Tag Archive for ஹிந்தி

Vedaa Hindi Movie

வேதா (H) – தலித் கொடுமைகளுக்கு எதிரான ஒரு ஹீரோயிஸத் திரைப்படம். இந்த வரிக்குள்தான் ஒரு படமாக இந்தப் படத்தின் தோல்வியும் அமைகிறது. தலித் திரைப்படங்களுக்கே உரிய யதார்த்தம் படம் நெடுக மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் அதை முறியடிக்கும் விதமோ, கொஞ்சம் கூட யதார்த்தமே இல்லாத ஹீரோயிஸ பாணியில் அமைகிறது.

Spoilers alert.

ஜான் ஆப்ரஹாம் சுடுகிறார் சுடுகிறார் சுட்டுக்கொண்டே இருக்கிறார். யாராக இருந்தாலும் அடித்துப் போட்டு துவம்சம் செய்கிறார். இவர் இதையெல்லாம் செய்யக் கூடியவர்தான் என்று பார்வையாளர்களை நம்ப வைப்பதற்காக, பக்காவாக முதல் காட்சியை வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனியாளாகச் சென்று, இந்திய ராணுவ உதவியுடன், பயங்கரவாதிகளைப் போட்டுத் தள்ளுகிறார். எனவே இவர் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்தாம் என்று வலுக்கட்டாயமாக நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

தலித் பெண் பாக்ஸிங் கற்றுக் கொள்ள நினைப்பதை, எப்படி உயர்ஜாதிக்காரர்கள் எதிரிக்கிறார்கள், எப்படி அந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஜாதிய வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் என்பதுதான் மையக் கதை.

ராஜஸ்தானில் நடக்கும் கதை. ராஜஸ்தானின் கிராமங்களையும் அங்கே நடக்கும் அநியாயங்களை ஒளிப்பதிவு அத்தனை அட்டமாசமாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இவையே படத்தின் பலம்.

ஜான் ஆப்ரஹாம் மொத்தமாக ஒரு பக்கம் வசனம் பேசினால் அதிகம். வழக்கம்போல பார்க்கிறார். சிரித்தால் விருது நிச்சயம் என்பது போலவே இருக்கிறார். தாலி கட்டும்போது மறந்து போய் சிரிக்கிறார்.

படத்தின் சுவாரஸ்யம் என்ன? படம் முடிந்த பின்பு சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இறுதிக் காட்சியில், இந்தக் கதை உண்மைக் கதைகளை மையமாக வைத்து எடுத்தது என்று சில சிலைடுகளைக் காட்டுகிறார்கள்.

நம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஜாதிய வன்கொடுமை ஏதேனும் நடக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும். எனவே ஆதாரம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும், இந்த ஆதாரங்களை ஆராய்ந்தேன். அங்கேதான் சில சுவாரஸ்யங்கள் கிடைத்தன.

இந்தப் படம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான படம். இதற்காக உண்மை நிகழ்வுகளைத் தங்களுக்கு வசதியாக, ஒரு திரைப்படத்துக்காக வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறில்லை. ஆனால் உண்மை நிகழ்வுகளைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

2015ல் மீனாக்‌ஷி குமாரி மற்றும் அவரது தங்கை இருவரையும் அந்த ஊர்ப் பஞ்சாயத்து பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஏன் சொல்லப்படுகிறது என்று சொல்கிறேன் என்றால், வழக்கில் இதற்கான ஆதாரம் தரப்படவில்லை. பெண்கள் சொன்ன வாக்குமூலத்தை வைத்தே வழக்கு பதியப்படுகிறது. காரணம் என்ன?

2011ல் இந்த இரு பெண்களின் சகோதரன், உயர்ஜாதிப் பெண், அதுவும் திருமணமான பெண்ணுடன் ஓடிப் போகிறான். இதன் காரணமாகவே இப்படி ஒரு தீர்ப்பு. இதை எதிர்த்து வழக்கு 2015ல் பதியப்படுகிறது.

இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த வழக்கு, அதாவது இரு பெண்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட ஊர்ப் பஞ்சாயத்தின் தீர்ப்பு பேசப்பட்டதாக கூகிள் சொல்கிறது. காரணம், ஆம்னெஸ்டி அமைப்பு இந்த வழக்கைக் கையில் எடுக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சகோதரிகளைப் பாதுகாக்கச் சொல்லி இந்தியாவுக்குச் சொல்லுங்கள் என்ற பிரசாரம் உலகம் முழுக்க வலுக்கிறது. வழக்கம் போல சி என் என், பிபிசி எல்லாம் களத்தில் குதிக்கின்றன.

திரைப்படத்தில், இரு பெண்களின் சகோதரன், திருமணமாகாத ஒரு பெண்ணைக் காதலித்து ஓடிப் போவதாகக் காட்டுகிறார்கள். திருமணமான பெண்ணுடன் ஓடிப் போவதாகக் காட்டி இருந்தால், ஒட்டுமொத்த படத்தின் ஆதாரமும் சிதைந்து போயிருக்கும். இப்படிச் சொல்வதால், பஞ்சாயத்து சொன்னது சரி என்பதல்ல. உண்மையில் பஞ்சாயத்துக்கு இப்படி எல்லாம் தீர்ப்புச் சொல்ல அதிகாரம் இருந்தது என்பதே அசிங்கம்.

சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இந்தப் பஞ்சாயத்து முறையை எப்படி ரொமாண்டிசைஸ் செய்தோம் என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் ஒரு நீதிபதியை கார் ஓட்டுநர் கேள்வி கேட்டு அசிங்கம் வேறு செய்வார். திரைப்படம் என்பது எதை நாம் காட்டுகிறோம் என்பதுதான்!

இந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்படும் இன்னொரு வழக்கு, 2007 மனோஜ் பாப்லி வழக்கு. இருவரும் காதலித்து ஓடிப் போய் கல்யாணம் செய்கிறார்கள். இருவரும் ஒரே ஜாதி. ஜாட். ஆனால் இவர்களது கல்யாணம் செல்லாது என்று ஊர்ப் பஞ்சாயத்து அறிவிக்கிறது. பெண்ணின் உறவினர்கள் போலிஸ் உதவியுடன் பெண்ணையும் பையனையும் தூக்குகிறார்கள். இருவரையும் சித்திரவதை செய்து, கொன்று, குட்டையில் வீசுகிறார்கள்.

பெண்ணின் குடும்பத்தினர் ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கிறது விசாரணை நீதிமன்றம். பஞ்சாயத்துத் தலைவருக்கு ஆயுள் தண்டனை. போலிஸுக்கு 7 வருடம் சிறை. ஆனால் உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடி, 2018ல் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.

இந்த இரண்டு வழக்குகளும் ஊர்ப் பஞ்சாயத்து முறைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. இதை அடிப்படையாக வைத்துத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஜாதியில் திருமணம். பெண் வீட்டார் ஏன் கொலை வரை சென்றார்கள்? இருவரும் ஒரே கோத்திரம். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதால் கொலைக்கு உத்தரவிட்டிருக்கிறது ஊர்ப் பஞ்சாயத்து! இதை பையன் வீட்டார் எதிர்க்க, அவர்கள் மீதும் கடும் கோபத்தில் இருந்திருக்கிறது பஞ்சாயத்து.

இப்படி ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்துகொண்டவர்களுக்காக ஹீரோ போராடினால் யார் பார்ப்பார்கள்? எனவே திரைப்படத்தில் தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மூன்றாவதாகக் காட்டப்பட்ட வழக்கு விவரம் நடந்தது தமிழ்நாட்டில்.

