமோ. பைத்தியம் மாதிரி தினம் தினம் அதையே கேட்டுக்கொண்டு. இன்று பாடல் சத்தத்தைக் காணோம். அப்பா இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாரா? மணி பார்த்தேன். பத்தரை காண்பித்துக்கொண்டிருந்தது. இரவு எத்தனை மணிக்குத் தூங்கினேன்? காலையில் வைதேகி ஏன் எழுப்பாமல் விட்டாள்.

வைதேகி என இரைந்தேன். காபியுடன் வந்தாள். அவள் முகம் பார்க்கும்போது கோபம் படிந்து விடுகிறது. இரண்டு வருடங்கள் இருக்கும் அவள் எனக்கே எனக்காய் வந்து. இன்னும் அதே சினேகம். அதே வசீகரம். என்ன தவம் செய்தனை? அப்பா நன்றிக்குரியவர்.

மீண்டும் அப்பா பற்றிய எண்ணம் வந்தது. நேற்று அப்பா பதட்டமாய்த்தான் இருந்தாரா இல்லை என் வீணான எண்ணங்களா? ஒருவேளை தினம் தினம் அப்பா இப்படித்தான் இருக்கிறாரோ? நேற்று மட்டும்தான் நான் அவரைக் கூர்ந்து பார்த்தேனோ?

இன்று எப்படியிருக்கிறார் என்று பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

என் எண்ணங்களில் கோர்வையில்லை என்பதை அறிந்தேன். வைதேகி நான் ஏதாவது கேட்பேன் என்று நின்றிருந்தாள்.

"அப்பா எங்கடி?"

"கார்த்தாலயே வெளிய போறேன்னார்."

"எங்கயாம்?"

"நான் எப்படி கேக்றது?"

"தூத்தறதே.. குடை கொண்டு போனாரா?"

"கொண்டு போனார்"

நேற்று இரவு முழுதும் அப்பா எதையோ தேடிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. படுக்கையறையிலிருந்து ஹாலுக்கு வந்தேன். நாற்காலி பரணுக்குக் கீழே அதே இடத்தில் இருந்தது. அதில் ஏறி பரணிலிருந்த பெட்டியில் கையைத் துழாவினேன். புத்தகங்களாகத் தட்டுப்பட்டது. பெட்டியைக் கீழே இறக்கினேன். வைதேகி சமையற்கட்டிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு இந்த நான் புதிது.

"அப்பா எப்ப வருவாருன்னு சொன்னாரா?"

உதட்டைப் பிதுக்கினாள். காண அழகாயிருந்தது.

பெட்டியைத் திறந்தேன். முழுக்க டைரிகள். 1969 முதல் 1985 வரையிலான டைரிகள். எதை எடுத்துப் படிக்க என்று குழம்பினேன். ஒரு முடிவுக்கு வந்தவனாய் 1973 ம் வருட டைரியை எடுத்தேன். படிக்க ஆரம்பித்தேன். வைதேகி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்தவர் டைரியைப் படிக்கக்கூடாது என்று அவள் சொல்லவில்லை. நானும் நினைக்கவில்லை. நான் என்ன அடுத்தவனா. ஒரே இரத்தம் எப்படி அடுத்தது ஆகும்?

ஒன்றும் சுவாரஸ்யமில்லை. ஒவ்வொரு பக்கமும் வரவு செலவுகளால் நிரப்பப்பட்டிருந்தது. நிறைய பக்கங்களில் இன்று குறிப்பிடும்படியாய் ஒன்றும் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பா சுவாரஸ்யமான மனிதர் இல்லையோ? கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோமோ? அயர்ச்சியில் அந்த டைரியை மூடி வைத்துவிட்டு 1972 ஐ எடுத்தேன். நிறைய பக்கங்கள் எழுதாமல் இருந்தது. ஒரு சில பக்கங்கள் முழுவதுமாக எழுதப்பட்டிருந்தன. வாசிக்க ஆரம்பித்தேன்.

"கேட் திறக்குற சத்தம் கேக்குது. அப்பாவாயிருக்கும்."வைதேகி.

அவரின் டைரியை படிப்பதை அப்பா பார்த்தால் என்ன சொல்லுவாரோ. எல்லா டைரிகளையும் போட்டு மூடி பெட்டியைத் தூக்கிப் பரணில் வைத்தேன். நாற்காலியையும் அதே இடத்தில் வைத்தேன். கடைசியாய் பார்த்த டைரி மட்டும் தரையில் இருந்தது. அப்பா வருமுன் அதை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தேன்.

விட்டிற்குள்ளே நுழைந்ததும் அப்பா கேட்டார்.

"அவன் எங்கே?"

"இன்னும் எழுந்திருக்கலை. எழுப்பட்டுமா?"

பெண்கள் போல் இயல்பாய் பொய் சொல்ல முடியாதென்று வைதேகியிடம் சொல்ல வேண்டும்.

"வேண்டாம். கசகசன்னு இருக்குது. குளிக்கணும். கொஞ்சம் வெந்நீர் வெச்சா தேவலை"என்று அப்பா சொல்வது கேட்டது. நான் படுக்கையறையில் தூங்கிகொண்டிருப்பதாய் இருந்தேன். டைரி என்னருகில் படபடத்துக்கொண்டிருந்தது.

OOO

இரவு அப்பா தூங்கியபின் டைரியைப் பிரித்தேன். வைதேகி அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் மௌனம் என்னை என்னவோ செய்தது. என் மௌனம் அவளை என்னவோ செய்கிறது என்பதும் அறிவேன். ஆனாலும் இருவரும் மௌனமாய் இருந்தோம்.

