Tag Archive for வெண்முகில் நகரம்

வெண்முகில் நகரம்

ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு நாவல்களின் ஒட்டுமொத்த சித்திரம் எவ்வகையிலும் எதனுடனும் நிகரற்றது. என்னால் இதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. இதை ஒரு மனிதன் எழுதினான் என்பதே காலத்தில் மிகப்பெரிய ஆச்சரியமாக நிச்சயம் நிலைகொள்ளும். எழுதிச் செல்லும் இறையின் கைகளே கருவியைத் தேர்ந்தெடுக்கின்றன என்று தத்துவத்தின் வழியே ஜெயமோகன் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுவார்.

இதை எத்தனை பேர் உணர்ந்துகொண்டு படிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரும் படிக்கவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்நாவலைப் படித்துமுடித்த இந்நேரத்தில் இந்நாவல் தந்த நிறைவும் ஆச்சரியமும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. உள்ளமெல்லாம் வெண்முகில் நகரத்தில் பாத்திரங்கள் நிறைத்திருக்கின்றன.

சாத்யகியும் பூர்சிவரஸ்ஸும் கொண்ட எழுச்சி மிக்க சித்திரம் நான் கொஞ்சம் எதிர்பார்க்காதது. அதுவும் இறுதியில் அவர்களை சந்திக்க வைத்ததெல்லாம் நான் கொஞ்சம் கூட யோசிக்காதது. களத்தில் இரண்டு பேரும் முட்டிக்கொண்டு சாத்யகியால் கொல்லப்படப்போகும் பூர்சிவரஸ், முன்னர் ஒருமுறை சாத்யகியைக் கட்டித் தழுவியிருக்கிறான் என்பதே, சந்தேகமே அன்றி அசையச்செய்யும் உருவாக்கமே. இவையேதான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்றாலும், யாரென்றே தெரியாமல் போயிருக்கவேண்டிய இருவர் வரலாற்றின் சித்திரத்தில் இப்படி நிற்கும் காட்சி தரும் நிறைவை, ஒரு வகை அதிர்ச்சியை என்னால் சொல்ல முடியவில்லை.

திருதராஷ்டிரன் முன்னர் பாண்டவ கௌரவர்கள் கிருஷ்ணன் முன்னிலையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி, உணர்ச்சிமயத்தின் உச்சம்.

முதற்கனல் தொடங்கி மழைப்பாடல் பிரயாகை எனப் பல்வேறு நாவல்களில் வரும் காட்சிகள் இந்நாவலில் சிறிய நீட்சியென பேசப்படுவதும், அன்றைய நிகழ்வுகள் இன்றைய புராணமாக எப்படி மையத்தைத் தாண்டிய அல்லது மையத்தை முற்றிலுமே இழந்துவிட்ட காவியமாக நிலைபெறுகிறது என்றெல்லாம் தொடர்ச்சியாகப் பார்ப்பதும் மிகவும் அற்புதமாகவே இருக்கிறது. ஏதோ நாம் காலத்தில் மகாபாரதத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது போல.

என்னளவில் பிரயாகையில் கொஞ்சம் நலிந்திருந்த நகைச்சுவை சார்ந்த பகுதிகள் இந்நாவலில் – மிக்குறைந்த அளவே வந்தாலும் – மிகக் கச்சிதமாக உள்ளன. அதிலும் த்ரௌபதி ‘ஆறாவது இளவரசனைப் பார்க்கிறேன் எனக்குத்தான்’ என்று சொல்லும் இடத்தில் – ஜெயமோகன் எழுதுவது போல – வெடித்துச் சிரித்துவிட்டேன்.

கிருஷ்ணரும் பலராமரும் வருவதற்காக ஏற்பாடு செய்யும் நூற்றுவனின் அத்தியாயம் முழுக்க நல்ல நகைச்சுவை. இதுவும் ஒரு காவியத்தின் முக்கியமான சுவையே என்று ஜெயமோகன் முன்பிருந்தே சொல்லி வருவதை நினைத்துக்கொண்டேன்.

பல வகைகளில் அடுத்து வரப்போகும் களங்களுக்கான காட்சிகளை மிக ஆழமாகத் திறந்து வைத்திருக்கிறது வெண்முகில் நகரம். பால்ஹிக நாட்டையும், சிபி நாட்டையும் விவிரித்த விதமெல்லாம் அட்டகாசம். படைப்பூக்கத்தில் உச்சத்தில் இப்படி ஒருவரால் தொடர்ந்து நிற்கமுடியும் என்பதே அசரடிக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் ஜெயமோகனை இளையராஜாவோடு ஒப்பிட்டுக்கொள்கிறேன். ஏனென்றே தெரியவில்லை. ஆனால் இப்படி அடிக்கடி ஆகிவிடுகிறது.

ஜெயமோகன் இதை எழுதும் காலத்தில் நான் அதை வாசிக்க நேர்ந்த அந்த இறைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. வேறென்ன என்று சொல்லத் தெரியவில்லை.

Share