2011ல் ஆறுமுகம் சேர்வை வழக்குத் தீர்ப்பு. 1999ல் மதுரையில் ஜல்லிக்கட்டு சமயத்தில் தாழ்த்தப்பட்டவர்களை அவர்களது சாதியைச் சொல்லித் திட்டப்பட்ட வழக்கு. 500 ரூபாய் அபராதம், ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை தீர்ப்பு.

மேலே சொன்ன மூன்று வழக்கையும் வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

கதாநாயகி நீதிமன்றத்தை நம்பி ஓடுகிறாள். நீதிமன்றமே தாக்கப்படுகிறது. ஜாதியின் கைகளுக்குப் பயந்து நீதிபதிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். ஆனாலும் நீதி கேட்டு நிற்கிறாள் கதாநாயகி.

இந்தத் திரைப்படத்தில் ஹீரோவின் பெயர் அபிமன்யு. கடைசியில் ஜாதியவாதிகளின் வியூகத்தில் சிக்கித் தோற்கவேண்டும். ஆனால் அவன் யதா யதா ஹித்தர்மஸ்ய என்று சொல்லி, திரௌபதி வெல்லாமல் விடமாட்டாள் என்று நம்பிக்கையோடு கூறி, வில்லனைக் கொல்கிறான்.

நல்ல படமாக வந்திருக்கவேண்டியது, ரஜினி பாணி ஹீரோயிஸக் காட்சிகளால் கீழிறங்குகிறது. ஆனாலும் பார்க்கலாம்.

Share

Tehran Hindi Movie

Tehran (H) – ஜான் ஆபிரஹாமுக்கு எப்போதுமே ஒரு துரதிர்ஷ்டம் உண்டு. அவரது திரைப்படங்களுக்கு நிச்சயம் ஒரு மினிமம் கேரண்டி இருந்தாலும், ஏனோ அவை அதைத் தாண்டி மிகப் பெரிய வெற்றியைப் பெறாமல் போகும். அவரது திரைப்படங்கள் பெரும்பாலும், நம்ம ஊர் அர்ஜூன் / விஜய்காந்த்தின் திரைப்படங்கள் போல, நம் நாட்டுப் பற்றை ஒட்டியதாகவே இருக்கும். ஆனால் தரம், இவர்களின் படம் போல சப்பையாக இருக்காது. நிச்சயம் நன்றாகவே இருக்கும்.

டெஹ்ரான் அதற்குச் சிகரம் வைத்தது போல வெளியாகி இருக்கிறது. மேக்கிங்கைப் பொருத்தவரை இது ஹிந்திப் படம் என்ற பெயரில் வந்திருக்கும் ஆங்கிலப் படம்.

கதையெல்லாம் அதே நாட்டுப் பற்றுதான். ஆனால் அதை இந்தியாவில் நடந்த ஓர் பயங்கரவாத் தாக்குதல் முயற்சியுடன் முடிச்சுப் போட்டதிலும், அதை ஒட்டி அந்தக் கால அரசியலை மறைமுகமாக, உள்ளுறையாக விமர்சித்துக் காட்டியதிலும்தான் கவர்கிறது.

2012 வாக்கில் உலகின் மூன்று பகுதிகளில் ஒரே நாளில் இஸ்ரேலிய உயரதிகாரிகள் குறிவைக்கப்படுகிறார்கள். ஜார்ஜியா, தாய்லாந்து, மூன்றாவதாக இந்தியா. அதில் சம்பந்தமே இல்லாமல் பூ விற்கும் சிறுமி அநியாயமாகக் கொல்லப்பட, ஜான் அப்ரஹாம் இதற்குப் பின் உள்ள பின்னலைக் கண்டறிய முற்படுகிறார். இது சர்வதேசச் சதி என்று தெரிந்துகொண்டு, அதை முறியடிக்கக் கிளம்புகிறார்.

ஆனால் அவர் இந்தியாவால் கை விடப் படுகிறார். ஏன்? எண்ணெய் மற்றும் ஊழல் அரசியல். இஸ்ரேலால் புறந்தள்ளப்படுகிறார். ஈரானால் குறி வைக்கப்படுகிறார்.