டிசம்பர் 18,

…சாந்தா எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள் எனத் தெரியவில்லை. ஓ வென அழுவாள். அழட்டும். வஞ்சிக்கப் பட்டதாய்ப் புலம்புவாள். சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. மனைவி என்ற ஸ்தானத்தின் அர்த்தம் பணிவிடை செய்வது என்பது அவள் எண்ணம். அதை மீறிய புரிந்து கொள்ளுதலோ சூழ்நிலையின் கைதி மனிதன் என்பதன் அர்த்தமோ அவளுக்குள் ஏறாது. விளக்கினால் தான் ஏமாற்றப்பட்டதாய்ச் சொல்லலாம். எப்படியும் சொல்லத்தான் வேண்டும். இன்றில்லை. என்றாவது ஒருநாள்….

நான் ஏனோ படபடப்பாய் உணர்ந்தேன். வைதேகி புரிந்துகொண்டிருக்க வேண்டும். டைரியை மூடி வைத்துவிட்டு நெருங்கி முத்தமிட்டாள். அவள் தலையை வருடிச் சிரித்தேன். என்ன என்றாள். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் டைரியைப் பிரித்தேன். வைதேகி அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அடுத்தடுத்த பக்கங்கள் வெள்ளையாய்ச் சிரித்தன.

டிசம்பர், 26

….சாந்தா ஒரு ஆச்சரியம். இந்த இரண்டு வருடங்களில் அவளுக்குள் இப்படி ஒரு சாந்தா இருப்பது தெரியாமல் போனது எப்படி. எத்தனைத் தெளிவாய் எத்தனைத் தீர்க்கமாய் ஒரு முனங்கலோ முகச்சுளிப்போ இல்லாமல் பழசு போகட்டும் என்றாள். அத்தனை எளிதாய்ப் போகக்கூடியதல்ல என்பதையும் சொல்லத்தான் வேண்டும்…

அடுத்த இரண்டு பக்கங்களில் வரவு செலவு கணக்குகள் மட்டுமே இருந்தது. தினம் தினம் வரவு செலவு எழுதி என்ன சாதித்தார் என்று ஒரு முறையாவது அப்பாவிடம் கேட்கவேண்டும்.

டிசம்பர், 30

…இப்போதெல்லாம் சாந்தாவைத் தவிர வேறதையும் சிந்திக்க முடிவதில்லை. ஒரு நான்கு நாளில் ஒரு ஆணை இப்படி மாற்றும் வல்லமை பெண்ணுக்கு உண்டு போலும். விதையாய் இருந்து வளர்ந்து விருட்சம் போல பரவி விட்டாள். நான் அவள் முன் தூசி போல உணர்கிறேன். நினைவு தெரிந்து நீண்ட நாள்களுப்பின் இன்றுதான் நிம்மதியாய் உறங்கினேன். சாந்தா காரணம். இனி கோமளத்தைப் பற்றிய உறுத்தல்களில்லை. ரகுவிற்கு அம்மா இருக்கிறாள். சாந்தா. இனி என்னுடனும் சாந்தாவுடனும் அவன் வளைய வருவான். கோமளத்தின் ஆத்மா சாந்தமடையும். ரகுவின் ரோஜாப்பூ போன்ற முகத்தைப் பார்த்துக் கொஞ்சலாம். என்னென்னவோ கற்பனைகள். சாந்தா.. என்ன தவம் செய்தனை? உண்மையாய் உன்னை கும்பிடவேண்டும் சாந்தா. உன்னிடம் சொன்னால் சரி விடுங்கோ என்று சொல்லி நான் தூசிக்கும் கீழானவன் என்று சொல்லாமல் சொல்லலாம். எங்கிருந்து கொண்டாய் இந்த வல்லமையை?….

வரிகளின் அர்த்தம் மனதில் ஊன்றியபோது ஒட்டுமொத்த உலகமும் பிளந்த வானத்தின் வழியாய்த் தலையில் வீழ்வது போலிருந்தது. கைகால்கள் செயலிழந்து போனது போன்ற ஒரு பிரமை. வைதேகி என்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

"என்ன ஆச்சு?"என்றாள்.

"ஒண்ணுமில்லை"என்றேன்.

"நீங்களும் அப்பா மாதிரி ஒண்ணுமில்லைனு சொல்ல ஆரம்பிச்சிட்டேளா?"

எனக்குச் சுருக்கென்றது.

"என்னவோ போல இருக்கேளே" -வைதேகி விடமாட்டாள்.

"அடுத்தவா டைரியைப் படிச்சிருக்கக்கூடாது"என்றேன்.

"சரி விடுங்கோ"என்று சொல்லி என்னைக் கட்டிக்கொண்டாள். ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அப்பா, எல்லா நாளும் உண்டான, இத்தனை நாள் நான் புரிந்துகொள்ளாத அதே படபடப்போடு, இந்த வருடத்திய டைரி எழுதிகொண்டிருக்கலாம்.
 

Share

மயானம்

மயானம்
–ஹரன் பிரசன்னா

எரியும் சிதையின் வெப்ப மிகுதியால்
புலம் பெயர்கின்றன
எறும்புகள்

எங்கோ அழுகிறது
ஒரு காகம்.
யாருடைய சாவுக்காய்?

மரங்கள் தனித்தில்லை.
நெருப்பில் முறுக்கேறும்
எலும்புகளை அடிக்க
உருட்டுக் கட்டையுடன்
எப்போதும் சிரித்திருக்கும்
வெட்டியான் துணைக்கு உண்டு.

வராட்டி மலிவு என்கிறான்
கொள்ளி வைத்தவன்

தூரத்தில் சலசலக்கும்
ஆற்றில் தலை முழுகத்
திரும்பிப் பார்க்காமல்
நடக்கிறேன்,
மண் குளிரும்போது
எறும்புகள் மீளும் என்ற நினைவுடன்.
 

Share