இவற்றை எல்லாம் சமாளித்து எப்படி ஒட்டுமொத்த கும்பலையும் கண்டறிந்து சர்வர்தேச வலைப் பின்னலை முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை.

தொடக்கத்தில் வரும் சேஸிங் காட்சிகள் கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும், இந்திய அரசு ஆபரேஷனைக் கைவிடச் சொல்லியும் தன் திட்டப்படி ஜான் ஆப்ரஹாம் ஈரான் செல்ல முடிவெடுக்கும் காட்சியில் இருந்து இறுதி வரை படம் விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது. அபுதாபி மற்றும் ஈரான் காட்சிகள் கலக்குகின்றன.

வில்லனாக வரும் நடிகர் கலக்கிவிட்டார்.

மொத்தத்தில் தரமான படம். உண்மைச் சம்பவத்தில் எப்படிக் கற்பனையைக் கலந்து சிறப்பாக எடுக்கலாம் என்று பாடம் சொல்லும் இன்னுமொரு திரைப்படம்.

நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். ஸீ 5ல் கிடைக்கிறது.

Share

Hissab Barabar

Hissab Barabar (H)

கணக்கை நேர் செய்துவிட்டேன் என்று அர்த்தம். இன்னொரு ஆம் ஆத்மி படம். ஆம் ஆத்மி என்றால் அரசியல் கட்சி அல்ல, சாதாரண மனிதனின் படம். சாதாரண மனிதன் எப்படி தன்னை கார்ப்பரேட் வங்கி சுரண்டுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை மக்கள் முன் தோலுரிக்கும் கதை. அஞ்சு பைசா திருடினா தப்பா? அஞ்சு அஞ்சு பைசாவா அம்பது தடவை அம்பது கோடி பேர் திருடினா? இதுதான் கதையின் ஒன்லைனர்! சீரியஸான கதையை நகைச்சுவையாகச் சொல்கிறேன் என்று சோதித்துவிட்டார்கள். மாதவன் தானாகச் சிரித்துக்கொள்கிறாரே ஒழிய நமக்குச் சிரிப்பே வருவதில்லை. உச்சக்கட்டக் காட்சியில் 1,500 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டும் காட்சி, நம்ம ஊர் மெகா சீரியல்களில் கூட இதைவிட நன்றாக இருக்கும். நேர விரயம் செய்யத் தயாராக இருப்பவர்கள் பார்க்கலாம்.

Share

12th fail

12th Fail (H) – ஒரு நல்ல திரைப்படமும் நல்ல புத்தகமும் ஒரு வகையில் ஒன்றுதான். எப்போது அது நமக்கு நிகழ வேண்டும் என்றிருக்கிறதோ அப்போதே நிகழும். இந்தத் திரைப்படத்தைப் பல பல சமயங்களில் பலர் பார்க்கச் சொல்லியும் ஏதோ ஓர் உந்துதல் இன்றிப் பார்க்காமலேயே இருந்தேன். இன்று பார்த்தேன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு மனதைக் கொள்ளை கொள்ளும் மிக அருமையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. இது திரைப்படம் அல்ல, ஓர் அனுபவம். ஒவ்வொரு நடிகரும் எத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அதுவும் இறுதிக் கட்டக் காட்சியில் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது.

ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்படும் திரைப்படம், இருப்பதிலேயே சவாலானது. ஆனால்‌ இதில் கலக்கிவிட்டார்கள்.

ஒரே ஒரு வருத்தம்தான். இந்த ஐபிஎஸ் அதிகாரி அரசுக்கும் சமூகத்திற்கும் மண்டியிடாமல் கடைசிவரை இதே நேர்மையுடன் இருக்க வேண்டுமே என்பதுதான். ஓர் உட்டோப்பியன் உலகமாக இருந்திருக்கும் சாத்தியக்கூறு வந்திருந்தாலும் கூட, இந்தத் திரைப்படத்தில் இது உண்மைக் கதை என்று சொல்லாமல் இருந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அந்த அளவுக்கு இந்தக் கதாபாத்திரம் நேர்மையைத் தூக்கிப் பிடிக்கிறது. இயல்பான வாழ்க்கையில் அது அத்தனை எளிதானதல்ல. இந்தத் திரைக் கதாபாத்திரம் நிஜத்தில் தோற்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது உண்மைக் கதை என்பதை காட்டாமல் இயக்குநர் தவிர்த்திருக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் ஒன்றி விட்டேன்.

பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்து விடுங்கள். இந்தியத் திரை உலகம் பெருமை கொள்ளும் ஓர் அனுபவம் இந்த திரைப்படம்.

ஒவ்வொரு திரைப்படம் சில சமயம் மெதுவாகப் போகும். ஆனால் அப்படி மெதுவாகப் போகும் காட்சிகள் கூட ஒரு பரபரப்பை உருவாக்கினால் அதுவே அந்தத் திரைப்படத்தின் வெற்றி. இந்தத் திரைப்படம் அந்த வகையைச் சார்ந்தது. இறுதிக் காட்சியில் மெல்ல மெல்ல நகரும் விதமும், அந்த இசையும், அந்தப் பாடலும், கண்கலங்க நிற்கும் ஹீரோவும், ஃபோனில் பேசும் அம்மாவும், கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விடும் நண்பர்களும் என உணர்ச்சிமயமான தருணம். மறக்க முடியாத தருணம்.

தமிழ்த் திரைப்படங்களுக்கும் இத்திரைப்படத்தில் ஒரு செய்தி உள்ளது. இந்தப் படமும் ஒரு வகையில் ஒதுக்கப்பட்டவர்களின் நசுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் திரைப்படம்தான். ஆனால் இந்தத் திரைப்படத்தில் எந்த ஒரு சமூகத்தின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ வெளிப்படவில்லை. ஒட்டுமொத்தமான சமூகத்தின் மீதான கோபமும், அந்தச் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்கிற சரியான நோக்கமும் மிகக் கச்சிதமாக வெளிப்படும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்குரிய உண்மையான மனிதர் சம்பல் பள்ளத்தாக்கிலிருந்து வந்த ஒரு பிராமணர் என்று சொல்லப்பட்டாலும், திரைப்படத்தில் அவர் எந்த ஜாதி என்பதைக் காட்டவில்லை. மாறாக, மிகுந்த பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்து ஆங்கிலம் தெரியாமல் போராடும் ஒரு மனிதன், இந்தச் சமூகத்தில் எந்த அளவு கஷ்டப்படுகிறான் என்பதை விரிவாகக் காட்டி இருக்கிறார்கள். அப்படிக் காட்டும்போது அந்த மனிதருடன் சேர்ந்து, வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடும் மற்ற மனிதர்களின் கதைகளைச் சொல்லும் பொழுது, எந்த ஒரு குரோதத்தையும் வெளிப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார்கள். வீம்புக்காக யோசிக்காமல் அன்புக்காக யோசிக்கும் இயக்குநரால் மட்டுமே இப்படி ஒரு திரை அனுபவத்தை வழங்க முடியும்.

Share

Some movies

உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.

ப்ரைமில் கிடைக்கிறது.

அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்த‌விதம்‌ அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க‌ விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.

Share

பஸ்தர் – ஹிந்தித் திரைப்படம்

பஸ்தர் – தி நக்ஸல் ஸ்டோரி (H) – மாவோயிஸ்ட்டுகளுக்கான எதிர்பிரசாரத் திரைப்படம். கேரளா ஸ்டோரி எடுத்த குழுவிடமிருந்து வந்திருக்கும் படம். ஒரு திரைப்படமாக கேரளா ஸ்டோரியில் இருந்த போதாமைகளும் பின்னடைவுகளும் இந்தப் படத்தில் துருத்திக் கொண்டு வெளிப்படையாக வெளியே தெரிகின்றன.

என்னதான் பிரசாரப் படம் என்றாலும் அடிப்படையில் இது ஒரு சினிமா. அந்த சினிமாவின் மொழியைத் தீவிரமாகவும் லாகமாகவும் கை கொள்ளாத எந்த ஒரு திரைப்படமும் எரிச்சலையே ஏற்படுத்தும். இந்தப் படம் முழுமையாக எரிச்சலை மட்டுமே தருகிறது. நாடகத்தனமான கதை. செயற்கையான நடிப்பு. அதீதத் திணிப்பு.

மிகப் பெரிய நாட்டின் முக்கியமான பிரச்சினையைக் கிறுக்குத்தனமாக கையாண்டிருக்கிறார்கள். பஸ்தர் என்ற ஊரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நிச்சயம் மாவோயிஸ்டுகள் என்ற வார்த்தை நினைவுக்கு வராமல் இருக்காது.

பஸ்தரையும் சரி, பஸ்தரில் இருக்கும் பிரச்சினைகளையும் சரி, மாவோயிஸ்ட்டுகளையும் சரி, மிக மேம்போக்காகப் பேசுகிறது இத்திரைப்படம்.

Share

Laapataa Ladies – Hindi Movie

Laapataa ladies {H} – நம்ப முடியாத கதை. ஆனால் சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் பலரும் பாராட்ட மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன். அந்த அளவுக்குக் கவரவில்லை என்றாலும் சந்தேகமே இல்லாமல் நல்ல ஃபீல் குட் மூவி.

குடும்ப பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டுத் தன் கனவை நோக்கிச் செல்ல நினைக்கும் ஒரு பெண். தன் கணவனே தனக்கு எல்லாம், குடும்பமே எல்லாம் என்ற கனவுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இன்னொரு பெண். இதற்கிடையில், கணவனை வெறுத்து ஒதுக்கி, தன் காலில் தனியாக நின்று கடை நடத்தும் ஒரு பெண். எந்த உறுத்தலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் பெண்ணுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, கூடவே அந்தப் பெண் படிக்க நினைக்கும் கனவையும் வலியுறுத்தி, அனைவருக்கும் நல்லபடியாக முடித்து விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் இன்னும் பல காட்சிகளும் செயற்கைத்தனமாக இருந்தன. ஆனாலும் படம் எடுத்த விதத்திலும் நடித்த விதத்திலும் அதை ஈடு செய்திருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் கடை நடத்தும் அந்த பெண்ணின் நடிப்பு மிக மிக அருமை

படத்தின் பிரச்சினையாக நான் பார்த்தது, படம் முதலில் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. நாம் அதனுடன் பயணிக்கிறோம். திடீரென்று படம் இன்னொரு பெண்ணின் பார்வைக்குத் தடம் மாறுகிறது. இந்தத் தடுமாற்றத்தை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

Share

Sirdar Udham – Hindi Movie

சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் இவ்விஷயத்தில் கறாராக இருப்பார்கள். காரணம் பெரிய பட்ஜெட்.

கலை விஷயத்தில் கவனமாகவும் பிரமாண்டமாகவும் தயாரிக்கப்படும் படங்கள் காட்சி ரீதியாகப் பார்வையாளனுக்குக் கடத்தும் பல விஷயங்கள் முக்கியமானவை. சர்தார் உதம் இந்த விஷயத்தில் ஹாலிவுட் திரைப்படத்துக்கு இணையாக வந்திருக்கிறது. சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள்.

படத்தைப் பொறுத்தவரை, திரைக்கதை ரிவர்ஸ் பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவையே உலுக்கிய ஜாலியன்வாலா பாக் படுகொலைக்காக ஒரு சீக்கிய இளைஞன் 20 வருடங்கள் காத்திருந்து பழிவாங்குகிறான் என்பது எப்போதுமே நம்மை வியக்கச் செய்யும் ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வுக்குள்ளேயே ஒரு கதை இருக்கிறது. ஆனால் இதைத் திரைப்படமாக எடுப்பது சுலபமல்ல. பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில், முதலில் ஜாலியன்வாலா பாக் நிகழ்வைக் காட்டிவிட்டு, இறுதிக்காட்சியாக மைக்கேல் ஓ டயரை (ஜாலியன்வாலா பாக் கொலைக்கு உத்தரவிட்டவர்) கொல்வதைக் காட்டுவதுதான் சிறப்பாக இருக்கும்.

ஆனால் இப்படத்தில் முதல் காட்சியிலேயே மைக்கேல் டயரை உதம் சிங் கொல்வதைக் காட்டிவிட்டார்கள். பின்னர் படம் துப்பறிவு வகைத் திரைப்படம் போல நகர்கிறது. உதம் சிங்கை பிரிட்டிஷ் போலிஸ் எப்படி விசாரிக்கிறது, ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதெல்லாம் அணுஅணுவாகக் காட்டப்படுகிறது. இதற்கிடையில் உதம் சிங்கின் வாழ்க்கை நான்-லீனியராக விரிகிறது. இறுதிக்காட்சியாக ஜாலியன்வாலா பாக் படுகொலை வருகிறது. இதுவே படத்தின் மையம் என்பதால் மிக நீண்ட காட்சியாக இதை எடுத்திருக்கிறார்கள். கண்முன்னே நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்பதால் பதைபதைப்புடன் இதை நாம் பார்க்கிறோம்.

முடிவு இதுதான் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும் என்ற வகைத் திரைப்படம்தான் இது. இருந்தாலும், வழக்கு விசாரணை, சித்திரவதையை இத்தனை தூரம் காண்பித்து, அதையும் விறுவிறுப்பாக எடுத்திருப்பது ஆச்சரியம்தான். மைக்ரோ விஷயங்களில் அதீத கவனம் எடுத்திருப்பதும், வழக்கு விசாரணைகளில் வரும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மைக்கு அருகில் இருப்பதும் இப்படத்தை முக்கியமானதாக்குகின்றன.  உதம் சிங் தன் கையில், ராம் முஹம்மத் சிங் ஆசாத் இன்று பச்சை குத்தி இருப்பதும், நீதிமன்ற விசாரணையின்போது உதம் சிங்கின் தரப்பு பத்திரிகையில் வரக்கூடாது என்று நீதிபதி சொல்வதும், அப்போது உதம் சிங், ‘பிரிட்டிஷ் இம்பீரியலிஸம்’ ஒழிக என்று கத்தியதும் படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

உதம் சிங்காக நடித்திருக்கும் விக்கி கௌஷல் பிரமாதமாக நடித்திருக்கிறார். இயக்கம் ஷூஜித் சர்க்கார். தமிழர்களுக்கு அறிமுகமானவர்தான். இவரது திரைப்படமான ‘மெட்ராஸ் கஃபே’ ஈழத் தமிழர்களை மட்டம் தட்டிய வகையில் இருந்ததற்காகப் பெரிய பிரச்சினை அப்போது உருவானது. இந்திய அளவில் முக்கியமான திரைப்படமான பின்க் (தமிழில் நேர்கொண்ட பார்வை) இவரது இயக்கத்தில் உருவானதுதான். இவர் இயக்கிய இன்னொரு திரைப்படம் ‘அக்டோபர்’ நம் பாலுமகேந்திராவின் இயக்கத்தைப் போன்ற ஒரு திரைப்படம். விக்கி டோனர் (தமிழில் தாராள பிரபு) இவர் இயக்கியதுதான்.

நம் நாட்டு விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களின் படத்தைப் பார்க்க வேண்டியது, அதுவும் இத்தனை தரமான படத்தைப் பார்க்க வேண்டியது நம் கடமை.

Share